சனி, 28 ஜனவரி, 2017

வன்கொடுமை பதிவுகள்

நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி போன்ற தலித் பெண்களுக்கு அது நடக்கும் போது தனக்கு சம்பந்தமில்லாதது போல அமைதி காக்கின்றனர். கயர்லாஞ்சியில் கொல்லப்பட்ட சுரேகா – பிரியங்கா இருவரும் ஆதிக்க சாதி பெண்கள் வேடிக்கை பார்க்க ஆதிக்க சாதி ஆண்களால் பிறப்புறுப்பில் கழியடித்துக் கொல்லப்பட்டனர். கேரளாவை சேர்ந்த ஜிஷா கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின்னர் நடந்த தாக்குதலில் குடல் சரிந்து மரித்தார். கலைச்செல்வி கடுமையான சித்ரவதை மற்றும் தாக்குதலுக்குப் பின்னர் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்.
 
நிர்பயா சுவாதி போன்ற ஆதிக்க சாதி பெண்களின் கொலைகள் சமூக இயங்கியலுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதே வேளையில் கலைச்செல்வி போன்ற தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள் சமூக இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுவொரு விவாதப் பொருளாக ஆவதே இல்லை. ஊடகங்களும் அறிவுச் சமூகமும் அரசு நிர்வாகமும் மூச்சடைத்து செத்துவிடுகின்றன.
 
இந்தியாவில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் சாதியே அதற்கான நீதியை தீர்மானிக்கிறது. குற்றவாளி ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்து பாதிக்கப்படைகிறவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தால் அது ஊடகங்களில் ஓர் ஓரமாக செய்தியாகும் தகுதி கூட இல்லாதவை ஆகின்றன. ஆனால் குற்றவாளி யாராக இருந்தாலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவராக இருந்து பாதிப்படைகிறவர் ஆதிக்க சாதியினராக இருந்தால் அவ்வளவுதான் அதுவொரு தேசிய பிரச்னை. நாடாளுமன்றத்தில் (ஆதிக்க சாதி) பெண்கள் பாதுகாப்பு சட்டமியற்றும் வரை ஊடகங்கள் அதை விவாதித்துக் கொண்டே இருக்கும்.
 
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் கலைச்செல்வியைப் போல கொடூரமான முறையில் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். யார் அது குறித்து கவலைப்படுவது, பேசுவது, விவாதிப்பது, தடுப்பது? சுரேகாவும் பிரியங்காவும் இருவரும் சுய மரியாதையோடு வாழ முற்பட்டதற்காகவே மகனோடும் சகோதரனோடும் உறவுகொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். அதை மறுத்ததற்காகவே ஊரில் உள்ள பல ஆண்களால் வல்லுறவு செய்யப்பட்டு, பின்னர் உச்சகட்டமாக பிறப்புறுப்பில் மரக்கழிகளை அடித்து கொல்லப்பட்டனர். ஆனால் இந்த கொடூரத்தை ஊடகங்களும் அரசும் மூடி மறைத்தனவே தவிர அதை அம்பலப்படுத்தவில்லை. ஆனால் நிர்பயா விஷயத்தில் என்ன நடந்ததென நமக்குத் தெரியும்.
 
படித்த, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்த, வெள்ளை நிற பெண்களுக்கு கொடுமைகள் நேர்ந்தால் பலருக்கும் ரத்தம் கொதிக்கிறது. அதுவே கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வசதியற்ற, கறுப்பு நிற பெண்களுக்கு ரத்தம் குளிர்ந்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டோர், வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் கூட பாகுபாட்டை சுமக்கின்றனர், கொலையிலும் அநீதி அவர்களை சூழ்ந்து நிற்கிறது.
 
தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது பெண் என்ற காரணத்திற்காக அல்ல… தலித் என்பதற்காக. சாதிதான் அவர்களை வன்புணர்ச்சிக்கு இரையாக்குகிறது. ஆனால் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கான எதிர்வினை பெண் என்ற அடிப்படையில் கூட நிகழ்வதில்லை என்பதுதான் வேதனை. இச்சமூகத்தின் கருணையை, அன்பை, கவனத்தை, ஆதரவைப் பெறத் தகுதியற்றவர்களாக அவர்கள் நாள்தோறும் மடிகின்றனர்.
 
தலித் பெண்கள் சாதியால் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றாமல் பெண்ணுரிமை இங்கே எப்படி சாத்தியப்படும்? பாலின சமத்துவத்தை வேண்டுவோர் முதலில் ஆதிக்கமாகவும் அடிமையாகவும் பெண்களை பிரித்து வைத்திருக்கும் சாதியை வேரறுக்க வேலை செய்ய வேண்டும். அதுவரை சாதியத்தை எதிர்க்காத பெண்ணியம் இங்கே தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறது.
 
– ஜெயராணி
==================================================================
 

குருஞ்சாகுளம்

 
குருதி குடிக்கும் குருஞ்சாகுளம்

தலித் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் கொடுமைகள்


இந்திய மக்கள் தொகையில் 20% தலித் மக்கள்ன் கிராமங்களில் சேரி அல்லது காலனி என்று கூறப்பட்டு ஒதுக்கப்படும் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிலமற்ற விவசாயக் கூலிகள். இவர்களது வாழ்வு உயர்சாதியினர் வீடுகளில் வாழும் மிருகங்களை விடக் கேவலமாக இருக்கிறது. நிலமுள்ள உயர்சாதி மக்களால் மிகவும் மூர்க்கத்தனமாக இந்த தலித் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில் இருந்ததைவிட இவர்கள் நிலமை இன்னும் மோசமாகிக்கொண்டே செல்கிறது.


இந்த தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள நாட்டில் அதிகரித்த்துக்கொண்டே இருக்கின்றன. 1980-ல் இருந்து 1990 வரை ஆண்டுக்கு சராசரியாக 17,000 குற்றங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன. 1971-ல் இருந்து 1980 வரை உள்ள கணக்குப்படி இது 50% அதிகம்.

சமீபத்தில் தலித்துக்களைக் கொல்லுவது அதிகரித்துள்ளது. எப்ரல் 1990லிருந்து மார்ச் 1991 -க்கு இடைப்பட்ட காலத்தில் 650 தலித் மக்கள் நாட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதிகரித்துவரும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன.

* 1957-ல் முதுகுளத்தூரில் கலவரம்
* 1968-ல் கீழ்வெண்மணியில் 42 தலித்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
* 1978-ல் விழுப்புரத்தில் 12 தலித்துக்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்.
* 1979ல் உஞ்சனையில் 5 தலித்துக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
* 1981-ல் புளியங்குடியில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
* 1989-ல் போடிப் பகுதியில் கலவரம் நடைபெற்று தலித் மக்களின் உயிரும், கற்பும், உடமைகளும் சூரையாடப்பட்டது நாமறிந்த ஒன்றே.
* 1991-ல் பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 3 தலித்துக்கள் கொல்லப்பட்டனர்.

பரமக்குடியில் சிந்திய தலித்துக்களின் இரத்தம் காயுமுன் இப்பொழுது மற்றொரு சம்ப்பவம் நடைபெற்றிருக்கிறது.

குருஞ்சாகுளம் என்ற ஊரில் நான்கு தலித் இளைஞர்கள் 14.03.1992 அன்று மிகக் கோரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறனர்.நினைத்தாலே நம் இதயங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன.

குருஞ்சாகுளத்தில் நடந்த்தது என்ன என்பது பற்றி அறிய நேரில் சென்றோம். அம்மக்களுடன் தங்கி அவர்கள் தந்த தகவல்களை தொகுத்து இக்கட்டுரையில் வழங்குகிறோம்.


குருஞ்சாகுளம்:

நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தில் சங்கரன்கோயில், கோவில்பட்டி ஆகிய இரண்டு முக்கியமான ஊர்கள் உள்ளன. சங்கரன் கோயிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் சங்கரன்கோவிலில் இருந்து சுமார் 32கீ.மி தூரத்திலும், கோவில்பட்டியிலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்திலும் குருஞ்சாகுளம் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமம் சங்கரன்கோயில் தாலுக்காவைச் சேர்ந்தது. சுமார் 3 கி,மீ தொலைவில் திருவேங்கடம் என்ற ஊரில் காவல் நிலையம் உள்ளது. குருஞ்சாகுளம் ஒரு தனிப் பஞ்சாயத்தாகும்.


சமூகம் :

வழக்கமாக ஊருக்கு வெளியே காலனி அல்லது சேரி என்று அழைக்கப்படும் பகுதியில் தான் தலித் மக்கள் வாழ்கிறார்கள். குருஞ்சாகுளம் இதற்கு விதி விலக்கு. மேல் சாதியினரையும், தலித் மக்களையும் பிரிப்பது ஊரில் உள்ள மெயின் ரோடு தான்.

ரோட்டிற்கு மேற்கே உயர்சாதியினர் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 350 வீடுகளில் நாயுடுகளும், மற்றும் சுமார் 10 வீடுகளில் தேவர், செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்களும் வாழ்கிறார்கள்.

ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 150 வீடுகளில் பறையர்களும், 25 வீடுகளில் சக்கிலியர்களும் வாழ்கிறார்கள்.

நாயிடு சமூகத்தைச் சார்ந்தவர்கள் தலித் மக்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகின்றனர். தீண்டாமை மிகப்பெரிய சமூகக்கொடுமை என்று அரசு கூறி அதை ஒழிக்க மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டங்கள் குருஞ்சாகுளம் நாயிடுகளைச் சிறிதும் பாதிக்கவில்லை. தீண்டாமையை மிகத் தீவிரமாக இவ்வூர் நாயுடுகள் கடைபிடிக்கிறார்கள். ஒரு சில உதாரணங்களை கூறலாம்.

இவ்வூரில் உள்ள டீக்கடைகளில் இன்னும் தலித் மக்களுக்கு துண்டு கிளாசிலேயே டீ வழங்கப்படுகிறது.
ஊரில் ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழும் பகுதியில் நீராவி என்ற ஊரணி இருக்கிறது. இதில் நாயிடு மக்கள் மட்டுமே கால் கழுவலாம். தலித் மக்கள் உபயோகப்படுத்தவே கூடாது.

பத்து வயது நாயுடு பையன் கூட 60 வயதுடைய தலித் பெரியவரை ‘டேய் இங்கே வாடா’ என்று தான் கூப்பிடுகிறான்.

நீர்த்தேக்க தொட்டிக்கு நாயுடு தெருவிலிருக்கும் கிணற்றில் இருந்துதான் தண்ணீர் ஏற்றப்படுகிறது. தலித் மக்கள் தெருவிலிருக்கும் கிணற்றை இதற்கு பயன்படுத்தவில்லை. காரணம் தலித் மக்கள் தெருவிலிருக்கும் தண்ணீர் தீட்டுப்பட்டதென்று கருதப்படுகிறது.

படித்த தலித் மாணவர்கள் நல்ல சட்டை, பேண்ட்ஸ் போட்டு தெரிவில் நடக்க முடியாது.

தலித் மக்கள் யாரும் நாயிடுகள் தெருவில் சைக்கிளில் ஏறிச்செல்லக்கூடாது.


பொருளாதாரம்:

நாயிடுகள் தான் இவ்வூரில் நிலங்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான தலித் மக்கள் நிலமற்ற விவசாயக் கூலிகள். தலித் மக்களின் வாழ்வு நாயிடுகளைச் சார்ந்தே இருக்கிறது. எனவே பொருளாதாரத்தை வைத்து தலித் மக்களை நாயிடுகள் அடிமைப்படுத்துகின்றனர். மிகக் குறைந்த கூலியே கொடுக்கின்றனர். நாயிடுகளின் கொடுமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறலாம். ஒரு தலித் இளைஞர் ஊரிலிருந்து தலித் மக்களை வெளியூருக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். அவ்வாறு அழைத்துச் சென்றதற்குக் காரணம் வெளியூரில் கூலி அதிகம் கொடுக்கிறார்கள் என்பதே. உள்ளூரில் வேலை இருக்கும் பொழுது எப்படி வெளியூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்று கூறி வேலைக்கு அழைத்துச் சென்ற தலித் இளைஞனை நாயுடுகள் அடித்திருக்கிறார்கள். அதோடு அவருக்கு அதிகமாக அபராதமும் போட, அவர் நாயுடுகளின் காலில் விழுந்து அவ்வளவு அபராதம் கட்ட முடியாது என்று கூற, கடைசியில் அபராதத்தொகையை ரூ.50ஆக குறைத்திருக்கிறார்கள். கடைசியில் அபராதத் தொகையை அந்த தலித் இளைஞர் நாயிடுகளுக்கு செலுத்தியிருக்கிறார்.

1980-; நாராயிணசாமி நாயிடு தலைமையில் விவசாயப் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் குருஞ்சாகுளத்து நாயுடுகளும் சேர்ந்து கொண்டனர். 31.12.1980ல் குருஞ்சாகுளத்தில் நடந்த போராட்டத்தின் போது நாயிடுகள் மந்திரப்பிள்ளை என்ற போலிஸ்காரரைக் கொன்று விட்டனர். அதனால் போலிசார் துப்பாக்கிச் சூசு நடத்த ஆறு நாயிடுகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நினைவுத் தூணும் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. போலிசைக் கொலை செய்தது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது. பத்து ஆண்டுகளாகியும் இது சம்பந்தமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. நாயுடுகள் தங்கள் பண பலத்தால் அதைச் சாதித்துள்ளனர் என பேசப்படுகிறது.

ஊர் புறம்போக்கு நிலத்தை அபகரிப்பதில் நாயிடுகள் வல்லவர்கள். தங்கள் சாதிக்கு பணம் சேர்ப்பதிலும் வில்லர்கள். (அப்படி பணம் சேர்த்ததால் தானே அடாவடித் தனம் பண்ண முடியும்) எடுத்துக்காட்டாகச் சில நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

ஊரைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தை நாயிடுகளே அனுபவிக்கின்றனர். ரோட்டிற்கு கிழக்கே தலித் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை தங்கள் வசப்படுத்தி அதில் பல கட்டிடங்கள் கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளனர். அந்தப் பணத்தைத் தங்கள் சாதிக்கென்று வைத்துக்கொள்கின்றனர்.

புறம்போக்கு நிலத்தில் உள்ள முட்செடிகளை விறகிற்காக தலித் மக்கள் வெட்டக்கூடாது. அதை நாயிடுகள் ஏலத்திற்கு விட்டு, தங்கள் பணத்தைத் தங்கள் சாதி அமைப்பிற்கு வைத்துக்கொள்கின்றனர்.

ஊரில் உள்ள பொது ஊரணியில் தண்ணீர் வற்றியவுடன் அதில் உள்ள கரம்பை மண்ணை ஏலத்திற்கு விடுகின்றனர். அந்தப்பணத்தையும் நாயிடுகளே வைத்துக் கொள்கின்றனர்.

தலித் மக்கள் வைத்திருக்கும் ஆடுகளில் ஒன்று நாயிடுகளின் வயலில் உள்ள பயிரை சிறிது கடித்துவிட்டால், தலித் மக்களில் ஆடுகள் வைத்திருக்கும் அனைவரையும் கூட்டி அபராதம் விதிக்கிறார்கள். ‘என் ஆடு மேயவில்லை’ என்று யாராவது கூறினால் மேய்ந்த ஆட்டிற்கும் தெண்டம், மேயாத ஆட்டிற்கும் தெண்டம்! என்று கூறுகிறார்கள். இத்தகைய அநீதிகளால் தலித் மக்களை இம்சிக்கின்றனர்.

அரசியல்:

இப்பகுதியில் அரசியல் அதிகாரம் முழுவதையும் நாயுடுகளே வைத்திருக்கின்றனர்.

இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் பெயர் திருமதி.சியாமளா. இவர்கள் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்.

இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் திரு.கனக கோவிந்தராஜிலு. இவரும் நாயிடு இனத்தைச் சார்ந்தவர்.

சிறந்த பார்லிமெண்டேரியன் என்று அழைக்கப்படும் திரு.வைகோபால்சாமி (வைகோ)யும் நாயுடு இனத்தைச் சார்ந்தவரே. இவரின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இவ்வூர் குருஞ்சாகுளம் அருகில் இருக்கிறது. இங்குள்ள நாயுடுகளுக்கு நெருங்கிய உறவினர் இவர்.

குருஞ்சாகுளத்து பஞ்சாயத்து தலைவராக இதுவரை நாயுடு இனத்தவர்களே இருந்திருக்கின்றனர். இதுவரை தலித் மக்கள் பஞ்சாயத்து பதவிக்காக போட்டியிட்டதுக்கூட கிடையாது. கடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரு.வெங்கடசுப்பு நாயிடு என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் கூட தலித் மக்களுக்கு ஏற்படவில்லை.

நாயிடுகள் பல கட்சிகளில் இருக்கின்றார்கள். அதேபோல் தலித் மக்களும் பல கட்சியில் இருக்கிறார்கள். தலித் இயக்கங்களைச் சார்ந்து இவர்கள் இருப்பது போலத் தோன்றவில்லை.

கல்வி :

ஊரில் இரண்டு பள்ளிகள் இருகின்றன. உயர்சாதியினர் எட்டாவது வரை ஊள்ள பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி ரோட்டிற்கு கிழக்கே தான் உள்ளது. தலித் மக்களுக்கென்று தனிப்பள்ளி ஒன்று உண்டு. இலுப்பூரணியைச் சாந்த மாசிலாமணி என்பவர் நிர்வாகியாக இருந்து இதை நடத்துகிறார். ஒன்று முதல் ஐந்துவரை இருக்கும் இப்பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கைச் சிறிது அதிகமாகவே உள்ளது. தலித் மக்களில் சுமார் பத்துபேர் பட்டதாரிகளாக இருக்கின்றனர். பலர் மேநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்திருகின்றனர்.

படித்த தலித் இளைஞர்களிடம் விழிப்புணர்வு அதிகம். சாதிக்கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

சில தலித் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக நகரங்களில் இருக்கிறார்கள்.

அதேபோல் நாயிடுகளில் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் தலித் மக்கள் படித்து முன்னேறுவதை நாயுடுகள் விரும்புவது இல்லை.

மதம்

நாயிடுகள் தங்களுக்கென்று நான்கு கோயில்களை வைத்துள்ளனர்.

1.பிள்ளையார் கோயில்
2.காளியம்மன் கோயில்
3.முத்தாலம்மன் கோயில்
4.அய்யனார் கோயில்

சிறுவீட்டம்மன் என்ற தெய்வத்தின் திருநாளையும் நாயுடுகள் கொண்டாடுகின்றனர். இந்த தெய்வத்திற்கு கோயில் கிடையாது. திருவிழா சமயத்தில் மட்டும் தெய்வ வழிபாடு உண்டு.

தலித் மக்களில் சக்கிலியர்களுக்கு கருப்பசாமி கோயில் உண்டு.

மற்ற பிரிவினர்களிடையே பறையர்களில் சுமார் 35 வீட்டினர் கத்தோலிக்க கிருஸ்துவர்கள். இவர்களுக்கென்று ஒரு கோயில் உள்ளது. கழுகுமலை பங்கைச் சார்ந்தது இவ்வூர். கழுகுமலை பங்குக்குழு இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றுவார்.

பறையர்களில் மேலும் 30 வீட்டினர் தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்தவர்கள். இவர்கள் பள்ளியையே ஆலயமாகவும் வைத்திருக்கின்றனர். வாரம் ஒருமுறை பாஸ்டர் வந்து திருப்பலி நிறைவேற்றுவார்.

பறையர்களில் மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள். தலித் மக்கள் வாழும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையில் சிறிது புறம்போக்கு நிலம் உள்ளது. இது எட்டு செண்ட் பரப்பளவு உடையது. அதில் ஒரு செண்டிற்கும் குறைவான இடத்தில் ஸ்ரீகாந்தாரியம்மனின் முகம் தெரியாத சாமியை வைத்து இந்து பறையர்கள் வழிபடுகின்றனர். திருவிழாச் சமயத்தில் மண்ணால் ஸ்ரீகாந்தாரியம்மன் சிலை செய்து வழிபடுவர். சிலசமயம் எட்டு நாட்கள் வரை இத்திருவிழா நடைபெறும். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கரைந்துவிடும் அந்த மண் சிலை.

பறையர்கள் இவ்வாறு மத்ததால் வேறுபட்டிருந்தாலும் மிக மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு மதத்தினர் திருவிழாக் கொண்டாடினால் மற்ற மத்தினரும் வரி கொடுக்கின்றார்கள். மற்ற மதத்தினர் திருவிழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக குருஞ்சாகுளத்துப் பறையர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


பிரச்சினை தோன்றிய வரலாறு

தலித் மக்கள் (இனிமேல் தலித் மக்கள் என்று இங்கே குறிப்பிடும் பொழுது அது பறையர்களை மட்டுமே குறிக்கும். ஏனெனில் சக்கிலியர்கள் பிரச்சினையில் சம்மந்தப்படவில்லை. சம்மந்தப்பட்டவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நாயுடுகளுக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். நாயிடுகளில் யாராவது இறந்துவிட்டால் இவர்கள் தான் மேளம் அடிப்பது, பிணம் எரிப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். அதேபோல நாயுடுகளின் மாடோ, எருமையோ செத்துவிட்டால் அதை இவர்கள் தான் தூக்கி வருகின்றார்கள். இதைப் போன்ற அடிமைத்தனத்தில் இருப்பதாலும், மேலும் மொழியால் இணைந்திருப்பதாலும் - நாயுடுகளும் சக்கிலியர்களும் தெலுங்கு பேசுபவர்கள் - நாயுடுகளுக்குத்தான் விசுவாசமாக இருக்கிறார்களே தவிர, தங்களைப் போல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடும் பறையர்களோடு தாங்கள் சேர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் ஏற்படவில்லை. எனவே பிரச்சினையில் சக்கிலியர்கள் சம்மந்தப்படாததால் அவர்களை விட்டுவிடுவோம்) வாழும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையில் எட்டு செண்ட் புறம்போக்கு நிலம் இருப்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அந்த புறம்போக்கு நிலத்தில் தான் தலித் மக்கள் வழிபடும் ஸ்ரீகாந்தாரியம்மன் கோயில் இருக்கிறது. அங்குதான் விழாக் கொண்ட்டாடுகிறார்கள். அங்கு தான் பள்ளியில் படிக்கும் தலித் மாணவ, மாணவியர்கள் விளையாடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக