ஞாயிறு, 28 அக்டோபர், 2012

MVI :அக் 29,2012 சட்டசபை முற்றுகை போராட்டம்-- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு...

MVI :அக் 29 சட்டசபை முற்றுகை போராட்டம்--
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு...

# கேளாத செவிகள் கேட்கட்டும்! பாராமுகங்கள் நம் பக்கம் திரும்பட்டும் #

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் 441 ஆவது நாள்!
தமிழக அரசே!

1. காவல் படை முற்றுகையை கைவிடு! 144 தடை உத்தரவை திரும்பபெறு!

2.மக்களின் உயிரோடு விளையாடாதே! கூடங்குளம் அணு உலை மூடு!

============================= ===========================================================================================
போராடும் மக்கள் தனித்து இல்லை என்று செயலில் காட்டுவோம்....

சென்னையை நோக்கிப் புறப்படுவோம்! கோட்டைக்கு முன்பு அணி திரள்வோம்!

- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

கேளாத செவிகள் கேட்கட்டும்! பாராமுகங்கள் நம் பக்கம் திரும்பட்டும்!
’இது எங்கள் கடல்; எங்கள் நிலம்; பேச்சிப்பாறை ஆறு எங்கள் சொத்து. கூடங்குளத்தில் அணு உலையை அனுமதிக்கமாட்டோம்’ என்ற உரிமை குரலை மதிக்காத அவை; பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் அட்டையைத் தூக்கி வீசியதைக் பொருட்படுத்தாத சபை; இன்று கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைத் தொடுத்திருக்கின்றது. இந்த சட்டசபை தான் ஜனநாயகத்தின் சின்னமா?
மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடரும் ஊரடங்கு உத்தரவு. செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் களம் இறங்கிய தருணத்திலிருந்து நடந்தேறிவரும் காவல் படைகளின் வெறியாட்டம். கண்ணீர் புகை குண்டு வீச்சு; தடியடித் தாக்குதல்; மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டே இடிந்தகரைக்குள் நுழைந்த காவல் படையின் வெறிச் செயல்கள், தேவாலயத்தில் சிறுநீர் கழிப்பது வரை போனது. கூடங்குளமும், வைராவிகிணறும், சுனாமி நகரும் கூட விட்டுவைக்கப் படவில்லை. பால், தண்ணீர், உணவுப் பொருட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மீது தேசத் துரோக வழக்கு. எல்லாவற்றுக்கும் உச்சமாக இது வரை செய்திருக்கும் இரண்டு கொலைகள்.
மணப்பாடு அந்தோணி ஜான் - அந்த வழியாக நடந்துப் போனவர். அவர் மீது துப்பாக்கிச் சூடு. அதுவும் கொலை வெறியோடு விலாவில் சுட்டக் கொடூரம்.
சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் மீனவனைக் காக்கப் போகாத கடற் படையும், விமானமும் கடலில் நின்று போராடும் மக்களை அச்சுறுத்தப் போனது. விமானத்தைத் தலைக்கருகே பறக்கவிட்டு பயங்காட்டியே இடிந்தகரை சகாயத்தைக் கொன்றுள்ளனர். இது தான் ஜனநாயகமா? இல்லை. இது அரச பயங்கரவாதமா?
காடுகளில் இருந்து பழங்குடிகளை விரட்டியடித்தது போல் இடிந்தகரை கூடங்குளம் மக்களை அப்பகுதியிலிருந்தே விரட்டியடித்து விட்டு பெரு முதலாளிகளுக்கு விருந்து வைக்கத் தயாராகி விட்டார்கள்;
ஆனால், இத்தனை தடைகளையும் தாண்டி 400 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் தொடர்கின்றது. இழப்புகளைச் சுமந்துக் கொண்டே வெல்லும் வரை போராட உறுதிக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்களும் போராட்டக் களத்தில் இணைந்து விட்டார்கள்.
சென்னை தவிர்த்த பிற பகுதியில் நிலவும் பல மணி நேர மின்வெட்டால் வஞ்சிக்கப்படும் மக்களிடம் இருந்து பொங்கி வரும் கோபத்தை அணு உலைக்கெதிராய் போராடுபவர்கள் மீது திருப்பி விடும் காங்கிரசு ஒருபுறம். போராட்டத்திற்கு கிறுத்துவ முத்திரை குத்தி மதக் கலவரத்தை தூண்டத் துடிக்கும் இந்துத்துவ கும்பல் இன்னொருபுறம். வெளிநாட்டுப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி போராட்டத்தின் நியாயத்தைக் குலைக்கும் முயற்சி மற்றொருபுறம்.
இப்போது, போராட்டத்தையும் போராடும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் தான் இருக்கின்றது. போராடும் மக்களின் மூச்சைத் திணறடித்துக் கொண்டிருக்கும் காவல் படை முற்றுகையை உடைத்தாக வேண்டும். தமிழக அரசின் போலி மெளனத்தை கலைத்தாக வேண்டும். அதற்கான போராட்டம் தான் அக் 29 நடக்கவிருக்கும் சட்ட சபை முற்றுகை போராட்டம்.
மக்களை நேசிப்பவர்கள்..தேச வளங்களைக் காக்கத் துடிப்பவர்கள்.. அநீதி கண்டு கிளர்ந்தெழுபவர்கள்.. அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்.. எத்தனை பேர் என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் கேட்டு நிற்கின்றது வரலாறு.
போராடும் மக்கள் தனித்து இல்லை என்று செயலில் காட்டுவோம்.
சென்னையை நோக்கிப் புறப்படுவோம்! கோட்டைக்கு முன்பு அணி திரள்வோம்! 
- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.   பேச - 9443184051

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ? ---அ.மு.செய்யது 

உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.
அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.
ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.
தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடன்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ன்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.

- அ.மு.செய்யது


கூடங்குளம் அணுமின் நிலையமும் தென்தமிழ்நாட்டின் பூகம்பவியலும் - ஓர் ஆய்வு/
டாக்டர் இரா.இரமேஷ்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலநடுக்கங்களும், பூமியில் இருந்து உருகிய பாறைக்குழம்புகள்வெடித்து மேலெழும்பும் நிகழ்வுகளும் பல முறை நிகழ்ந்துள்ளன. 2001 நவம்பர் 24 ஆம் தேதியன்று தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் அமைந்துள்ள சுரண்டையை அடுத்துள்ள நிலம் ஒன்றில் உருகிய
பாறைக்குழம்பு வெடித்து மேலெழும்பியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுஉலைகள் இந்த நிலவியல்சூழ்நிலைகளைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலவியல் சூழ்நிலைகளையெல்லாம் தாங்கும் அளவிற்கு இந்த உலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள் நம் அணுசக்தி விஞ்ஞானிகள்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியைச் சேர்ந்த டாக்டர். மணிமாறன் போன்ற நிலவியலாளர்கள் இந்த அணுஉலையின் பூகம்பவியல் பாதுகாப்புத்திறனை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இப்புத்தகம்மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. இவற்றைப் புரிந்து கொள்வதற்காக இவை இரண்டுடனும்தொடர்புடைய முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கிறது.
 

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் பெண்களின் கேள்வி 
கேள்வி: இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?
கூடங்குளம் வாழ் பெண்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குதுன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? 
***
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல. 
1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1989 இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து “கொல்ல வரும் கூடங்குளம்” என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். 1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும், தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1989 மே முதல் தேதியில் “தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று” என்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ் கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் 10,000-த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த 1989 போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. 1989 ஜூன் 13 வரை மருத்துவர் குமாரதாஸ் அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் 13 அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. 1989 இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி 101 தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில், அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. 1989 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது. இப்படி 25 ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.
தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகி யோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.
விடுதலை, தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம், செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ், பிரேமா நந்தகுமார், அ.ஜ.கான், புகழேந்தி, நெடுஞ்செழியன், வி.டி. பத்மனாபன், ஞாநி, நாகார்ஜுனன், ஏ.எஸ்.பன்னீர் செல்வன், சீ. டேவிட், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கார்முகில், செல்ல பாண்டியன், துறைமடங்கன், அண்டன் கோமஸ், பிரகாஷ், பாமரன், செந்தில் குமார், நீலகண்டன், குமாரசாமி, பிரபாகர், அசுரன், ஐராவதம் மகாதேவன், புருஷோத்தம், சந்தோஷ், மருத்துவர் தெய்வநாயகம், சுப. உதயகுமார் என இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமை யானதல்ல). இயக்குநர் பாலசந்தர், நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர்.
ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர், உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த 25 ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும், அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா, நீரஜ் ஜெயின், அகர்வால், க்ளாட் அல்வாரிஸ், அசின் விநாயக், அனில் சௌத்ரி, அருந்ததி ராய், எம்.வி.என்.நாயர், சுவரத ராஜு, எம்.வி.ராமண்ணா, மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட் டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி, கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும், புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப்படுத்துவதற்கு சமம், அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி, அவரைப் பார்த்து 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது? அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.
உதயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ் விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள், நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள்  தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள், இது தான் ‘ஐயோடின்’ என்று வகுப்பு  எடுக்க தொடங்கி யது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள், “அந்த ஆள கூட்டிட்டு வாங்கடா” என்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. “நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம், எங்களை வழி நடத்துங்கள்” என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.
பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம், கனிமங்கள் வெட்டி எடுத்தல், சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் வாழ்வாதாரங் களுக்காக நடத்தும் போராட்டம், நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள், நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களின், ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத் திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள்.
உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங் களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ, பத்திரிகை தர்மமம் வாழ்க!
‘கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்’ - நூலிலிருந்து.

அணுவின் கழிவும் கொல்லும் -இரா.உமா 

உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘ உயிருக்காக’ ஒரு பெரும் மக்கள் போராட்டம், தென்தமிழ்நாட்டின் வங்கக்கடல் கரையோரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுஉலைக்கு எதிராக, அமைதி வழியில் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, இடிந்தகரையிலும், கூடன்குளத்திலும் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். கடந்த செப்டம்டர் 11இல் தொடங்கிய அம்மக்களின் போராட்டம், மத்திய அரசிடம் பேசுவதற்காக, ஒருசில நாள்கள்  கைவிடப்பட்டு,  மீண்டும் இரண்டாம் கட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. கல்பாக்கம் அணுமின் நிலையம் 1984 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடன்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. அது செயல்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஆபத்தான அணு உலையை மூட வேண்டும் என்பது மக்களின் ஒற்றைக் கோரிக்கை. நாட்டின் வளர்ச்சிக் காகத்தானே இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம், பிறகேன் அதை எதிர்க்க வேண்டும், ஆபத்து எதில்தான் இல்லை. தொழிற்சாலைக் கழிவுகளால் ஆபத்தில்லையா? என்கிற கேள்வி இயல்பாகக் கேட்கப்படுகிறது. அதிலும் ஆபத்து  இருக்கிறது. ஆனால் கழிவுகளைச் சுத்திகரித்தல் என்பதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். ஆனால் இலட்சக் கணக்கான ஆண்டுகளானாலும் அழியாத அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்வது? பீப்பாய்களில் அடைத்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துவிடலாமா?
அணு உலைகளில் பல வகைகள், பல்வேறு தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் என விஞ்ஞான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நாட்டின் மின் தேவையை சரிசெய்வதற்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்கிறது இந்திய அரசு. ஆனா0ல், ஏறத்தாழ 25 ஆண்டுகள், 100 கோடிகளை செலவிட்டாலும், நாட்டின் மொத்த மின்தேவையில் 9 விழுக்காட்டைக் கூட நிறைவு செய்ய முடியாது இந்த அணுமின் நிலையங்களால் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அரசின் உண்மையான  தேவை மின்சார உற்பத்தி அன்று, அதன் உபரிப் பொருளாகக் கிடைக்கும் பூளுட்டோனியமே என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம். புளுட்டோனியம் என்ன அவ்வளவு பெரிய பூதமா என்றால், ஆம் மனிதர்களை உயிரோடு விழுங்கும் பூதத்திற்கு உயிர் கொடுப்பது அதுதான். அணுகுண்டு தயாரிப்பில் புளுட்டோனியம் முக்கிய இடத்தைப் பெறுகிற காரணத்தால்தான், அணுஉலைகளுக்காக மாரடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
உலக அரங்கில் தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசிற்கும், ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களின் உயிரும், வாழ்வும் ஒரு பொருட்டாகப் படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் கூடன்குளம் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு காட்டும் பிடிவாதப்போக்கு. தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “ பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டத்தில் அரசும், மக்களும் ஒரே நிலையில்தான் உள்ளனர் ” என்று கூசாமல் சொல்கிறார் . வாழ்வா தாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த மக்களிடம் மிச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது? அணுக் கதிச் வீச்சின் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்து, அவற்றின் ஆற்றல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத் திருக்கின்றன. சீனா இனிமேல் புது அணுஉலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஆனால், சீனப் பெருமை பேசும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் தா. பாண்டியன், ‘ மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் ’ என்று கவலைப்படுகிறார்.
ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினரின் காட்டுமிராண்டித் தனத்தி னாலும், அதைக் கண்டுகொள்ளாத இந்திய அரசின் கையாலாகாத்தனத் தினாலும், கரணம் தப்பினால் மரணம் என்றாகிவிட்டது தமிழக மீனவர்களின் வாழ்வு. இதில், குப்புறத்தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக அணுமின் நிலையத்தை நிறுவி அவர்களின் தலைமுறையையே தலைதூக்க விடாமல் செய்யத் துடிக்கிறது மத்திய அரசு. அணுமின் நிலையக் கழிவுநீர் கடலில்தான் விடப்படும். ஆறுகள்தான் கடலில் சென்று கலக்க வேண்டும். அணுக்கழிவுகள் கலக்கலாமோ?
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் அணுமின் நிலையம் தேவையில்லை என்கின்றன. ஒன்றியப் பொறுப்பாளரைக் கூட அனுப்பாத ஜெயலலிதா, ஓட்டு கேட்பதற்காகத் தூத்துக்குடிக்குப் போகநேர்ந்ததால், அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக்         கூட்டத்தில், ‘ நான் மக்கள் பக்கம்’ என்று  கூறியிருக்கிறார். அதை முதலமைச்சராகச் சொன்னாரா அல்லது அ.தி.மு.க. பொதுச்செயலாளராகச் சொன்னாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காங்கிரசைச் சேர்ந்த தங்கபாலு, மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அவர்களின் சந்தேகத்தை தீர்த்துவிட்டுப் பிறகு பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கின்றார்.
அந்த மக்கள் என்ன சந்தேகத்தை அரசிடம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அணுமின் நிலையப் பணி இடங்களில் எங்களுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவீர்கள் என்று கேட்டார்களா?  விபத்துகள் ஏற்பட்டால், எவ்வளவு இழப்பீடு தருவீர்கள் என்று கேட்டார்களா? வாரிசு அடிப்படையில் வேலை கொடுப்பீர்களா என்று கேட்டார்களா? இது எதையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஒரே கோரிக்கை, அணுமின் நிலையம் தேவையில்லை, அதை மூட வேண்டும் என்பதுதான். அணு உலைகள் பாதுகாப்பானவை என்னும் பல்லவியை, ஜப்பானின் புகு´மோவிற்குப் பிறகும் பாடிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
உருட்டி உருண்டையாக்கி அணுகுண்டாகப் போட்டால்தான் அழிவு என்பதில்லை. அணுவின் கழிவு கூட மனித குலத்தை அழித்துவிடும். 1945இல் ஹிரோசிமோவிலும், நாகாசாகியிலும் விதைக்கப்பட்ட விபரீதம் இன்னும் தொடர்வதை அறியாதவர்களா நாம்? போபால் விசவாவு கசிவின் வீரியத்தை உணராதவர்களா நாம்? மேரி க்யூரி, இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க விஞ்ஞானி. யுரேனியம், பொலேனியம் என்னும் அவருடைய கண்டுபிடிப்புகள் கதிர் வீச்சு மூலகங்கள்.   அவருடைய ஆய்வு முழுவதும் கதிரியக்கம் பரவியிருக்கும் ஆய்வுக் கூடத்தில்தான். கதிர் வீச்சின் தாக்கத்தால், கண் பார்வை பாதிக்கப்பட்டு,  ஏற்பட்ட பெர்னிசியஸ் அனீமியா என்னும் நோயினால் அவர் இறந்தார் என்கிறது வரலாறு. அவர் அன்று பயன்படுத்திய குறிப்பேடுகளில் இன்றளவும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை உண்மைகளில் ஒன்று கூடவா ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை?
மின்சாரம்தான் நோக்கம் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அவற்றைப் பரிசீலிப்பதுதானே? வெப்ப நிலப்பகுதியான இந்தியாவில், சூரியசக்தியை முறையாகப் பயன்படுத்தி மின்சாரம் பெறலாம்தானே! கையில் இருக்கிற வெண்ணெயை மறந்துவிட்டு நெய்க்கு அலையறான் பாரு என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இந்திய அரசின் செயலும். வெறும் பொருளாதார வல்லுனராக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் நலனில் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் ஏமாந்து கொண்டிருக்கிறது! -அன்டன் கோம்ஸ்

கூடங்குளம் பகுதி மக்களின் அச் சத்தை போக் காதவரை அணு உலையை திறக்கக் கூடாது என்று தீர் மானம் போட்ட தமிழக அரசு, தற்போது அணு உலையைத் திறக்க அனுமதியளித்திருக்கி றது. அப்பகுதி மக்களின் அச் சத்தைப் போக்கி விட்டதா தமிழக அரசு? கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?
இந்தக் கேள்விகளை, கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1988ம் ஆண்டிலிருந்தே களத்தில் நிற்பவரும், அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்காக ஆதரவு சக்திகளை திரட்டி ஒருங்கிணைத்து வருபவருமான அன்டன் கோம்ஸ் சிடம் முன் வைத்தோம்.
“அணு உலை பற்றிய அச் சத்தைப் போக்காமல் காவல் துறை, இராணுவம் போன்ற பாதுகாப்புப் படையைக் கொண்டு வந்து மேலும் அச்சத் தைக் கூட்டியுள்ளது தமிழக அரசு. அடக்குமுறை மூலம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்த அச்சத்தை எதிர்கொள்ளும் மன வலிமையை மக்கள் பெற்றி ருக்கிறார்கள்.
இடிந்தகரை கிராமத்தை ஏறக் குறைய தனியாக துண்டித்தபோ தும், அத்தனை கடற்கரை கிரா மங்களிலிருந்தும் மக்கள் கொடுக் கும் அபரிதமான ஆதரவு அந்த மன வலிமையை ஏற்படுத்தியுள் ளது.
இந்த ஜனநாயக அறவழிப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று அரசு மனப்பால் குடிப் பது முட்டாள்களின் சொர்க்கத் தில் இருப்பதைப் போன்றது தான்!
கூடங்குளம் போராட்டத்தை மேலும் ஒடுக்க, ஒடுக்க இந்தியா வின் ஒட்டுமொத்தமான அணு உலைக்கு எதிரான போராட்டம் இன்னும் வீரியமடையும். மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.
இப்பொழுது இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்க லாம். ஆனால் இந்த மக்கள் போராட்டம் அணு உலையை நிச்சயம் விரட்டியே தீரும்.
அரசு அணு உலை திறக்கும் முடிவை எடுக்கலாம். ஆனால் மக்கள் அடுத்தப் போராட்ட வியூ கத்தை வகுப்பதில் உறுதியாய் இருக்கிறார்கள். எந்த தனி நபரை நம்பியோ, தனி நபரை அசிங்கப் படுத்தியோ, வழக்குப் போட்டோ இந்தப் போராட்டத்தில் அரசு வெற்றி பெற முடியாது.
இது மக்கள் போராட்டம் என் பதை அரசாங்கம் புரிந்து கொள்ள úண்டும். இது தனி நப ரால் நடத்தப்படும் போராட்ட மல்ல. இதற்கு 25 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஆக, 25 ஆண்டு காலமாக அணு உலை எதிர்ப்பை ஒடுக்க முடியாத அரசு, எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் ஒடுக்க முடியாது. இந்தப் போராட்டம் வெற்றி பெறும். ஆனால் அர சுக்கு தற்காலிக வெற்றி என்று அரசாங்கம் ஏமாந்து கொண்டி ருக்கிறது.
- ஃபைஸல்

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் --பெரியார் முழக்கம் செய்தியாளர் 

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டில் மக்கள் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
• மனித குலத்திற்கு எதிரான அணுசக்தி எனும் பேராபத்திற்கு எதிராக கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை இம்மாநாடு உயர்த்திப் பிடிக்கிறது. கூடங்குளம் அணுஉலையைத் திறக்க விடாமல் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து இயக்கங்களும் உறுதியாகத் துணை நிற்கும். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அணி திரள வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
• நிலவி வரும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்களின் அளவற்ற சுமையைக் குறைக்கத்தக்க வகையில் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கோரிப் பெற வேண்டும் எனவும், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.
• அதிகரித்து வரும் மின் தேவையை நீக்க சூரிய ஒளி, காற்றாலை, சிறிய மின்னுற்பத்தித் திட்டங்கள் மற்றும் இயற்கை வளம் சார்ந்து ஆபத்தில்லா மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகள் இருந்தும் அணு வல்லரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து தமிழக மக்களை பலிகொடுக்க துணிந்த மத்திய காங்கிரஸ் அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• சமரசமற்ற கூடங்குளம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தொய்வின்றி ஆதரித்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு அமைப்பு களுக்கும் இம்மாநாடு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிற கட்சி களும் அணுஉலையை எதிர்த்து நிற்கும் கொள்கையைத் தங்களது செயல் திட்டத்தில் இணைத்து மக்களை ஒருங்கிணைக்குமாறு இம்மாநாடு கோருகிறது.
• தமிழகத்தில் மின்உற்பத்தி போதுமான அளவு இருந்தும், தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களின் மனப்போக்கை தந்திரமாக திசை திருப்பும் காங்கிரசு மற்றும் இந்துத்துவ சக்திகளை வன்மையாகக் கண்டிப்ப தோடு உண்மைகளையும் ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் முன் வைத்து இச்சதியினை முறியடிக்கவும் இம்மாநாடு சபதமேற்கிறது.
• தற்பொழுது தனியாரிடம் விடப்பட்டுள்ள மின் உற்பத்தி, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதால், மக்களின் அடிப்படை சேவை எனும் கோட்பாட்டிற்கேற்ப மின் உற்பத்தியை முழுமையாக அரசுடைமை ஆக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு மிகுந்த பலன் ஏற்படும். எடுத்துக்காட்டாக காற்றாலை மின் உற்பத்தியை தனியாரிடமிருந்து அரசுடைமை ஆக்கினால் கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட பனிரெண்டு மடங்கிற்கும் அதிகமான மின்சாரத்தைப் பெற முடியும். எனவே மின் உற்பத்தியாளர் தனியார் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசு, தமிழக மக்களின் வாழ்வுக்கும் வளாச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் மின் உற்பத்தி மற்றும் வினியோக உரிமையை மாநில உரிமையாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வேண்டுகிறது. மேலும தமிழகத்திலிருந்து மத்திய மின் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் குறைவான மின்சாரமே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படு வதால் தமிழகத்திலுள்ள மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் உடைமை ஆக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• தனியார் பெரு நிறுவனங்களுக்கு அளித்துவரும் தடையற்ற மின்சாரத்தை தடுத்து, பொது மக்கள், சிறு/குறு தொழிற்கூடங்கள், விவசாயம், பள்ளி, மருத்துவமனை போன்ற மக்கள் தேவை களுக்காக மின்சாரத்தை அதிக அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் சிறு, குறு உற்பத்தி யாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஜெனரேட் டருக்கான டீசலையும், சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களையும் குறைவான மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
•              1994 திருத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலை அமைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகளின் குழுக்கள், கூடங்குளம் மக்களையும் போராட்ட குழுவினரின வல்லுநர் குழுவையும் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்சை யாக அறிக்கை சமர்ப்பிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• கூடங்குளம் அணுஉலை குறித்து தற்பொழுது ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழு, மக்கள் விரோதப் போக்கோடு செயல்படுவதோடு, மக்களின் கேள் விகளை எதிர்கொண்டு அவர்களது அச்சத்தைப் போக்காமல், அரசுக்குத் தவறான வழிகாட்டுதல் கொடுப்பதால் இக்குழுவை உடனடியாக கலைத்திட ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டு கிறது.
• கூடங்குளம் அணுஉலை குறித்த 3, 4, 5, 6 ஆகிய ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் அணுஉலை கூடவே கூடாது என வலியுறுத்திய பிறகும், அங்குள்ள கிராம சபைகள் அணு உலைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக கூடங்குளத்தை இயக்க மத்திய அரசு தீர்மானித் திருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• போராட்டக் குழுக்களின் மீது உண்மைக்குப் புறம்பாக போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப  பெற வேண்டும். மேலும் போராடும் மக்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் உண்மைக்குப் புறம்பான அரசு விளம் பரங்கள் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான பாதுகாப்புப் படை ஆகியவற்றைப் பயன்படுத்தி போராடும் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
• கல்பாக்கம் அணுஉலைப் பகுதியில் அம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேர்மையான, வெளிப்படையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

MVI:- தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!-- கோவை. சா.காந்தி

by Srithar Thamizhan on Friday, 19 October 2012 at 19:41 ·
தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்
று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.
கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.
இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.
2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்
கோவை. சா.காந்தி,
9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

http://www.youtube.com/watch?v=E2-X2mShLRw&feature=share




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக