புதன், 1 ஏப்ரல், 2009

இந்தியா? தேவையா?

இங்கிலாந்தில் பிறந்த ஒருவன் இந்தியா என்ற கற்பனையால் கட்டப்பட்டுள்ள நாட்டிற்கு வருகிறான். அலுவல் தொடர்பாக மூன்றாண்டுகளாக தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு. இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டி வரும். அய்யய்யோ! எனக்கு இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமே! என்ற அச்சம் அவனுக்கு வந்தால் எவ்வளவு தேவையற்றதோ, அதுபோன்றதொரு அச்சம்தான் இந்திய வல்லாதிக்கதிற்கு கட்டுப்பட்டு வாழும் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்பது.

இந்தி என்பது வடநாட்டு, தென்னாட்டு பார்ப்பன சக்திகளின் சதியால் ஒரு ஓட்டு மாறுப்பாட்டால், விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்ட இந்திய தேசியத்தின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்த துரோகத்திற்கு இன்றும் தமிழனத்திற்கு துரோகம் செய்து காங்கிரசு என்னும் பேராயக் கட்சியே ஆகும்.

தமிழன் இந்தி படித்தால் என்ன?

தமிழன் இந்தி படிப்பதில் தவறில்லை. ஆனால், இந்தி யாருக்கு தேவைப்படுகிறது? வேலைதேடி வெளி வட மாநிலங்களுக்கு போகும் பொழுது தேவைப்படுகிறது. மொழி தெரியாத ஒரு இடத்தில் விழி பிதுங்குவது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். ஜி.யு.போப் தமிழகத்திற்கு தன்னுடைய ஆன்மீக பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு நுழையும் முன்னரே கப்பலிலேயே ஓர் தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டாராம். அதேபோல தன்னுடைய வசதிக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லும் பொழுது தன் திறமையைக் கொண்டு அந்த மாநில, நாட்டு வழக்கு மொழியை கற்றுக் கொள்ள வேண்டியது ஒருவருடைய தனிப்பட்ட ஆர்வத்தை பொருத்தது. அந்த நேரத்தில் மொழிக் கற்றுக் கொள்ள முடியாத இயலாமையை மறைத்துக் கொள்ள தமிழ் நாட்டில் இந்தி கற்பிக்கப் பட்டிருந்தால் நான் கிழித்தெறிந்திருப்பேன் என்று பேசுவது, தூய அயோக்கியத்தனம், கையாலாகாத்தனம். இந்தி படித்திருந்தால் பெரிய பதவிகளுக்கு வரலாம் என்றால், வசதியாக இருக்குமென்றால் வடமாநிலங்களிலிருந்து மும்பை நோக்கியோ, கோவை நோக்கியோ உழைக்க இந்தி தெரிந்த பாட்டளிகள் ஏன் வருகிறார்கள். ஆக, மொழி அல்ல இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான கூறு, மாறாக நாம் இந்த அமைப்பை மாற்ற வேண்டும். நம்மில் மேலோட்டமான, அக்கறையற்ற சிந்தனையை தூண்டும் நுகர்வு பண்பாட்டையும், முதலாளித்துவ நஞ்சையும் வேரறுக்க வேண்டும்.

இந்த மொழிப்பிரச்சனையை பற்றி பேசுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகள்

எதற்காக வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி போகும் சூழல் ஏற்படுகிறது?

தமிழில் படித்தால் ஏன் வேலை கிடைக்காதா?

வேற்று மாநிலங்களில் வேலை பார்க்கும், முன்னிலையில் இருக்கும் அத்தனை தமிழர்களும் இந்தியை சரளமாக தெளிவாக பேசுபவர்களா?

இந்தி தெரிந்ததால் மட்டும்தான் தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைத்ததா?

எதற்காக வேற்று மாநிலங்களுக்கு தமிழன் வேலைதேடி போகும் வாய்ப்பு ஏற்படுகிறது?

சாதிய வன்கொடுமை, கிராமத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைதான் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட சகோதரர்களை நகரத்தை நோக்கி இடம்பெயரச் செய்திருக்கிறது. கிராமத்திலிருக்கும் சாதிய அவலங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத ஒன்றும் உதவாத நடுத்தர வர்க்க, முதலாளித்துவ கூலிக்கூட்டத்தின் முழக்கம்தான் இந்தி ஏன் கட்டாயமாக்கப் படக்கூடாது?என்பது.

அதுமட்டும்மில்லாமல், விவசாயத்தை நம்பியிருந்த ஏராளமான குடும்பங்களை விவசாயப்புரட்சி என்று சொத்தை விதைகளை கொண்டுவந்து, நிலத்தை பாழ்படுத்தும் ரசாயன உரங்களை கொண்டுவந்த இந்த தொலைநோக்கற்ற அரசியல்வாதிகளும் காரணம். அன்று மண்ணள்ளி போட்டது காணாமல், இன்றும் மண்ணள்ளி, ஆற்று மணல் அள்ளி மேலும் விவசாயத்தை கொல்லுகின்றனர்.

ஏழை வயிற்றை கழுவ நகரத்திற்கு ஓடாமல், வேறென்ன செய்வான். அவனுடைய பிள்ளைகளையாவது அறிவாளியாக்கிவிடலாமென்றால், அவர்களுக்கும் மொழிப்பிரச்சனையோடு காத்து நிற்கிறது, இந்த இந்து தமிழ் விரோத இந்திய தேசியம்.

இது மற்ற மாநிலத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் பொருந்தும்.

தமிழில் படித்தால் வேலைக்கிடைக்காதா?

தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா?என்று வினவும் தோழர்களுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி.

இந்தி படித்தால் வேலைக் கிடைக்குமா? கிடைக்கும் என்றால்

மகாராஷ்டிராவில் இந்தி தெரிந்த, தாய் மொழி இந்தியாக கொண்ட கூட்டம் ஏன் அடிப்பட்டது.

இதில் அரசியல் இருந்தாலும், உள்ளே அடங்கியிருக்கும் உண்மை இதுதான்

இந்தி, இந்தி என்று சொல்வது, அந்தந்த மாநிலத்தின் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு தடைவிதிப்பது ஆகும்.

வேற்று மாநிலங்களில் வேலை பார்க்கும், முன்னிலையில் இருக்கும் அத்தனை தமிழர்களும் இந்தியை சரளமாக தெளிவாக பேசுபவர்களா?

வேற்று மாநிலத்தில் மேல்மட்டத்தில் தமிழர்கள் என்று வடநாட்டவர்களால் கருதப்படுகிறவர்கள். பார்ப்பனர்கள். அவர்களுக்கு ஓரளவுதான் இந்தி தெரியுமே தவிர முறையாக தெரியாது. அதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்க காரணம், அவர்களின் சமஸ்கிருத தொடர்பு.

இரண்டாம் உலகப்போரில், ஜப்பானியன் இந்தியாவிற்குள் நுழைந்து கைபற்றிவிட வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தவுடன், ஜப்பான் மொழி கற்க தொடங்கிய தேசபகதர்கள் அல்லவா?

நம் சகோதரர்களை பொறுத்தவரை, தனிப்பட்ட அனுபவத்தில் சொல்லுகிறேன், யாரும் தெளிவான இந்தி பேசுவதில்லை. பேசினாலே இவன் தென்னாட்டுக்காரன் என்று தெரிந்துவிடும்.

ஆனால், நான் இந்தி படிச்சுருந்தா கிழிச்சிருப்பேன்னு சொல்வார்கள்

இந்தி தெரிந்ததால் மட்டும்தான் தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைத்ததா?



இந்தியை தாய்மொழியாக கொண்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்களை, பணிக்கு அமர்த்த இங்குள்ள(மராத்தியத்தில்) உள்ள முதலாளிகள் தயங்குவார்கள். இந்தி அவனுக்கு வேலை பெற்று தருகிறதா? இல்லையே. பின் தமிழர்களுக்கு வேலை பெற்று தந்தது. அவர்களின் உழைப்பேயன்றி வேறேதும் இல்லை. தமிழன் மலேசியா, சிங்கப்பூர், அமேரிக்கா என உலகம் நாடுகள் அனைத்திலும் பரவியிருக்கிறான். அங்கு அவனுக்கு வேலை வாங்கி தந்தது இந்தி என்னும் மொழியா? அல்லது உழைப்பா?

மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கானது, மக்கள் மொழியாக இருக்கும் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் மற்றவை, அவரவர் திறமைக்கேற்ப தேவைக்கேற்ப மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

மாற்று மொழி கற்பிப்பது, பொது கருத்தாக இல்லாமல் போக வேண்டும்.

தமிழ் இன்றும் தமிழகத்து பெரும்பான்மை மக்கள் மொழியாகத்தான் இருக்கிறது, இருக்க வேண்டும். அப்படியிருக்க பெரும்பான்மை மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் உரிமைக்காக போராடும் இயக்கங்கள் போராட வேண்டும். அதுதான் அடிப்படை. தமிழ் வழக்குமொழியாக இருக்கும் வீட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு வேற்று மொழிக்கல்வி என்பது கூடுதல் சுமை, இதில் நல்ல அறிவுத்திறனோடு தேறும் குழந்தைகள் குறைவு. ஆனால், மொழி சரிவர வராததால் தன்னம்பிக்கை இழந்து, தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மை மேலோங்கி உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் இதில் மிகுதி. இந்த கல்விமுறையில் அடிமைகள் உருவாகுவார்களேயன்றி நல்ல மனிதர்கள் அல்ல, அறிவாளிகள் அல்ல.

நான் தாராவிப்பகுதியில் வளர்ந்த தமிழன். தாராவி என்பது தமிழ்நாடு போன்றே தமிழ் பேசும் மக்கள் பரவலாக, வெகுவாக இருக்கும் இடம். சாதிய அமைப்பையும் மும்பையில் அப்படியே கட்டிக் காத்து வருகின்றனர், என்பது வருத்ததிற்குரிய குறிப்பிடத்தக்க செய்தி.

இங்குள்ள தமிழர்கள் வீட்டில் வழக்கு மொழி, ஆனால் தமிழ் வழிக்கல்வி 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே இருக்கிறது. பத்தாம் வகுப்புவரை கன்னட, குசராத்தி மொழிகளுக்கு பள்ளிக்கூட வசதி இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமையின் லட்சணமும் , சாதிய வேற்றுமையும் தமிழர்களுக்கு மட்டும் தாய்மொழியில் படிக்கும் உரிமையை இன்னும் பெற்றுத் தரவில்லை.

ஆதலால், நம் பிள்ளைகள் ஆங்கில கல்வியில் படிக்க வேண்டிய கட்டாயம், ஆதலால் இயல்பாகவே, ஆங்கிலப்பாடம் என்பது கூடுதல் சுமையாகிப் போகிறது, அதோடு, இந்தி, மராத்தி மொழிகளும் சேர்ந்து கொண்டு மொழிச்சுமையையும், பாடச்சுமையையும் கூட்டி விடுகின்றன. இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் ஏன் நடந்தது? அது தவறு.என்று பிதற்றும் கோமாளிகளை மாற்று மொழிகளை படிக்க சிரமப்படும் குழந்தைகளின் செருப்பை பக்கம் வைத்துக் கொண்டு அந்த குழந்தைகளிடம் கேள்வி கேட்க சொல்ல வேண்டும்.

இந்தி படிக்கணுமா? வேண்டாமா? இந்தியை சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இல்லையா?

என்று....

பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் அந்த குழந்தை ஆங்கிலத்தில் கற்றுத் தரப்படும் செய்திகளை அரைகுறையாக கற்றுக் கொள்கிறது. அறிவு வளர்ச்சி தட்டுப்படாமல் வேறென்ன நடக்கும். இந்திக்கும் மராத்திக்கும் கேட்கவே வேண்டாம். அரைகுறையாக மனப்பாடம் செய்து எழுதி விடுகின்றனர். நான் தன்னார்வம் கொண்டு படித்ததால் நம் தமிழ் குழந்தைகளுக்கு இந்தியோ, மராத்தியோ கற்பிக்கும் அளவுக்கு கற்றுக் கொண்டேன். ஆனால், என்னுடன் படித்த பெரும்பாலான மாணவர்களை கேட்டுப்பாருங்கள், மராத்தி மொழியையோ, இந்தியையோ கற்பிக்க சொல்லி. பெரும்பாலானவர்களுக்கு முடியாது.

மாற்று மொழி கற்பிக்கப்பட்டது என்ன பயன் தந்தது. அறிவு வளர்ச்சியை தந்ததா?

மேம்போக்காக இது குறித்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளை முன்னிருத்தி வாதம் செய்கின்றனர். அவர்கள் அப்படித்தான் அடிவருடி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் விழிப்போடு இருந்து சரியான முடிவை எடுக்க வேண்டும், கல்வி முறையை மாற்றும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

1 கருத்து:

  1. அன்பினிய மகிழ்நன் அவர்களுக்கு,
    இன்றுதான் உங்கள் வலைத்தளத்தை வாசிக்கும் அனுபவம் வாய்த்தது. மிகச் சிறப்பாக தேவையான கருத்துகளை சுருக்கமாக தருவதில் உங்கள் எழுத்துகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். வாசித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை இளைஞர்களிடம் நம்பிக்கையை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்த்துகளுடன்,

    புதியமாதவி

    பதிலளிநீக்கு