திங்கள், 13 மார்ச், 2017

தமிழக அரசியல் குழப்பம்! தீர்வின் திசை எது?

கடந்த ஒரு வார காலமாக, தமிழக அரசியலில் குழப்பமும், நிரந்தரமற்ற தன்மையும் உருவாகி பெரும் விவாதங்கள் நடந்து வருகிறது. இதில் சசிகலா, பன்னீர் - பா.ஜ.க - தி.மு.க, இன்னும் இவர்களின் ஆதரவு நிலை எடுப்பவர்களை வெவ்வேறு அணியாகக் கருதிப் பலரும் பேசுகிறார்கள்; ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே அணிதான். ஒரு வரியில் சொன்னால் “இவர்கள் அனைவரும் தமது சொந்த நலன்களை முன்னிருத்தி அடித்துக் கொள்பவர்கள்தான்”. சசிகலா ஊழல்வாதி என்று பன்னீர் எதிர்க்கவில்லை. பன்னீர், மதவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் என்று சசிகலா பன்னீரோடு முரண்படவில்லை. பா.ஜ.க. தனது கொள்கையின் அடிப்படையில் இவர்களோடு உறவு கொள்ளவோ, முரண்படவோ இல்லை. விரைவில் இவர்களுக்குள் ஒரு டீலும் உருவாகி விடும். இந்த சுயநல கூட்டத்தைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்து இருப்பவர்கள், தமிழக அரசியல் சூழலில் என்ன நிலைப்பாடு எடுப்பது? மக்களிடம் என்ன கருத்தைக் கொண்டு செல்வது?
ops and sasikala 450
 கடந்த 69 ஆண்டுகளாக நமது நாட்டில் ஒர் அரசியல் முறை பின்பற்றப்படுகிறது. அது இரண்டில் (அல்லது) நான்கில் ஒன்றைத் தேர்வு செய். அதிமுக (அல்லது) திமுக. காங்கிரஸ் (அல்லது) பா.ஜ.க. இவர்கள் எல்லாம் மக்களிடம் ரொம்ப அம்பலமாகி விட்டார்களா? விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி, கேஜ்ரிவால், மம்தா, நிதிஸ், அடுத்து விஜய், தனுசாகக் கூட இருக்கலாம்! மக்கள் தங்களது சிந்தனையை இந்த கட்சிகளுக்குள் ஒன்றைத் தேர்வு செய்வது என சுருக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் சரியில்லையா? சரி நோட்டோவை வைத்துக் கொள். அதனால் பயனில்லை என்றாலும் இதுதான் இந்த ஜனநாயகத்தின் உட்சபட்சம்.
சரி, இந்த அரசியல்வாதிகளே மோசம்! அப்படியா? அதிகாரிகளிடம் மனு கொடு. மனு நீதி நாள், மக்கள் குறை தீர் நாள் உள்ளது. அங்கேயும் ஆகவில்லை. நீதிமன்றம் போ. அங்கு குமாரசாமிகள் உள்ளார்களே? சரி, அப்பீல் போடு. உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதுதான் இறுதி. காவிரியில் அதுவும் ஏற்கப்படவில்லையே! சரி, அரசியலமைப்பின் நான்காவது தூண் உள்ளது. அங்கு முறையிடு. அங்கும், அம்பானி, கருணாநிதி, வைகுண்டராஜன், பச்சமுத்து எல்லோரும் மீடியா நடத்துகிறார்களே? என்ன செய்வது? எல்லாம் மோசம்தான்! இதுல பரவாயில்லாத மோசத்தத் தேர்ந்தெடு!
இதுதான் நமது அரசியல் அமைப்பின் வரம்பு. இதற்குள் இவ்வளவுதான் செய்ய முடியும். வரம்பு சரி, ஆனால் மக்கள் பிரச்சனைகள் தீரவில்லையே? மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை, 80 கோடி மக்களுக்கு தினமும் 20 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை, சாதி-தீண்டாமை, பாலியல் வன்கொடுமைகள், மதக் கலவரங்கள், எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம், இயற்கை வளங்கள் கொள்ளை…………இன்னும் ஆயிரம், ஆயிரம் பிரச்சனைகள்! எதையும் ஓட்டு அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை தீர்க்கவில்லை!
இனித் தீர்க்கவும் முடியாது! ஏனென்றால் பிரச்சனையே இவர்கள்தான்! பல கோடி மக்கள் தெருவோரங்களில் வசிக்கும்போது, 5000 கோடியில் அம்பானிக்கு வீடும், 3000 கோடியில் ஜெயாவுக்கு கொடநாடு எஸ்டேட்டும் வைத்துக் கொள்ள வழிவகை செய்பவர்கள்தான் நமது அரசமைப்பின் பிரதிநிதிகள். இவர்களின் நோக்கம் 95% மக்களை நிரந்தரமாகப் பிரச்சினையில் வைத்து 5% அம்பானி, அதானிகளைக் காப்பதே! இவர்களின் சேவைக்கு, குறிப்பிட்ட சதவீதம் பங்கு எடுத்துக் கொண்டு, உல்லாசமாக வாழ, இந்த அரசியலமைப்பு அனுமதிக்கும்! மோடி, அதானிக்காக ஆஸ்திரேலியா செல்வதும், அம்பானியின் ஜியோ சிம்மின் தூதராவதும் இதற்குத்தான்!
ஆக, இந்த அரசமைப்பின் வரம்பில் நின்று சிந்தித்தால் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு இல்லை எனத் தெளிவாகும்போது, மாற்றை நோக்கிச் சிந்திப்பதுதானே சரி! மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் அரசமைப்பு முறை, அதன் சட்டங்கள் உள்ளனவே தவிர, சட்டத்திற்காக மக்கள் ஒருபோதும் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டம் தமிழக சூழலுக்குத் தரும் தீர்வு இதுதான். சசிகலா (அல்லது) பன்னீர் (அல்லது) தேர்தல் மூலம் ஒரு கட்சி (அல்லது) கவர்னர் ஆட்சி. இந்த நான்கு தீர்வுகளால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன? விடை பூஜ்யம்தான். இது கிட்டத்தட்ட ஹெல்மெட்டை செய்து வைத்துக் கொண்டு, அதற்கேற்ப தலையை வெட்டிக்கொள் என்ற வகையிலான தீர்வே! இதை எப்படி ஏற்க முடியும்? எனவே சிந்தனையின் வரம்பை, இன்னும் விசாலமாக்குவதே அறிவுப்பூர்வமாக சரி! 69 ஆண்டு கால அனுபவம் உணர்த்தும் செய்தியும் இதுதான். மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று என்ன?
வரலாற்று வழியில் ஆராய்ந்தால், பலவித அரசியல்-சமூக அமைப்புகள் தோன்றி மறைந்திருக்கிறது. அந்தந்த சமூக அமைப்பில் கூடுதல் பலன் அடைவோர், அதைத் தக்க வைக்க முயற்சித்துள்ளார்கள். மற்றவர்கள் போராடி வென்றுள்ளார்கள். நமக்குச் சமீபத்திய அரசமைப்பு மன்னராட்சி முறை. அன்றிருந்த ஆட்சியாளர்களும், ஒரு மன்னன் சரியில்லையா, அவரது குடும்பத்திலிருந்து வேறு நபர் என்றுதான் பேசியிருப்பார்கள்! ஆனால் மக்கள், மக்களாட்சி என்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார்கள். மன்னராட்சி என்ற அரசமைப்பையே மாற்றினார்கள். அதனால் உருவானது இன்றைய அரசியலமைப்பு. ஆனால், இன்று மக்களாட்சி என்று பேப்பரில் எழுதி வைத்துவிட்டு, குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காக மட்டும் ஆட்சி நடக்கிறது. குறிப்பிட்ட சில பிரிவுகளின் நலன்களுக்கு மட்டுமே இந்த அரசமைப்புமுறை பயன்படுகிறது. அரசமைப்பின் அத்தனை தூண்களும் மக்களைச் சுரண்ட உதவுகிறது. எதிர்ப்பவர்களை பலாத்காரத்தால் அடக்குகிறது. கீழிருந்து மேல்வரை ஊழலும், சாதி, மதமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இதை இனி மாற்ற முடியாது எனும்போது, ஓர் உண்மையான மக்களாட்சிக்குப் போராடுவதுதானே சரி?
மாற்றத்திற்கு, முதலில் இன்றிருக்கும் ஆட்சிமுறையைப் புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ளது இரட்டை ஆட்சி முறை. மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியினரின் ஆட்சி ஒன்று. மற்றொன்று - மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தர அதிகாரம் கொண்ட போலீசு, வருவாய்-நிர்வாகம், நீதிமன்றம் போன்றவை. முன்னதில், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுத்த மறுநாளே, நம்மைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தாலும், அவரை மாற்ற 5 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். பின்னதில் நம்மால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், குடிசைக்குத் தீ வைக்க உத்தரவு போடுவார்கள், நாம் ஒன்றும் செய்ய முடியாது.
இது உண்மையில் மக்களாட்சி அல்ல! மக்களிடம் இங்கு எந்த அதிகாரமும் இல்லை! ஆக மக்களுக்கு அதிகாரம் இருக்கும் ஓர் ஆட்சிமுறையை நோக்கி நகர்வதே, நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர சசிகலா – பன்னீர் – மோடி - சுப்பிரமணியசாமி விளையாட்டின் பின் செல்வதல்ல.
சரி, புதிதாக உருவாகும் அமைப்பில் பிரச்சனைகள் இருக்காதா? இருக்கும், ஆனால் அவற்றைச் சரி செய்யும் அதிகாரம், மக்களிடம் இருக்குமே தவிர கவர்னரிடமோ, மோடியிடமோ இருக்காது. இந்த அரசமைப்பை நடத்துபவர்கள், மக்களின் பிரச்சனைகள் நீடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதுதான் ஆகப்பெரும் பிரச்சனை. அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட 100 பணக்காரர்கள், 90% மக்களின் சொத்துக்களைத் தொடர்ந்து வைத்திருக்கும் சுரண்டல் நீடிக்க வேண்டுமானால், இங்கு பிரச்சனைகள் தேவை. எனவேதான், ஆயிரம் சாதிகள், மதங்கள், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், தொழிலாளிக்கு குறைந்த சம்பளம், தீவிரவாத, பயங்கரவாத சமூக விரோதிகள் என்ற பூச்சாண்டிகள், பாகிஸ்தான் எதிரி, பசுவைப் பாதுகாக்க வேண்டும், இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், நாட்டு வளர்ச்சிக்காக காங்கிரஸ் - பா.ஜ.க. - அ.தி.மு.க - தி.மு.க. போன்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும், அவர்களின் தேர்தல் சூதாட்டங்களை ஏற்க வேண்டும் என்பவை தொடர்ந்து சமூகத்தில் நீடிக்க வைக்கப்படுகிறது. ஆனால் புதிய அரசமைப்பில் பிரச்சினைகளுக்கான மூலங்கள் ஒழிக்கப்படும். உதாரணமாக, கல்வி அனைவருக்கும் இலவசம், அரசு மட்டுமே கல்விவழங்கும். அருகாமைப் பள்ளியில் மட்டுமே சேர்க்க முடியும். கல்வி நிலையங்களை பெற்றோர்களே கண்காணித்து முடிவுகள் எடுப்பர். தனியார் கட்டணக் கொள்ளை முடிந்து விடும் அல்லவா?
எனக்கு தோன்றும் சில யோசனைகள் இவை. நாம் எல்லோரும் சேர்ந்து மாற்று குறித்து சிந்தித்தால், நிச்சயம் சரியான ஒன்றை நோக்கி முன்னேற முடியும்! இதற்கு முதல் தேவை, சிந்தனையின் வரம்பை விரிவு செய்வது. சமகாலப் பிரச்சனைகளுக்கான தீர்வை குரான், கீதை, பைபிள், நிலவுகின்ற சட்டங்களில் மட்டும் தேடாமல், எதார்த்தத்திலிருந்து அணுகுவது. நிச்சயம் இது சாத்தியம்தான், என்பதை அலங்காநல்லூரும், மெரீனாவும் உணர்த்தின. அங்கு ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, ஏற்கனவே இந்த அரசியலமைப்பு சொன்ன தீர்வை, (மனு கொடுப்பது, அரசு செய்யும் என நம்புவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து ஏற்றுக் கொள்வது) நடைமுறைக்கு உதவாதது என்று சொல்லி நிராகரித்து வெற்றி கண்டனர் மாணவர்களும்-மக்களும். இது இந்தியா முழுவதும், ஒரு பிரச்சனைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் தீர்க்கக் கோரி நடந்தால் அதுதான் மாற்று! மொத்தத்தில், தீமைகளையும், அதை தாங்கிப் பிடிக்கும், அனைத்து அமைப்புகளையும் நிராகரித்து, மக்கள் பங்கேற்கும், மக்களுக்கு அதிகாரம் வழங்கும் - மாற்று அரசியல் - சமூகக் கட்டமைப்பை நோக்கி கூட்டாகச் சிந்தித்து, செயல்படும் தருணம் இது! மாற்றி சிந்திப்போம்! செயல்படுவோம்!
சே.வாஞ்சிநாதன், மதுரை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல்

jallikattu rally marina
பொங்கலுக்கு முன்பாக 8 ஜன 2017 அன்று, மெரினாவில் நடத்திய அடையாள ஊர்வலமே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான இந்த ஆண்டு தொடக்கம். அடுத்து 13 ஜன 2017 அன்று, மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இவ்விரண்டும் தொண்டு நிறுவனமான பிக்கி (BiCCI- Biodiversity Conservation Council of India) மற்றும் Care & Welfare தொண்டர்களால் அவர்களது சமூக வலைப்பின்னலில் உள்ள வலைதள மாணவர்கள் - இளைஞர்களால் நடத்தப்பட்டதே. பொங்கலுக்குப் பின் மதுரை அலங்காநல்லூரில் நடத்தப்பட்ட ஊர்வலம், விடிய விடிய அறப்போராட்டம் எல்லாம் பிக்கியால் ஏற்பாடு செய்யப்பட்டதே. ஆனால், வலைதள நண்பர்கள் தாமாக சேர்ந்து, தொடங்கி நடத்தியது என்ற பொய்யை ஊடகங்களைப் போன்றே பலரும் திரும்பத் திரும்ப பரப்புகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், ம.க.இ.க. என பலரும் கூட ஜல்லிக்கட்டு போராட்டம் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் திட்டமிட்டு தூண்டப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுக்கிறார்கள். தொண்டு நிறுவனத் திட்டமிடல், செயல்பாடு வலிமையுடையதாக இருக்கிறது என ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்பதால் மறைக்கிறார்களோ? ஆனால் இதைக் குறிப்பிட்டு தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டிய தேவை இப்பொழுது உள்ளது. ஆளும்கும்பல் மீதுள்ள தமது வெறுப்பை வெளிகாட்ட ஒரு வடிகாலாக இப்படி அரசியலற்ற முறையில் மாணவர்கள் - மக்கள் தொண்டு அமைப்புகள் பின்னே எதிர்காலத்தில் திரளாமல் தடுக்க வேண்டிய கடமையும் உள்ளது.
***
ஐக்கிய நாடுகள் (United Nation)அவை, சுற்றுச்சூழல் - இயற்கை பாதுகாப்பு பற்றி பல ஆண்டுகளாகத் திட்டமிடுவதும், அறிக்கைகள் வெளியிடுவதும் மாநாடுகள் நடத்துவதும் நமக்குத் தெரிந்ததே. இதனடிப்படையில் பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு - Convention on Biological Diversity (CBD) திட்டத்தை 1992ல் "ரியோ எர்த் சம்மிட்" மூலம் முன் வைத்து இதுவரை 168 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும் இதில் கையெழுத்திட்டு பல்லுயிர் பாதுகாப்பிற்கான சட்ட மசோதாவை 2002ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
UN-CBD அமைப்பு, COP திட்டம் Aichi இலக்கு என இயற்கை - உயிரியல் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வழிநடத்தி வருகிறது. இதே துறையில் 30 ஆண்டுகளாக கவனம் செலுத்திவரும் Conservation International (CI) என்ற தொண்டு அமைப்பும் இதில் இணைந்து முக்கிய பங்காற்றி வருகிறது. இத் திட்டத்திற்காக CEPF என்பது நிதி நிர்வாக பணிபுரியும் நிறுவனமாகும். CI-ன் Corporate Partners பட்டியலில் வால்மார்ட், கொக்கோ கோலா, ஷெல், மான்சாண்டோ, நெஸ்ட்லே பொன்ற பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளன. (http://www.conservation.org/partners/Pages/default.aspx)
பல நாட்டு அரசு அமைப்புகளும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இதில் அங்கம் வகித்தாலும் இயற்கை - பல்லுயிர் பாதுகாப்பு ஆய்விலும், பணியிலும் CI போன்ற தொண்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த வலைப்பின்னலில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொண்ட ஒர் ஆய்வறிக்கையின் படி இவ்வுலகில் இயற்கை வளம், மிருகங்கள் அதிகம் உள்ள பகுதிகள் தனியே கண்டறியப்பட்டன. இவை உலக வரைபடத்தில் நாடு, இனம், மதம், மொழி, பண்பாடு கடந்த அளவில் hotspot இடங்கள் என அழைக்கப்படுகின்றன. இவர்கள் பணிபுரிய கவனம் செலுத்தி வரும் பகுதிகளே hotspot ஆகும். இந்தியாவில் இரு பெரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை 1. North - East Himalayas என சில வடகிழக்கு மாநிலங்கள் 2. Western Ghates என சில தென் மாநிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருநெல்வேலி என சில பகுதிகள் மட்டுமே அடக்கம்.
பிக்கி என்பது Conservation International (CI) என்ற உலக hotspot திட்டத்தின் கீழ் செயல்படுவதாகவும், UNCBD விதிமுறைப்படி செயல்படுவதாகவும் சொல்கிறது. ஆனால் நிதி ஆதாரம் பற்றிய விவரம் இல்லை. CEPF மூலம் நிதி பெறும் தொண்டு நிறுவனமாக இருக்கலாம் அல்லது வேறு வழியிலும் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு நிதி பெறும் பன்னாட்டு வலைப்பின்னலில் உள்ள தொண்டு நிறுவனமே பிக்கியாகும். (http://biccindia.org/biodiversity/bio-diversity-hotspots/)
தமிழ்நாட்டில் இயற்கை - பல்லுயிர் பாதுகாப்பு என்பதில் அவர்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்தது நாட்டுமாடு இனப்பெருக்க (breed) அழிவாகும். இதுவே இயற்கை விவசாயம், மரபு விந்தணு, A2 பால் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். நாட்டுமாடு இனப்பெருக்கத்தில் கோயில்காளை, பொலிகாளை என்ற பெயரில் உள்ள காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கும் இடையே உள்ள சிறிய தொடர்பை கண்டறிகிறார்கள். இவ்விளையாட்டுகள் பீட்டா (PETA)வின் முன்முயற்சியால் தடையாகியுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் போராடிவருபவர்களும் நிறையபேர் இருந்தனர்.
ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்களும், மதுரை சுற்று வட்டாரங்களில் இப்போட்டியால் அதிகம் ஆதாயமடைபவர்களும் தேவர் சாதியினர்; மற்ற மாவட்டங்களில் மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல், எருது விடுதல், ரேக்ளா பந்தயம் மூலம் அதிகம் ஆதாயமடைபவர்கள் மற்ற இடைநிலை சாதியினர் என்பதையும் அறிந்து முக்கியமான நபர்களை இணைக்கின்றனர்.
jallikattu marina beach protest
கொம்பை நாய் இனப்பெருக்க மையம் வைத்திருப்பவரும், நாட்டு நாய் இனப்பெருக்கம்-வளர்ப்பு பற்றி ஊக்குவிக்கும் பல அமைப்புகளின் அங்கத்தினருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிரீநிவாஸ் ரத்தினசாமி பிக்கியின் தலைவர். இவர் சைதாப்பேட்டையில் நடத்திவந்த நாட்டு நாய் இனவிருத்தி மையம் 2015 மே மாதம் மூடப்பட்டதற்கு பீட்டாவே காரணம்.
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி என்பவரே பிக்கியின் நிர்வாக அறங்காவலரும் ஆவார். திருப்பூர்-ஈரோடு அருகே குட்டபாளையத்தில் இவருடைய காங்கேயம் காளை இனப்பெருக்க பண்ணை உள்ளது. இவரது பல ஏக்கர் விவசாயமும், பால் - கால்நடை உற்பத்தியும் நலிவடைந்ததற்கு ஜல்லிக்கட்டு தடையும், ஜெர்சி பசு இறக்குமதியும், செயற்கை கருத்தரிப்பு புகுத்தலும் காரணம்.
மேலும், அறம் (ARHAM - Activist for Righteous Harmony of Animals Movement) அமைப்பின் பாலகுமார் சோமு, பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லூரி நிர்வாக இயக்குனர் வரதராஜன் பாண்டியன், மீன்-மஷ்ரூம்-பால் பண்ணை அதிபரான ஓ.சரவண குமார், தொழிலதிபர் கோமக்கம்பேடு ஹிமாக்கிரன் அனுகுலா, XLRI பட்டதாரியும் சிவகங்கை - புலிக்குளம் நாட்டுமாடு இனவிருத்தி செய்யும் கால்நடை பண்ணை முதலாளியுமான ராஜா மார்த்தாண்டன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் ஆகியோர் பிக்கியின் நிர்வாக உறுப்பினர்கள். இவர்கள் பீட்டாவால் பல வகைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு அல்லது பாதிப்பை உணர்ந்து ஒரே புள்ளியில் இணைந்தவர்கள். இவர்களுடன் Care & Welfare, Bhumi NGO, தோழன், அறப்போர் இயக்கம், Lite the Lights, மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பல தொண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் மற்றும் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் திருச்சி ராஜேஷ் ஆகியோர் ஆதரவாளர்களாக இணைக்கப்படுகின்றனர். (இதில் நாம் தமிழர் கட்சியின் இ.த.சீமான் பிக்கியின் அறங்காவலர் என்று அறம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.)
ஹிப் ஹாப் ஆதி, RJ பாலாஜி, ராகவா லாரன்சு, GV பிரகாஷ், சிம்பு போன்ற தமிழ்த் திரையுலகினராலும் மாணவர்கள்-இளைஞர்கள் போராடத் தூண்டப்பட்டனர். இவர்களுள் பலர் பிக்கியின் வலைப் பின்னலில் இணைந்த ஆதரவாளர்களே!
பிக்கியின் தன்னார்வலத் தொண்டர்கள் 4 வருடங்களாக இது தொடர்பாக பிரச்சாரம் செய்து, கிராமத்து இளைஞர் முதல் நகரத்து மாணவர்கள் வரை ஆயிரக்கணக்கானோரை தங்கள் வலைதள இணைப்பில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சோசியல் மீடியாக்களில் நூற்றுக்கணக்கான ட்ரால்ஸ் (Troll cinema போன்று), மீம்ஸ் (Chennai Memes போன்று), பக்கங்கள் (We do Jallikkattu, Save Jallikkattu போன்று) மூலம் ஆயிரக்கணக்கான வலைதள பதிவுகள் இட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். The Wire, BBC Tamil, bit.ly, Put Chutney, Smile Settai போன்ற வலைதள TV, பத்திரிக்கைகளில் செய்தியாக்குவதன் மூலம் பரவலாக்கினர்.
இப்படி 4 வருடமாக திட்டமிடப்பட்டு, பலர் இணைக்கப்பட்டு, பரப்புரை செய்துதான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துள்ளது.
திரை பிரபலங்கள் ஆளும் கட்சிகளுக்கு ஜால்ராவாக மாறி, அடக்குமுறை வருவதற்கு முன்பே துரோகமிழைத்து ஓடிப்போய், தம்மை தற்காத்துக் கொண்டது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பிக்கி நிர்வாகிகளும், அதன் ஆதரவு தலைவர்களும் அதே துரோகமிழைத்தார்கள் என்பதும்.
***
நாயகன் (காளை) × வில்லன் (பீட்டா) என்ற கதை மரபு சூத்திரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தேர்வு செய்துள்ளனர். பலர் இதுபோலவே கர்நாடகாவில் கம்பாளா, கேரளாவில் சேத்தாளி-காளபூட்டு, பஞ்சாப்பில் பையில்லகடா எனத் திட்டமிடக் கோருகிறார்கள். Smile Settai என்ற நிகழ்ச்சியில் பிக்கி நிர்வாகிகளே ஜல்லிக்கட்டு ஒரு அடையாளக் குறியீடுதான் என ஒத்துக் கொள்கிறார்கள்.
"நாட்டு மாடு, நாட்டு நாய்க்கு எதிராக (PETA) பீட்டாவின் நடவடிக்கைகள், ஜெர்சி பசு, ஹெச்.எஃப் பசு, டாபர்மேன் நாய், பொமேரனியன் நாய் போன்று வெளிநாட்டு விலங்கினங்கள் இறக்குமதி செய்வதையும் அவற்றின் செயற்கை விந்தணு இனப்பெருக்க முறையையும் அதிகரித்து, வணிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதாகவே உள்ளன." இது (BiCCI) பிக்கியின் கூற்று.
உலகளவில் உயிரியல் தொழில் நுட்பத்தால் விளைகிற சந்தையே அடுத்து ஆதிக்கம் செலுத்தும். அதற்கான ஆராய்ச்சிக்கும் மூலாதாரத்திற்கும் இயற்கையும், பல்லுயிர்களும் அடிப்படை தேவை. சுய லாபத்திற்காக அவற்றை அழித்து வருவது பன்னாட்டு கார்ப்பரேட்டு கம்பெனிகளே. அவர்களிடமிருந்துதான் அவற்றைக் காப்பாற்றவும் வேண்டியுள்ளது. முதலாளித்துவ சமூகவியலாளர்களும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை-பல்லுயிர் அழிவின் ஆபத்தைச் சுட்டி, பாதுகாத்து தடுக்கும் பணியை செய்து வருகிறார்கள். அதற்கான நிதியையும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களே தருகின்றன. இது நேர் முரணாகத் தோன்றும். அதாவது செயற்கை × இயற்கை இனப்பெருக்க முரணில் இரு தனி பிரிவுகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரிந்து நிற்கவில்லை. பீட்டாவின் செயற்கை இனப்பெருக்க முறை மற்றும் பிக்கியின் இயற்கை இனப்பெருக்க முறை என்கிற முரணை தனக்குள்ளேயே அனுமதித்து எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகின்றன. கார்ப்பரேட் நிறுவன பன்முகத்தன்மை இது. சமூகத்திலுள்ள பல முரண்பாடுகளையும் கார்ப்பரேட்டின் பன்முகத்தன்மையோடே சேர்த்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
பீட்டாவும், பிக்கியும் இல்லாமல் நமது இயற்கை விவசாயம், மரபு கருத்தரிப்பு, ஏ2 பால் உற்பத்தி போனறவற்றை மீட்டெடுத்து பாதுகாக்க முடியும். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களை வளர்த்தெடுக்கிற கட்சியும், அரசியலும்தான் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
***
கடந்த இரண்டு வருடமும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பிக்கி நடத்தியிருந்தாலும், ஜெயலலிதா மறைந்த பிறகு உள்ள ஆளுங்கட்சி அதிமுக-வின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலைப் புரிந்து இந்த ஆண்டு கூடுதலாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. எனினும் மூவாயிரம் பேர் மெரினாவில் கூடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தோம், இவ்வளவு பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என Chutney Chat நிகழ்ச்சியில் பிக்கி நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள்.
போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்குப் பின், பிக்கி வலைப்பின்னலில் உள்ளவர்களின் நடவடிக்கைகள்... மரம் நடுவது, மீனவர் இழப்பிற்கு நன்கொடை கேட்பது, போட்டியை அரசு ஆதரவோடு நடத்துவது, நிகழ்ந்ததை எண்ணி புளகாங்கிதம் அடைவது போன்றதாகவே உள்ளன. போலீசின் வன்முறையை பிக்கி நிர்வாகிகள் கண்டிக்கவில்லை; போராடவில்லை.
நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், ம.க.இ.க. போன்ற ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள்தான் போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிக் கொண்டுள்ளனர். இப்போராட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் கேடுகெட்ட துரோக நடவடிக்கைகளை மாணவர்களும், இளைஞர்களும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இனி அரசியல் இலக்கற்ற தொண்டு அமைப்புகளின் பின்னே திரள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- ஞாலன்

கம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு

சேலம் சிறைத் தியாகிகளின் 67 வது நினைவு நாள்!
1947 ஆக.15-ல் சுதந்திரம். வெள்ளையர் வெளியேறி காங்கிரஸ் தலைமையில் பழுப்பு நிற எஜமானர்கள்/இந்திய முதலாளிகளின் ஆட்சி வந்தது. மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை.
communist flagவிவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் & கிளர்ச்சிகள், தொழிலாளர்களின் கூலி உயர்வு & சங்க உரிமை, பண்ணை அடிமைகளாய் வாழ்ந்த தலித்துகளின் விடுதலை, மொழி & மாநில உரிமைகள், சனநாயகத்திற்கான இயக்கம், போராட்டங்கள் என நாடு முழுவதுமாக கம்யூனிஸ்டுகள் தலைமையில் எண்ணற்ற போராட்டங்கள் வெடித்தன. தெலுங்கானா முதல் தஞ்சை வரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த புரட்சிகரமான போராட்டங்கள், சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை எனத் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிகரமான போராட்டங்கள் ......
காங்கிரஸ் ஆட்சி, நேரு அரசாங்கம்- முதலாளிகள் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து பயந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கால அடக்குமுறை தொடர்ந்தது .
கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை, சதி வழக்குகள், தலைமறைவு, சங்க அலுவலகங்கள் & சிவப்பு சட்டை போட்டவர்கள் மீதான காவல்துறை தாக்குதல்கள், கைது, சிறைவாசம் என வரலாறு விரிந்து செல்கிறது.
சில ஆண்டுகளிலேயே...
1982 துப்பாக்கி சூடுகள், 3784 பேர் கொல்லப்பட்டனர், 10,000 மேற்பட்டோர் ஊனம், கொடுஞ்சிறைக்குள் 50,000ற்கும் மேற்பட்டோர், சிறைக்குள் கொல்லப்பட்டோர் 82 பேர் (சேலம் சிறையில் 22 பேர் உட்பட) என கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு நீண்ட நெடியது.
சேலம் சிறையின் நிலைமை
காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை வேலூர், கடலூர் சிறையிலும், ஊழியர்களை சேலம், திருச்சி, மதுரை சிறையிலும் பிரித்து அடைத்தது.
கேரளா -மலபார் விவசாயிகள் போராட்டத்தில் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்கள், விவசாயிகள், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர, தமிழக கம்யூனிஸ்ட்கள் என 350 பேரை சேலம் கிளைச் சிறையில் (அனெக்ஸ்/Annex என அழைக்கப்பட்ட சிறை, தற்போது பெண்கள் சிறையாக செயல்படும் பகுதி) 3 கொட்டடிகளில் அடைத்தது. 20 வயது முதல் 60 வயது வரை, படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை, 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்கள் கலந்து இருந்தனர்.
சேலம் சிறைக்கு "கறுப்பு குல்லா ஜெயில் " என்ற அவப்பெயர் இருந்தது. கிரிமினல் வரலாறு மிக்க கொலை, கொள்ளைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். எனவே, சிறைக் காவலர்களின் கொடுமையும், அடக்குமுறையும் கூடுதலாக இருந்தது.
கம்யூனிஸ்ட் சிறைவாசிகளுக்கு C வகுப்பு தான் வழங்கப்பட்டது.
உணவு :-
காலையில் புளித்த கஞ்சி, நண்பகலில் சோளக்களியும் கீரைக் குழம்பும், மாலையில் அச்சடித்த சோறும், அரை ஆழாக்கு நீர் மோறும் & பத்து நிலக்கடலையும்
உடை :-
அரைக்கை சட்டை, அரைக்கால் டிரவுசர், மொட்டைத் தலைக்கு குல்லாய் (குரங்கு)தொப்பி
உறங்க:-
கிழிந்த கோணிப்பாய், பேன் பிடித்த பழைய கம்பளி
குளிக்க :-
நாலு குவளை தண்ணீர்
கேவலமான நோய் பரப்பும் கழிப்பறைகள், அறைகள்...
(இன்றுள்ள சிறை வசதிகள், உரிமைகள் அன்று இல்லை)
சிறை விதிக்கு உட்பட்ட உணவு, உடை கூட வழங்காமல் ஊழல் செய்தனர், சிறை அதிகாரிகள், இரக்கமற்ற அரக்கர்களாகவும் இருந்தனர். அதிகார வெறி பிடித்த கிருஷ்ணன் நாயர் சிறையதிகாரி-ஜெயிலர், தாமோதரன் என்ற அரக்கன் தலைமை வார்டன். கம்யூனிஸ்ட்டுகளை படுபாதக கிரிமினல்கள் போல் கையாண்டனர். பகல் முழுவதும் வேலை, தோட்ட வேலைகளில் மாடுகளுக்குப் பதிலாக, தண்ணீர் இறைக்க ரோடு ரோலர் இழுக்கத் தோழர்களைப் பயன்படுத்தினர். "நாயிண்ட மகனே" துவங்கி எண்ணற்ற இழிசொற்கள், வசைகள், அடிகள், தண்டனைகள்...
மற்ற கிரிமினல் கைதிகள் போல நெம்பர் கட்டை, குல்லாய் அணிய வற்புறுத்தி வந்தனர். தோழர்கள் மறுத்ததால், கேரளா, ஆந்திராவிலிருந்து 500 கி.மீ தொலைவில் இருந்து வந்த உறவினர்கள் பார்க்க அனுமதி மறுத்தனர்.
சேலம் சிறையில் துப்பாக்கி சூடு
" குல்லாய், நெம்பர் கட்டை அணியமாட்டோம்! "
" மாடு போல வேலைகளைச் செய்ய மாட்டோம்! "
- என்ற உரிமைக் குரல், போராட்டக் குரல் எழுந்தது.
பிப்ரவரி 7 ந் தேதியன்று, உள்ளிருப்புப் போராட்டம் துவங்கியது. வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் துவங்கியது.மிரட்டிப் பார்த்தனர்.
1950 பிப்.1, காலை 8 மணி. சிறைக் காவலர்கள் குல்லாய் வைக்க வற்புறுத்தினர். தோழர்கள் மறுத்தனர். விசில்கள் ஊத, அபாயச் சங்கு ஒலிக்க,ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் தலைமையில் 250 காவலர்களின் குண்டாந்தடிகள் 350 கம்யூனிஸ்டுகளையும் தாக்கின.
துப்பாக்கியால் சுட்டனர். இரத்தம் ஆறாக ஓடியது. சடலங்கள் மிதந்தன.
"இன்குலாப் ஜிந்தாபாத் "
"விப்ளவம் ஜெயிக்கட்டே"
"புரட்சி ஓங்குக! "
"கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் "
முழக்கங்கள் ஒலித்தன.
22 பேர் கொல்லப்பட்டார்கள். 19 பேர் கேரளத் தோழர்கள். மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். (திருச்செங்கோடு நெசவாளர் காவேரி முதலியார், சேலம் ஜவஹர் மில் தொழிலாளர் ஆறுமுகம், கடலூர் கட்சி ஊழியர் சேக் தாவூது ).200க்கும் மேற்பட்டோர் குண்டு காயமுற்றனர். சேலம் சிறை பிணக்காடானது.
மத்தியில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தான் ஆட்சி செய்தது. PS குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல்வராக இருந்தார். மந்திரி மாதவ மேனன் சேலம் சிறைக்கும், மருத்துவமனைக்கும் வருகை புரிந்தார். "திரும்பிப் போ! " முழக்கங்கள் எதிரொலித்தது.
இந்தியப் புரட்சிக்கான கம்யூனிஸ்ட் தியாகிகள் வரிசையில், சேலம் சிறைத் தியாகிகளும் இடம் பெற்றனர்.
சேலம் சிறைத் தியாகிகளே!
உங்களை ஒருநாளும் மறவோம்!
நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது!
இறக்கும்போது நீங்கள் எழுப்பிய முழக்கங்கள்
"புரட்சி ஓங்குக! "
"விப்ளவம் ஜெயிக்கட்டே! "
"இன்குலாப் ஜிந்தாபாத் !"
என்றும் உயர்த்திப் பிடிப்போம்!
சேலம் சிறைத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்!
- அ.சந்திரமோகன்

சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் ?

“காதலிக்கிற, தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்றும் நம்புகிற ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் நோக்கி இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நீங்கள் காதலித்தால் சாகடிக்கப்படுவீர்கள் அல்லது உங்களை நீங்களே அழித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவீர்கள். சட்டம், நீதி, ஊடகங்கள் எதை வைத்தும் நீங்கள் தப்ப முடியாது”. இது மாற்று சாதியில் காதலிப்பவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கை. இதையும் மீறி காதலித்தால் மேற்சொன்ன விளைவுதான் ஏற்படும். குறிப்பாக தலித்துகளைக் காதலித்தால் பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என்பது மட்டும் கண்டிப்பாக நிச்சயம்.
honour killing 1
சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகள் கொலை செய்யப்பட்டும் மற்றும் கட்டாயக் கெளரவத் தற்கொலைக்குத் தூண்டப்பட்டும் வருகிறார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்ய இளம்தலைமுறையினர் அஞ்சும் அளவிற்கு காவல் நிலையத்தில் வைத்து ஆதிக்கசாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகள் உள்ளன. “கெளரவக் கொலைகள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறிவிட்டது என்ற தகவல்களும், சில சாதி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக முன்வைத்த முழக்கங்களும் நாம் சாதிக்கொடுமையின் சாப நிழலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன”. தலித்துகளைத் திருமணம் செய்யும் மற்ற சாதிப் பெண்கள் சாதிக் கெளரவம், குடும்ப கெளரவம், சமுதாயத்தில் வாழவே முடியாது போன்ற உளவியல் ஆயுதத்தை வைத்தே மிரட்டப்படுகின்றனர். ஒரு தலித்தை திருமணம் செய்வதற்குப் பதில் தற்கொலை செய்துகொள் என்றும் அதன்மூலம் தங்கள் கெளரவம் காக்கப்படும் என்றும் கட்டாயக் கெளரவத் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர்.
தலித் அல்லாத பிற சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறும் பொழுது அவை தடுக்கப்படுவதும் இல்லை, கவனம் பெறுவதும் இல்லை. ஆனால் தலித் கலப்புத் திருமணங்கள் பெரும் எதிர்ப்பை சந்திக்கின்றன. அந்த தம்பதிகள் பிரிந்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. தலித் கலப்புத் திருமணம் என்றால் அதற்கான விலை உயிர் தான். தலித்துகளை மருமகனாகவோ, சம்பந்தியாகவோ, வேறெந்த உறவு முறையாகவோ ஆதிக்க சாதிகள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இந்தியா முழுமைக்குமே இந்த நிலைதான். தங்களுக்கு தலித்துகள் அடிமைகளாகவோ, ஏவலர்களாகவோ வேண்டுமே தவிர, உறவினர்களாக ஒருபோதும் ஆகவிடமாட்டோம் என்றுதான் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பதும், மீறி நடைபெற்றால் காவல் நிலையத்தில் பெண் கடத்தப்பட்டார் எனப் பொய்ப் புகார் கொடுத்து தம்பதிகளை காவல் நிலையம் வரவழைத்து காவல் துறையின் கட்டப் பஞ்சாயத்தின் மூலமோ, சாதிப் பஞ்சாயத்தின் மூலமோ பிரிக்க நினைக்கின்றனர். முடியாத பட்சத்தில் காதலித்தவர்கள் இருவரையுமோ அல்லது அதில் ஒருவரையோ கொலை செய்கின்றனர். தலித்துகளை திருமணம் செய்வதன் மூலம் தங்கள் சாதியின் கெளரவத்தை கெடுத்துவிட்டதாக தங்கள் பிள்ளைகளையே கொலை செய்ய இந்த சாதிய சமூகம் அவர்களைத் தூண்டுகின்றது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சாதி ஆணவக் கொலைகளே இதற்கு சாட்சி.
பொதுவாக சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவர்களை இந்த சாதிய சமூகம் அங்கீகரிக்க மறுக்கின்றது. தலித் கலப்புத் திருமணங்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. அவர்கள் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் வாழும் சமூகம் அவர்களை தங்களுக்குள் ஒருவராக ஏற்றுக்கொள்வதில்லை. சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் அல்லது சமூகத்தால் மதிக்கப்பட வேண்டும் என்றால் தான் சார்ந்த சாதியிலேயே திருமணம் செய்து, தான் சார்ந்த சாதியிலேயே தங்கள் குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் சமூகத்தில் உயர்ந்தவராக பார்க்கப்படுவார் என்ற மாயை தொடர்ந்து பரப்பப்பட்டு வருகினறது. கல்வியில் உயர்ந்தவர் என்பதைத் தாண்டிய கெளரவமாக இங்கே சாதி பார்க்கப்படுகிறது.
ஆதிக்க சாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுபோன்ற தலித் கலப்புத் திருமணங்களை எதிர்ப்பதும், ஊடகங்களின் நேர்காணலின் போது இது போன்ற திருமணங்களுக்கு மிரட்டல் விடுவதும், இவ்வகைத் திருமணத்தை செய்தாலோ அல்லது அதற்கு துணைபுரிந்தாலோ தங்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று பொது சமூகத்திற்கு போதித்து வருகிறார்கள். திருமண வயதை 21 ஆக மாற்றக் கோரும் இவர்கள் ஓட்டுப் போடும் வயதை 21 ஆக மாற்ற கோர மறுக்கிறார்கள். காரணம் ஓட்டுக்கள் குறையும் என்பதால். 18 வயதில் நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல் தெளிவு பெறும் அதே பெண் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க மட்டும் 21 வயது ஆக வேண்டுமாம். 18 வயதில் திருமணம் செய்து குழந்தை பெறும் அளவுக்கு பெண்ணின் மனதும் உடலும் பக்குவப்படுவதில்லைதான். ஆனால் அதை விடுத்து சாதி மாறி கலப்புத் திருமணம் செய்வார்கள் என்பதற்காக பெண்ணுடைய திருமண வயதை அதிகரிக்கச் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டிய பொது அமைப்புகள் தங்களுடைய கலப்புத் திருமணத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மெளனத்தின் மூலம் மறைமுகமாக இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்துகின்றன.
ஊடகங்கள் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகளையோ, கெளரவக் கொலைகளையோ வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து, தங்களுடைய கடமையை முடித்துக் கொள்கின்றனர். கலப்புத் திருமணத்திற்கு எதிராக செயல்படும், அறிக்கைவிடும், கூட்டணி அமைக்கும் கட்சிகளையோ, அமைப்புகளையோ அவை ஒருபோதும் கண்டித்ததுமில்லை. அவர்கள் செய்வது தவறு என் சுட்டிக்காட்டுவதும் இல்லை. மாறாக அவர்கள் விடும் அறிக்கைகளை ஒரு வரி விடாமல் இந்த சமுதாயத்திற்கு தெரியப்படுத்தும் வேலையையே செய்கின்றன. இதன் மூலம் அவர்களின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். மேலும் அவர்களை நேர்காணல் செய்து கலப்புத் திருமண எதிர்ப்பிற்கு நியாயம் கற்பிக்க துணைபுரிகின்றனர். இதன் மூலம் ஊடகங்களும் தங்களுடைய பங்கிற்கு கலப்புத் திருமணத்திற்கெதிரான தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
காவல் துறை, சாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளை காப்பதை விட்டுவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்களைப் பிரிப்பதற்கு துணையாக இருக்கின்றன. சாதி ஆணவக் கொலைகள் நடைபெறும் போதும் சாதிக் கொலைகாரர்களுக்கு சார்பாக அதை தற்கொலை வழக்காக பதிவு செய்து, தாங்களும் கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். “கலப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறை தமிழ்ச் சமூகத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒன்றுதான். கலப்புத் திருமணங்கள் செய்பவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்து அறுத்துக் கட்டுவது, அவர்களை கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டுவது இதெல்லாம் நமது சாதிய சமூகங்கள் செய்து வரும் அன்றாடத் தொழில்கள்தான்”. இதற்கு உதாரணம் தமிழகத்தில் ஒரு சாதி மறுப்புத் திருமணத்திற்காக மூன்று கிராமங்கள் தருமபுரி அருகே எரிக்கப்பட்டதே ஆதாரம். எப்பொழுதும் தமிழகம் முழுவதும் சாதிகடந்த காதலர்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை நடந்துகொண்டிருக்கிறது.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது ஒரு தனி நபரின் பிரச்சனை தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஒரு சாதிக் குழுவின் பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இது ஏன் அவ்வாறு மாற்றப்படுகின்றது? காதலிப்பது என்பது தனிநபர் சார்ந்த விஷயம் இதில் சம்மந்தப்பட்ட குடும்பத்தைத் தவிர மற்றவர்களுக்கு பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதை தன்னுடைய ஒட்டுமொத்த சாதியின் பிரச்சனையாக மாற்றுவதில் அந்த சாதி முனைகின்றது. இதன் மூலம் தங்கள் சாதிப் பெண்கள் தங்களுக்கு மட்டுமே செந்தமாக வேண்டும் என்று நிறுவுகின்றனர். இங்கு தனிமனித உரிமை பறிபோகின்றது.
சட்டப் பாதுகாப்போ, காவல் துறையின் பாதுகாப்போ இல்லாத காரணத்தினால் கலப்புத் திருமணத் தம்பதிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையே இருக்கிறது. கலப்புத் திருமணம் செய்வோரில் ஒருவரோ அல்லது இருவருமோ செத்தாக வேண்டிய சூழ்நிலை இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. இதற்காகவே இளம் தலைமுறையினர் சாதிகடந்து காதல் செய்வதற்கு அஞ்சி நிற்கின்றனர். காதலித்துக் கொண்டிருப்பவர்களும் தங்களுக்குள் பேசி பரஸ்பரம் பிரிந்து போக முடிவெடுக்க வேண்டியுள்ளது. மனதைப் பார்த்து வரவேண்டிய காதல், சாதிச் சான்றிதழ் பார்த்து வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காதல் என்பது இயற்கையானது. அதை விலங்குகளிடமும், பறவைகளிடமும் பார்க்க முடியும். ஆனால் அவை குறிப்பிட்ட கால அளவுள்ளது, அத்துடன் அது முடிந்துவிடும். அதே வேலை மனிதனின் காதல் மட்டும்தான் நீண்டகாலம் தொடரும். இளம் பருவத்தில் ஆரம்பித்து திருமணத்தின் மூலம் இறப்புவரை தொடர்கின்றது. இதில் சாதி என்பற்கு எந்த விதமான் வேலையும் இல்லை. குறிப்பிட்ட சாதிகளின் காதல் மட்டும் சிறந்தது என்றோ, மற்ற சாதிகளின் காதல் மோசமானது என்றோ எதுவுமே கிடையாது. காதல் குறிப்பிட்ட பருவத்தில் வரத்தான் செய்யும். அதுதான் இயற்கையின் நியதி. இதில் சாதியைப் புகுத்துவது இயற்கைக்கு எதிரானதே. ஆனால் மனிதனால் இயற்கையின் நியதியை மாற்ற முடியாது என்பது இந்த சாதிக் காவலர்களுக்கு தெரியாது போலிருக்கிறது.
காதலின் அடுத்த படிநிலையான திருமணம் பற்றி சமூகவியலாளர்களின் கூற்றானது, ஒரு ஆணையும் ஒரு பெண்னையும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் கணவன் மனைவியாக இணைப்பதுதான் திருமணம். இது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகும். திருமணம் மனித சமூகத்தால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. மேலும் மனிதனுடைய பாலியல் தேவையை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இத்திருமணமே குடும்பம் எனும் நிறுவனத்தை உருவாக்கக்கூடியது. திருமணமும் குடும்பமும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது. மனித இனம் தொடர்ந்து நிலைபெற நல்ல சமுதாயம் வேண்டும். எனவே பல குடும்பங்களின் கூட்டான சமுதாயத்தை உருவாக்க குடும்பங்கள் உருவாக வேண்டும். குடும்பம் திருமணத்தின் மூலமே உருவாகிறது. ஆக திருமணம் என்பது ஏற்றத்தாழ்வற்ற குடும்பத்தின் மூலம் சிறந்த மனித சமுதாயம் தோன்ற கருவியாக உள்ளது.
திருமணத்தின் தேவை என்பது மனித இனத்தின் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகதான் இதில் சாதியை வைத்து பிரிவினையாற்ற அல்ல. சமூகவியலாளர்கள் திருமணத்தின் தேவையாகக் குறிப்பது, மனிதனின் பாலியல் தேவையை ஒழுங்குபடுத்துதல், குடும்பத்தை உருவாக்குதல், பொருளாதாரக் கூட்டுறவை குடும்பத்தில் உருவாக்குதல், தம்பதிகளுக்குள் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல், மற்றும் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குதல் ஆகியவையே. இங்கே தான் சார்ந்த சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக வரையறுக்கப்படவில்லை. ஆகவே திருமணமானது சமுதாயத்தை மேம்படுத்த மட்டுமே. இங்கே ஒரு ஆணும் பெண்ணும் தான் தேவையேயொழிய சாதிகள் அல்ல.
இந்தியாவில்தான் பெண்ணை ஒரு சொத்தாகப் பாவித்து அவர்கள் மேல் தொடர்ந்து அடக்குமுறையைத் திணித்து அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர். இங்கு பெண்களின் உடல் ஒரு நிலம்போல் பார்க்கப்பட்டு அந்த நிலத்தின் மீதான உரிமை தான் சார்ந்த் சாதிக்கே உள்ளது என்ற ஆணாதிக்க மனநிலையே நிலவி வருகின்றது. எப்படி ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் அதன் வாரிசுகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அதே போல் ஒரு சாதியில் பிறந்த பெண் அந்த சாதியிலேயேதான் திருமணம் முடிக்க வேண்டும் என்று சாதிய சமூகம் நிர்பந்திக்கிறது. இங்கே பெண் என்பவள் ஒரு மனித இனமாகப் பார்க்கப்படாமல் ஆண்கள் பங்கு போட்டுக் கொள்ளும் நிலமாகப் பார்க்கப்படுகிறாள். 21ஆம் நூற்றாண்டில்கூட தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு இன்னும் வழங்கப்படவே இல்லை. இங்கே நிலம் (பெண்) எந்த சாதி வாரிசுகளின் சொத்தாக வேண்டும் என்று அந்த சாதிதான் தீர்மானிக்க முடியும்.
இந்தியாவில் ஒரு கிருத்துவர் இன்னொரு கிருத்துவரைத் திருமணம் செய்துகொள்ள முடியும். ஒரு இஸ்லாமியரை இன்னொரு இஸ்லாமியர் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படி கிருத்துவராகவோ, இஸ்லாமியராகவோ இல்லை என்றால், அந்தந்த மதங்களுக்கு மாறிக்கொள்வதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால் ஒரு இந்து இன்னொரு இந்துவைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. காரணம் இந்து சமூகத்தில் சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் காரணியாகவும் முக்கிய இயங்குகோளாகவும் உள்ளது. குறிப்பிட்ட சாதி அதே சாதியில் மட்டும்தான் திருமணம் செய்ய முடியும், இருவருமே இந்துவாக இருந்தாலும்கூட. இங்கு சாதிய வட்டத்தில்தான் இந்திய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் தாங்கள் முன்னோடிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் கலப்புத் திருமணத்திற்கு எதிராக கெளரவக் கொலை செய்வதிலும் முன்னோடிகளாகத் திகழ்கிறோம்.
இந்த சமூகத்தில் நிலவும் சாதி ஆணவக் கொலை எனும் இழிவைத் தடுக்க முடியாத சூழ்நிலையே உள்ளது. காரணம் “கெளரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஏதும் இல்லை. அதுவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதற்குத் துணையாக உள்ளன. காரணம் கெளரவக் கொலைகள், கொலை வழக்காகவே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் கடுமையான தண்டனைகளுடன் கூடிய தனிச் சட்டமே இதற்கு மிக முக்கியம். வெறும் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் போது நாட்டில் கெளரவக் கொலையே நடைபெறாதது போல் காட்டப்படுகின்றன. கெளரவக் கொலையாக இருந்தாலும் அது கொலை வழக்கு புள்ளி விவரங்களுடன் சேர்ந்துகொள்கிறது. எனவே கெளரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்”. சாதி ஒழிப்பாக மாற வேண்டிய சாதி மறுப்புத் திருமணங்கள் இன்று கெளரவக் கொலைகளின் மூலம் மனித ஒழிப்பாக மாறிவருகின்றது.
மேற்கத்திய கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் ஏற்றுக்கொள்ளும் நமது சமூகம் கலப்புத் திருமணத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கின்றது. ஒரு கிரகத்திலிருந்து வேற்றுக்கிரகத்திற்கு சந்திராயன் அனுப்பி இரு கிரகங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த நினைக்கும் இந்திய சாதிய சமூகம் இரு சாதிகளுக்குள் தொடர்பை ஏற்படுத்த விரும்பாதது விந்தையான நிதர்சனம்தான். இயற்கையாகத் தோன்றும் காதலை சாதி ஆணவக் கொலை செய்வதன் மூலம் அழித்துவிட முடியும் என்று நினைப்பது முட்டாள்தனமே.
துணை நூல்கள்
1. C.N.Shankar Rao, Sociology, 1990, S.Chand&Company Ltd, New Delhi.
2. The Hindu Marriage Act, 1955.
3. தலையங்கம், கெளரவக் கொலைகளும் அரசின் கெளரவமும், காலச்சுவடு. மே 2012, பக்:3-4.
4. மனுஷ்யபுத்திரன், எதிர்குரல், நக்கீரன், 2013 ஜுன் 10-12, பக்:18-20.
5. மனுஷ்யபுத்திரன், எதிர்குரல், நக்கீரன், 2012 நவ 14-16, பக்:18-20.
- சி.வெங்கடேஸ்வரன்

சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு

மோடி அரசு பதவி ஏற்றது முதல் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை இந்தியாவில் தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. மோடி உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, வங்கித்துறை மற்றும் காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத்துறை முதலியவற்றில் 100 சதவீதம் அந்நிய நாட்டு மூலதனங்களை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியாவின் தொழில்களையும், பொருளாதாரத்தையும் அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளித்தல், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தல், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துதல், மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் முதலிய நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது மோடி அரசு.
modi ambani tataமோடி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கைகள் அமையும் என சாதாரண குண்டூசி தயாரிப்பாளர் கூட எதிர்பார்த்தனர். ஆனால், மோடி தமது முதல் சுதந்திர தின விழா உரையில் “மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்களை அழித்துவிடும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்தியாவில் 3.5 கோடிக்கு மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்களில் 7500-க்கும் மேற்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் 8 கோடி பேர் பணி புரிகின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம், இந்தியாவின் ஏற்றுமதியில் 43 சதவீதம் சிறு தொழில் துறையைச் சார்ந்தது. சிறு தொழில் உற்பத்திக்கு இந்தியா கேந்திரமாக விளங்குகிறது.
சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மோடி அரசு 15.03.2015 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 சிறு தொழில்களை நீக்கியுள்ளது. மேலும் அத்தொழில்களின் முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. அதாவது, குறுந்தொழிற்சாலைகளின் முதலீட்டை ரூ. 50 லட்சமாகவும், சிறு தொழிற்சாலைகளுக்கு ரூ. 10 கோடியாகவும், நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ரூ. 20 கோடியாகவும் உயர்த்தியுள்ளது.
மோடி அரசு சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து பட்டாசு, தீக்குச்சி, நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள், பூட்டு தயாரிப்பு, எவர்சில்வர், பாத்திரங்கள் தயாரிப்பு, ஸ்டீல் பர்னிச்சர் தயாரிப்பு, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சலவை சோப்பு, ரொட்டி தயாரிப்பு, கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், மரப்பொருள்கள், கண்ணாடி வளையல், அலுமினியப் பொருட்கள் தயாரிப்பு முதலியவற்றினை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொழில் துறையில் சீர்திருத்தம் என்று கூறுகிறது மோடி அரசு. ஆனால், இந்த அறிவிப்பு சிறுதொழில்களின் அழிவுக்கு வழிவகுக்கும். சிறு தொழில்களில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், ஏகபோக நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை செய்வதற்கும், அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டவும் தான் வழிவகுக்கும்.
மோடி அரசு சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்களின் முதலீட்டு உச்ச வரம்பை உயர்த்தியுள்ளதால், தொழில் முனைவோர்களையும், அத்தொழில்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் நடுத்தெருவுக்கு தள்ளியுள்ளது.
மோடி அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான். பார்வையில்லாத, கை, கால் ஊனமடைந்த மாற்றுத் திறனாளிகள் பலர் ஊறுகாய், ஊதுபத்தி, நோட்டுப்புத்தகங்கள் முதலிய தயாரிப்புகளை குடிசைத் தொழல்கள் மூலம் தயார் செய்து, வீடுகள், சாலை ஓரங்கள், நடைபாதைகள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலிய இடங்களில் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மோடி அரசின் அறிவிப்பால் அவர்களது வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும். பிழைக்க வழியில்லாமல் போகும் சூழல் ஏற்படும்.
தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி முதலிய பகுதிகளில் தீக்குச்சி, பட்டாசு, நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கும் சிறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. திருப்பூர், கும்பகோணம், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, ராஜபாளையம், ஆத்தூர் முதலிய ஊர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைகளில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் பணி சிறு தொழில்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
சிறு தொழில் நிறுவனங்களில் எவர்சில்வர் தகடுகளைக் கொண்டு அண்டா பானை, சாப்பாடு தட்டுகள், டம்ளர்கள், சமையல் பாத்திரங்கள் எனப் பல்வேறு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கண்ட சிறு தொழில்களில் நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
எவர்சில்வர் தொழில் சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இத்தொழிலில் ஏகபோக, கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தையைக் கைப்பற்றி கொள்ளை லாபம் ஈட்டும். பாரம்பரியமாக மனித உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் எவர்சில்வர் தொழில் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் சேர்க்கப்படுவர். அவர்களது வாழ்க்கை பறிபோகும்.
பன்னாட்டு நிறுவனங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும். இதனால் பல ஆண்டுகளாக சிறு தொழில் செய்து பிழைத்து வருபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் துயரமான நிலை ஏற்படும்.
மோடி அரசு வளர்ச்சிப்பாதை என்ற போர்வையில் சிறு, குறு தொழிற்சாலைகளை நசுக்கி அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமலும், மின் வெட்டாலும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
பெரும் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களைத் தேடிச் சென்று கடன் கொடுக்க வங்கி நிர்வாகங்கள் தயாராக வரிசையில் காத்திருக்கின்றன. அவர்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதும் இல்லை. வட்டியும், கடன் தொகையும் தள்ளுப்படி செய்யப்படுகிறது. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் போதிய நிதி இல்லாமல் திண்டாடும் அவல நிலை நீடிக்கிறது.
மோடி அரசின் அறிவிப்பினால் கிராமப்புற இளைஞர்கள் சுயமாக சிறு தொழில் தொடங்கிட முன்வராத நிலை ஏற்படும். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை – எளிய – நடுத்தர மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச மாற்றத்தைக் கூட உருவாக்கவில்லை. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் மக்கள் மத்தியில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றன. நகர்புற, கிராமப்புற ஏழைகளின், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் வளர்ச்சி, மாற்றம் என்றெல்லாம் முழங்கினார் மோடி. ஆனால், அவரது ஆட்சி செல்லும் திசை வழி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வளர்ச்சியாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றமாகவுமே உள்ளது.
மோடி அரசு மேற்கண்ட 20 பொருள் உற்பத்தியை மீண்டும் சிறு தொழில்களில் சேர்த்திட வலியுறுத்திட வேண்டும். சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடன் வழங்கிட வேண்டும்.
- பி.தயாளன்

SC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை

“வாயில்லாதோர், கதியில்லாதோர், ஆதரவில்லாதோர் கிடைத்துவிட்டால் ஆழ்மனதில் பதுங்கிக் கிடக்கும் எத்தனை குரூரங்கள் வெளிப்படுகின்றன! அதிலும் அவர்கள் பெண் குழந்தைகளாகவும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்துவிட்டால் வக்கிரங்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை. பலியானவர்களுக்கு அன்றி, குற்றவாளிகளுக்குச் சாதகமான சாதி – வர்க்க – சட்ட – அரச – அதிகாரச் சூழல் குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு ஆயிரம் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது”.1
sexual assaultதலித்துகளின் மீது நிகழ்த்தப்படும் கொடிய வன்முறைகளில் ஒன்றுதான் பாலியல் வன்முறையும். காலங்காலமாக நிகழ்த்தப்படும் இவ்வன்முறை பதிவு செய்யப்படாமலும், பொதுவெளியின் கவனம் பெறாமலும் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்துள்ளது. கால ஓட்டத்தில் சில பாலியல் வன்முறைகள் உலகிற்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்டவைகளைவிட பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவைகளே அதிகம் எனலாம். அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், சாதிப் பஞ்சாயத்துகளை மீறி எதுவும் வெளியே வராது. ஆதிக்க சாதிகளின் அதிகாரத்தாலும், சூழ்ச்சியாலும் இவையெல்லாம் வெளியே வராமல் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்காததாலும் இவ்வகையான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்லமுடியாத நிலையில் தலித்துகள் உள்ளனர். தலித் பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் இவ்வன்முறை குரூரத்தின் உச்ச வெளிப்பாடு; அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் சமூகத்தில் தலைகுனியச் செய்கின்ற யுக்தி.
பாலியல் வன்முறை நாட்டின் அனைத்துப் பகுதிகளில் நடைபெற்றாலும் “பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித், பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்”.2 “தினமும் குறைந்தது மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்”.3 நாடு முழுவதும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. “நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகளில் தலித் பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்கள்தான் மிகவும் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள்”.4
நாட்டில் கிராமப்புறங்களில் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அதிகம். “கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்களில் 90 சதவீதம் பேர் தலித் மற்றும் ஆதிவாசிகள்தான்”.5 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவின்படி பார்க்கும் பொழுது தலித்துகளின் மீதான பாலியல் வன்முறை வருடம் தோறும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆதாரம்: தேசிய குற்ற ஆவண காப்பகம்
கடந்த ஆண்டு மே 27 உத்திரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரு குற்றவாளிகள் காவல்துறையைச் சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஜூன் 11 பொள்ளாச்சி விடுதியில் தங்கி, பள்ளியில் பயின்று வந்த இரு தலித் சிறுமிகள் மிரட்டி கடத்திச்சென்று வன்புண்ர்ச்சி செய்யப்பட்டனர். அதேபோல் ஜூன் 23 கரூர் கிருஷ்ணராயபுரம் பச்சம்பட்டியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் தலித் இளம்பெண் கடத்திச் சென்று வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அன்றாட நிகழ்வாகிவிட்டது.
காவல்துறையின் அலட்சியப் போக்கும் குற்றவாளிகளுக்குத் துணை போவதும், குற்றத்தில் அவர்களே ஈடுபடுவதும் தொடர்கதையான ஒன்றாக உள்ளது. குற்றத்தைப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவது, பதிவு செய்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் சேர்த்துப் பதியாமல் வெறும் பாலியல் வன்முறையாக மட்டும் பதிவது, கட்டப்பஞ்சாய்த்து செய்து வழக்குப் பதியாமல் விடுவது, பதிந்தாலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்காமல் விடுவது போன்ற குற்றவாளிகளுக்கு சாதகமான செயல்படுகளால் இம்மாதிரியான தலித்துகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தலித் மக்களின் குடியுரிமை மற்றும் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வன்கொடுமைச்சட்டங்கள் பல இருந்தும் அவை செயலற்றவையாகவே உள்ளன. இந்த நிலையில் அதனை நீக்கவேண்டி ஆதிக்க சக்திகள் கூப்பாடு போடுகின்றன.
தலித் ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் தொடர்ந்து இந்த சாதிய சமூகம் வன்முறையை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றது. தலித் பெண்கள் மீது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்முறை ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றது. சட்டமும் அதை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் இது போன்ற தலித்துகள் மீதான பாலியல் வன்முறையை ஒடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
துணை நூல்கள்
1. வசந்தி தேவி.வே, மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்-6: கதியற்ற சிறுமிகளும் கிடைக்காத நீதியும், காலச்சுவடு, ஜூன் – 2014, பக்.27.
2. மேலது பக்கம்.
3. முத்துக்கிருஷ்ணன்.அ, பலாத்கார தேசம், உயிர்மை, பிப்ரவரி – 2013. பக்.7.
4. யமுனா ராஜேந்திரன், வன்பாலுறவும் பெண்நிலைவாதமும், உயிர்மை, பிப்ரவரி – 2013, பக்.17.
5. மாலதி மைத்ரி, தூக்குக்கயிறும் பெண்கள் பாதுகாப்பும், குமுதம் தீராநதி, மார்ச் – 2013, பக்.10.
- சி.வெங்கடேஸ்வரன், ஆய்வாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி

பேராசிரியர் சாய்பாபா

அரசு பயங்கரவாதம் அதன் கடைசி எல்லையைத் தொட்டிருக்கின்றது. ஒரு பக்கம் மனுவையும், மற்றொரு பக்கம் தேசியத்தையும் கலந்து முதலாளித்துவ தேசியமாக வர்க்க சுரண்டலை முதன்மைப்படுத்தும் ஒரு கேடுகெட்ட பார்ப்பனிய ஆட்சியில் நிலபிரபுத்துவ தன்மைவாய்ந்த கொடிய தீர்ப்பை ஆளும் வர்க்கத்தின் அமைப்பான நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுவாக நீதித்துறையும், நிர்வாகத்துறையும் தனித்தனியாக செயல்படுவதாக நாம் நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்திசைந்துபோகும் தன்மை வாய்ந்தது. அரச பயங்கரவாதத்தின் துணைக்கருவியான நீதிமன்றத்தின் உண்மையான பணி, அரசு மேற்கொள்ளும் அனைத்து அடாவடித்தனமான மக்கள் விரோத செயல்களுக்கும் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இந்திய நீதி அமைப்பைப் பொருத்தவரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் ஊழல் செய்வதற்கு மட்டுமே பயன்படுகின்ற வெற்று உத்திரவாதமாக மட்டுமே உள்ளது.
saibaba professor
 சமூகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதில் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களான தலித்துகள் மீது இந்திய அரசு ஆண்டாண்டு காலமாக தனது கட்டற்ற வன்முறையைப் பிரயோகித்து வருகின்றது. அவர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துகின்றது. பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களின் இலாப வெறிக்காக இந்திய அரசு அப்பாவி பழங்குடியின மக்களை, அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த காடுகளில் இருந்து அடித்து விரட்டுகின்றது. அவர்களது வாழ்வாதாரத்தை அழித்தும், குடிசைகளை எரித்தும், பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலை நிகழ்த்தியும், அவர்களைக் கொன்று போட்டும் இந்த அரசு தனது கோரமுகத்தைக் காட்டி அவர்களை வலுக்கட்டாயமாக காடுகளில் இருந்து வெளியேற்றுகின்றது. அப்படி காடுகளில் இருந்து வெளியேறிய அந்த மக்களை உள் நாட்டிலேயே அகதிகளாக்கி, ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தும் பிச்சைக்காரர்களாய் மாற்றி வைத்திருக்கின்றது. அரசைப் பொருத்தவரை இதுவும் கூட நாட்டைக் காப்பாற்ற நடத்தப்படும் போர்தான். இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு தொழிற்நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது என்பது கூட தேசபக்தியின் ஒரு வெளிப்பாடுதான்.
 இந்திய அரசின் இந்தத் தேசபக்தியை எதிர்த்துப் போராடிய தேசவிரோதிதான் பேராசிரியர் சாய்பாபா அவர்கள். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அவர் சாதாரண மனிதர் அல்ல. இந்திய அரசின் பார்வையில் மிகவும் மோசமான தீவிரவாதி. இந்தத் தீவிரவாதி செய்த தவறு என்னவென்றால், மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் தண்டகாரண்ய காடுகளில் இந்திய அரசு நடத்திய அயோக்கியத்தனங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு எதிராக பழங்குடியின மக்கள் மத்தியில் செயல்பட்டு, அவர்களைக் காடுகளில் இருந்து வெளியேற்றியது. இதுதான் சாய்பாபா செய்த தேசவிரோதச் செயல்கள். இந்திய அரசால் பழங்குடியின மக்களை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்ட சல்வாஜூடும் என்ற கொலைகார பாசிசப் படை தண்டகாரண்ய காடுகளில் நடத்திய அட்டூழியங்களை உண்மையென்று ஒப்புக்கொண்டு உச்சநீதி மன்றமே அதைக் கலைப்பதற்கு உத்திரவிட்டது. ஆனால் அதே சல்வாஜூடும் குண்டர்படையின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடிய, அதைப் பற்றி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய சாய்பாபாவிற்கு மகாராஷ்டிர மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கின்றது. அவருக்கு மட்டும் அல்லாமல் அவருக்கு உதவியதாக ஹெம்மிஸ்ரா, மகேஷ் திர்கே, பாண்டு நாரோட்டி, பிரசாந்த் ராஹி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் திர்கேவுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. அரசு குண்டர் படைகளை உருவாக்கி மக்களைக் கொல்வதை உச்சநீதி மன்றமே ஏற்றுக்கொண்டிருக்கும் போது அதற்கு எதிராகப் போராடியது எப்படி குற்றமாகும் என்று தெரியவில்லை.
 தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள் பிடித்துக் கொடுத்தார், உணவுப் பொருட்களை சப்ளை செய்தார் என பல்வேறு குற்றசாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2014 ஆண்டு மே மாதம் 9-ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கைதுக்குக் காவல்துறை கூறிய காரணம் சாய்பாபாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலரின் செய்தியாளர்களுக்கான அறிக்கை இருந்ததாகவும், மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலருக்கு சாய்பாபா எழுதிய கடிதம் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசிவரை சாய்பாபா அவர்களிடமிருந்து கைப்பற்றியதாக சொல்லப்பட்ட ஆவணங்களை போலீசார் காட்டவே இல்லை.
 உண்மையில் அரசுக்கு சாய்பாபாவை முடக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் பலமுறை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார். அவர் செய்ததெல்லாம் பழங்குடியின மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததுதான். அவர்களுக்கு இந்திய அரசு காடுகளில் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எப்படி நாளை அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் எனப் புரிய வைத்ததுதான். இப்படிப்பட்ட புரிதல் தான் காடுகளை அபகரிக்க வந்த பன்னாட்டு தொழிற்நிறுவனங்களுக்கு எதிராக அந்த மக்களைப் போராட உற்சாகப்படுத்தியது. இது பன்னாட்டு தொழிற்நிறுவனங்களிடம் பெரும் தொகையைக் கமிசானக வாங்கிக்கொண்டு இந்தியாவின் வளங்களைச் சூறையாட அனுமதிக்கும் ஆளும் வர்க்க கைக்கூலிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. பல ஆயிரம் கோடிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. அது மட்டும் அல்லாமல் பேராசிரியர் சாய்பாபாவிற்கு பழங்குடியின மக்களிடையே இருக்கும் செல்வாக்கு அளப்பரியது. அவர்கள் உதவி இல்லாமல் சாய்பாபாவால் இயங்கியிருக்கவே முடியாது. இதை அவரே பலமுறை சொல்லி இருக்கின்றார். அவர்கள் சாய்பாபவை தங்களை மீட்க வந்த மீட்பானாகப் பார்த்தார்கள். அவரைத் தோள்களில் சுமந்துகொண்டு தங்கள் பகுதியில் வலம் வந்தார்கள். 90 சதவீதம் மாற்றுத்திறனாளியான சாய்பாபாவை தங்களில் ஒருவராக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் இந்திய அரசுக்கு பேராசிரியர் சாய்பாபா மீது அச்சம் ஏற்படக் காரணம்.
 சாய்பாபா போன்றவர்களை இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் அச்சுறுத்த முடியாது என்பது நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதுதான். தன்னுடைய 90 சதவீத ஊனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், சக்கர நாற்காலி இன்றி இயங்க முடியாத நிலையிலும் இந்திய சமூகத்தில் கடைகோடி எளிய மனிதர்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த அந்த மனிதரை இந்தத் தீர்ப்பு நிச்சயம் முடக்கிவிடாது. இதை எல்லாம் எதிர்பார்த்துதான் பொதுவாழ்வில் சாய்பாபா போன்றவர்கள் பணியாற்றுகின்றார்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பொருளாதார வசதியுடனும் உள்ள பல பேர் அரசின் பயங்காரவாத செயல்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களாய், பழங்குடியின மக்கள் மீது அரசு நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டும் காணாத கோழைகளாய் அற்பப்பிறவிகளாய் வாழும் போது அவரது துணிச்சல் அசாத்தியமானது.
 சாய்பாபா தன்னுடைய வாழ்க்கையை எப்போதுமே போராட்டக் களமாகவே வைத்துக்கொண்டவர். அரச பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சாத களப்போராளி. வெளியே புரட்சி பேசி, உள்ளே வேசித்தனமாக நடந்து கொள்ளும் ஊரை ஏமாற்றும் பல போலியான புரட்சியாளர்களுக்கு மத்தியில் தன்மீது அரசால் ஏவப்பட்ட கடும் சித்தரவதைக்கு மத்தியிலும் தன்னுடைய நேர்மையை நிரூபித்தவர். இது மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பு என்பதால் இன்னும் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கூடிய விரைவில் தோழர் சாய்பாபா அவர்கள் வெளியே வருவார் என நாம் நம்புவோம். இல்லை அப்படி நடக்காமல் கூட போகலாம். எப்படி இருந்தாலும் இது போன்ற தீர்ப்புகள் போராளிகளை ஒருநாளும் அச்சுறுத்தாது என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
மாவோயிஸ்ட்களை உருவாக்குவது சாய்பாபா போன்றவர்கள் அல்ல. அரசு தான் அவர்களை உருவாக்குகின்றது. சில நூறு பேர்களாக இருந்த மாவோயிஸ்ட்களை இன்று லட்சக்கணக்கில் பெருகச் செய்தது அரசின் பசுமை வேட்டையும், பழங்குடியின மக்களைக் கொல்வதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களும் தான். அரசு ஒருபோதும் தன்னுடைய வர்க்கச் சார்பை மாற்றிக் கொள்ளப் போவதுகிடையாது. அது எப்போதுமே பெரும்முதலாளிகளின் ஏவல் நாயாகவே செயல்படுகிறது. எனவே சாய்பாபா போன்றவர்களை முடக்கிவிட்டால் மாவோயிஸ்ட்களை அழித்துவிடலாம் என அரசு நினைப்பது கேலிக்கூத்தானது ஆகும்.
- செ.கார்கி

தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்

இந்த நேரத்தில் தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியப் பார்வை எத்தகையது என்பதை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் மொழிவழித் தேசிய உணர்வு கூர்மைப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது!
ஒரு தேசிய இனத்தை வேரறுக்க அதன் எதிரி முதலில் அழிக்க முனைவது அந்த இனத்தின் மொழி யைத்தான். இதை வரலாறு தெளிவாக்கிக் கொண்டி ருக்கிறது.
எனவே தான், “ஒரு சமூகத்தின் தாய்மொழியே, அந்தச் சமூகத்தின் தற்காப்புப் படை” என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். எதிரி நம்மிடமிருந்து பிடுங்க முயலும் நம் அடித்தளம் நமது மொழியே என்றும் அவர்கள் எடுத்தியம்புகிறார்கள்.
மொழியை இழக்கும்போது நாம் நிலத்தை இழக்கிறோம்! நிலத்தை இழக்கும் போது இயற்கை வளத்தை இழக்கிறோம்! இடையறாத நம் பண்பாட்டு வேரை இழக்கிறோம்! நம் மண்ணின் மீதான நமது வருங்கால வாழ்வுரிமையை இழக்கிறோம்!
எனவே, மொழி என்பது வெறும் மொழி மட்டுமே இல்லை என்பது தெளிவாகிறது.
மத வழிபாட்டு முறைகள் வேறுபடலாம்; வாழும் நிலங்கள் வேறுபடலாம். இந்த வேறுபாடுகளைத் தாண்டி, ஒரு மாபெரும் மனித சமூகத்தை ஒன்றிணைத்து வைப்பது மொழிதான், மனித சமூகங்களின் அடை யாளம் பெரும்பாலும் மொழிவழிப்பட்டதாகத் தான் இருந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஆங்கிலராட்சி முடிவுக்குவரத் தொடங்கிய போதே, இந்தியக் கண்டத்துத் தேசிய இனங்களிடையே மொழிவழித் தேசிய உணர்வு முகிழ்க்கவும் செழிக்க வும் தொடங்கியது. மராத்தியர், பஞ்சாபியர், வங்காளியர் போன்ற இனத்தவர்கள் மொழிவழிப் பார்வையில் முனைந்து நின்றவர்கள்.
தமிழ்நாடு பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்தாலும், மக்கள் இதனை ஒரு நிலமாகத்தான் கருதிவந்தனர். “கடந்தடு தானை மூவ ரும் கூடி” ஒரே தமிழ்நிலத்தைக் காப்பதாக மக்கள் எண்ணினர்.
“சேரன் ஒருவன்... சோழன் ஒருவன்... பாரமா முடியன் பாண்டியன் ஒருவன்... மூவருங் காத்திட...” என்று மங்கல வாழ்த்துப் பாடும் மரபு இன்றும் நாட்டுப் புறத் திருமணங்களில் காணமுடிகிறது.
எனவே, தமிழ்த்தேசியச் சிந்தனை என்பது தமிழ் மக்களின் இயல்பான உள்ளத்து ஊற்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயரால், அவர்களின் ஆளுகை வசதிக்காகக் கட்டப்பட்டது, ‘இந்தியா’ என்கின்ற கட்டுமானம். இந்த இந்தியா என்பது ஒரு தேசியம் இல்லை. இது 22க்கும் மேலும் அதற்கும் மேற்பட்ட தேசியங்களின் தொகுப்பு. ஒவ்வொரு தேசியத்திற்குமான தனித்தன்மைக்கும், அதன் தன்னாட்சி உரிமைக்கும் எந்த அளவு மதிப்பு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் இந்தியக் கூட்டமைப்பின் உறுதிப்பாடு நீடிக்க முடியும்.
அந்த நாளில் ஐம்பத்தாறு தேசங்களாக அறியப்பட் டிருந்த இந்த இந்தியத் துணைக் கண்டத்தை - இன்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களாக அறியப்படுகின்ற இந்த இந்தியத் துணைக் கண்டத் தை, நாசப்படுத்துவதற்காக இங்கே ஊடுருவிய ஒரு நாசவினை ‘வைரஸ்’தான் ஆரிய சனாதன அதர்மம்.
இது மனித சமத்துவத்தை அழித்தது; மனிதரில் ஒரு பகுதியினரை அடிமைகளாக்கியது. உடைமை மறுக்கப்பட்டவராக்கியது; ஊருக்குள் வாழும் உரிமை இல்லாதவராக ஒதுக்கியது; சிலரைக் காணத் தகாதவ ராக்கியது; சிலரைத் தீண்டத்தகாதவராக்கியது. அவர் களை ஊர்களுக்கு வெளியே குடிசைகளில் மட்டுமே வாழச் சொல்லியது; நல்ல உடை உடுக்கவும், நல்ல உணவு உண்ணவும் தடைவிதித்தது; குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல பெயர்களைச் சூட்டிக்கொள்ளவும் அனுமதி மறுத்தது; அவர்களிடமிருந்து உழைப்பைப் பெற்று அவர்களுக்கு ஊதியம்தர மறுத்தது; ஏழைகளை வன்முறையால் கட்டிவைத்திருந்தது; நால்வருணத் தையும், அதன் புறனடையாகப் பஞ்சம வருணத்தை யும், இவற்றுக்குள் பல உள் சாதிகளையும் உருவாக்கி, பூசல்களை ஏற்படுத்தி மனித குலத்தைச் சிதைத்துக் கூறுபோட்டது; ஒரு சிறிய வகுப்பாரிடம் அதிகாரத்தைக் கொடுத்தது. அனைத்துக்கும் மேலான தெய்வ மேலாண் மையாக ஆரிய சனாதனம் குந்திக்கொண்டது. மன்னர் களையும், வணிகர்களையும் குடிகளையும் இது ஆட்டிப் படைத்தது; பெண்களை இழிவுபடுத்தியது; குழந்தைத் திருமணங்களை நடைமுறைப்படுத்தியது; கைம்பெண் களை இழிவுபடுத்தி அலங்கோலமாக்கியது.
இந்த அநீதிகளை எதிர்த்தவர்கள் அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் இகழப்பட்டனர். இந்த அநீதிகளை எதிர்த்தவர்கள் நாத்திகர் என்றும் உலகாயதர் என்றும் பட்டங்கட்டி ஒதுக்கப்பட்டனர். சமண நெறியும், புத்த நெறியும், வள்ளுவ நெறியும், சித்தர்கள் நெறியும் இந்த ஆரிய சனாதன எதிர்ப்பு நெறிகள்தாம்.
ஆரிய சனாதன அதர்ம எதிர்ப்பு காலந்தோறும் புதுப்புது வடிவங்களில் முகிழ்த்துக் கொண்டே இருப் பதை வரலாறு காட்டுகிறது.
உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழிக்க உழைத்த இராஜாராம்மோகன்ராய், பெண்ணுரிமைக் கும், மனித சமத்துவத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் உழைத்த மகாத்மா ஜோதிபா புலே, தீண்டாமை அணு காமைக்கு எதிராகப் போராடிய அய்யன்காளி, சாதியக் கொடுங்கோன்மையைச் சமய நெறியில் எதிர்த்து நின்ற அய்யா வைகுண்டர், தீண்டப்படாதார் எழுச்சிக்குப் பாடுபட்ட நாராயணகுரு முதலானவர்களெல்லாம் ஆரிய சனாதன அதர்மத்தை எதிர்த்துப் போராடியவர்களே.
ஆரிய சனாதன அதர்மம்தான் நந்தனைக் கொன்றது; காந்தியைக் கொன்றது; கல்புர்க்கியைக் கொன்றது; தபோல்கரைக் கொன்றது; பன்சாரேவைக் கொன்றது; இந்தியா முழுவதிலும் எண்ணற்ற படுகொலைகளை நடத்திக் குதூகலித்தது.
ஆனால், ஆரிய சனாதனத்தால் அண்ட முடியாத ஒரு பேராற்றலாக விளங்கியவர் தந்தை பெரியார். ஆரிய சனாதன அதர்மத்தை எதிர்த்து இடைவிடாமல் முழங்கிய ஒரு பெரும் தகரி (பீரங்கி) தந்தை பெரியார். இந்தத் தகரியிலிருந்து பாய்ந்த குண்டுமழையால் தான் ஆரியச் சுவர்கள் ஆட்டம் கண்டன. எனவே தான், பெரியார் ஆரியத்திற்கு எந்நாளும் அரிமாவைக் கண்ட கனவாக (சிம்ம சொப்பனமாக) விளங்கிக் கொண்டிருக்கிறார்.
1970களின் தொடக்கத்தில், “பல்கலைக்கழகங்களே பெரியாரைப் பாராட்டுங்கள்” என்ற தலைப்பில் பாவ லரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழியில் மிகச்சிறப் பான ஆசிரிய உரை ஒன்றை எழுதியிருந்தார். அந்த ஆசிரிய உரை இப்படித் தொடங்குகிறது : “பெரியார் ஒரு கட்சியின் தலைவர் அல்லர். ஒரு காலத்தின் தலைவர்! ஓர் இனத்தின் தலைவர்! ஒரு வரலாற்றின் நாயகர்!”
ஆம், ஆரிய சாதி வருணாசிரமத்தைத் தகர்த்து, மனித சமத்துவத்தை எடுத்து நிறுத்திய வரலாற்றின் நாயகர் பெரியார்! எனவேதான் பாவலரேறு அவர் களின் மதிப்பீடு இப்படி அமைந்தது : “இந்த மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் தமிழ் இனத்திற்கு வாய்த்த உண்மைத் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர். ஒருவர் திருவள்ளுவர்! மற்றொருவர் பெரியார்!”
தமிழ்த் தேசியத்தின் மாபெரும் பாவலரான பெருஞ் சித்திரனாரின் இந்தக் கணிப்பு எவராலும் ஒதுக்க முடியாதது.
இம்மியும் தன்னலமின்றி வாழ்ந்த சமூகப் போராளி பெரியார். அவருடைய சிந்தனைகளின் அடி நாதமாக விளங்குவது “தன்மானம்!” இது தனி மனிதனின் தன்மானம், சமூகத்தின் தன்மானம், இனத்தின் தன்மானம், பண்பாட்டின் தன்மானம், மொழியின் தன்மானம் என விரியும்.
அனைத்தையும் அகப்படுத்திய தன்மான இயக்கம் அவருடையது. சுயமரியாதைச் சிந்தனைக்கு இயக்கம் கண்டவர் உலக வரலாற்றில் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
அதிகாரக் கும்பலும் ஆன்மிகக் கும்பலும் மக்களிட மிருந்து முதலில் பறித்துக்கொண்டது அவர்களின் தன்மானத்தைத்தான்! இந்தத் தன்மான இழப்பில் தான் இந்த மண்ணின் பாட்டாளி மக்களின் அடிமை வாழ்க்கை தொடக்கம் பெற்றது.
ஆரிய சனாதனத்தின் தலைமையிலான அதிகாரக் கும்பலால் இங்கே பறிக்கப்பட்டவை தனிமனிதனின் தன்மானம், சமூகத்தின் தன்மானம், இனத்தின் தன் மானம், மொழியின் தன்மானம், பண்பாட்டின் தன் மானம்! எனவே அனைத்து நிலைகளிலும் தன்மான உணர்வை மீட்டெடுக்கும் விடுதலைப் போரைப் பெரியார் தொடங்கினார்.
இதற்காக அவர் பல நம்பிக்கைக் கட்டுமானங் களைத் தகர்த்தெறியத் தொடங்கினார். சாதியத் தகர்ப் பும், பெண்ணடிமைத் தகர்ப்பும், மூடநம்பிக்கைகள் மூடச்சடங்குகள் தகர்ப்பும், மக்களை மடமையில் ஆழ்த்தும் புராணங்கள் இதிகாசங்களின் தகர்ப்பும் பெரியாரால் மேற்கொள்ளப்பட்டன.
சாதியம், மூடநம்பிக்கை, மூடச் சடங்குகள், பெண்ணடிமைத்தனம் எல்லாம் கடவுள் கருத்தாக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால், கடவுள் என்ற கருத்தாக் கத்தையே அடித்து நொறுக்கினார், பெரியார்.
பெரியார் கொடுத்த அடியில் கடவுள்களெல்லாம் கலகலத்து உடைந்து வீழத் தொடங்கினார்கள்.
வரலாற்றைக் கூர்ந்து கவனித்த பெரியார், வட மொழியும், அது சுமந்து வந்த ஆரிய சனாதன அதர்ம மும், தமிழ் முதலான மொழிகளையும், சமத்துவத் தோடு கூடிய இயற்கை நெறிசார்ந்த உயர்ந்த பண் பாட்டு விழுமியங்களையும் சிதைத்துச் சின்னாபின் னப்படுத்தியிருப்பதைக் கண்ணுற்றார்.
எனவே, சாதி, மத, கடவுள் எதிர்ப்புடன், வடமொழி எதிர்ப்பு, வடமொழியின் பெருநூல்கள் கூறும் நால் வருண சாதியப் பண்பாட்டு எதிர்ப்பு என்பனவற்றை முன்னிலைப்படுத்தினார். ஒப்பும் இணக்கமும் இல்லாமல் இவற்றுக்கு எதிராக வாழ்நாள் முழுதும் போராடினார்.
வேதங்கள், மனுதருமம், கீதை, அருத்தசாத்திரம், பாரதம், இராமாயணம் இவற்றை ஒதுக்கிப் புறந் தள்ளச் சொன்ன பெரியார், திருக்குறளை நன்னெறி காட்டும் நூலாக மக்களுக்கு அறிமுகம் செய்தார். வட மொழிக்கு மாற்றாகத் தமிழை அறிவுநெறியுடன் வாழ் வியலில் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெரியாருடைய கடவுள் மறுப்பு, வெறும் கடவுள் மறுப்பாக இருக்கவில்லை. அது வடமொழி வருணா சிரம மறுப்பையும், வடமொழி நூல்கள் கூறும் சடங்குகளின் மறுப்பையும் உட்கொண்டிருந்தது.
வடமொழி மேலாண்மையை எதிர்த்தவர்கள், வருணாசிரமத்தை எதிர்த்தவர்கள், சாதிகளை மூடச் சடங்குகளை எதிர்த்தவர்கள், சமத்துவத்தை ஏற்றவர் கள் கடவுள் நம்பிக்கையாளராகயிருந்தாலும், சமய ஈடுபாட்டாளராயிருந்தாலும், அவர்களை நட்பு ஆற்ற லாக / நேச சக்தியாக ஏற்றுக்கொண்டார் பெரியார். திரு.வி.க., ஞானியாரடிகள், மறைமலையடிகள், குன்றக் குடி அடிகளார் போன்றாரோடு பெரியார் பூண்டிருந்த நட்பு இத்தகையதே.
எனவே, மனித சமத்துவமும், தன்மான வாழ்வுமே பெரி யாரியத்தின் உயிர்நாடியாக விளங்கியவை ஆகும்.
பெரியார் கண்ட திராவிட இயக்கம் மூன்று சிந்த னைக் களங்களை உள்ளடக்கியது.
மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், சிங்காரவேலர் பெரியார் முதலானோரால் உருவான தன்மான ஒப்புரவு (சுயமரியாதை சமதர்ம) இயக்கம், நீதிக்கட்சியால் உருவான சமூகநீதி இயக்கம். இந்த மூன்று இயங்குதளங்களின் ஒருங்கிணைந்த ஆற்றலாக எழுச்சியும் வளர்ச்சியும் உற்றது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கத்தின் எழுச்சியாலும் வளர்ச்சியா லுமே தூய தமிழுணர்வு காவிரியின் புதுப்புனல் போல் தமிழகத்தில் பெருக்கெடுத்தது.
இரட்டைக் குழந்தைகளுக்கு ‘இராமன்-இலட்சு மணன்’ என்று பெயர் வைத்த மக்கள், திராவிட வரவால், “செங்குட்டுவன்-இளங்கோ” என்று பெயர் வைத்தார்கள்.
திராவிட இயக்க வரவால், பாலகிருஷ்ணன் இளங் கண்ணன் ஆனான்; பாலசுப்பிரமணியன் இளமுருகன் ஆனான். சாதி அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுவந்த பழைய நடைமுறை உதிர்ந்து, பழந்தமிழ் இலக்கியப் பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன. பெயரில் என்ன இருக்கிறது என நினைத்துவிட வேண்டாம். பெயரில்தான் எல்லாமே இருக்கிறது.
முத்தன், காளி, நொண்டி, குப்பன், நண்டன், வேலன் இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் சமூகத்தின் கீழான படிநிலையைக் காட்டும். இராமசாமி, வேலுச் சாமி, முத்தய்யா. காளியண்ணன் என்று இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் சமூகத்தின் அடுத்த இடை நிலைப் படிநிலையைக் காட்டும். இராமமூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, அனந்தகிருஷ்ணன் என இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் அடுத்த மேல்நிலைப் படிநிலையைக் காட்டும்.
திராவிட இயக்க வரவால் மலர்ந்த தனித்தமிழ்ப் பெயர்கள், நெடுஞ்செழியன், செழியன், இளம்வழுதி, இளங்கோ, கரிகாலன், இளஞ்செழியன், பூவண்ணன், பூங்கொடி, புகழ்வடிவு, முல்லை, அல்லி, மலர்விழி, தமிழ்க்கொடி என இத்தகைய பெயர்கள், தமிழ் மக்களிடையே பெயரில் ஒரு ஒப்புரவை கொண்டு வந்தன. நாம் தமிழ்மக்கள், நமது மண் தமிழ்மண், நமக்கென ஒரு வரலாறு உண்டு. இழந்த நலன்களை நாம் மீட்க வேண்டும். நம் மீது சுமத்தப்பட்ட இழிவு களைத் துடைக்க வேண்டும் என்னும் உணர்வை இப்பெயர்கள் தமிழர் உள்ளங்களில் விதைத்தன.
சமயத் துறையில், சைவர்கள், தமிழில் வழிபாடு, தமிழில் குடமுழுக்கு, தமிழ்ப் பாசுரங்கள் ஓதித் திருமணங்கள் நடத்துதல்; பார்ப்பனரையும் வடமொழி யையும் ஒதுக்குதல் என முன்வந்ததற்கும் திராவிட இயக்கத்தின் சிந்தனைத் தாக்கமே காரணமாகும்.
“இந்தியா என்பது யாருடைய நாடு?
இங்கே வாழ்ந்தவர்கள் யார்?
இங்கே வந்து புகுந்து வளைத்துக்                                                          கொண்டவர்கள் யார்?”
இந்த வினாக்களுக்கு விடையாகத் திராவிட இயக்கம் உண்மை வரலாற்றை மக்களுக்குச் சொன்னது.
இந்தியா முழுதும் அன்று தமிழரின் தேசம்தான். இங்கே வந்து நுழைந்தவர்களால் தமிழ் திரிபுக்கும் கலப்புக்கும் உள்ளானது. வடமொழிக் கலப்பால் தமிழிய மொழிகள் பலவாறாகத் திரிபடைந்து பல மொழிகளாக உருமாறின. ‘மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு’ என்னும் நூலில் அறிஞர் அம்பேத்கர் இதை ஆழமாக எடுத்தியம்பியுள்ளார்.
இந்தியாவில் சொந்த மொழியை இழக்காதவர்கள் தமிழர்கள்தாம்! வடமொழிக் கலப்பால் சொந்த மொழி திரிபடைய நேர்ந்தவர்கள் பிற திராவிட மக்கள்! சொந்த மொழியைப் பெரும்பாலும் இழந்தவர்கள் வடபுலத்தின் உழைக்கும் குடிகள்!
இன்று வடபுலம் 100க்கு 90 ஆரியமொழி மயப் பட்டுவிட்டது. தெலுங்கு நாடு, கன்னட நாடு, கேரளம் எனும் மலையாள நாடு 100க்கு 50க்கு 50 தமிழும் வடமொழியும் கலந்து கிடக்கிறது.
பெரியார் திராவிட மொழிகளைப் பற்றிக் கூறிய கருத்து இங்கு கவனிக்கத் தக்கது. பெரியார் கூறுகிறார் : “தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தனித் தனி மொழிகள் அல்ல. தமிழைத்தான் ஆந்திராவில் ஒருவிதமாகவும், கருநாடகத்தில் ஒருவிதமாகவும், கேரளத்தில் ஒருவிதமாகவும் பேசுகிறார்கள். நான் என்பதை நானு, நேனு, ஞான் என்றால் இவை வேறுமொழிகளாகிவிடுமா? வீட்டை இல்லு என்றால் தெலுங்கு என்கிறார்கள்; மனை என்றால் கன்னடம் என்கிறார்கள்; வீடு என்றால் மலையாளம் என்கிறார் கள். நாம் இவை எல்லாமே தமிழ்தான் என்கிறோம். எனவே தமிழ் இல்லாமல் இம்மொழிகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.” பெரியாரின் பார்வையில் அடிப்படைத் தெளிவு இருக்கிறது.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான திராவிட மொழிகளின் கட்டமைப்பு முழுமையும் தமிழ மைப்பாக இருக்கிறது. பண்பாடு, வாழ்நிலைக் கூறுகள், தமிழ்மண்ணுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. எனவே, இங்கே தமிழ் அடையாளங்களை மீட்க வேண்டும் என்றும், இம்மொழியினரையும் ஆரியப் பிடிப்பிலி ருந்து விடுவிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் “திராவிடத் தேசியம்” என ஒன்றை முன்வைத்ததாகக் கூறுகிறார்கள். உண்மை அல்லாத செய்தி இது. திராவிட இயக்கம் தமிழ்த் தேசியம், தெலுங்குத் தேசியம், கன்னடத் தேசியம், மலையாளத் தேசியம் என்னும் இந்நான்கு தேசியங்களும் தமக்கான தனித்தனிக் குடியரசுகளை அமைத்துக்கொண்டு, இந்நான்கு கூட்டாட்சிக் குடியரசு களின் ஒன்றியமாகத் “திராவிடக் குடியரசுகளின் ஒன்றியம்” (Union of Dravidian Republics) செயல் படும் எனத் தெளிவுபடுத்தியது. இந்த முயற்சி புவியியல் நலம், பண்டப் பரிமாற்ற வணிக நலன்கள், மொழி கலை பண்பாட்டு நலன்கள் ஆகியவற்றுக்கு உகந்த தாக இருந்ததைப் பொருளியல் வல்லுநர்களும், வர லாற்று வல்லுநர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
திராவிடக் கூட்டாட்சிக் குடியரசுகளின் ஒன்றியம் மலருவதற்கான முயற்சிகள் சரியான முறையில் திட்ட மிடப்படாததாலும், இலக்கை நோக்கிய செயற்பாடுகள் முறையாக வகுக்கப்படாததனாலும் இது கைகூடாமல் போய்விட்டது. ஆனால், இந்த நோக்கத்தை, இந்த இலக்கைத் தவறானதென்று எப்படிக் கூறமுடியும்?
மொழிவழி மாநிலங்கள் உருப்பெற்ற பின்பு, பிற திராவிட மாநிலங்கள் வடபுலத்தோடும், தில்லியோடும் தம் பிணைப்பை இறுக்கிக்கொண்டன, மொழி பண் பாட்டுக் கூறுகளில் சமற்கிருதத்தை நோக்கியே அவர் கள் நெருக்கமாகச் சென்றார்கள். எனவே இந்த நிலை யில் பெரியார், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்கின்ற இலக்கை நோக்கித் திரும்பினார். இது அரசியல் அறி வியல் கோட்பாட்டின்படி மிகப் பொருத்தமானதே ஆகும்.
பெரியார் ஒருபோதும் தெலுங்கருக்கோ, கன்னட ருக்கோ, மலையாளிகளுக்கோ ஆதரவாகப் பேசிய தில்லை; செயல்பட்டதில்லை. தமிழர் நலத்திற்கு எதிராக ஒருபோதும் அவர் சிந்தித்ததில்லை.
பெரியார் காணவிரும்பிய தமிழ்ச்சமூகம் சாதிகள் அற்றது; சேரிகளற்றது; சமத்துவம்-ஒப்புரவு நிறைந்தது; மூடநம்பிக்கைகளும் பொருளற்ற வாழ்வியல் சடங்கு களும் இல்லாதது.
“என்னரும் தமிழ்நாட் டின்கண்
                எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்
                பராக்கிரம மத்தால் அன்பால்
உன்னத இமயம் போல
                ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
                இயம்பக்கேட் டிடல்எந் நாளோ!”
என்று புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறாரே, இதுதான் பெரியார் காணவிரும்பிய தமிழ்ச் சமூகம்.
வடமொழி மேலாண்மை, வருணாசிரம மேலாண்மை இல்லாத, அயலாரின் பொருளியல் சுரண்டல் இல்லாத, வருண சாதிகள் - புராண சாதிகள் உதிர்ந்து மறைந்த, அறிவியல் சிந்தனை மேலோங்கிய ஒரு தமிழ்ச் சமூகத்தை மலரச் செய்வதே பெரியாரின் நோக்கமாக இருந்திருக்கிறது.
பாரதி பாடியது போல்,
“பறையருக்கும் இங்குத் தீயர்
                புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவ ருக்கும்
                மறவ ருக்கும் விடுதலை”
என்பது பெரியாரியத்தின் இலக்கு. அதாவது, “Liberation for those from below”. கீழ்த்தட்டு மக்கள் - விளிம்பு நிலை மக்கள் விடுதலையிலிருந்துதான் சமூகத்தின் விடுதலையை, தேசிய இனத்தின் விடுதலையைத் தொடங்க வேண்டும். அடிமை நிலையிலுள்ள மக்களை விடுவிக்காமல் எப்படித் தமிழ்ச் சமூகம் விடுதலை பெற முடியும்? பெண்ணுக்கு விடுதலை இல்லாமல் எப்படி மனிதகுலம் விடுதலை எய்த முடியும்?
எனவே, தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், பாட்டாளி மக்கள், பெண்பாலார் விடுதலையை உள்ளடக்கியதாகவே பெரியாரின் தமிழ்ச் சமூக விடுதலை நெறி அமைந்திருக்கிறது.
இன்று, தமிழ்த் தேசியத்தின் தலைவர்களில் முதன்மையானவர் என்று உயர்த்திப் பிடிக்கப்படும் ஒருவரை நாம் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அவர் சிறந்த தமிழறிஞர்; சிறந்த நாநலம் வாய்ந்தவர்; மிகச் சிறந்த இலக்கிய ஆய்வறிஞர்; தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களில் முன்நின்றவர். அவரை மதிக்கிறோம், போற்றுகிறோம்.
ஆனால், அவர் இந்தியைத் தாங்கிப் பிடித்தார்; வடமொழியைத் தாங்கிப் பிடித்தார். சாதி வருணா சிரமக் கருத்தியல்களுக்கு எதிராக அவரது நாவோ எழுதுகோலோ ஒருபோதும் அசைந்ததில்லை. இந்த உண்மைகளையும் நாம் நெஞ்சில் நிறுத்துகிறோம்.
ஈழ விடுதலைப் போர் உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தபோது, அவர் போராளிகளைப் பற்றி அவதூறு பேசினார். இந்திய அரசின் தொலைக் காட்சிகளில் தோன்றி, அமைதிப் படையின் அட்டூழியங் களை ஆதரித்துக் கருத்துரைத்து வந்தார். தமிழர் போராட்டத்தைத் தரக்குறைவாகப் பேசினார். இவை நம் நெஞ்சத்தை என்றும் அழுத்திக் கொண்டுதான் இருக்கும்.
யாரையும் நாம் முரண்பாடுகளோடுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். முரண்பாடுகளோடுதான் எடை யிடவும் மதிக்கவும் வேண்டும்.
பெரியாரின் சொல்லில், செயலில் தவறே இருந்த தில்லை என்று நாம் வழக்காட விரும்பவில்லை. பெரியாரும் மனிதர்தாம். மனிதர் எவரின் சொல்லிலும் செயலிலும் தவறு நேர வாய்ப்பு அமையவே செய்யும்.
ஆனால், பெரியாரைத் ‘துரோகி’ என்று சிலர் சொல் வதை நாம் ஒருபோதும் ஒப்ப முடியாது. பெரியார் தமிழினத்திற்குத் துரோகம் செய்தார் என்று பேசு பவர்களின் நெஞ்சம் கரவு நிறைந்தது; வஞ்சகம் குடிகொண்டது; அறியாமை நிறைந்தது. எங்கிருந்தோ எதையோ அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!
‘திராவிடம்’ என்பதைத் தமிழ் என்பதற்கு முரணான சொல்லாகக் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். தமிழ் என்னும் மொழியைக் குறித்த சொல்தான் திராவிடம் என்பது. ஒரு காலத்தில் வடநூலாரால் இச்சொல் பயன் படுத்தப்பட்டது. இன்று, தமிழ் இன மொழிகளைக் குறிக்கவும், தமிழ்வழிக் கலைகள், தமிழ்வழிப் பண் பாடு, தமிழ்வழி மருத்துவம் போன்றவற்றைக் குறிக்க வும் ஒரு குறியீட்டுச் சொல்லாக உலகளாவிய அறிஞர் கள் சிந்தனையாளர்கள் இதனைக் கையாளுகிறார் கள். எனவே, தூய தமிழ் சார்ந்த ஒருநிலையைக் குறிப்பிடுவதற்கே அறிவுலகம் ‘திராவிடம்’ என்னும் சொல்லைக் கையாளுகிறது என்பது தெளிந்த உண்மை.
சாதியும் ஏற்றத்தாழ்வும் அற்ற ஒப்புரவு தேங்கிய தமிழ்த் தேசியத்தை நோக்கிய நமது பயணத்தில், பெரியார் என்கிற பேரொளி நமது பாதையை ஒளிமய மாக்குகிறது.
தமிழ்த் தேசியத்தின் மாபெரும் போராளியாக வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியாரைப் பற்றி எழுதிய பாடல் வரிகள் தமிழ்த் தேசியச் சிந்தனை யாளர்களின் உள்ளத்தில் ஊன்றப்பட வேண்டியவை.
“பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்
பெரியார் என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை
அழற்கதிரைச் சுமந்த மதி
அறியாமைமேல்
இரும்பு உலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்த அடி
எரிபோல்பேச்சு
பெரும்புதுமை அடடாஇப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்ற தம்மா.
எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோடு
இணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்த நடை
முழு இரவும் விழித்த விழி
முழங்குகின்ற
அப்பழுக்கி லாத உரை
அரிமாவை அடக்குகின்ற
அடங்காச் சீற்றம்!
பெரியாரைப் பேசுகின்றோம்
பெரியாரை வாழ்த்துகின்றோம்
அவருரைத்த பலவற்றுள்
ஒன்றையேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா இத் தமிழ்நாடும்
சரியா தம்மா!”
(தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை மாநகரில் 2016 டிசம்பர் 24, 25 நாள்களில் நடத்திய திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில், “தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரை).