திங்கள், 31 அக்டோபர், 2016

மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்?- – ச.தமிழ்செல்வன்

கேள்வி: நம்பிக்கை,வழிபாடு,சடங்கு போன்ற மத செயல்பாடுகளால் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியினரிடம் மதவாதம் பற்றிக்கொள்கிறது. சங் பரிவார் அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது?
பதில் :
நம்பிக்கை, வழிபாடு, சடங்கு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பினும் இவற்றைத் தனித்தனியாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.சடங்குகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல நாம்.தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி,பொன்னாடை போர்த்துதல் போன்ற சில சடங்குகள் நம்மிடமும் உண்டு.மூடநம்பிக்கை சார்ந்ததாக அல்லாமல் ஆண்-பெண் சமத்துவத்துவம் , சாதி சமத்துவம் போன்றவற்றைப் பாதிக்காத படி இருக்கும் சடங்குகளை மக்கள் கடைப்பிடிப்பதை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. நினைவு கூர்தல் போன்றவற்றின் குறியீடாகத்தான் சடங்குகள் நம் வாழ்வில் வந்தன. இது ஒரு வகை எனில், பெரும்பாலான சடங்குகள் நம்பிக்கை சார்ந்தும் மூட நம்பிக்கை சார்ந்தும் உருவானவை.ஒவ்வொரு சடங்கையும் அதன் தோற்றக்கதையை ஆய்ந்து விமர்சிக்கலாம். உதாரணமாக மயானக்கரைக்கு தீச்சட்டி கொண்டு போதல் –இது அந்தக்காலத்தில் நெருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்படாத காலத்தில் உருவான –தேவையை ஒட்டி எழுந்த பழக்கம்- தீப்பெட்டி,லைட்டர் போன்றவை வந்த பின்னும் தொடரும்போது அது வெறும் சடங்காகி விடுகிறது.பயனற்ற சடங்குகளைத் தவிர்க்கலாம்.பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் தங்கள் ஆசிகளை வழங்குவதன் அடையாளமாக திருநீறு பூசுவது,நெற்றியில் சிலுவை இடுவது என்கிற பழக்கம் அல்லது சடங்கு பெருவழக்காக இருக்கிறது.மன நிறைவைத்தரும் இதுபோன்ற சடங்குகளுக்கு மாற்றாக மத அடையாளமற்ற புதிய சடங்குகளை உருவாக்க வேண்டும்.
வழிபாடு என்பது அறிவியலடிப்படையில் தேவையற்றது. அதை விமர்சிக்கும் போது நம் நாட்டில் ஒரு பண்பாடாகவே வளர்ந்து நிற்கும் தனி மனித வழிபாட்டையும் சேர்த்துத்தான் பேச வேண்டும்.நம்பிக்கை-மூடநம்பிக்கை இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டத்தில் நம்பிக்கையாளர்களும் இணைய சாத்தியம் உள்ளது.அப்படியான நிகழ்ச்சி நிரல்களை நாம் உள்ளூர் அளவில் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.வறட்டு நாத்திகம் சங் பரிவாரத்துக்கு மேலும் உதவிகரமாகவே அமையும்.
நம்பிக்கை,சடங்கு ,வழிபாடு உள்ளவர்களிடம் மதவாதம் இருப்பதில்லை. மத உணர்வுதான் இருக்கிறது.மத உணர்வு மதவாதமாகி மத வெறிக்குத் துணைபோகும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் மத உணர்வு மத நல்லிணக்கமாக மலர்ந்து மதச் சார்பின்மை என்கிற திசையிலும் மணம் பரப்ப வாய்ப்பு உள்ளது. யார் முந்துகிறோமோ அவருக்கு சாதகமாக மனித மனங்கள் திரும்பும்.
இந்தியாவில் மதவாத சக்திகள் சுறுசுறுப்பாகவும் விரைந்தும் செயல்படுவதுபோல மதச்சார்பற்ற சக்திகள் (நீங்களும் நானும் உள்ளிட்டு) செயல்படுவதில்லை என்பது வரலாறு.
உள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை. அப்படியானால் நாம் இன்னும் பல மடங்கு வேகத்துடனும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.நம்பிக்கை என்னும் கோட்டை அழிக்கவும் அறிவியல் கல்வி மூலம் முயல வேண்டும். அல்லது அக்கோட்டுக்குப் பக்கத்தில் மதச்சார்பற்ற கோட்டைப் பெரிதாக வரைந்து மதவாதக் கோட்டைச் சிறியதாக்கவும் செய்யலாம். முறைசார்ந்த கல்வியில், பாடத்திட்டத்தில் கல்வியின் உள்ளடக்கத்தில் அறிவியல்பூர்வமான மாற்றத்துக்காக நாம் போராடுவது இன்னொரு முக்கியமான பணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக