புதன், 30 மார்ச், 2011

சாத்தன்குளம்--தேரிக்காடும் , டைட்டானியமும்

அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்!

1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும்.

பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்.

மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப்படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950--60-களில் எட்டுத்திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது.

மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை!

டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட “அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி, வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங்கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.

இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது.

குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான் குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்ட இழி செயலையும் செய்ய அது துணிந்தது.
கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!”

1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜீன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார்.

கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது.

தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக் -ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்&டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் ஜிஞீவிமி, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார்.

தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன்.

ஆடு புலி ஆட்டம்

2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜீன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜீன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது. “ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்“, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.

திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு.

“எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.

தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.

திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப்பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?

இல்லை ‘‘வேறு’’ எதுவும் காரணமோ? தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.

திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப்பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள்

2. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குல சேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும்

3. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்

4. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி

5. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும்.

ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது. குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

இப்பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.

திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.

அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள?

தென்மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு என்றும், நாட்டின் வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டு இத்திட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமல், அதைத் தவிர்த்து ‘எல்லாம் தெரிந்து’ அறிக்கை விடும் அரசியல் தலைவர்களிலிருந்து திட்டத்திற்கான நிலம் திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கிறதா?, நாகர்கோவிலுக்குத் தெற்கே இருக்கிறதா? என்பதுகூடத் தெரியாமல் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கை விடும் அறிவு ஜீவிகள் வரை அனைவரும் யோசிக்க வேண்டும்.

எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னொரு இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போலவும் இவர்கள் அதை மிதமிஞ்சிய வளர்ச்சிப் பகுதியாக மாற்ற டாடாவின் டைட்டானியம் ஆலை உதவும் என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறனர்.

திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது. ஆனால், அதற்காக தமிழ் மக்கள் கொடுக்கும் விலையோ மிகவும் அதிகம்.

இன்னொரு சிலப்பதிகாரமோ?

“என் தலையின் மீது நீங்கள் துப்பாக்கியையே வைத்தாலும்
பயத்தில் தலையை அசைத்துடுவேன் என்று கனவு காண
வேண்டாம்” என்று நான் பலமுறை கூறியுள்ளேன்

- ரத்தன் டாட்டா, மேற்கு வங்காளம், சிங்கூர் பிரச்சனையை ஒட்டி கூறியது

“எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டோம். டைட்டானியம் ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

- டாடா நிறுவன மேலாளர் முத்துராமன்
15.8.07

“யார் என்ன சொன்னாலும் டைட்டானியம் ஆலை அமைப்பதைத் தடுக்க முடியாது. டைட்டானியம் ஆலை அமைவது உறுதி”

- தமிழக அமைச்சர் ஆற்காடு வீரசாமி
28.9.07 தினத்தந்தி.

திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்கிறது.

“கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களத் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர் சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்!

மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துதான் ஆக வேண்டுமா?.

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை
தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில்
நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு
மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள்
வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள்,
மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா
நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி
எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?

இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற
பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில்
கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை
மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும்
மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம்
வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல்,
பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது
பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே
இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை
கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள்
வாழ்க்கை என்னவாகும்?

தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

அரசியல் கட்சிகள் அனைத்தும் தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு
என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட
வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது
மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச்
சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள்
இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத்
தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில்
அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல
கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண்
அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது.
தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும்
கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும்
தந்துகொண்டிருக்கிறது.

டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட
மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே
அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம்
பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம்
என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன்
தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான்
டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம்
15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை
நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை.
டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின்
சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ
எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும்
உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

டைட்டானியம் என்றால் என்ன?

டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு.
டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன.
ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile)
என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன.
ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது.
ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது.
அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின்
காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும்
தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு
மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும்
தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட.
அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு
சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப்
பயன்படுத்தப்படுகிறது.

சொல்லப்படாத செய்திகள்

டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால்,
உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன
செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது,
இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர்
மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.

இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக
உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின்
திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால்
தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல்
தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான
தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு
நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை
எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும்
கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக்
குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித்
துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள்.
தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள்
கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில்
கவலைக்குரியதாகும்.

சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று
மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து
வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில்
கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள
குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான
அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு
மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது.
இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின்
நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை
வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச்
சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத்
தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப்
பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது
புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை
நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி
வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ
அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில்
வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச்
செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு
அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம்
பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம்
பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை
ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும்,
நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும்
மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள்
தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது
அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம்
தேரிகளையே நம்பியுள்ளது.

நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத்
தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன்
காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும்.
அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில்
கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய
பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில்
படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.

தாதுக்களைச் சுத்தம் செய்தல்

தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப்
பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல்
கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ
சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது.
அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.

டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி

வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில்
நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு
முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன்
வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட்
முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள்
பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு
டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து
ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு
சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும்
குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க
முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.

இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன்
குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி,
சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள்,
அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள்
துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில்
அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில்
இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த
மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில்
மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத
இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப்
பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும்
நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.

இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து
வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா
என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை
நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை
மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல்
குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை
கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ
சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும்
உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins)
ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ
வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல்
திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத்
தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும்
இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள்
பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில்
நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது.
இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப்
பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து
மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.

டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும்
மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு
பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன்
குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே
பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும்.
எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை
என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர
முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில்
3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது.
அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும்
பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது.
குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன்
அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம்
பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம்
டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின்
போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய
வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை
வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய
உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம்
நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று
அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து
முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும்
பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய
விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா?
என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார்
தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப்
பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப்
பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?

டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.

-நித்தியானந்த் ஜெயராமன்

thanks to http://organicananth.blogspot.com/

(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர்.
சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய
கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])

http://tatatitanium.blogspot.com/

====

தேரிக்காடும், டைட்டானியமும்

ஆசிரியர்கள்: தி.ஆனந்த ராம் குமார், இரா. ரமேஷ்,
விலை: ரூ.10
தொடர்புக்கு: சு.பாரதிதாசன். 98432 11772

ஒரு ஏக்கரில் 7 மீட்டர் தோண்டும்போது வெளியேறும் மணலின் அளவு 50 ஆயிரத்து 423 டன்.

ஒரு டன் கனிம மணலின் சந்தை விலை 233 ரூபாய். ஆக, ஒரு ஏக்கரில் இருந்து தோண்டப்படவிருக்கும் மணலின் விலை ஒரு கோடியே 17 லட்சத்து 48 ஆயிரத்து 792 ரூபாய். ஒரு ஏக்கரில் இருந்து எடுக்கப்படும் மணலில் இருந்து வரும் கனிம மதிப்பு 3 கோடியே 10 லட்சம் ரூபாய்.

ஒரு டன் மணலில் இருந்து சுமார் 50 கிலோ டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து சுமார் 2532 டன் டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்ய முடியும். இதன் இன்றைய மதிப்பு சுமார் 35 கோடி ரூபாயாகும். உற்பத்தி செலவினைக் கழித்துவிட்டால் ஏக்கருக்கு ஏறத்தாழ 18 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

நன்றி

முத்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக