திங்கள், 31 அக்டோபர், 2016

உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் … எழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா - part 3

பெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 3
முந்தைய பகுதி: <<<
வேளாண் நெருக்கடி
வேளாண் நெருக்கடியின் மிகத்துயரமான அம்சம் தொடரும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997 முதல் 2016வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத் தற்கொலைகளுக்கும் வேளாண்நெருக்கடிக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வேளாண் நெருக்கடியின் ஆழத்தை வேளாண்வளர்ச்சி பற்றிய விவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. தானியம், பருப்பு, எண்ணய்வித்துக்கள், கரும்பு ஆகிய முக்கிய பயிர்களை எடுத்துக் கொண்டால், 1981முதல் 1991வரையிலான காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி வேகமாக வளர்ந்தது. ஆனால் அடுத்த 20ஆண்டுகளில் – 1991முதல் 2010முடிய – இவற்றின் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் பெரிதும் குறைந்தது. மகசூல் உயர்வும் இதேபாணியில்தான் இருந்தது. நெருக்கடி1998 – 2004 காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது என்பது உண்மை. வேளாண்உழைப்பாளிமக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளேக காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவு கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண்பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், விளைபொருட்கள் விலைகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிதித்துறை சீர்திருத்தங்கள் விவசாயக் கடனைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமய கொள்கை கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண்விரிவாக்கம், வேளாண்ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது வினியோகமுறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன்வலையில் வீழ்ந்தன.
அதேசமயம், வேளாண்துறை நெருக்கடியில் இருந்த போதிலும், கிராமப்புற செல்வந்தர்கள் கொழுத்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பயிர்வாரியாகவும் பகுதிவாரியாகவும் காலவாரியாகவும் வேளாண்நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபட்டு இருந்தன. அதேபோல், வேளாண்பகுதிமக்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ-நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன்பெற்றுள்ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன. 1992 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில்கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண்துறையில் இயந்திரங்களின் உடமையும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற்கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.
இதன் பொருள் என்னவெனில், வேளாண்துறையில் கிடைக்கும் உபரிமூலம், உழைப்பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகளும் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நிலஉச்சவரம்பு சட்டங்களை நீக்குகின்றன. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களை இழப்பதன் மூலமும், அரசுகள் இயற்கைவளங்களை அடிமாட்டுவிலைக்கு பன்னாட்டு இன்னாட்டு ஏகபோகங்களுக்கு வாரிவழங்குவதன் மூலமும், ரியல்எஸ்டேட் கொள்ளை மூலமும் சிறப்புபொருளாதாரமண்டலங்கள் என்றவகையிலும் ஆரம்ப மூலதன சேர்க்கை பாணியிலான மூலதனக் குவியலும் தொடர்கிறது.
வேலைவாய்ப்பு
நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவில்லை. தொழில்துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், பணியிடங்கள் கூடவேஇல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் பெரும்பாலும் உழைப்பாளி மக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத அமைப்புசாரா பணிஇடங்களாகவே இருந்தன. 1993முதல் 2005வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுயவேலைஉட்பட) இருப்போர் எண்ணிக்கை 1கோடியே 20லட்சம் அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒருசெய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை வெறும் 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.
வறுமை
வறுமை பற்றி அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் நகைப்புக்கு உரியவை. அரசின் வறுமைக்கோடு என்பது ஒரு சாகாக் கோடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வறுமைகோட்டில் எவரும் வாழமுடியாது. ஆனால் சாகாமல் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 2011-12 தேசீய மாதிரி ஆய்வு தரும் விவரங்கள்படி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50க்கும் குறைவாக செலவு செய்தவர்களாகத்தான் கிராமப்புற குடும்பங்களில் 80% இருந்தனர். நகரப் புறங்களிலும் கிட்டத்தட்ட பாதிகுடும்பங்களின் நிலைமை இதுதான். ஒரு நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த விகிதம் நாலில் ஒன்றுதான். இது போன்ற இன்னும் பல துயர்மிக்க புள்ளிவிவரங்கள் உள்ளன! அதுவும் நாட்டுக்கு விமோசனம் என்று ஆளும் வர்க்கங்கள் விளம்பரப்படுத்திய தாராளமய கொள்கைகள் 22ஆண்டுகள் அமலாக்கப்பட்ட பின்னர்!
மலையும் மடுவும் போன்ற ஏற்றத்தாழ்வுகள்
ஒரு விஷயத்தில் தாராளமய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. அது எதில்என்றால், அசிங்கமான, ஆபாசமான அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்ததில்! தொழிலிலும் நிலஉடமையிலும் பொதுவாக சொத்து வினியோகத்திலும் நம்நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது என்றாலும், கடந்த 23ஆண்டுகளில் இவை பலப்பல மடங்குகள் அதிகரித்துள்ளன.
2008இல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் – அதாவது, 100கோடிடாலர் – சொத்து மதிப்புகொண்ட இந்திய செல்வந்தர்கள் எண்ணிக்கை 41ஆக இருந்தது. அதன்பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்துள்ளது. இது இந்த எண்ணிக்கையைக் குறைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2013இல் 53, 2014இல் 70என்று இந்த இந்திய டாலர் பில்லியனேர்கள் எண்ணிக்கை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளாக 5%க்கும் குறைவுதான். ஆனால் டாலர் பில்லியனேர்கள் வளர்ச்சிவிகிதம் அமோகம்!
2014இல் முகேஷ்அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 இந்திய டாலர்பில்லியனேர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 390 பில்லியன்டாலர். அதாவது சுமார் ரூ. 24லட்சம் கோடி. இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டி.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒருபங்கு ஆகும். முதல் பத்து செல்வந்தர்களின் மொத்தசொத்து மட்டும் தேசஉற்பத்தியில் கிட்டத்தட்ட 6% ஆகும்.
இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர்டாட்டா குழுமத்தின் சொத்து 1990இல் 10,922கோடிரூபாயாக இருந்தது. 2012-13இல் இது 5,83,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (ஆதாரம்: டாட்டாஇணையதளம்). இதே கால இடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் RIL மற்றும் அதன் உபநிறுவனங்களின் சொத்து 3,62,357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின் ADAG கம்பெனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன.(ஆதாரம்: இக்குழுமங்களின்இணையதளங்கள்).
1991இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதனமதிப்பு 4மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல்நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)
நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.
மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்னகணிசமான பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கழிப்பறை இன்றி, குடிதண்ணீர் இன்றி, தலைக்குமேல் கூரைஇன்றி, வசிக்க வீடின்றி, குளிர்வந்தாலும் மழைபெய்தாலும் சாவை எதிர்நோக்கி வாழும் கோடிக்கணக்கான மக்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்தசோகையில் வாடும் பெண்கள், குழந்தைகள், பிறக்கும் 1000சிசுக்களில் 40சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவலநிலை (இது குஜராத் உட்பட பல மாநிலங்களில் அதிகம்) இப்படி தொடரும் கொடுமைப்பட்டியல்!
இதுதான் – பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் –தாராளமய வளர்ச்சியின் முக்கியதோர் இலக்கணம்.
மோடி அரசின் தீவிர தாக்குதல்கள்
ஊழல் மலிந்த யூ பீ ஏ அரசு தூக்கி எறியப்பட்டு பா ஜ க தலைமையில் 2014 மே மாதம் பொறுப்பேற்ற மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ளது. பாஜக அரசு விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மொத்த விலைப்புள்ளி உயர்வு முன்பை விட கூடியுள்ளது என்று அரசு தரும் புள்ளிவிவரங்களும், ரிசர்வ் வங்கியும், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளன.
இது நமக்கு வியப்பளிக்கவில்லை. காரணம், தாராளமயக் கொள்கைகளின் அறுவடைதான் தடையில்லா விலைஉயர்வு என்று நமக்கு அனுபவம் சொல்கிறது.முந்தைய அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக மோடி அரசு பின்பற்றுகிறது. பல ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால், அரசு செய்ய வேண்டிய முதலீடுகள் செய்யப்படாமல், அளிப்பை(Supply) அதிகரிக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டதால் ரூபாய் மதிப்பு சரிவதும் அதனால் விலைவாசி உயர்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 45 ரூபாய் என்பதிலிருந்து 67 ரூபாய் ஆக உயர்ந்தால் இறக்குமதிப்பொருட்களின் செலவு ரூபாய் கணக்கில் கிட்டத்தட்ட ஐம்பது சதம்  அதிகரிக்கும் என்பது தெளிவு.1991ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு பதிமூன்று ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது எழுபது ரூபாயை தாண்டியுள்ளது.
இதே காலத்தில் நமது நாட்டு இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மற்றொன்று இறக்குமதியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அது மட்டுமல்ல. தொடர்ந்து அரசு முதலீடுகள் வெட்டப்படுவது கட்டமைப்பு வசதிகளை கடுமையாகப் பாதிக்கிறது. பல முக்கிய துறைகளில் இறக்குமதியின் பங்கு அதிகரிக்கிறது. அரசின் தாராள இறக்குமதிக் கொள்கைகளும் இதற்கு இட்டுச்செல்கின்றன.
இவை அனைத்தும் உணவுப் பொருள் சப்ளையை அதிகரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அரசின் வேளாண் கொள்கைகள் தானிய உற்பத்தியின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாக உள்ளன. இதோடு கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, முன்பேர வணிகம் ஆகியவையும் சேரும் பொழுது விலைவாசி உயர்வின் வேகம் அதிகரிக்கத்தானே செய்யும்? இன்னொரு புறம் உணவு, உரம் , எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியங்களை அரசு தொடர்ந்து வெட்டுகிறது. இக்கொள்கைகள் விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணமாக உள்ளன.
அரசின் வரவு-செலவு கொள்கை  
பா ஜ க அரசின் மூன்று பட்ஜெட்டுகளிலும் தாராளமய கொள்கைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை உயர்த்தி மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிப்பளுவை ஏற்றுவதும் பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகளை குறைப்பதும் வரிஏய்ப்போருக்கு வெகுமதி அளிப்பதும்தான் பா ஜ க அரசின் வரிக்கொள்கையாக இருந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு துறை, நிதித்துறை உள்ளிட்டு எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு மீதான வரம்புகளை நீக்குவதும் இறக்குமதி வரிகளை குறைப்பதும்தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.
சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு சீமான்கள் கையில் தலா டாலர் 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7,000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்துவரி வேண்டாம்; வாரிசு வரி வேண்டாம்; வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன.[1]வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அழைப்பு விடுத்துள்ளது.
மோடி அரசு பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது. வளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில்தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது.
சில படிப்பினைகள்
தாராளமய கொள்கைகள் பெரும் துயரங்களை மக்கள் வாழ்வில் அரங்கேற்றியுள்ளன. கடந்த பதினெட்டு  ஆண்டுகளில் 3லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு இவைதான் பிரதான காரணம். தாராளமய காலத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்துள்ளது. உருவாக்கப்பட்ட பணியிடங்களும் முறைசாரா, குறை கூலி தன்மையுடையவை. தொழில் வளர்ச்சியும் சுமார்தான். ஆலை உற்பத்தி சில ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள், தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதெல்லாம் உண்மை. இவை, நாம் ஏன் தாராளமய கொள்கைகளை முன்பின் முரணின்றி, சமரசமின்றி, எதிர்க்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
ஆனால், இதன் பொருள் இந்திய அரசின் வர்க்கத்தன்மை மாறிவிட்டது என்பது அல்ல. இந்திய அரசு பன்னாட்டு நிதி மூலதனத்தையும் அதன் உள்நாட்டுக் கூட்டாளிகளையும்தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் தவறானது. 198௦களின் இறுதியிலும் அதனை தொடர்ந்தும் சோசலிச முகாம் பலவீனமடைந்தது. 1990களில் அமெரிக்க ஆதிக்கத்தில் ஒருதுருவ உலகு அமைந்தது. நம் நாட்டில் இந்துத்வா சக்திகள் தலைதூக்கின. அதனையொட்டி இந்திய அரசியலில் ஒரு வலது நகர்வு ஏற்பட்டது. தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து இந்திய அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. நமது நாட்டில் வர்க்க பலாபலத்தை மாற்றுவதற்கான போராட்டம் இந்த மாற்றங்களை ஸ்தூலமாக ஆய்வு செய்து கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் “நிகழும் அனைத்தும் உலக நிதி மூலதன ஆதிக்கத்தால் மட்டுமே” என்று கருதுவது இந்தப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவாது. கட்சி திட்டம், இந்திய அரசு அதிகாரம்  நிலப்பிரபுக்கள் – முதலாளிகள் வர்க்கக்கூட்டின் கையில் உள்ளது என்றும், இந்த கூட்டிற்கு பெருமுதலாளிகள் தலைமை தாங்குகின்றனர் என்றும், இப்பெரு முதலாளிகள் காலப்போக்கில் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் இணைந்து செயல்படுகின்றனர் என்றும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் அனுபவமும் இதுதான். அதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் கட்டமைப்பிலும், பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிராமப்புற மாற்றங்களையும் நாம் ஸ்தூலமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நிலப்ரபுக்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்கின்றனர் என்பதை மறக்கலாகாது. பலதுருவ திசையில் உலகம் பயணிக்கிறது என்பதையும் இந்திய பெருமுதலாளிகள் உள்ளிட்ட இந்திய முதலாளி வர்க்கம் முழுமையாக ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளி இன்னும் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால், ஸ்தூலமான நிலமைகளை ஸ்தூலமாகஆய்வு செய்தே நமது இயக்கம் சரியான முடிவுகளுக்கு வர முடியும். தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள வர்க்க உறவு மாற்றங்கள் குறித்த இத்தகைய ஆய்வை கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. சில பூர்வாங்க முடிவுகளுக்கு கல்கத்தா ப்ளீனம் வந்தது. பணி தொடர்கிறது.
[1]தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணெய் வாங்கும் பொழுதும், எந்த ஒருபொருளையோ, சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக