புதன், 30 அக்டோபர், 2013

1. பரமக்குடியில் நடத்த துப்பாக்கி சூடுக்கான சம்பத் விசாரணை அறிக்கை 2. தருமபுரி - எரிக்கப்பட்ட கிராமங்கள் - தற்போதைய கள நிலவரங்கள்

செப்டம்பர் 11,2011 அன்று பரமக்குடியில் நடத்த துப்பாக்கி சூடுக்கான சம்பத் விசாரணை அறிக்கை  ..

பரமக்குடியில் அரச படையினர் நிகழ்த்திய தாக்குதல் நியாயமானதே, தற்காப்பிற்காகவே 7 பேரின் உயிரைப் பறித்து, பலரை முடமாக்கினார்கள் அரசபடையினர். – சம்பத் விசாரணை அறிக்கை..

சி.பி.ஐ.விசாரணை நடக்கின்ற போது அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏற்புடையதல்ல மேலும் ஏழு உயிர்கள் பலியானதை நியாப்படுத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது இந்த விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது.


தருமபுரி - எரிக்கப்பட்ட கிராமங்கள் - தற்போதைய கள நிலவரங்கள்

--ரமணி



தருமபுரி சாதிய ஆதிக்க வன்முறையாளர்களால் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் வருகிற நவம்பர் 7ந்தேதியுடன் ஒரு வருடத்தை எட்டப் போகிறது. அக்கிராம மக்கள் 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 7ல் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிக்கப்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வருடம் கடந்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாத நிலை. இன்னும் விடுபட்ட வீடுகளுக்கு இழப்பீடுகள் முழுமையாக சென்றடையவில்லை. அம்மக்கள் எங்கும் செல்ல இயலாமல் கிராமங்களிலேயே இருந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே ரேசன் பொருட்கள், மாவட்ட நிர்வாகத்தின் மற்ற பொருட்கள் வழங்கும் நிலை. தாக்கப்பட்ட மொத்தம் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரு பகுதிதான் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திடம் 3 பங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளது. ஆணையர் சிவண்ணா நேரில் பார்த்தபின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் நிவாரணத் தொகையாக 50,000, இழப்பீட்டுத் தொகை சேதமடைந்ததற்கு ஏற்றாற்போல் வழங்கப்பட்டது. ஆனால் இவற்றில் பாதிக்கப்படாத வீடுகளுக்கு இழப்பீட்டை வழங்கி, பாதிக்கப்பட்ட வீட்டிற்கு இழப்பீடு வழங்காமல் போனது மற்றும், சரிவர மதிப்பீட்டின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் குறைவான தொகையை கொடுத்தது ஆகியவை மக்களிடையே மோதலையும், ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றும் அம்மக்கள் தங்கள் கோரிக்கைக்குப் போராடாத வண்ணம் அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் கடன் (Loan), கடைகள், மாடுகள் போன்ற சில சீர்திருத்தங்களை செய்வதன் வாயிலாக மக்களை பிளவுபடுத்தியுள்ளது.
ஊர்க்கட்டுப்பாடுகள்
குறிப்பாக
  1. தாக்கப்பட்ட கிராம மக்களுக்கு முடிவெட்டுதல் கூடாது,
  2. துணி சலவை செய்யக்கூடாது,
  3. நெல், மாவு அரைத்துத் தரக்கூடாது
  4. வயலில் வேலைக்கு அமர்த்த கூடாது
  5. பால் கூட்டுறவுகளில் பால் வாங்கக்கூடாது
  6. தாழ்த்தப்பட்ட மக்களோடு பேசக்கூடாது.
  7. தாழ்த்தப்பட்டோர் நிலங்களில் டிராக்டர்களை ஓட்டக்கூடாது.
  8. தாழ்த்தப்பட்டோருக்கு கடன் கொடுக்கக்கூடாது,  
இந்த கட்டுப்பாடுகளுக்கு வன்னிய மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. காரணம், தாழ்த்தப்பட்ட மக்களிடம் பொருட்களை விற்பது, வாங்குவது போன்ற பொருளாதார உறவுகளைப் பேணிவந்துள்ள நிலைமை இருந்தது. அவை மீண்டும் தொடர்கிறது. பெரும்பாலும் மக்கள் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவில் உள்ள கொடுக்கல், வாங்கல் உறவை உடைக்கும் வகையில் இக்கட்டுப்பாடுகள் இருப்பதால் வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குறிப்பாக இக்கட்டுப்பாடுகளை ஏற்காத சில வன்னிய குடும்பங்களும் இருக்கின்றன. கொண்டம்பட்டியை அடுத்துள்ள புளியம்பட்டி வன்னிய கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாத 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 
தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசிவந்த வன்னிய அடித்தட்டு மக்கள் ஊர்க்கட்டுப்பாடு என்பதால் பேசக்கூடாது என்று பயந்து மறைந்துபேசும் சூழல். 
தாழ்த்தப்பட்ட ஒருவருடன் பேசியதால் பஞ்சாயத்தில் வன்னியர் ஒருவர் தண்டத்தொகை கட்ட வைக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழல் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றி நிலவுகிறது. குறிப்பாக பத்துபேர் கொண்ட குழுக்களால் ஒவ்வொரு வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமத்திற்கும் சென்று ஊர்க்கட்டுப்பாடுகளை ஒத்துக்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பதற்கான பஞ்சாயத்துக்கள் நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் நெருக்கடிகள்
பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள சாதிய கும்பல் சமூக புறக்கணிப்பை, புதிய சாதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளதால் இம்மக்கள் எங்கும் வேலைக்குச் செல்ல இயலாமல் முடக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், உயர்நீதிமன்றம் அமைத்த வாசுகி தலைமையிலான ஆய்வுக் குழுவும் ஏற்கனவே அம்மக்கள் செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலையைச் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரக வேலையில், தோண்டும் குழிகள் என்பது ஏரி, கால்வாய் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஊர்ப்பகுதியில்தான் அமைந்துள்ளது. அங்கு வரக்கூடாது என்ற நிலை இருப்பதால் அங்கு யாரும் இந்தப் பணி காரணமாக செல்வதில்லை. அப்படியே இந்த வேலை செய்தாலும் தலித் மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதியில் உள்ள ஏரி, கால்வாய்க்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவை நீண்ட நாட்களுக்கு வேலை உத்தரவாதமளிக்கவில்லை. அத்தோடு அப்பணிகள் அங்கு முடிந்தும் விட்டது. ஆதலால் ஊருக்கு அருகாமலேயே செய்த வேலை என்பது போய் மக்கள் அறிமுகமற்ற பகுதிக்குச் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தாட்கோ லோன் கொடுத்துள்ளது. அவற்றில் கறைவை மாடும் வழங்கியுள்ளது. அதனை மேய்ப்பதற்கு சுற்றியுள்ள வன்னிய மக்களின் நிலங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. அவற்றால் வரும் வருமானம் என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், வன்னிய, தலித் பெண்கள் இணைந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வந்தன. அதனை பா.ம.க வன்னிய சாதிவெறியர்கள் சிலர் கலைப்பதற்கான உள்வேலையைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக செல்லன்கொட்டாய் பெண்களும், அருகில் வசிக்கும் நத்தம் கிராமப் பெண்களும் இணைந்த குழுக்களைப் பிரித்து வன்னிய பெண்கள் மட்டுமே கொண்ட குழுக்களை உருவாக்குவது நடக்கிறது. இங்கு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. அதற்கு அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிடையாது. தூண்டும் சில சாதிய சக்திகள்தான் இதனைச் செய்து வருகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேபோன்று நகர்ப்புறங்களில் அனைத்து சாதியைச் சார்ந்த தொழிலாளியையும் அடங்கிய ஆட்டோ ஸ்டேன்ட்டை பா.ம.க ஆட்டோ கிளை என்று திறப்புவிழா செய்யப் போவதற்கான ஆயத்தங்கள் நடக்கிறது என்று ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில், சாதிய வன்முறைக் கும்பலால் வன்னிய பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தாக்கப்பட்டதற்கான நிவாரணக்கோரிக்கை எழுந்தபோது, வன்னிய மக்களுக்கு காவல்துறையின் தேடுதலால் வயலில் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போனது, மாடுகளை மேய்க்க முடியாமல் போனது என எந்த பொருளையும் விளைவிக்க முடியாத நெருக்கடியை சந்தித்த கோரிக்கையும் முன்வந்தது.
 குறிப்பாக வயலில் வேர்க்கடலை செடி அதிகளவு பயிரிடுவார்கள். தாக்கப்பட்ட நேரத்தில் அவை சேதத்தை சந்தித்தது. சில அப்பாவிகளும் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதனால் இரவு நேரங்களில் பெண்கள் மட்டுமே குடும்பத்தை காக்கவேண்டிய நிலை நீடித்தது. இதையும் கூட பெண்களை திரட்டுவதற்கு சாதிவெறி கும்பல் சாதகமாக பயன்படுத்தினார்கள். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பல வன்னிய ஆண்கள் தாங்கள் வைத்திருந்த வியாபார கடைகளை திறக்காமல் மாதக்கணக்காக பூட்டியிருந்ததால் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தனர். இன்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடுவதால் பொருட்கள் விற்க, வாங்க, வேலைக்கு ஆட்கள் இல்லாத பற்றாக்குறையும் வன்னிய உழைக்கும் மக்களிடம் நீடிக்கிறது.
உளவியல் மாற்றம்
ஒட்டுமொத்த வன்னிய மக்களிடம் சாதிய உணர்வு மேலோங்கியுள்ளது. இன்னும் அதற்கான முரண்பாடுகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் உள்ளன. . நண்பனாக இருந்தவன் இன்று பறையன் என்று ஒதுங்கி நிற்கும் சூழல். உழைக்கும் வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களில் சிறுபிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணக்கத்தைப் பேணுகின்றனர்.
மக்கள் அன்றாடம் வாழ்க்கை பிழைப்பிற்கு கவனம் செலுத்துகின்றனர். ஆனால் சங்கங்களாக இயங்கும் இடங்களில்தான் சாதிய உணர்வு மேலோங்கி உள்ளது. முன்பு ஆட்டோக்களில் எந்த சின்னத்தையும் வரையாத தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் இன்று வன்னியர் சங்கத்தின் சின்னத்தை (தீச்சட்டியை) வரைந்து அடையாளப்படுத்தி வருகிறார்கள். (எண்ணிக்கையில் குறைவுதான்) ஆனால் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் கிராம மக்கள் மற்றும் வன்னிய மக்கள் ஒன்றாகத்தான் பயணம் செய்கிறார்கள். உதவியையும் செய்து கொள்கிறார்கள்.
சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகள் மௌனம் காக்கும் சூழல் நிலவுகிறது. வி.சி.கவைச் சேர்ந்த ஒருவரிடம் குற்றவாளியே முன்வந்து தாங்கள் செய்யவில்லை; மதியழகன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே காட்டிக் கொடுக்கும் மனநிலைக்கு சிலர் வந்துள்ளனர். குற்றவாளிகளை காவல்துறைக்கு அடையாளம் காட்டியதற்காக பாதிக்கப்பட்ட மக்களில் சிலரை வெட்டுவதாக பேசி அச்செய்தியை பரப்பி பயத்தை உண்டாக்கி வருகிறார்கள்.
சிறைக்குச் சென்று வந்த குற்றவாளிகளைச் சார்ந்த வீடுகள், சொந்தங்கள் மத்தியில் கடுமையான தலித் மக்கள் மீதான எதிர்ப்பு நிலவி வருகிறது. அவர்கள்தான் முழுக்க பா.ம.க வன்னியர் சங்கத்தில் இணைந்துள்ளனர். இணைந்தவர்கள் தே.மு.தி.க, அதி.மு.க, தி.மு.க என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள குற்றவாளிகள். அதற்கான புள்ளிவிவரங்கள் பட்டியலைத் தோழர்களுடன் சேர்ந்து விசாரித்து வருகிறோம்.
சிறை சென்று வந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகளவு பணமும் கொடுத்து, கறிசாப்பாட்டுடன் விருந்தளித்து பாதுகாக்கும் வேலை நடந்து வருகிறது. இவற்றிலும் முக்கிய ஆட்களுக்குத்தான் பணமும், பராமரிப்பும் கிடைப்பதால் போலீசாரால் தேடப்பட்டதில் மனபாதிப்படைந்த வன்னிய மக்கள் பெரும்பான்மையினர், செய்தவன் தின்றான், நாம எதுக்கும் போகவில்லை; நம்மை மாட்ட விட்டுவிட்டனர் என்று திட்டி சண்டையிடும் குழப்பமும் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒருமாதத்திற்கு முன்பு கொண்டம்பட்டியைச் சேர்ந்த செயராமன் வன்னியர் ஒருவரின் நிலத்தில் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவை மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது. நிலத்தின் சொந்தக்காரரான வன்னிய தொழிலாளி நண்பராகத்தான் இருந்திருக்கிறார். மூன்றுமாதமாக அவரின் காட்டிற்கு வேலை செய்ய அனுமதித்துள்ளார். அதற்காக பா.ம.க தரப்பிலும் சில ஆதிக்க சக்திகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் நிலத்தில்தான் இவை நடந்துள்ளது. பின்பு வன்னிய சாதியைச் சேர்ந்த அக்குடும்பம் சமாதானத்துடன் செலவை ஏற்றுகொண்டு, நஷ்டஈடு தருவதாக ஒத்துள்ளார். அவர் சேர்ந்த கர்த்தானூர் வன்னிய கிராம தலைவர்களிடம் கொண்டம்பட்டி மக்கள் முறையிட்டபோது சமாதானத்துடன் நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஒத்து பேசி முடித்துள்ள நிலையில், சாதிய ஆதிக்க சக்திகள் நுழைந்து அக்குடும்பத்தையும், ஊரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து வழக்கு போடுங்கள் சந்திக்கிறோம் என்று சவால்விட்டு பிரித்துள்ளனர்.
கொண்டம்பட்டி மக்கள் கோபத்தில் உடலை எடுக்கவிடாமல் மறியல் செய்தார்கள். அவற்றில் மக்கள்மீது தடியடி நடத்தப்பட்டு பலர் பலமாகத் தாக்கப்பட்டனர். போலீசை அடித்த சிஆர்.பி,எப்பைச் சேர்ந்த இறந்தவரின் சொந்தக்காரரான ஒருவரைக் கைது செய்ததுடன், இறந்தவரின் உடலை காவல்துறை எடுத்துச் சென்றுவிட்டது.
வன்னிய மக்களிடம் இருக்கும் சாதி உணர்வை சாதிவெறியாக மாற்றுவதற்கு சாதிய பஞ்சாயத்துகளின் தலைமை சக்திகளும், உதிரிகளும்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். உழைப்பில் ஈடுபடுகின்ற அன்றாட கூலி மக்களோ இதற்கு ஏதோ ஒருவகையில் பலியாகிவருகிறார்கள்.
இளவரசன் இறந்துவிட்டான், திவ்யாவின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியாத ஒன்று. அப்பெண் மனமுடைந்த நிலையில்தான் இருக்கிறார். சமூகமே என்னை புறக்கணிக்கிறது. யாரும் செய்யாத செயலையா நான் செய்தேன்? என்ற கேள்வியோடு வாழ்க்கையை தொடர்கிறார். இப்பொழுது காவல்துறையின் பாதுகாப்போடு வேலைக்கு சென்று வருகிறார்.
நாகராசன் இறந்தபின் பா.ம.கவின் கட்டுப்பாட்டில் இருந்த தாயார் தேன்மொழி தனி வீட்டில் தன் மகன், மகளுடன் இருந்துவருகிறார். செல்லன்கொட்டாய் கிராமமே அவர்களை புறக்கணித்துள்ளது. இப்போது அவர் தனது கணவர் செய்த வேலையை (கூட்டுறவு சங்கம்) தொடர்கிறார், நத்தம் கிராமத்தின் வழியாகத்தான் காவலர் ஒருவரின் பாதுகாப்புடன் வேலைக்கு வந்து செல்கிறார்.
அரச அடக்குமுறை
இதுபோன்று மக்கள் தங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை நடத்த விடாமல் எதற்கெடுத்தாலும் 144 என்ற காரணம் காட்டி அச்சுறுத்தும் வேலையை அரசு கடைபிடிக்கிறது. சாதிய கலவரங்கள் நடக்கக்கூடாது என்று காரணம் கூறுகிறது நிர்வாகம். இதனால் அப்பகுதியில் எந்தவித அரசியல் செயல்பாடுகளோ, கூட்டங்களோ, நடப்பதில்லை. யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது என்று நிபந்தனையால் தலித் மக்களின் கோரிக்கையைக் கொண்டு செல்வதற்கும் தடையாக உள்ளது.
கொண்டம்பட்டியில் நடந்த சம்பவத்திற்கு கண்டித்து துண்டறிக்கை, போஸ்டர் போட்ட ம.ஜ.இக.வைச் சேர்ந்த தோழர்களை காவல்துறை தேடி வருகிறது. அதனை அச்சடித்த அச்சகத்தாரைக் கைது செய்து தேசதுரோக வழக்கினை பதிவு செய்துள்ளது. செப்.12 அன்று நாயக்கன்கொட்டாயில் உள்ள அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதற்காக 19க்கும் மேற்பட்ட ம.ஜ.இ.க, ம.ஜ.இ.அ தோழர்களை கைது செய்திருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறையை ஏவி மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
பா.ம.கவின் சாதிய அணிதிரட்டலும், அச்சுறுத்தலும்
வன்னியர் சங்கமும் ஆதிக்க சக்திகளும் சுதந்திரமாக செயல்படும் சூழலும், சாதகத்தையும் மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. தருமபுரி முழுவதும் வன்னியர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு மேலிடத்திற்கு ஒப்படைக்கும் திட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்லம்பள்ளி யூனியனில் 200க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் ரகசியமாக நடந்திருக்கிறது. அதன்படி தருமபுரி முழுவதும் உறுப்பினர் படிவத்திற்கு 200ரூ கட்டணத்துடன் சேர்க்கைக்கான வேலைகள் நகர்ந்து, இன்று தேர்தல் நிதிதிரட்டல் வேலையைச் செய்து வருகிறார்கள்.
பா.ம.க வன்னியர் சங்கத்தைக் கூட்டுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும் வன்னியர் சங்க அறிக்கை விநியோகிக்கப்பட்டு குறிப்பட்ட தொகையும் வழங்கப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் மகளிர் அணியை கூட்டிப் பேசுவதாக விசாரித்த மக்கள் கூறினார்கள்.
வன்னியர்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க தி.மு.க கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்ற அறிக்கையும் வன்னியர் சங்கம் சார்பாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிதிரட்டல் குழுக்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றில் மிகமுக்கியமான விசயம் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. என அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னிய சாதியைச் சேர்ந்த நபர்கள் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்துள்ளனர். கட்சிகள் எதுவாக இருந்தாலும் தாங்கள் சார்ந்த வன்னிய சாதிக்கான சங்கம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அமைப்பாக்கல் நிகழ்ந்திருக்கிறது. வன்னியராக அணிதிரட்டல் வேலைதிட்டம் பா.ம.க ஜி.கே.மணி, சரவணன் தலைமையில் நகர்த்தப்படுகிறது.
மேலும் தலித் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து அவர்களை பணிநீக்கம், பணிமாற்றம் செய்யும் சதியை செய்துவருகிறது. பா.ம.க, அ.தி.மு.க, தி.மு.க.வைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக அரியகுளம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலித் ஆசிரியர் மகேந்திரன் என்பவரை வன்னிய மாணவியை அடித்த காரணத்திற்காக சின்னேறிமோட்டுப்பட்டியை சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் மோகன் என்பவர் சாதிவெறியோடு இவற்றில் தலையிட்டு பணிஇடைநீக்கம் செய்ய பள்ளிக்குள்ளேயே வலியுறுத்தி இடைநீக்கமும் செய்யவைத்து பின் வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுபோன்று இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை மிரட்டுவது வெளிப்படையாக நடந்து வருகிறது. ஏற்கனவே சாதிமறுப்புத் திருமணம்செய்பவர்கள் பயந்து வெளிப்படையாக நடமாடுவதற்கும் அஞ்சி ஊரைவிட்டு வேறுஇடத்திற்கு குடிபெயரும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. நாம் கேள்விப்பட்ட வகையில் பல குடும்பங்கள் இதுபோன்று இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் சாதிமறுப்புத் திருமணம் அப்பகுதிகளில் அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாலக்கோடு சாமனூரைச் சார்ந்த பாத்திர வியாபாரியான தங்கராஜ் என்பவர் தலித்அல்லாதவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்து வருவதால் வல்லப்பட்டியைச் சேர்ந்த சாதிய வெறியர்களுக்கும் ராஜா என்கிற கவுன்சிலரான சாதிவெறியனுக்கும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. ஆதலால் ஒவ்வொரு முறையும் அக்கட்சியை விட்டு வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்குப் பணியாத தங்கராசை மரத்தில் கட்டிவைத்து காலை உடைத்துள்ளனர். அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் இருந்தார். இவை பகிரங்கமாக மக்கள் மத்தியில்தான் நடந்துள்ளது.
இதுபோன்று தருமபுரி முழுவதும் பல்வேறு வடிவங்களில் சாதிய ஆதிக்கமும், அச்சுறுத்தலும் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இன்னும் ஆழமாக மக்களிடம் விசாரித்துப் பார்க்கும் ஆய்வின்படி நாம் முழுமையான சூழலை உணர முடியும். அதற்கான திட்டமிடலை செய்ய வேண்டியிருக்கிறது.
வழக்கைப் பொருத்தவரை,
1. 150 பேர் கைது, பின் மூன்று மாதத்திற்குள்ளேயே பிணையில் வெளிவந்துள்ளனர். மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 1000 பேரில், 50 முதல் 100 பேரின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. மற்றும் பலர் என அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து வழக்குகளும் நிலுவையிலும், வாய்தாவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சங்கரசுப்பு, என்.ஜி.ஆர்.பிரசாத், செங்கொடி ரஜினி, சத்தியசந்திரன், ரத்தினம் ஆகியோர் வழக்கை நடத்துகிறார்கள்.
2. கிராமங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கான வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் அரசு மாற்றியது. குற்றவாளிகளைப் பிடிப்பதில் அரசின் மெத்தனப் போக்கால் அதனை சி.பி.ஐக்கு மாற்றக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதற்கு நமது தரப்பு வழக்கறிஞர்கள் முழுவிசாரணை செய்யாமல் தாக்கல் செய்யக்கூடாது என்று வழக்கு போட்டுள்ளதால் அவை நிலுவையில் உள்ளன.
4. பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரணத்திற்காக போட்டுள்ள வழக்கில் வாசுகி தலைமையிலான குழு விசாரித்துவிட்டது.
5. கிராமத்தில் மாடிவீடு கட்டியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டதற்கான நிவாரணம் கேட்ட வழக்கை, ஆய்வுக்குழு விசாரித்துள்ளது.
இளவரசன் கொலை வழக்கு
ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவும், அரூர் டிஎஸ்பி சம்பத்குமார் தலைமையில் விசாரணைக்குழுவும் அமைத்துள்ளது. இவர்கள் இருவரின் மீதும் சாதியரீதியான புகார்கள் மற்றும் சாதிய மனோபாவத்தோடு சில வழக்கை அணுகியிருப்பதால் அவர்கள் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நிராகரித்து இளவரசன் குடும்பமோ, திவ்யா குடும்பமோ விசாரணைக்குப் போகவில்லை.
7. இளவரசன் மரணத்திற்கு நீதிபதி சந்துரு தலைமையிலான சிறப்பு புலன்விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். அதுவும் வாய்தாவில் இருக்கிறது.
8. இதுபோக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 144ஐ நீக்க வேண்டும், இளவரசன் இறுதி அஞ்சலிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
9. ம.க.இக. சார்பாக திவ்யாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என மனுபோட்டுள்ளபடி, உத்தரவும் பிறப்பித்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
10. சி.பி.எம் தரப்பில் சி.பி.ஐ கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது.
 இத்தகைய சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் அனைத்து வழக்குகளையும் இணைத்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதிமன்றக் கோரிக்கை, சுண்டூர் படுகொலையும் அதன் நீதியும் பற்றிய விவாதங்கள் நடத்த வேண்டும். இவை வழக்கை முன்கொண்டு செல்ல தேவையாக இருக்கும்.
அதேபோல் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பா.ம.க மற்றும் சாதிய வன்முறைக் கும்பலைத் தனிமைப்படுத்த வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். அதற்கான வேலைத் திட்டத்தை நகர்த்த வேண்டியுள்ளது.
சாதிய கட்டப் பஞ்சாயத்துகளின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவற்றைத் தடை செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஆக, தருமபுரி மாவட்டத்தில் சாதிய ஆதிக்க வன்முறையாளர்களும், பா.ம.கவும் தங்களுக்கான திட்டத்தை செய்வதும், தலித் மக்கள் பயந்து முடங்கியுள்ள நிலையுமே நீடிக்கிறது.
மேற்கண்ட விவரங்கள் அங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்ள போதுமானவையாக இருந்தாலும் நமது தரப்பில் ஒரு குழு அமைத்து தொடர்ச்சியாக தருமபுரி சம்பவத்துக்கான கோரிக்கையையும், வழக்கையும் நகர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான குறிப்பான கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதற்கு பரந்தளவிலான மக்கள் இயக்கங்களை இணைத்துக் கொண்டு முன்னெடுப்பதை நோக்கி நகர்வோம்.
- ரமணி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, தமிழ்நாடு ( aruvi1967@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக