சனி, 28 ஜனவரி, 2017

பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப்

பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப்

 
 
பவுத்தத்தை மிகத் தெளிவாகச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான்.
மார்க்ஸ் முல்லர், பி.எச்.ஹட்சன், வில்லியம் கெய்கி, செர்பட்ஸ்கி, நியூமன், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, அரிபிரசாத், சரத் சந்திரதாஸ், இராகுல சாங்கிருத்தியாயன், மயிலை சீனிவாசன், நா.வானமாமலை, ப.ராமசாமி போன்ற அறிஞர் பெருமக்கள் பவுத்தத்தை நன்கு ஆய்வு செய்திருக்கிறார்கள். அம்பேத்கரும் ஆய்வு செய்தார். ஆயினும் பாபாசாகேப் அம்பேத்கர் மட்டுமே ஆய்வுடன் நிற்காமல், அதைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
 
பவுத்தம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கிறது. புத்தரால் சொல்லப்பட்ட பவுத்தம், அது தேரவாதம். புத்தர் பெயரால் திரித்துச் சொல்லப்பட்ட பவுத்தம், மகாயானம்.
 
தேரவாதம் ஆரியத்திற்கு எதிரான ஒரு சமூக எழுச்சி இயக்கம். மகாயானம் - ஆரியவாதம், சூனியவாதத்தை உள்ளடக்கிய ஒரு மதம். தேரவாதம் திராவிடர்களுக்கான இயக்கம் - மதம் அன்று. மாகாயானம் ஆரியர்களால் வடிவமைக்கப்பட்டது, மதம் ஆனது.
 
இவை இரண்டும் புத்தரின் மரணத்திற்குப் பின்னர், ஒன்றோடு ஒன்று குழம்பியது. பவுத்தத்திற்குள் நுழைந்திருந்த பார்ப்பனத் துறவிகள் புத்தரின் நேரடிக் கருத்துகளைச் சிதைத்தார்கள், கொள்கைகளை மாற்றினார்கள், புதிய கற்பிதங்களைச் சேர்த்தார்கள், புத்தரும் அவரின் கோட்டபாடுகளும் மருவின. இப்பொழுது எது நேரிய பவுத்தம் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
 
அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர், “புத்தரின் வாழ்க்கையும், அவரின் கொள்கையும் தெளிவானவை. அதைச் சொல்வதில் முற்றிலும் குழப்பம் நிறைந்துள்ளது” என்கிறார். இக்குழப்பம் தீர பவுத்தத்தை மறுகட்டமைப்பு (புனர்நிர்மாணம்) செய்ய வேண்டியதன் அவசியத்தை அம்பேத்கரின் எழுத்துகள் வலியுறுத்துகின்றன.
 
பவுத்தத்தின் அடிப்படையே நான்கு செய்திகளில் அமைகிறது. உலகியலில் 1. துன்பம் இருக்கிறது. 2. துன்பத்திற்கான தோற்றுவாய் இருக்கிறது. 3.துன்பத்தை நீக்க வழி இருக்கிறது. 4. அத்துன்பத்தை நீக்கியே ஆகவேண்டும். இவைதான் பவுத்தத்தின் அடிப்படை.
 
ஆரியவாத மகாயானம் இதை எப்படிப் பார்க்கிறது?
  1. மனிதனுக்கு அவன் இறக்கும் வரை துன்பம் இருந்து கொண்டே இருக்கும். 2. அத்துன்பத்திற்குக் காரணம் அவன் மனிதனாகப் பிறப்பு எடுத்தது. 3. இத்துன்பம் நீங்க வழி அவன் மீண்டும் மறுபிறப்பு எடுக்கக் கூடாது. 4. மறுபிறப்பு இனி எடுக்காமல், ஆரிய வழியில் வாழ வேண்டும், அதுவே துன்பம் நீங்க வழி. இதைத்தான் இன்றைய பவுத்தர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தக் கருத்தை முற்றிலும் நிராகரித்த பாபாசாகேப் அம்பேத்கர், “இந்த நான்கு அடிப்படைச் செய்திகள் மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாக உள்ளன. இந்த நான்கும் புத்தரின் போதனைகளைத் தகர்ப்பனவாக இருக்கின்றன. இவை புத்தரால் போதிக்கப்பட்ட உண்மையான போதனைகளின் பகுதிகளா? அல்லது பிற்காலத்தில், துறவிகளால் உண்டாக்கிச் சேர்க்கப்பட்டவைகளா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்.
 
துன்பம் பற்றிய நான்கு கோட்பாடுகளைப் புத்தர் சொன்னார் என்பது உண்மையாக இருந்தாலும், மேலே சொன்ன மதம் சார்ந்த, மகாயான ஆரிய பவுத்த மதம் சார்ந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. அம்பேத்கர் சொல்கிறார் :
 
“மதம் வாழ்க்கையின் உண்மைகளோடு தொடர்பு கொண்டதாக இல்லை. கடவுள், ஆன்மா, சொர்க்கம், பூவுலகம் ஆகியவை பற்றிய கோட்பாடுகளையும், யூக அனுமானங்களையும் கொண்டு இருக்கக் கூடாது. கடவுளையும், ஆன்மாவையும் மதம் மையப்படுத்துகிறது. அது தவறு”.
 
பாபாசாகேப் அம்பேத்கரின் இந்த விளக்கம், புத்தரின் கொள்கையை, மதம் சார்ந்ததாக மாற்றம் செய்யப்பட்டதற்கு ஓர் எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம். இப்படி புத்தர் திரிக்கப்பட்டுச் சொல்லப்படுவதைத் தான் குழப்பம் என்றார் அமபேத்கர். அப்படியானால் இதற்கான, சரியான விளக்கம் என்ன?
 
அதையும் பாபாசாகேப் அம்பேத்கரே சொல்கிறார். ‘துன்பம்’ என்ற சொல்லை ‘வர்க்கம்’ என்று போட்டுப் பார்க்கவேண்டும் என்று. உலக அளவில் இருக்கும் வர்க்கம், இந்தியாவில் ‘சாதி’யாக இருக்கிறது என்பதை இங்கே கவனத்தில் இருத்திப் பார்க்க வேண்டும். வர்க்கம், சாதி இரண்டிலும் சமமற்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே வர்க்கம், சாதி போன்ற சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகளே உலகியல் துன்பம், அதற்கான சாரம் என்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.
 
வர்க்கமும் சாதியும் தனியுடைமையாகும் போது, உலகியல் சமூகத் துன்பம் உருவாகிறது. அதாவது முதலாளிய வர்க்கம், ஆதிக்க சாதி என இதைக் கொள்ளவேண்டும்.
 
“தனி மனிதனின் தனியுடைமை என்பது, ஒரு வர்க்கத்திற்கு அதிகாரத்தையும், மற்றொரு வர்க்கத்திற்கு துன்பத்தையும் கொடுக்கிறது” எனகிறார் அம்பேத்கர்.
 
இதையே இன்னொரு வழியில், கடவுள், பூசை, பிரார்த்தனை இவைகளில் புரோகிதர், பூசாரி, குருமார்கள் ஆகிய தீயபுத்திசாலிகள் மூடநம்பிக்கைகளை உருவாக்கி, சமத்துவமற்ற சமூகநிலையை உண்டுபண்ணி அதிகார வர்க்க பீடமாக மதம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் அம்பேத்கர். வர்க்கமும் சாதியும் வேறுவேறு அல்ல என்பது அவரின் மையப்புள்ளி. அதுமட்டுமல்ல, இந்த ஆதிக்க பீடத்திற்கு எதிராக “பதித்” எனும் ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சியுடன் போராட வேண்டும் என்றும் அம்பேத்கர் அழைக்கிறார். இது சாத்தியமா?
 
கொல்லாமையை வலியுறுத்துகிறார், போரை மறுத்து வெறுத்து ஒதுக்குகிறார், அகிம்சையை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புத்தர் சொல்கிறாரே, அதைத் தானே பாபாசாகேப் அம்பேத்கரும் வழிமொழிவார் என்று பிறர் சொல்லலாம்!
 
பாபாசாகேப் அம்பேத்கர் சொல்கிறார், “புத்தர் வன்முறையை எதிர்த்தார். ஆனால், நீதியை ஆதரித்தார். நீதிக்கு அவசியமானால் வன்முறையைப் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார்” என்று சொல்லும் அவர் தொடர்ந்து, வைசாலியின் படைத்தலைவன் சிம்ம சேனாதிபதியிடம், “அமைதியைப் பாதுகாப்பதற்கான எல்லாவழிகளும் தோல்வியடைந்தால், போர் தொடங்குகிறவன் மீதுதான் இம்சையின் பொறுப்பு சாரும். தீய சக்திகளுக்கு ஒருபோதும் பணியக் கூடாது. போர் இருக்கலாம்; ஆனால், அது சுய நல நோக்கத்திற்காக இருக்கக் கூடாது” என்று புத்தர் சொல்வதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
 
இராஜகிருகத்தில் இருந்து நாளந்தா போகும் வழியில் அம்பலத்திக என்ற சோலையில் துறவி சுப்பியர், துறவி பிரம்மத்தரோ இருவருக்குமான தம்மம் பற்றிய சர்ச்சையில் புத்தர் சொல்கிறார், “நாம் போராளிகள். எங்கெல்லாம் தம்மம் அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள் - வாயடைத்து நிற்காதீர்கள்” என்று. இதையும் பதிவு செய்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். இங்கே தம்மம் என்பது ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ நிலைக்கான மனித உறவு என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
இப்பொழுது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்!
புத்தரைப் பற்றியும் அவரது பவுத்தத்தைப் பற்றியும் சொல்வது முற்றிலும் குழப்பமாக இருக்கிறது என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதைத் தொடக்கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் இப்படி விளக்குகிறார்.
“பொதுவாக புத்தர் அகிம்சைத் தத்துவத்தோடு இணைக்கப்படுகிறார். அவருடைய போதனைகள் அனைத்தும் இதுவே என்று கொள்ளப்படுகிறது. உண்மையில் புததரின் போதனைகள் அகிம்சைக்கு அப்பால் பரந்துபட்டு இருக்கிறது என்பதை எவரும் சரிவர உணரவில்லை”.
 
இங்கே அகிம்சைக்கும் அப்பால் பரந்து பட்டிருப்பவை என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வது, வேதம், ஸ்மிருதி, பிறப்பின் படிநிலை, சதுர்வர்ணம், மதம், சாதி இவை போன்ற மூடக்கருத்துகளால், ஆதிக்கத்தால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சமத்துவமற்ற சமூகத்திற்கு எதிராக, சமத்துவத்தை ஏற்படுத்த புத்தர் சொன்ன புரட்சிகர சிந்தனைகள், அதற்காக அவர் உருவாக்கிய சமூக எழுச்சிப் பவுத்த சங்கம், அவரது போராட்டக் குணம், இவை எல்லாம் அகிம்சைக்குள் அடங்காதவை. இந்தப் போராட்டம் ஆரியத்திற்கு எதிரான சமூகப் போராட்டம்.
 
இப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஆரியம்,ஆரியப் பார்ப்பனர்களால், பவுத்தம் உடைக்கப்பட்டது. புத்தரின் சமூகப் புரட்சிகர சிந்தனைகள் மறைக்கப்பட்டன. அவைகளுக்குப் பதிலாக, அகிம்சை, சீலங்கள் என்ற ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகள், புத்தரின் அவதாரங்கள், தனிமனிதத் துன்பம் பற்றிய கருத்துகள் முன்னிறுத்தப்பட்டன. இவைகளை முன்நிறுத்தியது ஆரிய சூன்யவாத மகாயானம்.
 
எனவே புத்தரின் சமூகம் பற்றிய சிந்தனைகள், சந்நியாசியின் சிந்தனைகளாக மாற்றம் பெற்றுவிட்டன. கடவுளை மறுத்த புத்தர் கடவுள் ஆக்கப்பட்டார். பூசை புனஸ்காரங்களை மறுத்த புத்தருக்கே பூசை செய்யத் தொடங்கிவிட்டனர். இவையும் பவுத்தத்தைக் காண்பதில் குழப்பம் விளைவித்தன. இக்குழப்பங்களைக் களைய அம்பேத்கரின் உழைப்பும் முயற்சியும் அளப்பரியன.
 
இறுதியாக அவர் சொல்கிறார், “பவுத்தத்தின் எதிர்காலம் அதன் முரண் அற்ற தன்மையைப் பொறுத்தே அமையும்... இப்பிரச்சினைகளுக்குத் தோழர்கள், விழிப்புறத் தம் பங்களிப்பைச் செய்ய வேண்டும், நம்புகிறேன்”
 
இதன் மையப்பொருள்,
பவுத்தம் மறுகட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்; அல்லது, புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பதே! இது ஒன்றே பவுத்தத்தின் குழப்பம் தீர ஒரே வழி என்பதுதான் புரடசியாளர் டாக்டர் அம்பேத்கரின் தெளிவான சிந்தனை!
 
- எழில் இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக