வியாழன், 29 நவம்பர், 2012
தலித் தலைவர்களுக்கு... ( ஆகஸ்ட், 2007)
மா. பொன்னுச்சாமி, மீனா மயில்
வணக்கம்.
குறிப்பு : இங்கு நாம் தலித் தலைவர்கள் என்று குறிப்பிடுவதில் எந்த உட்சாதி பாகுபாடும் இல்லை. பள்ளர், பறையர், அருந்ததியர், புதிரை வண்ணார் எனப் பட்டியல்படுத்தப்பட்ட 78 சாதியினருக்கும் - இச்சமூகத் தலைவர்களுக்கும் - ‘தலித்' என்ற கம்பீரமான அடைமொழி பொருந்தும்.
தலித் மக்களின் தலைவராக இருப்பது ஒருவித வசதியாகவும், மகிழ்ச்சியாகவும், இது போன்ற இக்கட்டான சில நேரங்களில் எரிச்சலாகவும் உங்களுக்கு இருக்கலாம். எனினும், அந்த அடையாளம்தான் உங்களின் அங்கீகாரம் என்பதாலும்; சாதாரண மக்களாகிய நாங்கள் அந்த அங்கீகாரத்தாலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதாலும் - இந்தக் கடிதம் நேரடியாக உங்களுக்கே உரித்தாகிறது.
இந்த மூன்று பக்க வார்த்தைகள், எங்களின் மனக் குமுறலை உங்களுக்கு முழுமையாக சொல்லிவிடுமா என்று தெரியவில்லை. சேரியில் பிறப்பதன், வாழ்வதன் துயரங்களைக் கடந்து வந்தவர்களே நீங்களும்! பசிக்கும் வயிறும், உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வும், தலைவிரித்தாடும் வன்முறையும் தந்த தாழ்வு மனப்பான்மையோடு சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கத் திராணியற்று திணறியிருப்பீர்கள். அடிபட்ட காயங்களோடு, எரிக்கப்பட்ட குடிசையின் சாம்பல் குவியலுக்கிடையில் படுத்துறங்கியிருப்பீர்கள். என்னதான் பெற்றவர்கள் கண்ணே மணியே என்று பெயர் வைத்திருந்தாலும், சாதிப் பெயர்தான் உங்களுக்கு சொந்தமாகியிருக்கும்.
பீடிகை போதும். பறையர்கள் அருந்ததியர்களைத் தாக்கும் அதே அசிங்கம் மீண்டும் நடந்தேறியிருக்கிறது, விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு பகுதியில். தலைவர்களே! அந்தத் துயரச் செய்தி உங்கள் காதுகளையும் எட்டியிருக்கும். உங்கள் தரப்பில் எந்தவித அதிர்வோ, அசைவோ ஏற்படவில்லை என்பதால்... உங்களுக்கு இந்த வன்முறை நிகழ்வைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற அடிப் படையில் விரிவாக விளக்குகிறோம்.
குண்டாயிருப்பில் 12 அருந்ததியர் குடும்பங்கள், 45 பறையர் குடும்பங்கள், 18 தேவர், 1 நாயக்கர், 10 படையாச்சி, 30 செட்டியார் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அருந்ததியர்கள் விவசாயக் கூலிகளாகவும், பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலை கூலிகளாகவும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இங்கு பறையர்கள் பலம் பொருந்தியவர்கள். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.
11.7.2007 அன்று மாலை 5 மணிக்கு, பொது வீதியில் ஒரு அருந்ததியர் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே ஊரைச் சேர்ந்த பறையர் சாதி சிறுவன் அவனை கல்லால் அடித்திருக்கிறான். இதனால் வலி பொறுக்க முடியாத சிறுவன் திரும்ப அடிக்க, இது பற்றிய விபரம் தெரிய வர, பறையர் சிறுவனின் உறவினரான முருகேஸ்வரி, அருந்ததியர் சிறுவனை அவனுடைய தாய்க்கு முன்பே அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி இரண்டு குடும்பங்களும் பேசி முடித்த பிறகு, இரவு 9.30 மணிக்கு முத்துராசு என்பவர் ‘எப்படி என் அண்ணன் மகனை ஒரு சக்கிலியப் பய எதுத்து அடிக்கலாம்' என்று சாதிப் பெயர் சொல்லித் திட்டி, மீண்டும் சண்டைக்கு இழுத்துள்ளார்.
சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்குவது, எப்போதும் ஆதிக்க சாதியின் தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த சின்ன விஷயத்தை காரணமாக்கியே பெரும்பாலான சாதிச் சண்டைகளும் வன்கொடுமைகளும் நடந்தேறியிருக்கின்றன. சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்க வேண்டாம் என்று சொன்ன கோவிந்தராசுவை, ‘கை நீட்டிப் பேசுற அளவுக்கு சக்கிலியப் பயலுக்கு தைரியம் வந்துருச்சா' என்று விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த முத்துராசு, சுப்பையா, முருகேசன், சின்னப் பிரகாஷ், கருப்பசாமி ஆகியோர் பெரிய தடிகளுடன் சென்று கோவிந்தராசுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கோவிந்தராசுவை காப்பாற்ற முயன்ற தாய் வீரம்மாளை, பிறப்புறுப்பில் ரத்தம் கசியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். பாட்டி முனியம்மாளின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது. தங்கை முத்துமாரி என்பவரின் சட்டையைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய வீடும், பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. ‘‘எங்கள எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. எதிர்த்தா குடிசையோடு பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்புடுவோம். எந்தத் தலைவன் வந்தாலும் எங்க மசுரக்கூட புடுங்க முடியாது'' (உங்களைத்தான் தலைவர்களே!) என்று சூளுரைத்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கோவிந்தராசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, வழக்கம் போல் அலட்சியம். தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் தலைமை நிலைய செயலாளர் கி. முனியாண்டி உதவியோடு புகார் கொடுக்கப்பட்டது. மறுநாள் காலை கோவிந்தராசுவை வரவழைத்த காவல் ஆய்வாளர் சக்திவேல், மீண்டும் ஒரு முறை புகார் மனு எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். இதற்குள் காவல் நிலையத்திற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர் இருவரும் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறி, சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அருந்ததியர் மீதான பறையர்களின் வன் முறைத் தாக்குதல் அடிக்கடி நடக்கிறது என்றாலும், இந்த முறை பாதிப்பு அதிகம் என்பதால் குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று பேச்சு வார்த்தைக்கு மறுத்துவிட்டனர் அருந்ததிய மக்கள். இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்களிடம், ‘‘வழக்கை வாபஸ் வாங்கலேன்னா பின் விளைவுகளை சந்திக்க தயாராகிக்கங்க'' என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.
புரட்சிப் புலிகள், தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர் சுவரொட்டிகள் ஒட்டியும், சி.பி.எம். கட்சி, தமிழ் நாடு அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல இயக்கங்களின் அழுத்தத்திற்குப் பிறகுதான் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், பாதிக்கப்பட்ட கோவிந்தராசு மீது புதிதாக பொய் வழக்கு போடப்பட்டது. தங்களை எதிர்த்ததோடு மட்டுமின்றி, தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அருந்ததியர்களை பொது வீதியில் நடக்கக் கூடாது எனவும், பொது குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்தது (பறையர்கள் மேல் சாதியாம்).
அதே போல குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், அன்று இரவு 9 மணியளவில் கோவிந்தராசு தனது மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கையில் குடிசை கொளுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புகார் கொடுத்தால் காவல் ஆய்வாளர் சக்திவேல், ‘‘யாரும் சாகலேல்ல... விட்டுத் தள்ளுங்க. தெரியாம பத்திக்கிச்சுனு ஒத்துக்கோ. வழக்குப் போடுறதுக்கு எனக்கு பேப்பரும் மையும் செலவாகும். அவ்ளோதான். உனக்கு பணம் இருக்கா, ஆள்பலம், கட்சி இருக்கா?'' என்று மிரட்டி யுள்ளார். இவ்வளவு நடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
‘‘காலம் பூரா அடிவாங்கியே சாகுறோம். எங்க பொண்டு புள்ளைங்க நிம்மதியா இருக்க முடியல. தெருவுல நடக்க முடியல. உசுர கையில புடிச்சுட்டு காலம் தள்ளுறோம். எங்கள வேற ஊருக்கு குடியமர்த்த முடியுமா?'' என்று கதறி அழுத வீரம்மாளின் ஒப்பாரி, அந்தப் பகுதியையே உலுக்கியது. வீரம்மாளின் வேண்டுகோள்படி வேறு ஊரில் குடியமர்த்தலாம். ஆனால், சாதி தன் சாட்டையை சுழட்டியபடி அங்கும் துரத்திக் கொண்டு வரும்.
நடந்தது இதுதான். இது இரண்டு நாட்கள் பிரச்சனை அல்ல. பள்ளர்களின் ஜாதி வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு : தேனி மாவட்டம் வாய்க்காபட்டியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் பள்ளர்களின் எதிர்ப்பை மீறி ஒரு அருந்ததியர் போட்டியிடுகிறார். இதில் ஏற்பட்ட மோதலில் 8.10.2006 அன்று எஸ். ஈஸ்வரன் என்ற அருந்ததியர் படுகொலை செய்யப்படுகிறார். வழக்கு நடக்கிறது. குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் வந்து மிரட்டுகின்றனர். இதற்கு முன்னும் பின்னும் நடந்த வன்கொடுமைகளும் - ‘சக்கிலியனுங்க நமக்கு கீழ்தான்' என்ற பறையர்கள் மற்றும் பள்ளர்களின் மனப்போக்கும் - சாதியப் படிநிலையின், பார்ப்பனியத்தின், இந்து தர்மத்தின் எச்சமென்பதை நாம் மறுக்க முடியாது.
மூன்று மாதங்களுக்கு முன்பு சிறீவில்லிப்புத்தூர் - கூமாபட்டியில் ஒரு கோழி இறந்ததால் ஏற்பட்ட பள்ளர் # பறையர் மோதலையொட்டி, லட்சுமி அம்மாள் போலிஸ் தாக்குதலில் மரணமடைந்தார். தøலைவர்களே! இவை, எங்கோ குண்டாயிருப்பிலும், வாய்க்காபட்டியிலும், கூமாபட்டியிலும் நடந்தேறும் ஓரிரு நிகழ்வுகள் அல்ல. பள்ளர், பறையர், அருந்ததியர், புதிரை வண்ணார் என சாதிப் படிநிலையில் உள்ள ஒருவரை ஒருவர் அழுத்துவது, பழிப்பது, அடக்குவது, தாழ்த்துவது என எல்லாமே தொடர்ந்து நடைபெறுகின்றன.
சாதி தோன்றிய காலத்திலிருந்தே உட்சாதிப் பாகுபாடுகளும் இருந்துதான் தொலைக்கின்றன. ஒடுக்கப்பட்டவர் களுக்குகூட - ‘எனக்கு கீழ் அடிமையாக யாரும் இல்லை' என்ற பரந்த மனப்பான்மை இல்லாததன் விளைவு அது. சாதி ஒழிப்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாத காலத்திலும், தலித் விடுதலை பற்றி புரிதல் எதுவும் இல்லாத நிலையிலும், ‘அவன் எங்கள ஒடுக்குறான்; நான் எனக்கு கீழே இருக்கிறவன ஒடுக்குறேன்' என்ற சூழல் இருந்திருக்கலாம். ‘எங்களை எவனும் ஒடுக்கக் கூடாது. அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்' என சாதிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய பின்னும் உட்சாதிப் பாகுபாடுகளை கட்டிக்காப்பது, சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும், மனித நாகரிகத்திற்கே அப்பாற்பட்டதாகவும் இல்லையா?
சாதியின் சூழ்ச்சியையும் பயங்கரத்தையும் எடுத்துச் சொல்லி, தலித் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய தாங்கள், மக்களை உட்சாதிப் பிரிவின் மூலம் தனித்தனித் தீவுகளாக்கியதோடு - பாகுபாட்டை அப்படியே கட்டிக் காக்கிறீர்கள். ‘அங்கங்க நடக்கிற சின்னச் சின்னப் பிரச்சனை இது' என்று தயவு செய்து தப்பிக்க முயலாதீர்கள். ஏனென்றால், ‘உங்கள் குடிசை எரிந்தபோது, வந்து பார்க்காத, ஆறுதல் சொல்லாத, நடவடிக்கை எடுக்காத' தலைவர்களை (கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான) நீங்கள் நொந்து கொண்ட விதமும், கண்டித்த குரலும் - எங்கள் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது. இன்று அரசியல் அதிகாரம் கைவசப்பட்டிருக்கும் சூழலில், உங்களுக்கும்கூட சாதிய மோதல்கள் ‘சின்ன விஷயமாகி'விட, தலித் அல்லாத கருணாநிதியும், பார்ப்பனரான ஜெயலலிதாவும் அப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை என்று மனசு சொல்கிறது.
தலைவர்களே! இயக்கங்களைக் கட்டி அமைக்கும் பணியில் நீங்கள் எங்களோடு இருந்தீர்கள். நாங்களும் உங்களோடு இருந்தோம். அப்போதெல்லாம் சேரிகள் உங்கள் தாய் வீடõக இருந்தன. எந்த குடிசை பற்றி எரிந்தாலும், உங்கள் கரங்கள் அணைக்க நீண்டு வந்தன. சமூக விடுதலை என்ற போர்க்குரலுக்கு கட்டுப்பட்டு உங்களைப் பின் தொடர்ந்தோம். ‘அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்' என்று தாங்கள் திசை மாறுகிற வரை, என்றாவது இந்த சாதி ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருந்தது. சேரிகளிலிருந்து துண்டித்துக் கொண்டு, தாங்கள் எங்கோ உயரத்துக்குப் போன போது - ‘நம்ம தலைவர் மேலே போறான்யா... நிச்சயம் நல்லது நடக்கும்' என்று சிலிர்ப்போடு பேசிக் கொண்டோம். இன்று எங்கள் கூக்குரல் உங்கள் காதுகளை எட்டவில்லை. தலைவர்கள் நீங்கள் முட்டிக் கொள்வதா, ஆரத்தழுவிக் கொள்வதா என்பதை - மக்கள் நலனோ, சமூக விடுதலையோ தீர்மானிக்கவில்லை. ஊழல் அரசியலும் அதனால் விளையும் ஆதாயமுமே முடிவு செய்கிறது.
ஆதிக்க சாதியின் அதிகார மய்யங்களைத் தகர்த்து நீங்கள் அரியணையில் அமரும்போது, சமத்துவத்தை மலரச் செய்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்தோம். அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்குள் நீங்களும் அதிகாரிகளாகிப் போனீர்கள். ‘எனக்கு கீழ் ஓர் அடிமை வேண்டும்' என்ற மனப்போக்கின் தொடக்கப் புள்ளி அதுதான். ஒருபுறம் சாதியை எதிர்த்துக் கொண்டே, இன்னொரு புறம் சாதியை வளர்க்கும் சாமர்த்தியம் - இறுதியில் யார் கழுத்துக்கு சுருக்காகும் என்பதை நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பார்ப்பனியமும், இந்து தர்மமும் வலியுறுத்தும் சாதிப்படிநிலையை கட்டிக் காப்பதில் - தலித் தலைவர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது என்பதை இப்போது உணர்கிறோம்.
ஆதிக்க சாதியினருக்கு எதிரான நமது போராட்டங்கள் சமரசமாகிவிட, தலித் மக்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பள்ளர்கள், பறையர்களின் சாதி வெறியாட்டங்களை அடிக்கடி கடந்து வருகிறோம். சாதியை உருவாக்கியவர்களும், கட்டிக் காக்கிறவர்களும் நம்மை நகைப்போடு பார்க்கிறார்கள்.
தலைவர்களே! நாங்கள் சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறோம். உண்மையிலேயே சமத்துவத்தை நிலைநாட்ட, தாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்! பாதிக்கப்பட்டது பள்ளரோ, பறையரோ, அருந்ததியரோ... 78 இல் யாரோ... எல்லோரும் ஒன்றாகச் சென்று, என்றாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் - இனிமேல் இந்த அநீதி நடக்காது என்ற உத்திரவாதத்தையும் கொடுத்திருக்கிறீர்களா? தலைவர்களாகிய நீங்களும் ஒன்றிணையாமல் (அரசியல் ஆதாயத்துக்காக அல்ல) மக்களாகிய எங்களையும் பிரித்தே வைத்திருக்கிறீர்கள் என்ற எங்களின் புரிதலுக்கு - உங்களுடைய பதில்தான் என்ன? உட்சாதிப் பாகுபாடுகளைக் களைவது, உங்கள் செயல்திட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில், தலித் மக்களைப் பாகுபாடின்றி ஒன்றிணைக்க, இதுவரை தாங்கள் எடுத்த முயற்சிகள்தான் என்ன? சாதித் தலைவர்களிடம் எளிதாகப் பழக முடிகிற, அவர்களின் குறைகளையும் குற்றங்களையும் சகித்துக் கொள்கிற உங்களுக்குள் - ஒருவரையொருவர் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம். கோபத்தோடோ, வருத்தத்தோடோ, எரிச்சலோடோ - நீங்கள் எங்களுக்கு இந்த கேள்விகளுக்கான பதிலைச் சொல்லுங்கள். இங்கு ‘எங்களுக்கு' என்ற சொல், சமூக விடுதலையில் அக்கறை கொண்ட எண்ணற்ற தலித் மக்களையே குறிக்கிறது. நீங்கள் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறுக்க மாட்டீர்கள்தானே!
நம்பிக்கை அறுந்து போன தலித் மக்கள் சார்பில்
மா. பொன்னுச்சாமி, மீனா மயில்
தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் இடையிலான முரண்களைப் பார்க்கத் தவறுவது துரோகம்-ஆனந்த் டெல்டும்டே
தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் இடையிலான முரண்களைப் பார்க்கத் தவறுவது துரோகம்-ஆனந்த் டெல்டும்டே
தலித் அல்லாதவர்கள் திருந்தினால் தலித் விடுதலை சாத்தியமாகுமா? அல்லது இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து தலித்துகளை மீட்டெடுப்பதற்கான வழி என்ன?
சாதியப்
பிரச்சனையே தலித் மற்றும் தலித் அல்லாதவர் என்ற இரு தரப்பினருக்கிடையேதான்
நடைபெறுகிறது. ஏனென்றால், காலப்போக்கில் சடங்குகள் ரீதியான சாதியானது,
ஏறக்குறைய இல்லாமல் போய் விட்டது என சொல்லக்கூடிய ஒரு கருத்து இருந்து
வருகிறது. எனவே, சூத்திரர்கள் முதல் எல்லா "உயர் சாதி'யினரையும் தலித்
அல்லாதவர் என்ற ஒரு குழுமமாகவும், மற்றவர்களை தலித்துகளாகவும்
வகைப்படுத்தலாம். வர்ணாசிரமம் என்று சொல்லக்கூடிய சாதியப் படிநிலையில் கூட,
சூத்திரர் என்ற ஒற்றை அடைப்புக்குள் தலித்துகளையும், வரலாறு முழுவதும்
இணைத்தே பார்க்கப்பட்டது. இது, மிகப்பெரிய தவறு. சூத்திரர்களுக்கும்
தலித்துகளுக்கும் இடையில் நிலவும் உண்மையான முரண்பாடுகளைப் பார்க்கத்
தவறுவது ஒரு துரோகச் செயல். சூத்திரர் மற்றும் தலித்துகளுக்கிடையில் பெரிய
அளவிலான அடையாள வேறுபாடுகள் இருக்கின்றன. சூத்திரர்கள் நில உடைமையாளர்கள்;
தலித்துகள் நிலமற்றவர்கள். எனவேதான் நான் சொல்லுகிறேன், சாதிய முரண்பாடுகள்
என்பது தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும்தான். வெகு இயல்பாக
நீங்கள் இதனை நடைமுறையில் பார்க்க முடியும். சூத்திர அடையாளத்தோடு நீங்கள்
எங்கு சென்றாலும் உங்கள் மீது பெரிய அளவில் வெறுப்போ, காழ்ப்புணர்வோ
காட்டப்படுவதில்லை. நீங்கள் தலித் என்று தெரியவந்தால், வெறுப்பும்
காழ்ப்புணர்வும் திடீரென அதிகரிப்பதைப் பார்க்க முடியும். இதுதான் சாதியின்
வேலை.
சாதிப் பிரச்சனை காலங்காலமாக இருந்து வருகிறது. அடிப்படையில் சாதியை எவ்வகையில் புரிந்து கொள்வதென யோசிக்கையில், சாதி என்பது ஒரு பிரிவினை சக்தி. அது ஒரு பிரிவினை சக்தியாக இருக்கும் நிலையில், அம்பேத்கரின் முயற்சியை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் தீண்டத்தகாதவர்கள் என்றும், ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், பட்டியல் சாதியினர் என்றும் ஒன்று திரட்ட முயன்றார். இவை எல்லாம் சாதிகள் அல்ல; இவை தீண்டத் தகாத சாதிகளின் ஒருங்கிணைந்த ஒரு வகுப்பு அல்லது வர்க்கம். ஆனால், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு தலித்துகள் உட்சாதிகளாக உடைபடுகின்றனர். மகாராட்டிரத்தில் எண்ணற்ற உட்சாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். குடியரசுக் கட்சியே கூட பிளவுற்றபோது ஒவ்வொன்றும் உட்சாதிகளாகவே பிளவுற்றன.எல்லா சாதிகளுக்குள்ளும் இயற்கையாகவே உட்சாதிகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் மாலா – மாதிகா ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் இவை இருக்கின்றன. ஒரு உட்சாதியையே எடுத்துக் கொண்டால் கூட, எவராலும் அதனுள் சில உட்சாதிகள் உருவாவதைத் தடுத்து நிறுத்தவோ, இதுதான் கடைசி உட்சாதி என்று முடிவுக்கு வரவோ நிச்சயமாக முடியாது. சாதிக்கு "எப்படிப் பிரிப்பது' என்று மட்டும்தான் தெரியும். சாதியானது படிநிலையை தேடும் ஓர் அமைப்பு. எனவே, அது உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இப்படியான சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நாம் தீர்வைக் கண்டடைய முடியாது.எனவே சாதியை ஒழிக்க விரும்பினால், நாம் முதலில் சாதிக்கு மாற்றான "ஒன்றிணைக்கும்' குணம் கொண்ட அமைப்பு முறைகளை உருவாக்க வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? வர்க்கம்தான். இன்றைய சமூக நிலையே இதற்கு சான்று. ஒவ்வொரு சாதிக்குள்ளும் எல்லா வர்க்கங்களும் உருவாகியுள்ளன. ஒருவேளை, அம்பேத்கர் காலத்தில் இது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். எனவே, தலித் எனும் ஒற்றைக் குடையின் கீழ் அவர்களால் அணி திரட்ட முடிந்தது. எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தாலும், தற்போது தலித்துகளுக்குள் பணக்காரர்களும் இருக்கிறார்கள்; நல்ல பொறுப்புகளில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சாதி ரீதியான பாகுபாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டும் இருக்க நேரிடலாம். அது பற்றி கூட பிரச்சனை இல்லை. பிரச்சனை எதுவென்றால், அவர்களுக்கும், சாதாரண மக்களுக்குமான தொப்புள் கொடி உறவு அறுபட்டுள்ளது.சாதி – ஆளும் வர்க்கத்தின் கைகளில் ஒரு முக்கிய ஆயுதமாக வேலை செய்துகொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களும் மற்றவர்களும் சாதியை லாவகமாகக் கையாளுகிறார்கள். அவர்கள் ஒன்றுமில்லாதவர்களல்லர். அவர்கள் பணக்காரர்களாகவும், ஆளும் வர்க்கமாகவும் இருந்து வருகிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ அவர்கள்தான் பெரும்பான்மையினர். தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும்போது, சட்டங்களைக் கொண்டு வருவதிலும் சாதியை அவர்களுக்கு சாதகமான முறைகளில் பயன்படுத்துகிறார்கள். இது, நாம் இங்கு பேசும் தலித்துகளுக்கு எதிரானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.எனவே, இந்த அடுக்குக்கிடையிலான முரண்பாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் பெரும்பான்மை மக்களை நசுக்கும் இக்கட்டமைப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கள். எனவே, இதனைக் கண்டறிந்து, நசுக்கப்படும் மக்களுக்கிடையே – சாதியைக் கடந்த ஓர் ஒற்றுமையையும் ஒருமைப்பாட் டையும் கொண்டுவர வேண்டும். இதனைச் செய்ய முடியும். சொல்வது எளிது செய்து முடிப்பது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால், நமக்கு செய்வதற்கு எளிதாக இருக்கிறதென்பதற்காக அதனையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், ஏற்கனவே வரலாற்றில் நிறைய நேரத்தையும், ஆற்றலையும் இழந்துவிட்ட நாம், மீண்டும் எதிர்காலத்தில் அதே தவறை செய்தவர்களாவோம்.
சாதிப் பிரச்சனை காலங்காலமாக இருந்து வருகிறது. அடிப்படையில் சாதியை எவ்வகையில் புரிந்து கொள்வதென யோசிக்கையில், சாதி என்பது ஒரு பிரிவினை சக்தி. அது ஒரு பிரிவினை சக்தியாக இருக்கும் நிலையில், அம்பேத்கரின் முயற்சியை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் தீண்டத்தகாதவர்கள் என்றும், ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், பட்டியல் சாதியினர் என்றும் ஒன்று திரட்ட முயன்றார். இவை எல்லாம் சாதிகள் அல்ல; இவை தீண்டத் தகாத சாதிகளின் ஒருங்கிணைந்த ஒரு வகுப்பு அல்லது வர்க்கம். ஆனால், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு தலித்துகள் உட்சாதிகளாக உடைபடுகின்றனர். மகாராட்டிரத்தில் எண்ணற்ற உட்சாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். குடியரசுக் கட்சியே கூட பிளவுற்றபோது ஒவ்வொன்றும் உட்சாதிகளாகவே பிளவுற்றன.எல்லா சாதிகளுக்குள்ளும் இயற்கையாகவே உட்சாதிகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் மாலா – மாதிகா ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் இவை இருக்கின்றன. ஒரு உட்சாதியையே எடுத்துக் கொண்டால் கூட, எவராலும் அதனுள் சில உட்சாதிகள் உருவாவதைத் தடுத்து நிறுத்தவோ, இதுதான் கடைசி உட்சாதி என்று முடிவுக்கு வரவோ நிச்சயமாக முடியாது. சாதிக்கு "எப்படிப் பிரிப்பது' என்று மட்டும்தான் தெரியும். சாதியானது படிநிலையை தேடும் ஓர் அமைப்பு. எனவே, அது உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இப்படியான சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நாம் தீர்வைக் கண்டடைய முடியாது.எனவே சாதியை ஒழிக்க விரும்பினால், நாம் முதலில் சாதிக்கு மாற்றான "ஒன்றிணைக்கும்' குணம் கொண்ட அமைப்பு முறைகளை உருவாக்க வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? வர்க்கம்தான். இன்றைய சமூக நிலையே இதற்கு சான்று. ஒவ்வொரு சாதிக்குள்ளும் எல்லா வர்க்கங்களும் உருவாகியுள்ளன. ஒருவேளை, அம்பேத்கர் காலத்தில் இது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். எனவே, தலித் எனும் ஒற்றைக் குடையின் கீழ் அவர்களால் அணி திரட்ட முடிந்தது. எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தாலும், தற்போது தலித்துகளுக்குள் பணக்காரர்களும் இருக்கிறார்கள்; நல்ல பொறுப்புகளில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சாதி ரீதியான பாகுபாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டும் இருக்க நேரிடலாம். அது பற்றி கூட பிரச்சனை இல்லை. பிரச்சனை எதுவென்றால், அவர்களுக்கும், சாதாரண மக்களுக்குமான தொப்புள் கொடி உறவு அறுபட்டுள்ளது.சாதி – ஆளும் வர்க்கத்தின் கைகளில் ஒரு முக்கிய ஆயுதமாக வேலை செய்துகொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களும் மற்றவர்களும் சாதியை லாவகமாகக் கையாளுகிறார்கள். அவர்கள் ஒன்றுமில்லாதவர்களல்லர். அவர்கள் பணக்காரர்களாகவும், ஆளும் வர்க்கமாகவும் இருந்து வருகிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ அவர்கள்தான் பெரும்பான்மையினர். தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும்போது, சட்டங்களைக் கொண்டு வருவதிலும் சாதியை அவர்களுக்கு சாதகமான முறைகளில் பயன்படுத்துகிறார்கள். இது, நாம் இங்கு பேசும் தலித்துகளுக்கு எதிரானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.எனவே, இந்த அடுக்குக்கிடையிலான முரண்பாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் பெரும்பான்மை மக்களை நசுக்கும் இக்கட்டமைப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கள். எனவே, இதனைக் கண்டறிந்து, நசுக்கப்படும் மக்களுக்கிடையே – சாதியைக் கடந்த ஓர் ஒற்றுமையையும் ஒருமைப்பாட் டையும் கொண்டுவர வேண்டும். இதனைச் செய்ய முடியும். சொல்வது எளிது செய்து முடிப்பது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால், நமக்கு செய்வதற்கு எளிதாக இருக்கிறதென்பதற்காக அதனையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், ஏற்கனவே வரலாற்றில் நிறைய நேரத்தையும், ஆற்றலையும் இழந்துவிட்ட நாம், மீண்டும் எதிர்காலத்தில் அதே தவறை செய்தவர்களாவோம்.
சி.பி.அய். மற்றும் சி.பி.எம். கட்சிகளின் சாதி குறித்த பார்வையை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?
சி.பி.அய்.
கட்சியும் சரி, சி.பி.எம். கட்சி யும் சரி, இரண்டு கம்யூனிஸ்டுகளுமே திவா
லானவர்கள். சாதி – வர்க்கம் என்ற இரட்டை நிலையை உருவாக்கியதற்காக, நான்
ஒட்டுமொத்த கம்யூனிஸ்டுகளையும் குற்றம் சாட்டுகிறேன். எந்த ஒரு நாடானாலும்,
அங்கு நீடிக்கிற சமூகக் கூறுகளை, சிக்கல்களை, நிலவரங்களை கணக்கிலெடுத்துக்
கொண்டே அந்நாட்டின் வர்க்க வேறுபாடுகளை நாம் ஆராய முடியும். இந்த நாட்டின்
உண்மை நிலவரத்தை, சாதியை தவிர்த்து விட்டு அறிய முடியாது. எனவே, இவர்கள்
முன்வைத்த இப்போதும் கவலை கொள்ளச் செய்யும் வர்க்கம் – சாதி எனும் இரட்டை
நிலை இருந் திருக்காது. தனியாக தலித் இயக்கங்களுக்கான ஒரு தேவையும்கூட
இருந்திருக்காது; கம்யூனிஸ்டுகளே சாதிக்கெதிரான போராட்டங்களை
கையிலெடுத்திருக்க முடியும்.இந்தியாவில் இருக்கும் சாதி – வர்க்கம் எனும்
இரட்டைத் தன்மை, மற்ற இரட்டைத் தன்மைகளிலிருந்து ஒரு வகையில்
தனித்தன்மையானது. இந்த இரட்டைத் தன்மை இங்கு பல்வேறு பிரச்சனைகளை
விளைவித்திருக்கிறது. இதற்கெதிராக நாம் தொடர்ந்து உத்வேகத்துடன் போராடத்
தவறுவோமேயானால், ஒருவேளை இந்த இரட்டைத்தன்மை மறைவதற்கேகூட வாய்ப்பில்லாமல்
போகலாம். எனவே, இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கம்யூனிஸ்டுகளே.
குறிப்பாக, தொடக்கக்கால கம்யூனிஸ்டுகள். அவர் கள் முழுக்க முழுக்க
பார்ப்பனியர்களாக இருந்ததோடு, அவர்களுக்கிருந்த புத்தக அறிவைக் கொண்டு
மட்டுமே இந்தியாவில் நிலவும் வர்க்க வேறுபாடுகளைப் பார்த்தனர்.முதன் முதலாக
வர்க்கத்தை வரையறை செய்த லெனின் (மார்க்ஸ் அல்ல) கூற்றுப்படி
பார்ப்போமேயானால், இந்தியாவில் நிலவிய சாதியையும் கணக்கிலெடுத்து, அதனை
உள்ளடக்கியதாகவே வர்க்கம் இருக்க முடியும். வர்க்கமும், சாதியும்
தனித்தனியாக இருந்திருக்க முடியாது.பாபாசாகேப் அம்பேத்கரின் இயக்கத்தையே
எடுத்துக் கொண்டால், அவர் ஒரு மார்க்சிஸ்டாக இல்லாவிட்டாலும்,
மார்க்சியத்தின் சில கூறுகளிலிருந்து முரண்படுபவராக இருந்தாலும்கூட, அவர்
வர்க்கத்தையே முதலில் கையிலெடுத்தார். அவரின் தொடக்ககால எழுத்துகளில்,
சாதியைக் குறிக்கும் இடங்களில், வர்க்கம் எனும் சொல்லையே
பயன்படுத்தியிருக்கிறார். அம்பேத்கரின் வர்க்கப் பார்வை, வெப்பரின்
வர்க்கப் பார்வையோடு ஒத்திருப்பதாக சிலர் சொல்வதை என்னால் முழுமையாக
ஏற்றுக் கொள்ள முடியாது. அம்பேத்கரின் வர்க்கப் பார்வை, வெப்பரின்
கருத்தியலை நோக்கி இருப்பதைப் போலவே, மார்க்சின் வர்க்கச் சித்தாந்தங்களை
நோக்கியும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளின்(என்று சொல்லிக்கொண்டே)
ஒருங்கிணைந்த வர்க்கப் போராட்டங்களில் கைகோக்க, அம்பேத்கர் ஒருபோதும்
தயக்கம் காட்டியதில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரை ஒதுக்கினர்.
இந்தப் பகைமையின் விளைவாக, இன்று தலித்துகள் கம்யூனிஸ்டுகளைத் தம் பெரும்
எதிரிகளாகக் கருதுகிறார்கள். எனவே, சி.பி.அய்., சி.பி.எம். இயக்கங்கள்
உண்மையான வர்க்கப் போராட்டம் எதையும் நடத்தியதாக நான் கருதவில்லை.அதே
வேளையில், தெலுங்கானா போராட்டம் அல்லது தமிழ்நாட்டில் நடந்த தஞ்சாவூர்
போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இப்போராட்டங்களெல்லாம் தன்னெழுச்சியாக,
இயல்பாக முன்னெழுந்த போராட்டங்கள். எவரும் வெளியிலிருந்து அல்லது கட்சியின்
தலைமையிலிருந்து இயக்கியப் போராட்டங்களல்ல. இப்போராட்டங்களில் வெகு
இயல்பாகவே சாதிய உணர்வு அமிழ்ந்து போனது. வர்க்கமும், சாதியுமாகப்
பிரித்துப் பார்க்காமல், அம்மக்கள் ஒன்று திரண்டு நடத்திய
போராட்டங்களுக்கான சான்று இவை. சாதியையும் உள்ளடக்கிய வர்க்கப் பார்வையை
மக்கள் நிராகரிப்பார்கள் என்பதற்கு எதிரான சான்றுகளாக தெலுங்கானா,
தஞ்சாவூர் போராட்டங்களை நான் பார்க்கிறேன். நாம் உண்மையாக உழைப்போமானால்,
இரண்டை ஒன்றாக்க முடியும்.மூன்றாவதாக இன்னுமொரு வலிமையான எடுத்துக்காட்டு
சொல்ல வேண்டுமானால், அம்பேத்கரின் "சுதந்திரத் தொழிலாளர் கட்சி'.
இந்தியாவின் முதல் அரசியல் கட்சி இது என்பதைக் காட்டிலும் முதல் இடதுசாரி
கட்சி என்பது மிக முக்கியமானது. அப்போது கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ்
இயக்கத்திற்குள் ஒரு சோசியலிஸ்ட் குழுவாக மட்டுமே இயங்கி வந்தனர்; தனி
அரசியல் கட்சியாக உருவாகவில்லை. எனவே, முதல் இடதுசாரிக் கட்சியை தொடங்கிய
அம்பேத்கர், அக்கட்சியை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாகப் பிரகடனம்
செய்ததோடு, வர்க்கத்தையும், சாதியையும் எப்படி இணைக்க முடியும் என்று
கொங்கன் சாலைகளில் நிரூபித்தும் காண்பித்தார். 1937இல் இதர சாதி கொங்கன்
மக்களும், தலித்துகளும் ஒருங்கிணைந்து போராட்டங்களில் களமிறங்கியதையே, "இது
சாத்தியமில்லை' என்று சொல்பவர்களுக்கு நான் பதிலாக தருகிறேன்.
பழங்குடிப் பகுதிகளில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் குறித்து தங்கள் பார்வை என்ன?
மாவோயிஸ்டுகள்
பழங்குடி மக்களுக்காகப் போராட்டத்தை தொடங்கியவர்கள் அல்லர்; அவர்கள்
இந்தியாவில் புரட்சியை உருவாக்கப் போராடி வருகிறார்கள். புரட்சியை நோக்கிய
அவர்களின் செயல்பாடுகளுக்கு சாதகமான, ஆதரவான மக்களை ஒட்டிய இடங்களில் தளம்
அமைக்க வேண்டியிருக்கிறது. இயல்பாகவே அது பழங்குடியினர் வசிக்கும்
பகுதிகளாக இருக்கின்றன. மற்றபடி மாவோயிஸ்டுகளின் செயல்திட்டத்தை பழங்குடி
மக்களுக்கு உதவுவது என்பதாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள
முடியாது.மாவோயிஸ்டுகள் பழங்குடியினப் பகுதிகளில் இயங்கி வந்ததின் முக்கிய
நன்மை என்னவென்றால், அவர்கள் கைவிடப்பட்ட அம்மக்களின் வளர்ச்சிக்கான மாற்று
வழிவகைகளை செயல்படுத்திக் காட்டினர். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில்
புரட்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது என்பதில் எவருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனினும், பழங்குடி மக்களின் கிராமங்களையொட்டி
மாவோயிஸ்டுகள் தளம் அமைத்ததற்கும், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் என்ன நடந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மாவோயிஸ்டுகள்
பழங்குடியினப் பகுதிகளுக்கு 1980களில் இடம் பெயர்ந்தனர். அவர்கள் சுமார் 20
ஆண்டுகளாக சலனமின்றி வேலை செய்து வந்திருக்கிறார்கள். உங்களுக்கு
தெரிந்திருக்கும், பழங்குடி மக்கள் குறிப்பாக அடர்த்தியான காடுகளுக்குள்
தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடிகள் அவ்வளவு எளிதில்
வெளியிலிருந்து வரும் ஆட்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முதலில் அவர்களின்
நம்பிக்கையைப் பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். இதைத்தான்
மாவோயிஸ்டுகள் 20 ஆண்டுகளாகச் செய்தார்கள்.மாவோயிஸ்டுகள் அம்மக்களுக்கு
நிறைய கற்றுத் தந்தனர். மாற்றுப் பாடத்திட்டங்களோடு அங்கே பள்ளிகளைத்
தொடங்கினர். அவர்களுக்கு நவீன பயிரிடும் முறைகளையும், அடிப்படையான பாசன
முறைகளையும் கற்றுத் தந்தனர். இதுபோன்று இன்னும் எத்தனையோ வழிகளில்
அவர்களுக்கு உதவினர். இந்திய அரசுக்கு அப்படி சில கிராமங்கள் இருந்ததே
தெரியவில்லை. 2000 ஆவது ஆண்டிற்குப் பிறகு "ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம்'
என்ற பெயரில் உலகமயமாக்கல் அதிகமாக தலை தூக்கியது. ஆளும் வர்க்கத்துக்கு
உலகமயமாக்கலின் முதல் கட்டம் கொடுத்த உத்வேகத்தில், இரண்டாம் கட்ட
உலகமயமாக்கல் 2005 க்கு பிறகு தீவிரமானது. காடுகளில் பூமிக்கடியில் உள்ள
விலையுயர்ந்த தாதுப் பொருட்களை அவர்கள் குறி வைக்க, இப்பிரச்சனைகள்
வெளியில் தெரியத் தொடங்கின.எனவே, மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்கான
போராளி களா என்று கேட்டால், அவர்கள் பழங்குடி மக்களுக்காகப் போராடினார்கள்.
போராட வேண்டியிருந்தது. ஆனால் அவர்களுடைய இலக்கு
புரட்சியே!மார்க்சிஸ்டுகளிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால், தேர்தல்
பாதையை எப்போது அவர்கள் தேர்ந்தெடுத்தார்களோ அப்போதே அவர்களிடமிருந்த
புரட்சிகரப் பார்வையை கைவிட்டு விட்டனர். பின்னர் பத்தோடு பதினோராவது
கட்சியாக சேர்ந்து, சாதி வாக்குகளை குறிவைக்கும் சராசரிக் கட்சியாகவே
இருந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்கள் மற்ற அரசியல்வாதிகளைவிட
நேர்மையானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு சி.பி.அய்., சி.பி.எம்.
கட்சியின் நிறைய தோழர்கள் மீது மரியாதை உள்ளது. ஆனால், தேர்தல்
கட்டமைப்பில் உள்ள எல்லைகளை அவர்கள் உணர வேண்டும். பல நேரங்களில் பலரும்
அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஒருவேளை உள்ளிருந்தபடியே அவர்கள் தீர்வை
யோசித்துக் கொண்டிருந்தாலும், தீர்வுகள் அத்தனை எளிதல்ல. அதே நேரத்தில்,
இந்தியாவைப் போன்ற ஒரு சிக்கலான நாட்டில் தீர்வுகள் தொடக்கத்தில்
சாத்தியமற்றதாகத் தெரிந்தாலும், சாத்தியம்தான்.
காங்கிரஸ் ஆட்சி மதவாத பா.ஜ.க. வை விட ஓரளவுக்கு தாழ்வில்லை எனும் வெகுமக்கள் கருத்தியலை பினாயக்சென்னுக்கு விதிக்கப்பட்ட தண்டனை,அருந்ததிராய் போன்றோர் மீதான வழக்குகளின் பின்னணியில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
மதவாத
அல்லது மதசார்பற்ற நோக்கில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா
கட்சிகளுக்கிடையே எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாட்டையும் நான்
உணர்ந்ததில்லை. மதவாதம் உச்சகட்டத்தில் உணரப்பட்டபோதும்கூட, இந்த இரு
தரப்புக்கிடையே எந்த பெரிய வேறுபாடும் இல்லை என்றே நான்
சொல்லியிருக்கிறேன். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், ஒன்று வெளிப்படையானது
மற்றொன்று மறைமுகமானது. வெளிப்படையான எதிரி, மறைமுகமான எதிரியைவிட எவ்வளவோ
மேல்! பா.ஜ.க. தன்னை மதச் சார்புள்ள கட்சியாக வெளிப்படையாகவே காட்டிக்
கொள்கிறது. காங்கிரஸ்தான் மதச்சார்பற்ற போர்வையை போர்த்திக் கொள்ள
விரும்புகிறது. அந்த வகையில் காங்கிரஸ் ஆபத்தானது.மற்ற கொள்கைகளைப்
பொருத்தவரையில், அவர்கள் எல்லோருமே "நியோ லிபரல்'கள் என்பதால் எந்த
அடிப்படை வேறுபாடும் இல்லை. அது தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும் சரி,
காங்கிரசானாலும் சரி, வேறு யார் ஆண்டாலும் சரி – அவர்கள் ஒரே கொள்கை களைத்
தான் பின்பற்றுகிறார்கள். உலக முதலாளித்துவத்துக்கு அல்லது இந்திய முகம்
பொருத்திய உலக முதலாளித்துவத்துக்கு சேவகம் செய்வது மட்டும்தான் இவர்கள்
கொள்கை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. நியோ லிபரல் கொள்கை
என்பதும் இதுதான். எனவே, இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது தேவையற்ற
வேலை.அரசியல்வாதிகளோ, அரசு நிர்வாகமோ, நீதிமன்றங்களோ ஏதாவது செய்வார்கள்
என்று எவராவது நம்பினால், அது வெறும் கற்பனையே. ஒட்டுமொத்த எந்திரமும்
குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகவே இயங்கி வருகின்றன. மிகத் தெளிவாக, அந்த
நோக்கம் உலக முதலாளித்துவத்திற்கு பணி செய்வது என்பதைத் தவிர
வேறில்லை.நீதிமன்றங்களிலிருந்து வரும் தீர்ப்புகளைப் பார்த்தால், சில
விஷயங்கள் தெளிவாகப் புரியும். எடுத்துக்காட்டாக, அயோத்தியா வழக்கின்
தீர்ப்பையே எடுத்துக் கொண்டால், பா.ஜ.க. கூட கனவு கண்டிராத ஒரு தீர்ப்பை,
மசூதியின் மய்யப் பகுதியில்தான் ராமன் பிறந்ததாக ஒரு நீதிபதி
தீர்ப்பளிக்கிறார். பினாயக் சென் வழக்கில், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள்
அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வந்தபோதும், ஒரு பாமரனும்
நிராகரிக்கக்கூடிய வலுவற்ற ஆதாரங்களைக் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை
கொடுக்கப்பட்டது. பினாயக் சென் வழக்கானாலும் சரி, நாராயண் சன்யால் உள்ளிட்ட
மூன்று பேர் மீதுமே எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. எனவே,
இவற்றிலிருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.
ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் இன்றைய இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
எளிமையான
சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். தலித் மக்களுக்கு அம்பேத்கர் ஒரு
திசைகாட்டியாக இருக்கிறார். ஆனால், பெரும்பாலும் தவாறன சில காரணங்களின்
பெயரில் அம்பேத்கர் புகழப்பட்டும், வணங்கப்பட்டும் வந்து கொண்டிருப்பதை
நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அம்பேத்கரின் லட்சியம் சாதியை
அகற்றுவது. அம்பேத்கருக்கு முன்னர் மிகச் சிலர் இது குறித்துப்
பேசியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியாய் இருப்பது குறித்தும், உயர்
சாதியை நோக்கி முன்னேறுவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். ஆனால்,
சாதியின் அடிப்படையான படிநிலை அமைப்பு முறையையே ஒட்டுமொத்தமாக அழிப்பது
அம்பேத்கரின் கனவாக இருந்தது.தலித் இயக்கங்களிலேயே சிலர் சாதியை
வலுப்படுத்த வேண்டுமென வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மற்ற சிலர் இதை
வெளிப்படையாகப் பேசாவிடினும், அவர்களின் செயல்பாடுகள் இதனையே
பிரதிபலிக்கின்றன. தலித் அடையாளங்களை வலுப் படுத்த வேண்டி என்றெல்லாம்
காரணம் சொல்லிக் கொள்கிறார்கள். இவை தலித்தியத்திற்கு ஆபத்தானது. தலித்
பிரச்சனைகளுக்காகப் போராட வரும் இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் உழைப்பு சாதியை வலுப்படுத்தாமல், சாதி ஒழிப்பை நோக்கி இருக்க
வேண்டும். இதற்காக சாதி அடையாளங்களை மாற்றிக் கொண்டு தான் வேலை செய்ய
வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஆனால், சாதி ஒழிப்பை இலக் காகக் கொண்டதாக
இருக்க வேண்டும்.தலித்துகளுக்கும், தலித் அல்லாதவருக்கும் இடையிலான சுவர்
பற்றி சொன்னீர்கள். தலித்துகளை ஒடுக்குபவர்களை சாதி அடையாளம் கொண்டு
மட்டுமே பார்க்கத் தேவையில்லை. சாதிய அடையாளத்தோடு பார்த்தால், நில
உரிமையாளர்களான பிற்படுத்தப்பட்ட சாதிகள்தாம் தலித்துகளை ஒடுக்குபவர்கள்.
அதே நேரத்தில் அவர்களை சாதியைக் கொண்டு அடையாளப்படுத்த வேண்டுமா என்ற
கேள்வி எழுகிறது. ஒரே சாதியில் இருந்தாலும், அவர் கள் எல்லோரும் ஒரே
நிலையில் உள்ளனரா? தலித்துகளின் நிலையில் உள்ள எத்தனையோ பேர்
இருக்கிறார்கள். நிலமற்ற தொழிலாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர்
மட்டுமே தலித்துகள்; மற்ற சதவிகிதத்தில் இதர பிரிவினரும் இருக்கிறார்கள்.
தலித்துகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இவர்கள் சந்திக்கும்
பிரச்சனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே, அவர்களுக்கும்
தலித்துகளுக்குமிடையே ஒரு நல்ல தொடர்பும், பாலமும் கட்டமைக்கப்பட்டு, இந்த
இரு தரப்பையும் ஒடுக்கும் நில முதலாளிகளின் சாதிக்காரர்களாக அல்லாமல்,
தலித்துகளுடன் சேர்த்து தங்களை அடையாப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும்.
நான் கிராமங்களில் களப்பணி செய்திருக்கிறேன், இடையில் செயற்கையாக யாராவது
சாதிப் பிரச்சனையை உருவாக்காத வரையில், இயற்கையிலேயே சாதி வெறுப்புடன்
அங்கே மனிதர்கள் வாழ்வதில்லை.
நன்றி, தலித் முரசு
http://www.desathinkural.org/index.php/2011-08-02-10-34-19/10-2011-08-02-10-22-10/230-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87
சனி, 24 நவம்பர், 2012
ஜாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும்
தோழர்களின் கவனத்திற்கு,
தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..
விழித்தெழு இயக்கம்,மும்பை & தமிழ்நாடு (MVI/TVI)
தொடர்புக்கு :-
மகாராஷ்டிராசிரிதரன் துரைசுந்தரம்:-09702481441
தமிழ்நாடு
மகிழ்நன்.பா.ம:- ௦9655345412
இந்திய அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட
சாதி மறுப்புத் திருமணம் போன்றவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டில் சமீபகாலமாக பல ஜாதி சங்கங்கள், மக்கள் மத்தியில் பேசி கலவரத்தைத் தூண்டிவருகின்றனர் ஆகவே
"மக்களை பிழவுப்படுத்தும் ஜாதி அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்து , தடை செய்யகோரி வழக்குகள் தொடங்க உள்ளோம்"
Indian
Penal Code Article 17 of the Constitution of India shall be amended by
incorporating “caste is eradicated”. Moreover all the sangams, business
establishments and marriage bureau functioning in the name of caste is
completely banned”. This shall completely prevent SC & ST from being
subjected to atrocity. This amendment will definitely curb caste domination,
untouchability and atrocities committed against SC&ST.
தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..
விழித்தெழு இயக்கம்,மும்பை & தமிழ்நாடு (MVI/TVI)
தொடர்புக்கு :-
மகாராஷ்டிராசிரிதரன் துரைசுந்தரம்:-09702481441
தமிழ்நாடு
மகிழ்நன்.பா.ம:- ௦9655345412
ஞாயிறு, 18 நவம்பர், 2012
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்-சாவித்ரிபாய் ஃபுலே
இந்தியாவின் முதல் பெண்
ஆசிரியர்
தகவல், தோழர் மாதவராஜ்.
இந்திய தேசத்தின்
சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ஒன்றாகும். மராட்டிய மாநிலத்தின் சத்தரா மாவட்டத்திலுள்ள நெய்காவ் என்ற சிற்றூரில் பிறந்த அவரது
தந்தையார் காந்தோஜி நெவ்சே ஆவார். தாயின் பெயர் லட்சுமி.
வரலாற்றாசிரியர்கள் என்போர் (உண்மையைச் சொல்ல) அஞ்சாதவராக, நல்ல நெறியாளராக, சுதந்திர சிந்தனையாளராக, வெளிப்படையான உள்ளம் கொண்டவராக, உண்மையைத் தேடுபவராக, அந்த உண்மையை எந்த இன்னல் நேர்ந்தாலும் நிறுவத் தயாரானவராக
இருத்தல் வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, வரலாற்றாசிரியர்கள் (உண்மை) சிதைக்கப்பட்ட சித்திரங்களையே எடுத்துக் காட்டியுள்ளனர்; உண்மையை ஒருபோதும் அவர்கள் மக்களுக்குச் சொல்லவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் வரலாற்றைப் புனைவுக்கதைகளோடு குழப்பிக் கொள்ள
நேர்கிறது. மக்களைப் பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ இயலாதோராக மாற்றிவிட்டனர் வரலாற்றாசிரியர்கள். பகுத்துப் பார்த்தறிய இயலாதவர்களாக அவர்களை முடக்கிவிட்டனர்.
கீழ்மட்ட மக்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றை
முதன்முதலாகத் துவக்கிய சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது பிறந்த நாள் (ஜனவரி 3) ஏன் 'ஆசிரியர் தினமாக'க் கொண்டாடப்படுவதில்லை என்று நான் எப்போதுமே வியப்பதுண்டு.
மகாத்மா ஜோதிபா ஃபுலே அவர்களும், சாவிதிரிபாய் ஃபுலே அவர்களும் தான் சாதிய போக்குக்கும், பார்ப்பனிய-சாதிய கலாச்சாரத்திற்கும்
எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களில்
முதன்மையானவர்கள். மராத்திய மண்ணின் இந்தத் தம்பதியினர் பார்ப்பனிய மரபான
அம்சங்களுக்கும், சிந்தனைகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டினர். ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான இயக்கத்தில் சாவித்ரிபாய் சரிசம பங்காற்றினார். முறைப்படியான பாடசாலைக் கல்வி
பெற்றிராதவர்தான் என்றபோதிலும், அவரைப் படிக்குமாறு தூண்டி ஊக்குவித்தார்
மகாத்மா ஜோதிபா ஃபுலே. பின்னாளில் அவர் தமது கணவர் துவக்கிவைத்த பள்ளியின் முதல் பெண்
ஆசிரியரானார். உயர்சாதி ஆசாரம்
கடைப்பிடித்தவர்களது உதாசீனப் பார்வையை சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்த அவரது ஆசிரியப்பணி அத்தனை
இலகுவானதாயில்லை. அவர்கள் பல முறை இவர் மீது கற்களை எறியவும், சாணத்தை வீசவும்
செய்தனர். இந்த இளம் தம்பதியினர் எல்லாத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும்
சந்திக்க வேண்டியிருந்தது. பாடசாலையை நோக்கி அடியெடுத்து வைக்கும்
போதெல்லாம் ஒரு நாள் விடாது சாவித்ரிபாய் அவர்கள் மோசமான
சங்கடங்களை எதிர்கொண்டார். கற்கள், சேறு மற்றும் கழிவுகளை அவர் கடந்து சென்ற போதெல்லாம்
அவர்மீது விட்டெறிந்தனர். ஆனால், சாவித்ரிபாய் இவை ஒவ்வொன்றையும் அமைதியாகவும் அதே வேளையில் துணிச்சலாகவும் எதிர்கொண்டார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியில் இந்தியா இருந்த
காலத்தில் கவனத்தை ஈர்த்த கவிதைகளைப் படைத்த முதல் பெண்மணி சாவித்ரிபாய் ஃபுலே அவர்கள்தான். ஆங்கிலத்தின் அவசியத்தையும், கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்திச் சொல்லும் நவீனக்
கவிதைகளின் தாய் சாவித்ரிபாய் ஃபுலே.
கல்வி கற்றுக்
கொள், போ
சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள்
வேலை செய்யுங்கள்,அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள்
அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் -
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள், போய் இனியேனும்
கல்வியைப் பெறுங்கள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர்
அனைவரது
துன்பங்களையும் போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம்
எனவே படியுங்கள்,
தகர்த்தெறியுங்கள் சாதியச் சங்கிலிகளை
வீசியெறிங்கள் பார்ப்பனிய வேதங்களை
- சாவித்ரிபாய் ஃபுலே
சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள்
வேலை செய்யுங்கள்,அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள்
அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் -
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள், போய் இனியேனும்
கல்வியைப் பெறுங்கள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர்
அனைவரது
துன்பங்களையும் போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம்
எனவே படியுங்கள்,
தகர்த்தெறியுங்கள் சாதியச் சங்கிலிகளை
வீசியெறிங்கள் பார்ப்பனிய வேதங்களை
- சாவித்ரிபாய் ஃபுலே
தீண்டப்படாதோரின் நிழல்களைத் தீண்டினாலும் தீட்டு என்று
கருதப்பட்டுவந்த காலத்தில் தீண்டப்படாதோரின் தாகத்தைத் தணிக்க தவித்த வாய்க்குத் தண்ணீர் தரக்கூட மனமற்றிருந்த சமயத்தில், சாவித்ரிபாய் ஃபுலே அவர்களும் மகாத்மா ஜோதி ஃபுலே அவர்களும் தீண்டப்படாதோருக்காக தங்கள்
இல்லத்தினுள்ளேயே கிணறு எடுத்தனர். இதைப் பார்த்தாவது பார்ப்பனர்கள் மனம் திருந்தி தீண்டப்படாத
மக்கள்பால் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்
கொள்வார்களா என்று பார்த்தனர். ஆயினும், இது நடந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்றும் கூட தலித் மக்கள் தண்ணிர் உரிமைக்குப் போராடிக் கொண்டுதான்
இருக்க வேண்டியிருக்கிறது.
இழந்துபோன சமூக, கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டுமானால் கல்வி
அவசியம் என்பதை மிகச் சரியாகச் சிந்தித்ததால், ஃபுலே தம்பதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி போதிக்க முன்கை
எடுத்தனர். சாவித்ரிபாய் ஃபுலே 1852ல் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள்
குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை
வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. விதவைப் பெண்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற
அக்கால சமூக வழக்கத்திற்கு எதிராக மும்பயிலும், புனேவிலும் நாவிதர்களின்
வேலைநிறுத்தமொன்றை வெற்றிகரமாக நடத்துமளவு அவர் தீரம் கொண்டிருந்தார்.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு
கடுமையாக உழைத்ததோடு தீர்விற்கான பல
ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் அவர்கள் இருவரும் இலவச உணவு பரிமாறினர். பாதிப்புற்ற மக்களிடையே பணியாற்றிய சாவித்ரிபாய் ஃபுலே, பிளேக் நோயால் தாக்குண்டிருந்த ஒரு
குழந்தைக்கு உதவப் போன இடத்தில் கிருமி தொற்றிக்கொண்டதால்
மரணமடைந்தார்.
ஜான்சி ராணி, லட்சுமிபாய் போன்றோர் பெயரும், காந்தி-நேரு குடும்பத்தினரின் மனைவியர் பெயர்களும், தோழியர் பெயர்களும் வரலாற்று நூல்களில்
இடம் பெற்றிருக்க, சாவித்ரிபாய் ஃபுலே போன்ற சரித்திர
நாயகியின் பெயர் எப்படி விடுபடப் போயிற்று
என்ற கேள்வியை, சிந்திக்கும் திறனுள்ள எவரும் கேட்கவே செய்வர்.
இருண்ட காலத்தில்
உன்னதமான ஆசிரியப் பணியைத் துணிச்சலோடு மேற்கொண்ட சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது சிறப்பினை இந்தியப் பெண்கள் சமூகம் அறியாது. இந்தியப் பெண்கள் கடக்கக் கூடாதென மன்னிக்கவே முடியாத
எல்லைக் கோடுகள் கிழிக்கப்பட்டுவந்ததை
எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிந்தவர் அவர். அதற்காக இன்றைய பெண்கள் சமூகம் அவருக்கு
நன்றி பாராட்ட வேண்டும்.
(பர்தீப் சிங் ஆட்ரி அவர்களின் கட்டுரையை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் எஸ்.வி.வேணுகோபாலன்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)