புதன், 16 ஜூலை, 2014

தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.

MVI:-  தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு..

நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த NGO  அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்” NGO ..


இந்த  ”தன்னார்வக் குழுக்கள்" (NGO )  பற்றி தெரிந்துக்கொள்ள   இக்கட்டுரையை   படியுங்கள்..

முக்கிய கட்டுரையை தந்த உதவிய வினவு இணையத்தளத்துக்கு  நன்றி...

=================================================================
”டி.வி.எஸ். நிறுவனத்தில் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்த நான் பெரிதும் முயற்சி எடுத்தேன். அதன்படி நாங்களே ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை இங்கே நிறுவினோம்… எப்படியும் ஒரு தொழிற்சங்கம் உருவாகத்தானே போகிறது. அது நமக்கு விசுவாசமான சங்கமாக இருந்தால் நல்லதல்லவா” – இப்படிக் கேட்டார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் டி.வி.எஸ். முதலாளி. (ஆதாரம்: பிசினஸ்இந்தியா, மார்ச் – ஏப்ரல், 1986).
ngo-cartoonஇதே கொள்கையின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிக்கையில் அடங்காத அளவு இயங்கி வருகின்றவை தாம் தன்னார்வக் குழுக்கள்.
நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்”
எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளிலும் அதிருப்தி, ஆத்திரமடைந்துள்ள மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி, பதப்படுத்தி, அதிகாரபூர்வ, சட்டவரம்புக்குள் அவர்கள் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கு மாற்று அமைப்புக்களும், வழிமுறைகளும், சித்தாந்த விளக்கங்களும் ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய சுரண்டல் – ஒடுக்குமுறை ஏகாதிபத்தியமாக முன்னுக்கு வந்த அமெரிக்காவை ”உலகின் மிகப்பெரிய கொடை வள்ளல் நாடு” என்று பீற்றிக் கொண்டு, அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை மூடிமறைக்க இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரிதும் பயன்பட்டன.
அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமன், ”உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு” முன்வைத்த ”அமெரிக்க அமைதிப் பேரரசு” திட்டத்தில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் முக்கிய இடம் பெற்றன. ஃபோர்டு அறக்கட்டளையோடு, கேர், வோர்ல்டு விஷன் போன்றவையும் சேர்ந்து ஆண்டுக்குப் பலநூறு கோடிடாலர்கள் இந்த ”சமூக சேவைக்காக” செலவிட்டன.
இவை நேரடியாகவும், பின்தங்கிய ஏழை நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சகங்களின் மூலமும் பல ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி செய்து, கண்காணித்து இயக்கின. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் நிறுவப்பட்டது. இதனுடன் ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.
ngo-cartoonஇப்போது அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப்  புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று பிரதானமாக நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, படித்த அறிவுஜீவிப் பிரிவினரிடையே சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டு ஆய்வுகளை – பயிற்சி, கருத்தரங்குகளை நடத்துவது.
காலனிய காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும் மதப் பிரச்சாரத்துடன் இணைத்து கல்வி – வேலைவாய்ப்பு, சுகாதாரம் – சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் பிரதானப் பணிகளாக இருந்தன.
ஆனால் 1960களின் பிற்பகுதியில் இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுளுக்கு ”முற்றிலும் புதிய கோட்பாட்டு அடிப்படைகள்” வகுத்துத் தரப்பட்டன. இனி மேலும் தன்னார்வக் குழுக்கள் மக்களுக்கான ”இலவசத்திட்டங்கள்” மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கான அளவு வசதியும் கிடையாது. மக்கள் தமது கோரிக்கைகளுக்காகவும் உரிமைக்காகவும்” போராடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்வதும் அவர்களுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைப்பதும் தான் இனித் தன்னார்வக் குழுக்களின் பணியாக இருக்க வேண்டும் என்று உலக அளவில் முடிவு செய்யப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த பவுலோ பீரியனின் ”சுரண்டப்படுவோருக்கான கல்வியியல்”, பிலிப்பைன்சினுடைய பவுல் அபின்ஸ்கியின் ”அதிகாரத்தின் தத்துவம்” ”சிறியதே அழகு”, கிட் டியர்சின் ”விடுதலை இறையியல்” (சூமேக்கரின்) ஆப்பிரிக்காவில் ”கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்”, ஆசியாவில் புதிய காந்திய, புதிய புத்த மதக் கோட்பாடுகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ”புதிய இடதுகள்” ”இளைஞர் அரசியல் மற்றும் பசுமை இயக்கங்கள்” ஆகியன தன்னார்வக் குழுக்களின் வழிகாட்டும் கோட்பாடுகளாகின.
இக்கோட்பாடுகளின்படி மதப்பிரச்சார, மதமாற்ற முயற்சிகள் கைவிடப்பட்டு ”மக்கள் பங்கேற்பு அல்லது அடிமட்ட மக்கள் அமைப்புகள்” மூலம் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது குறிக்கோள்கள் என்று அறிவித்துக் கொண்டன.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் – குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் ”நடவடிக்கைக் குழுக்கள்” அமைக்கப்பட்டன.
”மக்களை அணிதிரட்டுவது”, ”அதிகாரம் பெறுதல்” ”ஒடுக்கப்படுவோரின் விடுதலை” என்று தீவிரச் சவடால்கள் அடித்த போதும் வர்க்கக அணுகுமுறை வர்க்கப் போராட்டம் வர்க்க சித்தாந்தத்தை (திட்டமிட்டு, உணர்வுபூர்வமாகவே) விலக்கி வைப்பதில் குறியாக உள்ளன, இத்தன்னார்வக் குழுக்கள். இத்தகைய நடவடிக்கைக் குழுக்களைத்தான் உண்மையான அடிமட்ட மக்கள் இயக்கங்கள் என்றும் ”புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகள்” என்றும் ஆளும் வர்க்கப் பத்திரிக்கைகள் புகழ்கின்றன.
ngo-cartoonஇவை ”வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் உணர்வு பூர்வமாகத் தலையிடும் செயற்போக்கு” என்று தன்னார்வக் குழுக்களின் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர் (கோத்தாரி). இவை ”மாற்று வளர்ச்சிக்கான முழுமைபெற்ற இயக்கமாக மலரும் சாத்தியக் கூறு உடையவை” என்கின்றார் (டி.எல்.சேத்).
இவையெல்லாம் காட்டுவது என்ன? மக்கள் தமது விடுதலை, உரிமைக்கான கோரிக்கைகளுக்காகப் போராடும் மையங்களாக, கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையிலான வர்க்க அமைப்புகளை மட்டுமே இனிமேலும் நம்பியிருக்க தேவையில்லை.
அவற்றுக்கு மாற்று மையங்களாக இதோ அரசு சாரா, கட்சிசாரா, வர்க்கம் – அரசியல் சாரா நிறுவனங்கள் இருக்கின்றன என ”மாற்றுக்களை” வைப்பதுதான். இதன் மூலம் பாலோடீரியர், பவுன் அலின்ஸ்கி, கிட்டியர்சி, சூமேக்கர் போன்றவர்களின் கோட்பாடுகளை முன்வைத்து, மார்க்சிய சொற்களைப் பிரயோகிப்பது, பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதால் இந்த அமைப்புகள் இடதுசாரித் தோற்றம் தருகின்றன.
இந்த அமைப்புகள் தமது களப்பணியிலும் கூட ஒருவித இரகசிய – சதிகார அணுகுமுறையைக் கையாள்வதால் அந்நிய உளவாளிகளும் நாச வேலைக்காரர்களும் ஊடுருவுவதற்கும், அதற்காக ஆட்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன.
1960-களில் இருந்தே ஏகாதிபத்திய வல்லரசுகளின் புதிய காலனிய தேவைகளுக்காக மேற்கத்திய சமூகவியல், அரசியல், பண்பாட்டு சிந்தனையாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுக் கழகங்கள் கீழை நாடுகளின் தமது சகபாடி நிறுவனங்களுடன் இணைந்து கம்யூனிய சித்தாந்தத்துக்கு எதிராக ”புரட்சிகர மாற்றுகளை” உருவாக்கும் பணியில் இறங்கினர்.
”இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு என்கிற சித்தாந்த வேறுபாடுகள் அடிப்படையில் தீர்வுகள் முன் வைக்கப்படுவது இனிமேலும் அவசியமில்லை என்பதை முன் வைக்கும் ”சித்தாந்தத்தின் முடிவு” முதலிய கருத்தாக்கங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிரான்சிஸ் புக்குயோமாவின் ”வரலாற்றின் முடிவு” என்கிற கோட்பாடு பிறகு வந்தது.
வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்தக் காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை, காலாவதியாகிவிட்டது என்று ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ”ஸ்டாலினிசம்”, ”மரபுவழி மார்க்சிசம்” என்பதாகக் கற்பனை செய்து கொண்ட தத்துவத்தையும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சமரச செயல்பாடுகளையும் முன்னிறுத்தி  மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் மீதே அவதூறு பரப்பினர்.
புறநிலை யதார்த்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிறுத்தி மார்க்சிய லெனினியத்தைச் செழுமைப்படுத்துவதாகப் புளுகினர்; மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகள் ஐரோப்பிய முதலாளத்துவத்தை மட்டுமே ஆய்வுக்கெடுத்துக் கொண்டது என்றும் தாம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைப்பதாகவும் சொல்லி அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ நிராகரிக்கும்படி தூண்டினர்.
தாமும் மார்க்சியப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கீழை மார்க்சியம் – மேலை மார்க்சியம், இளைய மார்க்ஸ் – முதிய மார்க்ஸ், ஐரோப்பிய கம்யூனிசம், அந்நியமாதல், இருத்தலியல், நவீனத்துவம், அமைப்பியல் வாதம், புதிய இடது சிந்தனைகள் போன்ற பல பிறழ்வுக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பரப்பினர். இதற்காக சார்த்தர், கிராம்சி, மார்க்யூஸ், அல்தூஸ்யர், கெம்யூ, பிராங்ஃபர்ட் சிந்தனையாளர்கள் போன்ற வகுப்பறை ”மார்க்சியக் கோட்பாட்டாளர்”களின் படைப்புகளைக் கடத்தி வந்தார்கள்.
இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றுதான். மார்க்சிய – லெனினியம், வர்க்கம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக வர்க்க சமரசத்தையும் பல்வேறு வகை திரிபுகளையும் முன்வைத்து மார்க்கிய லெனினியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் கட்சியின் தனிநபரின் சர்வாதிகாரம், எல்லாவற்றையும் உற்பத்தி பொருளாதாரம், வர்க்கம் என்று குறுக்கிச் சுருக்கிப் பேசும் வறட்டுத்தனம் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்கத் தூண்டுவதே.
இந்திய அரசு சாரா நிறுவனங்களின் சித்தாந்த குரு ரஜினி கோத்தாரி, மார்க்சியம் – தொழிலாளி வர்க்க சித்தாந்தம் வழக்கிழந்து விட்டது என்று வாதம் புரிந்து வந்தார். ”உலகத் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவதற்கு பதில் சர்வதேச நடுத்தர வர்க்கமே தனது விடுதலையைப் பற்றிய உணர்வுகளைக் கொண்டதாக மாறிவருகிறது” என்று இவர் பிரகடனம் செய்தார்.
இவரும் பிற அரசு சாரா நிறுவன சித்தாந்திகளும் அப்போது வாதிட்டது என்னவென்றால் கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பதிலாக உணர்வூட்டப்பட்ட நடுத்தர வர்க்கத் தொழில் முறைத் தலைவர்களால் கட்சிசாரா அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் மக்கள் திரளால் வழிநடத்தப்படும் இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுதான்.
ngo-cartoon
டவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இயக்கும் அடிமட்டக் களப்பணியிலுள்ள அரசுசாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் வேண்டுமானால் ஊடுருவல், உளவு, சதி, நாசவேலை, மக்கள் இயக்கங்களை சீர்குலைவு செய்வது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம். அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் எதிர்ப்பதும் சரிதான்.”
”ஆனால் சி.டி.ஆர்.ஏ., ஐ.எஸ்.ஐ., ஐ.டி.யாஸ், மிட்ஸ், சாமிநாதன் ஃபவுண்டேசன் போன்ற ஆவணப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அரை அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள், அந்நிய நிதியுதவி பெற்ற பல்கலைக் கழக அரங்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. விவரங்களை சேகரிக்கவும் ஆய்வுகளை நடத்தவும் முற்போக்கு இயக்கத்தவரும் பயன்படுத்தலாம்” என்று அவற்றுடன் தொடர்புடைய பலரும் நியாயம் கற்பிக்கின்றனர்.
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக்குழுக்கள் நேரடியாக மக்கள் முன் வேலை செய்வதால் இன்றோ நாளையோ அம்பலப்பட்டுப் போவது சாத்தியம். ஆனால் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.
அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பணிகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பது; பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பிப்பது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குத் திட்டப் பணிகளைப் பரிந்துரை செயவது போன்ற வேலைகளை இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்கின்றன.
உதாரணமாக, இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான நெல் மூலக்கூறு (ஜீன்ஸ்)களைக் கடத்திக் கொண்டு போய் ஏகாதிபத்திய பன்னாட்டு விதை, உரம், பூச்சி மருந்து, இரசாயன ஊக்கி உற்பத்தித் தொழில்கள் புரியும் பன்னாட்டு தேசங்கடந்த தொழில் நிறுவனங்களுக்கு விற்பது முதல் நாட்டுப்புற கலை – இலக்கிய மரபுகளைக் கொள்ளையிடுவது வரை சாமிநாதன் ஃபவுண்டேசன் செய்கிறது.
இதேபோல மொழி, மரபுகள், தொற்று நோய்கள் பரவுதல், சிறுவர் – கொத்தடிமை உழைப்பு போன்ற பல ஆராய்ச்சிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குப் பயன்படுகின்றன. இவையெல்லாம் எப்படி அவற்றின் தொழில்களுக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எப்படிப் பயன்படுகின்றன என்பது நேரடியாகத் தெரிவதில்லை.
குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம் என்ற கொள்கையின் கீழ் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் புதிய தகுதிகளைப் பெற்றுள்ளன.
ngo-cartoonகட்டுமான மறுசீரமைப்புத திட்டங்களால் உலகின் பல நாடுகளில் பஞ்சம் – பசி – பட்டினிச் சாவுகள், ஆலைகள் மூடி வேலை இழப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு பெருகி பரந்துபட்ட மக்கள் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் கிளர்ந்தெழுவதை திசை திருப்புவதற்கு  அரசு சாரா நிறுவனங்கள் முக்கியக் கருவிகளாகப் பயன்படுகின்றன.
80 நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி நிதியுதவி செய்து, ”பசி, உலக வறுமையின் அடிப்படைக் காரணங்கள் குறித்து விவாதங்கள் புரியவும், ஒரு பொதுத்துறை தனியார் வளர்ச்சி உதவித் திட்டத்துக்கான தொகுதியை விரிவுப்பத்தவும், உறுதியூட்டவும்,இந்த வளர்ச்சித் திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களின் வலைப்பின்னலை வளர்க்கவும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் பணியாற்றியது. (வளர்ச்சிக்கான வழிகாட்டும் கல்வித்திட்ட உதவிகள், 1987 பொருளியல் ஆண்டு அறிக்கை)
கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் அரசுகளின் பங்கு – பாத்திரங்களை வெட்டிவிட்டு அதற்கு மாற்றாக ”சமூகப் பங்கேற்பு” ”அடிமட்டத் திட்டமிடுதல்” ”வளர்ச்சியில் பங்குதார்கள்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சமூக நலப்பணிகளுக்கு இனியும் அரசு அதிகாரபூர்வ சட்டபூர்வ அமைப்புகள் பொறுப்பல்ல; அவை மக்களின் சொந்தப் பொறுப்புதான் என சுமையை – பழியை மக்கள் மீதே மாற்றுவதுதான் இதன் நோக்கம்.
அவை மாற்றுப் பொருளாதாரத்திட்ட உருவரைகள் – வரவு செலவுத் திட்டங்கள், மாற்றுப் பொருளாதார உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஐ.எம்.எஃப் – உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்குப் ”போட்டி”க் கூட்டங்கள் நடத்துகின்றன. சூழலுக்குத் தகுந்த பாரிய மதிப்புகளின் அடிப்படையிலான மாற்றுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சி திட்டங்கள் மூலம் கட்டுமான மறுசீரமைப்பு, உலகமயமாக்குதலை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன.
ஆனால் இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்குவதற்கே கூட அதே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் நிதியுதவி செய்கின்றன. அதனால்தான், இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்கும் எல்லா நாடுகளிலும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் முற்றி மீளமுடியாத கட்டத்தை எட்டிய போதும், இந்த நாடுகளில் அரசியல் வாழ்வில் பண்பாட்டுச் சீரழிவும், கிரிமினல் மயமாவதும், இலஞ்ச ஊழலும் தலைவிரித்தாடிய போதும், அந்தந்த நாட்டு அரசுகளைத் தகர்ப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி இந்த அரசு சாரா நிறுவனங்கள் தப்பித் தவறி மேலெழுந்த வாரியாகக் கூட மூச்சு விடுவதே கிடையாது.
”மதபோதனையோ, மத மாற்றமோ கண்காணிப்பும் கிடையாது. ஏராளமான ஆய்வு வசதிகளும், நிதியும் கணிசமான ஆள்பலமும் உள்ள அரசு சாரா – தன்னார்வக் குழுக்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, திறந்த மனதுடன் இருக்கும் தங்களிடம் ஒரு உரையாடலை ஏன் நடத்தக் கூடாது” என்று புரட்சி சக்திகளுக்கு இந்தக்குழுக்கள் தூண்டில் வீசுகின்றன. நடுத்தர வர்க்க ஊசலாட்ட நபர்கள் ஓடிப் போய் அந்தத் தூண்டிலைக் கவ்விக் கொள்கின்றனர்.
புரட்சிகர அறிவுஜீவிகளைக் கூட நிரந்தர உரையாடலில் நிறுத்தி வைப்பதுதான் அக்குழுக்களின் நோக்கம். புரட்சியின் மீதும் கட்சியின் மீதும் ஐயவாதத்தை விதைத்து செயலிழக்க வைப்பதுதான் அவற்றின் இலக்கு.
இறுதியாக, அவை அரசு சாரா நிறுவனங்கள் என்று தான் சொல்லிக் கொள்கின்றனவே தவிர அரசு எதிர்ப்பு நிறுவனங்கள் அல்ல என்கிற ஒரு உண்மையே போதும், – அவை மண் குதிரைகள் தாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு!
_______________________________________
புதிய கலாச்சாரம், மே 1997
====================================================================
மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஜாக்சன் போலாக்கின் புகழ் பெற்ற சித்திரம் எண் 8
இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நண்பர் ஒருவருடன் பெருநகரம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. நகரின் மையப்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கு அது. அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள்.
அரையிருளில் இருந்த அரங்கத்தினுள் நல்ல இடைவெளியில் அழகான சட்டகங்களுக்குள் தனித்தனியாய் ஸ்பாட் லைட்டுகள் வைக்கப்பட்டு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் பணக்கார வாசம் வீசும் சிலர் எதையோ தேடுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு ஓவியங்களை முறைத்துப் பார்த்தவாறே நின்றனர். குறிப்பிட்ட ஒரு ஓவியத்தின் முன் நின்ற சின்னக் கும்பலோடு நானும்  நண்பரும் இணைந்து கொண்டோம்.
அது ஒரு வண்ணக் குழப்பம். சரியாகச் சொல்வதானால், யாரோ ஒரு மார்வாடி  பான்பராக்கை மென்று வெள்ளைத் துணியில் காறித் துப்பியது போல் இருந்தது. நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்த பின்னரும் மார்வாடியின் முகத்தை என் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை. அரங்கத்திலோ குண்டூசியைப் போட்டாலும் குண்டு போட்டதைப் போன்ற சப்தம் எழுமளவுக்கு நிசப்தம்.  நான் மெல்ல எச்சிலைக் கூட்டி விழுங்கியபடியே, பக்கத்தில் நின்றவரிடம் “இது எதைப் பற்றிய ஓவியம்?” என்று கேட்டேன்.
மேலிருந்து கீழ் வரை என்னை ஒரு பார்வை பார்த்தவர், முகத்தைச் சுளித்துக் கொண்டே வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அது கேட்கக் கூடாத கேள்வி என்று அப்போது எனக்குப் புரியவில்லை. கேட்கக்கூடாதவரிடம் கேட்டுவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு, அந்தக் கண்காட்சியின் பொறுப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டேன்.
அவரோ ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “தனது அர்த்தத்தைத் தானே தீர்மானிக்காமல் பார்க்கும் கண்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இந்த ஓவியங்கள் வழங்குகின்றன. ஒரு ஓவியம் எவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த ஓவியத்துக்கே உரியது. தனக்கான மொழியை அது தானே தீர்மானித்துக் கொள்ளும்” என்றார். “அதே நேரம் ஓவியத்தைப் பார்க்கிறவரின் உரிமையிலும் அது தலையிடாது. பார்வையாளரின் உள்மன ஒளியில் இந்த ஓவியம் ஏற்படுத்தும் பிம்பங்கள் உண்டாக்கும் அர்த்தங்ளை அவரவர் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளலாம் என்றும் இவை ஒரு பயன்பாட்டையோ அர்த்தத்தையோ முன்வைத்து வரையப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவியரின் மேல் திணிக்கும் சர்வாதிகாரமாகும்” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார்.
அன்று அவர் வாயிலிருந்து வழிந்தவையென்னவோ ’தமிழ்’ வார்த்தைகள் தான்; ஆனால் எனக்கோ பண்டைய அராமிக் பாஷையில் யாரோ என்னோடு பேசியது போன்றதொரு உணர்வு எற்பட்டது. சொற்களால் அவர் தீட்டிய சித்திரமும் கிட்டத்தட்ட அந்த பான்பராக் ஓவியத்தையே ஒத்திருந்ததால், மெதுவாக அந்த அரங்கிலிருந்து நழுவிவிட்டேன்.
அன்றைக்கு ஓவியத்தை முன்வைத்து அவர் பேசிய அதே கருத்துகளை, கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களை முன்வைத்தும் பலர் பேசுவதையும், ‘கலை கலைக்காகவே‘ என்ற கருத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வித விதமான உருவங்களில் உலவுவதையும் பின்னாளில் கவனிக்க முடிந்திருக்கிறது.
ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தை கலைஞனின் உள்மன எழுச்சிதான் உருவாக்குகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு உண்மையான அக எழுச்சி இல்லாமலேயே மலர்விக்கப்படும் காகிதப்பூக்களும், சொற்களாலும் வண்ணங்களாலும் நிகழ்த்தப்படும் கழைக்கூத்துக்களும்தான் கலை, இலக்கிய உலகில் நிரம்பியிருக்கின்றன என்ற உண்மையையும் யாரும் மறுக்க முடியாது. எனினும், ஒரு கலை வெளிப்பாட்டை நோக்கி “அதன் பொருள் என்ன, அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்று கேள்வி எழுப்புவது அந்தக் கலையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும், சர்வாதிகாரம் என்பதும் அவர்கள் தரப்பு வாதம்.
மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஓவியம் 'தீட்டும்' ஜாக்சன் போலாக்
கலை இலக்கியம் ஓவியம் போன்ற துறைகளில் இத்தகைய சர்வ சுதந்திரக் கோட்பாட்டை குன்றின் மீது நின்று முழங்கிய பல சிங்கங்களுக்கு கறித்துண்டு போட்டு வளர்த்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வினர்தான் என்றொரு செய்தி நெடுநாட்களாகவே அடிபட்டு வந்தது எனினும், அது கம்யூனிஸ்டுகளின் அவதூறு என்றே இதுநாள்வரை  புறந்தள்ளப்பட்டு வந்தது.
பிரான்சிஸ் ஸ்டோனார் சாண்டர்ஸ் எழுதிய சி.ஐ.ஏ வும் பண்பாட்டுப் பனிப்போரும் என்ற நூல் (Who paid the piper, The CIA and the cultural cold war) இதனை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்ஸ்டார்க்ட் எக்ஸ்பிரஷனிசம் என்று வகைப்படுத்தப்படும் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை சி.ஐ.ஏ. உருவாக்கவில்லை. எனினும் அதனை அடையாளம் கண்டு தடுத்தாட்கொண்ட பெருமை நிச்சயம் சி.ஐ.ஏ.வுக்கே உரியது.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சி.ஐ.ஏ என்ற உளவு நிறுவனம் துவங்கப்பட்ட போதே, பண்பாடு மற்றும் கலை இலக்கியத் துறைகளில் சோசலிச எதிர்ப்பு சக்திகளையும் உளவாளிகளையும் உருவாக்குவது அதன் இலக்குகளில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது.
இரண்டாம் உலகப் போரில் உலகையும் ஐரோப்பிய கண்டத்தையும் பாசிச அபாயத்திலிருந்து காத்தது ரஷ்யாவின் செம்படை. ஹிட்லருக்கு எதிராக ரசிய செம்படை களத்தில் காட்டிய தீரம் தியாகம் மட்டுமின்றி, போருக்குப்பின் பாசிஸ்டுகளை விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிப்பதில் ரசியா காட்டிய தீவிரமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களிடமும், அறிவுத்துறையினரிடமும் கம்யூனிசத்தின் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.
பொருளாதாரம்,  இராணுவம் ஆகிய துறைகளில் சோசலிச முகாமுக்கு எதிராகத் தனது சொந்த நிறுவனங்களை உருவாக்க முடிந்த அமெரிக்காவால், அறிவுத் துறையினரிடையே, குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரிடையே,  சோசலிசம் பெற்று வந்த செல்வாக்கைத் தடுக்க இயலவில்லை.
அமெரிக்க மெக்கார்த்தியிசத்தின் வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பிரபல கலைஞர்களையெல்லாம் கூண்டிலேற்றியிருந்ததால், அமெரிக்க ஜனநாயகத்தின் முகவிலாசம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்தது.  பண்பாட்டுத்துறையில்  முதலாளித்துவ கலைஞர்கள் மேற்கொண்ட சில அபாயமற்ற புதிய முயற்சிகளைக் கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு பிற்போக்கின் உச்சமாக இருந்தது மெக்கார்த்தியிசம். ஏற்கெனவே அமெரிக்க பண்பாட்டின் மீது மதிப்போ மரியாதையோ கொண்டிராத ஐரோப்பிய கலைஞர்களையும், அமெரிக்காவின் தலைமையிலான புதிய அரசியல் இராணுவ அணிசேர்க்கையை எதிர்த்த ஐரோப்பிய அறிவுத்துறையினரையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு புதியதொரு அரசியல் அணியை உருவாக்கவேண்டும் என்பதை சி.ஐ.ஏ. உணர்ந்திருந்தது. கலை இலக்கியம் பண்பாட்டுத்துறையில்  ‘கட்டற்ற படைப்பு சுதந்திரம்’, அரசியல் துறையில்  ‘ஜனநாயக இடதுசாரித்துவம்’ என்பனவற்றை நைச்சியமாக முன்தள்ளியதன் மூலம், கம்யூனிசத்தில் ஜனநாயகமோ, தனிமனித படைப்பு சுதந்திரமோ கிடையாது என்பதை கம்யூனிசத்துக்கு எதிரான பனிப்போரின் மையமுழக்கமாக்கியது சி.ஐ.ஏ.
கலைஞனின் சூக்குமமான உளப்பதிவுளை முன்நிறுத்தும் (Abstract Expressionism)  மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள் கம்யூனிசத்துக்கு எதிரான போரில் ஏன் பயன்பட்டன என்பதை 1949இல் சி.ஐ.ஏ.வின் கலைத்துறை தலைமை அதிகாரியாக செயல்பட்ட டாம் பிராடன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “எக்ஸ்பிரஷனிசம் என்பது சுதந்திரத்தின் சித்தாந்தம், கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தம், சுதந்திர முதலாளித்துவத்தின் சித்தாந்தம். அது சூக்குமமானது, அரசியல்ரீதியில் மவுனமானது, சரியாகச் சொன்னால் சோசலிச எதார்த்தவாதத்துக்கு நேர் எதிரானது.”
இந்தப் பயன்பாட்டை மனதிற்கொண்டுதான் கலாச்சார விடுதலைக்கான காங்கிரசு என்ற அமைப்பையும், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிச ஓவியங்களுக்கான ஒரு கண்காட்சிக் கூடமாக மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் (MoMA) எனும் அமைப்பையும் சி. ஐ.ஏ நிறுவியது. சி.ஐ.ஏவின் முன்னாள் உயரதிகாரிகள் பலரும் இந்த ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் பொறுப்பு வகித்துள்ளனர். போல்லாக், டி கூனிங் போன்ற பிரபல ஓவியர்களின் கண்காட்சிகளை ஐரோப்பா முழுவதும் நடத்துவதற்கு சி.ஐ.ஏ. செலவு செய்தது. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசக் கலைஞர்கள் சிலருக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்று தெரிந்துள்ளது  ஆனால், பெரும்பாலானவர்களுக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்கிற விபரம் தெரிவிக்கப் படவில்லை.
பெறுபவர்கள் இருக்கட்டும், கொடுப்பவரான அமெரிக்க அரசின் அதிபர் ட்ருமெனுக்கே இது தெரியாது. “இதுவெல்லாம் கலை என்று சொன்னால், என்னை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொள்ளவே நான் விரும்புவேன்” என்று மாடர்ன் ஆர்ட் ஓவியங்களைப் பற்றி கருத்து கூறியவர் ட்ருமென். அவர் மட்டுமல்ல, வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பாளர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாசூக்கான முறையை விளக்கிப் புரிய வைத்து நிதி ஒதுக்கீடு பெறுவது இயலாது என்று சி.ஐ.ஏ வுக்கு புரிந்திருந்ததால், அது தனது ரகசிய நிதியிலிருந்தும், ராக்பெல்லர் போன்ற முதலாளிகளிடம் பெற்ற நன்கொடைகளிலிருந்தும் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியது.
இர்விங் கிரிஸ்டல், மெல்வின் லாஸ்க்கி, ஐசாயா பெர்லின், ஸ்டீபன் ஸ்பென்டர், சிட்னி ஹூக், டானியல் பெல், ட்வெய்ட் மெக்டொனால்ட், ரோபர்ட் லோவெல், ஹன்னா, மேரி மெக்கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகளின் புரவலராக சி.ஐ.ஏ செயல்பட்டுள்ளது.
பிற்காலத்தில் கலாச்சார காங்கிரஸ், மோமா போன்ற கலை கலாச்சார நிறுவனங்களுக்கும் சி.ஐ.ஏவுக்கும் இடையிலான உறவு அம்பலமானபோது, அது பற்றி கருத்து தெரிவித்த மோமாவின் முன்னாள் தலைவரான ப்ராடன், சி.ஐ.ஏ தனது பாத்திரத்தை ஏன் இரகசியமாக வைத்துக் கொண்டது என்பதை விளக்குகிறார்.
“எது சிறந்த பிரச்சாரமாக அமையும் என்பதை சி.ஐ.ஏ வரையறுத்துள்ளது. கலைஞன் (சி.ஐ.ஏ.வின் மொழியில் ‘சப்ஜெக்ட்’) நாம் விரும்பும் திசையில் சிந்திக்க வேண்டும். ஆனால் அது நாம் சொல்லிக் கொடுத்ததாக இல்லாமல், தனக்கு சொந்த முறையில் சரி என்று படுகின்ற காரணங்களுக்காக, அவனே அந்த திசையை தெரிவு செய்ததாக இருக்க வேண்டும்.”
கம்பனை சடையப்ப வள்ளல் அடையாளம் கண்டு வாரி வழங்கலாமேயன்றி, வள்ளல் சொல்படி கம்பன் என்று இராமாயணம் எழுதினால் எடுபடாது என்பதைத்தான் பிராடன் கூறுகிறார். அமெரிக்காவின் வெறி கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, பாப் கலாச்சாரம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகள், அமெரிக்கத் திமிர் ஆகியவை குறித்து ஐரோப்பிய கலைஞர்களுக்கு வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான். எனினும், கம்யூனிச எதிர்ப்பின் இடத்தில் கட்சி எதிர்ப்பு, பாப் கலாச்சாரத்தின் இடத்தில் மேட்டிமைக் கலாச்சாரம், அமெரிக்க திமிரின் இடத்தில் அறிவாளித் திமிர் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஐரோப்பிய அறிவுத்துறையினர், அமெரிக்க நாணயத்தின் மறு பக்கமாகவே இருந்தனர். தமது சொந்தக் காரணங்களுக்காகவே சி.ஐ.ஏ விரும்பிய வழியில் சென்றனர்.
சி.ஐ.ஏ.வின் எலும்புத்துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட கலைஞர்கள், அமெரிக்காவின் எல்லா வெளியுறவுக் கொள்கையையும் அப்படியே ஆதரிக்க வேண்டுமென்பதில்லை, அவ்வப்போது எதிர்க்கலாம் என்ற சுதந்திரத்தை சி.ஐ.ஏ இவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதற்குரிய எல்லையையும் தீர்மானித்திருந்தது. சி.ஐ.ஏ.விடம் பெருமளவு நிதியுதவி பெற்ற என்கவுன்டர் எனும் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியராக இருந்த மெக்டொனால்ட், பின்னர் ஒரு சந்தர்பத்தில் தனது ‘அமெரிக்கா அமெரிக்கா‘ எனும் கட்டுரையில் அமெரிக்க நுகர்வு பற்றியும், வெகுஜன கலாச்சாரம் பற்றியும் விமரிசித்து எழுதிய கட்டுரை சி.ஐ.ஏ.வால் நிறுத்தப்பட்டது.
தங்களது சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்தப் படைப்பாளிகள் அறிந்தே இருந்தனர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நிலவிய வெள்ளை இனவெறியைக் குறித்தோ, இந்தோசீனப் பகுதிகளிலும் அல்ஜீரியாவிலும் அமெரிக்கா நிகழ்த்திய கொத்துக் கொத்தான படுகொலைகள் பற்றியோ இவர்கள் பேசவில்லை. “அப்படி பேசுவது கம்யூனிசத்துக்கு ஆதரவாகப் போய் விடும்” என்று மெல்வின் லாஸ்கி மற்றும் சிட்னி ஹூக் போன்ற ’அறிவுஜீவிகள்’ கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அறுபதுகளின் இறுதியில் இந்த விவரங்கள் ஓரளவு கசியத் துவங்கிய போது சில அறிவுஜீவிகள் தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கைகழுவி விட எத்தனித்தனர். தாங்கள் யோக்கிய சிகாமணிகள் என்றும், சி.ஐ.ஏ தமக்கே தெரியாமல் தங்களைப் பயன்படுத்திக் கொண்டது ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்றும் ’பொங்கியெழுந்தனர்’. இந்தப் பொங்கல் எல்லாம் அமெரிக்கா அதன் மேல் தண்ணீர் தெளிக்கும் வரை தான் நீடித்தது.
சி.ஐ.ஏ.வின் டாம் ப்ராடன் தமது பட்டியலில் இருந்த கலைஞர்கள் பற்றியும், அவர்கள் தெரிந்தே தம்மிடம் கைநீட்டி சம்பளமும் கிம்பளமும் வாங்கிய விவரங்களையும் வெளியிட்டதும் அறவுணர்ச்சியோடு பொங்கியவர்கள் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்து விட்டனர். (மேற்படி நூல், பக்கம்  397 to 404)
சி.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் தொண்ணூறுகளில் வெளிடப்பட்ட போது இந்தக் கள்ளக் கூட்டு இன்னும் விமரிசையாக அம்பலமானது. எனினும், அறிவுத்துறையினர் எவரும் தமது அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசக் கலைகளையும் படைப்புகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் உணர்வுப் பூர்வமாகவே அந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிச அமைப்புகளையும் சித்தாந்தத்தையும் எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த இந்தக் கலைஞர்கள், தங்களது ஓவியங்களையும் படைப்புகளையும் ஆதரித்து விழா எடுத்ததற்கான காரணத்தை சி.ஐ.ஏ வெளிப்படையாகக் கூறிவிட்ட பின்னரும் அது குறித்து கருத்து கூறவில்லை. சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.
இது தான் இவர்கள் சோசலிச எதார்த்தவாதக் கலைகளுக்கும் படைப்புகளுக்கும் எதிராக நிறுவ முயன்ற சுதந்திரத்தின் யோக்கியதை. அதாவது அமெரிக்காவிற்கு நேர்ந்து விடப்பட்ட இந்த  அடிமை ஆடுகள், அந்த அடிமைத்தனத்தையே சுதந்திரம் என்று வரித்துக் கொண்டதோடு, சமூக நோக்கத்திற்காக படைப்பூக்கத்துடன் செயல்பட்ட படைப்பாளிகளை அடிமைகள் என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர்.
இவர்களை வெறுமனே கைக்கூலிகள், அடிமைகள் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இவர்கள் கைக்கூலித்தனத்தையும் அடிமைத்தனத்தையும் தமது சொந்த சிந்தனையின் அடிப்படையில் ஆத்மார்த்தமாக வரித்துக் கொண்டவர்கள். அமெரிக்க நுகர்வு வெறியின் பின்னுள்ள அதே அராஜகவாதத்தையே இவர்கள் வேறொரு நளினமான மொழியில் வெளிப்படுத்தியவர்கள். வெளிப்பாடுகள் வேறு வேறென்றாலும் உள்ளடக்கம் ஒன்று தான்.
________________________________
சி.ஐ.ஏ.வும் அதன் கையாட்களாகச் செயல்பட்ட அறிவாளிகளும் ஓரளவுக்கு அம்பலப்பட்டுவிட்டனர் என்ற போதிலும், சிறந்த கம்யூனிச எதிர்ப்பு ஆயுதம் என்று சி.ஐ.ஏ வால் தேடித் தெரிவு செய்யப்பட்ட அந்தக் கலைக்கோட்பாடு இன்றும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. கலைஞர்கள் மற்றும எழுத்தாளர்கள் பலர், பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் போராடவும் செய்கின்றனர்.
ஆனால், அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் வர்க்கப்போராட்டம் குறித்த கருத்தோ, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தோ உள்ளடக்கமாக இருப்பதில்லை. ஏனென்றால், புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் ஆகியவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்குமாயின், தமது படைப்பு கலைத்தரம் இழந்து, வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
அன்று, பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகளின் மூளையைக் குறிவைத்து சி.ஐ.ஏ தொடுத்த தாக்குதல், உலகெங்கும் உள்ள படைப்பாளிகளின் சிந்தனையை இன்றளவும் ஆட்டுவிப்பதையே நாம் காண்கிறோம்.
___________________________________________________________
- தமிழரசன், புதிய கலாச்சாரம், மார்ச் – 2011
=======================================================================
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் எப்படி ஆபத்தானவர்களாக உருவெடுப்பார்கள் என்பதை கட்டுரை கச்சிதமாக எடுத்துரைக்கிறது. இவர்களில் சொந்த வாழ்க்கை சிக்கல்களால் ஒதுங்கியவர்கள் பொதுவில் ஒரு குற்ற உணர்வுடன் நம்மால் புரட்சிக்கான வேலை செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் கொண்டவர்கள். சிலரோ அதே சொந்த வாழ்க்கையை மேன்மைபடுத்துவதற்காக புரட்சியெல்லாம் வேலைக்காகாது என்று பொது வாழ்க்கையை எள்ளி நகையாடுகிறார்கள். அதன்படி புரட்சிக்காக கடமையாற்றும் தோழர்களை விட தான் உயர்ந்தவன் என்று கற்பித்துக் கொண்டு சுய இன்பம் அடைகிறார்கள். அதாவது சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு அறிவியல் பார்வை பெறும் இவர்கள் அதிலிருந்து புரட்சியை நோக்கி பயணித்தவர்கள் பின்பு அதை கைவிட்டதும் தேர்ந்த காரியவாதிகளாக எப்படி உருவெடுக்கிறார்கள் என்பதற்கும் அதற்கு அந்த ‘மார்க்சிய அறிவு’ எப்படி மலிவாக பயன்படுகிறது என்பதும் முக்கியமானது. இது போக ஏதோ ஒரு வகையில் முற்போக்கு பேசும் அறிவாளிகள் கூட தமது பிழைப்புவாதத்திற்காக சமரசம் செய்து கொள்ளும் போது யார் யோக்கியன் என்று சுய திருப்தி அடைகிறார்கள்.
அந்த சுயதிருப்திதான் இறுதியில் தன்னை ஒரு அக்மார்க் காரியவாதியாக மாற்றிக் கொள்கிறது. போலிக் கம்யூனிஸ்டுகளில் பாரம்பரியத்திலிருந்து வந்த லீனா மணிமேகலை அதற்கோர் உதாரணம். எனில் இந்தப்பட்டியலில் இத்தகைய தனிநபர் அறிவாளிகள் பலரையும் பார்க்கலாம். மார்க்சியத்தையும், புரட்சியையும் நேசிக்கும் எவரும் இத்தகைய எதிர்மறைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதும், தனது நேர்மறை குறித்து பரிசீலிப்பதும் அவசியமாகிறது. ஏனெனில் ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை என்பது கம்யூனிசத்திற்கும், கம்யூனிசத்திற்கு எதிரான சித்தாங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். அந்த போராட்டத்தை உற்சாகத்துடன் நடத்துவதற்கு இத்தகை பரிசீலனை அவசியமாகிறது. பரிசீலியுங்கள்!
________________________________________________________________________________________________
தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.
________________________________________________________________________________________________
தோழர்நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!
போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.” உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? “அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது” என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.
குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானதுதான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.
ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்தபோது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.
கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.
தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. “பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி” என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. “சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கையில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு” என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், “அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து” என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் “எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ” என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.
ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில், தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு ‘தோழர்கள்’ இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். “இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்” என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.
இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். “நான் காசு வாங்கியது உண்மை. ஆனால், அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் “தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்” என்று கவிதை சொல்கிறார்.
ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால், அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.
தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். “ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு… எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?” என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். “தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்” என்று கேட்டால், “நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்” என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.
தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும் ‘மாபூமி‘ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, “நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்” என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.
காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் ‘அதுவும் இதுவும்தான்’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.
உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.
உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். ‘அதுவும் இதுவும் தான்’ என்று குரோனியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.
புதிய கலாச்சாரம், ஜூலை, 2000


=======================================================================

தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் !

கடந்த 01.10.2011 மாலை 6.00 மணி முதல் 02.10.2011 காலை 6.00 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி  தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் என்ற தலைப்பில் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  நாஞ்சில் சம்பத்,கொளத்தூர் மணி, தியாகு, சந்திரபோஸ்,  நாகை திருவள்ளுவன், வடிவேல் ராவணன் ,சிபிஜ மற்றும் சிபிஜ[எம்] அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர்  கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்ஒட்டர்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக  வேன்களில் திரட்டி வரப்பட்டிருந்தனர்.பல்வேறு தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் வல்லரசு மீது தாக்குதல்

 இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்து நன்கொடையும் திரட்டியவர் வழக்கறிஞர் வல்லரசு. இவர்தான் தற்போது ஹென்றி டிபேன் மீது புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு சென்ற வழக்கறிஞர் வல்லரசு அங்கு நடந்தது பற்றிக் கூறியது:
”நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்  கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு 8 வயது இருக்கும்போது என் தந்தை கந்தசாமி இறந்து போய்விட்டார். 9 வயதில் என் தாயார் சுகந்தியும் இறந்து போய்விட்டார்.சிறுவயது முதல் அண்ணன், தம்பிகள் இல்லாமல் தாய், தந்தையரை இழந்து பல்வேறு நபர்களின் உறுதுணையுடன் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை  சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அங்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிற திரு.ஹென்றி டிபேன் என்பவரின் மருமகனும் பணியாளருமான திரு.பிரதீப் சாலமோன் என்பவர் என்னிடம் பிரச்சனை செய்து வந்தார். இத்தகைய நிலையைத் தொடர்ந்து  நான் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க விரும்பாமல் பணியில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.
மக்கள் கண்காணிப்பகத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற ஜான்வின்சென்ட் என்பவரிடம் ஜூனியராக உள்ளேன். ஜான்வின்சென்ட் நடத்துகிற தனி வழக்குகளுக்கு உதவி செய்து வந்தேன்.
இந்நிலையில் கடந்த  செப்டம்பர்  இறுதி வாரத்தில் மதுரையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவ்வார்ப்பாட்டத்திலிருந்த பிரதீப் சாலமோன் என்னிடம், பேனரைப் பிடி என்று சொன்னார். நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் இல்லாததால் மறுத்தேன் .அதற்கு சாலமோன் என்னை ஆபாசமாகத் திட்டினார்.இதனால் எனக்கும் பிரதீப் சாலமோனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதன்பின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரண தண்டனை ஒழிப்பு சம்பந்தமான தூங்காநிலை மாநாடு ஒன்றினை அக்டோபா 1ம் தேதி நடத்தினர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவு சுமார் 10.00 மணியளவில் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டுத்  திரும்பும்போது என் வாகனம் உடைந்து கீழே கிடந்தது தொடர்பாக  பிரதீப்பிடம் கேட்டதற்கு உன்னை எவன்டா இங்கே வரச் சொன்னது என்று சொல்லி அவமானப்படுத்தினார்.
அதன்பின் நான் அங்கிருந்த மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றியிடம்  சார் உங்கள் மருமகன் எப்போது பார்த்தாலும் என்னை இழிவாகப் பேசுகிறார்,அவமானப்படுத்துகிறார்.தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். அதற்கு ஹென்றி டிபேன் என் மருமகனை பற்றி எனக்குத் தெரியும்டா, நீ யாருடா புகார் கொடுப்பது, என்று கூறிக்கொண்டே என் கழுத்தை நெறித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர்  என் சட்டையைப் பிடித்து தூக்கி தரதரவென்று இழுத்துக் கொண்டே வெளியே போடா ராஸ்கல் என்று கத்தினார். நான் அவரது பிடியில் சிக்கிக்கொண்டு, சார் நான் ஒரு வழக்கறிஞர்  என்னை இப்படி பொதுக்கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சினேன். அப்போது என் செருப்பு கழண்டு கொண்டது. நான் ஹென்றிடிபேனிடம் சார் என் செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்கு அவர் எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வாடா என்று கூறிக்கொண்டே என்னை வெளிவாயில்வரை  இழுத்து வர அங்கு பிரதீப் சாலமோனும் பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா,ஹென்றியின் மனைவி சிந்தியா ஆகியோர் என்னைச் செருப்பால் தாக்க முயற்சித்தனர்.செருப்பு என் மேல் படாமல் கீழே விழுந்தது.உடம்பு மற்றும் காலில்  கடுமையான வலி ஏற்ப்பட்டது. அவசர போலிஸ் 100க்கு தகவல் சொல்லிப் புகார் கொடுத்தேன். நான் கடந்த 02.10.21011 முதல் 08.10.2011 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை எடுத்தேன்.ஏற்க்கனவே பிளேட் வைக்கப்பட்டிருந்த எனது காலில் அடிபட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனிடையே கடந்த 04.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் என்னிடம் விசாரணை செய்வதற்காக காவல் உதவி ஆணையா திரு.கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் கண்காணிப்பகத்தின் வாகனமும் அதில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடிய பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட  சிலரும் இருந்தனர். உதவி ஆணையர்  என்னிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்த பின்பு ஹென்றி டிபேன்  செல்வாக்கு உள்ளவர். டிஸ்சார்ஜ் ஆகுங்கள் என்று சொன்னார்.
தற்போது தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தொண்டு நிறுவன தொடர்புகள் இதெல்லாம் கொண்டு இப்பிரச்சனையை திசை திருப்புகிற முயற்சியிலும் ஹென்றிடிபேன் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன்.எனக்கு நீதி வேண்டும்”.

உயர்நிதி(!)மன்றக் கூத்து!    

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 04.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் திரு.ஆறுமுகம் (வழக்கறிஞர் திரு.லஜபதிராயிடம் இளம் வழக்கறிஞராக இருந்தவர்)மூலம் மனுதாக்கல் செய்தனர்  ஹென்றி டிபேன் குடும்பத்தினர். போலிஸ் தரப்பில் ஆஜரானவர்  வழக்கறிஞர்  திரு.பாலசுப்பிரமணியன். மாலை 5.30 மணி வரை ஹென்றிடிபேனின் பிணை மனுவே கிடைக்கப்பெறாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திற்கு மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள்தான் மனுவின் நகலையே கொடுத்தனர்.போலிஸ் வழக்கறிஞர்  பின்னாலே தான் மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள் நின்றிருந்தனர். ஹென்றிடிபேன் மனு 10 வது வழக்காக இருந்தது. 8வது வழக்கு டி. லஜபதிராய் என்று அழைக்கப்பட்டவுடன் என்ன வழக்கென்று கேட்காமலேயே USUAL DIRECTION GRANTED என்று சொன்னார் நீதிபதி கர்ணன்.[வழக்கறிஞர் லஜபதிராய் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதிக்குச் சொல்லப்பட்டிருந்தது போலும்.(ஹென்றி அண்ணே! உங்க அளவுக்கு சாமர்த்தியம் கர்ணனுக்கு இல்லண்ணே!கொஞ்சம் டிரெயினிங் குடுங்க!) நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள்  இது வேறு வழக்கு என்று தெரிவிக்க, பின்பே நிதானத்திற்கு வந்த நீதிபதி 8 & 9 வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு 10வது வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்  வல்லரசு சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் ஆஜராகி புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால் இவ்வழக்கில் பிணை உத்தரவு வழங்க கூடாது, மேலும் புகார்தாரர் மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் கொடுத்து வழக்கை திங்கட்கிழமையன்று ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அரசுதரப்பு வழக்கறிஞர் புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்று பொய்யான தகவலைச் சொல்ல  அதை மறுத்து சிகிச்சையில் இருப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தரவு வழங்குவதிலேயே முனைப்பாக இருந்து உத்தரவு வழங்குவதை எதிர்த்தால் நீதிமன்ற அவமதிப்பு எடுப்பேன் என்று சொல்ல, இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் பதிலடி கொடுக்க அதையும் மீறி நீதிபதி கர்ணன் ஹென்றிடிபேனுக்கு ஆதரவாகப் பிணை உத்தரவு வழங்கினார்.
மேற்படி இச்சம்பவத்தில் ஹென்றிடிபேனால் போலீசு தரப்பு வழக்கறிஞரும், நீதிபதி கர்ணனும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்கள் என்பது அன்று (04.10.2011) நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெளிவாகத்  தெரிந்தது.
ஹென்றிடிபேனுக்குப்  பிணை வழங்கிய நீதிபதி கர்ணன் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனின் தம்பி பாஸ்கரனுக்கு சப்ளை அண்ட் சர்வீஸ் செய்து பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர் என்பது ஊரறிந்த உண்மை. நீதிபதி கர்ணன் அவர்கள் 04.10.2011 அன்று திருச்சி கே.என்.நேரு, கரூர் கே.சி.பழனிச்சாமி, நடிகை குஷ்பு, ஹென்றிடிபேன், பொட்டு சுரேஷ் ஆகியோருக்கு உரிய நீதி வழங்கி தனது தீபாவளி வசூலை சிறப்பாக முடித்துச் சென்றதை வழக்கறிஞர்கள் அறிவார்கள்.
இதற்கிடையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் ஹென்றிடிபேன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வல்லரசை மருத்துவமனையில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்து வெளியேற்றி விட்டார்கள்.
இப்படியாக காவல்துறையுடனும், நீதித்துறையுடனும் கள்ளக்கூட்டு வைத்து செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன்தான் காவல் துறை சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடி வருகிறார்.

மக்கள் கண்காணிப்பகத்தில் குடும்ப ஆதிக்கம்!

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேனின்  மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. அங்கு ஹென்றி டிபேனும் அவரது குடும்பத்தினரும்தான் எல்லாம்.அவர்களை மீறி யாரும் பேச முடியாது.ஊழியர்களை எல்லாம் அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.எதிர்க்கும் நபர்களை திட்டமிட்டுப் பழிவாங்கி விடுவார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.2005 ஆம் ஆண்டு  ம.க.இ.க.தோழர்களிடம் பேசியதற்க்காக  ஹென்றி டிபேன் வழக்கமாக நடத்தும் தீவிரப் புலன்விசாரணையை(பெரிய துப்பறியும் சாம்பு!) சுயமரியாதையோடு எதிர்த்து நின்ற ஓட்டுநர் மோகன்குமாரிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக் கொண்டு ,சம்பளமும் தராமல் வம்பு செய்ய ,பின்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதன் பிறகே  ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தார் இந்த மனித உரிமைக் காவலர் ஹென்றி டிபேன். பின்பு  தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் மோகன்குமார்.அதன்பின் மக்கள் கண்காணிப்பகத்திற்க்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை மக்கள் கண்காணிப்பகத்தால் குன்னூரில் நடத்தப்பட்ட உலகமய ஆதரவுக் கூட்டப் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அப்புகைப்படத்தை வழங்கினார் என்று குற்றம்சாட்டி அமுதா என்ற ஊழியரின் மெயிலை அவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாகப் பார்த்து,விசாரணை என்ற பேரில் சித்திரவதை செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்க்காக ஆறு வருடங்களாய் மக்கள் கண்காணிப்பகத்திற்க்காக கடுமையாக உழைத்த உமா ராணி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.விளக்கம் தரக்கூட மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டார்.இப்படி ஹென்றி டிபேனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது.தற்போது வழக்கறிஞர் வல்லரசுவின் சீனியராக இருந்த ஒரே குற்றத்திற்க்காக 15 வருடங்கள் ஹென்றிக்காக பணியாற்றிய வழக்கறிஞர் ஜான் வின்செண்ட் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார். நெஞ்சில் இரக்கமற்ற கொடிய முதலாளிகள் கூட ஹென்றி டிபேன் போல் நடக்கத் துணிய மாட்டார்கள்.முன்னறிவிப்பின்றி டிஸ்மிஸ் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பதை இந்த ஏ/சி அறைக் கோமான் அறிய மாட்டார் போலும். இதோடு  மக்கள் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் ஹென்றியின் மனைவி சிந்தியாவின் ஆணவம்,அதிகாரத் திமிர் ஊரறிந்தது.மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது முதல் தனக்குப் பிடிக்காதவர்களை ஹென்றியிடம் போட்டுக் கொடுத்துப் பழிவாங்குவது வரை அத்தனையும் செய்வார் இந்தச் (ச்சீ……)சீமாட்டி.இதற்க்கடுத்து மகள் அனிதா,மருமகன் பிரதீப் என்று குடும்பக் குத்துவிளக்குகளின் அதிகார எல்லை நீளூம்.நல்ல வேலை ஹென்றிக்கு கருணாநிதியைப் போல் சில மனைவிகள்,பல குழந்தைகள்,பலப்பல பேரக் குழந்தைகள் இல்லை.தப்பித்தார்கள் மக்கள் கண்காணிப்பக ஊழியர்கள்!

மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!

ஹென்றி டிபேன்
ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும் தங்களின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்பகம், ஆசியா கண்காணிப்பகம் என ஒவ்வொரு நாட்டிலும்  மனித உரிமை அமைப்புகளைக்  கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றிடிபேன் நடத்தி வரும் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் சித்ரவதைக்கு எதிரான பிரச்சாரம்.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் தான் உலகெங்கிலும்  மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து மக்களைச் சாவின் விளிம்பில் தள்ளுகின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் துரோகி.மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.
இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு ,சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.
இவ்வாறாக மக்கள் கண்காணிப்பகம் அதன் தன்மையில் ஓர் ஜனநாயக விரோத, குடும்ப ஆதிக்க நிறுவனமாகவும்,ஹென்றி டிபேன் ஓர் கொடிய கார்ப்பரேட் முதலாளியாகவும்  இருந்து ஓர் பன்னாட்டு நிறுவனத்திற்க்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள நிலையில் அதை மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பென்று கூற முடியுமா?
கூடுதலாக,
1] மக்கள் கண்காணிப்பகத்திற்க்கு பல நூறு கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருகிறது?
2] என்ன நோக்கத்திற்க்காக நிதி வழங்கப் படுகிறது?
3] மக்கள் கண்காணிப்பகம் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெறப்பட்ட நிதி எவ்வளவு? கொடுத்தது யார்?உடன்படிக்கை விபரங்கள் என்ன?
4] நிதிகள் நிறுத்தப் பட்டால் தற்போது எடுக்கப்பட்ட போராட்டங்களின் நிலை என்ன?
5]ஆயிரங்களில்,லட்சங்களில் சம்பளம் பெற்று மனித உரிமைக்குப் போராட முடியுமா?
6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?
7]  மக்கள் கண்காணிப்பகத்தோடு எந்த அடிப்படையில் தமிழ் தேசிய,திராவிட,தலித்,இடதுசாரி அமைப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்?
8] வழக்கறிஞர் வல்லரசு தாக்கப்பட்ட சம்பவம்,அதையொட்டி காவல்துறை,நீதித்துறை உடனான ஹென்றியின் உறவு குறித்து   மக்கள் கண்காணிப்பகம் கூறுவதென்ன?  அதன் தோழமை அமைப்பினர் நிலைப்பாடென்ன?
இவற்றிற்க்கு  மக்கள் கண்காணிப்பகம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளிடம் பிச்சையெடுத்து ஹென்றி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக எச்சில் ஒழுக ஹென்றி டிபேனிடம் உறவு வைத்துள்ள பலரும் நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும்.[ உண்மை அறியும் குழு கூட அமைக்கலாம்!
{அல்லது}
உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்?  அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?
____________________________________________
இணைப்பு: மக்கள் கண்காணிப்பகத்தில் பணியாற்றிய ஒருவரின் கடிதம்:
இரா.முருகப்பன்,
7, பாரதிதாசன் நகர், கல்லூரிசாலை, திண்டிவனம் – 604 001
---------------------------------------------------------------------------------------------------------------------
பெறல்:
திரு. ஹென்றி டிபென் அவர்கள்
இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம் – தமிழ்நாடு
சொக்கிக்குளம், மதுரை
பார்வை  : 02.06.06 நாளிட்ட நிர்வாகி அவர்களின் கடிதம்
ஐயா, வணக்கம்
பார்வையில் கண்ட கடித்ததில் நான் பணியை ராஜினாமா கடிதம் எழுதாமலும் ரூபாய் மூவாயிரம் கணக்கு நேர் செய்யாமலும் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். மேலும் மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கணக்குகளை ஒப்படைப்பு செய்யும் படியும் கேட்டுள்ளீர்கள்.
  1. நான் ரூபாய் மூவாயிரத்திற்கான கணக்கை நேர் செய்யத் தயாராக இருக்கிறேன்.
  2. நான் பணி செய்த காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005க்கான ஊதியத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்படாத நிலையில் பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. தங்கள் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  3. தங்களிடம் உள்ள என்னுடைய மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செல்பேசியைக் கேட்டு பலமுறைக் கடிதம் எழுதிய பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருப்பது உள்நோக்கம் உடையதாகத் தெரிகிறது.
  4. அவசியம் கருதி நான் கேட்டபின்பும் தங்களுக்கு நான் தரவேண்டிய ரூபாய் மூவாயிரத்திற்கு பிணையாக என்னுடைய பள்ளிச் சான்றிதழை தாங்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். எந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.
  5. நான் விகடன் குழுமத்தில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர நடைபெறும் நேர்காணலுக்கு என்னுடைய சான்றிதழ் தேவை எனக் கேட்டிருந்தேன். தாங்கள் சான்றிதழை அனுப்பாமல் பார்வையில் கண்ட கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள். மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் நான் பள்ளிச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை எனில் அதன்முழுப் பொறுப்பும் தங்களையே சாரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  6. தங்கள் கடிதத்தில் என்னை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளீர்கள். நான் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில் அவமானமும் உளரீதியான சித்திரவதையும் மன அழுத்தமும் சந்திக்க நேரிடும் என்பது என்னுடைய கடந்த கால நேரிடை அனுபவமாகும். நான் பணிபுரிந்த காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்ததை அறிவேன். தங்கள் நிறுவனத்தின் உளவியல் ரீதியான சித்திரவதையையும் அவமானத்தையும் தாங்காமல் பலர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளதையும் நான் அறிவேன். குறிப்பாக தலித்துகளான வனராசன், மோகன், சோபியா, செம்மலர் போன்றோரும் வரவேற்பரையில் பணியாற்றிய மகராசன், கோபால் உள்ளிட்ட இன்னும் பலருக்கு நேர்ந்தவற்றை நான் குறிப்பாக அறிவேன்.  மனித உரிமை நிறுவனம் என்ற அடையாளத்துடன் செயல்படும் தங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தால் எனக்கும் அத்தகைய நிலைதான் ஏள்படும் என்பதை நான் அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளேன். ஆகையால் என்னுடைய சான்றிதழ் மற்றும் செல்பேசியை வழங்கவும் கணக்கை நேர் செய்யவும் அலுவலகத்திற்கு நேரில் வர விருப்பம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
  7. தங்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் ஊழியர்களின் சான்றிதழ்களை பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதையும் ஊழியர்கள் இடையே சாதியப்பாகுபாடு  கடைபிடிக்கப்படுவதையும் தலித் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாததையும் மறைமுகமாக உளவியல் சித்திரவதைக்கு ஊழியர்கள் உள்ளாக்கப் படுவதையும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதையும் சக ஊழியர்கள் அச்சமின்றி ஒருவருடன் ஒருவர் பழக இயலாமல் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் எப்பொழுதும் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியதையும் நான் என்னுடைய சொந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. இதை ஒரு சமூகம் மற்றும் பொதுப் பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இவண்
இரா.முருகப்பன், திண்டிவனம்
04.06.2006
நகல் :
10.06.06ல்      1.         -           கோ.சுகுமாறன்
2.         -           வழக்.பொ.இரத்தினம்
3.         -           வழக்.ராஜு
4.         -           திரு.அபிமன்னன்
12.06.06ல் தகவலுக்கான கடிதம்
5.         -           கொளத்தூர்.மணி
6.         -           பழ.நெடுமாறன்
7.         -           வழக்.இராபர்ட்
8.         -           புனிதப்பாண்டியன்
9.         -           தேவநேயன்
10.       -           வழக்.கே.சந்துரு
11.       -           தொல்.திருமாவளவன்
12.       -           பேரா.அ.மார்க்ஸ்
13.       -           பேரா.சே.கோச்சடை
____________________________________________________________________
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு -
மதுரை மாவட்டக் கிளை.
============================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக