(கேள்வி பதில் பகுதியில் சுறுக்கமான பதில்கள் இடம்பெறுகின்றன. விரிவான விவாதம் மேற்கொள்ள விரும்பும் தோழர்கள், துணைக் கேள்விகள் அல்லது கருத்துக்களை பின்னூட்டமாக (கமெண்ட்) இடலாம் – ஆசிரியர் குழு)
சாதிக்கான அழுத்தமான உணர்வு பரவியுள்ள இந்தியச் சமூகத்தில் , குறிப்பாக அதிகார மட்டத்தில் மேலடுக்குச் சாதி உணர்வு மேலோங்கியிருப்பதை சில கட்சிகள் சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்டுகிறார்கள். இடதுசாரிகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர். தலித்துகளுக்கு எதிரான போக்குகளை ஆதரிக்கின்றனர்…
சமீபத்தில், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு நிறுவனங்களில் பின்பற்றப்படவில்லை என்கிற தகவல் வந்துள்ளது. இந்த நிலைமைக்கு எதிராகவும் அதேநேரம் தொழிலாளி வர்க்க ஒற்றுமை உணர்வோடும் அணுகவேண்டியுள்ளது.
இந்தியச் சமூகச் மேலடுக்குச் சாதி உணர்வு அழுத்தமாக உள்ள நிலையில், சில கட்சிகள் சாதிய அடையாளத்தோடு அணுகி பிற்படுத்தப்பட்ட மக்களை இடதுசாரிகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர். இந்நிலையில் இடதுசாரிகள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?
-சுந்தா
“சாதிக்கான அழுத்தமான உணர்வு பரவியுள்ள இந்தியச் சமூகத்தில்” – என்று கேள்வி துவங்குகிறது.முதலில் அதற்கான விளக்கத்திலிருந்து துவங்கலாம். சாதிக்கான அழுத்தமான உணர்வு தற்போது பரவியுள்ளது என்பது உண்மையே. பிற்பட்ட சாதியினரிடம் இந்தப் போக்குகள் நாடு முழுவதுமே வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரண்டு தரப்பினர் வேறு வேறு காரணங்களுக்காக சாதிக்கான உணர்வை வளர்த்து சாதிரீதியான பிணைப்புக்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்கள் ஏற்படுத்துகிற சூழலில் சாதியை நாடுகின்றனர். இன்று வேலை, கல்வி வாய்ப்புக்கள் சார்ந்த நெருக்கடிகள் தீவிரமாகும் நிலையில், தங்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக சாதிய ஒருங்கிணைப்பு ரீதியான பிணைப்புக்களை நாடுகின்றனர். இந்தத் தரப்பினரை இடதுசாரி இயக்கம் கனிவோடு அணுக வேண்டும்.
இவர்களை சாதியப் பிணைப்பில் நிலைநிறுத்த மேலிருந்து தூண்டுகிற சக்திகளை தனியாகப் பார்க்க வேண்டும். அதாவது வன்னியர் சாதி சார்ந்த திரட்டலில் இணையும் சாதாரண உழைக்கும் பிரிவு சார்ந்த வன்னியரையும், அரசியல் ஆதாயத்திற்கு சாதீயத் திரட்டல் மேற்கொள்ளும் தலைமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாள அரசியலுக்கு பயன்படுத்துகிற அனைத்து சுயநல சக்திகளுக்கு எதிராகவும் இடதுசாரிகள் போராட வேண்டும்’ என்று கோஷமிட்டால் மட்டும் போதாது. பொருத்தமான கள அணுகுமுறை தேவை.
முதலில் குறிப்பிட்ட சாதி உணர்வுக்கு ஆட்பட்டு சாதிய திரட்டலுக்கு ஆளாகும் தரப்பினரிடம் இரண்டு தளத்தில் இடதுசாரிகள் உரையாட வேண்டும். தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சாதி கருத்து நிலையோ, அல்லது சாதியத் திரட்டலோ உதவிடாது என்பதை உணர்த்த வேண்டும். இன்னொரு தளம், சாதி சார்ந்த மேல் அடுக்கிலிருந்து தலித் மக்களைப் பார்க்கிற ஆதிக்கக மனோநிலையிலிருந்து அவர்கள் விடுபட உரையாட வேண்டும். கருத்து உரையாடல் மட்டுமல்லாது ஒன்றுபட்ட செயல்பாட்டுக்கான களங்களும் உருவாக்க வேண்டும்.
இதுவே, சுயநல ஆதாயத்திற்காக அடையாள அரசியல் நடத்தி சாதியத் திரட்டலை மேற்கொள்ளும் தலைமையை அவர்களிடமிருந்து அப்புறப்படுத்தும். அடையாள அரசியல்வாதிகள் செயல்படுகிற, அனைத்துப் பிற்பட்ட சாதியினரிடமும் இந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பல மத்திய அரசுநிறுவனங்களில் நிரப்பப்படவில்லை என்பதற்கான பல விவரங்கள் வெளியாகியுள்ளன. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்டாத இடங்களில் பிற்பட்டோர் நியமனத்திற்கான போராட்டத்தையும் நடத்துவது அவசியம். ஏற்கனவே,
இடதுசாரிகள், இடதுசாரி தொழிற்சங்கங்கள், வாலிபர் அமைப்புகள், தலித் மற்றும் பிற்பட்டோருக்கான நிரப்படாத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த (backlog) பிரச்சினைகளை எடுத்துப் போராடி வந்துள்ளன. நிச்சயமாக இடதுசாரிகள் இப்பிரச்சினைகளில் துறைவாரியான துல்லியமான தலையிடுவது அவசியம்.
இடதுசாரிகள், இடதுசாரி தொழிற்சங்கங்கள், வாலிபர் அமைப்புகள், தலித் மற்றும் பிற்பட்டோருக்கான நிரப்படாத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த (backlog) பிரச்சினைகளை எடுத்துப் போராடி வந்துள்ளன. நிச்சயமாக இடதுசாரிகள் இப்பிரச்சினைகளில் துறைவாரியான துல்லியமான தலையிடுவது அவசியம்.
இட ஒதுக்கீடு பற்றிய கோரிக்கைகள் சமீப காலமாக தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் அப்பிரச்னைகள் முன்வைக்கப்படுவதும், அவற்றையொட்டிய போராட்டங்கள், சாதிசார்ந்த திரட்டல்கள் என நடந்து வருகின்றன. இதையொட்டி சாதி அடையாளங்கள் மீண்டும் புத்துயிர் பெற்ற நிலை உருவாகி, தேர்தல் அரசியலுக்கான கருவியாகவும் அவை பயன்படுத்தப்பட்டன.
குஜராத்தில் படேல் சமுகத்தினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி கிளர்ச்சி நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், 1980-களில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்லாது, இட ஒதுக்கீடு முறையே கூடாது என்ற கோரிக்கைகளை எழுப்பி கிளர்ச்சி நடந்தது. படேல் சமுகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதனை முன்னின்று நடத்தினர்.
பா.ஜ.கவும், சங் பரிவாரமும் மாநிலத்தில் காலூன்றுவதற்கான வாய்ப்பாகப் படேல்களின் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டன. நீண்ட காலம் பாஜக ஆட்சி குஜராத்தில் நடைபெற இது தூண்டுகோலாக அமைந்தது. தற்போது அதே படேல் சமூகத்தினர், தங்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆக இந்த இட ஒதுக்கீடு கிடைத்தால் பிற்பட்ட சமூகத்தினர் முன்னேற முடியும் என்று ஆசை காட்டி அடையாள அரசியல் நடத்த அனைத்து முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளும் முயற்சிக்கின்றனர். ஆளுகிற சுரண்டல் வர்க்கங்களுக்கு இது சாதகமானதாக அமைகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்து வலுவான ஒற்றுமை வளர விடாமல் தடுக்க இது உதவிடும்.
இடதுசாரிகளும் மார்க்சிஸ்ட் கட்சியும் இவற்றை எதிர்கொள்ள தலித் பிற்பட்டோர் உரிமைகளுக்கான போராட்டம், சமுக ஒடுக்குமுறை எதிர்த்த போராட்டம் ஆகியவற்றை நடத்துவதோடு, இவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் பறிக்கின்ற நவீன தாராளமயத்தை எதிர்த்தும் வர்க்க ரீதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுதான் தலித், பிற்பட்ட உழைக்கும் மக்களின் உண்மையான முன்னேற்றத்தை சாதிக்கும்.
இதைத்தான் தோழர் சீத்தாராம் யெச்சூரி இடதுசாரி இயக்கம் இரண்டு கால்களில் ஏக காலத்தில் நடைபோடுகிறது என்று வர்ணித்தார். இதுதான் பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அடையாள அரசியல் நடத்துவோரும், மறுபுறம் முதலாளித்துவ அரசியலை நிகழ்த்துவோரும் இடதுசாரிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்க்கின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அடையாள அரசியல் நடத்தும் பலர் நவீன தாராளமய கொள்கைகளையும் அதன் பண்பாட்டு கருத்தாக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறவர்கள். அதேபோன்று முதலாளித்துவ அரசியல் நிகழ்த்தும் பலர் அடையாள அரசியல் வளருவதை ஆதரிப்பவர்கள். இந்த சிக்கலான எண்ணப்போக்குகளும் இடதுசாரிகள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
இதே பணியில்தான் உயர்ந்த அறிவு ஜீவியாக கருதப்படுகிற எழுத்தாளர் அருந்ததி ராய் இடதுசாரிகள் சாதி, வர்க்கம் ஒன்றாகப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமுக ஒடுக்குமுறை என்ற நிகழ்ச்சிநிரலில் மட்டும் நின்று, முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக நடத்தும் வர்க்கப் போராட்டத்தை கைவிட வேண்டுமா? அல்லது சமூக ஒடுக்குமுறைப் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டு பொருளாதார பகுதி கோரிக்கைகளோடு நின்று விடுவதா?
இந்த இரண்டும் தவறானது.
தலித் பிற்பட்ட உழைக்கும் மக்களுக்கான உண்மையான விடுதலைக்கு சமூக உற்பத்தியில் கட்டுப்பாடு அவசியம். இன்று தலித் மக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 17 அல்லது 18 சதம் உள்ள தலித் குடும்பங்கள் சமுக சொத்தில் 5 சதத்திற்கும் குறைவான உடைமை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். தனிப்பட்ட தலித் நிறைவான சம்பளம் பெறுவதோ அல்லது ஒரு தலித் முதலாளி ஆகிவிட்டார் என்பதல்ல பிரச்னை. சமூக சொத்து, சமூக உற்பத்தி ஆகியவற்றில் யாருடைய அதிகார மேலாண்மை இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச்னை. இந்த அதிகார மேலாதிக்கத்தில் மாற்றம் கொண்டு வருவதுதான் முக்கிய அடிப்படைப் பிரச்னை.
இதற்கு, சோசலிச சமுதாயம் அமைத்திடும் குறிக்கோளுடன் சமூகத்தின் அனைத்து சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் திரட்டல் அவசியமானது. இதில் ஊசலாட்டம் இருப்பது, ஒரே நேரத்தில் தலித், பிற்பட்ட உழைக்கும் மக்களுக்கும் சோசலிச இலட்சியத்திற்கும் துரோகம் இழைப்பதில் முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக