ஞாயிறு, 20 நவம்பர், 2011

கூடங்குளம் அணு உலை வெளிக்கொண்டுவரும் உண்மைகள் - கல்பனா சதி்ஷ்

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் மின் சக்திக் கொள்கையையே உலுக்கிவிட்டது போல் வெடித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி எப்படியாவது கூடங்குளம் அணு உலையை செயல்படச் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு புறம், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு நேரும் மனித உரிமை மீறல்களை தேசியப் பிரச்சனையாகக் கருத வேண்டுகோள் விடுக்கிறார். இதற்கிடையில் அறிவிக்கப்படாத, அதிக நேர மின்வெட்டினால் தமிழக மக்களும், சிறு தொழில் நிறுவனங்களும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இச் சூழலில், மக்களுக்கு தேவையான மின் சக்தி, அதில் அணுசக்தியின் பங்கு, அரசின் மின் கொள்கை, மாநில-மத்திய அரசுகளின் அதிகாரப் பகிர்வுகள், தென்மாவட்ட மக்களின் குறிப்பாக கடலோர மக்களின் எல்லைப்பகுதி இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல், உரிமை மீறல் என பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.

முதலில் மின் சக்தி, அதிலும் அணுசக்திக் கொள்கையையும், குறிப்பாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நடக்கும் விவரங்களை அறிவோம். கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் ஒப்பந்தம் போடப்பட்ட நவம்பர் 1988ல்( தமிழகத்தில் ஜனவரி 1988- ஜனவரி 1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி) இருந்தே அணுசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல் ரசியா-இந்தியாவிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கின. அப்போது மக்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தமிழக அரசின் கருத்தும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. 2001ல் கட்டுமான வேலைகளும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக எரிபொருள் இறக்குமதியும் நடைபெற்றது. 2004ல் கூடங்குளத்திலேயே துறைமுகம் அமைக்கப்பட்டது. அங்கு முழுவதும் கட்டுமான வேலைகள் மட்டுமே நடைபெற்றதால் மக்களுக்கு அதன் பாதிப்புகள் எதுவும் அறிந்திருக்கவில்லை. அணுசக்தியினால் ஏற்படக் கூடிய அழிவுகளை அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சில தன்னார்வ அமைப்புகளுமே அதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தன. 2006ல் மேலும் 4 அணு உலைக் கூடங்களை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியிலும், சென்னையிலும் நடத்தப்பட்டது. இதில் பரவலாக கலந்து கொண்ட தென் மாவட்ட மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கிடையே ஜனவரி 2007ல் ரசிய அதிபர் புதினுடன், இந்தியப் பிரதமர் மேலும் 6000 மெகா வாட் மின் உற்பத்திக்கான 4 உலைகள் அமைக்க ஒப்பந்தமிட்டார். ஒருபுறம் ரசியாவுடன் கையெழுத்திட்டுக் கொண்டு, மறுபுறம் அமெரிக்காவிடமும் அணுசக்தி தயாரிப்பில் வெளிப்படையான தன்மையைக் கையாள்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 2010ல் அணுசக்தியால் ஏற்படும் அழிவிற்கான இழப்பீடு வழங்குவதற்கான சட்டத்தையும் கொண்டுவந்தார் (இந்த சட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளின் ஒப்புதல் இல்லை). இதன்மூலம், சர்வதேச அளவில் உள்ள அணுசக்தி தயாரிப்பிற்கான அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்கும் வேலையையும், உள்ளூரில் எழும் பிரச்சனைகளை சரிகட்டுவதற்கான தயாரிப்பையும் ஒருசேர நிகழ்த்தியுள்ளார்.

கூடங்குளத்தில் அணுசக்தி தயாரிப்பிற்கான மூலப்பொருளான யுரேனியம் ரசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரசியாவில் 5,00,000 டன் யுரேனியக் கனிமம் இருப்பில் உள்ளது. ஆண்டொன்றுக்கு, 11,000 முதல் 12,000 டன் வரை யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2006ல் மட்டும் ஒரு ரசியக் கம்பெனி, யுரேனிய சுரங்கம் மூலம் 8.1 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது (இந்திய ரூபாயில் 740 கோடி). இந்த யுரேனியம் என்ற தாதுப் பொருள் மிக அபாயகரமான கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாகும். அதனை அணு உலையில் இட்டு சிதைக்கும்போது வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு அதிக அழுத்த நிலையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி யுரேனிய அணு பிளவுபடும் போது அதிலிருந்து சில கனிமப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை, சீசியம், ஸ்டராண்டியம், புளூட்டோனியம் ஆகிய தாதுப் பொருள்கள். இவை புவியின் எந்த உயிர்ச்சூழல் தன்மையையும் சேராதவை. இதில், சீசியம் என்ற தனிமம், தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு உணவுச் சங்கிலியில் புகுந்து கொண்டுவிடும். அது தாவரங்களில் உள்ள செல் மூலக்கூறுகளின் தன்மையையே முழுவதுமாக மாற்றிவிடக் கூடியது. அதே போல, ஸ்ட்ராண்டியம், புளூட்டோனிய தனிமங்கள், மனிதர்களுக்குத் தேவையான கால்சியம் போன்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டு நமது பற்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். இவை, எலும்புறுக்கி நோய், நுரையீரல் புற்று நோய், கர்ப்பக் கோளாறுகளை ஏற்படுத்தி நீண்ட கால தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். இவ்வாறாக பாதிப்பினை ஏற்படுத்தவல்ல இந்த தாதுக்கள், அணு உலையில் பயன்படுத்தப்படும் எந்த உலோகத்திலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உலோகக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கதிர்வீச்சினை ஏற்படுத்தவல்லவை. ரசியாவின் செர்னோபிலில் 1986-ல் நடந்த அணு உலை விபத்தின் கதிர்வீச்சு இன்றும் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொரு அணு மூலக்கூறுகளும் 1 நொடிக்கு 600 பிளவுகளை ஏற்படுத்தி நச்சுத் தன்மை வாய்ந்த காமாக் கதிர்களை உமிழ்ந்துவருகிறது. 2016ல் தான் இது 400 ஆகக் குறையுமாம். 2046ல் 200 என குறைந்து, கொண்சம் கொண்சமாகத் தான் தன் தீவிரத்தைக் குறைக்குமாம். இப்படியாக பல ஆண்டுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது தான் அணு உலை ஆபத்து என்பது. முக்கியமாக, எதிர்கால சந்ததி முடமாகப் பிறப்பதற்கும், தற்கால தலைமுறையை, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்குவதே இதன் பலன். 8கிலோ அளவிலான புளூட்டோனியத்தைக் கொண்டு ஒரு அணு குண்டு தயாரிக்கமுடியும். ஒரு அணு உலை 30 ஆண்டுகளுக்கு இயங்கினால், அதிலிருந்து வெளிப்படும் புளூட்டோனியத்தைக் கொண்டு 1200 அணு குண்டுகளைத் தயாரிக்கலாம்.

இந்த நிலையில் கூடங்குளம் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப் போகிறார்கள்? பூமிக்கு அடியில் பல நூறு அடி ஆழம் தோண்டி சிமெண்ட் தொட்டி அமைத்து போடப் போவதாகவும் அல்லது கடலுக்கு அடியில் புதைக்கப் போவதாக சொல்கிறார்கள். இயற்கை சீற்றம் மிக்க குறுகலான வளை குடாக்களைக் கொண்டது தென் தமிழக கடற்கரையோரம். இந்த நிலையில் கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டாலும், கடல் சீற்றத்தில் அடித்துக் கொண்டுவரும். இப்பிரச்சனை குறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால் சரியான சுற்றுச் சூழல் தாக்க ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை. ஆனால், அணு உலையை இயக்குவதற்கு மட்டும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.

இத்தனை பாதிப்புள்ள அணு உலை அமைக்கப்படும் இடம் மனிதர்கள் வாழாத ஏதோ வனாந்திரமோ, பாலைவனமோ அல்ல. இந்தியாவின் தென் கோடி முனையில் சர்வதேச அளவில் உயிர்சூழல் சிக்கலான பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில்தான். சர்வதேச அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள விதிமுறைகளில் எந்த ஒரு அணு உலைக்கு அருகிலும் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சுற்றுலாத் தளம் இருக்க கூடாது. 30 கிலோ மீட்டருக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் இருக்க கூடாது. ஆனால், கூடங்குளத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் உலகப் புகழ் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி உள்ளது. 28 கிலோ மீட்டருக்குள் 2 லட்சம் மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் உள்ளது. ஏன் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியே 3 கிலோ மீட்டருக்குள் 30000 மீனவ, விவசாய, பனைத் தொழில் செய்து வாழும் மக்களும் உள்ளனர். அணு உலைக்கு சுற்றுச் சுவருக்கு அருகிலேயே 450 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அணு உலையை ஒட்டி மீன்கள் குஞ்சு பொறிக்கும் செங்கனேரி ஓடை அரை கிலோமீட்டருக்கு ஓடி கடலில் கலக்கிறது.

இப்போது பிரதமர் எப்படியாவது அணு உலையின் செயல்பாட்டை துவக்கிவிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே கூடங்குளத்தில் என்ன நடந்தது அதைச் சற்று பார்ப்போமா?

2006ல் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினை, வெறும் சந்தேகங்கள், கேள்விகள் என ஒதுக்கி வைத்துவிட்டு 2007ல் மீண்டும் 4 அணு உலைகளுக்கு கையெழுத்திட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கூடங்குளத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த சில மக்கள் பிரதிநிதிகளும், உள்ளூர் பிரமுகர்களும் கூட மெதுவாக அணு உலை விசயத்தில் மத்திய அரசின் தன்னிச்சையான போக்கினைக் கண்டு அதிர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். முக்கியமாக, 2004ல் நடந்த சுனாமியும், அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இறுதியாக 2011 மார்ச்சில் ஜப்பானில் நடைபெற்ற புகுசிமா அணு உலை வெடிப்பு, அணு உலை ஆபத்தையும், கடலோரத்தில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அது கொண்டு வந்த அழிவினையும் கண்ட பின்பு மக்களின் எதிர்ப்பு கூடங்குளத்தில் அதிகரித்துள்ளது. 2011 ஜூலையில், கூடன் குளம் அணு உலையில் ஹாட் ரன் என்ப்படும் போலி எரிபொருளைக் கொண்டு ஒத்திகை ஓட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் போது வெளியான அதீத சத்தமும், அதிர்வுகளும், அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை தூங்கவிடாமல், இரவு முழுவதும் அச்சுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரழிவு மேலாண்மை பயிற்சியில், கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வராமல், உள்ளேயே இருக்கும் படி கூறியது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதன்விளைவாகவே தொடர் உண்ணாவிரதமும், சமரசம் செய்து கொள்ளாமல் அணு உலையை மூடக் கோரும் போராட்டங்களும் நடக்கின்றன.

தற்பொழுது, கூடங்குளம் அணு உலை செயல்படவில்லையென்றால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்காது. இதனால் தொழில்வளர்ச்சி முடங்கிவிடும். அணு உலை மிக பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. விபத்து நடைபெற வாய்ப்பே இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும், மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பேரழிவு ஆபத்திலிருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்றெல்லாம், பிரதமரும், அணு சக்தி கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். இதனோடு கூட, சமீபத்திய தொடர் மின் வெட்டு, மின் பற்றாக்குறை என்ற பிரச்சனையை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டு, தமிழகமே மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், 2010-2011 க்கான, மாநில அரசின் மின் சக்திக் கொள்கை விளக்க அறிக்கையைப் படிக்கும் போது, நமக்கு வேறு பல மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவை;

ஃ தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 10865 மெகாவாட் (19.07.2011 அன்று பதிவானது)

ஃ காற்றாலைகளின் மூலம் மட்டும் 19355 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 6007 மெகாவாட் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது.

ஃ 610 மெகா வாட் மின்சாரம், சர்க்கரை ஆலைகளில் உள்ள திட உயிர்கழிவுகள் மூலம் பெறப்படுகிறது

ஃ 139 மெகாவாட் பிற உயிர்க் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது

ஃ 5 மெகாவாட் மின்சார சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஃ மின்சாரப் பயன்பாட்டில், 27.5% மின்சக்தி வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது (மொத்த நுகர்வில் இது 66.56%)

ஃ 34.92% மின் சக்தி தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது (2.41% நுகர்வோர் தொழிற்சாலை நடத்துபவர்கள்)

ஃ வர்த்தகத்திற்காக 10.43% (12.62% நுகர்வோர்)

ஃ விவசாயத்திற்காக 20.93% (8.83% நுகர்வோர் விவசாயிகளாக உள்ளனர்)

ஃ பிற தேவைகளுக்காக 6.67%(9.57% நுகர்வோர்)

ஃ இதில், 45.35% மின்சாரம், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களால் மட்டுமே நுகரப்படுகிறது. (மொத்த நுகர்வில் இவர்களின் பங்கு14.62%)

ஃ ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பு 1% ஆக உள்ளது.

மேற்சொன்ன புள்ளிவிவரங்களின்படி, வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும் சேர்த்து மின் தேவை என்பது சுமார் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கும். தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையும் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கிறது.

மேலும், புள்ளி விவரங்களை அலசிப்பார்க்கும் போது, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான, காற்றாலை, சூரிய சக்தி, உயிர்க்கழிவுகள், கடல் பாசிகள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் துரிதப்படுத்தினாலே போதும். மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகம், விவசாயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது புலனாகிறது. மொத்த மின் உற்பத்தியில் 50% நுகரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகளும் அனல் மின் நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளபடி தொழில் வளர்ச்சி அதிகரிக்க மின்சாரம் தேவை என்றால் அது எந்தவிதமான தொழில்வளர்ச்சி என்று கேட்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் திட்டம், 2050க்குள் மின்சாரத் தேவையில் 25% ஐ அணு உலைகளில் இருந்து பெறலாம் என்பதே. தற்போது 3% மின் சக்தி மட்டுமே அணு உலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலையை இந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால், 2050க்குள் 40% மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது
(மின் தேவை அதிகரிப்பு ஆண்டிற்கு 1% ஆக உள்ளது). அப்படியானால், மத்திய அரசின் 25% இலக்கு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை 10% ஆக மட்டுமே இருக்கும்.

மொத்த மின் சக்தித் தேவையில் 10% அணு மின்சாரத்திற்காக தமிழ்நாடு தனது இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்போகிறதா?

தற்போது தமிழகம் அணு உலை மின்சக்தியை நம்பி இல்லை. இந்தியாவிலேயே அதிகம் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தமிழகம் தான்(36%). அதேபோல தமிழகத்தின் மின் விநியோகத்தில் 40% மின் சக்தி, காற்றாலைகள், உயிர்கழிவுகள், சூரிய சக்தியிலிருந்து தான் கிடைக்கின்றன.

தமிழகத்தில் வருடத்திற்கு 300 நாட்களும் சூரிய ஒளி வீச்சு மிகுந்த நாட்கள். எனவே, எதிர்காலத்திலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கடல் பாசிகள் மூலம் மின்வாயுத் தயாரிப்பது போல, தமிழகத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளவாய்ப்பு உள்ளது.
1 மெகாவாட் மின்சாரத்தினால் 1000 வீடுகளுக்கு மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஒவ்வொரு கிராமத்திலுமே இயற்கை மூலாதாரங்களைக் கொண்ட மின்சாரத் தயாரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

அழிவினைத் தரும் அணு சக்தி வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும், அரசும் உறுதியாக இருக்கும் போது, மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்.