வியாழன், 29 நவம்பர், 2012

குண்டாயிருப்பிலிருந்து ஒரு மனம் திறந்த மடல்
தலித் தலைவர்களுக்கு...  ( ஆகஸ்ட், 2007)

மா. பொன்னுச்சாமி, மீனா மயில்

வணக்கம்.

Muthumari and vijitha குறிப்பு : இங்கு நாம் தலித் தலைவர்கள் என்று குறிப்பிடுவதில் எந்த உட்சாதி பாகுபாடும் இல்லை. பள்ளர், பறையர், அருந்ததியர், புதிரை வண்ணார் எனப் பட்டியல்படுத்தப்பட்ட 78 சாதியினருக்கும் - இச்சமூகத் தலைவர்களுக்கும் - ‘தலித்' என்ற கம்பீரமான அடைமொழி பொருந்தும்.

தலித் மக்களின் தலைவராக இருப்பது ஒருவித வசதியாகவும், மகிழ்ச்சியாகவும், இது போன்ற இக்கட்டான சில நேரங்களில் எரிச்சலாகவும் உங்களுக்கு இருக்கலாம். எனினும், அந்த அடையாளம்தான் உங்களின் அங்கீகாரம் என்பதாலும்; சாதாரண மக்களாகிய நாங்கள் அந்த அங்கீகாரத்தாலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதாலும் - இந்தக் கடிதம் நேரடியாக உங்களுக்கே உரித்தாகிறது.

இந்த மூன்று பக்க வார்த்தைகள், எங்களின் மனக் குமுறலை உங்களுக்கு முழுமையாக சொல்லிவிடுமா என்று தெரியவில்லை. சேரியில் பிறப்பதன், வாழ்வதன் துயரங்களைக் கடந்து வந்தவர்களே நீங்களும்! பசிக்கும் வயிறும், உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வும், தலைவிரித்தாடும் வன்முறையும் தந்த தாழ்வு மனப்பான்மையோடு சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கத் திராணியற்று திணறியிருப்பீர்கள். அடிபட்ட காயங்களோடு, எரிக்கப்பட்ட குடிசையின் சாம்பல் குவியலுக்கிடையில் படுத்துறங்கியிருப்பீர்கள். என்னதான் பெற்றவர்கள் கண்ணே மணியே என்று பெயர் வைத்திருந்தாலும், சாதிப் பெயர்தான் உங்களுக்கு சொந்தமாகியிருக்கும்.

பீடிகை போதும். பறையர்கள் அருந்ததியர்களைத் தாக்கும் அதே அசிங்கம் மீண்டும் நடந்தேறியிருக்கிறது, விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு பகுதியில். தலைவர்களே! அந்தத் துயரச் செய்தி உங்கள் காதுகளையும் எட்டியிருக்கும். உங்கள் தரப்பில் எந்தவித அதிர்வோ, அசைவோ ஏற்படவில்லை என்பதால்... உங்களுக்கு இந்த வன்முறை நிகழ்வைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற அடிப் படையில் விரிவாக விளக்குகிறோம்.

குண்டாயிருப்பில் 12 அருந்ததியர் குடும்பங்கள், 45 பறையர் குடும்பங்கள், 18 தேவர், 1 நாயக்கர், 10 படையாச்சி, 30 செட்டியார் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அருந்ததியர்கள் விவசாயக் கூலிகளாகவும், பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலை கூலிகளாகவும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இங்கு பறையர்கள் பலம் பொருந்தியவர்கள். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.

11.7.2007 அன்று மாலை 5 மணிக்கு, பொது வீதியில் ஒரு அருந்ததியர் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே ஊரைச் சேர்ந்த பறையர் சாதி சிறுவன் அவனை கல்லால் அடித்திருக்கிறான். இதனால் வலி பொறுக்க முடியாத சிறுவன் திரும்ப அடிக்க, இது பற்றிய விபரம் தெரிய வர, பறையர் சிறுவனின் உறவினரான முருகேஸ்வரி, அருந்ததியர் சிறுவனை அவனுடைய தாய்க்கு முன்பே அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி இரண்டு குடும்பங்களும் பேசி முடித்த பிறகு, இரவு 9.30 மணிக்கு முத்துராசு என்பவர் ‘எப்படி என் அண்ணன் மகனை ஒரு சக்கிலியப் பய எதுத்து அடிக்கலாம்' என்று சாதிப் பெயர் சொல்லித் திட்டி, மீண்டும் சண்டைக்கு இழுத்துள்ளார்.

சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்குவது, எப்போதும் ஆதிக்க சாதியின் தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த சின்ன விஷயத்தை காரணமாக்கியே பெரும்பாலான சாதிச் சண்டைகளும் வன்கொடுமைகளும் நடந்தேறியிருக்கின்றன. சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்க வேண்டாம் என்று சொன்ன கோவிந்தராசுவை, ‘கை நீட்டிப் பேசுற அளவுக்கு சக்கிலியப் பயலுக்கு தைரியம் வந்துருச்சா' என்று விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த முத்துராசு, சுப்பையா, முருகேசன், சின்னப் பிரகாஷ், கருப்பசாமி ஆகியோர் பெரிய தடிகளுடன் சென்று கோவிந்தராசுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கோவிந்தராசுவை காப்பாற்ற முயன்ற தாய் வீரம்மாளை, பிறப்புறுப்பில் ரத்தம் கசியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். பாட்டி முனியம்மாளின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது. தங்கை முத்துமாரி என்பவரின் சட்டையைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய வீடும், பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. ‘‘எங்கள எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. எதிர்த்தா குடிசையோடு பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்புடுவோம். எந்தத் தலைவன் வந்தாலும் எங்க மசுரக்கூட புடுங்க முடியாது'' (உங்களைத்தான் தலைவர்களே!) என்று சூளுரைத்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட கோவிந்தராசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, வழக்கம் போல் அலட்சியம். தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் தலைமை நிலைய செயலாளர் கி. முனியாண்டி உதவியோடு புகார் கொடுக்கப்பட்டது. மறுநாள் காலை கோவிந்தராசுவை வரவழைத்த காவல் ஆய்வாளர் சக்திவேல், மீண்டும் ஒரு முறை புகார் மனு எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். இதற்குள் காவல் நிலையத்திற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர் இருவரும் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறி, சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அருந்ததியர் மீதான பறையர்களின் வன் முறைத் தாக்குதல் அடிக்கடி நடக்கிறது என்றாலும், இந்த முறை பாதிப்பு அதிகம் என்பதால் குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று பேச்சு வார்த்தைக்கு மறுத்துவிட்டனர் அருந்ததிய மக்கள். இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்களிடம், ‘‘வழக்கை வாபஸ் வாங்கலேன்னா பின் விளைவுகளை சந்திக்க தயாராகிக்கங்க'' என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.

புரட்சிப் புலிகள், தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர் சுவரொட்டிகள் ஒட்டியும், சி.பி.எம். கட்சி, தமிழ் நாடு அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல இயக்கங்களின் அழுத்தத்திற்குப் பிறகுதான் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், பாதிக்கப்பட்ட கோவிந்தராசு மீது புதிதாக பொய் வழக்கு போடப்பட்டது. தங்களை எதிர்த்ததோடு மட்டுமின்றி, தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அருந்ததியர்களை பொது வீதியில் நடக்கக் கூடாது எனவும், பொது குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்தது (பறையர்கள் மேல் சாதியாம்).

அதே போல குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், அன்று இரவு 9 மணியளவில் கோவிந்தராசு தனது மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கையில் குடிசை கொளுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புகார் கொடுத்தால் காவல் ஆய்வாளர் சக்திவேல், ‘‘யாரும் சாகலேல்ல... விட்டுத் தள்ளுங்க. தெரியாம பத்திக்கிச்சுனு ஒத்துக்கோ. வழக்குப் போடுறதுக்கு எனக்கு பேப்பரும் மையும் செலவாகும். அவ்ளோதான். உனக்கு பணம் இருக்கா, ஆள்பலம், கட்சி இருக்கா?'' என்று மிரட்டி யுள்ளார். இவ்வளவு நடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

‘‘காலம் பூரா அடிவாங்கியே சாகுறோம். எங்க பொண்டு புள்ளைங்க நிம்மதியா இருக்க முடியல. தெருவுல நடக்க முடியல. உசுர கையில புடிச்சுட்டு காலம் தள்ளுறோம். எங்கள வேற ஊருக்கு குடியமர்த்த முடியுமா?'' என்று கதறி அழுத வீரம்மாளின் ஒப்பாரி, அந்தப் பகுதியையே உலுக்கியது. வீரம்மாளின் வேண்டுகோள்படி வேறு ஊரில் குடியமர்த்தலாம். ஆனால், சாதி தன் சாட்டையை சுழட்டியபடி அங்கும் துரத்திக் கொண்டு வரும்.

நடந்தது இதுதான். இது இரண்டு நாட்கள் பிரச்சனை அல்ல. பள்ளர்களின் ஜாதி வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு : தேனி மாவட்டம் வாய்க்காபட்டியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் பள்ளர்களின் எதிர்ப்பை மீறி ஒரு அருந்ததியர் போட்டியிடுகிறார். இதில் ஏற்பட்ட மோதலில் 8.10.2006 அன்று எஸ். ஈஸ்வரன் என்ற அருந்ததியர் படுகொலை செய்யப்படுகிறார். வழக்கு நடக்கிறது. குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் வந்து மிரட்டுகின்றனர். இதற்கு முன்னும் பின்னும் நடந்த வன்கொடுமைகளும் - ‘சக்கிலியனுங்க நமக்கு கீழ்தான்' என்ற பறையர்கள் மற்றும் பள்ளர்களின் மனப்போக்கும் - சாதியப் படிநிலையின், பார்ப்பனியத்தின், இந்து தர்மத்தின் எச்சமென்பதை நாம் மறுக்க முடியாது.

மூன்று மாதங்களுக்கு முன்பு சிறீவில்லிப்புத்தூர் - கூமாபட்டியில் ஒரு கோழி இறந்ததால் ஏற்பட்ட பள்ளர் # பறையர் மோதலையொட்டி, லட்சுமி அம்மாள் போலிஸ் தாக்குதலில் மரணமடைந்தார். தøலைவர்களே! இவை, எங்கோ குண்டாயிருப்பிலும், வாய்க்காபட்டியிலும், கூமாபட்டியிலும் நடந்தேறும் ஓரிரு நிகழ்வுகள் அல்ல. பள்ளர், பறையர், அருந்ததியர், புதிரை வண்ணார் என சாதிப் படிநிலையில் உள்ள ஒருவரை ஒருவர் அழுத்துவது, பழிப்பது, அடக்குவது, தாழ்த்துவது என எல்லாமே தொடர்ந்து நடைபெறுகின்றன.

சாதி தோன்றிய காலத்திலிருந்தே உட்சாதிப் பாகுபாடுகளும் இருந்துதான் தொலைக்கின்றன. ஒடுக்கப்பட்டவர் களுக்குகூட - ‘எனக்கு கீழ் அடிமையாக யாரும் இல்லை' என்ற பரந்த மனப்பான்மை இல்லாததன் விளைவு அது. சாதி ஒழிப்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாத காலத்திலும், தலித் விடுதலை பற்றி புரிதல் எதுவும் இல்லாத நிலையிலும், ‘அவன் எங்கள ஒடுக்குறான்; நான் எனக்கு கீழே இருக்கிறவன ஒடுக்குறேன்' என்ற சூழல் இருந்திருக்கலாம். ‘எங்களை எவனும் ஒடுக்கக் கூடாது. அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்' என சாதிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய பின்னும் உட்சாதிப் பாகுபாடுகளை கட்டிக்காப்பது, சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும், மனித நாகரிகத்திற்கே அப்பாற்பட்டதாகவும் இல்லையா?

Govindharasu's house சாதியின் சூழ்ச்சியையும் பயங்கரத்தையும் எடுத்துச் சொல்லி, தலித் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய தாங்கள், மக்களை உட்சாதிப் பிரிவின் மூலம் தனித்தனித் தீவுகளாக்கியதோடு - பாகுபாட்டை அப்படியே கட்டிக் காக்கிறீர்கள். ‘அங்கங்க நடக்கிற சின்னச் சின்னப் பிரச்சனை இது' என்று தயவு செய்து தப்பிக்க முயலாதீர்கள். ஏனென்றால், ‘உங்கள் குடிசை எரிந்தபோது, வந்து பார்க்காத, ஆறுதல் சொல்லாத, நடவடிக்கை எடுக்காத' தலைவர்களை (கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான) நீங்கள் நொந்து கொண்ட விதமும், கண்டித்த குரலும் - எங்கள் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது. இன்று அரசியல் அதிகாரம் கைவசப்பட்டிருக்கும் சூழலில், உங்களுக்கும்கூட சாதிய மோதல்கள் ‘சின்ன விஷயமாகி'விட, தலித் அல்லாத கருணாநிதியும், பார்ப்பனரான ஜெயலலிதாவும் அப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை என்று மனசு சொல்கிறது.

தலைவர்களே! இயக்கங்களைக் கட்டி அமைக்கும் பணியில் நீங்கள் எங்களோடு இருந்தீர்கள். நாங்களும் உங்களோடு இருந்தோம். அப்போதெல்லாம் சேரிகள் உங்கள் தாய் வீடõக இருந்தன. எந்த குடிசை பற்றி எரிந்தாலும், உங்கள் கரங்கள் அணைக்க நீண்டு வந்தன. சமூக விடுதலை என்ற போர்க்குரலுக்கு கட்டுப்பட்டு உங்களைப் பின் தொடர்ந்தோம். ‘அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்' என்று தாங்கள் திசை மாறுகிற வரை, என்றாவது இந்த சாதி ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருந்தது. சேரிகளிலிருந்து துண்டித்துக் கொண்டு, தாங்கள் எங்கோ உயரத்துக்குப் போன போது - ‘நம்ம தலைவர் மேலே போறான்யா... நிச்சயம் நல்லது நடக்கும்' என்று சிலிர்ப்போடு பேசிக் கொண்டோம். இன்று எங்கள் கூக்குரல் உங்கள் காதுகளை எட்டவில்லை. தலைவர்கள் நீங்கள் முட்டிக் கொள்வதா, ஆரத்தழுவிக் கொள்வதா என்பதை - மக்கள் நலனோ, சமூக விடுதலையோ தீர்மானிக்கவில்லை. ஊழல் அரசியலும் அதனால் விளையும் ஆதாயமுமே முடிவு செய்கிறது.

ஆதிக்க சாதியின் அதிகார மய்யங்களைத் தகர்த்து நீங்கள் அரியணையில் அமரும்போது, சமத்துவத்தை மலரச் செய்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்தோம். அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்குள் நீங்களும் அதிகாரிகளாகிப் போனீர்கள். ‘எனக்கு கீழ் ஓர் அடிமை வேண்டும்' என்ற மனப்போக்கின் தொடக்கப் புள்ளி அதுதான். ஒருபுறம் சாதியை எதிர்த்துக் கொண்டே, இன்னொரு புறம் சாதியை வளர்க்கும் சாமர்த்தியம் - இறுதியில் யார் கழுத்துக்கு சுருக்காகும் என்பதை நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பார்ப்பனியமும், இந்து தர்மமும் வலியுறுத்தும் சாதிப்படிநிலையை கட்டிக் காப்பதில் - தலித் தலைவர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது என்பதை இப்போது உணர்கிறோம்.

ஆதிக்க சாதியினருக்கு எதிரான நமது போராட்டங்கள் சமரசமாகிவிட, தலித் மக்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பள்ளர்கள், பறையர்களின் சாதி வெறியாட்டங்களை அடிக்கடி கடந்து வருகிறோம். சாதியை உருவாக்கியவர்களும், கட்டிக் காக்கிறவர்களும் நம்மை நகைப்போடு பார்க்கிறார்கள்.

தலைவர்களே! நாங்கள் சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறோம். உண்மையிலேயே சமத்துவத்தை நிலைநாட்ட, தாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்! பாதிக்கப்பட்டது பள்ளரோ, பறையரோ, அருந்ததியரோ... 78 இல் யாரோ... எல்லோரும் ஒன்றாகச் சென்று, என்றாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் - இனிமேல் இந்த அநீதி நடக்காது என்ற உத்திரவாதத்தையும் கொடுத்திருக்கிறீர்களா? தலைவர்களாகிய நீங்களும் ஒன்றிணையாமல் (அரசியல் ஆதாயத்துக்காக அல்ல) மக்களாகிய எங்களையும் பிரித்தே வைத்திருக்கிறீர்கள் என்ற எங்களின் புரிதலுக்கு - உங்களுடைய பதில்தான் என்ன? உட்சாதிப் பாகுபாடுகளைக் களைவது, உங்கள் செயல்திட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில், தலித் மக்களைப் பாகுபாடின்றி ஒன்றிணைக்க, இதுவரை தாங்கள் எடுத்த முயற்சிகள்தான் என்ன? சாதித் தலைவர்களிடம் எளிதாகப் பழக முடிகிற, அவர்களின் குறைகளையும் குற்றங்களையும் சகித்துக் கொள்கிற உங்களுக்குள் - ஒருவரையொருவர் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம். கோபத்தோடோ, வருத்தத்தோடோ, எரிச்சலோடோ - நீங்கள் எங்களுக்கு இந்த கேள்விகளுக்கான பதிலைச் சொல்லுங்கள். இங்கு ‘எங்களுக்கு' என்ற சொல், சமூக விடுதலையில் அக்கறை கொண்ட எண்ணற்ற தலித் மக்களையே குறிக்கிறது. நீங்கள் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறுக்க மாட்டீர்கள்தானே!

நம்பிக்கை அறுந்து போன தலித் மக்கள் சார்பில்
மா. பொன்னுச்சாமி, மீனா மயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக