திங்கள், 31 அக்டோபர், 2016

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய இலக்கணங்கள் உண்டு. அவையாவன: தாராளமயம், தனியார்மயம், உலகமயம். இவற்றை இணைத்து நவீனதாராளமயக் கொள்கைகள் என்றும் அல்லது சுருக்கமாக நவீனதாராளமயம் என்றும் அழைப்பது வழக்கம். நவீன தாராளமயம் என்பது இந்தக் கொள்கைகளின் தத்துவ அடிப்படையையும் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதன் பகுதியான, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று இலக்கணங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சரியான புரிதல் அவசியம்..

தாராளமயமாக்கல்

முதலாளித்துவம் மேலைநாடுகளில் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்துவந்த கட்டத்தில் அதற்கு முந்தைய காலத்தில் அரசர்களிடம் சில வணிகர்கள் சிறப்புசலுகைகள் பெற்றுவந்தனர். அரசர்களும் குறுநிலமன்னர்களும் தனியார் தொழில்முனைவோர்மீதும் வணிகத்தின்மீதும் பலநிபந்தனைகளையும் வரிகளையும் விதித்துவந்தனர். இவையெல்லாம் முதலாளித்துவத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. 18ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வளர்ந்துவரும் முதலாளிகள்மீது அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்ற கோட்பாடு முதலாளி வர்க்கத்தின் சார்பாக ஆதாம்ஸ்மித், ரிக்கார்டோ போன்ற பிரிட்டிஷ் நாட்டு அரசியல்-பொருளாதார அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இந்த ‘அரசுதலையீடாமை’ என்ற தத்துவம்தான் தாராளமயதத்துவம் என்று அழைக்கப்பட்டது. இதன் தத்துவஇயல் பின்புலமாக இருந்தது ‘தனிநபர்சுதந்திரம்’ என்ற கோட்பாடு. இந்த கோட்பாட்டின் உண்மையான உள்ளடக்கம் அரசுதலையீடே பொருளாதாரத்தில் இல்லை என்பது அல்ல. மாறாக, முதலாளிகளின் செயல்பாடுகள்மீது அரசு கட்டுப்பாடு கூடாது என்பதுதான். டாக்டர்அம்பேத்கர் அவர்கள், “அரசு தலையீடு இன்மைதான் ‘சுதந்திரம்’ அளிக்கும்” என்ற வாதத்தைப்பற்றி பின்வருமாறு மிகச் சரியாக குறிப்பிடுகிறார்:

“ யாருக்கு இந்த சுதந்திரம்? நிலப்பிரபுவிற்கு குத்தகையை உயர்த்த சுதந்திரம். முதலாளிகளுக்கு வேலைநேரத்தை அதிகரிக்க சுதந்திரம்.தொழிலாளியின் கூலியை குறைக்க சுதந்திரம்.”[1]

மேலும் தாராளமயம் என்பது முதலாளிகள்பால் தாராளம் மட்டுமே. 18-19ஆம் நூற்றாண்டுகளில் தாராள மய தத்துவத்தை முன்வைத்தவர்கள் காலனிஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. தத்தம் நாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கு உலகின் பெரும்பகுதியை உட்படுத்துவதற்கு மேலை முதலாளித்துவ அரசுகள் காலனியாதிக்கத்தை மேற்கொண்டனர் என்பது வரலாறு! ஆகவே அரசின் மையப்பங்குடன்தான் முதலாளித்துவம் வளர்ந்தது, உலகம் முழுவதும் பரவியது. அதேபோல்தான் முதலாளித்துவ அரசுகளின் வரிக்கொள்கைகள், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்கள்பால் அவற்றின் அணுகுமுறை என்பவை எல்லாமே, தாராளமய தத்துவம் எந்தவகையிலும் அரசின் பங்கை நிராகரிக்கவில்லை என்பதையும், அதேசமயம் முதலாளிகள்பால் தாராளமான அணுகுமுறை என்பதே இதன் உள்ளடக்கம் என்பதையும் இவை நமக்கு தெளிவாக்குகின்றன. இந்த நாணயத்தின் மறுபக்கம்தான் உழைப்பாளி மக்கள்மீது ‘தாராளமய அரசுகள் ஏவிவிடும் அடக்குமுறைத் தாக்குதல்கள்.[2]

ஆனால் தாராளமயம் பற்றி ஆளும் வர்க்கங்களும் அவர்கள் ஊடகங்களும் எப்படி வாதாடுகின்றன? சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதுபோல் வேடம் தரிக்கின்றன. அரசு கட்டுப்பாடுகள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிறுதொழில் முனைவோரை சிறைப்படுத்துகின்றன என்றும் இதிலிருந்து– அவர்கள் மொழியில், “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தில்” இருந்து–அவர்களை விடுவிக்கவே தாராளமயம் அவசியம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.[3] உண்மையில் தாராளமயம் என்பது இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள்மீது எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தங்குதடையின்றி லாபவேட்டையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் கொள்கையாகும். இதன் மறுபக்கம், பெருமுதலாளிகளின் சுரண்டலையும் அதற்கு ஆதரவான அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் மக்கள்மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகும்.

தனியார் மயமாக்கல்

தனியார்மயம் என்பதன் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்பதாகும். இதை எதிர்ப்பது அவசியம். தனியார்கள் அரசு விற்கும் பங்கை வாங்குகின்றனர் என்பதன் பொருள் என்ன? அதன்மூலம் அவர்கள் லாபம் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்புதானே?  அது சரி என்றால், ஏன் அரசே அப்பங்குகளை கைவசம் வைத்துக் கொண்டு லாபம் ஈட்டி, வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது? ஆகவே, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை. குறிப்பாக, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நிகழ்வது என்னவெனில் லாபம் ஈட்டித்தரும் நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அரசு விற்று வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைத்துக் காட்டி, பன்னாட்டு மூலதனத்தை திருப்திப்படுத்த முற்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது. மாறாக, அவற்றை சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு லாபகரமாக இயக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.

ஆனால் தனியார்மயம் என்பது பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது மட்டும் அல்ல. அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த பல துறைகளை – பொதுநன்மை நோக்கில் செயல்பட வேண்டிய துறைகளை – தனியாரிடம் ஒப்படைத்து, லாப அடிப்படையில் அவை செயல்படலாம் என்று அனுமதிப்பது தனியார்மயக் கொள்கைகளின் இன்னொரு மிக முக்கிய அம்சம். கல்வி, ஆரோக்கியம், மற்றும் கட்டமைப்பு துறைகள் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். நமது நாட்டில் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் நீண்டகாலமாக தனியார் அமைப்புகள் பங்காற்றி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இவ்வமைப்புகள் லாபநோக்கத்துடன் கடந்த காலங்களில் செயல்பட்டதில்லை. பெரும்பாலும் சமூகமேம்பாடு என்ற நோக்கில் செயல்பட்டவை. இவற்றில் பல விடுதலைப் போராட்ட காலத்தில் சமூகத்தொண்டு என்ற நோக்குடன் நிறுவப்பட்டவை. பல சமயங்களில் சாதி, சமய சமூக அடிப்படையிலும்கூட உருவாக்கப்பட்டு, அதேசமயம் அனைத்து சமய, சமூக மாணவ மாணவியரையும் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்களாக இயங்கின. ஆனால் 1991க்குப்பின், தனியார் மயம் என்பது கல்வித்துறையிலும் ஆரோக்கியத் துறையிலும் முழுக்க முழுக்க வணிகமயமாகவே அமலாகியுள்ளது. ஒரு துறையை தனியாருக்கு திறந்துவிடுவது என்பது வெறும் நிர்வாக ஏற்பாடு அல்ல. திறன் குறைந்த பொதுமேலாண்மைக்குப் பதிலாக திறன்மிக்க தனியார் மேலாண்மை என்ற தவறான படப்பிடிப்பை முன்வைத்து, இதை நியாயப்படுத்த ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. மறுபுறம், அரசிடம் காசு இல்லை, ஆகவே தனியாரிடம் கல்வியையும் ஆரோக்கியத்தையும் ஒப்படைப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் வாதிடப்படுகிறது. இந்த வாதங்கள் தவறானவை. பிரச்சினை மேலாண்மைத் திறன் அல்ல. தனியார் துறை மேலாண்மை பொதுத்துறை மேலாண்மையை விட அதிகத்திறன் கொண்டது என்று கருத எந்த ஆதாரமும் கிடையாது. சொல்லப் போனால், ஏராளமான தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் சிக்கி காணாமல் போகின்றன. மறுபக்கம், சமூக நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொண்டே பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதேபோல், அரசிடம் காசு இல்லை என்று சொல்வது, செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் உரிய வகையில் வரிகள் விதித்து வளங்களை திரட்ட அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

உண்மையில், தனியார்மயம் என்பதன் பொருள், பொதுநோக்கு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த துறைகளை தனியார் லாப நோக்கில் செயல்படுத்துவது என்பதாகும். இதன் மிக முக்கிய விளைவு ஏழை மக்களுக்கு கல்வியும் ஆரோக்கிய வசதிகளும் எட்டாக்கனியாக மாறுவது என்பதாகும். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வியும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற நிலைக்குத்தான் இத்துறைகளில் அரசு தனது பொறுப்பை புறக்கணித்து தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பதன் விளைவுகள் இட்டுச் செல்லும். அதேபோல்தான் கட்டமைப்பு வசதிகள் விசயமும். சாலைகள், இதர போக்குவரத்து வசதிகள், வேளாண் விரிவாக்கப் பணிகள், பாசனம் உள்ளிட்டு அனைத்து துறைகளையும் நடவடிக்கைகளையும் தனியார் துறையின் கையில் ஒப்படைத்து லாபநோக்கில் அவை இவற்றை செயல்படுத்தலாம் என்ற பாதையை நாம் தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக பார்க்க வேண்டும். தாராளமயம், தனியார்மயம் இரண்டும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், இத்துறைகளில் லாபநோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின்மீது சமூக நெறிமுறைகளை விதித்து செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விசயங்களாக ஆகியுள்ளன.

உலகமயமாக்கல்

உலகமயம் என்ற கோட்பாட்டிற்கு ஏராளமான அம்சங்கள் உண்டு. ஆனால் இங்கு, பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த அம்சங்களை மட்டுமே நாம் பரீசீலிக்க உள்ளோம். பொருளாதார ரீதியில் உலகமயம் என்பதற்கு கீழ்க்கண்ட இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு:

சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, “சுதந்திர” பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பது. நாட்டின் பொருளாதாரத்தை இந்த வகையில் பன்னாட்டு வணிகத்திற்கு முழுமையாக திறந்து விடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்.
நிதிவடிவில் மூலதனத்தை நாட்டுக்குள்ளே வரவும் அதன் விருப்ப்ப்படி நாட்டை விட்டு வெளியே செல்லவும் தங்குதடையின்றி அனுமதிப்பது.
முதல்அம்சம் வளரும் நாடுகளின் தொழில்வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக அமையும். சமத்துவம் அற்ற பன்னாட்டுச் சந்தைகளில் சுதந்திர வர்த்தகம் என்பது வளரும் நாடுகளுக்கு சமஆடுகளமாக இருக்காது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதும் அல்லது நீர்த்துப் போகச் செய்வதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் வளரும் நாடுகளின் சந்தைகளை கைப்பற்ற பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். சுதந்திர வர்த்தகம் பேசும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பலகாரணங்களை முன்வைத்து வளரும் நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பார்கள் என்று அனுபவம் பாடம் புகட்டுகிறது.

உலா வரும் நிதிமூலதனம்

உலகமயம் என்பதன் இரண்டாவது பொருளாதாரஅம்சம் நிதிமூலதனம் தங்குதடையின்றி நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தன்விருப்பப்படி பயணிப்பது என்பதாகும். ஒரு நாட்டின் பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரையில், இதுதான் உலகமயத்தின் மிக முக்கிய அம்சம். ஏனென்றால், வெளிநாடுகளில் இருந்து நிதியாக மூலதனம் ஒரு நாட்டுக்குள்ளே தன் விருப்பப்படி நுழையலாம். அதேபோல் வெளியேறலாம் என்ற நிலை ஏற்படும் பொழுது அந்த நாடு தனது பொருளாதார கொள்கைகளை தன் தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கணிசமான அளவிற்கு இழக்கிறது. அரசு ஒரு பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டால் நிதிமூலதனம் அதை எப்படி பார்க்கும் என்பதைப் பற்றி அரசுகள் கவலைப்படும் நிலை உருவாகிறது. அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று நிதிமூலதனம் கருதினால் அது நாட்டைவிட்டு தனது பணத்தை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளின் நிதிச்சந்தைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலேயே அரசுகள் செயல்படும் நிலை உருவாகிறது. இதனால் அரசின் வரவு-செலவு கொள்கைகள் நிதிமூலதனத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைகின்றன. இதில் ஒரு மிகப் பெரிய ஜனநாயக மறுப்பு அம்சம் உள்ளது. நிதிமூலதனத்திற்கு உலகை உலாவரும் உரிமையைக் கொடுத்துவிட்டதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் மக்கள் நலன்காக்கும் வகையில் அரசு வரவுசெலவு அமையும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் கஜானா காலி, வரவுசெலவு இடைவெளி கூடினால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு வெளியேபோய்விடும் என்று வாதிடுவது மாமூலாகி விட்டது.

நிதிமூலதனம், குறிப்பாக அந்நிய மூலதனம், வரவேற்கப்பட வேண்டும் என்பதும், அதன்மீது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்பதும் உலகமயம் என்பதன் முக்கிய அம்சம். ஆனால் ஒரு நாட்டுக்குள் அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கு இது மட்டும் போதாது. ஏனென்றால், பன்னாட்டு மூலதனம் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாமே! எனவே, அதனை ஒரு நாட்டுக்குள் ஈர்க்க வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அந்நிய மூலதனத்திற்கு சலுகைகள் அளித்தால் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அதே சலுகைகளை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் வரிவருமான இழப்பை ஈடுகட்டி, வரவுசெலவு பற்றாக்குறையை வரம்புக்குள் நிறுத்த, உழைக்கும் மக்களுக்குச் சேரவேண்டிய மானியங்களை வெட்டுவதே ஆயுதமாகிறது. இதுதான் உலகமயம் படுத்தும் பாடு.

அரசு முன்வைத்த வாதம்

1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன? அவர்கள் புனைந்த கதை இதுதான்:

இக்கொள்கைகளால் அந்நிய, இந்திய கம்பனிகள் ஏராளமாக முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். பன்னாட்டு மூலதனம் இங்கு வந்து குவியும். பெரும் தனியார் முதலீடுகள் மூலம் நிறுவப்படும் பெரிய ஆலைகளின் உற்பத்தி உலகச் சந்தைகளில் விற்கப்பட்டு நமது ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கும். இதனால் நாம் தேவைப்பட்டதை எல்லாம் தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். உற்பத்தி பெருகும். வேலைவாய்ப்பு வளரும். அந்நியச் செலாவணி குவியும். வளர்ச்சி விகிதம் உயரும். வறுமை மறையும்.

தாராளமய காலத்தில் நடந்தது என்ன?

மூன்று முக்கிய விசயங்களை நாம் பரிசீலிக்கவுள்ளோம். ஒன்று, பொருளாதார வளர்ச்சி விகிதம். இதில் பல்வேறு முக்கிய துறைகளில் வளர்ச்சி எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் பரிசீலிக்க உள்ளோம். இரண்டு, இவ்வளர்ச்சியின் வர்க்க அம்சங்களை பரிசீலிக்க உள்ளோம். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளிகள், இதர உழைக்கும் மக்கள்மீது எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், மறுபுறம்இந்திய, அந்நிய பெருமூலதனங்களும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும் எவ்வாறு பயன் அடைந்துள்ளன என்பதையும் சுருக்கமாக காண்போம். மூன்று, ஆளும் வர்க்க கொள்கைகளை எதிர்த்த நமது மாற்றுக்கொள்கை பற்றியும் பார்ப்போம்.

அடுத்தடுத்த பகுதிகளில் …

25 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது?

உலகமய காலகட்டத்தின் படிப்பினைகள் என்னென்ன?

————————————

[1]Government of Maharashtra(1979), Collected works of Babasaheb Ambedkar, (தமிழ் மார்க்ஸிஸ்ட்இதழில் சில ஆண்டுகளுக்கு முன் டாக்டர் அம்பபேத்கர் பற்றி நான் எழுதிய கட்டுரையில் இதை மேற்கோள் காட்டியிருந்தேன்)

[2]இதை நாம் மாருதி-சுசுகி ஆலை தொழிலாளர் பிரச்சினையில் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

[3]அண்மையில், கூச்சநாச்சமின்றி தாராளமயத்தை தீவிரப்படுத்த இன்னொருவாதமும் தாராளமயவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால், அரசு கட்டுப்பாடுகள் விதித்தால் (எடுத்துக்காட்டாக, சுற்றுசூழல் நெறிமுறைகளை அமல்படுத்தினால்) முதலாளிமார்களின் ஊக்கம் குறைந்துவிடும், அதனால் முதலீடு குறையும், எனவே பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற வாதம்.⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக