வெள்ளி, 14 டிசம்பர், 2012

டாக்டர் அம்பேத்கர் நூல்கள்.( தொகுதி 1 - 37 )

டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நூல்கள்

முதல் வரை
ambedkar_250_copyஇந்தியாவில் இந்து சமுதாயத்தில் உள்ள ஒடுக்குமுறையைச் செயல்பாட்டளவிலும் கருத்து நிலையிலுமாக எதிர்த்துப் போராடியவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.  ஒரு நற்சிந்தனையாளரின் செயல் பாடுகள் வரலாற்றில் பதிவுபெற்று அடுத்தடுத்த  தலைமுறைகள் வழியே பயணம் செய்கிற வேளையில் அவை வரலாற்றுத் தொடர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதைப் போலக் கருத்துநிலைப் பதிவுகளும் இலக்கிய உருப்பெற்று, வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறு வதில்லை.  எனவே, டாக்டர் அம்பேத்கர் தம் வாழ்நாளில் ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல் எப்படி முனைந்து கற்றாரோ, அதே போன்று, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்காக சோர் வின்றி உரையாற்றினார்; எழுதினார்.  அவருடைய ஆங்கில உரைகளை யும் எழுத்துக்களையும் தொகுத்து 40 நூல்களாக வெளியிட்டது டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன்.  அவற்றுள் 37 நூல்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.  தமிழில் வெளிவந்த அளவுக்கு இத்தனை நூல்கள் வேறு எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுப்பின் தமிழாக்கத்துக்கான நிர்வாகப் பதிப்பாசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.பெருமாள் அவர்களின் தலைமையில் ஐ.இசக்கி, ஜி.ஆளவந்தார், கல்பனாதாசன், ரங்கசாமி (மாஜினி), ஆர்.பார்த்தசாரதி, ஆர்.எஸ்.நாராயணன், என்.ராமகிருஷ்ணன், பசுமைக்குமார், வி.இராதா கிருஷ்ணன், எஸ்.குகராஜ், பா.மா.அன்புமணி, கே.நீலகண்டன், ஏ.எஸ்.மணி, டாக்டர் எஸ்.செல்வ நாதன், வி.வி.சந்திரசேகரன், அ.இளங்கோவன், என்.ராஜாராம், ஆர்.கணேசன், இரா.சு.முத்து, பரஞ்சோதி, தியாகு, டி.எஸ்.இரவீந்திரதாஸ், நா.ஜெய ராமன், கே.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல் தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்ப்போம்.
வீரரும் வீர வழிபாடும்
முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர்.  பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார்.  அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார்.
நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார்.
மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த் ரானடேவின் 101-ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை காந்தி, ஜின்னா ஆகியோருடன் ஒப்பிட்டு அம்பேத்கர் ஆற்றிய நீண்ட உரையாகும்.
தொகுதி - 1
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.105/-
கூட்டாட்சியா, சுதந்திரமா?
இரண்டாவது தொகுதியில் 1. அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தம் பற்றியவை, 2. பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து என்று இரண்டு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
பகுதி ஒன்றில் முதல் கட்டுரை : வாக்குரிமை பற்றி சவுத்பரோ குழுவின் முன் அளித்த சாட்சியம்.  எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அந்த நீண்ட அறிக்கையில் வாக்குரிமை, வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் பற்றிப் புள்ளிவிவரங்களுடன் பேசுகிறார் அம்பேத்கர்.  அடுத்து, கூட்டாட்சியா, சுதந்திரமா?, சமூகத் தடையும் அதைத் தீர்க்கும் வழியும், மாநிலங்களும் சிறுபான்மையினரும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பகுதி இரண்டில் இந்தியாவில் சிறு நிலவுடைமைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.  அத்துடன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய “சமுதாய சீரமைப்புக் கோட்பாடுகள்” என்னும் நூலுக்கு அம்பேத்கர் எழுதிய மதிப்புரை ‘திரு.ரஸ்ஸலும் சமுதாய மறுசீரமைப்பும்’ என்ற பெயரில் வைக்கப் பட்டுள்ளது.  இது நல்ல பகுப்பாய்வுக் கட்டுரை.
தொகுதி - 2
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
சமூகப் பாதுகாப்பு
மூன்றாவது தொகுதி முழுவதுமாக பம்பாய்ச் சட்டமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் 1920களிலும், 1930களிலும் ஆற்றிய உரைகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது.  வரவு - செலவுத் திட்டம், பம்பாய்ப் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, ஆரம்பக் கல்விச் சட்டத் திருத்த மசோதா, பாரம்பரியப் பணிகள் சட்டத் திருத்தம், கோத்தி முறையை ஒழிப்பதற்கான மசோதா, கிராமப் பஞ்சாயத்து மசோதா, குறுநில விவசாயிகளுக்கான நிவாரணச் சட்ட மசோதா, காவல்துறைச் சட்டம், மதுவிலக்கு, மகப்பேற்று நலம், கசையடித் தண்டனை, இளம் குற்றவாளிகள் நன்னடத்தை மசோதா, அமைச்சர்கள் சம்பள மசோதா, நீதித்துறையின் சுதந்திரம், தொழில் தகராறுகள் மசோதா, கலவரங்கள் சம்பந்தமான விசாரணைக் குழுவின் அறிக்கை, யுத்தத்தில் பங்கு பெறுவது உள்ளிட்டவற்றின் மீது டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய சட்டமன்ற உரைகளை வாசகர்களுக்கு வழங்குகிறது - இந்த மூன்றாவது தொகுதி.
தொகுதி - 3
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
அதிகாரமும் உறவும்
நான்காவது தொகுதி ‘டாக்டர் அம்பேத்கர் சைமன் குழுவுடன்’ என்ற தலைப்பையுடையது.  இதில் பம்பாய் மாநிலச் சட்டமன்ற அமைப்பு பற்றி அறிக்கையில் மாநிலத்தின் வட்டார அமைப்பில் மாற்றம், மாநில நிர்வாகச் சபை, ஆளுநரின் நிலையும் அதிகாரமும், சட்ட சபையின் அதிகாரங்கள், மாநில அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான உறவு, மாநில அரசாங்கத்துக்கும் மன்னருக்கும் உள்ள உறவு, அரசுப் பணித்துறைகளின் மறுசீரமைப்பு, பம்பாய் மாநிலத்தில் தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் கல்விநிலை உள்ளிட்ட தலைப்பு களில் அம்பேத்கரின் கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன.
தொகுதி - 4
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
வட்ட மேசை மாநாடுகளில்...
ஐந்தாவது தொகுதி வட்ட மேசை மாநாடு களில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு.  இவற்றுள் பொருளாதாரம், நிர்வாகம், குடியுரிமை ஆகிய குறித்து தாராளமாக அம்பேத்கர் பேசியிருந்தாலும் சிறுபான்மையினருக்காக அவர் வாதிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி - 5
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
பொதுவுடைமைக்கான முற்படுதேவைகள்
ஆறாவது தொகுதி இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவில் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளைப் பற்றியும் பேசும் விரிவான நூல்.  ‘அடுத்து, இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படுதேவைகளும்’ என்ற தலைப்பில் இந்து சமூக அமைப்பின் இன்றியமையாக் கோட்பாடுகள்,  இந்து சமூக அமைப்பின் தனித்தன்மைகள், இந்து, மதத்தின் அடையாளங்கள் என்ற துணைத் தலைப்பு களில் எழுதப்பட்ட கட்டுரைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொகுதி - 6
விலை : ரூ.30/-  நூலகப் பதிப்பு : ரூ.80/-
பௌத்தத்தின் வீழ்ச்சி!
ஏழாவது தொகுதியில் மறைவிலிருந்து வெளிப் பட்ட பண்டைய இந்தியா, பண்டைய அமைப்பு முறை ஆரிய சமூகத்தின் நிலை, மதிப்பிழந்துபோன புரோகிதத் தொழில், சீர்திருத்தக்காரர்களும் அவர் களுக்கு நேர்ந்த கதியும், பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும், பிராமணீய இலக்கியம், பிராமணீயத்தின் வெற்றி : மன்னன் கொலை அல்லது எதிர்ப் புரட்சியின் தோற்றம், குடும்ப ஒழுக்கநெறிகள், பகவத்கீதை பற்றிய கட்டுரைகள், விராட பருவம், பிராமணர்கள் - க்ஷத்திரியர்கள் போராட்டம், சூத்திரர்களும் எதிர்ப்புரட்சியும், மகளிரும் எதிர்ப்புரட்சியும், புத்தரா, கார்ல் மார்க்ஸா? ஒப்பீட்டுக் கட்டுரை ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி - 7
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.80/-
மனுவின் வெறித்தனம்!
எட்டாவது தொகுதியில் மதம் என்ற பகுதியும், சமூகம் என்ற பகுதியும், இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு, வேதங்களின் தோற்றம், பிராமணீய விளக்கம், உபநிடதங்கள், வேதங்கள் குறித்த புதிர், வேதாந்தம் பற்றிய புதிர், நான்கு வருணங்கள், நான்கு ஆசிரமங்கள், மனுவின் வெறித்தனம் அல்லது சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமண விளக்கம் உள்ளிட்ட கட்டுரைகளைக் கொண்டவை.  அரசியல் என்ற பகுதியில் மன் வந்தரக் கோட்பாடு, பிரம்மத்தால் என்ன பயன், கலியுகம் குறித்த புதிர் ஆகிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.
பிராமணிய இறையியல் என்று அழைக்கப் படக்கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக் கைகள், பிராமணர்கள் தங்கள் தந்திரங்களால் சாதாரண இந்து மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்திருக்கின்றனர், கடவுளர்களை வணங்குவதில் அவர்கள் ஏன் முரண்பட்டனர் போன்ற விவரங்களை அம்பேத்கர் இந்நூலில் தாராளமாக எழுதியுள்ளார்.
தொகுதி - 8
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
தீண்டாமையின் பரிணாமங்கள்
ஒன்பதாவது தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ள 14 கட்டுரைகளும் தீண்டாமையின் பல்வேறு பரிணாமங்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பேசுகின்றன.
தொகுதி - 9
விலை : ரூ.25/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
தீண்டத்தகாதவர்களின் எழுச்சி!
பத்தாவது தொகுதி 16 கட்டுரைகளைக் கொண்டது.  இவற்றுள் தீண்டாமை, தீண்டத் தகாதவர்களின் எழுச்சி, சாதியும் மதமாற்றமும், காந்தியின் மீதான விமர்சனம் உள்ளிட்ட கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை.
தொகுதி - 10
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
சூத்திரர் என்பவர் யார்?
தொகுப்பின் பதின்மூன்றாவது நூல் சூத்திரர் களைப் பற்றிப் பேசுகிறது.  சூத்திரர்கள் என்பவர் யார், அவர்கள் எவ்வாறு இந்தோ ஆரிய சமுதாயத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள் என்பதே நூலின் சாராம்சம்.  சூத்திரர்களைப்பற்றிய புதிர், சூத்திரர்களின் நிலை பற்றி பிராமணியக் கொள்கை, சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள், பிராமணர் களுக்கு எதிராக சூத்திரர்கள், ஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள், வருணங்களின் எண்ணிக்கை மூன்றா, நான்கா? உள்ளிட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
தொகுதி - 13
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
பாகிஸ்தானின் தேசியவாதம்
பதினைந்தாவது நூல் பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்னும் தலைப்பைக் கொண்டது.  இந்த நூலில் பாகிஸ்தானின் அரசியல், சமூக வரலாற்றைப்பற்றி மட்டுமின்றி, இந்திய வரலாற்றைப் பற்றியும், இந்திய அரசியலைப் பற்றியும் பலதரப்பட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன.
துருக்கி, செக்கோஸ்லோவாகியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வரலாற்றுக் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் தேசியவாதத்தை ஆதரித்துப் பேசுகிறார் அம்பேத்கர்.  அதற்கு அவர் வைக்கும் வாதங்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை.
தொகுதி - 15
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
காங்கிரசும், காந்தியும்
‘தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?’ என்ற தலைப்பி லானது பதினாறாவது தொகுதி.  அம்பேத்கர், காந்தி இருவருமே தீண்டாமையை எதிர்த்தவர்கள் என்றாலும், காந்தி இவ்விடயத்தில் உடன்பாட்டுப் போக்கில் பயணித்த மிதவாதி.  அம்பேத்கரோ முற்றிலும் காந்திக்கு மாறாகத் தீண்டாமையை ஒழிக்கப் போராடியவர்.  இந்த நூலில், காங்கிரசையும் காந்தியையும் அம்பேத்கர் கடுமையாக விமர்சித்து எழுதிய 11 இயல்கள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி - 16
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
காங்கிரசின் பிற்போக்குக் கொள்கை
பதினேழாவது நூல் முழுவதும் இந்துக்கள், காந்தி மீதான விமர்சனம்தான்.  இந்தியச் சாதிக் கொடுமைகளைப் பிறநாட்டு அடிமைத் தனங் களுடன் ஒப்பிட்டுப் பேசும் அம்பேத்கர், காங்கிரஸ் கட்சி தன்னலம் கலந்த பிற்போக்குக் கொள்கையுடன் அமெரிக்காவில் நட்புறவு கொண்ட நிலையில், அமெரிக்கர்களை நோக்கிப் பல கேள்விகளை எழுப்புகிறார்.  தீண்டப்படாதோரின் அரசியல் கோரிக்கைகள், கூட்டுத் தொகுதிகளும், தனித் தொகுதிகளும், ஆட்சித்துறை, அரசுப் பணித் துறைகள் உள்ளிட்ட அம்பேத்கரின் பல விவாதங் களையும் இந்நூலில் காணலாம்.
தொகுதி - 17
விலை : ரூ.25/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
யுத்தத்தை நோக்கி இந்தியத் தொழிலாளர்கள்!
68 இயல்களைக் கொண்ட நூல் இத் தொகுப்பின் பதினெட்டாவது நூல்.  1940களில் தொழிலாளர் நலனுக்காகப் பன்முக நிலைப் பாட்டுடன் அம்பேத்கர் மத்திய சட்டமன்றத்தில் நிகழ்த்தியவையே இந்நூலின் பெரும்பாலான இயல்கள்.  அகில இந்திய வானொலியின் பம்பாய் நிலையத்திலிருந்து அம்பேத்கர் ஆற்றிய உரை ஒன்று ‘யுத்தத்தில் வெற்றிபெற இந்தியத் தொழிலாளர்கள் ஏன் உறுதிபூண்டுள்ளனர்’ என்ற தலைப்பு இந் நூலில் வைக்கப்பட்டுள்ளது.  அதில் ‘நாஜிசத்தை எதிர்த்துப் போராட இந்தியர்கள் முன்வருவதற்கு என்ன காரணம்?’ என்று வினா எழுப்பி, தருக்க அடிப் படையில் பல தகவல்களைக் கொடுத்துள்ளார் அம்பேத்கர்.
தொகுதி - 18
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.125/-
அரசின் கடமைகள்
ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு ஆட்சியதிகாரத்தை மாற்றியளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கிய காலத்தில் சுதந்திர இந்திய அரசியலமைப்பில் ஷெட்யூல்டு வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எடுத்துரைத்து ஆங்கில அரசுக்கு அம்பேத்கர் எழுதிய கடிதங்களும், பதில்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.  ஷெட்யூல்டு இனமக்களின் குறைகள், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகியன குறித்த அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டது, பத்தொன்பதாவது தொகுதி.
தொகுதி - 19
விலை : ரூ.25/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
தொழிலாளர் நலத்துறையில்...
டாக்டர் அம்பேத்கர் 1942-இல் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக நியமனம் பெற்று, தொழிலாளர் நலத்துறையின் பொறுப்பேற்றுப் பேசிய உரைகளும் விவாதங்களின் போது அவர் பலருடைய வினாக்களுக்கு அளித்த விடைகளும் இருபதாம் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி - 20
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.115/-
சமூக ஜனநாயகமே அடிப்படை!
1940களில் தொழிலாளர் நலம் குறித்து அம்பேத்கர் மத்திய சட்டமன்ற விவாதங்களில் எடுத்துரைத்த தகவல்களின் தொகுப்பே இருபத் தொன்றாவது நூல்.  பொருளாதார ஜனநாயகமும், அரசியல் ஜனநாயகமும் உயிரோட்டமுள்ளவையாக விளங்கவேண்டுமானால், சமூக ஜனநாயகம் அவற்றின் ஓர் அங்கமாக இருக்கவேண்டுமென்ற அம்பேத்கரின் வலியுறுத்தலை இந்நூலில் காணலாம்.
தொகுதி - 21
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.105/-
வரலாற்றுத் தகவல்கள்
பண்டைக்கால இந்திய வாணிகம், வரலாற்றின் இடைநிலைக் காலத்தில் இந்தியாவின் வாணிக உறவுகள், மன்னர் பிரான் அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருந்த தருணத்தில் இந்தியா, தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும், இங்கிலாந்தின் அரசியல் சாசனம் குறித்த விரிவுரைகள், தலைமை அதிகார உரிமையும் இந்திய சமஸ்தானங்களின் சுதந்திரக் கோரிக்கையும் ஆகிய தலைப்பிலான இயல்களைக் கொண்டது இருபத்து மூன்றாவது தொகுதி.  நூலின் முற்பகுதி இயல்களை வரலாற்றுத் தகவல்களுடன் மிகவும் சுவைபட எழுதியுள்ளார் அம்பேத்கர்.  பிற்பகுதி இயல்கள் காத்திரமானவை.
தொகுதி - 23
விலை : ரூ.25/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
சட்டக் களஞ்சியம்
சட்டங்களைப் பற்றிய அம்பேத்கரின் சிந்தனைக் களஞ்சியமே இருபத்து நான்காவது தொகுதி.  பொதுச் சட்டநெறி, டொமினியன் அந்தஸ்து, குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம், பொறுப்புரிமைச் சட்டம், இந்தியக் காலவரையறைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், சொத்துரிமை மாற்றச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய தலைப்புகளில் அம்பேத்கர் எழுதியுள்ள இந்நூலின் இயல்கள் சட்டத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே உதவக்கூடியவை; எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன.
தொகுதி - 24
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.125/-
மனுவும் சூத்திரர்களும்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினை வலைகள், பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்ற நடைமுறையைப் பற்றிய குறிப்புகள், இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள், மனுவும் சூத்திரர்களும், சமூக அமைப்பைப் பாதுகாத்தல், இந்துக்களின் ஏமாற்றம், அரசியலில் அடக்குமுறைப் பிரச்சினை, எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? எனப் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கதம்பக் கட்டுரைகளின் தொகுப்பே இருபத்தைந்தாவது நூல்.
தொகுதி - 25
விலை : ரூ.25/-  நூலகப் பதிப்பு : ரூ.85/-
எதிர்த்தரப்பினரின் பாராட்டு!
இந்திய அரசமைப்பின் முன்வரைவு குறித்து அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற கருத்தாழம் மிக்க விவாதங்களும், அந்த முன்வரைவுக்குச் சமர்ப் பிக்கப்பட்ட திருத்தங்களும் இருபத்தாறாவது தொகுதியில் இடம்பெற்றுள்ளன.  அம்பேத்கரின் இந்த ஆணித்தரமான வாதங்கள் எதிர்த்தரப்பினராலும் கூடப் பாராட்டப் பெற்றன.
தொகுதி - 26
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.115/-
விவேகமான விவாதங்கள்
1948, 1949-களில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் காரசாரமான விவாதங்கள் இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது ஆகிய தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.  அவரது விவாதங்கள் விதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதி - 27
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.105/-
தொகுதி - 28
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
தொகுதி - 29
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.100/-
தொகுதி - 30
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.115/-
 பதவி விலகல்
இந்து சட்டத் தொகுப்பு மசோதா (பொறுக்குக் குழுவுக்குச் சமர்ப்பித்தபடி), அம்பேத்கரின் வரைவு, இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவும் பொறுக்குக் குழு ஏற்படுத்திய மாற்றங்களுடன் அப்போதிருந்த இந்துச் சட்டத் தொகுப்பும், பொறுக்குக் குழுவி லிருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்குப் பின்னர் இந்துச்சட்டத் தொகுப்பு மசோதாவின் மீது நடை பெற்ற விவாதம் ஆகியன இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில் தொகுதி - 31, தொகுதி - 32 ஆகிய நூல்களாக வடிவம் பெற்றுள்ளன.  தொகுதி - 32-இல் அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து தாம் பதவி விலகுவதற்கான காரணங்களை விளக்கி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது.
தொகுதி - 31
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.105/-
தொகுதி - 32
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
 நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் விவாதங்கள்
இந்தியாவின் பல்வேறு விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய விவாதங்கள் ஆயிரத்து நானூறு பக்கங்களுக்கு மேலாகத் தொகுக்கப் பெற்று, தொகுதி - 33, தொகுதி - 34 என இரண்டு நூல்களாக வெளி வந்துள்ளன.
தொகுதி - 33
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
தொகுதி - 34
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.125/-
 கருத்துநிலையும் களப்பணியும்
1923இல் பம்பாய் சட்டமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு, 1926-இல் ஒரு சிறு மாற்றத்துடன் அங்கீகரிக்கப்பட்ட எஸ்.கே.போலேவின் தீர்மானத்துக்கு இணங்க சௌதார் குளத்தைத் தீண்டத்தகாத மக்களுக்குத் திறந்துவிட மஹத் நகர சபை தீர்மானித்தது.  எனினும், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை.  அதனை எதிர்த்து 1927-இல் மார்ச் மாதத்தில் நடைபெற்ற புரட்சிகரமான மாநாட்டுச் செய்திதான் 35-ஆவது நூலின் முதல் இயலாக இடம்பெற்றுள்ளது.  டாக்டர் அம்பேத்கரின் கருத்தியல் பங்களிப்பையும், நேரடிக் கள நடவடிக் கையையும் இந்த இயலில் காணலாம்.  அத்துடன், காந்தியுடன் அம்பேத்கர் உரையாடியபோது எடுத்து வைத்த வாதங்களும், தீண்டாமைக் கொள்கையைக் கொண்ட இந்து மதத்தைச் சாடியதும் மிகவும் கவனத்துக்குரியவை.
‘தீண்டத்தகாதவர்களை இந்தியாவின் அரசியல் வானில் கொண்டு வருவதிலும் இந்திய ஜனநாயகத்துக்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்கு’, ‘நாசிக்கில் உள்ள கலாராம் கோவில் நுழைவுச் சத்தியாக்கிரகமும், கோவில் நுழைவு இயக்கமும்’, ‘பிற இயக்கங்கள்’ ஆகிய தலைப்புகளிலான இயல்களும் வரலாற்றுச் செய்திக் களஞ்சியங்கள்.
தொகுதி - 35
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
இந்துப் பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
36-ஆவது தொகுதி நான்கு இயல்களைக் கொண்டது.  முதல் இயலில் ‘பம்பாய் மாகாணத்தில் சட்டக்கல்வி சீர்திருத்தம்பற்றிய சிந்தனைகள்’, ‘இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும் : இதற்கு யார் பொறுப்பு?’, ‘மகர்கள் : அவர்கள் யார், எவ்வாறு அவர்கள் தீண்டப்படாதார் ஆயினர்?’ உள்ளிட்ட கட்டுரைகள் கவனிக்கத் தக்கவை.  இந்நூலின் இதர இயல்கள் : ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அமைச்சரவை தூதுக்குழுவும் அதிகார மாற்றமும்’, தேசத்தையும் அதன் ஜனநாயகத்தையும் வளர்த்து மேம்படுத்துவது சம்பந்தமாக’, ‘நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அவற்றின் சட்ட விதிமுறைகள்’ ஆகியன.
தொகுதி - 36
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-
வர்க்கங்களற்ற சமுதாயம்!
37-ஆவது தொகுதியில் 159 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  அரசியல், மானுடம், சட்டம், மக்கள் போராட்டம், இந்துசமய, பௌத்தம், சமூக சீர்திருத்தம், அதிகாரம், தீண்டாமை, விடுதலை, கடவுள், கம்யூனிசம், கிறித்தவம், தொழிலாளர் நலன், வறுமை, அந்நிய ஏகாதிபத்தியம், ராணுவம், கல்வி, மாநில சுயாட்சி, ஜனநாயகம், சிறுபான்மையினர், ஆதிவாசிகளின் நலன், மகளிர் மேம்பாடு, சாதிகள், வர்க்கங்களற்ற சமுதாயம் உள்ளிட்ட கட்டுரைகள் கதம்பமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தொகுதி - 37
விலை : ரூ.40/-  நூலகப் பதிப்பு : ரூ.135/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக