சனி, 6 ஏப்ரல், 2013

ஜூன் 12ம் தேதி, உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்



குழந்தை தொழிலாளி



பட்டம் விடுவது மாதிரியும்
கண்ணாமூச்சி விளையாடுவது மாதிரியும்
கனவுகளிலிருப்போம்...!

தட்டி உலுக்கி
அள்ளிப்போட்டு பறக்கும்
பிசாசு வண்டி...!

தூங்க நினைத்து
முகம் புதைக்கும் போது
எஞ்சின் தடதடப்பில்
கனவு மறந்து போயிருக்கும்....

பள்ளிக்கூடம் போவது மாதிரியும்
பரிசுகள் பெறுவது மாதிரியும்
நினைத்துக் கொண்டிருப்போம்...!

முதலை போல் வாய் பிளந்து
இழுத்துக் கொள்ளும் வெடிக்கிடங்கு...!


கலக்கம் இல்லா
காலைவேளை வரவேற்க்கும்
மருந்து நெடி கொண்டு...

எந்திர இதயங்களுக்கிடையே
எந்திரமாக எத்தனிக்கும் சிறுகைகள்
பணம்தரும் பொன்னாகத் தெரியும்.....

பள்ளிக்கூடம் போகாமல்...
ஐயனார் கோவிலிலும்
வயற்காட்டிலும் சுற்றித்திரிந்து

யாருடைய தோட்டத்திலோ
மாங்காய் அடித்துச் சாப்பிட்டுவிட்டு
தெருப் புழுதியில் விளையாடிக் கரைந்ததை

மூத்த தலைமுறை
சொல்லும் போது
புராணக் கதை போலிருக்கும்….



முதல் நாள் கூலியாய்
முதலாளி திணித்த
அழுக்கடைந்த காகிதகங்களையும்
வட்ட வில்லைகளையும்...!

என்னவென்றே தெரியாமல்
வாங்கி வீட்டில் கொடுக்க
அரிசியாகவும் விறகாகவும்
மாறுவது வியப்பாயிருக்கும்...!

அடுப்பு பற்ற வைக்க
பக்கத்து வீட்டில் நெருப்பு கேட்கும்போது
நாள் முழுக்க ஒட்டிய பெட்டிகள்
கண்ணில் படரும்....

திருவிழா நாளின் ராட்டினமாய்த்
தலைசுற்ற வைக்கும் வாழ்க்கை...!

உழைத்த களைப்பில்
அடித்துப் போட்டாற்போல் கிடக்கும்
குடும்பம் முழுவதும்...!

நிலவும் நட்சத்திரமும் தவிர
முற்றத்தில்
தூங்கும் வரை கதை சொல்ல
யாருமில்லை....!


தூக்கத்திலும்
வேன் பயணத்தில் மட்டுமே
நாங்கள் குழந்தைகள் என்று
நினைவுக்கு வருகிறது....!

தெருக்களில் கூச்சலிட...
மண்ணில் புரள...
பெரியவர்களுக்கு சினமூட்ட...
தூணில் கட்டிப்போட...
மலராய் சிரிக்க...

எங்களுக்கும் ஆசை தான்…
எப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?




நண்பர்களே..கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
http://www.tamilparents.com/2011/11/child-labours.html


சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

சக குழந்தைகள், புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் தான் குழந்தை தொழிலாளர்கள். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 21 கோடி பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
http://www.teachertn.com/2012/06/blog-post_1237.html
 
நன்றி... Tamil parents & Teachertn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக