செவ்வாய், 15 ஜூலை, 2014

தலைவர்கள் அறிவோம்: கு. காமராசர் --வெங்கடேசன்

தலைவர்கள் அறிவோம்: 

கு. காமராசர்



எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker),பெருந்தலைவர் என்ற பெருமைக்குரிய காமராசர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்.
பிறப்பு: விருதுநகர் மாவட்டம் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி தம்பதியருக்கு 15.07.1903 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் இவரின் பெயர் குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரையே சூட்டினர். இவரது தாயார் மட்டும் ராஜா என்று அழைத்து வந்தார். பின்னாளில் காமாராசு என பெயர் மாற்றம் பெற்று எல்லோராலும் அழைக்கப் பெற்றார்.
கல்வி: தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கிய காமரசார் ஆறு வயதில் தந்தை இழந்ததும் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.
வாலிபத்தை அடையாத வயதில், இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னுடைய 16வது வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராக இணைத்துக் கொண்டு சுதந்திரப் போராட்டக் கனலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சிறை வாழ்க்கை:
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடு அவர்களின் வாதத் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
1940ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆன காமராசர் நேராகச் சென்று தனது நகராட்சித் தலைவர் பதவியை துறந்தார். அப்போது பதவிக்கு நேர்மையாகவும் முழுமையாகவும் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறினார்.
மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார். இம்மாதிரியான சிறை வாழ்க்கைகளின்போது சுயமாகப் படித்துத் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் குரு: மிகச்சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியுமான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் காமராசர்.
1936ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சியைக் கண்டு தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக 13.04.1954 தமிழ் புத்தாண்டு அன்று பதவியேற்றார்.
முதல்வராக பதவியேற்றதும் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லம் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டுதான் தன் பணிகளைத் தொடங்கினார்.
அமைச்சரவை:
* காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன.
* மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
* காமராசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் இருவரையும் அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்த்திருந்தார்.
ஆற்றிய பணிகள்: ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத் தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்றும் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது.(வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்(IIT) தொடங்கப்பட்டது.
காமராசர் முதல்வராக பதவி வகித்த காலங்களில் தமிழகத்தின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளித்து பலத் திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின்கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
* கீழ் பவானித்திட்டம்
* மேட்டூர் கால்வாய்த்திட்டம்
* காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
* மணிமுத்தாறு
* அமராவதி
* வைகை
* சாத்தனூர்
* கிருஷ்ணகிரி
* ஆரணியாறு ஆகியவையாகும்.
முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும்:
* பாரத மிகுமின் நிறுவனம்
* நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
* மணலி சென்னை சுததகரிப்பு நிலையம் (MRL)இதன் தற்போதைய பெயர் (CPCL)
* இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
* நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
* கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
* மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
* குந்தா மின் திட்டம்
* நெய்வேலி மற்றும் ஊட்டியில் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
அகிலஇந்திய காங்கிரஸ் (K.PLAN): மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும்.
அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதல்வர் பதவியை (02.10.1963) துறந்து பக்தவத்சலம் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தில்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவகர்லால் நேரு மறைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்: காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காமராசர் இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித நிலங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்க்கை பயணத்தை முடித்தார்.
நினைவுச் சின்னங்கள்: காமராசர் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
காமராசர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது..
=========================================================================
காமராஜர் பற்றி பெரியார்.. (தகவல்:- கோவி .லெனின் )

“மருந்து சாப்பிடவேண்டியது நோயாளிகள்தான்.. டாக்டர் அல்ல” -காமராஜர் பற்றி பெரியார்

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக மூத்த நிர்வாகிகள் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகி, கட்சிப்பணியை கவனிக்க வேண்டும் என்பதே காமராஜ் திட்டம் (K Plan). இதனைக் கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, லால்பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொரார்ஜிதேசாய் உள்பட பல முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் பதவி விலகினர். முன்னுதாரணமாக, பெருந்தலைவர் காமராஜரும் தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பலரும் இதனைப் பாராட்டிய நேரத்தில் பெரியார் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.

“காமராசரைப்போல மொட்டை மரமாக நின்று, நாட்டுப்பணியையே தமது ஒரே லட்சியமாகக் கொண்டு காரியம் ஆற்றும் ஒரு சிறந்த பொதுத் தொண்டரைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும்கூட வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்நிலையில் அவர் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது எந்த வகையிலும் விரும்பத்தக்கதல்ல.அவருடைய இடத்தில் வேறு எவர் உட்கார்ந்தாலும் அவரைப்போல நீடிக்க முடியாது என்பதோடு, அவரைப் போன்று இன உணர்ச்சியுடன் செயலாற்றவும் முடியாது. இதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
யோசனை கூறிவிட்டு, நாமே பதவியிலிருந்தால் மற்றவர்கள் என்ன நினைக்கக்கூடும் என்று காமராசர் எண்ணக்கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட வேண்டுமேதவிர, டாக்டரே ஏன் சாப்பிட்டுக்காட்டக்கூடாது என்று யாரும் கேட்கமாட்டார்கள். இதைக் காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணரவேண்டும். ஒரு பிரச்சினையைத் தீர்க்கப்போய், புதிதாகப் பல பிரச்சினைகளை உண்டாக்கிக்கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது” (தந்தை பெரியார்- விடுதலை 10.8.1963)
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நாள் (ஜூலை 15)


==================================================
காமராஜர் பற்றி பெரியார்.. 
(தகவல்:-
"அரசியல் பேரால் பதவிக்குப் போய் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் நீங்கள், தமிழ்நாட்டில் காமராசரை மட்டும் ஏன் ஆதரிக்கிறீர்கள்?" என்று பெரியாரிடம் கேட்டபோது கூறினார்:
காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முதல் நாள் வரைக்கும் கல்வி, உத்தியோகம் முதலிய சகலமும் பார்ப்பான் கையிலேயே இருந்து வந்தன. இன்றுதான் தமிழனுடைய நன்மையில் அக்கறை உடையதாக காங்கிரஸ் ஆகியுள்ளது. எனவே, தமிழன் கைக்கு வந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, காங்கிரசால் பலனும், பதவியும், வாழ்வும் பெற்ற இராஜாஜியும் மற்ற மற்றப் பார்ப்பனர்களும் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஓடி ஓடிப் பாடுபடுகின்றனர்.
எவ்வளவோ பாடுபட்டுப் பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் தமிழன் கைக்கு இன்று வந்து உள்ளது. இது மீண்டும் பார்ப்பான் கைக்குப் போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பார்ப்பான் காங்கிரசாக ஆகிவிடுமேயானால் காமராசரின் காங்கிரசில் ஏற்பட்டுள்ள நன்மைகள் எல்லாம் தோசையைத் திருப்பிப் போடுவது போல் மாற்றப்பட்டுவிடும்.
கண்ணீர்த்துளியோ (தி.மு.க), கம்யூனிஸ்ட்டோ, சுதந்திராக் கட்சியோ உங்களிடத்தில் வந்து "காமராசர் ஆட்சி ஒழிய வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம்" என்று புளுகி ஓட்டுக்கு வருவார்கள். நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இவர்களிடம் "காமராசர் ஆட்சியில் என்னப்பா ஓட்டை கண்டுவிட்டாய்? தமிழர்களின் கல்விக்கும், உத்தியோகத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் நீ என்ன திட்டம் வைத்து இருக்கின்றாய்?" என்று கேட்க வேண்டும். - ('விடுதலை', 27.05.1961)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக