திங்கள், 31 அக்டோபர், 2016

பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை

பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை

தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும், மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை அவர்களை மார்க்சிஸ்ட் மாத இதழ் சார்பாக என். குணசேகரன் , மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் பத்ரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கனகராஜ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
அந்த உரையாடலின் சுருக்கம் :
மார்க்சிஸ்ட் : கடந்த சட்ட மன்ற  தேர்தலில்  இரண்டு திராவிட  கட்சிகளும் எழுபது  சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால் திராவிட  கருத்தியல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக பலர்  எழுதி   வருகின்றனர். இது  சரியான கருத்தா?
எஸ்.வி.ஆர்: இப்படி  எழுதி வருவதே தவறானது.   கருத்தியல்  என்ற சொல்லுக்கு பதிலாக நான் கருத்து நிலை என்ற  சொல்லை பயன்படுத்துகின்றேன். கருத்தியல் என்பது ஒரு கருத்தைப் பற்றிய  ஆய்வு.  எனவே ideology  என்ற  வார்த்தையை கருத்து  நிலை என்ற  சொற்றொடர்  கொண்டே நாம் பயன்படுத்த வேண்டும்.
திமுக, அதிமுக  ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திராவிட இயக்க கருத்து நிலைக்கும் தற்போது என்ன தொடர்பு?    இவர்களின் நிகழ்ச்சி  நிரலே வேறு. கவர்ச்சி திட்டங்கள், நவதாராளமய கொள்கைகளுக்கான  ஆதரவு, அந்நிய மூலதன ஆதரவு (இதில் நீயா? நானா?  எனற போட்டி கூட இவர்களுக்குள் உண்டு) ஆகியவைதான் இவர்களது இன்றைய  செயல்பாடு.
இந்த நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தை,  பன்னாட்டு  மூலதனத்தை வளர்ப்பதுதான், இந்த இரண்டு கட்சிகளின் கருத்து நிலை. தற்போதைய நிலையில் திராவிட கருத்து நிலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு கிடையாது.  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் சேர்ந்து 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றால், அது அந்த கட்சிகளுடைய வெற்றியே தவிர, திராவிட கருத்து நிலைக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.
மார்க்சிஸ்ட்:  இரண்டு கட்சிகளின் வெற்றி காரணமாக தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான சாத்தியப்பாடு  குறைந்துள்ளதாகவும்  பேசப்படுகிறது
எஸ்.வி.ஆர்: நாளைக்கே சோசலிசம் வந்து அதனுடைய கனிகளை சுவைக்க வேண்டும்  என்று  எந்த கம்யூனிஸ்டும் போராடுவது இல்லை. எப்போதும் எதிர்காலத்தை நினைத்தே  போராடுகின்றனர்;  கனவு காண்கின்றனர்; மரணத்தை   கூட எதிர்கொள்கின்றனர். எனவே  ஒரு தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கான ஆதரவு மக்களிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
எந்த கொள்கையும் இல்லாதவர்களை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் நமக்கு தேவையற்ற சுமையாகி விடுவார்கள்.  ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச  எதிர்ப்பு கொண்ட குறைந்த பட்ச செயல்திட்டம் அவசியம். இத்தகைய குறைந்த பட்ச செயல்திட்டத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றவர்களைக் கொண்டுதான் அணி அமைக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் இருக்கின்ற  நன்மதிப்பை குறைப்பதாக நமது அணி அமைந்து விட கூடாது. அவ்வாறானவர்களை தவிர்த்து விட வேண்டும்.
மார்க்சிஸ்ட்: சாதியத்தை எதிர்கொள்வது பற்றி……
எஸ். வி. ஆர். : இந்தியாவிலுள்ள தேர்தல் முறையும் சாதி அமைப்பும் பின்னி பிணைந்துள்ளது. தேர்தல் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, அளிக்க சாதி வலுப்பட்டே வருகிறது.1967-ல் திமுக வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் எதிர்ப்பு  அலை இருந்தது. 1965-லிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தாக்கம் இருந்தது, பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது.  ரேசன் முறையில்தான் எல்லா உணவுப் பொருட்களும்   கிடைத்தன.   அரிசியும் புழுத்த அரிசியாக இருந்தது. எனவே  காங்கிரஸ் எதிர்ப்பு அலை, இந்தி  எதிர்ப்பு போராட்ட தாக்கம், தமிழ் தேசிய  உணர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் திமுகவிற்கே  உரிய கவர்ச்சிகரமான அரசியல் என இவையெல்லாம் சேர்ந்து திமுக வெற்றி பெற காரணிகளாக அமைந்தன.
1971-ல் 5 ஆண்டு முடிவதற்கு முன்பே  சட்டசபையை கலைத்து விட்டு கருணாநிதி  தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது; பெரும் வெற்றி  பெற்றது. அதுவரைக்கும் கொள்கை சார்ந்து தேர்தலை சந்திக்கும் போக்கு இருந்தது.  அதற்கு பிறகு,  சாதி முன்னுக்கு  வந்தது.   சாதி சார்ந்து  வாக்கு வங்கியை வளர்த்த  பெருமை  அதிமுகவிற்கு உண்டு. குறிப்பாக முக்குலத்தவர் வாக்கு வங்கி  உருவானது.
தென் மாவட்டங்களில்  முக்குலத்தவர்,  மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர்   என சாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வன்னியர்களை   பொறுத்த வரை   அவர்கள் எல்லா கட்சிகளிலும்  இருந்தனர்.  காங்கிரஸ், திமுக.   அதிமுக , பாமக என இந்த அனைத்து  கட்சிகளுக்கும், வன்னியர் மக்களிடம்   அடித்தளம் இருக்கிறது.  நாடார்கள்  திமுக, அதிமுக,  இரண்டிலும்  சரிபாதி  இருந்தனர். ஆதிக்க சாதியினரை குறி வைத்து இயங்குவது என்பதுதான்  திராவிட கட்சிகளின் கருத்து நிலை.
சாதி எதிர்ப்பு   போராட்டமும், பாசிச  எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று  இணைந்தது. எப்படி இங்கு  ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு  ஏன் இங்கு பரவலாக இல்லை? அம்பேத்கர் அடிக்கடி  சொல்வார்.  “இந்திய மக்களிடம் ஒரு சகோதரத்துவ உணர்வே இல்லை” என்று. எல்லா   சாதியை சார்ந்த   மக்களும் உலக மயமாக்கலால்  பாதிக்கப்படுகின்றனர்.  கல்வி, மருத்துவம்,  போக்குவரத்து இவை தனியார் மயப்படுத்தப்பட்டு  உள்ளதால், உயர் நடுத்தர வர்க்க மக்களைத் தவிர அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால்  நமக்கு ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை?
எல்லோரையும் விட  மிக மோசமாக பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். தனியார் மயம்  தலைதூக்கி  உள்ளதால் கடந்த 15 வருடங்களாக இட  ஒதுக்கீடும்  அவர்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசுத் துறையிலும், மாநில அரசுத் துறையிலும் தலித் மக்களுக்கான பழைய பின்னடைவு இடங்கள் கூட பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.  இப்படி   கடுமையாக பாதிக்கப்பட்டும், அவர்களிடம் ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை? அவர்களை ஏன் வர்க்கமாக நம்மால் திரட்ட  இயலவில்லை? கிராமப்புறம் மட்டுமல்ல;  எங்கு சென்றாலும், நமது ஒவ்வொரு நாள்  நடவடிக்கையையும் சாதி பாதிக்கிறது. உதாரணமாக, துப்புரவு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என  ஒரு அப்பள  உறையின் மீது போட்டு  விற்பனை செய்தால், விற்பனை ஆகுமா? வாங்குவார்களா?
வர்க்கப் போராட்டம் என்பது என்ன? ஒடுக்கப்பட்ட  சாதியினரையும் உள்ளடக்கியது  தானே வர்க்கப் போராட்டம்? தலித் மக்கள், இந்தியாவில் அடித்தட்டு வர்க்கமாக இருப்பவர்கள்;  அன்றிலிருந்து இன்று வரை விவசாய கூலிகளாக, முறைசாரா தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
1952, 57, 62  தேர்தல்களில்  வேட்பாளர் தேர்வில் சாதி பெரிய  பங்கினை   ஆற்றவில்லை.  1952 தேர்தலில் கவுண்டர்கள் அதிகமிருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியில், எண்ணிக்கை அளவில் மிகச்சிறிய மக்கள்தொகை சாதியை  சேர்ந்த கே.டி ராஜு என்ற தோழரை கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் ஆக்கியது. அவர் வெற்றி பெற்றார்.  அப்போது கருத்துநிலை சார்ந்து மக்கள் முடிவு எடுத்தனர். ஆனால்,  இப்போது அப்படி இல்லை. அதுவும் இன்றைய தேர்தல்  முறையே  (தொகுதியில் அதிக வாக்கு வாங்குபவரே வெற்றி பெறுபவர் என்ற முறை) சாதியை வலுப்படுத்துவதாக உள்ளது. விகிதாச்சார  தேர்தல் முறை வேண்டும் என நாம் தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது.
மார்க்சிஸ்ட்:  விகிதாச்சார தேர்தல் முறையின் அவசியம்  குறித்த பல விபரங்களை திரட்டி ஆவணம் ஒன்றை தயார் செய்யும் வேலை நடந்து  வருகின்றது.
எஸ்.வி.ஆர்: அது நல்ல முயற்சி . நான் பலஆண்டுகளாக  அந்த முயற்சியில் உள்ளேன். இடதுசாரி கட்சி  தலைவர்கள் அனைவரிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
மார்க்சிஸ்ட்:  சாதி,  சாதிய அமைப்பு என்பது  முக்கிய  பிரச்சனை. மறுபுறம் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளும் தீவிரமடைந்து வருகின்றன.  வெகுஜன  அமைப்புகள் மூலம் இவையிரண்டையுமே எதிர்த்து போராடி  வருகின்றோம். இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டதையும் வர்க்கப் போராட்டத்தினையும் நடத்தி,மக்களைத் திரட்டுவது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட்: பெரியார் சாதிப்பிரச்சனையை எதிர்கொண்டது பற்றி….
எஸ்.வி.ஆர் : 1948-ல் திராவிடர் கழக மாநாடு தூத்துக்குடியில்   நடக்கிறது. ஒன்றரை லட்சம் பேர்  கூடியிருக்கிறார்கள்.  மாநாட்டிற்கு திராவிடர் கழக தொண்டர்கள் குடும்பத்தோடு வர வேண்டும் என பெரியார் அறைகூவல் விடுத்திருந்தார். அப்போது இருந்த சூழலில்  அவ்வளவு  பெரிய கூட்டத்தை திராவிடர் கழகத்தால்  எப்படி திரட்ட முடிந்தது? சடங்குகள்  அற்ற, ஆடம்பரமற்ற திருமணங்களை  நடத்திட கருத்து நிலை சார்ந்து  திராவிடர் கழகத்தினரை சம்மதிக்க வைக்க அவரால் முடிந்தது.
1967-ல் குன்னூரில் திராவிடர் கழக செயலாளர் இல்லத்திருமண விழா, சாதி மறுப்பு திருமணமாக நடைபெற்றது. அதில் பெரியார்  கலந்து கொண்டார். ஏராளமானோர்   அத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.  நானும் அத்திருமண  விழாவில் கலந்து கொண்டேன். அவ்விழாவில்  “எதற்கு இவ்வளவு  செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றீர்கள். இது சரியல்ல”  என மேடையிலேயே பெரியார் கடிந்து கொண்டார். அன்றாட வாழ்வில்,கொள்கையை பின்பற்றுகின்ற விதத்தில், திராவிடர் கழக  குடும்பங்களையே  அவர் மாற்றினார். மாநாடு பொது நிகழ்ச்சிகளுக்கு குடும்பமாக வரவேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்பத்தை  ஜனநாயகப்படுத்தும் விதமாக அவரது  இயக்கம் இருந்தது.
இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது  தோழர்கள் முன் மாதிரியாக  வாழ்க்கையில் இருக்க வேண்டும். நுட்பமாக, மறைமுகமாக சாதியை  திருமண பத்திரிக்கைகளில் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. அன்றாட வாழ்வில் சாதி உணர்வு நீடித்து வருகின்றது. இதை  நாம் உரிய அளவில் கணக்கில் கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் :  பெரியார், அம்பேத்கர் சாதி எதிர்ப்பு நிலை பற்றி…
எஸ்.வி.ஆர்.: பெரியார், சோவியத் ரஷ்யாவால் பெரிதும்  ஈர்க்கப்பட்டார்.  அவர் கம்யூனிஸ்ட் கருத்து நிலையை  முற்றிலும்   புரிந்து கொண்டவரோ அல்லது அதை   விளக்கக் கூடியவரோ அல்ல.  அவர் சமதர்மத்தை   புரிந்து கொண்டது  வர்ண தர்மத்திற்கு அது  எதிரானது  என்ற அர்த்தத்தில்.  வர்ணத்திற்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதி என்ற  வர்ண  தர்மத்திற்கு  எதிராக எல்லோருக்கும்  ஒரே நீதி என்று சமதர்மத்தை அவர் பார்க்கிறார். சமூக,  பண்பாட்டு, சமதர்மத்தின் நீட்சியாகத்தான், பொருளாதார சமதர்மத்தை  அவர் பார்க்கிறார்.
ஒரு கற்பனைவாத  சோசலிஸ்ட்  ஆகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார்.  அவர் விஞ்ஞானபூர்வ   சோசலிஸ்ட் ஆக இருந்ததே இல்லை.  எனவே,  இல்லாத  ஒன்றை சொல்லி, பின்னாளில்  அவர் கைவிட்டு  விட்டார் என்று  சொல்வது தவறு.
1929- லிருந்தே சோவியத் யூனியன் பற்றி அவர் எழுதி  வருகிறார். சோவியத்தை அவர் நேசித்ததற்கு காரணம் அங்கு சாதிய பேதம் இல்லை, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எடுக்கப்பட்டது, மூட நம்பிக்கைகள்  இல்லை என்பதாலேயே ஆகும். சோவியத் யூனியன் பற்றி தொடர்ந்து அவர்களது  பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர்.  போல்ஷ்விக்குகள் நீடித்து ஆள முடியுமா?  என்று அமெரிக்க மார்க்சிஸ்ட்டான  ஸ்காட்னியருக்கும், பெட்ரண்ட் ரஸலுக்கு நடந்து வந்த விவாதத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது கம்யூனிஸ்ட்  கட்சி எடுத்த நிலைபாடான பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே  பெரியாரும் எடுக்கிறார். ‘பாசிச எதிர்ப்பு  மாநாட்டை’ அவர் நடத்துகிறார்.  அப்போரின்  போது, சோவியத்  படைகள் ஒவ்வொரு நிலையிலும் பெற்ற வெற்றிகள் பற்றி குடியரசுவிலும், விடுதலையிலும் தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வந்தது.  தோழர்  ஸ்டாலின் இறந்த போது வெகு சிறப்பான அஞ்சலிக் கட்டுரையை  எழுதுகின்றார். சோவியத் யூனியனுக்கும்,  சீனாவிற்கும் கருத்து  வேறுபாடுகள்  ஏற்பட்ட போது, சோவியத்  பக்கம்தான்  அவர்கள் நின்றார்கள். சோவியத் யூனியன் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது.  ஆனால் அவருக்கு மாற்று பொருளாதார பாதை எல்லாம் இருக்கவில்லை.
ஜஸ்டிஸ் கட்சி, அதற்குப்பின் பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட  நீதிக்கட்சி, அதைத்தான் அவர் திராவிடக்கழகமாக மாற்றினார். இவற்றுக்கிடையே தன்மை சார்ந்த  வேறுபாடு இருக்கிறது. நீதிக்கட்சியில் பழைமைவாதிகளும்  இருந்தார்கள். அதே நேரத்தில் சாதி மறுப்பாளர்களும், பகுத்தறிவாளர்களும் அதில் இருந்தனர். நீதிக்கட்சி என்பது ஒரே தன்மையுடைய கட்சி  அல்ல.
1936-லேயே ஜஸ்டிஸ் கட்சி தேய்ந்து விட்டது. 1937, 38 ஆண்டுகளில் நடந்த நகராட்சி தேர்தல்களில்  அது ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை.  1937-ல் இந்திய அரசு சட்டப்படி  நடந்த மாகாண தேர்தலில் 15 பேர் வரைதான் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சி செல்வாக்கு இழந்து போனது. அந்த சமயத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறைவு  பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு தலைவர்களே இல்லாத சமயத்தில்தான் பெரியாரை தலைமை தாங்க அழைக்கின்றனர்.  1939-ல் பெரியாரும் அதை ஒத்துக்கொள்கின்றார்.
அதன் பிறகு நடந்த போராட்டங்களால் அவர் சிறைக்கு சென்று விடுகிறார். 1942- ல் சிறையிலிருந்து  வெளியே  வந்தபின் கட்சியின்  பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றுகிறார்.  நீதிக்கட்சிக்கு இருந்த பிராமண எதிர்ப்பு  அரசியல் பாரம்பரியத்தின் காரணமாக அந்த கட்சியை பெரியார் எடுத்துக் கொள்கிறார்.
தியாகராய செட்டியார், டி.எம். நாயர் போன்றவர்கள் காங்கிரஸ்  கட்சியிலிருந்து  ஜஸ்டிஸ் கட்சிக்கு  வந்தவர்கள். தேசியவாதிகள். உள்நாட்டு தொழில்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக  ஆங்கிலேயரிடம் சண்டை போட்டார்கள். இட ஒதுக்கீடு என்ற விஷயத்திற்காக  போராடினார்களே  தவிர, அவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியில் பகுத்தறிவு வாதிகளும்  இருந்தனர்.  இந்நிலையில்தான் அக்கட்சி உடைந்தது. பழைய  ஐஸ்டிஸ்  கட்சி  என்ற ஒன்று  அப்படியே இருந்து வந்தது. 1939-ல்  டாக்டர் அம்பேத்கர் சென்னை வருகின்றார். அவருக்கு பழைய  நீதிக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்  காலையில் பெரியாரை, டாக்டர் அம்பேத்கர் சந்தித்து  பேசுகிறார். மாலையில் வரவேற்பில்  பழைய நீதிக்கட்சியினரை அம்பேத்கர் விமர்சித்து பேசுகின்றார். “கல்வி, வேலை வாய்ப்பில்  இட ஒதுக்கீடு என்ற அளவிலேயே  உங்கள் செயல்பாடு உள்ளது. ஆனால் அடித்தட்டு  மக்களின் பிரச்சனைகளை நீங்கள்  எடுப்பது கிடையாது. நியாயமாக  பார்த்தால் நீங்கள் ஈ.வே  ராமசாமி அவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்” என்று அவர்கள் போட்ட கூட்டத்திலேயே  அவர்களை விமர்சனம் செய்து  பேசுகிறார்.
நீதிக்கட்சியிலிருந்த பகுத்தறிவு வாதிகளும்  சாதாரண  மக்களும்தான் பெரியாருடன்  வருகின்றனர்.  அவர்கள்  பொருளாதார விஷயங்களை கையில் எடுக்கவில்லை.   பொருளாதார திட்டம் எல்லாம் அவர்களுக்கு கிடையாதுதான். சாதி இருக்கின்ற வரை  எந்தவித அடிப்படை மாற்றமும் வராது என்று அவர்கள் கருதினர். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகியோரை பொறுத்தவரை அவர்கள் இந்திய சமூகத்தில் பொது உரிமையே இல்லை என்று கருதினர். பொதுவுடைமையா? பொது உரிமையா?  என்று வரும் போது, பொது உரிமையே  முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.
மார்க்சிஸ்ட் : பெரியாரின் பகுத்தறிவு வாதம் அன்று  மூட நம்பிக்கைகள்   மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒரு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை  ஏற்படுத்தியது.  எனினும் அவரது பெயரால் இயங்கும்  இயக்கங்களாலேயே  அது கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொன்று தமிழகத்தின் அதிகரித்து வரும் ஆன்மீகப் பிடிப்பு. இந்நிலையில்  இனி நாத்திகவாதம்  மற்றும் பகுத்தறிவு  வாதத்தின் எதிர்காலம் என்ன?
எஸ்.வி.ஆர் : 1928-29-களில் எவ்வளவு பிற்போக்காக மக்கள் இருந்திருப்பார்கள்? அப்போதே பெரியார் மக்களை திரட்டியிருக்கிறார்.  எனவே இப்போதும் நம்மால்  செய்ய முடியும். பகுத்தறிவு மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றிக்காக  செயல்படுவதற்கு பெரியார்  காலத்தை விட அதிக தேவை  தற்போது உள்ளது. நவீன  சாமியார்களுக்கு எதிரான போராட்டம்; சாதிக்கு எதிரான  போராட்டம்;  பகுத்தறிவு கருத்துக்கள்; விஞ்ஞான கருத்துக்களை பரப்புவதற்கான  போராட்டம் ஆகியவற்றை  நடத்தவேண்டி உள்ளது. நவீன தொழில் நுட்பங்களை உள் வாங்கிக் கொண்ட  இளைஞர்கள் கூட மூட நம்பிக்கையில்  மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு  கற்பிக்கப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது.
நாங்கள் படித்த காலத்தில், தேசம் விடுதலைப் பெற்ற நேரம். அப்போது கல்வியிலும் மக்கள் பொது புத்தியிலும் கூட மூட நம்பிக்கைகளுக்கு  எதிரான விஷயங்கள்   குறைந்த அளவுவாவது பதிந்திருந்தது. கம்யூனிசம் குறித்து பகுத்தறிவு  குறித்த ஆர்வம்  மக்களிடம் இருந்தது. இந்த தலைமுறையில் அது இல்லை. அமைப்பு ரீதியாக திட்டமிட்டே  இவை ஒழித்துக் கட்டப்பட்டன. திமுகவும், அதிமுகவும் எந்த மாதிரியன  பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்கள்?
அறிவியல் பாடங்களையும் சமூக அறிவியல்  பாடங்களையும்  பிரித்து விட்டார்கள்.  தொழில்நுட்ப பாடங்களையும் சமூக அறிவியலையும்  பிரித்து விட்டார்கள். ஒரு மருத்துவ மாணவனுக்கு, பொறியியல் மாணவனுக்கு, படிக்கிற மாணவனுக்கு சமூக அறிவியலும், மொழியியலும்  மிக முக்கியமானது.  ஆனால் அதை இவர்கள் திட்டமிட்டே   பிரித்தார்கள். அறிவுக் கூர்மையோடு மாணவர்களை  வளர்க்க வேண்டிய  நேரத்தில் பழங்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைத்தான் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் கற்பித்தார்கள். நவீனத்துவத்தை கல்வியில், வாழ்வில் கொண்டு வரவே  இல்லை.  முதலாளித்துவவாதிகள் நகரங்களில் சாலைகள் அமைப்பது, நவீன  தொழிற்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதைத் தான் நவீனம் என்று சொல்கிறார்கள். ஜனநாயகபூர்வமான கலாச்சாரம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதைத் தான் நாம் நவீனம் என்று குறிப்பிடுகின்றோம். திமுகவும், அதிமுகவும் அவர்கள் பாணியில் நவீனத்துவத்தை கொண்டு வந்ததாக  சொன்னாலும் அடிப்படையில் பழமைவாதிகளாகவே  உள்ளனர்.
இரண்டு  கட்சிகளின் ஆட்சி காலத்தில் அறிவியலை பரப்புவதற்கு என்று எளிய  அறிவியல் புத்தகங்களை நிறைய  கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் திமுக,  அதிமுக  செய்யவில்லை.  பிற்போக்குத் தனமான கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற  மகாராஷ்டிராவில் கூட  ஏராளமான  அறிவியல் பரப்பும் புத்தகங்கள்  வெளி வந்து கொண்டு இருக்கின்றன.  தபோல்கர் அங்குதானே இருந்தார். ஏன் நம்மால் பெரியார் பிறந்த மண்ணில் தபோல்கரை போல ஒருவரை  உருவாக்க முடியவில்லை? பெரியாருக்கும், திமுகவிற்கும் அடிப்படையிலேயே   வேறுபாடு உள்ளது.  பெரியார் மனிதனுடைய  “சுயமரியாதை” என்பதை முன்னுக்கு வைத்தார். திமுக,  தமிழருடைய மானம்,  கற்பு  என்பவற்றை  முன்னுக்கு வைத்தது. இரண்டுமே சம்பந்தமில்லாதவை. கற்பு என்கிற மதிப்பீட்டுக்கு எதிரானவர்  பெரியார்.  கற்பை தூக்கிப்பிடித்தவர்கள் திமுகவினர். பகுத்தறிவு அறிவியல்  கருத்துக்களை இன்றைய  இளைஞர்களிடம்  பரப்ப நாம் மிகப் பெரிய அளவில் செயல்பட வேண்டியுள்ளது. அறிவொளி இயக்கம் போன்று  இதற்கு ஒரு இயக்கத்தை நாம் விரிவான  அளவில் நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் : திராவிட  இயக்கங்களின் தேசியம் பற்றிய புரிதல்பற்றி….
எஸ்.வி.ஆர் : தமிழருக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது.  தமிழ் மொழிக்கென்று நீண்ட வரலாறு இருக்கிறது.   தமிழருக்கு என்று  பரந்த  நிலத்துடன் கூடிய  கலாச்சாரம்  இருக்கிறது.  இவற்றையெல்லாம்  தனது  அரசியலுக்கு திமுக பயன்படுத்திக் கொண்டது.
தமிழ்  உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என உணர்ந்து  வானமாமலை போன்றவர்கள்  பழந்தமிழ் இலக்கியங்களை,  அதன் வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய துவங்கினார்.  ஜீவா  கம்பராமாயணத்தில் சோசலிச கருத்துக்கள் இருக்கிறது என்று  சொல்லும் அந்த நிலைக்கு கூட போனார். ஆரம்பத்தில் திமுக வட மாநில முதலாளிகளின் மீதான எதிர்ப்பு அரசியலை  கையிலெடுத்தனர். அப்போது அதில் நியாயமும் இருந்தது.  இந்தியா  விடுதலை பெற்றபோது இருந்த முதல் நிலை  50 பெரு நிறுவனங்களில் ஒன்று மட்டும்  பிரிட்டிஷாருடையது.  மற்றவை  எல்லாம் வட மாநில  முதலாளிகளுடையது.   “வடக்கு  வாழ்கிறது.  தெற்கு  தேய்கிறது” என்ற அவர்கள் கோஷம் எழுப்பிய போது அதில் கொஞ்சம்  உண்மையுமிருந்தது.
திமுக. ஆட்சிக்கு  வந்த காலத்தில் மாநிலங்களின்  உரிமை,  மாநில சுயாட்சி  என்றெல்லாம்  பேசியது.  காங்கிரஸ்  அல்லாத  மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாடு  நடத்தக் கூட  முயற்சி செய்தார்கள். ஆனால் இப்போது அது  பற்றி பேசுவதில்லை. நாங்கள் தான் உண்மையான  கம்யூனிட்டுகள்  என்றெல்லாம் கூட பேசி வந்தனர்.  ஆனால்  ஆட்சிக்கு வந்தவுடன்  தமிழ்நாட்டில் முதலாளிகளுக்காக தொழில் அமைதி நிலவ வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும்  என பேச ஆரம்பித்தனர். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே  தொழிற்சங்கங்களை   கடுமையாக ஒடுக்க துவங்கினார். ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் போன்ற இடங்களில்  செயல்பட்ட தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகள் சந்தித்தன. சென்னையில்   வி.பி.  சிந்தன்  தலைமையில் செயல்பட்ட தொழிற்சங்கம் மீது ஏவி விடப்பட்ட அடக்கமுறைகளெல்லாம் நமக்கு தெரியும். எம்.ஜி.ஆர். காலத்திலும் இது தொடர்ந்தது.
காலனி ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு பொறுத்த வரையில் காங்கிரஸ்காரர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் கிடையாது.  அவாகள் வரலாறு நெடுக சமரச வாதிகளாகவே தான் இருந்துவந்து உள்ளனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட சேதம், கப்பற்படை  எழுச்சி, நேதாஜி  விவகாரம், இந்திய விமானப்படையிலேயே   ஏற்பட்ட கிளர்ச்சி  இதெல்லாம்தான் அவர்களுக்கு பெரிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ராணுவத்திலேயே   கலகம் பிறக்கும் சூழல் ஏற்பட்டதால், நம்பகமான கூட்டாளியிடம் பொறுப்பை  ஒப்படைப்பது என்ற அடிப்படையிலேயே விடுதலை கிடைத்தது.
இன்னும் பிரிட்டிஷ் மூலதனத்தின் தாக்கம் இருந்து  கொண்டுதானே இருக்கிறது.  காமன்வெல்த்திலிருந்து வெளியேறி விட்டார்களா?  ஒரு நாட்டு ஏகாதிபத்திய  மூலதனத்திற்கு பதிலாக இன்று பல நாட்டு ஏகாதிபத்திய மூலதனம் வருகின்றது.
மார்க்சிஸ்ட் :          பெரியார் ஆகஸ்ட் 15  நூலின்  முன்னுரையில்,அம்பேத்கர்பெரியார்சிங்காரவேலர்  ஆகியோரின் மரபுகளை ஆக்கபூர்வமான  காலத்துக்கு  ஏற்ற ஒரு கூட்டிணைவாக (synthesis)   ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென தாங்கள் குறிப்பிட்டது வரவேற்கக்கூடிய  ஒன்றுதான். ஆனால்,  இதற்கு  ஸ்தூலமான வடிவம் கொடுப்பது எப்படி?  திராவிட  கட்சிகள் பிரதேச முதலாளித்துவ  வர்க்க குணாம்சம்  கொண்டவை  என்பது கம்யூனிஸ்ட்களின்  நிலை. இது போன்ற  பல முரண்பாடுகள் உள்ள நிலையில்  கூட்டிணைவு  சாத்தியமாகுமா?
எஸ்.வி.ஆர் : சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் கூட்டிணைவு எனும் போது அவர்களின் சிந்தனைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் பேசியது   போன்ற  நடைமுறை  திட்டத்தை  இன்று வகுத்தளிக்க முடியாது. ஆனால்  அவர்களை  அடையாளமாக  எடுத்துக்கொள்ள முடியும்.
அத்பேத்கரும்,  பெரியாரும் சாதி எதிர்ப்பாளர்கள். அவர்களுடைய   கூற்றுப்படி இந்தியாவில் சாதி உணர்வை நிர்மூலம் ஆக்காமல் வர்க்க உணர்வை  உருவாக்க முடியாது.
அம்பேத்கரை  பொறுத்தவரை அவருக்கு  கம்யூனிசம் மீது நாட்டமும் இருந்தது. விமர்சனமும் இருந்தது. “அயல்நாட்டவருக்கு ஒரு விண்ணப்பம்” என்ற  பெரிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார். இந்தியாவின் கருத்து என்று உங்களுக்கு சொல்லப்படுபவை  முழுவதும்   இங்குள்ள  காங்கிரஸ்  தேசிய வாதிகளின்  கருத்தே. இந்திய மக்கள் என்பதில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர்.  அவர்களின்  உணர்வுகளை  இங்கு யாருமே பேசுவதில்லை.  எனவே, எங்களுடைய குரல்களையும் கவனியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் ‘1871 கம்யூன்’ பற்றி குறிப்பிடுகின்றார்.  அடித்தட்டு மக்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிய அவர்களுக்கு உரிய உரிமைகள்  கிடைக்காது  என்பதை  திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். “காந்தியும், காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது  என்ன?”  என்ற நூலில் கூட  அமெரிக்க  மார்க்சிஸ்ட் ஆன எட்பர்க் ஹார்ட்டேகரின் மேற்கோள்களை நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றார். அவருக்கு  சோசலிச உணர்வு இருந்து  வந்து உள்ளது.
சிங்காரவேலர் இறுதிவரை சாதி எதிர்ப்பு, சோசலிசம் ஆகிய இரண்டையும் இணைத்தே  கொண்டு  போகின்றார்.  பல நேரங்களில்   காங்கிரஸ்    ஏகாதிபத்தியத்துடன் சமரசம்  செய்து கொண்டது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சக்தியாகிரகம் நடைபெறுகின்ற சமயத்தில் பெரியார் அதை இரண்டு ஜமீன்தார்களுக்கு  இடையே நடைபெறும் மோதல் என எழுதுகிறார். காங்கிரஸையும், பிரிட்டிஷாரரையும் அப்படி குறிப்பிடுகின்றார். பகத்சிங்கை  தூக்கிலிட்ட  சமயத்தில்  பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை மேற்கொள்காட்டி,  ‘வன்முறையை நாங்கள்  ஆதரிக்கவில்லை; ஆனாலும் பகத்சிங் போன்ற நேர்மையாளர்களை மிகவும் மதிக்கின்றோம்’ என்று சொல்லும் பெரியார்  மாகாணத்திற்கு நான்கு இளைஞர்களை  இது போன்று தூக்கிலிடுங்கள்  என்று கோபத்துடன் எழுதுகிறார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை  குறிப்பிடும் போது பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கம் சார்பாக இர்வினும், இந்திய முதலாளிகள் சங்கம் (Indian Chamber of commerce) சார்பாக  காந்தியும் கையெழுத்து இடுகின்றனர் என்று சொல்கிறார்.
காங்கிரஸில்  இருந்த தலைவர்களும்  சாஸ்திரங்களை, சாதிய  அமைப்பு  முறையை  நியாயப்படுத்துபவர்களாகவே இருந்தனர்.   மதன் மோகன் மாளவியா என்ற  காங்கிரஸ் தலைவர் பிராமணர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள்  சொல்வதால்,  வெளிநாட்டு  செல்லும் போது பரிகாரத்திற்காக   களிமண்ணை எடுத்துச் சென்றார். ‘குத்தூசி குருசாமி’  அவரை “மண்ணுருண்டை  மாளவியா” என்றுதான் குறிப்பிடுவார். அவர்தான் பின்னாட்களில்  இந்துத்துவா சக்திகள் வளர காரணமாக இருந்தார்.
மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் முறையினை  ஒழிப்பதற்காக ஏழு வருஷம் மகர்  சத்தியாக்கிரகத்தை அம்பேத்கர் நடத்துகின்றார். ஏழு வருஷம் தொடர் வேலை நிறுத்தம். யாருமே   நடத்தாதது.  “இந்திய தொழிலாளர் கட்சி” மூலமாக அது நடத்தப்பட்டது.  அம்பேத்கர் அடிமூலத்திலிருந்து வரும் மாற்றங்களை சீர்திருத்தம் என்றுதான் சொல்கிறார்.  வன்முறை  மூலம் நடைபெறும் செயல்களை குறிக்கவே  புரட்சி என்ற சொல்லை கையாளுகின்றார்.     கிராம்ஷி  “கண்ணுக்கு புலனாகாத மாற்றங்கள் என்று குறிப்பிடுவார்” நாம் அரசு கட்டமைப்பை   தகர்க்கின்றோம்.   மாற்றம்  நிகழ்வது நமக்கு தெரிகிறது. அதனால் அதை புரட்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆனால்           காலம் காலமாக  இருப்பவற்றை மாற்றி அமைப்பதை எப்படி குறிப்பிடுவது? திராவிட இயக்கங்களை   விமர்சிக்கின்றோம். இன்றைக்கு நான்கு வெவ்வேறு சாதிகளை  சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற  சூழலே  உள்ளதே.  முன்பு  அப்படி பேச முடியாது.  இரண்டு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் கூட நண்பர்களாக  பழக முடியாது.  நல்ல உடைகள் கூட இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் உடுத்த முடியாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளதற்கு திராவிட  இயக்கமும் ஒரு காரணம்.  அதற்காக, திமுக, அதிமுக-வை திராவிட இயக்கங்கள் என்று குறிப்பிட முடியுமா?
மார்க்சிஸ்ட்: ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து…
எஸ். வி. ஆர்: ஏகாதிபத்தியம்  என்பது இன்று நேரிடையாக இல்லை. கண்ணுக்கு  புலனாக விதத்தில் ஏகாதிபத்திய முறைகள் நிலவுகின்றது. அமெரிக்கா தான் இன்று முக்கிய  ஏகாதிபத்திய நாடு,  அதற்கு  சில ஐரோப்பிய நாடுகள் துணை  போகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலனி நாடுகள் என்று எதுவும் கிடையாது, அதனால் காலனி  எதிர்ப்பு போராட்டங்கள் கிடையாது.  நேரடியாக   ஒரு நாட்டை  ஆக்கிரமிப்பது என்பது இன்று கிடையாது.  ஆனால் மறைமுகமான சுரண்டல் என்பது நிலவுகிறது.  ஏகாதிபத்தியம் என்பது மக்கள் கண்ணுக்கு புலனாகாமலேயே  தனது  சுரண்டல் பணியை செய்து வருகின்றது.  இந்நிலையில் அமெரிக்க  ஏகாதிபத்தியம் பற்றியும்,  அதன் அடாவடித்தனமான சுரண்டல் பற்றியும்  மக்கள் மத்தியில் எப்படி கொண்டு  செல்வது?  ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்ற  ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா,  லிபியா  போன்ற நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் நேட்டோ படைகள்   பற்றியும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றியும் தெரியும்.
ஆனால் நமது நாட்டில் நேரிடையாக  ஏகாதிபத்தியம் பற்றி தெரியாது.  மறைமுகமாக அனைத்திலும் ஏகாதிபத்திய சுரண்டல் உண்டு.   நாம் அணியக்கூடிய  உடை,  உண்ணக் கூடிய உணவு   எல்லாவற்றையும்  யார் தீர்மானிக்கிறார்கள்?
லெனின் அவர்கள் எழுதிய “ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” என்ற நூலில் முதலாளித்துவ காலத்திற்கு முந்தைய  ஏகாதிபத்தியங்கள் பற்றி பேசுகிறார்.  ரோமப் பேரரசு பற்றியும்  அந்த கால கட்ட  பேரரசுகள் பற்றியும்  பேசுகிறார்.  அப்போதைய  ஏகாதிபத்தியங்கள்  தன்மை அடிப்படையில் வேறுபட்டவை. அதற்குப் பிறகு, தொழிற்சாலைகள்  உருவானபின், மூலதனம்  வளர்ந்தபின்  உருவான காலகட்டத்தில்  சந்தையை பங்கிட்டுக் கொள்வதில் ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு போர்கள்  நடந்தன. ஆனால், இப்போது ஏகாதிபத்தியங்கள்  ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலைதான் நிலவுகின்றது.  அவர்களுக்குள் ஏற்படும்  முரண்பாடுகளால் போர்கள்  நடைபெறும்  நிலை இல்லை.  மாறாக,  அவர்களுக்கு வெளியே உள்ள  நாடுகள் மீதுதான் போர் தொடுக்கிறார்கள்.   சிரியா,  ஈராக்,  அதையடுத்து   ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ  படைகளை  நிறுத்தியுள்ளார்கள்.  யூகோஸ்லோவியாவை   உடைத்தனர்.   தங்களுக்கு அடிமையாக  இருக்க  விரும்பாத நாடுகளை  ஒன்று சேர்ந்து  தாக்குகின்றனர்.
மார்க்சிஸ்ட்: பாசிசம் என்று மரபு ரீதியாக ஒரு வரைவிலக்கணம் சொல்லி வருகிறோம்.  இப்போது இருக்கும்  சூழலை  பாசிசம் என்று சொல்வது சரியானதா
எஸ்.வி.ஆர் : அளவுக்கு மிறிய  சர்வாதிகாரத்தை பாசிச  அடக்குமுறை  என்று சொல்லுகிறோம்.  அறிவியல்  ரீதியாக  அது சரியல்ல. நிதி மூலதனத்தின் கை ஓங்கி உள்ள இடத்தில்தான் பாசிசம் வரும் என்ற வரைவிலக்கணத்தை அப்படியே  இங்கு பொருத்திப் பார்க்க முடியாது.   போர்ச்சுக்ல்லில்  ஷைலாசர் ஆட்சியில்  பாசிசம் இருந்தது. அங்கு, அப்போது நிதி மூலதன குவிப்பு இல்லை. இத்தாலியில்  பாசிசம்  இருந்தது.  ஹிட்லருடன் இருந்ததால்  சில இடங்களில் மட்டும் யூதர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது.  ஆனால் ஜெர்மனியில் இருந்ததைப் போல அழித்தொழிப்பு  முகாம்கள் போன்ற கொடும் அடக்குமுறைகள் அங்கு இருக்கவில்லை. பாசிசத்தை வரையறுப்பது ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்பது அல்ல. இங்கு ஜனநாயகத்தை முற்றிலும் மறுக்கக்கூடிய, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யக்கூடிய, ஒற்றை அடையாளத்தை திணிக்கக்கூடியதாக உள்ளது.
மார்க்சிஸ்ட் : இந்துத்துவா கருத்து நிலை சார்ந்து வேகவேகமாக மக்கள்  திரட்டல்  நடந்து  வரும்  நிலையில் இந்த அபாயத்தை எதிர் கொள்ள திராவிட கருத்து நிலையின் பல கூறுகள்  பயன்படக்கூடும். பொதுவாக…இடது சாரிகள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி…
எஸ்.வி.ஆர் :  இன்றைக்கு ஆட்சியிலுள்ள பாஜக  சாதியை நிலை நிறுத்த விரும்புகிறது. சாதி வேண்டும் என்பதுதான் அவர்களுடைய  கொள்கை.   கையிலுள்ள ஐந்து விரல்களை போல சாதி அமைப்பு உள்ளது. பிரிந்திருந்தாலும் அவை ஒன்றாகவே  இயங்குகின்றன.  இது கடவுளால் அருளப்பட்டது என்று  ஆர்.எஸ்.எஸ்.  சொல்லுகிறது. ஆனால்  அவர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டை விரலுக்குரிய   இடத்தை கொடுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் ஒத்துக்கொள்வார்களா? சாதி என்ற பிரிவினை இருப்பதால்தான் பாசிச சக்திகள் செயல்பட  முடிகிறது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்  கட்சிகளின்  துவக்க காலத்திலும் அதற்கு பிறகும் போர்க்குணமிக்க போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம்.  நவீன  தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக உள்ளது.  போராடும் இயக்கங்களை ஆயுதம் கொண்டு  ஒடுக்க எளிதில்   முடிகிறது.  ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட  அரபு புரட்சி,  வால் ஸ்டீரிட் முற்றுகை போன்றவற்றை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போக முடியவில்லை.  தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு எளிதில்  ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக  போராடுபவர்களை  அடையாளம் காணவும், பின் தொடரவும் முடியும்.  மாவோயிஸ்டுகள்  ஒருபுறம் ஆயுதப் போராட்டங்களை  நடத்தி வந்தாலும் இன்றைய சூழலில் அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெகு மக்களை திரட்டுவதுதான்  நமக்குள்ள ஒரே வழி.  அதை வலிமையாக நாம் செய்ய வேண்டும்.
இன்றைய சூழலில் சூழலியல் பிரச்சனைகளையும் நாம் கையிலெடுக்க வேண்டும். பல பிரச்சனைகளில் ஒன்றாக இவற்றைப் பார்க்கக் கூடாது. ஏகாதிபத்திய இலாப வெறியால்  உலகில் உள்ள மனிதர்கள் வாழும் ஒரே கிரகமான புவிக்கோளம் ஆபத்தை  எதிர் நோக்கி உள்ளது.  மனித குலத்தை பாதுகாக்க,  மற்ற எல்லோரையும் விட நமக்கு அதிக பொறுப்பு உள்ளது.  சோவியத் யூனியன்  கால கட்டத்தில்  போல்ஷ்விக் கட்சி சூழலியல் விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தியது. வனப்பகுதிகளை பாதுகாக்க  சிறப்பு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தப்பட்டன.  புகாரின்  அவர்களின்  எழுத்துக்களில் சூழலியல்  விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டது.  பிரஷ்னொவ்  காலத்தில் கூட  சூழலியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  தேவை உள்ளது.
இன்றைய மகாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.  உலக நாடுகள் பலவற்றிலும் குடிநீர்  பிரச்சனை உள்ளது. இஸ்ரேல் சிரியாவுடனான போருக்கு பிறகு திருப்பித்தரப்பட்ட பகுதிகளில் கோலான் குன்றுகள் இல்லை.  அதை அவர்களே வைத்துக் கொண்டனர். ஏனென்றால்  அவர்களின் நீர்  ஆதாரம் அங்குதான் உள்ளது. அதைப் பாதுகாத்து தங்களிடமே  வைத்துக் கொள்ள வேண்டும்என்று நினைக்கின்றனர்.
இனி அடுத்து நாடுகளிடையேயான சண்டை, பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீருக்காக  நடக்கக் கூட வாய்ப்புள்ளது. புவி அவ்வளவு மாசுப்பட்டுள்ளது. எனவே சூழலியல்  பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும்.   அணு மின்சாரம்  உண்மையிலேயே மிகப் பெரிய  செலவு பிடிக்கக்கூடியது. அனல், புனல் மின் திட்டங்களை விட  பல மடங்கு  செலவு பிடிக்க கூடியது.
நியூட்ரினோ திட்டத்தை பொறுத்தவரையில் அது அவசியமான ஆராய்ச்சி ஆகும். அத்திட்டத்திற்கு எதிரான  வாதங்களை நாம் அறிவியல் ரீதியாக முறியடிக்க வேண்டும்.  அறிவியலை  மிக உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு போக நியூட்ரினோ திட்டம் மிகவும் அவசியம் ஆகும்.
மின் உற்பத்தித்திட்டங்களில் இன்று மரபு சாரா திட்டங்கள்  முன்னுக்கு வந்து விட்டன. பல நாடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் பிரபலமாகி வருகின்றன. உலக நாடுகளில் பெருகும்  குப்பைகளை  சமாளிப்பது இன்றைக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. நாம் இவற்றுக்கெல்லாம் மாற்று முறைகளை முன் வைக்க வேண்டும்.
நம்மாழ்வார் இயற்கை விவசாயம் என்ற மாற்றை முன் வைத்தார். நிலச்சீர்திருத்தம்  குறித்து அவர்  எதுவுமே பேசவில்லை. இருப்பினும் ஒரு மாற்றை முன் வைத்து  நிலைப்படுத்தினார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு நிலம் சார்ந்த  உறவுகள் பற்றிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவு நிலங்களை  உடைமையாக வைத்து இருப்பவர்கள் இன்று இல்லை. அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கோவில் நில உடைமைகளில்கூட  மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அது சார்ந்த  ஸ்தூலமான ஆய்வுகள் நமக்கு தேவை. இல்லையென்றால் நாம் பழைய  விவரங்களை  வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம்.
இன்னும் தமிழகத்தில் உள்ள சில மார்க்சிய அறிவு ஜீவிகள் பழந்தமிழ்  இலக்கியங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு இன்றைய தேவை, இன்றுள்ள சூழல் குறித்து விரிவான ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின்  இன்றைய செயல்பாடு, நிதி மூலதனத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுகள் தேவை. தமிழகத்திலுள்ள இடதுசாரி அறிவு ஜீவிகள்   எல்லோரும் ஒன்றிணைந்து இத்தகை  ஆய்வுகளை செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இன்றைய  காலத்தின்   தேவையும் கூட. பழமை வாதம் பற்றி  பேசுவது  எரிச்சலையே உண்டு பண்ணுகிறது.  அதனால்தான் நான் தேசிய  வாதிகள்  பற்றி பேசுவது கிடையாது.  நாம் சர்வ தேசிய வாதிகள். நமக்கு சர்வ தேசிய உணர்வுதான் இருக்க வேண்டும்.  குத்துச்சண்டை  வீரர் முகம்மது அலி இறந்தால்,  நமது சொந்தக்காரர் இறந்ததைப் போல நமக்கு  உணர்வு வர வேண்டும்.  மக்கள்  மத்தியில் சர்வ தேசிய உணர்வினை வளர்க்க நாம் பாடுபட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக