தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துகிறார்.
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். அதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை வேண்டுமானால் சேரலாம். அதிலும் செயலலிதா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதி தலைமையில் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. மிச்சம் காங்கிரஸ்தான். ஈழச்சிக்கலில் காங்கிரசோடு கொள்கை உடன்பாடு கொண்டுள்ளார் கருணாநிதி என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், சிங்கள அரசைச் சாடியதை விட பிரபாகரனைச் சாடியதே அதிகம்.
பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.
யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?
யுகாஸ்லாவியா மாதிரி ஒரு கட்சி ஆட்சி என்று பிரபாகரன் சொல்லி 24 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பில், பல கருத்தியல் மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, ஏற்கெனவே, அணியம் செய்யப்பட்டிருந்த அவர்கள் கட்சிக் கொள்கைத் திட்டத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். நிகரமை (சோசலிச)க் கண்ணோட்டத்துடன் செயல்படுகிற அமைப்புதான் விடுதலைப்புலிகள் அமைப்பு. இப்பொழுது விடுதலைப்புலிகளை டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF- அமிர்தலிங்கம்) உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்த்தேசியக் கூட்டணியில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மேற்கண்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தாம். தமிழ் ஈழத்தில் 98 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழீழத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் பிரபாகரன். பல்வேறு கருத்துக் கணிப்புகளில் இது நிறுவப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பிரபாகரனோடு கருங்காலி கருணாவை சமப்படுத்திக் கருத்துக் கூறியிருக்கும் ஒன்றே, கருணாநிதியின் பகைமை உணர்ச்சியை அம்பலப்படுத்துகிறது.
மதுரையில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணனை, அதே தி.மு.க.வைச் சேர்ந்த இன்னொரு அதிகாரக் குழுவினர் கொலை செய்தபோது, கருணாநிதி சட்டப்பேரவையில் கூறியதை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். "அண்ணா காலத்திலேயே தி.மு.க.வுக்குள் கோஷ்டி சண்டையும் கொலையும் நடந்ததுண்டு. தூத்துக்குடியில் தி.மு.க.பிரமுகர் கே.வி.கே. சாமியை- தி.மு.க.வில் உள்ள இன்னொரு கோஷ்டிதான் கொலை செய்தது" என்றார். தா.கிருட்டிணன் கொலையை இவ்வாறு ஏன் இயல்பான ஒன்றாகக் காட்டினார்? அக்கொலையில் அவருடைய மகன் மு.க.அழகிரி குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
அதே மதுரையில் தினகரன் ஏட்டில் வந்த ஒரு கருத்துக் கணிப்பில் ஆத்திரமடைந்த அழகிரி கோஷ்டியினர் அந்த இதழின் அலுவலகத்தைச் சூறையாடினர். அவர்கள் மூட்டிய நெருப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர். இப்படிப்பட்ட குடும்பத் தலைவரான கருணாநிதி, ஈழ விடுதலைப்போரில் நடைபெற்ற "சகோதர யுத்தத்தை"ப் பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார். இவர் எப்படி வலுவாக - இந்திய அரசிடம் போர் நிறுத்தம் கோருவார்? இவர் எப்படி ஈழத் தமிழர்களின் துயர்துடைப்பார்?
இவருடைய ஒப்புதலோடுதான் இந்திய அரசு சிங்களப்படைக்கு ஆயுதம் கொடுக்கிறது; படையாட்களை அனுப்புகிறது என்பது இதன்வழி தெரியவருகிறது. "உள்ளுர்த் துப்பு இல்லாமல் மாடு திருட்டுப் போகாது" என்பது பழமொழி. கருணாநிதி, செயலலிதா ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு ஈழப்போரை நடத்தவில்லை என்பது உறுதியாகிறது.
http://www.keetru.com/literature/essays/maniarasan.php
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக