செவ்வாய், 29 மே, 2012

 பெட்ரோலின் சுவை... கசப்பு!


பெட்ரோலின் சுவை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. ஆனால், இரு சக்கர வாகனங்களில் நித்தமும் வாழ்க்கையை ஓட்டும் நடுத்தர மக்கள், அதன் சுவையை கசப்பாகவே உணர்வார்கள். நினைத்தபோதெல்லாம் ஏற்றுவதும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடன் பளு தாங்காமல், திருவோடு தூக்குகிற நிலைக்கு வந்து விட்டதாக திரும்பத் திரும்பக் காரணம் சொல்லப்படுமேயானால்... இனிக்கவா செய்யும்? ஒரே அடியாக ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைக்கும் நோக்கம் இல்லை; இன்னமும் கூட உயர்த்தப்படலாம் எனவும் தடாலடி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதையெல்லாம் நாம் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் மேல் லாபம் கொழிப்பதும், நாடு பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தை எட்டுவதும், தனிநபர் சுகங்களைக் காட்டிலும் மிக முக்கியமில்லையா? ‘ஏழரை’ ஏறி விட்டதே என்று வருத்தம் தணியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஐபிஎல். சிக்சரையும், சியர் லீடரையும் பார்த்துக் கொண்டிருந்தால் கவலை தீர்ந்து விடாதா?
manmohan_singh_250"சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறி விட்டது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சறுக்கி விட்டது..." என்று அதே பழைய பல்லவிகளைப் பாடி, மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இம்முறை மிகக் கடுமையாகவே. இந்திய பெட்ரோல் விலை உயர்வு வரலாற்றில் முதல் முறையாக... லிட்டருக்கு ஏழு ரூபாய் ஐம்பது பைசா விலை உயர்வை மிகத் துணிச்சலாக அறிவித்திருக்கிறது ஆளும் காங்கிரஸ் அரசு. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்த மறுநாள், மக்களுக்கு இந்தப் பரிசை கொடுத்திருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறார்களாம். நல்லது. பிரதமரும், நிதியமைச்சரும், பெட்ரோலியத் துறை அமைச்சரும் அடிக்கடி சொல்கிற பொதுத்துறை நிறுவனங்கள் எனப்படுபவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் - இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள்தான். கச்சா எண்ணெய் விலை உயர்வால், அப்படி என்ன இவை பிச்சை எடுக்கிற நிலைக்குப் போய் விட்டன என்று விபரமறிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால், கிடைக்கிற தகவல்கள் கிர்ர்ர்றடிக்கின்றன.
நிஜத்தில், கடந்த நிதியாண்டில் இந்த மூன்று நிறுவனங்களும் கோடி, கோடியாய் லாபத்தை வாரித் தட்டியிருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மூன்று நிறுவனங்களுமே நூறு சதவீதத்துக்கும் அதிகமான அளவில் லாபம் பார்த்திருக்கின்றன. அப்புறம் என்ன இழப்பு? அதாவது, சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கிற லாபத்தில், இழப்பு ஏற்பட்டு விடுகிறதாம்.
போன வருடம் 100 ரூபாய் லாபம் கிடைத்தது என்றால், இந்த ஆண்டு 200 ரூபாய் லாபம் பார்த்து விடவேண்டும். அதில் பத்து பைசா குறைந்து விடக்கூடாது. பத்து பைசா குறைந்து விட்டாலும், தலையில் துண்டு விழுகிற அளவுக்கு கடுமையான நஷ்டம்தான்! இரவோடு இரவாக ஏழரை ரூபாய் ஏற்றுவார்கள். குடிமக்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆனால், இதையெல்லாம் துளிக்கூட விமர்சித்து விடக்கூடாது. காரணம், இப்படி ஒரு சூப்பர் பாலிசியை நமக்கு வகுத்து அளித்திருப்பவர் சாதாரணப்பட்டவர் இல்லை. பொருளாதாரத்தில் அவர் மேதை. அதிமேதாவி. அவர், மன்மோகன் சிங். ஆகவே, அவர் உயர்த்தினால், காரணம் இல்லாமல் இருக்காது.
பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தில் துளிக்கூட இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தனது அலுவாலியா... மன்னிக்கவும், அலுவலக சகாக்களுடன் தீர யோசித்து, 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு அட்டகாச அறிவிப்பு வெளியிட்டார். பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை அரசு விலக்கிக் கொள்வது என்பதுதான் அந்த ஐடியா. அதாவது, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை மேற்படி பொதுத்துறை நிறுவனங்களே தங்கள் இஷ்டம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம். தினம் ஒரு முறை கூட உயர்த்திக் கொள்ளலாம். மத்திய அரசு அதில் தலையிடாது. தட்டியும் கேட்காது.
எப்படி ஐடியா...?
பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தில் இனி இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இத்தனைக்கும், மானியம்... மானியம் என்கிற பெயரில் பல ஆயிரம் கோடிகளை அரசு அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்புறமும் என்ன பிரச்னை? ‘விலைவாசியைக் குறைப்போம், விலைவாசியைக் குறைப்பதுதான் அரசின் முதல் வேலை’ என்று தூக்கத்தில் புரண்டு படுக்கிறபோது கூட புலம்பிக் கொண்டிருக்கிற பிரதமருக்கு, பெட்ரோல் விலை உயர்ந்தால், விலைவாசியும் கூடவே உயரும் என்கிற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போனது எப்படி?
நமது பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கெல்லாம், நமக்குக் கிடைத்தது போல ஒரு பொருளாதார மேதை பிரதமராகவோ, அதிபராகவோ வாய்க்கவில்லை. அது, அவர்களது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்பது விவாதத்துக்கு உரிய விஷயம். காரணம், அங்கெல்லாம் பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்பு அடிக்கடி இரவு நேரங்களில் திருடன் நுழைவது போல, திடீரென நுழைவது இல்லை. (பாகிஸ்தானில் 35 ரூபாய் 75 காசு, இலங்கையில் 47 ரூபாய் 04 காசு. இவர்களது ரோல்மாடல் அமெரிக்காவில் கூட 37 ரூபாய் 31 காசுதான் -2010 )
Global Petrol Prices.

http://www.kshitij.com/research/petrol.shtml
 
அப்புறம் எங்கே பிரச்னை...?
நிஜத்தில், அவர்கள் சொல்கிற சர்வதேச கச்சா எண்ணெய் மேட்டருக்கும், நமது பெட்ரோல் விலை உயர்வுக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை. திரும்பத் திரும்பச் சொன்னால், பொய் கூட உண்மையாகி விடும் என்கிற கோயபல்ஸ் தியரி இது. ஒரு பேரல் என்பது 158.76 லிட்டர். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலையில், சுத்திகரிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு, முகவர் கழிவு என்று எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை அதிகப்பட்சம் 50 ரூபாயைத் தாண்டாது.

அதற்கு மேல் நாம் செலுத்துவது எல்லாம் மத்திய, மாநில அரசாங்கங்கள் விதிக்கிற வரி. மத்திய அரசு கஸ்டம்ஸ், எக்சைஸ் வரிகளும், மாநில அரசுகள் விற்பனை, நுழைவு வரிகளும் போட்டுத் தாக்குகின்றன. பெட்ரோலுக்கு விதிக்கிற வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கிற வருவாய் கொஞ்ச நஞ்மல்ல. கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசுக்கும், 90 ஆயிரம் கோடி மாநில அரசுகளுக்கும் பெட்ரோலுக்கு விதித்த வரி மூலம் வருவாயாகக் கிடைத்திருக்கிறதாம். இந்த ஆண்டில், இது இன்னமும் பல மடங்கு அதிகரிக்கும்.


இப்போது, அரசுக்கு முன் வைக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான். லாபத்தில் இழப்பு காண்கிற எண்ணெய் நிறுவனங்களுக்கு மாய்ந்து, மாய்ந்து மானியம் கொடுப்பதற்குப் பதிலாக, பெட்ரோல் மீது ஒட்டுமொத்தமாக வரி விதிப்பை தளர்த்திக் கொண்டால் அல்லது கொஞ்சம் குறைத்துக் கொண்டால்தான் என்னவாம்? பெட்ரோல் விலை காற்றுப் போன பலூன் போல சர்ர்ர்ரென இறங்கி விடுமே! மக்கள் கொண்டாடுவார்களே? மன்மோகன் அரசில் அதற்கெல்லாம் சான்சே இல்லை. காரணம், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு சொல்கிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு என்கிற காரணம் எல்லாம் வடிகட்டின பொய்.
பெட்ரோல் உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட வேறு சில தனியார் நிறுவனங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இவை களத்தில் இறங்கிய பிறகுதான், லாப நஷ்டக்கணக்கில் அரசு அதிக அக்கறை செலுத்தவே ஆரம்பித்தது. லாபத்தில் பத்து பைசா குறைந்தாலும் தனியார் நிறுவனங்கள் சும்மா இருக்குமா? நேரடியாக, தனியார் நிறுவனங்களின் வசதிக்காக... என்று கூறி விலை உயர்வு செய்யமுடியாது. ஆகவே, பொதுத்துறை நிறுவனங்கள் தலையில் பழியை போட்டு, அவர்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற பம்பர் ஆஃபரும் கொடுத்து தனியாருக்கு வால் பிடிக்கிறது, மக்கள் நலம் காக்கவேண்டிய மத்திய அரசு.
ஒவ்வொரு விலை உயர்வின் போதும், இந்தத் தனியார் நிறுவனங்கள் அடைகிற கொள்ளை லாபத்துக்கு அளவே இல்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடினாலும், குறைந்தாலும்... இங்கே எண்ணெய் எடுத்து, விற்றுக் கொண்டிருக்கிற தனியார் நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் தோண்டி எடுப்பதற்கு நேற்று என்ன செலவானதோ, அதேதான் இன்றும் ஆகப்போகிறது. சர்வதேச விலை நிலவரம் இவர்களை பாதிக்கப் போவதில்லை. அது, அங்கிருந்து இறக்குமதி செய்கிறவர்கள் கவலைப்படவேண்டிய விஷயம்.
சர்வதேச விலை நிலவரத்தைக் காரணம் காட்டி, இங்கே விலையைக் கூட்டினால், தனியார் நிறுவனங்களுக்கு அது ஜாக்பாட்தானே? கச்சா எண்ணெய் விலை உயர்வால் இவர்களது உற்பத்திச் செலவு பத்து பைசா கூட அதிகரிக்கப் போவதில்லை. ஆனால், விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்தினால்... அதை சாக்காக வைத்து இவர்களும் உயர்த்திக் கொள்ளலாம். கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது போல எப்பேர்ப்பட்ட ஜாக்பாட் பாருங்கள்! பெட்ரோலியத் தொழில் செய்யும் தனியார் நிறுவனங்களின் லாப விபரக் கணக்கைப் பாருங்கள்.... குப்புறக் கவிழ்கிற இந்திய ராக்கெட்டுகள் போல அல்லாமல், அவை ஸ்டெடியாக மேலே... உயரப் பறந்து கொண்டிருக்கும்.
உழைத்துச் சம்பாதித்ததை எடுத்து, ஒரு லிட்டர் பெட்ரோல் போடுகிற போது, நாம் கொடுக்கிற பணம் எங்கு சென்று கொண்டிருக்கிறது தெரிகிறதா? எஞ்சி இருக்கிற இரண்டு வருட காலத்துக்குள் இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்னும், இன்னும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரத்துக்கு உயர்த்தட்டும். வருவாயைப் பெருக்கி, பொருளாதார வளம் காண அவருக்கு, ஏதோ நம்மால் ஆன இன்னும் சில ஐடியாக்கள்...
* பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக உயர்த்த அனுமதித்தது போல, ரேஷன் கடைகளை இழுத்து மூடி விட்டு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய்... என அத்தியாவசியப் பொருட்களின் விலையை சம்பந்தப்பட்ட கொள்முதல் வியாபாரிகள் தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ள அறிவிப்பு வெளியிடலாம்.
* மருந்து, மாத்திரை, உரம் போன்ற பொருட்களுக்கு அரசு நிறைய மானியம், வரிச்சலுகை அளித்துக் கொண்டிருக்கிறது. அதையும் ரத்து செய்து விடலாம். இருக்கப்பட்டவன், மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு பிழைத்துக் கிடக்கட்டும்.
* சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளுக்கு என்று பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி அழுவானேன்? தனியார் மருத்துவமனைகள் போல, தர்மாஸ்பத்திரிகளிலும் கட்டணம் நிர்ணயித்து விடலாம். முடிந்தவன் சிகிச்சை பெறட்டும். மற்றவன், மரத்தடி வைத்தியனிடம் சூரணம் வாங்கிச் சாப்பிடட்டும்.
- இப்படி இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. உங்களுக்கு தோன்றினால், நீங்களும் கூட ‘அப்டேட்’ செய்யலாம். அரசு கஜானா நிரம்பி வழிய வகை செய்கிற இந்த ஐடியாக்களையும் டாக்டர் மன்மோகன் கையில் எடுப்பாரேயானால்.... நாமெல்லாம் எதிர்பார்க்கிற சுபீட்ச நிலை இந்தியாவுக்கு கூடிய சீக்கிரமே கிடைத்து விடும்.... எகிப்து, லிபியாவுக்குக் கிடைத்தது போல!
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19864 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக