பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று.தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்..
இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்துவிட்டான் திராவிடத் தமிழன்.தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த பத்தாண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.தமிழ்க்கடவுள் என்று போற்றிக்கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன்.. பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான்.மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை..முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.
விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி?பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே! பல கதைகளை புராணம் சொல்லுகிறதே! என நாத்திக பேசவும் விரும்பவில்லை. விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே! சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.
மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது.அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.
விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.
அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது.அது முற்றிலும் இந்து மத ஆட்சிதான்.அப்போது அங்கு விநாயன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை.இடைச்செருகல் தான். பல்லவர் காலத்தில்தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர்.சோ.ந.கந்தசாமி சொல்கிறார்.
முதலாம் நரசிம்மவர்மன் தானைத்தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே "
என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார்.நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார்.திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டுவந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று .தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு.அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானைமுகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டுவந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும் நிற்கிறது.
சரி விநாயகன் தமிழகம் வந்தாகிவிட்டது.விநாக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?
சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்டபோது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார் ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம்பெயர்ந்தது.இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப்போயிருக்கிறது.இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனதுதான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.
சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்.. சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்துகொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டுதான் சமத்துவம் பேசுகிறான்.எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது.கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது.மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.
வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....
என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக்கொள்ளுங்கள்..
http://www.madhumathi.com/2012/09/blog-post_7917.html