வியாழன், 27 பிப்ரவரி, 2014

அய்யா (வைகுண்டர் )வழி வரலாறு- யோ .திருவள்ளுவன்

ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் ஆதிக்க  அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த இந்து மதத்தை  எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே இந்து மதம்  இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்


அய்யாவழி வரலாறு

"அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).

அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்


 • பூசை செய்யக்கூடாது.

 • பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது

 • யாகம், ஹோமம் கூடாது

 • மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 • எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.

 • எந்த வழிபாடும் கூடாது

 • ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது

 • காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது

 • மாலையிடுதல் கூடாது

 • யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

 • லஞ்சத்தை ஏற்காதீர்கள்

 • ஆசைகளை துறந்துவிடுங்கள்.

 • உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.
அய்யாவழியின் முறைகள் மற்றும் இறையியல்:
"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.

கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.

"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.

அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்
"அய்யாவழி" இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது; அய்யாவழி அதை செய்தது.
தன்மானமும், சுயமரியாதையும்
"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.
இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.
அரச(அரசியல்) அடக்குமுறைக்கு எதிராக:
திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.

பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக 
உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக
அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பூசாரிகளுக்கு கண்டனம்

"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.
விக்கிரக வழிபாட்டை மறுத்தல்
மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யா வழிமுறை
அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.

ஆண்பெண் சமஉரிமை:

அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.

அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.

அய்யாவழி ஒரு தனிமதம்:

கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.

இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.

அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.

சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆதிக்க எண்ணமுடைய சில வலைப்பதிவாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அய்யாவழியைப் பற்றி பரப்புகிற பொய்யான புழுகு வரலாற்றை எதிர்ப்பதும், உண்மையை பதிவு செய்வதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.

________
முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.
~0OO0OO0OO0~
முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இவை மட்டுமா? எத்தனை வகையான வரிகள் மற்றும் அபராதங்கள்?
 • புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
 • 'பார்த்தால் தீட்டு' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது "எட்டிப்போ" என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
 • நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
 • ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
 • ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
 • பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
 • பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
 • திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
 • குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
 • தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
 • செருப்பு அணியக்கூடாது.
 • படிக்கக்கூடாது.
 • பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
 • இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.
இன்னும் பல...
~0OO0OO0OO0~
பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.
இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்?
1826 முதல் 1857 வரை மூன்று முறைகள் இக்கொடுமைகளை எதிர்த்து மக்கள் போராடினர். முறையீடுகள் பிரிட்டீஸ் மகாராணி வரை அனுப்பப்பட்டது. நாயர்களும், நம்பூதிரிகளும் இந்த உரிமைக்குரல்களை கடுமையாக எதிர்த்தனர்.
போராடிய நாடார் பெண்களுக்கு 1829ல் மேலாடை உடுத்த அரசாணை அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த விடவில்லை ஆதிக்க சக்திகள். திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவு பெற்ற நாயர் குழுக்கள் பெண்களின் ஜாக்கெட்டைக் கிழித்துக் கலகம் செய்ததனர். மனிதத்தனமற்ற கீழத்தரமாக நடந்துகொண்ட இந்த ஆதிக்க சாதியினரின் மதம் இந்துமதம்.
பாளையங்கோட்டையில் நாடார் சாதியை சார்ந்த மக்கள் மானம் காக்க துணி அணிய உரிமை இருந்தது; கன்னியாகுமரியில் அந்த உரிமை இல்லை. காரணம் கன்னியாகுமரி பார்ப்பனர்கள் கரம் ஓங்கிய திருவிதாங்கூர் இந்து மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு 'குப்பாயம்' போட உரிமையிருந்தது. இந்துவாக இருந்து மார்பை மறைக்க கூட உரிமையில்லாமல் சுயமரியாதையை இழப்பதை விட தடையாக இருந்த மதத்தை தூக்கியெறிவது மேல் என கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். அப்போதும் திருவிதாங்கூர் இந்து மன்னனின் ஆதிக்கம் தான் நடந்துகொண்டிருந்தது. மன்னனின் காலத்தில் மதம் மாறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன (தேவசகாயம் பிள்ளைக்கு கிடைத்த தண்டனைகள் இதற்கு ஒரு உதாரணம்). கிறிஸ்தவ மதம் பரவ இந்துமதத்தின் சாதிச்சாக்கடை சனாதான தர்மமே காரணமாயிற்று.
~0OO0OO0OO0~
அய்யாவழி என்னும் விடுதலை மதம்
வைதீக இந்துமதத்திற்கும் (பார்ப்பனீய மதம்) முத்துக்குட்டி சுவாமிகளின் அய்யா வழிபாட்டு முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆங்கிலேயர்களை அய்யா எதிர்க்கும் சில வரிகளை மட்டும் காட்டி பார்ப்பனீய இந்துமதம் தப்பிக்க இயலாது. அய்யா வழிபாடு முறை முற்றிலும் இந்துமதத்திற்கு எதிரானது. அதனால் தான் அய்யாவை இராஜாங்க எதிரியாக அன்றைய இந்து ஆதிக்க சாதியினர் திருவாங்கூர் மன்னரிடம் குற்றம் சாட்டினர். நம்பூதிரிகளின் ஆலோசனையின் பேரில் திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை சித்திரவதைக்குள்ளாக்கினான்.
'தாலிக்கு ஆயம், கம்புத்தடிக்கு ஆயம் ' என அகிலத்திரட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திருவிதாங்கூர் மன்னன் சுமத்திய வரிக்கொடுமைகளை அய்யா எதிர்த்திருக்கிறார். (ஆயம் = வரி; கம்புத்தடி= பனையேறும் தொழிலுக்கு உதவும் கருவி). அய்யாவின் முதல் பெயரான "முடிசூடும் பெருமாள்" என்ற பெயரை மாற்றி 'முத்துக்குட்டி' என ஆக்க காரணமும் பார்ப்பனீய இந்துமத ஆதிக்க சாதியினர். 'முத்துகுட்டி' அய்யா வழியை உருவாக்க காரணமும் அவர்களது அடக்குமுறையே.
அய்யாவழியில் இந்துமதத்திற்கு நேர் எதிரான வழிகளை தான் அய்யா வகுத்தார். அவற்றில் சில:
 1. பூசை செய்யக்கூடாது.
 2. பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
 3. யாகம், ஹோமம் கூடாது
 4. மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 5. எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
 6. எந்த வழிபாடும் கூடாது
 7. ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
 8. காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
 9. மாலையிடுதல் கூடாது
 10. யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
 11. லஞ்சத்தை ஏற்காதீர்கள்
 12. ஆசைகளை துறந்துவிடுங்கள்.
 13. உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா வழியினரின் நூலான 'அகிலத்திரட்டில்' சாட்சியாக இருக்கிறது.
பார்ப்பனீய இந்துமதத்திற்கு எதிர்திசையில் அய்யாவழி!
 • சாதியை படைத்தவன் நீசன் என்கிறார் அய்யா. இந்துமதத்தில் சாதியை படைத்தவன் கடவுள். அய்யாவழிக்கும், இந்துமதத்திற்கும் இடைய்லான அடிப்படி முரண்பாட்டில் இது முக்கியமானது.
 • இந்து மதம் உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையது. அய்யா வழியில் இறைவனுக்கு உருவமில்லை.
 • இந்து மதத்தில் சாதி அமைப்பு தான் அதன் அடித்தளம். அய்யா வழியில் சாதி வேற்றுமைகள் இல்லை. அனைவரும் சேர்ந்து துவையலுடன் கஞ்சி அருந்தும் 'துவயல் பந்தி' உண்பார்கள்.
 • இந்து மதத்தில் கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் அர்ச்சகர் என்ற இடைத்தரகர் உண்டு. அய்யா வழியில் எந்த பூசாரியோ/அர்ச்சகரோ இடைத்தரகராக இல்லை.
 • இந்து மதத்தில் பிறர் கருவறைக்குள் செல்ல உரிமையில்லை. அய்யா வழியில் 'பள்ளியறை' வரை சென்று (ஆண், பெண் வேறுபாடு உட்பட) எந்த வேறுபாடுகள் இல்லாமலும் வணங்கலாம். தலையில் சுயமரியாதையுடன் தலைக்கட்டுடன் தான் அய்யாவழியில் வணக்கம் செலுத்த வேண்டும்.
 • அய்யா வழியினர் எந்த இந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவதோ, பிரசாதங்களை உண்பதோ இல்லை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை உருவாக்க இந்துமதத்தை புறக்கணித்து தனது மக்களுக்காக புதிய வழியான 'அய்யா வழியை' தோற்றுவித்து அன்றைய பார்ப்பனீயத்தின் குரல்வளையை இறுக்கியவர் அய்யா!
இன்றைய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் ஆதிக்க குரல்களை அடக்க இந்த மதம் தனித்தன்மையுடன் இருப்பது தடையாக இருக்கிறது. அதனால் இந்துவெறியாளர்கள் அய்யா வழியும் இந்து மதம் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நடத்திய மண்டைக்காடு கலவரத்தின் போது அதற்கு எதிராக குன்றக்குடி அடிகளார், அரோக்கியசாமி ஆண்டகை, இஸ்லாமிய தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து அய்யா வழியின் இன்றைய 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் ஒற்றுமை பேரணிகளை முன்னின்று நடத்தினார். அன்று முதல் அய்யா வழியை தனக்குள் விழுங்கும் பிரச்சரங்களை இந்து மதவெறியர்கள் ஆரம்பித்தனர்.
ஆதிக்கசாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் மாற்று மதங்களில் ஒன்று அய்யாவழி! ஆம் இது ஒரு தனிமதம்! பார்ப்பனீயத்தின் பிடரியை நெரித்ததில் அய்யா வழி தனிமதமே!

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.

திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.

கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.

பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்தநாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.
1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.

அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு,பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.

பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது.

_________________
உதவிய நூல்கள்
 1. A Caste and Social Change in Colonial Kerala - essay by: D.Damodaran Namboodiri. Perspectives on Kerala History - The Second Milennium, P.J.Cherian (Ed)
 2. Religion and Sub-altern Agency - Dr. G.Patrick : University of Madras
 3. Slavery in Travancore, 1973, K.K. Kusuman
 4. Dr. Sobhanan, Temple Entry Movement and Sivakasi Riots, K.Kesavan, கோவில் நுழைவுப் போராட்டங்கள்
இந்த கட்டுரையை திருவள்ளுவர் வலைத்தளம் மற்றும் பூங்கா வலையிதழில் படிக்க இங்கே அழுத்தவும்
http://poongaa.com/content/view/1138/1/
http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_21.html

குறிப்பு:

அய்யாவழி பற்றிய சில வரலாற்று உண்மைகளை பதிய வைக்கும் நோக்கத்தில் பாலபிரஜாதிபதி அடிகள் அவர்களை சந்தித்து http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_21.html யோ.திருவள்ளுவர்  உரையாடினார் . அந்த உரையாடல்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப விடயங்கள் இன்னும் இறுதி வடிவம் பெறாத காரணத்தால் பதிவு செய்ய இயலவில்லை. பாலபிரஜாதிபதி அடிகளாரின் பேட்டியை வெகுவிரைவில் பதிவு செய்ய முயல்கிறேன். என்று தெரிவித்துள்ளார் யோ.திருவள்ளுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக