வியாழன், 20 டிசம்பர், 2012

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பிரிவு 14ன் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வலியுருத்தி பொதுநலவழக்கு..அ.நாராயணன் ,பாடம் இதழ் ஆசிரியர் .

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பிரிவு 14ன் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வலியுருத்தி பொதுநலவழக்கு

தோழர்களே...

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பிரிவு 14ன் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கiப்பட வேண்டும் என்று திங்களன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தேன்.. இவ்வழக்கு, நேற்று, 13-12-2012 அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச், அரசின் தலைமை வழக்கறிஞருக்கு ஆணையிட்டது. இன்றைக்கு உள்ள நிலையில், இவ்வழக்கு மிக முக்கியமானது என்பது என் நம்பிக்கை.

வழக்கின் முக்கிய சாராம்சம் இதுதான்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989ன் பிரிவு 14ன் கீழ், மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் முடிந்த நிலையில், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே, சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகை, 19% ஆக உள்ளது. தலித்து மக்கள், தமிழகம் முழுவதும் வசித்துவருகிறார்கள். அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் வடக்கு, வடமேற்கு, மேற்கு மாவட்டங்களில் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆனால், அங்கெல்லாம் சிறப்பு நீதிமன்றங்களோ, சிறப்பு காவல் நிலையங்களோ அமைக்கப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம், 1ம் தேதி, சமூக அக்கறை கொண்ட 21 பிரமுகர்கள் இணைந்து, தமிழக முதல்வரின் பரிசீலனைக்காக, பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகள் அடங்கிய மனு ஒன்றினை, முதல்வர் அலுவலகத்தில் அளித்தோம். அம்மனுவில், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989ன் பிரிவு 14ன் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமைப்பாதுகாப்புச்சட்டத்தின் 15A பிரிவானது, தீண்டாமையை ஒழிக்கும்விதமாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவும்விதமாகவும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது மாநில அரசின் கடமை என்கிறது..
பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்திற்கான தேசிய ஆணையம் (NCSCST), ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் தனது ஆண்டறிக்கைகளில், மேற்கூறிய இச்சட்டங்களின்படி பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றங்கள் மாநில அரசுகளால் அமைக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யப்படாததினால், நீதி தாமதப்படுவதோடு, வழக்குகள் நலிவடையச் செய்யப்படுகின்றன என்று பதிவு செய்து வந்துள்ளது, ஆனால் பல மாநில அரசுகள், ஆணையத்தின் பரிந்துரையை மதிப்பதில்லை.

50 மாவட்டங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில், 43 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் 40 மாவட்டங்களிலும், ராஜஸ்தானின், 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்களிலும், குஜராத்தின் 26 மாவட்டங்களில் 19 மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக ஆந்திராவின் எல்லா மாவட்டங்களிலும்(23) வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்திலோ, 4 மாவட்டங்களில் மட்டுமே, சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.

மேலும், கடந்த ஆண்டு, தமிழக அரசு, மத்திய சமூக நீதித்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள், வன்கொடுமைக்கு ஆளாகக்கூடிய பகுதிகள் என்று அடையாளம் கண்டு, அறிக்கை அளித்துள்ளது. ஆகையால், தமிழக அரசு வன்கொடுமைக்கு உள்ளாகக்கூடிய இந்த 28 மாவட்டங்களிலும்,எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989ன் பிரிவு 14ன் கீழ் உடனடியாக சிறப்பு நீதிமன்றங்களை நிறுவி, வேண்டிய நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், உதவியாளர்கள் ஆகிய மனிதவளங்களை அமர்த்தி, வன்கொடுமைக்கு ஆளாகும் தலித் மக்களுக்கு நீதியும், நஷ்ட ஈடும், மறுவாழ்வும் தாமதப்படாமல் கிடைக்க ஆவனசெய்ய வேண்டும், இங்கெல்லாம், சிறப்பு காவல் நிலையங்களும் அமைக்கவேண்டும், இவ்வாறு நீதிமன்றம் ஆணையிடவேண்டும். இதுதான், வழக்கின் சாராம்சம்.

விசாரணையின்போது, அரசு தலைமை வழக்கறிஞர் இருந்தார். நமது வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி, தமிழகத்தில் இப்பொழுது உள்ள சிறப்பு நீதிமன்றங்கள், புதிதாக அமைக்கவேண்டிய சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவை பற்றி ஒரு விரிவான அறிக்கை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

எனவே தோழர்களே, சாதிய வன்கொடுமைகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களைக் காக்க அவசியமான இந்த முக்கிய கோரிக்கை தொடர்பாக பொதுக்கருத்து உருவாக்கவும், அரசை வலியுருத்தவும் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக, பலர் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிடுவதும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். விருப்பம் இருப்பவர்கள், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்

நன்றி

http://www.facebook.com/narayanan.ananth

அ.நாராயணன் (9840393581)
சமூக ஆர்வலர்
பாடம் இதழ் ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக