செவ்வாய், 8 மே, 2012

இந்தியா – சீனா – மேற்குலகம்: தமிழரின் நண்பன் யார்?

இந்தியா – சீனா – மேற்குலகம்: தமிழரின் நண்பன் யார்?-பிரபு கண்ணன்முள்ளிவாய்க்காலின் அவலத்தை நெஞ்சில் சுமந்தபடி இன்று உலகின் பல பகுதிகளிலும் நீதி தேடி அலையும் தமிழர் பலருக்கும் ஒரு கேள்வி நெஞ்சைக்  குடைந்து கொண்டு இருக்கிறது. நமது துயரத்தை தீர்க்க யாரை நம்பலாம்?. எவரின் பின்னால் போகலாம்?. இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் அவரவரின்  சொந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் , அவரவர் விருப்பு வெறுப்புக்கு  ஏற்பவும் ஒவ்வொரு பதிலை அவர்களாகவே தேடிக் கொண்டிருக்கிறார்கள். முள்ளி வாய்க்கால் அவலத்தில் இந்தியாவின் பங்கு அசைக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவை இன்னும் நம்பும் தமிழர்கள் “தமிழர்கள்  தங்களது நிலையை வட இந்தியத் தலைவர்களுக்கு எடுத்து சொல்லத் தவறி விட்டனர்.  அதனால் அந்தப் பணியை இனி செய்ய வேண்டும்” என நினைக்கின்றனர். அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் மனித உரிமைகளுக்கு ஓரளவு மதிப்பளிக்கும் என நம்பும் மேற்குலகம் சார்ந்த தமிழர்கள் அமெரிக்காவின் தலைமையை வளைத்துப் போட்டால்  நிலைமை சாதகமாகி விடும் என நினைக்கிறார்கள். அமெரிக்காவை நம்பி ஏமாந்தது போதும். இனி தமிழர்கள் சீனாவுடன் நட்புறவு பாராட்ட வேண்டும் என நினைக்கும்  நண்பர்களும் குறைந்த அளவில் இருக்கிறார்கள். மேற்குறித்த அனைத்து கருத்துக்களிலும்  ஓரளவு உண்மையும் இருக்கிறது. இந்தக் கட்டுரை தமிழர்கள் முன் உள்ள வாய்ப்புக்களையும் ஆபத்துகளையும் அலசுகிறது.
முதலில் இந்தியாவை எந்த அளவு நம்ப முடியும் என பார்க்கலாம். இந்தியா சிங்கள  அரசுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டது என்பதை தமிழர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இந்தியா ஏன் அப்படி செயல்பட்டது என்பதில்  யாருக்கும் தெளிவு இல்லை.  எல்லோரும் நினைப்பது போல இந்தியாவின் சிங்கள சார்பு நிலைக்கு சோனியாவின் பழிவாங்கும் காரணத்தையோ அல்லது மலையாள  அதிகாரிகளின் தமிழர் விரோத போக்கையோ மட்டும் காரணமாக கொள்ள முடியாது.  இந்தியாவின் தமிழர் விரோத நிலையின்  ஆயுளும் , ஆழமும் மிக அதிகம். உற்று நோக்கினால் தமிழருக்கு எங்கெல்லாம் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தியா உடனடியாக தமிழருக்கு எதிராக களத்தில் இறங்குவதைக் காண  முடியும். மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டதில் இருந்து , மலேசியா தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுவது வரை , ஈழத் தமிழரின் இன அழிப்பு  முதல், தமிழக மீனவரின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது வரை இந்தியாவின் தமிழர் விரோத நிலையின் வரலாறு மிக நெடியது. இதில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவில் வெவ்வேறு கட்சிகளின்  அரசுகள் இருந்து  இருக்கின்றன. வெவ்வேறு இன அதிகாரிகள் பொறுப்பில் இருந்து இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களின் ஒட்டுமொத்த தமிழர் விரோத நிலையில் மாற்றம் என்பது  இருந்தது இல்லை.
வேறு எந்தப் பிரச்சினை ஆனாலும் அடித்துக் கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , காங்கிரஸ் கட்சியும் முள்ளிவாய்க்கால்  சம்பவத்தின் போது ஒற்றுமையாக வாய் திறக்காமல் இருந்தது இந்தியக் கட்சிகளிடையே தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடு என்பது எந்த அளவு கட்சி  பேதமின்றி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்துக்களின் பாதுகாவலன் என மார் தட்டிக் கொள்ளும் பாரதீய ஜனதா கட்சி ஈழத்தில் மற்றும் மலேசியாவில் நடைபெறும் கோவில் இடிப்புக்களை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த அளவு தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் இந்தக் கட்சிகள்  ஒற்றுமையுடன் இருக்கின்றன என்பதை பறை சாற்றுகிறது. உலகெல்லாம் சுகந்திரப்  போராட்டத்தை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஈழப் போராட்டத்தை  மட்டும் எதிர்ப்பது அந்தக் கட்சியின் தமிழர் எதிர்ப்பு இன வெறியைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஈழத் தமிழர்களின் உரிமைகளை தடுப்பதில்  மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போல முனைப்புடன் வேறு எந்தக் கட்சியையும் காண்பது அரிது.  அருந்ததி ராய் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூட  ஈழத் தமிழர்கள் விடயம் என்றால் வேறு ஒரு நிலைப்பாடு எடுக்கின்றனர்.
உலக வரலாற்றில்  முதன் முறையாக சொந்த நாட்டு மீனவன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்த நாட்டின் கப்பற்படை அதிகாரி அதை  நியாப்படுத்தியது இந்தியாவில் மட்டும் தான் நடந்து இருக்கிறது. தமிழர்கள் தங்களது நிலையை சக  இந்தியர்களிடம் எடுத்து சொல்ல தவறிவிட்டனர் என்பது ஒரு தமிழர்கள் மீது சுமத்தப்படும் ஒரு மிகப் பெரிய பொய். தமிழக  முதல்வர் மீனவர்கள்  சுடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என நூறு கடிதம் எழுதவதை விட நமது நிலையை  எப்படி புரிய வைக்க முடியும். ஈழத் தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்கு  காரணமானவர்கள் மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என மாநில சட்டசபை  தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மேலாக நமது உணர்வுகளை மத்திய அரசுக்கு எப்படி  தெரிவிப்பது?. ஒட்டுமொத்த தமிழகமும் முத்துக்குமார் போல தீக்குளிக்க வேண்டுமா?. அப்படி நடந்தால் கூட அது இந்தியப் பத்திரிகைகளில் எட்டாம் பக்க செய்தியாகத் தான் வரும்.
ஈழத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கணக்கு இந்த மூன்றாண்டுகளில் என்னவாக  இருந்தது?. தமிழர்களுக்கு ஒரு பலமான தலைமை இல்லாததை இந்தியா ஒரு பெரும் வாய்ப்பாக கருதியது. இந்தியா தனது சொல் பேச்சு கேட்கும் ஈழத் தமிழ் தலைவர்களின் மூலம் ஈழத்தின் வளங்களை தனது நாட்டின் நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என திட்டமிட்டது. தமிழர்களின் அரசியல் தலைமையை  தனதாக்கிக் கொள்வதின் மூலம் சிங்கள அரசுடன் பேரம் நடத்தலாம் என  திட்டமிட்டது. என்ன பேரம்?. தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய தீர்வை முடிந்த  அளவு குறைக்க இந்தியா உதவும். போர்க் குற்ற விசாரணைகளை கொழும்பு எதிர் கொள்வதற்கும் இந்தியா உதவும். அதே நேரம் தமிழர்களுக்கு ஓரளவு அதிகாரம்  கொடுக்க வேண்டும். அந்த அதிகாரமும் தமிழருக்கு உதவி செய்வதற்காக இந்தியா கேட்கவில்லை. இந்த அதிகாரங்களை பயன்படுத்தி ஈழத்தின் வளங்களை தனது பெரும் நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதே இந்தியாவின் ஒரே நோக்கமாக இருந்தது.  இந்தக் கணக்கு இன்று இலங்கை நடந்து கொள்ளும் விதத்தால் சுக்கு நூறாகி  இருக்கிறது.
சிங்கள அரசின் கணக்கு மிக துல்லியமாக இருந்தது.  விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்த பின்னர் இந்தியாவுடன் பேரம் நடத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதை சிங்கள அரசு தெளிவாக உணர்ந்து இருந்தது. ஒரு வகையில் பார்த்தால்  விடுதலைப் புலிகள் அழிவதற்கு முன்னரும் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை  நடத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதை சிங்கள அரசு நன்றாக தெரிந்து வைத்து இருந்தது. இந்திய அரசின் தமிழர் விரோத மன நிலை சிங்கள அரசுக்கு எதிரான நிலையை ஒரு நாளும் எடுக்க விடாது என அது  தெளிவாக புரிந்து வைத்து  இருந்தது. இதனாலேயே இந்தியா கேட்கும் எதையும் கொடுக்க வேண்டிய தேவை சிங்கள அரசுக்கு இருக்கவில்லை. இன்று விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்தியாவின் குறைந்தபட்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய  தேவை கூட சிங்கள அரசுக்கு இல்லை.  சீனாவின் நட்பு சிங்கள அரசுக்கு கூடுதல் பாதுகாப்பாக  இருந்தாலும் உண்மையில் இந்தியாவின் தமிழர் விரோத மனப்பான்மையே சிங்கள அரசுக்கு அரணாக இருந்து இருக்கிறது. அது தொடரும் என இன்னும் சிங்களம் ஆழமாக  நம்புகிறது. அந்த நம்பிக்கையில் உண்மை இல்லாமல் இல்லை.
தான் சொன்னது எதையும் சிங்கள அரசு செய்யவில்லை என்பதை  இந்தியா மிகத் தாமதமாக உணர்ந்து இருக்கிறது. ஆனால் இப்போதும் அதன் தமிழர் விரோத மனப்பான்மை  தமிழருக்கு உண்மையான தீர்வு என்ன என்பதை அது புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. தற்போதைய சிங்கள அரசின் ஆட்சி முறை அமைப்பும் சிங்கள மக்களின் மன நிலையும் தமிழர்க்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு போதும் தீர்வைத் தராது என்பது இந்தியாவின் அதிகார வர்க்கத்தினருக்கு தெளிவாக தெரிந்து  இருக்கிறது. அதே நேரம் தமிழர்க்கு தனி நாடு என்பதை இந்தியாவின் அதிகார வர்க்கத்தால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இந்த முரண்பாடே ஈழத் தமிழரின் அத்தனை அவலங்களுக்கும் இந்தியாவின் அரசியல் மதியூக  தோல்விகளுக்கும் காரணம். இந்தியாவின் மூலமாக தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுக்கலாம் என நம்புபவர்கள் இந்த உண்மையை மனதில் வைத்து செயல்படுவது  நல்லது.
இந்தியா போட்ட அதே கணக்கை அமெரிக்காவும் போட்டது. அதனால் விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் அமெரிக்கா சிங்கள அரசுக்கு பெருமளவில் உதவியது. உலகம் முழுக்க  விடுதலைப் புலிகள் மீதான தீவிரவாத முத்திரையை ஏற்படுத்தியதில் அமெரிக்காவின் பங்கு மிகப் பெரியது. ஆனால் அமெரிக்காவின் கணக்கு முழுக்க  முழுக்க தனது நலன் சார்ந்தது. தற்போது தனது கணக்கு தவறிவிட்டதை உணர்ந்த அமெரிக்கா, சிங்கள அரசை வழிக்குக் கொண்டு வர எடுத்த முதல் நடவடிக்கையே ஐ.நா சபை தீர்மானம். இனி வரும் நாட்களில் அமெரிக்கா சிங்கள அரசிடம் பேரம்  நடத்தும். பேரம் படிந்து விட்டால் ஐ.நா, சபை தீர்மானம் மறக்கடிக்கப்படும். படியாவிட்டால் படிப்படியாக அமெரிக்கா, தமிழர் ஆதரவு எடுப்பதுதான் ஒரே வழி  என்ற நிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. சிங்கள அரசிற்கு அமெரிக்காவுடன் பேரம் நடத்துவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள்  இருக்கின்றன. ஆனால் தமிழருக்கும் ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இங்கே இருக்கிறது.
சீனாவிற்கும் சிங்கள அரசுக்குமான உறவில் எந்த முரண்பாடும் இல்லை. சீனாவிற்கு தனது கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க இலங்கை கடற்பரப்பு தேவை.  இலங்கைக்கு மனித உரிமைகள் குறித்து கேள்வி கேட்காத ஒரு பெரும் சக்தியின்  ஆதரவும் தேவை. இதனால் சீனாவிற்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான நட்பு  என்பது இனி வரும் காலங்களில் இன்னும் பலமாகும். ஆனால் இந்த நட்பே  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளில் தமிழர்க்கு ஆதரவான ஒரு வாய்ப்பையும்  ஏற்படுத்தி தரும்.
இந்த கால கட்டத்தில் தமிழர் செய்ய வேண்டியது என்ன?.
இந்த உலகம் அறத்தின்படி செயல்படவில்லை. எப்போதும் “வல்லவன் வாழ்வான்” என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. இந்த அடிப்படையில் இந்த உலகம் இன்று தமிழர்களை ஒரு பலவீனமான இனமாக  எடை போட்டு  இருக்கிறது. பர்மாவில்  தமிழர்கள் விரட்டப்பட்டதில் இருந்து,  ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்கு  ஆளானது , மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டது ,தமிழக மீனவர்கள் சாவை சொந்த  நாட்டு ராணுவம் நியாயப்படுத்துவது வரை எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் தமிழ்  இனத்தின் பலவீனம். ஒரு இனம் பலவீனமாக இருக்கும்போது உலகம் அதன் வளங்களை கொள்ளையிட ஒரு வாய்ப்பாக பார்க்கிறது.  இதனாலேயே தமிழர்களின் மீது  நடத்தப்படும் தாக்குதல்கள் நாடு,  மதம்,  இடம் போன்ற எல்லா எல்லைகளையும்  தாண்டி அனைத்து தரப்பினராலேயும் நடத்தப்படுகிறது. இந்த உண்மையை ஒவ்வொரு  தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும். நம் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வேறு காரணங்களை நாமே தேடுவது முதலில் நிறுத்தப்பட வேண்டும். இதுவே நமது மீட்சிக்கான முதல் படி.
இன்று உலகின் பல பழங்குடி இனங்கள் அழிந்து விட்டன. தமிழர்கள் தங்களது மொழியையும் , வாழ்வையும் இவ்வளவு நாள் திறமை இல்லாமல் காப்பாற்றி இருக்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடு இல்லாமல் அலைந்த யூத இனத்தவர் இன்று உலகமே வியக்கும் வண்ணம் ஒரு நாட்டை ஆளும்போது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளை ஏற்படுத்திய நம்மால் நமது பிரச்சனைகளை சமாளிக்க முடியாதா?. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை நம்மிடையே உருவாக்குவது தான் நம்முடைய மீட்சிக்கான இரண்டாம் படி.
இன்று நமது இனத்தின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள  நம்மிடம் எந்த ஒரு பலமும் இல்லை. முள்ளிவாய்க்காலில் வானில்  இருந்து  குழந்தைகள் மீது வீழ்ந்த குண்டுகளாக இருக்கட்டும், கூடங்குளம் மக்கள்  போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தமிழர் விரோத நாளிதழ்களின் பொய்களாகட்டும் நம்மிடம் எதிர் தாக்குதல் நடத்த எந்த வளமும்  இன்று இல்லை. தமிழருக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை நொந்து பயனில்லை. அந்தப் பத்திரிகைகளுக்கு இணையான தமிழர் நலன் சார்ந்த ஊடகங்களை நாம் ஏற்படுத்தி தமிழர் விரோத ஊடகங்களை   செல்லாக்காசாக்குவது தான் அறிவுபூர்வமான  போராட்டம்.  நமது  இனத்தின் மீது தொடுக்கப்படும் அனைத்து தாக்குதல்களையும் சமாளிக்கும் வளங்களை உருவாக்குவதே நமது மீட்சிக்கான மூன்றாம் படி.
கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது கை கட்டி வேடிக்கை பார்த்த உலகம் நம்மை இனி வரும் காலங்களில் காப்பற்றும் என நினைப்பதில் அர்த்தம் இல்லை. நமது நிலையை சக தமிழர்களிடம் எடுத்து சொல்லுவோம். நமக்கான அரசியல், கல்வி ,  ஊடக கட்டமைப்புக்களை உருவாக்குவோம்.  தமிழர் சமுதாயம் பலமாகவும், ஒற்றுமையாகவும் மாற அயராது பாடுபடுவோம். நாம் பலமாவதே நமக்கான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. அதுவே நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே வழி. அதற்கு எந்த குறுக்கு வழியும் இல்லை. எவ்வளவு ரத்தம் சிந்தினாலும் சரி. எத்தனை துயரங்களை சந்தித்தாலும் சரி. நமது பிரச்சினைகள் தீரும் வரை ஒவ்வொரு தமிழரும் பாடுபடுவோம்.
இந்தியா , சீன , அமெரிக்கா , ஐரோப்பா எல்லாருடனும் பேசலாம். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்வோம்.  தன் கையே தனக்குதவி!

பிரபு கண்ணன்

நன்றி
siragu .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக