திங்கள், 31 அக்டோபர், 2016

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும்

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !


  • தமிழில்: இரா.சிந்தன்
இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.
நிதி மூலதன ஆதிக்கம்:
நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.
மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.
கைவிடப்படும் கொள்கைகள்:
குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.
மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.
கிளறப்படும் அடையாளங்கள்
பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.
மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.
இந்துத்துவப் பரவலின் பின்னணி
பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.
தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.
தமிழக முதலாளித்துவம்
தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.
தமிழகத்தின் அரசியல் சூழல்
வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை.கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.
திமுக-அதிமுக
திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.
இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.
தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.
சித்தாந்தப் போராட்டம்
எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.
இந்துத்வ திட்டம்
இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக  நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.
இடது ஜனநாயக மாற்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.
திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.
தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக