ஞாயிறு, 10 ஜூன், 2018

அரசியல் :- கேள்வி - பதில் -- மும்பை விழித்தெழ இயக்கம்

அரசியல் :- கேள்வி - பதில் -- மும்பை விழித்தெழ இயக்கம்


அரசு என்றால் என்ன?, வர்க்கம் என்றால் என்ன? , சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது, உடைமை வர்க்கம்,உழைக்கும் வர்க்கம் என்றால் என்ன?., ஆளும் வர்க்கம் என்றால் என்ன?..நிலவுடைமைச் சமுதாயம் என்பது என்ன?, கம்யூனிசம் என்றால் என்ன ?முதலாளித்துவம் என்றால் என்ன?, குடும்பமும் மார்க்சியமும், தேசியம் என்பது என்ன ? தேசிய இனம் என்பது என்ன ?, சாதியின் தோற்றம் ?.கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்றால் என்ன?...

இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும். அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான்



அரசு என்றால் என்ன ?.
அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான். மார்கசியத்தின் அடிப்படையான கருத்து நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது . வர்க்கப்பகைமைகள் இணைக்கும் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே எப்பொழுது எந்த அளவுக்கு வர்க்கப்பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணைக்கும் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கெ அப்பொழுது அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது . (அரசும் புரட்சியும் - லெனின் ) -------------------------------------------------------------------------------------------------------------------

வர்க்கம் என்றால் என்ன ?
மக்கள் பிரிவு என்பதுதான் வர்க்கம். சொல்லுக்கு எளிமையான பொருள். குறிப்பிட்ட பொருளாதார நிலையைச் சேர்ந்த மக்கள் பிரிவு என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவர்களது சமூக நிலை, அதிகார நிலை, கல்விநிலை போன்றவை இருக்கும். -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது ?.


பொருளாதாரம் என்பது வந்த பிறகுதான் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். யார் அதை அதிகமாகக் குவித்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், யார் அந்தப் பொருளாதாரத்துக்காக (அதாவது வயிற்றுப்பாட்டிற்காக) அது யாரிடம் குவிந்திருக்கிறதோ அவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த ஏற்றத்தாழ்வு அமைகிறது. யார் நிலம், எந்திரம் போன்றவற்றை உடைமையாக்கிக்கொண்டு, அந்த நிலத்திலும் எந்திரங்களிலும் மற்றவர்களை வேலை செய்ய வைத்துத் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உடைமை வர்க்கம். யார் அவர்களிடம் வேலை செய்து நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உழைக்கும் வர்க்கம். அதாவது இந்த உழைக்கும் வர்க்கத்திடம் வேறு உடைமை எதுவும் கிடையாது. உழைக்கும் ஆற்றல் மட்டுமே இவர்களுக்குச் சொந்தம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- பொருள்களைத் தயாரிப்பதற்கான எந்திரங்கள், அந்த எந்திரங்களை நிறுவுவதற்கான கட்டடங்கள், அந்த எந்திரங்களையும் அவற்றிலிருந்து தயாராகும் பொருள்களையும் மற்ற இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் ஆகியவை உருவாவதற்கு முன்னால் மனிதர்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்திசெய்வதற்கு நிலம் மட்டுமே பயன்பட்டது. அதுவும் நிலத்தில் உழுது பயிரிட்டு தானியங்களையும் காய்கனிகளையும் உற்பத்தி செய்து அறுவடை செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் நிலம் உற்பத்திக்கான அடிப்படையாக மாறியது. அதுவரையில் மனிதர்கள் இயற்கையாகக் கிடைத்ததைத்தான் உண்டு பசியாறினார்கள், கிடைக்காதபோது பட்டினி கிடந்தார்கள். நிலத்தை இப்படிப் பயன்படுத்தலாம் என்று மனிதர்கள் கண்டுபிடித்ததற்கே ஒரு வரலாறு உண்டு. ஆதி மனிதர்கள் இயற்கை உணவுகளைத் தேடியும் விலங்குகளை வேட்டையாடியும் பசியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைப் பிறப்புக்காக என வெளியே செல்லாமல் குகையிலோ, மரத்தடியிலோ தங்கியிருந்தார்கள். அப்போது, சுற்றி நடக்கும் இயற்கை மாறுதல்களைக் கவனிக்க முடிந்தது. உணவுக்காக வைத்திருந்த தானியம் மண்ணில் விழுந்திருக்கும் அல்லவா? தானியம் விழுந்த இடத்தில் மழை பெய்திருக்கும் அல்லவா? அந்த இடத்திலிருந்து புதிய பயிர் முளைப்பதையும், அது வளர்ந்து முற்றுகிறபோது அதிலிருந்து ஏராளமான தானியங்கள் கிடைப்பதையும் அந்தப் பெண்கள் கவனித்தார்கள். நாமே இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, சில தானியங்களை மண்ணில் தூவி நீர் தெளித்தார்கள். பயிர் விளைந்தது. இப்படித்தான் விவசாயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், விவசாயம் என்ற முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் அக்காலத்துத் தாய்மார்கள்தான். உணவுக்காக அலைய வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டதும் நிலத்தைக் கைப்பற்றி, இங்கேயிருந்து அங்கே வரையில் என் நிலம் என்று உடைமையாக்கிக் கொண்டவர்கள் ஆண்கள். நிலத்தைக் கைப்பற்ற முடிந்தவர்கள் உடைமை வர்க்கம். அந்த நிலத்தில் வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆளும் வர்க்கம் என்றால் ?
ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள். ------------------------------------------------------------------------------------------------------------------ முதலில் எங்கும் காடாகவே இருந்தது. அந்தக் காடுகளில் மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு காட்டின் தன்மை, அங்கு வாழ்ந்த மனிதர்களின் உடல் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இருந்தார்கள். இனக் குழு என்று சொல்லப்படுவது இதுதான். அன்றைய காலத்தில் இப்போது போல் பல நூறுகோடி மக்கள் தொகை என்பதெல்லாம் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு இனக்குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் நூறுபேர், நூற்றைம்பது பேர் என்றுதான் இருந்தார்கள். அனுபவத்தால் சேர்த்த அறிவின் அடிப்படையில் வனத்தின் கடுமையான நிலைமைகளில் வாழ்வது எப்படி, விலங்குகளில் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பது எப்படி, விலங்குளை வேட்டையாடுவது எப்படி, எப்படிப்பட்ட தாவர உணவுகளை உண்ணலாம், மழை வந்தால் என்ன செய்யலாம், நெருப்பு பிடித்துக்கொண்டால் என்ன செய்யலாம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியவர்கள் குழுக்களின் தலைவர்கள் ஆனார்கள். உற்பத்திக் கருவியாக அதாவது உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக நிலம் பயன்ப்படுத்தப்பட்டது. கருவி என்று வந்துவிட்டால் அதைக் கையாள்வதற்கான கைகள் வேண்டும் அல்லவா? அந்தக் கைகள் மற்றவர்களுடையதாக இருக்க, அந்த உழைப்பின் பயனை ஒருவர் அல்லது ஒருசிலர் மட்டும் அனுபவிப்பதே சுரண்டல். வன்முறை, தந்திரம் என பல வழிகளில் ஒருவர் நிலத்தை வளைத்துப் போட்டுக்கொண்டாலும் அவரால் மட்டுமே நிலத்தில் இறங்கி வேலை செய்து பயிர்களை விளைவிக்க முடியாது அல்லவா? எனவே அவர் அந்த வேலையில் பலரை ஈடுபடுத்துகிறார். நிலத்தைக் கைப்பற்றும் போட்டியில் பின்தங்கியவர்கள், அப்படியொரு போட்டி நடப்பதே தங்களது கவனத்திற்கு வராமல் ஏமாந்தவர்கள், ஆனால் உழைப்பதற்குச் சலிக்காதவர்கள் நிலத்தில் இறங்கினார்கள். தொடக்கத்தில் இவ்வாறு வேலை செய்வதற்காக காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்துக்கொண்டுவந்து ஈடுபடுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். நிலத்தில் மட்டுமல்லாமல் பெரிய கோட்டைகள் கட்டுவது, நடமாட்டத்துக்கு வசதியாக சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் அந்த அடிமைகளையே பயன்படுத்தினார்கள். வேலை முடிந்ததும் விரட்டிவிட்டார்கள். ஒரு செல்வந்தர் தன் அடிமைகளை மற்ற செல்வந்தர்களுக்குப் பரிசாக அளிப்பார். ஆடு மாடுகளை விற்பது போல். வேலை செய்வதற்காக அடிமைகளை விற்பனை செய்வது என்ற கொடுமையும் நடந்தது. அடிமைகள் அளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால் கூடுதலாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். இப்படி அடிமை முறை இருந்த காலத்தை அடிமைச் சமுதாயம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நிலம் என்பது அடிப்படையான, நிலையான ஒரு உற்பத்திக் கருவியாகப் பயன்படும் என்று கண்டறிந்த பின் அதே அடிமைகள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நிலம் இல்லாதவர்கள் மட்டுமல்லாமல் சிறு அளவுக்கு மட்டுமே நிலம் வைத்திருந்தவர்களும் பெரிய பண்ணை நிலங்களில் வேலை செய்யச் சென்றார்கள். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மண்ணை சரிப்படுத்தினார்கள், பயிரிட்டார்கள், பயிரைப் பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள், பயிரிலிருந்து தானியங்கள் விளைந்ததும் அவற்றை அறுவடை செய்து கொடுத்தார்கள். இப்படி உழைப்பவர்களின் பங்களிப்பு என்பது இல்லை என்றால், எவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும் அதனை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில் உடைமையாளருக்கும் உழைப்பவருக்கும் சம பங்கு இருக்கிறது. ஆனால், விளைச்சலை அனுபவிப்பது என்று வருகிறபோது மட்டும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை. உண்மையிலேயே பாடுபட்டு உற்பத்தி செய்தவர்களுக்கு, நிலத்தில் விளைந்ததில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு பெரும்பங்கு மீதி விளைச்சல்களை உடைமையாளர் தானே வைத்துக்கொள்கிறார். உழைத்ததற்கான பங்காக உழைப்பாளிக்கு அவர் கொடுப்பதுதான் கூலி. கூலியாகக் கொடுப்பது எந்த அளவுக்கு இருக்கும் என்றால், மறுநாள் வேலைக்கு வரவேண்டுமானால் உயிரோடும் உழைப்பதற்கான தெம்போடும் இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு உயிரோடும் தெம்போடும் வைத்திருப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தானியம் கூலியாகக் கொடுக்கப்பட்டது. (பணம் என்பது உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் தானியத்திற்கு பதிலாக பணமே கூலியாகத் தரப்பட்டது. பணம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பது சுவையான தனி வரலாறு.) இதுதான் உழைப்புச் சுரண்டல் என்பது. -----------------------------------------------------------------------------------------------------------------
நிலவுடைமைச் சமுதாயம் என்பது என்ன?
நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டு, பெரிய அளவுக்கு அதைக் கைப்பற்றியவர்கள், அவரவர் பலத்துக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாகக் கைப்பற்றியவர்கள், அந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்துக்கொடுத்துவிட்டுப் பசியாறியவர்கள் என்ற இந்த சமூக அமைப்புக்குப் பெயர்தான் நிலவுடைமைச் சமுதாயம் அல்லது பண்ணைச் சமுதாயம். நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு. ---------------------------------------------------------------------------------------------------------------------         இந்தக் காலத்திலேயே கூட ஒரு அரையடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்கோ, அல்லது கைப்பற்றிய நிலத்தில் அரையடி அளவுக்குக் கூட வேறு யாரும் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கோ எவ்வளவு வன்மம் நிறைந்த மோதல்கள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் வெட்டுக்குத்து, கொலை செய்கிற அளவுக்குக்கூட அந்த மோதல்கள் போய்விடுகின்றன. சட்டம், விதி, கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பு என்றெல்லாம் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறது என்றால் அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம். நிலத்தைக் கைப்பற்றும் ஆசையில்லாதவர்கள், அதற்கு வழியற்றவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானாலும் இறங்கி உழைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நிலம் இயற்கை கொடுத்தது, அதிலே உழைப்பதற்கும் தேவையானதை உற்பத்தி செய்துகொள்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றே நினைத்தார்கள். நிலத்தை வளைத்துப் போட்டவர்கள் அவர்களை அடித்தார்கள். இதைத் தொடர்ந்து பல வன்முறை மோதல்கள் நடைபெற்றன. அப்போதுதான் இதையெல்லாம் கண்காணிப்பதற்கும் முறைப்படுத்துவதற்கும் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டிற்குப் பெயர்தான் அரசு. அதுவரையில் மனிதர்கள் சுதந்திரப் பறவைகள்தான். அடிப்பவர்களும் சுதந்திரமானவர்களே, அடிபடுகிறவர்களும் சுதந்திரமானவர்களே. இப்போது அரசு என்ற ஒரு ஏற்பாடு உருவாகி, சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன இந்த நிலம் இவருக்குச் சொந்தம், அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வருகிறது. நிலத்தில் இறங்கி உழைக்கிறவர்கள் கோபித்துக்கொள்வார்களே? அதைத் தவிர்க்க, உழைக்கிறவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் எவ்வளவு கூலி தரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அது வரையில் குழுக்களின் தலைவர்கள் மட்டுமே இருந்தார்கள். தலைவர் என்றால் உடனே நம் புத்தியில் ஆண் உருவம்தான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் அனுபவ அறிவின் அடிப்படையில் தங்களது கூட்டங்களுக்குப் பெண்களும் தலைமை தாங்கினார்கள். சொல்லப்போனால் குடும்ப உறவு என்பதெல்லாம் உருவாகியிராத அக்காலத்தில் தாயைத்தான் பிள்ளைகளுக்குத் தெரியும். தாயை வைத்தே ஒருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டார். தாய் வழிச் சமூகம் என்று இதைச் சொல்வார்கள். குழுக்களின் தலைவர் என்பதற்கு மாறாக காடு, மலை, ஆறு, வயல், ஊர் என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு என்ற அமைப்பு உருவானது. ஆம், அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான். ------------------------------------------------------------------------------------------------------------------
கம்யூனிசம் என்றால் என்ன ?.
மனித நேயம், அழகுணர்ச்சி, நட்பு, சமுதாயத்தின் மீது பாசம், கலைத்தாகம், இலக்கிய மோகம், சாதி-மத-இன-மொழி வேலிகளற்ற காதல், கடவுள் கோட்பாடுகளுக்குள் சிக்காத அறிவியல் கண்ணோட்டம், பட்டினியில்லா வாழ்வு, அடுத்தவர் உரிமையை மீறாத சுதந்திரம், ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டாத சமுதாய அமைப்பு... இந்த முற்போக்கான கூறுகள் அனைத்தும் இணைந்ததே கம்யூனிசம். =================================================================== கம்யூனிசம். இது ஏதோ மார்க்ஸ் என்கிற தனி மனிதர் உருவாக்கிப் பரப்பிய கோட்பாடு அல்ல. மனிதர்கள் இயற்கையாய் இப்படித்தான் பரிணமித்தார்கள், வாழ்ந்துவந்தார்கள். நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் சமத்துவத்துவத்துடன் வாழ்ந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, பாலினப் பாகுபாடு இல்லை, இனப் பகைமை இல்லை, தேசங்களின் பெயரால் மோதல் இல்லையென வாழ்ந்தார்கள். இப்படி இருந்த அந்த ஆதிப்பொதுவுடைமைச் சமுதாயத்தில் பின்னர் நிலம் என்பது ஒரு சொத்தாக உருவான பிறகு அதைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் தொடங்கியது. நிலத்திலும், நிலத்தைக் கைப்பற்றியவர்களின் வீட்டிலும் வேலை செய்வதற்காக மக்களில் ஒரு பகுதியினர் அடிமைப்படுத்தப்பட்டார்கள். பெரும் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறைகள் உருவாக்கப்பட்டு, அன்றைய சமூக அமைப்பைக் கட்டிக்காப்பதற்கான அரசாங்க அமைப்பாக பரம்பரை மன்னராட்சி தொடங்கியது. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மதங்களும், மதசடங்களும் எப்படி தோன்றின ?. அந்தப் பண்ணைச் சமுதாய அமைப்பின் நியாயங்களை எல்லோரும் ஏற்கச் செய்வதற்காகவும், கட்டுப்பட்டு இருக்கச் செய்வதற்காகவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதையொட்டியே, இயற்கையின் புதிர்களைப் புரிந்துகொள்ள இயலாத மக்களின் அச்சங்களை அடிப்படையாக வைத்து மதங்களும் மதச் சடங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த சில உண்மையான சண்டைகளை அடிப்படையாக வைத்து கற்பனையான சாகசங்களைக் கலந்து புராணக்கதைகள் புனையப்பட்டன. முந்தைய அடிமைச்சமுதாயத்தை விட இது முன்னேறிய சமுதாயமாக இருந்தது. ஆனால் இது மக்களுக்கு முழு விடுதலை அளிக்கவில்லை. -----------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம்-அரசியல் இயக்கங்கள் எப்போது தோன்றியது ?.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணையோடு தொழில்களும் தொழிற்சாலைகளும் உருவானபோது, அவற்றைத் தொடங்கி நடத்துவதற்கு செல்வ பலம் வைத்திருந்தவர்கள் முதலாளிகளானாகள். அவர்களுடைய எந்திரங்களை இயக்குகிறவர்கள் தொழிலாளர்களானார்கள். இந்தப் புதிய அமைப்புக்கு முந்தைய நிலவுடைமைச் சமுதாயமும் அதைப் பாதுகாக்கும் மன்னராட்சி அரசியலும் முட்டுக்கட்டையாக இருந்தன. எனவே, நிலப்பண்ணையார்களிடமும் மன்னர்களிடமும் அடிமைப்பட்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்கான சுதந்திரம், ஜனநாயகம் என்ற முழக்கங்களோடு அரசியல் இயக்கங்கள் தோன்றின. -----------------------------------------------------------------------------------------------------------------------------

முதலாளித்துவம் என்றால் என்ன?.

முதலாளித்துவ சமுதாய அமைப்பு பரிணமித்தது. முதலீடு போட முடிகிற ஒருவர் தொழிற்சாலையைத் தொடங்கி அதிலே பலரைத் தொழிலாளர்களாக வைத்துக்கொண்டு வேலை வாங்க முடியும் என்பதே முதலாளித்துவம். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். ------------------------------------------------------------------------------------------------------------------------------ முதலாளித்துவம் இதுவும் முழுமையான சமுதாய விடுதலையை அளிக்கவில்லை. இதிலே நேரடியான அடிமைத்தனம் இல்லை என்றாலும் கூலி அடிமைத்தனம் என்பது இருக்கிறது. எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், உடல் ஆற்றல் மிக்கவரானாலும் முதலீட்டாளரின் (முதலாளியின்) விருப்பப்படியே செயல்பட்டாக வேண்டும். முதலாளிகளோ ஒரு புதிய எந்திரம் வாங்குவது முதல் தொழிலாளிக்கு குடியிருப்பு கட்டித்தருவது வரையில் ஒவ்வொன்றையும் லாப நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். இந்த லாப நோக்கம் என்பது தனி மனித பேராசையிலிருந்து வருவதல்ல. லாபம் என்ற விளைவு இல்லாமல் முதலாளித்துவம் என்ற அமைப்பே செயல்பட முடியாது. தெருவோரத்தில் இட்லிக்கடை போட்டால் கூட, எல்லா அடக்கச் செலவுகளும் சேர்ந்து ஒரு இட்லிக்கு ஒரு ரூபாய் செலவாகிறது என்றால் அதை அதே ஒரு ரூபாய்க்கு விற்றால் மறுநாள் கடை நடத்த முடியாது. லாபம் இருக்க வேண்டும். இதே லாபத்தை தொழிலாளிகளை ஏமாற்றும் அநியாயமான வழிமுறைகள், அடுத்த நிறுவனத்தை அழிக்கிற உத்திகள், அதற்கு அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சதிகள் என்று ஈட்டுகிறபோது அது கொள்ளை லாபமாக மாறுகிறது. இந்த லாப வேட்டை நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடக்கிறபோது அது பன்னாட்டுச் சந்தையாகிறது. அந்தச் சந்தையில் ஏகபோகமாக நாட்டாமை செலுத்துகிற வெறிதான் போர்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. முன்பு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னர்களிடையே போர்கள் நடந்தன. இன்று சந்தையைக் கைப்பற்றுவதற்காக முதலாளிகளிடையே போர்கள் நடக்கின்றன. முதலாளிகள் நேரடியாகப் போர்க்களம் வரமாட்டார்கள். இந்த அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்களது ராணுவங்கள் மூலம் அவற்றின் ராணுவங்கள் போர்களை நடத்தும். அந்தப் போர்களுக்கு ஏதாவது பெயர் சூட்டிக்கொள்ளும். முதலாளிகளின் லாபம் எப்படி உருவாகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்த சமுதாய ஆராய்ச்சியாளர்தான் மார்க்ஸ். அந்த லாபம்தான் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் உயிர் மூச்சு என்ற பொருளாதார உண்மையை அறிவியல் தேடலோடும், வரலாற்று ஞானத்தோடும் அவர் கண்டறிந்தார். முந்தைய சமுதாய அமைப்புகள் எப்படி அந்தந்தக் காலகட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களின் புரட்சியால் மாறினவோ அதே போல் இந்த முதலாளித்துவ அமைப்பும் தொழிலாளர்களாகிய மக்களின் எழுச்சியால் மாறும் என்பதே மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு. இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும், யாவரும் யாவையும் பெற்ற சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்பது அவருடைய தலையில் உதித்த ஆசை அல்ல. அது வரலாற்றின் அடுத்த கட்ட தேவை. அந்தப் புதிய சமுதாயம், தொடக்க கால மானுட சமுதாயத்தைப் போலவே சமத்துவ உரிமைகள் உள்ளதாக, அதே வேளையில் இயற்கையைப் பற்றிய அன்றைய அச்சங்கள் இல்லாததாக இருக்கும். சுரண்டலற்ற அந்தச் சமுதாய அமைப்பு நிலைபெறுகிறபோது உலகில் சண்டைகளுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். தன்னலம் அடிபட்டுப்போய்விடும். பாலினப் பாகுபாடு முற்றிலுமாக ஒழிந்துவிடும். சாதி-மத-இன வரப்புகள் நொறுங்கிவிடும். இந்தப் புரிதலோடு இயங்குகிறவர்களே மார்க்சியவாதிகள். கம்யூனிஸ்ட்டுகள் மார்க்ஸ் என்பவரை பக்தியோடு பின்பற்றுகிற சீடர்கள் அல்ல. மார்க்சியத்தின் துணையோடு இயற்கையையும் வரலாற்றையும் புரிந்துகொண்டு, அவரவர் நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றபடி சமுதாய மாற்றத்திற்காகச் செயல்படுகிறவர்கள். அந்த மாபெரும் சமுதாய இயக்கத்தை நடத்திக்கொடுக்கிற ஒரு கட்டமைப்புதான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அரசியல் வடிவம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பொதுவாகவே அரசியல் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாறுபடுகிறவர்களும் ஒரு சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் என்ற முறையில் மார்க்சியம் இங்கே பெரிய சக்தியாக வளராதது பற்றி கவலைகொள்கிறார்கள். மார்க்சியத்தின் எளிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது, இதிலேலேயே படிப்படியாக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சம நீதி நிலைநாட்டப்பட்டுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள். தனி மனிதத் தவறுகளால்தான் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல், கொள்ளை லாபம், வறுமை, பொறாமை, அடக்குமுறை போன்ற தீமைகள் நடக்கின்றன என்று கருதுகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டாலே போதும் என்று நினைப்போரும் உண்டு. ஆகவே இங்கே கம்யூனிசம் வராது வளராது என்று வாதிடுகிறார்கள். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். ஒரு வாதத்துக்காக, முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த மோதலின் விளைவாகத்தான், முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சோசலிச அமைப்பின் சில நடைமுறைகளை மேலோட்டமாகத் தானும் செயல்படுத்த முன்வருகிறது. எட்டு மணி நேர உழைப்பு, மனித உரிமைச் சட்டங்கள், மக்களுக்கு சில சலுகைகள் என்று செயல்படுத்துகிறது. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி பல்வேறு நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இதுவே கம்யூனிச இயக்கம் அந்த நாட்டில் வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறிதான். இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளராதது ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய அளவுக்கு வளராதது ஏன், ஒரு தீர்மான சக்தியாக வளராதது ஏன், நாடு முழுவதும் சீராக வளராதது ஏன் என்று நம் கேள்விகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம். கம்யூனிஸ்ட்டுகளின் கதைகளைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும், இவ்வளவு தியாகமும் வீரமும் மிகுந்த போராட்ட வரலாறு இருந்தும் ஏன் இங்கே இந்த இயக்கம் பெரியதொரு ஆற்றலாக அடியூன்றவில்லை என்ற வினா எழுகிறது. அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தகுதிகள் இருந்தும் கம்யூனிச இயக்கம் இங்கே பெரும் மாற்று சக்தியாகத் தழைத்தோங்கவில்லையே ஏன் என்ற புதிர் மனதைக் குடைகிறது. இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும். அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான். ------------------------------------------------------------------------------------------------------------------- நிலம் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்ற பொது உடைமை நிலை மாறி அதைக் கைப்பற்றியவர்களின் சொத்து என்ற தனி உடைமை நிலை உருவானதை முந்தைய கட்டுரையில் கண்டோம். அந்த நிலத்தில் விளைகிற தாவரங்கள், வளர்க்கப்படும் கால்நடைகள், அதில் கட்டப்படுகிற கட்டடங்கள் ஆகியவை நிலச்சொந்தக்காரரின் உடைமையாகின்றன. இறங்கி வேலை செய்கிற மனிதர்களும் கூட நில உடைமையாளரின் சொத்தாகிறார்கள். நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்ட பிறகு, அதைக் கைப்பற்றியவர்கள் தொடர்ந்து தமது பிடியிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். வயது முதிர்ந்து முன்போல் யாரையும் கட்டுப்படுத்தவோ வேலை வாங்கவோ முடியாது என்ற நிலை வருகிறபோது, தன் சார்பாகக் கட்டுப்படுத்துகிறவர்கள் தேவை என்று திட்டமிடுகிறார்கள். தன் சார்பாகக் கட்டுப்படுத்துவதற்கு வேறு யாரையும் நம்ப முடியாது என்பதால் தனது இன்னொரு பிம்பத்திடம் - அதாவது வாரிசாகப் பிறக்கிறவரிடம் சொத்தை ஒப்படைக்கிற நடைமுறை உருவாகிறது. அந்த ரத்த உறவான வாரிசை உருவாக்குகிற ஏற்பாடாகக் குடும்பம் உருவாகிறது. மனை என்ற சொத்தின் உடைமையாளன் குடும்பத்தின் தலைவனுமாகிறான். பயிர்களை உருவாக்கித் தருகிற நிலம் போல, வாரிசாக உயிர்களை உருவாக்கித் தருகிற உயிருள்ள நிலமாகப் பெண் மாற்றப்படுகிறாள். குடும்பத் தலைவனின் உடைமையாகிறாள். கணம் என்றால் குழு என்றும் அதன் தலைவன் கணபதி என்றும் பார்த்தோம் அல்லவா? குடும்பம் என்பதே ஒரு கணமாக உருவெடுக்கிறபோது அதன் தலைவன் கணவனாகிறான். அவனுடைய மனையை ஆள்வதற்கான வாரிசைப் பெற்றுக்கொடுக்கிற பெண் அவனது மனைவியாகிறாள். ஆம், குடும்பம் என்ற ஏற்பாட்டில் கணவனுக்கு நிகரான உரிமையோ அதிகாரமோ மனைவிக்குக் கிடையாது. எவ்வளவுதான் அவள் ஆணின் ஆசைக்கும் காதலுக்கும் உரியவளானாலும் அவளுடைய பொறுப்பு ஆணின் ரத்தச் சொந்தமாக அவனுக்கு ஒரு வாரிசை உருவாக்கித் தருவதுதான். கணவனுக்குப் பின் சொத்தின் உடைமையும் அதிகாரமும் அவனுடைய வாரிசுக்குத்தான். அதுவும் ஆண் வாரிசுக்குத்தான். பெண் வாரிசு பிரியத்துக்கு உரியவளாக இருந்தாலும், இன்னொரு ஆணுக்கு வாரிசை உருவாக்கித் தருவதுதான் அவள் பொறுப்பு. இப்படியாகப் பெண்ணுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற கருத்துக்கள் உருவாகின்றன. இயற்கையாக ஒவ்வொருவரும் தன்னை ஈர்க்கிற இன்னொருவரைத் துணையாக்கிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் அன்பையும் காதலையும் பொழிந்து, அந்த உறவால் பிறக்கிற குழந்தைகளை வளர்த்துவிட்ட உறவு முறைக்கு மாறாக, சமூகத்தின் விதிகளுக்கு உட்பட்ட குடும்ப உறவு முறை உருவாக்கப்படுகிறது. மனிதர்கள் இப்போது தன் குடும்பம் என்ற உணர்வோடு பாசத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள். அரசு என்ற அதிகார அமைப்பின் மூலமாக இந்தக் குடும்ப உறவு முறைகளும் வாரிசு உரிமைகளும் சட்டப்பூர்வமானதாக எழுதப்படுகின்றன. ஆணுக்குப் பெண் அடங்கி வாழ்வதும், குறிப்பிட்ட ஆணுக்கு மட்டும் வாரிசைப் பெற்றுத் தருவதும் சமூக விதிகளாக போதிக்கப்படுகின்றன. அதற்கு கற்பு என்ற பெயர் சூட்டப்படுகிறது. கற்புடைய பெண்ணே புனிதமானவள் என்ற கருத்துக்களும் விதைக்கப்படுகின்றன. இதையெல்லாம் விதிகளாக உருவாக்கி அறிவிப்பதற்கான அரசு என்ற அதிகார அமைப்பின் தலைவன்தான் அரசன். அவனுடைய ஆளுமை, ஆயுத வலிமை, படை பலம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் அதிகாரம் நிலைநாட்டப்படுகிறது. யாராவது அரசனின் ஆணையை மீறி இன்னொருவனின் சொத்தைக் கைப்பற்ற முயல்கிறபோது அல்லது தன் சொத்தைக் காப்பாற்றப் போராடுகிறபோது அவனை அடக்குவதற்கான அடியாட்கள்தான் அரசனின் படை. அதே நிலங்களைக் கைப்பற்ற வேறு இடங்களிலிருந்து வருகிற மற்ற அரசர்களின் ஆட்களோடு மோதுகிற வேலையும் இந்த அரசனின் படையாட்களுக்குத் தரப்படுகிறது. இப்படியாக அதிகாரம், ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு அடக்குவதன் மூலம் சமுதாயத்தைக் கட்டுப்படுத்துகிற அமைப்பாக உருவெடுத்ததால்தான் அரசு என்பது அடக்குமுறைக் கருவி என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரக் கட்டமைப்பில் கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டது இன்னொரு வகையான ஏற்பாடு. அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம் நன்றி -அ.குமரேசன் --------------------------------------------------------------------------------------------------------------------------
குடும்பமும் மார்க்சியமும் :
ஒருவர் எவ்வளவு ஏழையாக இருக்கிறார் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை; அவருக்கு ஒரு குடும்பம் இருக்குமானால் அவர் செல்வந்தர்தான்.” -ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் இடம்பெற்ற மேற்கோள் இது. குடும்பம் என்ற சமூக அமைப்பு பற்றிய விவாதங்கள் வருகிறபோதெல்லாம் மார்க்சியவாதிகள் மீது இரண்டு வகையான கண்டனக் கணைகள் பாய்வதுண்டு. ஒன்று, இன்றைய சுரண்டல் சமு தாய அமைப்பு மாறிவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் தொடுக்கிற கணை. “கம்யூனிசம் வந்துவிட்டால் குடும்பம் என்பதே அழிந்துவிடும்,” என்று பூச்சாண்டி காட்டியே மக்களை மார்க்சிய இயக்கத்திலிருந்து விலக்கிவைக்கிற முனைப்பு தான் அந்தக் கணையின் முனை. இன்னொரு கணை அறிவுத்தளத்தில் செயல் பட்டுக்கொண்டிருப்போரில் ஒரு பிரிவினரால் தொடுக்கப்படுவது. “குடும்பம் என்பதே இற்றுப் போய்விட வேண்டும் என்பதே மார்க்சியக் கருத்தியல்; ஆனால் இன்றைய மார்க்சியக் கட்சிகள் குடும்ப உறவைப் பாதுகாக்க விரும்புவதால், அடிப்படை மார்க்சியத்திலிருந்தே விலகிப்போய் விட்டன,” என்று தள்ளுபடி செய்வதே இவர்கள் தொடுக்கும் கணையின் கைப்பிடி. மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே குடும்ப உறவை நிராகரிக்கிறதா? பொதுவுடைமைச் சமுதாயத்தில் குடும்பம் என்பதே இல்லாமல் போய்விடுமா? குடும்ப அமைப்பை அழிக்க புதிதாக ஒன்று பிறந்துவரத் தேவையில்லை. இன்றைய உலக-உள் நாட்டு முதலாளித்துவமும், அதன் பாதுகாப்பில் இருக்கும் பண்ணைச் சமூகமும் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. உலக வாழ்க்கையின் எல்லாக் கூறுகளும் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் விதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் கோடை வெயிலில் எந்த குளிர்பானத்தைக் குடிக்க வேண்டும், தாகம் தீர்க்க எந்தத் தண்ணீரைப் பருக வேண் டும், மாலை நேரக் குறும்பசி நீங்க எந்த உருளைக் கிழங்கு வறுவலைக் கொறிக்க வேண்டும் என்றெல்லாம் சுதந்திரச் சந்தையின் பெயரால் முதலாளித்துவமே முடிவு செய்கிறது. அது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்களின் தாக்கங்கள் குடும்பங்களிலும் எதிரொலிக்க, எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தலைமுறை இடைவெளி என முரண்பாடுகள் முற்றுகின்றன. சின்னக் கசப்புகள் பெரும் பிணக்குகளாக மாறுகின்றன. முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. இதை விட குடும்ப அமைப்பை சீர்குலைக்க வேறொன்று தேவையில்லை. குடும்பமே வேண்டாம் என்று மார்க்சியம் சொல்கிறதா? உலகிற்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டு அறிவிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்ட மார்க்ஸ்-எங்கெல்ஸ் இரு வரும், முதலாளித்துவ குடும்ப முறையின் போலித்தனங்களைச் சாடினர். முதலாளித்துவச் சுரண்டலும் அடக்குமுறையும் உட்பொதிந்த குடும்ப முறை, பொதுவுடைமைச் சமுதாய வளர்ச்சியில் மறைந்துவிடும் என்றனர். இன்றைய நடைமுறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் வீட்டில் எதையும் தீர்மானிப்பவள் பெண்ணே என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது. எங்கே வீடு கட்டலாம், எந்த உறவினரோடு பழகலாம், குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம், பையனுக்கு எந்தப் பெண்ணை மணமுடிக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்கிறவள் பெண்தானே என்றால், ஆமாம் அதுதான் உண்மை என்று பெண்களே கூட பேசு வார்கள். ஆனால் சமூகத்தளம் பற்றிய புரிதலோடு இதை ஆராய்ந்தால், குடும்பத்தில் தீர்மானிக்கிற பெண் கூட, தான் சார்ந்திருக்கிற ஆணின் நலன் கள் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறாள் என்பது தெளிவாகும். இந்தியச் சமுதாயத்தின் சாதியக் கட்டமைப்பு போன்ற நுட்பமான ஏற்பாடு இது. மேலோட்டமாகப் பார்த்தால் பார்ப்பணர் அல்லாத மற்ற ஆதிக்க சாதியினர்தான் மிகக்கொடுமையான சாதியப் பாகுபாடுகளைப் பின்பற்றுவது போலத் தெரியும். நுணுகிப் பார்த்தால்தான், இதைக் கட்டிக்காக்கிற மனுவாதமாகிய பிராமணீயம் கோலோச்சிக்கொண் டிருப்பது தெரியும். அதே போல், பெண்ணின் ஆணைப்படியே எல்லாம் நடக்கிறது என்பதாகக் காட்டிக்கொண்டு, ஆனால் தானாகவே எல்லாம் தன் விருப்பப்படி இயங்க வைத்திருப்பது நுட்பமான ஆணாதிக்கம். சகல அலங்காரங்களுக்கும் ஆணின் சொத்துடைமையோடு சேர்ந்த ஒன்றாகவே பெண் இருக்கிறாள். இன்றளவும் திருமணமான பெண்ணின் பெயர் கண வனின் பெயரோடு சேர்த்து திருமதியாகவே அடையாளப்படுத்தப்படுகிறது என்பது ஒரு சான்று. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறபோது, பெற்றோர் இருவரது பெயர் முதல் எழுத்துகளையும் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் அது நடைமுறைக்கு வந்துவிடவில்லை என்பது இன்னொரு சான்று. இப்படி பல சான்றுகள். பெற்றோருக்கிடையேயான இந்த அதிகார ஏற்றத்தாழ்வு, குழந்தைகளைக் கையாள்வதில் இன்னும் அப்பட்டமாகிறது. குழந்தைகளை என்னதான் கொஞ்சினாலும், குழந்தையின் குணத்தை தெய்வத்தோடு ஒப்பிட்டாலும், பெரியவர்கள் சொல்வதை எதிர்த்துக் கேட்காமல் ஏற்றுக்கொள்வதே நல்லொழுக்கம் என்ற அடிமைத்தனமே கற்பிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் என்னவாக விருப் பம் என்பதில் ஒவ்வொன்றிலும் பெற்றோர் எதிர்பார்ப்பே - அதிலும் தந்தையின் எதிர்பார்ப்பே - குழந்தையின் ஆசையாக ஊட்டப்படுகிறது. சுய மாய்ச் சிந்தித்து தனக்கென ஒரு வளர்ச்சிப் பாதை யைத் தேர்ந்தெடுக்கிற குழந்தைகளுக்கு தறு தலைப் பட்டம் தயாராகக் காத்திருக்கிறது. சுய சிந்தனையாளர்களாகவோ, கலை - இலக் கியப் படைப்பாளிகளாகவோ, அறிவியல் ஆய்வாளர்களாகவோ - அரசியல் தலைவர்களாகவே கூட - உருவாகிறவர்கள் ஏன் மிகக் குறைவாக இருக் கிறார்கள் என்ற கேள்விக்கான பதில், குடும்பத்தின் இந்த சர்வாதிகார அமைப்புக்குள் இருக்கிறது. இந்த மனப்போக்கில் முளைவிடுகிற, சொல்பேச்சுப்படி வளர்கிற தலைமுறைகள்தான் சுரண் டல் வர்க்கத்திற்குத் தேவை. கேள்வி கேட்காத ஒரு நவீன உழைக்கும் படைதான் இன்றைய உலக-உள்நாட்டுப் பெருமுதலாளிகள் கூட்டத்துக்குத் தேவை. “குழந்தைகளை அவர்களது பெற்றோர் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் விரும்புகிறோம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அந்தக் குற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர். குடும்பத்தின் இன்றைய ஆதிக்க அமைப்புதான் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போகும். குடும்பம் என்ற சமுதாய அலகு உதிர்ந்துவிடாது - அது இன்றைய வடிவத்திலிருந்து பல வகைகளில் மாறுபட்டதாக, குடும்ப ஜனநாயகம் முழுமையாய் நிலை நாட்டப்பட்டதாக வளர்ச்சி பெற்றிருக்கும். பூக்களும் இலைகளும் காம்புகளும் தண்டுகளும் இல்லாமல் மரம் இல்லை; அதே போல் குடும்பம் என்று அடிப்படை அலகு இல்லாமல் சமுதாயம் என்ற அழகு இல்லை. கல்வி உள்பட குழந்தைகளைக் கவனிப்பதில் தனியொரு குடும்பமாக மட்டும் இல்லாமல், சமூகமே ஒரு குடும்பமாகத் துணை நிற்கும். குடும்பத்தை இயக்குகிற விசையாக அன்பும் காதலும் சமத்துவமும் மையம் கொண்டிருக்க, அதிகார அமைப்பு படிப்படியாகப் பட்டுப்போயிருக்கும். சமுதாயப் புரட்சி நடந்தபின் வரப்போகிற மாற்றத்திற்கும் இன்று உலகக் குடும்ப நாள் கொண்டாடுவதற்கும் என்ன தொடர்பு? வர்த்தக நிறுவனங்களைப் பொறுத்தவரையில், குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் தேவையான தட்டுமுட்டுச்சாமான்களை விற்றுத் தள்ளுவதற்கான இன்னொரு ஏற்பாடு. சுயநியமன பண்பாட்டுக் காவலர்களுக்கு, தற்போதைய பெண்ணடிமைத்தனமும் குழந்தையடிமைத்தனமும் கொண்ட குடும்ப அமைப்பை அப்படியே பாதுகாப்பதை வலியுறுத்துகிற இன்னொரு கட்டுப்பாடு. புரட்சியை லட்சியமாகக் கொண்டோருக்கு குடும்ப ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் எடுத்துரைக்கிற இன்னொரு ஈடுபாடு. குடும்பமாய் ஒன்றிணைப்பது ரத்தமும் சதையுமான உறவு அல்ல; அன்பும் அரவணைப்புமான மானுட உணர்வு. அசாக் ------------------------------------------------------------------------------------------------------------------------- -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசியம் என்பது என்ன ?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசம் என்றால் என்ன ?
சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். கெல்னரின் கருத்து தேசிய இனம் என்பது முதலாளித்துக் காலத்திற்கே உரித்தான வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம் என்பதாகும். ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம்'என்ற தேசிய இன ஒருமை உணர்வு. ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு. ------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?
இல்லை. தேசம்( (Nation ) ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது. ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா. தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம். 'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்". நாடு என்பதற்கு அந்த அகராதி கூறும் விளக்கம்: 'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்" மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல,அது ஒரு நாடு. அதில் ஜெர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; ஜெர்மனிதேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation )) என்பதாகும். இந்தியா ஒரு நாடு,ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States ) --------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?

ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும் இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம்(nationality)ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம். சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார். அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி( ( Proto Language ) ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார். திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. 'இந்தியர்" என்பது மரபினமும்;அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo Poltics )ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்"( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது. லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரஷ்யர், பைலோ ரஷ்யர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations )) என்றே அழைத்தனர். இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது. --------------------------------------------------------------------------------------------------------------------------------
சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவைவேறா ?
இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல. சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.( ( Webster's Pocket dictionary )) அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர். The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது. நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது. உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா ? உலகம் ஒன்று,மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன. புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன. வௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது. ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( Nation State formation )என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன. தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார். ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை( Right to Self determination with the right to secede ) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம் விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------
தேசியம் என்றால் என்ன?
அயர்லாந்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தேசிய ஒடுக்குமுறையின் போது தேசியம் குறித்து கார்ல் மார்க்ஸ் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் பின்னதாக லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற அரசியல் மேதைகளால் தேசியம் குறித்த தெளிவான பார்வை முன்வைக்கப்படுகிறது. 70களில் ஏகாதிபத்தியக் கல்விசார் நிறுவனங்களில் குறிப்பாக மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் தேசியம் குறித்த கருத்துக்கள் மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது. பல பிறழ்வுகளின் பின்னர் மீண்டும் தேசியம் என்பது குறித்த பொதுவான முடிபாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் கருத்துக்களே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதலில் தேசியம் என்பது முதலாளித்துவ உருவாக்கத்தோடு தொடர்புடையது. முதலாளித்துவதின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட சந்தையோடு நெருக்கமாகப் பிணைக்கப்படுகின்ற மக்கள் கூட்டம், தாம் ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்ட தனித்துவமானதாக உணரும் போதே அது தேசியம் எனப்படுகின்றது. ஒரு குறித்த சந்தையை நோக்கி மத்தியத்துவப்ப்படுத்தப்படுகின்ற மக்கள் கூட்டம் வியாபாரப் பரம்பலுக்காக தமக்கிடையேயான தொடர்பு மொழி ஒன்றை தெரிந்தெடுத்துக் கொள்கின்றன. இந்தத் தொடர்பு மொழி தேசியத்தின் உருவாக்கத்தில் அடிப்படையான பங்கை வகிக்கின்றது. இரண்டாவதாக பல மொழி பேசுகின்ற குழுக்கள் அவற்றிற்கே உரித்தான பண்பாடுகளைக் கொண்டிருந்தன. தேசங்கள் உருவாகின்ற போது அவை ஒன்றிணைந்து மூலதனதின் வளர்ச்சிக்கு உகந்த பண்பாட்டு அம்சங்கள் வேறுபட்ட குழுக்களிடமிருந்து உள்வாங்கப்பட்டு புதிய, பொதுவான கலாச்சாரம் ஒன்று உருவாகிறது. பல முற்றிலும் வேறுபட்ட மொழி மூலங்களைக் கொண்ட குழுக்கள் ஒன்றிணைந்து பிரஞ்சு தேசம் உருவானபோது கோலுவா மொழி ஏனைய மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு பிரஞ்சு மொழியாக உருவானது போலவே ஏனைய இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளும் உள்வாங்கப்பட்டன. அனைத்தினதும் இணைவாக பொதுவான கலாச்சாரம் ஒன்று உருவாகின்றது. கலாச்சாரமும் மொழியும் ஒரு சந்தையை நோக்கி மத்தியத்துவப்படுத்தப்பட்டே உருவாகின்றது. சந்தையை நோக்கி மத்தியத்துவப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிப் போக்கை இலகுபடுத்தி வகைப்படுத்தும் போது பொதுவான பிரதேசம் மற்றும் பொதுவான பொருளாதாரம் என்ற இயல்புகளையும் தேசிய இனம் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பிரன்ஸ் இத்தாலி போன்ற முதலாளித்துவம் உருவான நாடுகளைப் போலன்றி ஏனைய சில நாடுகளில் பல இனக் குழுக்கள் இணைந்து ஒரு தேசமாக உருவாகாத நிலை காணப்பட்டது. பால்கன் நாடுகள் இதற்கு உதாரணமாக அமைந்தது. இந்த நாடுகளிலெல்லாம் முதலாளித்துவம் சீராக வளர்ச்சி பெறாத தன்மை காணப்பட்டது. வேவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு அளவுகளில் அதன் வளர்ச்சி காணப்பட்டதால் வெவ்வேறு சந்தைகள் உருவாகின. ஒரு மொழி பேசிய இனக்குழுக்களை சுற்றி இந்தச் சந்தைகள் மத்தியத்துவப்படுதப்பட்டன. இவை ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயெ வெவ்வேறு தேசங்கள் உருவாக வழிவகுத்தன. வெவ்வேறு தேசங்களின் மக்கள் வெவ்வேறு தேசிய இனங்களாக மாற்றமடைந்தனர். இந்த நாடுகளில் பெரும்பான்மைத் தேசிய இனங்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் உருவாகின. பெரும்பான்மைத் தேசிய இனங்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தின் மூலதனச் சந்தையை கைப்பற்ற முயன்ற போது தேசிய இன ஒடுக்குமுறை உருவானது. இதன் பின்பே சுய நிர்ணய உரிமை குறித்த கருத்துக்கள் வலுப்பெறலாயின. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சந்தையை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பிரிந்து போகும் உரிமை என்பதே சுய நிர்ணய உரிமை என அழைக்கப்பட்டது. இதற்கிடையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தடைப்பட்ட அல்லது நிலப்பிரபுத்துவம் முழுமையாக அழிந்துபோகாத நாடுகளில் தேசிய இனங்களாக வளர்ச்சியடையும் நிலையிலுள்ள இனக்குழுக்கள் காணப்பட்டன. சோவியத் ரஷ்யா இதற்குச் சிறந்த உதாரணம். இவை தேசிய சிறுபான்மை இனனங்கள் என அழைக்கப்பட்டன. மேற்கின் முதலாளித்துவ உருவாக்கத்தோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டு உருவான தேசிய இனங்கள் குறித்த இக்கருத்துக்கள் ஒரு குறித்த வரலாற்றுக்கட்டத்திற்கு உரித்தானவை. இதிலிருந்து சில முக்கிய முடிபுகள் முன்வைக்கப்பட்டன: 1. தேசிய இனங்கள் அல்லது தேசம் என்ற கருத்துருவாக்கம் வரலாற்றின் ஒரு குறித்த கட்டத்திற்கு உரித்தானது. அந்தக் குறிப்பான காலகட்டம் முதலாளித்துவ காலகட்டமாகும். 2. தேசிய இனங்களிற்கே தேசிய உணர்வு அல்லது ஒருமைப்பாடு காணப்படும். 3. தேசிய உணர்வு அல்லது ஒருமை என்பது முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு தொடர்புடையது. 2. தேசியம் குறித்த கல்விச் சமூகத்தின் மாற்றுக் கருத்துக்கள் இந்த நிலையில் மேற்கின் கல்விசார் சமூகத்திலிருந்து தேசியம் குறித்த கருத்துக்கள் மிக நீண்ட காலத்தின் பின்னர் முன்வைக்கப்படுகின்றன. பின் அமைப்பியல் அதனோடு இணைந்த பின் நவீனனத்துவம் ஆகியவற்றோடு கைகோர்த்துக்கொண்டு இனத்துவம், இன அடையாளம், இனத்துவ எல்லைகள் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1953ம் ஆண்டிலேயே இனத்துவம் என்ற சொல் இணைக்கப்படுகிறது. ஆங்கிலத்திற்கு கிரேக்க மொழியிலிருந்து அறிமுகமான இனம் என்ற சொல் பின்னதாக விரிவுபடுத்தப்படுகின்றது. கிரேக்கத்தில் எத்னோ என்ற சொல் யூதர்களும் கிறீஸ்தவர்களும் அல்லதவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 70களின் பின்னர் மாக்ஸ் வெப்பர் இனம், இனத்துவம் அடையாளம் அதன் எல்லைகள் போன்றவற்றைப் பேச ஆரம்பிக்கிறார். பின் நவீனத்துவத்தின் அடையாளம் குறித்த “கருத்தாடல்” இன் தாக்கத்திலிருந்து இவ் விவாதங்கள் எழுந்தன. 70 களின் பிற்பகுதியில் தேசியம் குறித்த கருத்துக்கள் முனைப்புப் பெறுகின்றன. 90களின் ஆரம்பம் வரை தொடர்ந்த தேசியம் குறித்த விவாதங்கள் பின் நவீனத்துவம் மற்றும் பின் அமைப்பியல் போன்ற மார்க்சிய விரோதக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தன. மூன்று பிரதான ஆய்வாளர்கள் தேசியம் குறித்த விவாதங்களில் முனைப்புக்காட்டினர். முதலில் ஏர்னஸ்ட் கெல்னர், எரிக் கொஸ்பாம், பெனடிடிக்ட் அன்டர்சன் போன்றோர் தேசியம் குறித்த வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். 70களின் பின்னர் மாக்ஸ் வெப்பர் இனம், இனத்துவம் அடையாளம் அதன் எல்லைகள் போன்றவற்றைப் பேச ஆரம்பிக்கிறார். பின் நவீனத்துவத்தின் அடையாளம் குறித்த “கருத்தாடல்” இன் தாக்கத்திலிருந்து இவ் விவாதங்கள் எழுந்தன. ஏர்னர்ஸ்ட் கெல்னர் தேசியம் குறித்த கருத்துக்களில் லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் ஆய்வுகளே சரியானவை என வாதிட்டவர். இவர் எழுதிய தேசமும் தேசியமும் என்ற மிகப் பிரபலமான நூல் தேசிய இனம் என்பது முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு தொடர்புடையது என வாதிட்டது. 70களின் பிற்பகுதியிலேயே கெல்னரின் தேசியம் குறித்த பல கட்டுரைகள் வெளியாகின. இந்த விவாதங்களில் கெல்னரின் கருத்து தேசிய இனம் என்பது முதலாளித்துக் காலத்திற்கே உரித்தான வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம் என்பதாகும். கெல்னரின் கருத்திற்கு எதிரான தேசியம் குறித்த மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தவர் ஹொப்ஸ்பவம். ஹொப்ஸ்பவம் இன் கருத்தின் அடிப்படையில் தேசிய என்பது நிலப்பிரபுத்துவக் காலத்திலும் காணப்பட்டது என்பதை நிறுவ முற்பட்டார். தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் உருவாகும் மக்கள் கூட்டத்தின் ஒன்றிணைந்த உணர்வு என்பதற்கு அப்பால் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்திக் காலகட்டத்திலும் காணப்பட்டது என்று வாதிட்டார். ஹொப்ஸ்பாமின் இந்த வாதத்திற்கான ஆதாரமாகப் பயன்பட்டது தேரவாத பௌத்தம். அதிலும் குறிப்பாக இலங்கையில் தேரவாத பௌத்தம் நிலப்பிரபுத்துவக் காலத்திலேயே தேசிய வாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தது என்பதையும், தேசிய உணவைக் கொண்டிருந்தது என்பதையும் வாதிடுகிறார். இந்த வாதத்தின் மையப் பொருளாக இலங்கையில் இந்து மன்னர்கள் கூட பௌத்ததையே தழுவிக்கொண்டதைக் குறிப்பிடுகிறார். மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் ஹொப்ஸ்பவமின் வாதங்களில் வந்து செல்கின்றன. அமைப்பியல், பின்னமைப்பியல், பின்னவீனத்துவம் போன்ற கருத்துக்கள் திணிக்க்கப்பட்ட மேற்கத்திய கல்வித்துறை மார்க்சிய ஆய்வு முறையே சரியானது என்று ஏற்றுக்கொண்ட 90 களின் ஆரம்பத்தில் ஹொப்ஸ்பவமின் கருத்துக்கள் நூலுருவில் வெளியாகின்றது(Nations and Nationalism Since 1780: programme, myth, reality). ஹொப்ஸ்பாவ்மின் கருத்துக்கள் தவறானது என்பதை நிறுவ சிக்கலான ஆய்வுகள் ஏனையோருக்குத் தேவைப்படிருக்கவில்லை. தேரவாத பௌத்ததின் காலத்தில் மக்கள் மத்தியில் இந்துத்துவ ஆதிக்கட்கத்திற்கு எதிரான கருத்துக்கள் காணப்பட்டாலும், ஒரு நாட்டின் எல்லைகள் மன்னர்களின் ஆட்சிக்கு ஒப்ப சுருங்கியும் விரிந்தும் சென்றன என்பது நிறுவப்பட்டது. தவிர, காலனிய ஆக்கிரமிப்பு வரை இலங்கையில் முழுமையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை காணப்பட்டவில்லை என்பதும் குழு நிலை சமூகமே காணப்பட்டது என்பதும் முக்கிய எடுகோளாக முன்வைக்கப்பட்டது. எது எவ்வாறாயினும் பின் அமைப்பியல் அதனோடு இணைந்து உருவான பின் நவீனத்துவம் ஆகியவற்றின் மரணத்தின் பின்னர், பொதுவான ஆய்வுகளில் மார்கிசியத்தோடு முரண்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்ட மேற்கத்திய கல்விச் சமூகம், இறுதியாக கெல்னரின் ஆய்வையே ஏற்றுக்கொள்கிறது. ஆக, தேசியம் என்பது முதலாளித்துவக் காலகட்டத்திற்கே உரித்தான வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம் என்பதற்கு அப்பால் வேறெதுவும் இல்லை என்பது பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது மார்க்சியம் முதலில் வரையறுத்த தேசியம் குறித்த கருத்துக்களை பல நீண்ட வருட விவாதங்களின் பின்னர் மார்கிசியம் குறித்துப் பேசாமலேயே கல்விச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. இப்போது தேசியம் குறித்த எந்த ஆய்வுமற்ற “ஆண்டபரம்பரைப்” பேர்வளிகள் குறித்துப் பேசுவது எனது நோக்கமல்ல. இவர்களில் ஒருபகுதி ஏமாற்றுக்காரர்கள். இன்னொரு பகுதி ஏமாற்றபடுகிறதுவர்கள். 3.கெல்னரும் ஹொப்ஸ்பவமும் ந.இரவிந்திரனும் கெல்னர் மற்றும் ஹொப்ஸ்பவம் ஆகியோரின் தேசியம் குறித்த கருத்துக்களில் கெல்னரின் கருத்துக்கள் பொருளுற்பத்தி எவ்வாறு தேசியம் என்ற சமூகச் சிந்தனையையும் அதன் ஊடான ஒருங்கிணையவையும் ஏற்படுத்துகிறது என வாதிக்கிறார். ஹொப்ஸ்பவமைப் பொறுத்தவ ரை தேசியம் என்பது பொருளுற்பத்தியோடு தொடர்பற்ற தனிவகையான ஒருங்கிணைவிற்கான சிந்தனை என்பதை இலங்கைச் சூழலை முன்வைத்து நிறுவ முயல்கிறார். கெல்னர் சிந்தனை என்பதைத் தீர்மானிப்பது சமூகத்தின் வாழ்நிலை அல்லது பொருள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. சமூகத்தின் இயக்கத்தோடு தொடர்புடையது. இதனைப் பொருள்முதல்வாத அணுகுமுறை என்று மார்க்சியர்கள் குறிப்பிடுவர். ஹொப்ஸ்பவமைப் பொறுத்தவ ரை பொருளுற்பத்திக்கு வெளியில் இந்தச் சிந்தனை வெறுமனே ஒருங்கிணைவு என்ற அடிப்படையில் உருவாவதாகக் குறிப்பிடுகிறார். இதனைக் கருத்து முதல்வாதம் என்கிறோம். ந.இரவீந்திரன் ஹொப்ஸ்பவமின் கருத்துக்களுக்கு இசைவான தேசியம் குறித்த சிந்தனையை முன்வைக்கிறார். முதலாளித்துவப் பொருளுற்பத்தியோடு உருவாக்கம் பெற்ற வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டமே தேசிய இனங்கள் என்ற கருத்தை நிராகரிக்கும் ந.இரவீந்திரன் அதற்கு அப்பால் ஒரு மக்கள் கூட்டத்தின் ஒருங்கிணைவு என்பதே தேசியம் என்ற கருத்தை முன்வைக்கிறார். இவ்வாறான கருத்தின் அடிப்படையிலேயே சமூகத்தின் மேற்கட்டுமானமாக வெளித்தெரிவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேந்தவர்களை ஒரு தேசியமாகக் கணிப்பிடுகிறார். கருத்துமுதல்வாத அடிப்படைகளைக் கொண்ட இக்கருத்து பல தடைவகள் கோட்பாட்டுத் தளத்தில் தோல்வியடைந்திருக்கிறது என்பது வேறுவிடையம். 4. இலங்கையில் தேசியமும் பாசிசமும் இலங்கை போன்ற நாடுகளில் தேசிய இனங்களின் வர்க்கக் கூறுகள் குறித்த பருமட்டான ஆய்விலிருந்தே தேசிய இயக்கங்கள் குறித்த முடிபிற்கு முன்வர முடியும். முதலாளித்துவம் இயல்பாகத் தோற்றம்பெற்ற மேற்கத்தை நாடுகளுக்கும் முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யபட்ட மூன்றாமுலக நாடுகளுக்கும் இடையே தேசிய உருவாக்கத்திலும் தேசியம் குறித்த கருத்துக்களிலும் மிகப்பெரும் வேறுப்பாடுகளைக் காணலாம். மேற்கத்திய தேசியம் தொடர்பான முன் உதாரணங்களை மாற்றங்களின்றி பிரயோகிக்கும் முறமை கோட்பாட்டுரீதியான பாரிய தவறுகளையும் அழிவுகளையும் நோக்கி இட்டுச் சென்றுள்ளன. நேபாள விடுதலைப் போராட்டத்தில் தேசிய இனங்கள் குறித்து மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பசுந்தாவுடன் உரையாடிய போது, தேசிய இனங்கள் குறித்த தமது நிலைப்பாடு பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டதாக அமைந்திருந்தாலும் மேற்கிலிருந்து வேறுபட்டிருப்பதை கவனத்தில் கொண்டக வேண்டியிருந்தது என்றார். இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போதே சந்தைப் பொருளாதாரம் உருவாகின்றது. சந்தைப் பொருளாதாரத்தின் தோற்றத்துடனேயே தேசிய இனங்களும் தேசிய உணர்வும் தோற்றம் பெறுகின்றது. இலங்கையில் தோற்றம்பெற்ர சந்தைப் பொருளாதாரம் இலங்கையிலுள்ள தேசிய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலன்றி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலேயே உருவாகின்றது. பிரித்தானியா தனது நேரடிக் காலனித்துவத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறிய போது தனது முகவர்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டுச் செல்கிறது. விதேசிகளான அன்னிய முகவர்கள் அல்லது தரகர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிகொள்ள தேசியத்தின் பெயரால் முழு நாடுமே சூறையாடப்படுகிறது. தவிர, வர்க்க அமைப்பு முறையில் தேசிய முதலாளித்துவத்தின் இருப்பு சாத்தியமற்ரத்தாகிவிடுகின்றது. எது எவ்வாறாயினும் சந்தைப் பொருளாதாரம் தேசியத்தின் தேவையத் தவிர்க்க முடியாமல் உருவாக்குகின்றது.முதலாளித்துவ உற்பத்தி முறையில் மூலதனத்தின் பரம்பலுக்கு அவசியமான தேசியமும் தேசிய உணர்வும் தரகு முதலாளிகளின் விதேசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. தேசிய முதலாளித்துவ உருவாக்கத்தைத் தடுப்பதற்காக இன முரண்பாடு திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியமே தேசிய இன முரண்பாட்டை உருவாக்கியது. இத்தேசிய இன முரண்பாடு பெருந்தேசிய ஒடுக்குமுறையாக வியாபித்து விடுதலைப் போராட்டத்திற்கான தேவையை சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் உணரவைக்கிறது. இப்போது, வட கிழக்குத் தமிழர்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். தேசியம், தேசம் போன்ற முழக்கங்கள் தேசிய முதலாளிகளின் நலன்களுக்காக முன்வைக்கபடுகின்றவை மட்டுமல்ல தேசிய விடுதலைப் போராட்டம் கூட அவர்களின் நலன் சார்ந்த ஒன்று. தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தேசிய முதலாளிகளே தலைமைதாங்கியிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு வர்க்கமோ அது உருவாகுவதற்கான குறைந்தபட்ச சூழலோ தேசிய மூலதனம் குறித்த கருத்துருவாக்கமோ அற்றுப் போன நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை யார் தலைமைதாங்க முடியும்? மத்தியதர வர்க்க இளைஞர்களிடமிருந்து தோற்றம்பெற்ற தேசிய விடுதலை உணர்வைத் தலைமைதாங்க உறுதியான தேசிய முதலாளித்துவ வர்க்கம் அற்றுப் போயிருந்த நிலையில், அதன் தலமையைப் பலம் மிக்க ஏற்கனவே ஒழுங்கைமக்கப்பட்டிருந்த தரகு முதலாளித்துவ வர்க்கம் கைப்பற்றிக்கொண்டது. தரகு முதலாளித்துவம் தேசியத்திற்கு எதிரான முதலாவது நேரடி எதிரி வர்க்கம். அதாவது தேசிய விடுதலைப் போராட்டத்தை அதன் எதிரிகள் கையகப்படுத்திக்கொண்டனர். தேசியம் குறித்துப் பேசிய அனைவத்து போராட்ட இயக்கங்களுமே ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டன. தமிழ்த் தரகு முதலாளிகளைப் பிரதினிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே அனைத்து விடுதலை இயக்கங்களதும் அரசியலானது. வேறுபட்ட அளவுகளில் இவை அனைத்துமே ஏகாதிபத்திய சார்பு கொண்டவையாக மாற்றமடைந்தன. இடதுசாரி முனைப்புக்கொண்ட தேசிய விடுதலை இயக்கங்கள் என்று ஆரம்பிக்கப்பட்டவை கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏகாதிபத்திய – தரகுமுதலாளித்துவம் சார்ந்த இயக்கங்களாக இறுதியை அடைந்தன. தேசிய விடுதலைக்கு எதிரான கோட்பாட்டுத் தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கியதால் அது பாசிசக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. மத்தியதர வர்க்கத்தின் மத்தியிலிருந்து எழுந்த தேசிய சக்த்திகளை இப் பாசிசக் கூறுகள் முற்றாக அழித்தன. இறுதியில் புலிகளின் தலைமையில் மொத்த விடுதலைப் போராட்டமும் அழிந்து சிதைந்துபோனது. 5.என்ன செய்யலாம்? தேசிய முரண்பாடு கூர்மையடைந்துள்ள சூழலில் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கும் உறுதியான வர்க்க அணியைப் பலப்படுத்தி அதன் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன் நகர்த்துவதே இதற்கான ஒரே மாற்று. இலங்கையில் ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளை ஒரணியில் திரட்டுவதன் ஊடாகவே, அமைப்பு மயமாக்குவதனூடாகவே இதனைச் சாத்தியப்படுத்த இயலும்.கடந்தகாலத்தில் இவ்வகையான முயற்சிகள் வெற்றியளித்தமைக்கான சான்றுகள் பல காணப்படுகின்றன. தேசிய முதலாளித்துவ வர்க்கம் உறுதியான வர்க்கமாகக் காணப்பட்ட சூழலில் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட தேசிய இனங்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள், தேசிய சிறுபான்மை இனங்கள் என்பவற்றிற்கும் வெளியால், வேறுபட்ட சூழலிலேயே இலங்கையில் தேசிய இனங்கள் காணப்படுகின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் தோற்றத்தோடு ஆரம்ப நிலையை அடைந்த தேசிய இனங்களில் தோற்றம் அதே நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது. உற்பத்தி சக்திகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் இன்னும் பெரிதாகக் காணப்படவில்லை. இலங்கையில் தேசிய இனங்கள் இன்னமும் வளர்ச்சியடையும் நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த்ச் சூழல் சாதீய முரண்பாடுகளையும், பிரதேச முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வகையான முரண்பாடுகளின் இருப்பு என்பது மூன்றாம் உலக நாடுகளில் தேசிய இனங்கள் குறித்த குழப்பமான கருத்துக்களை உருவாக்குகின்றன. வலன்டைன் டானியல், ஜேகப் பாண்டியன் போன்ற கல்வியாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் தேசியம் என்பது சாதிய முரண்பாடுகளையும் அங்கீகரித்த ஒன்றாகவே அமைந்திருக்கும் என்ற தவறான கருத்தை மேற்கின் கல்விச் சமூகத்திற்குக் கற்பிக்கின்றனர். தேசிய இனங்கள் இன்னமும் வளரும் நிலையிலேயே காணப்படுகின்றன என்ற கருத்துச் சொல்லப்படுவதில்லை. சண்முகதாசன் குறைனிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் என்ற கருத்தை “தேசிய சிறுபான்மை இனங்கள்” என்ற மேற்கின் பிரதியீடாகவே முன்வைத்தார். 7.பிரிந்து செல்லும் உரிமை கோட்ப்பாடுத் தளத்தில் சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது ஒடுக்குமுறையிலிருந்து பிரிந்து சென்று தனியான தேசிய அரசை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம். மறுபுறத்தில் நடைமுரை சார்ந்து இது மாறுபடலாம். குறிப்பாக இலங்கைச் சூழலில் தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமைய அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல்கள் தெற்கிலிருந்து எழுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் இணைந்து வாழ்வதற்கே விரும்பும் என்பது வெளிப்படை. இன்றைய பேரினவாத ஒடுக்குமுறை உச்சமடைந்துள்ள சமூகப் புறச் சூழலில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுதல் தவிர்க்க இயலாத ஒன்று. பிரிந்து செல்வதா இல்லையா என்ற எதிர்காலம் குறித்த வினாவிற்கு எதிர்காலத்தில் பெருந்தேசிய அரசுகளின் தன்மையைக் குறித்தே முடிவுகள் அமையும்.ஒரு அரசு எம்மீதான ஒடுக்குமுறையைப் பிரயோக்கிக்கும் என்ற தெரிந்துகொண்டே இணைந்து வாழ்வோம் என்று எப்படி அடம்பிடிப்பது? பெருந்தேசிய இனத்தின் மத்தியில் இணைந்து வாழ்வதற்குரிய சோசலிச அரசை உருவாக்குவதில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பங்களிக்கலாம் என்பதும், முழு இலங்கை தழுவிய கம்யூனிச இயக்கத்தின் பகுதியாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் அமையலாம் என்பதும் ஆரோக்கியமான கருத்துக்கள். எது எவ்வாறாயினும் தேசிய ஒடுக்குமுறைகு எதிரான போராட்டம் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடும் இணைந்து முன்னெடுக்கப்படுமாயின் பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையே இறுதியாகும் என்பதே எனது கருத்து. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்வது என்பது கோட்பாடு ரீதியானது. பிரிந்து செல்வதா இல்லையா என்று தீர்மானிப்பது நடைமுறை சார்ந்த பிரச்சனை. 7.தேசிய இனப்பிரச்சனை குறித்த வேறுபட்ட கருத்துக்கள் 1. தேசியம் என்பதே தவறான கருத்தாக்கம் அது பாசிசத் தன்மை கொண்டது 2. சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதற்கானதல்ல. 3. சோசலிச அரசு உருவானால் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் தனியான போராட்டம் தேவையற்றது. 4. தமிழர்கள் மேலானவர்கள் எது நேரினும் அவர்கள் பிரிந்து சென்று மேலான அரசை உருவாக்க வேண்டும். ஏனைய அனைத்து உப கருத்துக்கள் அனைத்துமே இந்த நான்கு வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்கப்படலாம். தேசியம் என்பது தவறானது என்பது குறித்து ஆதங்கப்படுகின்றவர்கள் அடிப்படையில் மார்க்சியத்தை நிராகரிக்கின்றவர்கள். பெனடிக்ட் அண்டர்சனின் ‘கற்பனை சமூகம்’என்ற நூலை முன்வைத்து இக்கருத்துக்கள் 90களின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டதெனலாம். பெனடிக்ட் அண்டர்சன் தனது துறைசார் தேவைக்காக மார்க்சியம் வரையறுத்த தேசியக் கோட்பாட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுத்து தேசிய உணர்வு கற்பனையானது என்றும் அந்தக் கற்பனைச் சமூகத்தை உருவாக்குவதற்கு அச்சு ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் வாதிக்கிறார். ஐரோப்பிய மையவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்ட தமிழ் நாட்டின் நகர்ப்புறச் சிந்தனையாளர்கள் இதனை இன்னொரு படி மேலே கொண்டு சென்று தேசியம் கற்பனையானது ஆகவே அது பொய்யானது என்று வாதிட்டனர். அதன் கூறுகள் ஈழ அரசியலிலும் ஒரு எல்லைவரை செல்வாக்குச் செலுத்தியது. சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் கற்பனையான பகுதியை நாம் எப்போதும் காணலாம் என்பதை மார்க்சியர்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் அவ்வாறான மேற்கட்டுமானம் தோன்றுவதற்குரிய உற்பத்தி முறை என்ன என்பதே பிரதான ஆய்வாக வேண்டும் என்பதே மார்க்சியர்களின் வேண்டுகோள். இரண்டாவதாக சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையல்ல என்பது தவறானது என்பது குறித்து கட்டுரையின் ஏனைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக சோசலிச சமூகத்தி தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என்றும் இப்போது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாமல் இன ஒடுக்கொமுறைக்கு எதிரான போராட்டமே போதுமானது என்றும் சிங்களப் பகுதியிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது குறித்த விளக்கங்களும் மேலே தரப்பட்டுள்ளன. நான்காவதாக இலங்கையில் குறுந்தேசிய சிந்தனையாளர்களும் புலம் பெயர் நாடுகளில் இதனால் ஆட்கொள்ளப்பட்ட அடையாளச் சிக்கல்கொண்டோரும் முன்வைக்கும் சுலோகங்கள். தேசியத்தின் அன்னிய மூலதன மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மைகளை நிராகரித்து உணர்ச்சி அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் இவர்கள் மத்தியிலிருந்தே ஊற்றெடுக்கிறது. ஏகாதிபத்தியங்களாலும் அன்னிய சக்திகளாலும் பேரினவாதிகளாலும் இலகுவாகப் பயன்படுத்தப்படும் இவர்கள் தேசியத்தை பாசிச அரசியலை நோக்கி நகர்த்தும் காவிகளாகவும் தொழிற்படுகின்றனர். 8.தலித்தியம் மற்றும் தேசியம் குறித்த உரையாடல்கள் இந்தியாவில் தலித்தியம் என்ற கருத்துருவாக்கம் குறித்தோ அன்றி இலங்கையில் அதன் விரிவாக்கம் குறித்தோ என்னிடம் தெளிவான ஆய்வுகள் இல்லை. அனுபவம் சார்ந்த சில கருத்துக்களை முன்வைக்கிறேன். 80 களின் நடுப்பகுதியிலிருந்து வடக்கில் தேசிய விடுதலை இயக்கங்கள் முன்வைத்த அரசியலுக்கு அப்பால் கிராமப்புறங்களில் வறிய கூலி விவசாயிகளை அணிதிரட்டும் அரசியல் வேலைகளை முன்னெடுத்த அனுபவங்களின் அடிப்படையில் இக்கருத்துக்களை முன்வைக்கிறேன். ஆயுதம் தாங்கிய இயக்க அரசியல் மேலோங்கியிருந்த அந்தக் காலப்பகுதியில், கிராமிய உழைப்பாளர் அமைப்பு, தேசிய மாணவர் மன்றம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, விழிப்புக் குழுக்கள் என்ற நான்கு வேறுபட்ட அமைப்புக்களுக்கூடாக மக்களை அணிதிரட்டும் வேலைகளை பாசறை என்ற சிறிய மார்க்சியக் குழுவினூடாக முன்னெடுத்திருந்தோம். மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக போராட்டத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும் என்ற கோட்ப்பாட்டின் அடிப்படையில் இவ்வமைப்புக்களை தோற்றுவித்தோம். கிராமிய உழைப்பாளர்களுக்கான அமைப்பு ஏற்கனவே சில கிராமங்களில் தனது குழுக்களைக் கொண்டிருந்தது. பொதுவாக நிலத்தோடு இணைந்த கூலி விவசாயிகளின் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த அமைப்பில் இணைந்து கொண்டிருந்தனர். இந்தக் கிரமங்களில் கம்யூன்களை ஒத்த நிர்வாக அமைப்புக்களாக விழிப்புக்குழுக்களை ஆரம்பித்திருந்தோம். இவை எதிர்பாராத வெற்றியை எமக்குப் பெற்றுத் தந்திருந்தது. உரும்பிராய் கொலனி, மொண்டி, கல்லாக்கட்டுவன், மத்தாளோடை, சங்குவேலி போன்ற தாழ்த்தபட்ட கிராமங்களில் அமைந்திருந்த இந்த அமைப்புக்களை ஏனைய கிராமங்களுக்கும் விரிவு படுத்தினோம். பல சிக்கல்களுக்கு மத்தியில் இணுவில் மானிப்பாய் தாவடி போன்ற உயர்சாதி வேளாளர் கூலி வறிய வாழும் கிராமங்களில் அமைப்புக்களை உருவாக்ககினோம். மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் வாழும் பிரதேசங்களில் யாரையும் அணுகக் கூட முடிந்ததில்லை. அவர்கள் குறிப்பாக பள்ளர்களின் அமைப்பு என கேலி செய்வதையே காணக்கூடியதாக இருந்தது. இதே வேளை நளவர் மற்றும் பறையர் சமூகங்கள் வசதிபடைத்தோராக வாழ்ந்த நல்லூர் பகுதிகளில் அமைப்பு வேலைகளை நகர்த்துவதும் இயலாத ஒன்றாக இருந்தது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தம்மை அடையாளப்படுத்தத் தயாராக இருக்கவில்லை. மேட்டுக்குடி வேளாளர் சமூகத்தில் எதிர்கொண்டதிலும் அதிகமான சிக்கல்களை வசதிபடைத்த தாழ்த்தப்பட்டோரிடமிருந்து எதிர்கொண்ட அனுபவத்தை காணக்கூடியதாக இருந்தது. தலித்துக்கள் என்ற பொதுவான அடையாளத்திற்கு உள்ளாக தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒன்றிணைய எப்போதும் தயாராக இருந்ததில்லை. தவிர, பெரும்பான்மையான ஏனைய சாதியினரைச் சார்ந்த தொழிலாளர் விவசாயிகளின் நெருக்கமான ஆதரவின்றி சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தல் தர்க்கீக அடிப்படையில் சாத்தியமற்ற ஒன்று. ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுள் பெரும்பான்மையானவர்களுள் மேட்டுக்குடி வேளாளர்களே. இதனால் குறிப்பாக வடக்கில் சாதீய வரம்புகள் சற்றே தகர்ந்துள்ளன. இவற்றை மீள்கட்டமைப்பதற்கான முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனது கருத்து. புலம் பெயர் நாடுகளின் குறுந்தேசிய வாதிகளின் ஊடகங்களின் கலாச்சாரச் சீரழிவு குறித்த மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளில் இவற்றைக் காணலாம். தவிர விடுமுறைக்காகப் புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றவர்கள் அங்குள்ள கோவில்களைப் புனரமைப்புச் செய்வதையும் பழமையை மீட்கும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காணலாம். இவை தவிர சாதிய அமைப்பை மீளமைப்புச் செய்து கொள்வதற்கு வர்க்கப் பார்வையற்ற தலித்திய கருத்துக்களும் துணைபுரிகின்றன. யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளார்களின் ஆதரவைப் பெற்றுள்ள இலங்கையில் முளைவிடும் இத்தலித்திய அமைப்புக்கள் சாதி அமைப்பு முறையை ஆழப்படுத்தவே வகைசெய்யும். சாதீயம் என்ற அடையாளத்தை வர்க்கம் கடந்து அணுகும் மற்றொரு வழிமுறைதான் அதனை ஒரு தேசியமாக அணுகுவது. முதலில் முன்னமே கூறியது போன்று தேசியம் என்பது சந்ததைப் பொருளாதார உருவாக்கத்தோடு தோற்றம்பெற்ற கருத்து என்பதை மறுக்கும் கருத்து முதல்வாதப் போக்கே இது, இரண்டாவதாக ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியில் ‘நாம் ‘என்ற உணர்வு காணப்பட்டதில்லை, மாறாக அவர்களின் வர்க்கம் சார்ந்த உணர்வு விடுதலைப் போராட்டம் ஒன்றின் தலைமை சக்திகளாக மாற்றமடையும் போர்க்குணம் என்பவையே இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். -=====================================================
 சாதியின் தோற்றம் ?.
சாதியின் தோற்றம் சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள் என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை:
மரபுக் கோட்பாடு (traditional theory)
தொழிற் கோட்பாடு (occupational theory)
சமயக் கோட்பாடு (religious theory)
அரசியற் கோட்பாடு (political theory)
இனக் கோட்பாடு (racial theory)
படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

மரபுக் கோட்பாடு :-
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன. தொழிற் கோட்பாடு சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே .

தொழிற் கோட்பாடு.
தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன. பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு
 உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.

 இனக் கோட்பாடு
ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்." இந்திய சாதி அமைப்பு இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன. தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை
 ---------------------------------------------------------------------------------
Principles of Communism (Frederick Engels) Translated By: M.Sivalingam
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம் [கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.] குறிப்பு: நூல் முழுதும் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை யாவும் மொழிபெயர்ப்பாளர் எழுதியவை.

 (1) கம்யூனிசம் என்றால் என்ன?
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.

(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.
 (3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா? இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.
(4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? கடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது. நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும். எந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது. உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன: (1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்]. (2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர். (5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது? உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும். என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது. (6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை? தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன. பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர். ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். (7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும். அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். (8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான். பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான். பண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான். பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான். (9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும். (10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? 16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை. பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே. பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான். (11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன? முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது. இவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம். இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும். இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது. நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது. இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும். பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது. இதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது. (12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை? தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது. இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது. சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது. இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன. (13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை? முதலாவது: பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது; இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும். பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது. எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும். இரண்டாவது: பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும். இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது. தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது: (1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும், (2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும். (14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும். வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும். மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது. உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர். (15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா? இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா. தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை. மத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும். விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது. இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது. ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது. (16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள். ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம். (17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா? இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும். (18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்? எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும். ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு: (1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல். (2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல். (3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல். (4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல். (5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல். (6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல். (7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல். (8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல். (9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான கூறுகளைத் தவிர்த்தல். (10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல். (11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல். (12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும். இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள். (19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா? இல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. மேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும். இது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும். (20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை? அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும். இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும். விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும். இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும். கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது. மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது. ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது. ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது. இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது. உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும். (21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்? பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது. ”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது. (22) தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்? பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும். (23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்? இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும். (24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம். [பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:] முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்: (1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது. (2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை. (3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள். [முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:] இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும். கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். [ஜனநாயக சோஷலிஸ்டுகள்:] இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம். ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு. (25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன? இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள் ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன், கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும். இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்: (1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும். (2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும். ***** ***** ***** அடிக்குறிப்புகள்: [1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர். [2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12. [3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார். [4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து. [5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார். [6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது. ====================================================================== Why Socialism? (Albert Einstein) Translated By: Sivalingam M. சோசலிஷம் எதற்காக? (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்) தமிழாக்கம்: சிவலிங்கம் மு. [1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது. இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது. மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?” ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா? இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன். மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது. எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை. மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும். [இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது. தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும். எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன். ===================================================================== மார்கசியத்தின் அடிப்படையான கருத்து நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது . வர்க்கப்பகைமைகள் இணைக்கும் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே எப்பொழுது எந்த அளவுக்கு வர்க்கப்பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணைக்கும் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கெ அப்பொழுது அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது . (அரசும் புரட்சியும் - லெனின் ) i.e., நாட்டுக்கு நாடு இது வேறுபாடும். கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க மக்கள் அனைவரும் ஒன்று இனைந்து இலவச பரிசு பொருள்களை முன் பணமாக, அரசை தேர்ந்து எடுக்க பெற்று கொண்டு, யார் ஆட்சி செய்தால் அதிக லாபம் பெற முடியும் என தேர்ந்து எடுக்கும் ஒரு தலைமைக்கு பெயர்தான் அரசு. ------------------------------------------------------------------------------------------------------------------- வர்க்கம் என்றால் என்ன ? மக்கள் பிரிவு என்பதுதான் வர்க்கம். சொல்லுக்கு எளிமையான பொருள். குறிப்பிட்ட பொருளாதார நிலையைச் சேர்ந்த மக்கள் பிரிவு என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவர்களது சமூக நிலை, அதிகார நிலை, கல்விநிலை போன்றவை இருக்கும். பொதுவாக ஒரு பகுதி மக்கள் வாழத்தொடங்கிய இடம், அவர்களது உடல் நிறம், பேசும் மொழி இவற்றை வைத்து இவர்கள் இந்த இனம் என்றோ, இந்த மொழிக்காரர்கள் என்றோ அடையாளம் காணப்படுகிறார்கள் அல்லவா? இந்த இயற்கையான அடையாளத்தில் உயர்வு தாழ்வு கிடையாது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது ?. பொருளாதாரம் என்பது வந்த பிறகுதான் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். யார் அதை அதிகமாகக் குவித்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், யார் அந்தப் பொருளாதாரத்துக்காக (அதாவது வயிற்றுப்பாட்டிற்காக) அது யாரிடம் குவிந்திருக்கிறதோ அவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த ஏற்றத்தாழ்வு அமைகிறது. யார் நிலம், எந்திரம் போன்றவற்றை உடைமையாக்கிக்கொண்டு, அந்த நிலத்திலும் எந்திரங்களிலும் மற்றவர்களை வேலை செய்ய வைத்துத் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உடைமை வர்க்கம். யார் அவர்களிடம் வேலை செய்து நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் உழைக்கும் வர்க்கம். அதாவது இந்த உழைக்கும் வர்க்கத்திடம் வேறு உடைமை எதுவும் கிடையாது. உழைக்கும் ஆற்றல் மட்டுமே இவர்களுக்குச் சொந்தம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- பொருள்களைத் தயாரிப்பதற்கான எந்திரங்கள், அந்த எந்திரங்களை நிறுவுவதற்கான கட்டடங்கள், அந்த எந்திரங்களையும் அவற்றிலிருந்து தயாராகும் பொருள்களையும் மற்ற இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் ஆகியவை உருவாவதற்கு முன்னால் மனிதர்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்திசெய்வதற்கு நிலம் மட்டுமே பயன்பட்டது. அதுவும் நிலத்தில் உழுது பயிரிட்டு தானியங்களையும் காய்கனிகளையும் உற்பத்தி செய்து அறுவடை செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் நிலம் உற்பத்திக்கான அடிப்படையாக மாறியது. அதுவரையில் மனிதர்கள் இயற்கையாகக் கிடைத்ததைத்தான் உண்டு பசியாறினார்கள், கிடைக்காதபோது பட்டினி கிடந்தார்கள். நிலத்தை இப்படிப் பயன்படுத்தலாம் என்று மனிதர்கள் கண்டுபிடித்ததற்கே ஒரு வரலாறு உண்டு. ஆதி மனிதர்கள் இயற்கை உணவுகளைத் தேடியும் விலங்குகளை வேட்டையாடியும் பசியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைப் பிறப்புக்காக என வெளியே செல்லாமல் குகையிலோ, மரத்தடியிலோ தங்கியிருந்தார்கள். அப்போது, சுற்றி நடக்கும் இயற்கை மாறுதல்களைக் கவனிக்க முடிந்தது. உணவுக்காக வைத்திருந்த தானியம் மண்ணில் விழுந்திருக்கும் அல்லவா? தானியம் விழுந்த இடத்தில் மழை பெய்திருக்கும் அல்லவா? அந்த இடத்திலிருந்து புதிய பயிர் முளைப்பதையும், அது வளர்ந்து முற்றுகிறபோது அதிலிருந்து ஏராளமான தானியங்கள் கிடைப்பதையும் அந்தப் பெண்கள் கவனித்தார்கள். நாமே இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, சில தானியங்களை மண்ணில் தூவி நீர் தெளித்தார்கள். பயிர் விளைந்தது. இப்படித்தான் விவசாயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், விவசாயம் என்ற முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் அக்காலத்துத் தாய்மார்கள்தான். உணவுக்காக அலைய வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொண்டதும் நிலத்தைக் கைப்பற்றி, இங்கேயிருந்து அங்கே வரையில் என் நிலம் என்று உடைமையாக்கிக் கொண்டவர்கள் ஆண்கள். நிலத்தைக் கைப்பற்ற முடிந்தவர்கள் உடைமை வர்க்கம். அந்த நிலத்தில் வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஆளும் வர்க்கம் என்றால் ? ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள். ------------------------------------------------------------------------------------------------------------------ முதலில் எங்கும் காடாகவே இருந்தது. அந்தக் காடுகளில் மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு காட்டின் தன்மை, அங்கு வாழ்ந்த மனிதர்களின் உடல் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இருந்தார்கள். இனக் குழு என்று சொல்லப்படுவது இதுதான். அன்றைய காலத்தில் இப்போது போல் பல நூறுகோடி மக்கள் தொகை என்பதெல்லாம் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு இனக்குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் நூறுபேர், நூற்றைம்பது பேர் என்றுதான் இருந்தார்கள். அனுபவத்தால் சேர்த்த அறிவின் அடிப்படையில் வனத்தின் கடுமையான நிலைமைகளில் வாழ்வது எப்படி, விலங்குகளில் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பது எப்படி, விலங்குளை வேட்டையாடுவது எப்படி, எப்படிப்பட்ட தாவர உணவுகளை உண்ணலாம், மழை வந்தால் என்ன செய்யலாம், நெருப்பு பிடித்துக்கொண்டால் என்ன செய்யலாம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியவர்கள் குழுக்களின் தலைவர்கள் ஆனார்கள். உற்பத்திக் கருவியாக அதாவது உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக நிலம் பயன்ப்படுத்தப்பட்டது. கருவி என்று வந்துவிட்டால் அதைக் கையாள்வதற்கான கைகள் வேண்டும் அல்லவா? அந்தக் கைகள் மற்றவர்களுடையதாக இருக்க, அந்த உழைப்பின் பயனை ஒருவர் அல்லது ஒருசிலர் மட்டும் அனுபவிப்பதே சுரண்டல். வன்முறை, தந்திரம் என பல வழிகளில் ஒருவர் நிலத்தை வளைத்துப் போட்டுக்கொண்டாலும் அவரால் மட்டுமே நிலத்தில் இறங்கி வேலை செய்து பயிர்களை விளைவிக்க முடியாது அல்லவா? எனவே அவர் அந்த வேலையில் பலரை ஈடுபடுத்துகிறார். நிலத்தைக் கைப்பற்றும் போட்டியில் பின்தங்கியவர்கள், அப்படியொரு போட்டி நடப்பதே தங்களது கவனத்திற்கு வராமல் ஏமாந்தவர்கள், ஆனால் உழைப்பதற்குச் சலிக்காதவர்கள் நிலத்தில் இறங்கினார்கள். தொடக்கத்தில் இவ்வாறு வேலை செய்வதற்காக காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்துக்கொண்டுவந்து ஈடுபடுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். நிலத்தில் மட்டுமல்லாமல் பெரிய கோட்டைகள் கட்டுவது, நடமாட்டத்துக்கு வசதியாக சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் அந்த அடிமைகளையே பயன்படுத்தினார்கள். வேலை முடிந்ததும் விரட்டிவிட்டார்கள். ஒரு செல்வந்தர் தன் அடிமைகளை மற்ற செல்வந்தர்களுக்குப் பரிசாக அளிப்பார். ஆடு மாடுகளை விற்பது போல். வேலை செய்வதற்காக அடிமைகளை விற்பனை செய்வது என்ற கொடுமையும் நடந்தது. அடிமைகள் அளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால் கூடுதலாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். இப்படி அடிமை முறை இருந்த காலத்தை அடிமைச் சமுதாயம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நிலம் என்பது அடிப்படையான, நிலையான ஒரு உற்பத்திக் கருவியாகப் பயன்படும் என்று கண்டறிந்த பின் அதே அடிமைகள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நிலம் இல்லாதவர்கள் மட்டுமல்லாமல் சிறு அளவுக்கு மட்டுமே நிலம் வைத்திருந்தவர்களும் பெரிய பண்ணை நிலங்களில் வேலை செய்யச் சென்றார்கள். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மண்ணை சரிப்படுத்தினார்கள், பயிரிட்டார்கள், பயிரைப் பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள், பயிரிலிருந்து தானியங்கள் விளைந்ததும் அவற்றை அறுவடை செய்து கொடுத்தார்கள். இப்படி உழைப்பவர்களின் பங்களிப்பு என்பது இல்லை என்றால், எவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும் அதனை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில் உடைமையாளருக்கும் உழைப்பவருக்கும் சம பங்கு இருக்கிறது. ஆனால், விளைச்சலை அனுபவிப்பது என்று வருகிறபோது மட்டும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை. உண்மையிலேயே பாடுபட்டு உற்பத்தி செய்தவர்களுக்கு, நிலத்தில் விளைந்ததில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு பெரும்பங்கு மீதி விளைச்சல்களை உடைமையாளர் தானே வைத்துக்கொள்கிறார். உழைத்ததற்கான பங்காக உழைப்பாளிக்கு அவர் கொடுப்பதுதான் கூலி. கூலியாகக் கொடுப்பது எந்த அளவுக்கு இருக்கும் என்றால், மறுநாள் வேலைக்கு வரவேண்டுமானால் உயிரோடும் உழைப்பதற்கான தெம்போடும் இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு உயிரோடும் தெம்போடும் வைத்திருப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தானியம் கூலியாகக் கொடுக்கப்பட்டது. (பணம் என்பது உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் தானியத்திற்கு பதிலாக பணமே கூலியாகத் தரப்பட்டது. பணம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பது சுவையான தனி வரலாறு.) இதுதான் உழைப்புச் சுரண்டல் என்பது. ----------------------------------------------------------------------------------------------------------------- நிலவுடைமைச் சமுதாயம் என்பது என்ன? நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டு, பெரிய அளவுக்கு அதைக் கைப்பற்றியவர்கள், அவரவர் பலத்துக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாகக் கைப்பற்றியவர்கள், அந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்துக்கொடுத்துவிட்டுப் பசியாறியவர்கள் என்ற இந்த சமூக அமைப்புக்குப் பெயர்தான் நிலவுடைமைச் சமுதாயம் அல்லது பண்ணைச் சமுதாயம். நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு. --------------------------------------------------------------------------------------------------------------------- இந்தக் காலத்திலேயே கூட ஒரு அரையடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்கோ, அல்லது கைப்பற்றிய நிலத்தில் அரையடி அளவுக்குக் கூட வேறு யாரும் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கோ எவ்வளவு வன்மம் நிறைந்த மோதல்கள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் வெட்டுக்குத்து, கொலை செய்கிற அளவுக்குக்கூட அந்த மோதல்கள் போய்விடுகின்றன. சட்டம், விதி, கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பு என்றெல்லாம் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறது என்றால் அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம். நிலத்தைக் கைப்பற்றும் ஆசையில்லாதவர்கள், அதற்கு வழியற்றவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானாலும் இறங்கி உழைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நிலம் இயற்கை கொடுத்தது, அதிலே உழைப்பதற்கும் தேவையானதை உற்பத்தி செய்துகொள்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றே நினைத்தார்கள். நிலத்தை வளைத்துப் போட்டவர்கள் அவர்களை அடித்தார்கள். இதைத் தொடர்ந்து பல வன்முறை மோதல்கள் நடைபெற்றன. அப்போதுதான் இதையெல்லாம் கண்காணிப்பதற்கும் முறைப்படுத்துவதற்கும் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டிற்குப் பெயர்தான் அரசு. அதுவரையில் மனிதர்கள் சுதந்திரப் பறவைகள்தான். அடிப்பவர்களும் சுதந்திரமானவர்களே, அடிபடுகிறவர்களும் சுதந்திரமானவர்களே. இப்போது அரசு என்ற ஒரு ஏற்பாடு உருவாகி, சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன இந்த நிலம் இவருக்குச் சொந்தம், அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வருகிறது. நிலத்தில் இறங்கி உழைக்கிறவர்கள் கோபித்துக்கொள்வார்களே? அதைத் தவிர்க்க, உழைக்கிறவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் எவ்வளவு கூலி தரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அது வரையில் குழுக்களின் தலைவர்கள் மட்டுமே இருந்தார்கள். தலைவர் என்றால் உடனே நம் புத்தியில் ஆண் உருவம்தான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் அனுபவ அறிவின் அடிப்படையில் தங்களது கூட்டங்களுக்குப் பெண்களும் தலைமை தாங்கினார்கள். சொல்லப்போனால் குடும்ப உறவு என்பதெல்லாம் உருவாகியிராத அக்காலத்தில் தாயைத்தான் பிள்ளைகளுக்குத் தெரியும். தாயை வைத்தே ஒருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டார். தாய் வழிச் சமூகம் என்று இதைச் சொல்வார்கள். குழுக்களின் தலைவர் என்பதற்கு மாறாக காடு, மலை, ஆறு, வயல், ஊர் என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு என்ற அமைப்பு உருவானது. ஆம், அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான். ------------------------------------------------------------------------------------------------------------------ அரசு??. அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான். ------------------------------------------------------------------------------------------------------------------ கம்யூனிசம் என்றால் என்ன ?. மனித நேயம், அழகுணர்ச்சி, நட்பு, சமுதாயத்தின் மீது பாசம், கலைத்தாகம், இலக்கிய மோகம், சாதி-மத-இன-மொழி வேலிகளற்ற காதல், கடவுள் கோட்பாடுகளுக்குள் சிக்காத அறிவியல் கண்ணோட்டம், பட்டினியில்லா வாழ்வு, அடுத்தவர் உரிமையை மீறாத சுதந்திரம், ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டாத சமுதாய அமைப்பு... இந்த முற்போக்கான கூறுகள் அனைத்தும் இணைந்ததே கம்யூனிசம். =================================================================== கம்யூனிசம். இது ஏதோ மார்க்ஸ் என்கிற தனி மனிதர் உருவாக்கிப் பரப்பிய கோட்பாடு அல்ல. மனிதர்கள் இயற்கையாய் இப்படித்தான் பரிணமித்தார்கள், வாழ்ந்துவந்தார்கள். நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் சமத்துவத்துவத்துடன் வாழ்ந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, பாலினப் பாகுபாடு இல்லை, இனப் பகைமை இல்லை, தேசங்களின் பெயரால் மோதல் இல்லையென வாழ்ந்தார்கள். இப்படி இருந்த அந்த ஆதிப்பொதுவுடைமைச் சமுதாயத்தில் பின்னர் நிலம் என்பது ஒரு சொத்தாக உருவான பிறகு அதைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் தொடங்கியது. நிலத்திலும், நிலத்தைக் கைப்பற்றியவர்களின் வீட்டிலும் வேலை செய்வதற்காக மக்களில் ஒரு பகுதியினர் அடிமைப்படுத்தப்பட்டார்கள். பெரும் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறைகள் உருவாக்கப்பட்டு, அன்றைய சமூக அமைப்பைக் கட்டிக்காப்பதற்கான அரசாங்க அமைப்பாக பரம்பரை மன்னராட்சி தொடங்கியது. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மதங்களும், மதசடங்களும் எப்படி தோன்றின ?. அந்தப் பண்ணைச் சமுதாய அமைப்பின் நியாயங்களை எல்லோரும் ஏற்கச் செய்வதற்காகவும், கட்டுப்பட்டு இருக்கச் செய்வதற்காகவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதையொட்டியே, இயற்கையின் புதிர்களைப் புரிந்துகொள்ள இயலாத மக்களின் அச்சங்களை அடிப்படையாக வைத்து மதங்களும் மதச் சடங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த சில உண்மையான சண்டைகளை அடிப்படையாக வைத்து கற்பனையான சாகசங்களைக் கலந்து புராணக்கதைகள் புனையப்பட்டன. முந்தைய அடிமைச்சமுதாயத்தை விட இது முன்னேறிய சமுதாயமாக இருந்தது. ஆனால் இது மக்களுக்கு முழு விடுதலை அளிக்கவில்லை. ----------------------------------------------------------------------------------------------------------------------------- முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம்-அரசியல் இயக்கங்கள் எப்போது தோன்றியது ?. அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணையோடு தொழில்களும் தொழிற்சாலைகளும் உருவானபோது, அவற்றைத் தொடங்கி நடத்துவதற்கு செல்வ பலம் வைத்திருந்தவர்கள் முதலாளிகளானாகள். அவர்களுடைய எந்திரங்களை இயக்குகிறவர்கள் தொழிலாளர்களானார்கள். இந்தப் புதிய அமைப்புக்கு முந்தைய நிலவுடைமைச் சமுதாயமும் அதைப் பாதுகாக்கும் மன்னராட்சி அரசியலும் முட்டுக்கட்டையாக இருந்தன. எனவே, நிலப்பண்ணையார்களிடமும் மன்னர்களிடமும் அடிமைப்பட்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்கான சுதந்திரம், ஜனநாயகம் என்ற முழக்கங்களோடு அரசியல் இயக்கங்கள் தோன்றின. ----------------------------------------------------------------------------------------------------------------------------- முதலாளித்துவம் என்றால் என்ன?. முதலாளித்துவ சமுதாய அமைப்பு பரிணமித்தது. முதலீடு போட முடிகிற ஒருவர் தொழிற்சாலையைத் தொடங்கி அதிலே பலரைத் தொழிலாளர்களாக வைத்துக்கொண்டு வேலை வாங்க முடியும் என்பதே முதலாளித்துவம். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். ------------------------------------------------------------------------------------------------------------------------------ முதலாளித்துவம் இதுவும் முழுமையான சமுதாய விடுதலையை அளிக்கவில்லை. இதிலே நேரடியான அடிமைத்தனம் இல்லை என்றாலும் கூலி அடிமைத்தனம் என்பது இருக்கிறது. எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், உடல் ஆற்றல் மிக்கவரானாலும் முதலீட்டாளரின் (முதலாளியின்) விருப்பப்படியே செயல்பட்டாக வேண்டும். முதலாளிகளோ ஒரு புதிய எந்திரம் வாங்குவது முதல் தொழிலாளிக்கு குடியிருப்பு கட்டித்தருவது வரையில் ஒவ்வொன்றையும் லாப நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். இந்த லாப நோக்கம் என்பது தனி மனித பேராசையிலிருந்து வருவதல்ல. லாபம் என்ற விளைவு இல்லாமல் முதலாளித்துவம் என்ற அமைப்பே செயல்பட முடியாது. தெருவோரத்தில் இட்லிக்கடை போட்டால் கூட, எல்லா அடக்கச் செலவுகளும் சேர்ந்து ஒரு இட்லிக்கு ஒரு ரூபாய் செலவாகிறது என்றால் அதை அதே ஒரு ரூபாய்க்கு விற்றால் மறுநாள் கடை நடத்த முடியாது. லாபம் இருக்க வேண்டும். இதே லாபத்தை தொழிலாளிகளை ஏமாற்றும் அநியாயமான வழிமுறைகள், அடுத்த நிறுவனத்தை அழிக்கிற உத்திகள், அதற்கு அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சதிகள் என்று ஈட்டுகிறபோது அது கொள்ளை லாபமாக மாறுகிறது. இந்த லாப வேட்டை நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடக்கிறபோது அது பன்னாட்டுச் சந்தையாகிறது. அந்தச் சந்தையில் ஏகபோகமாக நாட்டாமை செலுத்துகிற வெறிதான் போர்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. முன்பு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னர்களிடையே போர்கள் நடந்தன. இன்று சந்தையைக் கைப்பற்றுவதற்காக முதலாளிகளிடையே போர்கள் நடக்கின்றன. முதலாளிகள் நேரடியாகப் போர்க்களம் வரமாட்டார்கள். இந்த அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்களது ராணுவங்கள் மூலம் அவற்றின் ராணுவங்கள் போர்களை நடத்தும். அந்தப் போர்களுக்கு ஏதாவது பெயர் சூட்டிக்கொள்ளும். முதலாளிகளின் லாபம் எப்படி உருவாகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்த சமுதாய ஆராய்ச்சியாளர்தான் மார்க்ஸ். அந்த லாபம்தான் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் உயிர் மூச்சு என்ற பொருளாதார உண்மையை அறிவியல் தேடலோடும், வரலாற்று ஞானத்தோடும் அவர் கண்டறிந்தார். முந்தைய சமுதாய அமைப்புகள் எப்படி அந்தந்தக் காலகட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களின் புரட்சியால் மாறினவோ அதே போல் இந்த முதலாளித்துவ அமைப்பும் தொழிலாளர்களாகிய மக்களின் எழுச்சியால் மாறும் என்பதே மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு. இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும், யாவரும் யாவையும் பெற்ற சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்பது அவருடைய தலையில் உதித்த ஆசை அல்ல. அது வரலாற்றின் அடுத்த கட்ட தேவை. அந்தப் புதிய சமுதாயம், தொடக்க கால மானுட சமுதாயத்தைப் போலவே சமத்துவ உரிமைகள் உள்ளதாக, அதே வேளையில் இயற்கையைப் பற்றிய அன்றைய அச்சங்கள் இல்லாததாக இருக்கும். சுரண்டலற்ற அந்தச் சமுதாய அமைப்பு நிலைபெறுகிறபோது உலகில் சண்டைகளுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். தன்னலம் அடிபட்டுப்போய்விடும். பாலினப் பாகுபாடு முற்றிலுமாக ஒழிந்துவிடும். சாதி-மத-இன வரப்புகள் நொறுங்கிவிடும். இந்தப் புரிதலோடு இயங்குகிறவர்களே மார்க்சியவாதிகள். கம்யூனிஸ்ட்டுகள் மார்க்ஸ் என்பவரை பக்தியோடு பின்பற்றுகிற சீடர்கள் அல்ல. மார்க்சியத்தின் துணையோடு இயற்கையையும் வரலாற்றையும் புரிந்துகொண்டு, அவரவர் நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றபடி சமுதாய மாற்றத்திற்காகச் செயல்படுகிறவர்கள். அந்த மாபெரும் சமுதாய இயக்கத்தை நடத்திக்கொடுக்கிற ஒரு கட்டமைப்புதான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அரசியல் வடிவம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பொதுவாகவே அரசியல் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாறுபடுகிறவர்களும் ஒரு சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் என்ற முறையில் மார்க்சியம் இங்கே பெரிய சக்தியாக வளராதது பற்றி கவலைகொள்கிறார்கள். மார்க்சியத்தின் எளிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது, இதிலேலேயே படிப்படியாக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சம நீதி நிலைநாட்டப்பட்டுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள். தனி மனிதத் தவறுகளால்தான் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல், கொள்ளை லாபம், வறுமை, பொறாமை, அடக்குமுறை போன்ற தீமைகள் நடக்கின்றன என்று கருதுகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டாலே போதும் என்று நினைப்போரும் உண்டு. ஆகவே இங்கே கம்யூனிசம் வராது வளராது என்று வாதிடுகிறார்கள். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும். ஒரு வாதத்துக்காக, முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த மோதலின் விளைவாகத்தான், முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சோசலிச அமைப்பின் சில நடைமுறைகளை மேலோட்டமாகத் தானும் செயல்படுத்த முன்வருகிறது. எட்டு மணி நேர உழைப்பு, மனித உரிமைச் சட்டங்கள், மக்களுக்கு சில சலுகைகள் என்று செயல்படுத்துகிறது. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி பல்வேறு நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இதுவே கம்யூனிச இயக்கம் அந்த நாட்டில் வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறிதான். இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளராதது ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய அளவுக்கு வளராதது ஏன், ஒரு தீர்மான சக்தியாக வளராதது ஏன், நாடு முழுவதும் சீராக வளராதது ஏன் என்று நம் கேள்விகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம். கம்யூனிஸ்ட்டுகளின் கதைகளைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும், இவ்வளவு தியாகமும் வீரமும் மிகுந்த போராட்ட வரலாறு இருந்தும் ஏன் இங்கே இந்த இயக்கம் பெரியதொரு ஆற்றலாக அடியூன்றவில்லை என்ற வினா எழுகிறது. அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தகுதிகள் இருந்தும் கம்யூனிச இயக்கம் இங்கே பெரும் மாற்று சக்தியாகத் தழைத்தோங்கவில்லையே ஏன் என்ற புதிர் மனதைக் குடைகிறது. இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும். அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நன்றி -அ.குமரேசன் Email This BlogThis! Share to Twitter Share to Faceb Principles of Communism (Frederick Engels) Translated By: M.Sivalingam கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம் [கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.] குறிப்பு: நூல் முழுதும் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை யாவும் மொழிபெயர்ப்பாளர் எழுதியவை. (1) கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். (2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது. (3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா? இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை. (4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? கடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது. நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும். எந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது. உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன: (1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்]. (2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர். (5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது? உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும். என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது. (6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை? தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன. பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர். ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். (7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும். அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். (8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான். பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான். பண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான். பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான். (9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும். (10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? 16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை. பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே. பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான். (11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன? முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது. இவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம். இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும். இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது. நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது. இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும். பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது. இதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது. (12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை? தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது. இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது. சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது. இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன. (13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை? முதலாவது: பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது; இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும். பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது. எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும். இரண்டாவது: பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும். இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது. தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது: (1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும், (2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும். (14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும். வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும். மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது. உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர். (15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா? இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா. தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை. மத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும். விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது. இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது. ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது. (16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள். ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம். (17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா? இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும். (18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்? எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும். ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு: (1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல். (2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல். (3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல். (4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல். (5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல். (6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல். (7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல். (8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல். (9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான கூறுகளைத் தவிர்த்தல். (10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல். (11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல். (12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும். இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள். (19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா? இல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. மேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும். இது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும். (20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை? அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும். இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும். விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும். இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும். கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது. மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது. ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது. ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது. இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது. உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும். (21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்? பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது. ”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது. (22) தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்? பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும். (23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்? இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும். (24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்? சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம். [பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:] முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்: (1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது. (2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை. (3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள். [முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:] இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும். கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். [ஜனநாயக சோஷலிஸ்டுகள்:] இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம். ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு. (25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன? இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள் ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன், கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும். இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்: (1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும். (2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும். ***** ***** ***** அடிக்குறிப்புகள்: [1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர். [2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12. [3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார். [4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து. [5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார். [6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது. ====================================================================== Why Socialism? (Albert Einstein) Translated By: Sivalingam M. சோசலிஷம் எதற்காக? (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்) தமிழாக்கம்: சிவலிங்கம் மு. [1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது. இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது. மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?” ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா? இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன். மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது. எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை. மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும். [இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது. தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும். எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.