செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஆதிதமிழர்கள் எப்படி ஆதிதிராவிடர்கள் ஆனார்கள்‬ ??...தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர்.
............................................................................................
சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர். (தமிழாதி – உயர்குல வகுப்பினர் எனக் கூறிக் கொள்வோர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க இந்தச் சொல்லை கையாள்கின்றனர்).
மத்திய காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூலாகிய ‘ஞான வெட்டியான்’ என்ற நூலில் ஆதி திராவிடர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனத்தை ஆண்டதற்கும் அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்று உயர்ந்து நின்றதற்கும் ஆதாரமாக வெள்ளைக் குடையையும், வெண்சாமரத்தையும், கற்கள் பதித்த காதணிகளையும், வாளையும் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆதிதிராவிடர்கள் ஒரு காலத்தில் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வந்தவை எனக் கருதப்படுகிறது.
சுதந்தர இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு வந்த போதிலும் இன்றளவும் ஆதி திராவிடர்கள் ஒதுக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். மரபு வழியில் இவர்களைப் ‘பறையர்’ என்றும் அழைக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.
ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.
அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார், ஆதி திராவிடர் மகாசன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றில் முன்மொழிந்து அதை நிறைவேற்றுமாறு செய்தார். 1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதி திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர். 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை..
1922ம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம் நாள் பஞ்சமர் என்ற இழி பெயர் நீக்கப்பட்டது. (ஆனால் பஞ்சமி நிலம் என்ற சொற்றொடரில் உள்ள பஞ்சமி என்ற சொல் மட்டும் இன்னும் நீக்கப்படாமல் பஞ்சமி நிலம் என்றே வழங்கப்படுகிறது). சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஆதி திராவிடர் என்னும் பெயரை அதிகாரபூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நீதிக்கட்சியினரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது.
இட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரிக் குழுக்கள் ஆகியவற்றால் கல்வித்துறையிலும் அரசுப்பணியிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தைத் தடுத்தும், பஞ்சமர் பெயர் மாற்றத்தால் வைதீக சாதி அமைப்புகளைத் தகர்த்தும் செயல்பட்டது நீதிக்கட்சியின் அரசு. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமலில் இருக்குமென்றும் அரசு தெளிவுப்படுத்தியது. மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் ‘ஆதி திராவிடர்’ என்றும், கன்னட மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்றும் வழங்கிவரும் என்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் பல கொடிகள் மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடியால் ஆதிதிராவிடரின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் தடைபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தகவல் : தமிழ்பேப்பர் இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக