சனி, 28 செப்டம்பர், 2013

தோழர் நீலவேந்தன் குறிப்பு -- பாரதி வாசன்

தோழர் நீலவேந்தன் அவர்களின் இயற்பெயர் ஸ்ரீதர். இவர் திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் 9.4.1979 அன்று பிறந்தார். இவரது தந்தை பழனிச்சாமி, தாயார் செல்வி ஆவார். இவர் உடன்பிறந்த தங்கை ஸ்ரீமதி.

நீல வேந்தன் தன்னுடைய பட்டயப் படிப்பை 1998ஆம் ஆண்டு முடித்தார். இவர் தன் பள்ளிக் காலங்களிலேயே பெரியாரிய இயக்கக் கொள்கைளில் ஈடுபாடுடன் இருந்து வந்தார். பட்டயப் படிப்பு முடித்த சமயத்தில் இவருடைய தந்தையார் வைத்திருந்த பட்டறையில் ஒரு ஆதிக்க சாதிக்காரன் இவர்களைக் கேட்காமலேயே வேலை செய்து வைத்திருந்த இரும்பு கேட் ஒன்றை எடுத்துச் சென்றுவிட்டான். இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டபின் தோழர் நீலவேந்தன் அவர்களும், அவரின் தந்தையாரும் முடிவு செய்து நம்மைப் போல் நம்முடைய தலித் சமுதாய மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நல்ல சம்பளத்தில் பொறியாளராக ஆகும் வாய்ப்பை உதறித் தள்ளி வழக்கறிஞராக ஆக முடிவு செய்து தன் படிப்பைத் தொடர்ந்தார். வழக்கறிஞர் படிப்பின்போது ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்த அவர் பின்னாளில் தன்னை ஆதித்தமிழர் பேரவையில் இணைத்துக் கொண்டார். பேரவையின் இளைஞரணிச் செயலாளர், பொதுச் செயலாளர், நிதிச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தார். கம்பீரமான குரலும், வசீகரமான பேச்சும் சொல்ல வந்த கருத்தை தெளிவாகவும், அடர்த்தியாகவும் மேடைகளில் சொல்வது இவரின் தனிச்சிறப்பு. அம்பேத்கரியல் வாதிகள் தங்கள் அடையாளமாக நீலச் சட்டையை அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி முதன்முதலில் நீலச் சட்டையை அணிந்தவர் இவர். இன்று தமிழகமெங்கும் நாம் காணும் நீலச்சட்டைத் தோழர்கள் அனைவரும் அணிந்திருக்கும் நீலச்சட்டைக்குப்பின் நீலவேந்தனின் பங்கு முக்கியமாக இருக்கும்.

பேரவை மட்டுமல்லாமல் பெரியாரிய மார்க்சிய இயங்கங்களுடன் நல்ல தோழமையுடன் தொடர்ந்து இயங்கி வந்தவர் தோழர். நீலவேந்தன் அவர்கள். திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன் அனைத்து போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செய்ற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இவரின் 16 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் ஈழத்தமிழருக்கு எதிரான போருக்கு, ராணுவத் தளவாடங்கள் அனுப்பிய இந்திய ராணுவத்தை மே.2, 2009 அன்று கோவை மாவட்டம், நீலம்பூரில் தடுத்து நிறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 81 நாட்கள் சிறையில் இருந்தது, மற்றும் மாவீரர் தின சுவரொட்டி ஒட்டிய வழக்கில் 15 நாட்களும், கூடங்குளத்துக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மறியல் செய்து கைது செய்யப்பட்டு 10 நாட்களும் இவை உள்பட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 163 நாட்கள் சிறையிலிருந்தார்.

பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் பங்கேற்றுள்ளார். ஜாதி ஒழிப்பு, தமிழர் நலனுக்கான போராட்டங்களில் முன்னணி களப்போராளியாகப் பணியாற்றி வந்தார்.

தீக்கதிர், தலித்முரசு, ஆதித்தமிழன், புரட்சிப் பெரியார் முழக்கம், கீற்று உள்ளிட்ட தமிழகத்தின் முற்போக்கு இதழ்களில் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிவந்தார். தமிழகத்தின் அனைத்து முன்னணி தலைவர்களிடையே அறிமுகமாகியிருந்தாலும் ஜி.ராமகிருஷ்ணன், புனிதப்பாண்டியன், கொளத்து///ர் மணி ஆகியோருடன் மிகவும் இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்து வந்தார்.

இவர் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் இருந்தபோது தன் கொள்கைப் பயணத்தின் முடிவாக அருந்ததியர்களுக்ககான 6விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை உறுதிப் படுத்தத் தமிழக அரசை வலியுறுத்தி 26.09.2013 அன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூரில் தீக்குளித்து வீரமரணடைந்தார்.

1 கருத்து: