திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்-- சங்கரநாராயணன்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்-- சங்கரநாராயணன்தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் விவாதங்களையும் அரசியல் சண்டைகளையும் காணும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த விவாதங்களை எப்படி அணுகுவது? உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?

முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது. ஒரு ராசியைக் கடந்த பிறகே மறு மாதம் தொடங்கும். இதனால்தான் பொங்கல் அன்று மாதம் எப்போது பிறக்கிறது என்ற கேள்வி எழும். சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்.
இந்தியாவில் பல விதமான மாதக் கணக்கீடுகள் இருக்கின்றன. சௌரமான மாதம். இது சூரியன், ஒரு ராசியில் இருக்கும் காலத்தை, ஒரு மாதமாகக் கொள்வது. தமிழ்நாடு, இலங்கை, ஒரிசா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இது கடைபிடிக்கப்படுகிறது. சாந்த்ரமான மாதம்: இதிலும் இரு முறைகள் உள்ளன. அமாவாசையின் மறுநாள் முதல் மாதம் தொடங்கும். ஆந்திரா, கர்னாடகா உள்பட பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் இது பின்பற்றப்படுகிறது. பௌர்ணமியில் இருந்து தொடங்கும் மாதம் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.
இப்போது பலரும் கூறும் குற்றச்சாட்டுகளைக் காண்போம்.

1. வடநாட்டு @ ஆரிய @ பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு:
வடநாட்டவர்கள், வைதீகர்கள் சௌரவமான மாதங்களைப் பயன்படுத்துவதே இல்லை. அவர்கள் சந்திர மாதங்களையே பயன்படுத்துகிறார்கள். பண்டிகைகள் ஆஷாட, ஸ்ராவனம், பாத்ரபத,ஆஸ்வின மாதங்களில் வருவது. நவராத்திரி பாத்ரபத மாதத்திலும் தீபாவளி ஆச்வினத்திலும் வருகிறது. சில நேரங்களில் சூரிய மாதத்துக்கும் சந்திர மாதத்துக்கும் ஒரு மாத வித்தியாசம் வரும். அப்போது தீபாவளி புரட்டாசியிலும், ஆயுத பூஜை ஆவணியிலும் வரும். நாம்தான் இந்த வருஷம் எல்லா பண்டிகையும் சீக்கிரம் வருது என்று சொல்லிக்கொண்டிருப்போம். ஆக இந்த குறிப்பிட்ட வைதீகர்களுக்கும் சூரிய மாதத்துக்கும் தொடர்பே இல்லை.

2. மாதம்
தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்.ஆனால் ஆச்சரியகரமாக சூரியனின் மாதமே பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர, கர்நாடகத்திலும் வட பாரதத்திலும் சந்திர மாதக் கணக்கு வழக்கில் உள்ளது.

3. வடமொழிப் பெயர் ஆண்டுகள்
இந்த பிரபவ, விபவ வருடங்களெல்லாம் வடமொழி, ஆகவே நீக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளவேண்டும். நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
ஒரு மாதத்தின் பெயர், அந்த மாதத்தில் பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தின் பெயரால் வழங்கப்படும்.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் பெயர். வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது. ஆனி அனுஷம் வடமொழியில் அனுஷி ஆனி. ஆடி பூராடம் அல்லது உத்திராடம் வடமொழியில் பூர்வ ஆஷாடம் மற்றும் உத்திர ஆஷாடம் ஆஷாடிதான் ஆடி. ஆவணி திருவோணம் வடமொழியில் ஸ்ராவனம் ஸ்ராவணி தான் ஆவணி.
புரட்டாசி பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபடம் அல்லது உத்திர ப்ரோஷ்டபடம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி.
ஐப்பசி அஸ்வினி வடமொழியில் ஆச்யுவஜி ஐப்பசி.

கார்த்திகை கார்த்திகை. மார்கழி மிருகசீரிடம் வடமொழியில் மிருகசீர்ஷம் மிருகசீர்ஷிதான் மார்கழி. தை -புனர்பூசம்/ பூசம் வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். திஷ்யதில் இருந்து தை. மாசி மகம் வடமொழியில் மாக் மாகிதான் மாசி.
பங்குனி பூரம் அல்லது உத்திரம் வட மொழியில் பூர்வ பல்குனி அல்லது உத்திர பல்குனி பல்குனியில் இருந்து பங்குனி. (1)
சிலர் கேட்கலாம். இந்த முறை மார்கழிப் பௌர்ணமி புனர்பூசத்திலும், பங்குனி பௌர்ணமி சித்திரையிலும் வந்ததே என்று. தற்போது சந்திரமான மாதம் சூரிய மாதத்தைவிட 30 நாட்கள் முன்பு செல்கிறது. .நம் மார்கழியில் சந்திரமான தை. நம் பங்குனியில் சந்திரமான சித்திரை. இதற்குக் காரணம் சந்திர ஆண்டு 360 நாட்களும், சூரிய ஆண்டு துல்லியமாக 365 /366 நாட்களும் கொண்டிருப்பதுதான்.
இந்த வித்தியாசம் தகுந்த இடைவெளியில் அதிக மாதம் என்று ஒரு மாதத்தை சந்திரமான மாதத்தில் சேர்த்து சரி செய்யப்படும்.
நாம் சூரிய மாதங்களுக்கும், சந்திர மாதப் பெயரையே வைத்துள்ளதால் இந்தக் குழப்பம். தை,பங்குனி,கார்த்திகை மாதங்களின் பெயர் எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே வருகிறது. அவற்றையெல்லாம் இடைச் செருகல் என்று கூற முடியாது.
பிங்கள நிகண்டு அஸ்வினியின் பெயர் ஐப்பசி , பூசத்தின் பெயர் புணர்தை, மகத்தின் பெயர் மாசி, உத்திரத்தின் பெயர் பங்குனி, விசாகத்தின் பெயர் வைகாசி, உதிராடத்தின் பெயர் ஆடி, அவிட்டத்தின் பெயர் ஆவணி ( இங்கேதான் சிறு வேறுபாடு), பூரட்டாதியின் பெயர் புரட்டாசி என்றே குறிப்பிடுகிறது. பிங்கள நிகண்டு 10 ஆம் நூற்றாண்டில் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
கேரளாவில் சூரிய மாதப் பெயர்களை மேடம், இடபம் என்றே வைத்துவிட்டார்கள்.எனவே குழப்பம் இல்லை.

4. சித்திரை முதல் நாளை வைதீகர்கள்தான் கொண்டு வந்து விட்டார்கள். என்று கூறுபவர்களுக்கும்
4a. ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு நெருக்கமாக தமிழ்ப் புத்தாண்டை தை 1 க்கு கொண்டுவரும் ஐரோப்பிய சதி என்று கூறுபவர்களுக்கும்
இதுவும் சரி இல்லை. தினமும் தீ வழிபாடு செய்யும் அந்தணர்கள் மார்கழி மாதம் பௌர்ணமி அன்று ஆக்ராஹயணி என்று ஒரு சடங்கு செய்வார்கள். அக்ரா என்றால் முதல் என்று அர்த்தம். ஹயணம் என்றால் ஆண்டு என்று அர்த்தம். இதன் பொருள் முதல் மாதம். அதாவது மார்கழிப் பௌர்ணமி கிட்டத்தட்ட ஜனவரி ஒன்றுக்கு அருகில் வரும். கிட்டத் தட்ட வேதத்து வருடப் பிறப்புதான் ஜனவரி ஒன்று. (முத்தீ வழிபாடு சங்க காலத்திலும் இருந்தது).
காஞ்சி மஹா சுவாமி இதை விளக்கமாகக் கூறி நம் புத்தாண்டுதான் அங்கே சென்றுவிட்டது என்று கூறுகிறார் (2)

5. அறுபது வருடங்கள் என்ன கணக்கு?
இந்த 60 ஆண்டுக் கணக்கு தனி மனிதர்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கணக்கிடும் ஜ்யோதிட முறைக்குத்தான். சூரியன் 12 ராசிகளைச் சுற்ற 1 ஆண்டும், சந்திரன் 1 மாதமும், செவ்வாய் ஒன்னறை ஆண்டும், குரு 12 ஆண்டும், சனி 30 ஆண்டும் எடுத்துக்கொள்கின்றன. ஒரு மனிதன் பிறந்த 60 ஆண்டுகள் கழித்து அவன் பிறந்த அதே மாதம் (அதாவது சூரியன் அதே ராசியில்), அதே நட்சத்திரத்தில் (அதாவது சந்திரன் அதே ராசியில்) இருக்கும்போது செவ்வாய், சனி,குரு ஆகியவையும் அதே ராசியில் இருக்கும். (வக்கிர அதிச்சர நிலை இல்லாவிடில். வக்கிரம் என்றால் பின்னோக்கிச் செல்வது, அதிச்சாரம் முன்னோக்கிச் செல்வது ).
பெரும்பாலும் புதனும், சுக்கிரனும் கூட சூரியனை ஒட்டியே செல்வார்கள். ஆகவே சரியாக உங்கள் அறுபதாவது பிறந்த நாளில், ராஹு, கேது தவிர்த்த மற்ற ஏழு கிரகங்களும் பெரும்பாலும் அதே ராசியில் இருப்பார்கள். இதுதான் தனி மனிதனின் அறுபது ஆண்டுக் கணக்கு.
இது முக்கியமாக ஜாதகக் கணக்குகளுக்குதான். அதுவும் திருமணங்கள் பல்வேறு அரச குடும்பக்களுக்கு இடையில் நடக்கையில், அல்லது ஒரு அரசன் பெரும் நிலப்பகுதியை ஆளும்போது இந்தப் பொதுக்கணக்கு தேவையாய் இருந்தது.


6. இந்த வருடங்கள் எல்லாம் அறுபது வருடக் கணக்கு.தொடர் ஆண்டு வேண்டும் என்று கூறுபவர்களுக்குதொடர் ஆண்டுகள் எத்தனை உள்ளன தெரியுமா?
சக ஆண்டு (78 AD) , கலியுக ஆண்டு ( 3101 BC, அதாவது கலியுகம் தொடங்கிய முதல்), கேரளத்தில் கொல்லம் ஆண்டு (825 AD) போன்ற கணக்குகளும் பின்பற்றப்படுகின்றன.
தமிழ் நாட்டிலே என்ன கணக்கு என்று கேட்பவர்களுக்கு
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. சக ஆண்டு முறையில் கிபி 270 ஆம் ஆண்டுக் கல்வெட்டு. ஆக சங்ககாலத்தின் இறுதியிலேயே சக ஆண்டு முறை இருந்திருக்கிறது. (3)
மதுரை ஆனைமலைக் கல்வெட்டு கலியுக ஆண்டிலும், அய்யம்பாளையம் கல்வெட்டு சக ஆண்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகத் தமிழ் நாடு இந்த இரண்டு தொடர் ஆண்டுகளையும் பின்பற்றி வந்துள்ளது. (4)
ஆகக் கூடி இந்த வைதீகர்கள் சந்திரமான மாதத்தையும், மார்கழிப் புது வருடத்தையும் பின்பற்றுகிறார்கள். தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழிதான். தமிழர்கள் சக ஆண்டுக் கணக்கையும் சங்க கால இறுதிக் கட்டத்திலேயே பின்பற்றி இருக்கிறார்கள்.

7. மற்றுமொரு கேள்வி: ஆண்டுப் பிறப்புக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் சோதிடத்துடன் தொடர்புப்படுத்த வேண்டும்?
இதை ஜோதிடக் கணக்கு என்பதை விட வானியல் கணக்கு என்று சொல்வதே சரியாகும். இந்தக் கணக்கை ஜோதிடத்திலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் எங்கும் வானியலும், ஜ்யோதிடமும் பிண்ணிப் பிணைந்தே உள்ளன. உலகெங்கிலும் இந்திய, அராபிய, பாரசீக, ஐரோப்பிய நாடுகளில் எல்லாமே பல ஜ்யோதிட அறிஞர்களே வானியல் கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.


8. சரி, ஆனால் ஏன் மேஷத்தைக் கொண்டு தொடங்க வேண்டும்? ஜோதிடர்களே வானியல் அறிஞர்களாகவும் இருந்ததால் இரண்டும் பிணைந்தே உள்ளன.எத்தனை மணிக்கு க்ரஹனம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிடும் அளவுக்கு திறமை படைத்த நம் அறிஞர்கள் இந்த ஆண்டுக் கணக்கையும் ராசி மண்டலத்தோடு பிணைத்தே வைத்து விட்டார்கள்.

9. அப்ப இந்த தை நீராடல் என்றெல்லாம் வருகிறதே? அப்ப தை முக்கியம் இல்லையா?
இந்த தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது. அதாவது திருவாதிரையில் சிவனுக்கு விழா எடுக்கையில், சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (அதாவது சூரியன் தனுர் ராசியில் இருக்கும்போது) பெண்கள் அம்பா ஆடல் என்னும் அம்பிகையை வழிபாட்டு தை நீராடல் ஆடுவார்கள். சூரியன் தனுர் ராசியில் இருப்பது சூரிய மாதத்தில் மார்கழி. திருவாதிரை விழா நடப்பதும் மார்கழி. ஆனால் சொல்லப்படுவதோ தை நீராடல். இது மறைமுகமாகக் உணர்த்துவது அப்போது வழக்கத்தில் இருந்தது சந்திரமான மாதம். பரிபாடலின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு. (5)
அம்பிகையை பாவையர் நீராடி வணங்கும் இதே வழிபாடு ஆண்டாள் காலத்தில் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் நீராடப் போதுவீர் ஆக இந்த மாதம் இப்போது மார்கழி ஆகி விட்டது. அதாவது சூரிய மாதம். ஆண்டாள் காலம் ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு (6)
ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.
அப்ப வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?
தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.
மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? நக்கீரரின் நெடுநல்வாடை (7)
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி

திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு2திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து (8)
பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.
கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன. அயன சங்கராந்தி இரண்டு, சித்திரை ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா. ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன உத்தராயண சங்கராந்திகள். சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில். சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.
ஆதாரம் :
(1) http://www.kamakoti.org/tamil/Kurall89.htm
(2) http://www.kamakoti.org/tamil/2dk59.htm
(3) http://www.tamilartsacademy.com/articles/article24.xml
(4) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/introduction.html
(5) http://www.tamilvu.org/slet/l1250/l1250pag.jsp?bookid=25&auth_pub_id=104&page=127
(6) http://www.tamilartsacademy.com/articles/article08.xml
(7) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0070.html
(8) http://www.tamilvu.org/library/libindex.htm
0

சங்கரநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக