திங்கள், 13 மார்ச், 2017

அம்பேத்கரை நேர் செய்யும் தலித் வரலாறு

ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘தலித் வரலாறு: தலைகீழாக்கத்தை நேர்செய்தல்’ கட்டுரை தலித் மக்களின் வாழ்நிலை பற்றிய எதார்த்தத்தை மறுத்து, அவர்கள் வாழ்நிலை மாற முன்னெடுக்கும் முயற்சிகளை வலுவிழக்க செய்யும் வாதங்களைக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் தலித் மக்களின் சுயசார்பை மறுத்தவர்களின் மீது வெளிப்பட வேண்டிய முதன்மை கோபம் திசைமாறி, தலித் மக்கள் அதிகாரம் பெற பங்களித்த ஒரு தரப்பின் மீது திரும்பியது துரதிருஷ்டவசமானது. தலித்துகள் ஒரு காலத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள் என்ற இழந்த சொர்க்கத்தின் கனவல்ல, அவர்களின் இன்றைய நிலை மாற வேண்டும் என்ற கோரிக்கையின் உத்வேகம். எந்த நிலையில் அவர்கள் முன்பிருந்தாலும் சாதி நிர்ப்பந்திக்கும் தற்போதைய இழிநிலை மாற வேண்டும் என்பது நாகரிக சமூகத்தின் விழைவு. இந்த அடிப்படையிலிருந்தே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தங்கள் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டார்கள். 
‘தீண்டத்தகாதார் யார்?’ என்ற கட்டுரையில் அம்பேத்கர் தலித் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலை முன்பிருந்த முறையை மிகத்தெளிவாக நமக்கு அறியத் தருகிறார். சமூக செல்வாக்கு தொடர்பாக பவுத்தத்துடன் ஏற்பட்ட போட்டியில் அன்றைய பார்ப்பனர்கள் புலால் உணவை மறுத்தார்கள். சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்த பார்ப்பனர்களை ‘போல செய்யும்’ பழக்கம் கொண்ட கீழ் சாதியினருக்கு புலால் உணவில் மாட்டிறைச்சியை மட்டும் தவிர்க்க பொருளாதாரம் இடம் கொடுத்தது. தலித்துகள் ஏனிந்த வழிமுறையைக் கடைபிடிக்கவில்லை என்ற கேள்விக்கு தலித்துகளால் மாட்டிறைச்சியைப் புறந்தள்ளுவது இயலாத ஒன்றாக பொருளாதார ரீதியில் இருந்தது என்று குறிப்பிடுகிறார். இந்த சமூகப்பொருளாதார அழுத்தம் அவர்களை தொடர்ந்து நெருக்கி வந்துள்ளது. கட்டுரையாளர் குறிப்பிடுகின்ற மன்னன் நந்தன் போன்ற உதாரணங்களை அரிதான புறனடை நிகழ்வுகளாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதனை நாம் பெரும்பான்மை தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற்றிருந்ததற்கு சான்றாகக் கொண்டால் தலித்துகளின் வாழ்க்கை சித்திரம் தொடர்பான பரவச நிலைக்குத் தான் நம்மை ஆட்படுத்தும். ‘நீங்கள் தான் முன்னேறியவர்கள் ஆயிற்றே? உங்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?’ என்ற கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டி வரும். மன்னன் நந்தனுக்கு தற்கால சமூகத்திலும் உதாரணம் காட்ட முடியும். குடியரசு தலைவராக கே.ஆர். நாராயணன் இருந்தார். மத்திய அமைச்சர்களாக பலர் இருந்துள்ளனர். முதலமைச்சர்களாகவும் தலித்துகள் இருந்ததற்கு உதாரணங்கள் உள்ளன. ஆனால், இப்போதும் கூட இளவரசன்களும், கோகுல் ராஜ்களும் வெட்டி சாய்க்கப்படும் சமூகத்தில் தலித்களின் உயர்வுக்கு மேற்கண்டவற்றை உதாரணம் காட்டுவது குறியீட்டு மோசடி ஆகாதா?
திராவிட இயக்கத்தின் பார்ப்பனரல்லாதோர் செயல்பாட்டின் முதன்மை சக்தியாக பிற்படுத்தப்பட்டோர் இருந்ததற்குக் காரணம் அம்பேத்கர் விளக்கும் வரலாற்று நிலைமைகள் சம்பந்தப்பட்டது. பார்ப்பனர்களைப் போல செய்தல் நடைமுறையைக் கொண்டிருந்த பிற்பட்ட மக்கள் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் அதனைத் துறந்து முரண்படலை கைக்கொண்டனர். இது புது உந்துவிசையை வரலாற்றுக்கு அளித்தது. இதன் செயலூக்கியாக திராவிட இயக்கம் இருந்தது. சாதியின் அடுக்கு ஒழுங்கை அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைத்துப் போட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களைப் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த நிலையில் புதிய மாற்றத்தின் நிலைமை தலித்துகளின் வாழ்க்கையையும் பண்புரீதியில் பாதித்தது. முழு உரிமையையும் கடந்த நூற்றாண்டின் திராவிட இயக்க எழுச்சியில் தலித் மக்கள் அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது. எனினும் திராவிட இயக்க அரசியல் திறப்பு அதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. அதனை எடுத்துச் செல்வதில் தொய்வுகள் இருக்கலாம்.
தலித் உரிமை கோரல் என்பது கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினையில் முன்வைக்கப்படுகின்ற பொருத்தமற்ற குற்றச்சாட்டு. 18/02/2017 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபையில் நடந்த நிகழ்வுகளை முன்னிட்டு சபாநாயகர் தனபாலின் புகார் மிகவும் அபத்தமானது. தனக்கு சபையில் நேர்ந்தது குறித்து கத்தரிக்காத வீடியோ பதிவை வெளியிட்டு தெளிவாக்கி இருக்கலாம். ஆனால் அதற்கு அவர் முயற்சிக்காமல் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக கூறியது நம்பகத்தன்மையைப் பெறவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தலித் மக்கள் உண்மையாக ஒடுக்கப்படும் களங்களிலிருந்து எழும் அபயக்குரல்களை பாசாங்கானது என்று உதாசீனப்படுத்த பொதுப்புத்திக்கு உதவும் வகையில் இருக்கிறது. அதற்கு வந்த எல்லா எதிர்வினைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சில எதிர்வினைகளின் ஆரவார இரக்கமும், பெருமிதத் தொனியும் கண்டிக்கத்தக்கதே. ஆனால், அவற்றை தகாத தலித் உரிமை கோரலாகவும், தலித் முன்னோடிகளை மறைக்கும் மாபெரும் சதிவலையின் ஒரு பகுதியாகவும் சித்தரிப்பது அவதூறு. தலித் மக்களின் தற்சார்பை நிலைநாட்டும் முயற்சி நல்லது. அது வரலாற்றை நேர் செய்வதாக இருக்கட்டும். துரதிருஷ்டவசமாக அது அம்பேத்கரை நேர் செய்வதாக இருக்கிறது.
- ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக