திங்கள், 29 அக்டோபர், 2012

நமது கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் எதிர் எதிராக நிறுத்துகிறது--ஆயிசா இரா.நடராசன்

 

நமது கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் எதிர் எதிராக நிறுத்துகிறது--ஆயிசா இரா.நடராசன் 

       சமச்சீர் கல்வி, அரசு - தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தலில் உள்ள வேறுபாடுகள், நிறை குறைகள், மாணவர் - ஆசிரியர் உறவு, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது பற்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட வலியுறுத்தல். இப்படி கல்வி சார்ந்த பல்வேறு சிந்தனைகளை,  'கருக்கல்' ஆசிரியர் குழு ஒரு மாலைப் பொழுதில் கலந்துரையாடிக் கொண்டிருந்தது.
       'கருக்கல்' ஆசிரியர் அவர்கள் இது குறித்தெல்லாம் ஆயிசா இரா.நடராசனிடம் நேர்காணல் செய்து தெளிவு பெற்று, இவ்விதழிலேயே பிரசுரிப்போமே என கருத்து தெரிவித்தார்; உடன் தொலைபேசியிலும், தொடர்பு கொண்டார். "கருக்கல்' பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் நல்ல புரிதலில் இருந்த இரா.நடராசன் அவர்கள், இது குறித்துப் பேச ஆர்வமுடன் ஒப்புதல் தந்தார்; உடனே வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
       சமீபத்தில் தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டும், மிகுந்த பரபரப்பில் திளைத்த கடற்கரை பகுதிகளில் கடலூரும் ஒன்று. இச்சூழலில் அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு கடலூருக்குச் சென்றோம், நேர்காணலின் பொருட்டு.
       அப்போது தான் 'தானே' புயலின் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டிருந்தது ஊர். வழியெங்கும் சாய்ந்து நின்ற, தலையிழந்த தென்னை மரங்கள் வரவேற்றன. ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை முழுவதுமாகப் பிய்த்து எறியப்பட்டிருந்தது. ஒரு உணவகத்தின் பெயர்ப்பலகை திருகிக் கொண்டிருந்தது. புயலில் கடலூர் எந்த அளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் என்பதை இவைகள் உணர்த்தின.
       மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு, நடராசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர், பள்ளி வழி கூறினார்.
       பள்ளி வாயிலில் காத்திருந்து, எங்களை அன்புடன் வரவேற்று, பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.
       நினைத்ததற்கும் மேலாக எளிமையான மனிதர், சுலபமாகப் பழகக் கூடியவர், மிகப்பெரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், கல்வி சார்ந்த பல புத்தகங்களை எழுதியவர், (இவர் எழுதிய ஆயிஷா மட்டுமே 2.55 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது) "புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கல்வி சிந்தனையாளர், புத்தக வாசிப்பையே சுவாசமாகக் கொண்டவர் ஆயிசா இரா.நடராசன் அவர்கள். ஒரு நேர்காணல் என்பது போல அல்லாமல் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் கொட்டும் மழையென பகிர்ந்து கொண்ட விதம், பிரமிக்க வைத்தது. எங்களின் அனைத்து வினாக்களுக்கும், விரிவான விடை தந்தார். "உங்களுக்கு நான் சொல்வது சரியாகப் புரிகிறதா' என்று அய்யத்தோடு கேட்டு, விளக்கமாகவும் உதாரணத்தோடும் பேசினார். நேர்காணலில் இவர் கொட்டிய (?) கருத்துக்களுக்கு, கண்டிப்பாக ஒரு 'கருக்கல்' இதழ் பற்றாது என்ற நிலையில், முடிந்தவரை விரிவாகவே வெளியிட முயன்றிருக்கிறோம். அவர் தந்த சூடான மசாலா தேநீர் மணக்க, மணக்க பருகியபடியே இதோ எங்களின் நேர்காணல்...
நீங்கள் ஒரு படைப்பாளி, குழந்தைகளுக்காக தொடர்ந்து சளைக்காமல் எழுதுபவர், அறிவியல் எழுத்தாளர், கல்வியாளர், கல்வி குறித்த சிந்தனைகளை நூல்களாய் வடித்துள்ள சிறந்த எழுத்தாளர்.. இப்படி பன்முனை தளங்களில் அறியப்பட்டாலும்..மிக சிறந்த வாசகராகவும் அறியப்பட்டுள்ளீர்கள்.உங்கள் வாசிப்பு பயிற்சியின் அடித்தளம் என எதனை நினைக்கிறீர்கள்?
எழுத்தாளனாவதற்கு வெகுகாலம் முன்பே நான் தீவிர வாசிப்பு தளத்திற்குள் நுழைந்து விட்டேன்.சொந்த ஊர் தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், நாங்கள் அங்கே வசிக்கவில்லை. அரசு ஊழியரான தந்தையின் தொடர் இடப்பெயர்ச்சி காரணமாக திருச்சி, கரூர் மாவட்டங்களின் கிராமப்புற பள்ளிகளில் படித்தேன். ஆரம்பத்தில் படிக்கும் பழக்கம் என் அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும்.. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு.. என ஞாபகம்.. அலுவலகநேரம் போக அப்பா ஆங்கில 'பல்ப் பிக்ஷன்' விடாப்பிடியாக வாசிப்பார்... பள்ளியின் நூலக அலமாரியிலிருந்து ஆசிரியர்களை ஐஸ்வைத்து, நான் எப்படியோ புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன்.
பின்னர் கரூரில் பதினோறாம் வகுப்பு படித்த காலத்தில் வழக்கறிஞர் பி.ஆர்.கே (பி.ஆர்.குப்புசாமி)அவர்களின் பகுத்தறிவு பாசறையில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.அவரது வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருந்தார்.காவேரி பிரச்சனை, ஈழ பிரச்சனை முதல் ஆந்த்ரப்பாலஜி வரை பல புத்தகங்களை எங்களோடு பகிர்வார்..
திருச்சியில் கல்லூரி பயிலும் போது நான் இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) இணைந்தேன்.அப்போது வாராவாரம் அரசியல் வகுப்புகளுக்கு எஸ்.எஃப்.ஐ ஏற்பாடு செய்யும். அதன் மூலம் பேராசிரியர் ஆத்ரேயாவோடு தொடர்பு ஏற்பட்டது.அவர் ஒரு தீவிர வாசகராக இருந்தார்..காந்தி அண்ட் ஹிஸ் இஸம் (இ.எம்.எஸ். எழுதியது) புத்தகம் அவரிடம் இரவல் வாங்கினேன் (இன்று வரை திருப்பி தரவில்லை.அவரும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவேறு விஷயம்!) அதுவே புத்தக வாசிப்பு, கூட ஒரு அரசியல்... எதை தேர்ந்தெடுத்து வாசிக்கிறோம் என்பது கூட நாம் யார் என்பது பற்றிய தேடலே எனும் மனக்கண்ணை திறந்து விட்டது.. இப்படியான ஒரு எண்ணம் போதும்.. அது ஒரு பிசாசு போல, புயல் போல வாழ்வை மையம் கொண்டு சுற்றிச் சுற்றி வீசுகிறது... புத்தக சூறாவளியிடம் சிக்கிய நான் அதன் ஒரு அங்கமாகி... தத்துவம், உலக நாவல், அரசியல், பொருளாதாரம், இயங்கியல் , கார்சியா மார்க்வெஸ், கீகேகார்ட்... இலியட், சார்த்தர்... ஓரன் ஃபாமுக்..என திக்குகள் எட்டும் சிதறி.. பதறி.. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், அல்த்து£ஸர், காஃப்கா, ரிச்சர்ட் டாக்கின்ஸ் என உறக்கம் முதல் உறவுகள் வரை பலவற்றை அந்தத் தேடலின் முன் ஒப்படைத்து சரணடைந்து... வருடங்கள் பல ஆகிறது... சார்த்தர் சொல்கிறார் 'ஒரு நல்ல புத்தகம் முடிவதே இல்லை' எவ்வளவு பெரிய உண்மை!
வாசிப்பு என்பது என்ன? அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா என்ன?
லண்டனின், அருங்காட்சியக நூலகம் உலகப்பிரசித்தி பெற்றது.அந்த நூலகத்தின் லட்சக்கணக்கான பிரதிகளை படித்து கரை கண்டவர்கள் என இருவரது புகைப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ்.அவர் உட்கார்ந்து வாசித்த அந்த எட்டாம் எண் இருக்கை கூட பாதுகாக்கப்படுகிறது.மற்றவர் நமது அண்ணல் அம்பேத்கார். நம் சிந்தனை சிற்பியாம் சிங்காரவேலர் தாம் முதன் முதலில் நம் தேசத்தில் மே தினத்தை தொழிலாளர் வர்க்க எழுச்சி தினமாகக் கொண்டாடியவர்..1960களின் தொடக்கத்தில் ரஷ்யாவின் மிகப்பிரபலமான லெனின் நூலகத்திற்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அங்கே ஒரு பெரிய அறை முழுதும் இருந்த புத்தங்களுக்கு 'இது சிங்காரவேலர் கலெக்ஷன்' என அவரை முன்னிறுத்தி தலைப்பிடப்பட்டிருந்ததை கண்டு அசந்து போய் நின்றாராம். இந்தச் செய்தி அவரது மாஸ்கோ விஜய கோப்புகளிலேயே பதிவாகி உள்ளது...உலகின் பல மூலைகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் புத்தகங்களைத் தேடி சிங்காரவேலரிடம் வருவார்களாம். பின் நாட்களில் இந்தியா வந்த சேகுவேரா.. சிங்காரவேலர் நினைவில்லம் வந்து சில புத்தகங்களை தேடியதாய் வரலாறு பதிவு செய்திருக்கிறது. து£க்கிலிடப்படும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங். வாசிப்பு, நோக்கம் மிகுந்தது... வாசிப்பு, பொழுதுபோக்கு அல்ல.. வாசிப்பு, ஒரு இயக்கம். It is a political activity
இன்று வாசிப்பு எப்படி இருக்கிறது?
தேர்வுக்காக வாசிக்கிறார்கள்...பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர், பேராசிரியர் கூட, பாடப் புத்தகத்திற்கு வெளியேயும் வாசிக்க, பழக வேண்டிய கட்டாயத்தை உணரவில்லை.வேலைக்காக படிப்பது... வேலை கிடைத்ததோடு நின்றுபோகிறது.. பொழுதுபோக்கு வாசிப்பு கூட இன்று குறைந்துவிட்டது.. லட்சுமி, சிவசங்கரி என வாசித்த பெண்கள், டி.வி. சீரியலுக்கு மாறி... நாளாகிவிட்டது.. உலகின் நம்பர் ஒன் பத்திரிகை என்றே ஒரு நூறு தமிழ் பத்திரிகைகள் வருகின்றன. இருந்தும் தீபாவளி மலர் கூட இலவசங்களின் இணைப்பால் தான் விற்கிறது.ஊர் ஊராக புத்தகக் கண்காட்சிகள்.. ஆனால் சாமியார்களின் வழிகாட்டி நூல்களும், பணம் சம்பாதிப்பது எப்படி வகையறா புத்தகங்களும்... சமையல் குறிப்பும் அமோகமாக விற்கிறது... புத்தகப் புதையலை அள்ளத் துடிக்கும் குழந்தைக்கு கூட, தலையணை சைஸ் 'ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?' புத்தகத்தை இரக்கமின்றி வாங்கி கையில் திணிக்கிறார்கள்...இது ஒரு பக்கம்.
மறுபக்கம்.. 'இ&பப்ளிஷிங்'.. கணினியில் இணையத்தில் வருவதே எழுத்து என்று நம்பும் ஒரு கூட்டம். இதோ இந்த பென்&டிரைவில் 150 புத்தகங்கள் உள்ளன. ஆனால் எனக்கு டிஜிட்டல் எழுத்தின் மீது ஈர்ப்பு இல்லை. பாடப் புத்தகங்களுக்குள் வைத்து பகுத்தறிவையும் இயங்கியலையும் வாசித்து வளர்ந்தவர்கள் நாங்கள்..புத்தகம் என்பது வேறு... அதைத்தொட்டு பிரித்து நுகர்ந்து.. நெஞ்சோடு அணைத்து.. நடந்தபடி.. படுத்தபடி.. சாப்பிட்டபடி.. திண்ணையில், ரயிலடியில், அரசமர நிழலில்.. எங்கெங்கும் கொண்டு சென்று வாசிக்கும்.. அது ..அது தான் முழுமைபெற்ற வாழ்வு..
நீங்கள் அப்படி வாசித்த நூல்களில், உங்களை நிறைவடையச் செய்த புத்தகங்கள் என்று எதையாவது குறிப்பிட முடியுமா...? எந்த புத்தகத்தையாவது திரும்ப வாசித்தது உண்டா?
பதிவு செய்யத்தக்க மனித வரலாற்றின் மூவாயிரம் ஆண்டுகளில், தலைசிறந்த&மனித சிந்தனை போக்கையே மாற்றியமைத்த பல நூல்கள் உள்ளன.ஏராளமான புத்தகங்கள் என்னை நிறைவடைய வைத்த பட்டியலில் உண்டு.டிமோதி பெரிஸ் என்று ஒரு விஞ்ஞானி, இவர் கம்மிங் ஆஃப் ஏஜ் இன் தி மில்கி வே (comming of Age in the milky way) என்று ஒரு புத்தகம் எழுதினார். வரலாற்றில் இன்று வரை மனிதனை பதப்படுத்தி, உலகில் வென்று நின்ற இனமாக்கிய புத்தகங்களை அதில் பட்டியலிடுவார்.

நான் என்னை பதப்படுத்தியதாய் மூன்று புத்தகங்களை கருதுகிறேன். நியூட்டனின் பிரின்சிபியா புத்தகம், கலீலியோவின் & சூரியன் மைய கோட்பாட்டு அரசியல் ஆய்வு நூலைவிட பல மடங்கு அற்புதங்கள் கொண்டது என பொதுவாக ஐன்ஸ்டீன் வரை அனைவராலுமே முன் மொழியப்படுகிறது. டெஸ்கார்ட்டஸ் (தெகார்த்தே), ரூசோ, மார்க்ஸ், நீட்சே... இவர்களை எல்லாம் நாம் புறந்தள்ளிவிடவே முடியாது.
ஆனால் உண்மையிலேயே உலகின் மந்த மனநிலை மீது ஒரு ஆதர்ச தாக்குதல் தொடுத்து அனைத்து மூட நம்பிக்கைகளின் மீதும் ஓங்கி அறைந்த புத்தகம் டார்வினின் & உயிரிகளின் தோற்றம். (The origin of species). மார்க்ஸே, தனது மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பிக்கிறார்.ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிசை நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.சில அத்தியாயம் சில பகுதிகளை மனப்பாடமாகக்கூடச் சொல்வேன். நான் கல்லூரியில் படித்தது இயற்பியல், பிறகு உளவியலும்,ஆங்கில இலக்கியமும், கல்வியியலும் விரும்பி வாசித்த முதுகலைப்பட்டங்கள். ஆனால் உயிரிகளின் தோற்றம் என்னை கட்டிவிடுகிறது. முதல் பக்கம் படித்ததும், பிறகு உங்களால் அதை கீழே வைக்க முடியாது. கடவுள் என்பவன் உலகை ஆறே நாட்களில் படைத்ததாக அதுவரை இருந்த புளுகை இது உடைத்தது.படைப்பு & சாத்தியம் இல்லை.பரிணாமமே ரகசியம் என உணர்த்தியது.போப்பாண்டவர் டார்வினுக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே மரண சர்டிபிக்கேட் அனுப்பினாராம்.அத்தனை தாக்கத்தை அது ஏற்படுத்தியது.
வில்டுராண்டின், தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி (The story of philosophy) படித்திருக்கிறீர்களா... நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். கல்வியில் மாற்று சிந்தனைக்கு வித்திடும் & நான் தமிழில் மொழி பெயர்த்துள்ள & பாப்லோ பிரையரேவின் & ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்...ஒரு ஆசிரியனாய் என்னை நெறிப்படுத்தும் நூல் அது..
பாப்லோ பிரையரே காட்டும் 'பிரச்சனைகளை மையப்படுத்திய கல்வி' இங்கே இந்தியச் சூழலில் சாத்தியமா...தமிழ் சமூகச் சூழலில் மாற்று வகுப்பறையை கண்டடைய முடியுமா?
பாப்லோ பிரையரே & ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை வென்றெடுத்த மார்க்சிய கல்வியாளர்.இந்திய சூழல் மட்டுமல்ல உலக அளவில்கூட கல்வி என்பதே இருப்பை தக்கவைக்கும் அதிகார வர்க்கத்தின் யுக்தியாகவே உள்ளது.
தமிழ் சூழலுக்கான,சமுதாயத்திற்கான கல்வியை வென்றெடுக்க நாம் தவறி விட்டோம். உங்கள் கேள்வி நியாயமானது. எழுபதுகளின் இறுதி தொடங்கி முழு வியாபாரமாகவும், தமிழை புறக்கணிக்கும் ஆங்கில ஆதிக்கமாகவும் நம் கல்வி அனைத்துவகை அதிகார பரிவாரங்களின் முழு ஆதரவோடும் புரையோடிப் போய்விட்டது. இது நமது கல்வியே அல்ல.தார்மீக ரீதியில் இந்தியை, இந்தி திணிப்பை உக்கிரமாக எதிரித்து வெற்றிகண்ட நம் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள், நமக்கான கல்வியை வென்றெடுக்க தவறினார்கள். வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகம் இது.
கிட்டத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கூட நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.அங்கே சரளமாக குழந்தைகள் (85% குழந்தைகள்) ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கின்றனர். கல்லூரியில் உயர்கல்வி மலையாளத்தில், தெலுங்கில் உள்ளது.நாம் தவறி விட்டோம். மாண்டசோரி முறைப்படி கல்வி அளிப்பதாய் பொய் சொல்கின்றன, நர்சரி பள்ளிகள். மாண்டசோரி தாய்மொழி கல்வியை ஆதிரித்தவர். இந்தியாவுக்கே பலமுறை வந்து சென்றவர். மாண்டசோரி பெயரில் ஆங்கில கல்வி எனும் மோசடிக்கு துணிந்து அரசு ஆதரவு அளித்து வரும் அவலம், வேறு எந்த சமூகத்திலும் நிகழவில்லை.
1169--/1200 எனும் அதீத மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை படைக்கும் ஒரு தமிழ் வழி கல்வி மாணவர் பொறியியல் கல்லூரியின் ஆங்கில & வழி கல்வியால் கொலை (தற்கொலை அல்ல) செய்யப்படும் மனம் பதறவைக்கும் கொடுமை, இனப்படு கொலைக்கு இணையானது. நம் குழந்தைகளுக்கான கல்வி நம் தாய் மொழியில் இல்லை என்றால் அது என்ன கல்வி?
உலக அளவில் தகுதி பெற ஆங்கில வழி கல்வி தான் தேவை என்கிறார்களே?
ஆங்கிலம் அவசியம் என்பது உலகமயமாதல் ஏற்படுத்திய ஒரு மாயை. இது ஒரு வகை ஆதிக்கம்.தமிழ் உணர்வு, ஆங்கிலம் உயர்வு என்றெல்லாம் சமூக பொது புத்தியில் புகுந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.
இந்த ஆங்கில கல்வியில் பெரிய சாதனை எதுவும் இல்லை.ஆங்கில பள்ளிகளில் நான் அரை நூற்றாண்டாக வேலை பார்க்கிறேன்.நம் குழந்தைகளுக்கு தமிழும் ஒரு வரி சரியாக எழுதத் தெரியாது.ஆங்கிலமும் சரியாக எழுத பேசத் தெரியாது.அவர்கள் மனப்பாடம் செய்வது தவிர,வேறு எந்த வேலையும் பெரிதாய் செய்வது இல்லை...இப்படி நாளன்றிற்கு எட்டுமணிநேரம் இளமை முழுதையும் பணம் தேடும் வெறிக்கு பலியிடும் கொடுமை, உலகில் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது.மத்தியதரவர்க்கத்தின் பணம் தேடும் & செல்வம் கொழிக்கும் குபேர வாழ்க்கை & வெறி, ஆங்கில கல்வியை து£பம் போட்டு வளர்க்கிறது.
2005ம் ஆண்டின் தேசிய கல்வி அறிக்கை தாய் மொழி கல்வியை கோருகிறது.யஷ்பால் கமிட்டி அறிக்கையை முன் வைத்து தயாரான அந்த கொள்கை ஆவணத்தை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் தங்களுக்கான கொள்கை ஆவணங்கள் தயார் செய்து விட்டன. தமிழகத்தில் இப்போது தான் அதற்கு முதல் படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்.அதுவும் கல்வியாளர்கள் வழக்குமன்றம் போய் விடுவார்களோ எனும் அச்சம் ஒரு புறம். குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டம் ஒருபுறம்.இல்லையேல் இவ்வளவேனும் நடந்திருக்குமா.இப்போதும் இக்கல்விக் குழுவில் பெரும்பாலும் அதிகாரிகள் உள்ளனர். சமூக போராளிகளும் குழந்தை உரிமைப் போராளிகளும் புறந்தள்ளப் படுகிறார்கள்.
தேர்வு மதிப்பெண்களை வைத்து உயர்கல்வி என்பதால் தான் இவ்வளவு மனஅழுத்தமா? இதன் மூலம் தற்கொலைகளும் அதிகரித்து வருவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இங்கே நடப்பது கல்வியல்ல, தேர்வுக்கான பயிற்சி. கல்வியை கேள்வி& பதிலாக கூறுபோட்டு வைத்திருக்கிறோம். இதனை பாப்லோ பிரையரே வங்கிமுறை கல்வி என அறிவித்தார்.வங்கியில் பணம் போடுவது போல மாணவரின் தலையை திறந்து பாடம் என அரசு கருதுவதை பொத் பொத்தென கொட்டுவதே ஆசிரியரின் வேலையாக உள்ளது.'குழந்தைகளை தேர்வர்களாக வளர்க்கிறீர்களே.. வெட்கமாக இல்லையா' என்று ஜான்ஹோல்ட் கேட்கிறார்.புத்தகமற்ற கல்வியை, மரியா மாண்டசோரி முன் மொழிந்தார்.நமது கல்வி கல்வி பயிற்சியாகவே உள்ளது.
தேர்வு முறை பலவிதமான பலவீனங்களால் ஆனது.முதலில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி தெரிந்திருந்தால் போதாது.. எழுதத் தெரியவேண்டும். ஒரு யானை பராமரிப்பாளன், யானை பற்றிய தேர்வில் பாஸ் பண்ண முடியாது..எழுதத்தெரியணுமே. சரி எழுதத் தெரிந்த ஒருத்தரை எடுத்துக் கொள்வோம்.டெண்டுல்கர் வந்தால் கிரிக்கெட் பற்றிய பாடத்தின் தேர்வில், பெயில் தான் ஆவார்!ஏனென்றால் எழுதத்தெரிந்தால் போதாது..உங்கள் புத்தகத்தில் உள்ளதை 'அப்படியே' எழுதத் தெரிய வேண்டும்..இந்தத் தேர்வுகளில் நகலெடுக்கும் இயந்திரங்களே தேர்ச்சி பெற முடியும்; சராசரி குழந்தைகள் அல்ல. பதினான்கு ஆண்டுகாலம் படித்ததை, பிளஸ்&டூ வகுப்பு இறுதி தேர்வின் நான்கே மைய & தாள் மதிப்பெண்களைவைத்து மதிப்பீடு செய்வது அதைவிட பெரிய அபத்தம். அதனால் தான் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் கோழிப்பண்ணைகளை மூடிவிட்டு பயிற்சி மையங்களை ஆரம்பிக் கிறார்கள்.
இப்போது குழந்தைகள் மைய கல்வி என்பது பற்றி நிறைய பேசப்படுகிறதே.? சமச்சீர் கல்வி என்பது அது தானா?
ஏதோ இதுவரை கல்வி என்கிற ஒன்று, ஆசிரியரை மையப்படுத்தி இயங்கியது போலவும் இப்போது அது குழந்தைகளை மையப்படுத்தி மாற்றப்பட்டுள்ளதாகவும்.. அடிக்கடி அறிவிப்பு போல செய்து கொண்டே இருக்கிறார்கள்.எல்லாமே அதிகார வர்க்கத்தை மையப்படுத்தி இயங்கும் கல்விதான். நமக்கான கல்வி சமச்சீர் கல்வி அல்ல. அது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அதிகாரமே வழங்கிய இரு நகல்களில் ஒன்றைப் பெறவே இவ்வளவு போராட வேண்டியாகிவிட்டது. இந்தக் கல்வி அதிகார மையக் கல்வி.அமைச்சர் சொல்வதை இயக்குனரக அதிகாரிகள் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை மாவட்ட அதிகாரிகள் கேட்கிறார்கள்.. சீ.இ.ஓ...டி.இ.ஓ சொல்வதை தலைமை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியர் சொல்வதை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்க வேண்டும். மாணவர்களான குழந்தைகள் சொல்வதை கேட்கத் தான், ஆள் கிடையாது.
அதிகாரிகளுக்கு தேர்வு முடிவு, விழுக்காடுகளின் மேல்தான் குறி. தேர்வு விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு போதும், குழந்தை சித்திரவதை என வேறு எதையுமே காட்ட வேண்டியதில்லை. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்வது இன்று ஒரு ஃபேஷன். இந்தக் கல்வி முறை குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் கல்வி முறை அல்ல; ஆசிரியர்களை மையப்படுத்தியும் அது இயங்கவில்லை. அதிகாரத்தையும், அதிகாரிகளையும் மையப் படுத்தி இயங்கும் கல்வி முறை இது.முரட்டுத்தனமாய் தேர்வு முடிவு விழுக்காடுகளை மாணவர் ஆசிரியர் மீது வன்மமாகத் திணிக்கும் இந்தக் கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்துகிறது.ஆசிரியரின் மீதான அபிப்ராயம் அந்த பாடத்தின் மீதான வெறுப்பாகவும், ஒரு பாடத்தின் மீதான வெறுப்பு அந்த ஆசிரியரின் மீதான ஆத்திரமாகவும் இங்கே மாறிவிடுகிறது.
அதனால் தான் ஆசிரியர்&மாணவர் உறவு பாதிக்கிறதா? வகுப்பறையில் கொலை...
குழந்தைகள் பேச அனுமதிக்கப்படாத ஒரு கல்வி முறை இப்படித்தான் போய் முடியும்.இங்கே குறைந்தபட்ச உரையாடலுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. எப்போதும் 'கையை கட்டு.. வாயை பொத்து' தான். வீட்டிற்குப் போனால் அப்பா அம்மா இருவருமே வேலைக்குப் போய்விட்ட தனிமை.குழந்தைகள் விளையாடும் மரத்தடிகளும், குது£கலிக்கும் வீதிகளும் இன்று காணக் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் கூட இன்று இது தான் நிலைமை. குழந்தைகள் பேச விரும்புகின்றன... சொல்ல விரும்புகின்றன... வகுப்பறையில் ஆசிரியரின் அதிகார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது... 'கீப் கொயட்... கவனி' 'இங்கே கவனி' குழந்தைகள் சொல்ல விரும்புகின்றன '..நாங்கள் சொல்வதை கவனியு-ங்கள்..' எப்போ தெல்லாம் உங்கள் கல்வி குழந்தைகளை மையப்படுத்தாமல் வெகு து£ரம் விலகுகிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் தங்களை மையப்படுத்துவதாய் ஆக்கிட அவர்களது குரல் கேட்கும். அவர்கள் மொழி வேறு, வழிமுறைவேறு. செய்தி ஒன்று தான்...நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.சிலர் பள்ளிக்கு கட் அடிக்கிறார்கள்.ஊரைவிட்டே ஓடுகிறார்கள் சிலர்.வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள் சிலர்...ஒரு மாணவன் பள்ளிக்கு எடுத்துப் போக கத்தி வாங்குவதென முடிவு செய்கிறான்...செய்தி ஒன்று தான்.. 'நாங்கள் சொல்வதை கேட்பீர்களா இல்லையா'...எனும் குழந்தைகளின் வழி அது..
எதற்கெடுத்தாலும் தற்கொலை...
இது கல்வி முறை, சமூக அணுகுமுறை இவற்றின் கோளாறு. குழந்தையின் கோளாறு அல்ல.முற்றிலும் வணிக மயமாகிப்போன கல்வியின் அவலம் இது.முழுக்க முழுக்க பயிற்சி மட்டுமே தரப்படும்போது,வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து அளவளாவ இக்கல்வியில் இடமில்லை.
இது மெக்காலே&கல்வியால் வந்த வினை தானே... நமது குருகுலக் கல்வி இப்படி இல்லையே...
(இடைமறிக்கிறார்)இல்லை..இல்லை.இந்த வகை பார்வையில் பல கோளாறுகள் உள்ளன...நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒட்டு மொத்தமாக நாம் மெக்காலே மீது குற்றம் சுமத்திவிட முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு தேவையான வேலையாட்களை உற்பத்தி செய்ய வந்தது தான்,இன்று பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு வேலையாட்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.நான் மறுக்கவில்லை ஆனால் டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் ஏன் பகத்சிங் போன்றவர்கள் கூட மெக்காலே கல்வி முறையை ஆதரித்தார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஏனென்றால் மெக்காலே முறை கல்வியை, ஆங்கிலேய அரசு கொண்டு வரும் வரை இங்கே கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவில்லை. எத்தனையோ குறைபாடுகளை இக்கல்வி கொண்டிருந்தாலும், ஆணும் பெண்ணும் சமமாக உட்கார்ந்து பயிலும் பொதுப் பள்ளிகளை, சாதி மத வர்க்க வர்ணாசிரம பேதமற்ற பொதுப் பள்ளிகளை நமக்கு கொடுத்தது மெக்காலே கல்வி முறை தான். குருகுலக் கல்வி என்பது ஒரு ஆதிக்க மோசடியாகவே இருந்தது.திண்ணை கல்வி என்கிறீர்கள்.பள்ளி திண்ணையில் ஏன் இருக்க வேண்டும்? வீட்டிற்குள் வர முடியாதது ஏன்..என்கிற இடத்திலேயே அதன் தீட்டு பார்க்கிற முகமூடி கிழியவில்லையா?இதனை மெக்காலே கல்வி தான் உடைத்து, பொது பள்ளிகளை உருவாக்கியது...அதன் செயல்பாடு உலக மேடையோடு நம்மை ஒன்றிணைய வைத்தது.கல்வியின் பலம், பலவீனம் இருக்கட்டும்...மெக்காலே வகை பள்ளிகள் வந்திராவிட்டால் கல்விக் கற்கும் உரிமையே நமக்கு வந்து சேர்ந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.
இப்போது குழந்தைகளுக்கான துவக்கக்கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது..அதன் முக்கியத்துவம் என்ன?
பகத்சிங் போன்றவர்களின் எழுச்சி முழக்கங்களை அடுத்து, கோபாலகிருஷ்ண கோகலே 1910ல் அப்போதைய பிரித்தானிய&தற்காலிக பிரதிநிதிகள் சபையில் ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.2009ல் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து, இந்திய அரசு குழந்தைகளுக்கான கட்டாய கட்டணமற்ற கல்வியை உரிமையாக்கி சட்ட ஷரத்து 86ஐ நிறைவேற்றியது. எனவே கல்வி உரிமைக்கான போராட்டம் என்பது ஒரு நூறு வருட போராட்டம். 1948ல் இந்திய பிரஜைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமை ஆக்கிட அண்ணல் அம்பேத்கார் முயன்ற போது, அப்போதைய நேரு அரசாங்கம்...காஹர் கமிட்டி என்கிற ஒன்றை அமைத்து, அதற்கு ஆகின்ற செலவை காரணம் காட்டி, கல்வியை அடிப்படை உரிமை பட்டியலான 24ம் பிரிவிலிருந்து நீக்கி, அரசு பத்தாண்டுக்குள் தரவேண்டியவைகளான 'தேவை' பட்டியலில் சேர்த்தது.
இப்போதும் கூட ஒரு சராசரி பள்ளி நாளில் கல்வி கற்க பள்ளிக்குப் போகிறவர்களை விட, போகாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம் என்று அமெர்தியா சென் குறிப்பிடுகிறார்.
கல்வி வர்த்தகமாகிவிட்ட நிலையில், இந்த சட்டம் எப்படி வேலை செய்யும்... வெறும் கண்துடைப்பாக மாறவும் வாய்ப்பு உள்ளதல்லவா?
மிக சரியாகச் சொன்னீர்கள்...தனியார் பள்ளிகளும் 25 சதவிகித இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமென இச்சட்டம் கோருகிறது. உன்னிகிருஷ்ணன் வழக்குக்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மாணவர் சங்கங்கள் நடத்திய உக்கிரமான போராட்டங்களும் இல்லையேல் இது கூட கிடைத்திருக்காது. 70களில் அரசு பள்ளிகளில் மேட்டுக்குடி குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்ற ஒரு மிக்ஸட் சூழல் இருந்தது.தனியார்மய நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளி கலாச்சாரம் வந்த பிறகு இந்த வசதி படைத்த கூட்டம், அரசு பள்ளிகளை காலி செய்து கொண்டு போய்விட்டது.இன்று அரசுப்பள்ளி என்பதே நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு என்று ஆகிவிட்டது.இப்போது இந்த சட்டம் மீண்டும் கலப்புப் பள்ளிகளான பொதுப் பள்ளிகளை கோருவது நாம் போராடிப் பெற்ற உரிமை.அதனைவிடாமல் பாதுகாப்பது நமது முழுமுதல் கடமை.அதற்காக சமூக நல போராளிகளும், ஆர்வலர்களும் இந்த சட்டத்தின் அமுலாக்கத்தை கண்காணிக்க வேண்டியுள்ளது.
சரி..இப்போது இலக்கியத்தின் பக்கம் திரும்புவோம். சிறுவர்களுக்கான இலக்கியத்தில் இன்று உங்களது பங்களிப்பு அபாரமாக உள்ளது.உங்கள் நூல்களை குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். அவர்களுக்கான மொழியை எப்படி கண்டடைந்தீர்கள்?
குழந்தைகள் மூன்று விதமான மொழி உலகில் பரிணமிக்கிறார்கள்.முதலாவது வீட்டின் பேச்சு மொழி.இரண்டாவது ஊடக மொழி.அதாவது டி.வி. கார்டூன் நெட் ஒர்க்...அந்த மொழி.மூன்றாவது பள்ளியின் பாடப்புத்தக மொழி..நான் பாடப் புத்தக மொழியை அவர்களை அடையும் எனக்கான வழியாக தேர்வு செய்தேன்...காரணம், பிற்காலத் தொடர் தமிழ் இலக்கிய வாசிப்பினை நோக்கி அது தான் அவர்களை ஊக்கப் படுத்தும். அதில் ஓரளவு வெற்றி கண்டது எனக்கே...கொஞ்சம் ஆச்சரியம் தான்...ஆனால் இன்னமும் அதற்கான வேலைகள் நிறைய உள்ளன.
அறிவியலை பிடிவாதமாக எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்...தமிழில் அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது.
அந்த திசையில் உண்மையிலேயே சவால்கள் மிக அதிகம். தமிழில் அதற்கான சொல் செழிப்பு இன்னமும் உருவாக வில்லை.இங்கே அறிவியல் கல்வி&குறிப்பாக உயர்கல்வி, தமிழில் இல்லை.எனவே தொடர்ச்சியான வாசக பின்புலம் கிடையாது..ஒரு காரல் சாகன் போலவோ, ரிச்சர்ட் டாக்கின்ஸ் போலவோ இங்கே எழுதினால் வாசிக்க ஆள் கிடையாது.இங்கே தகவல் நூல்கள் தான் அறிவியல் நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன! ஒரு மாதத்திற்கு 600 பி.எச்.டி தீசிஸ், சமர்ப்பிக்கப்படும் நம் பல்கலைகழக அறிவியல் பொறியியல் துறைகளுக்கு தமிழ் அறிவியல் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது.சமர்பிக்கப்படும் நாலு பிரதியில் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என குட்டியாய் ஒரு உத்தரவு போதும்..தமிழ் அறிவியல் வளர்ச்சியுறும்..கூகுள் போன்ற இணைய தளங்கள் அளவுக்கு கூட, மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுத்த பல்கலைகழகங்கள் அறிவியல் தமிழை வளர்க்க முனையவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
உங்கள் சிறுகதைகள் தமிழ் படைப்புலகில் தீவிர வாசக தளத்தை அடைந்தவை..இப்போது மிக அபூர்வமாக எழுதுகிறீர்களே...
எழுதுவதை நிறுத்திவிடவில்லை...என் கதைகள் ஒவ்வொன்றுமே ஒருவிதத்தில் சோதனை முயற்சிகளே..தினம் ஒன்றும் உருவாகலாம்..இரண்டாண்டுக்கு ஒன்றும் கூட எழுதலாம்..ஏன் என்ன அவசரம்?
புத்தகங்களை அறிமுகம் செய்வதில்.. உங்களது முன்னோடிகளாக யாரையாவது கருதுகிறீர்களா?குறிப்பாக மொழி பெயர்ப்புகள் கூட தீவிர அரசியல் நோக்கம் கொண்ட படைப்புகளாய் உள்ளனவே..
எல்லாவற்றுக்கும் முன்னோடிகள் இருக்க வேண்டுமா என்ன? பிற மொழி நூல்களை தமிழில் அறிமுகம் செய்வதில் பாரதியை விட பல படிகள் முன் சென்றார் சிங்காரவேலர்.புதுமைப்பித்தனும்,க.நா.சுவும் ஏன் சுஜாதாவும் கூட அதில் பெரும் பங்களிப்பு செய்தவர்களே.. மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை நான் இந்திரனைத்தான் சொல்வேன். ஐம்பதாண்டு களாக தமிழில் அற்புத ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க கவிதை,கதை என தொடர்ந்து பங்களிக்கும் அவர் தான், தனது தீரா நட்பின் மூலம் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர்.
'புத்தகம் பேசுது' இதழ் வேலைகளில் உங்களது வாசிப்பின் நேர்த்தியை பார்க்கிறோம். இதழை எப்படி திட்டமிடுகிறீர்கள்.?
'புத்தகம் பேசுது' இதழ் ஒரு கூட்டு முயற்சி. தோழர்கள் தமிழ்ச்செல்வன், நாகராஜன்,கமலாலயன் எஸ.வி.வேணுகோபால், கீரனு£ர் ஜாகீர் ராஜா என தீவிர நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்..வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு.. Reading is also a political Activity என நாங்கள் நம்புகிறோம். 
இப்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள், என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.?
ஜப்பானிய அறிவியலாளர் மிச்சியோ காக்கூ எழுதிய பிசிக்ஸ் ஆஃப் தி பியூச்சர் (Physics of the Future) நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
'டார்வின் ஸ்கூல்' என்று, சிறுவர்களுக்கான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

கிராமப்புற மாணவர் கல்வி மேம்பாடு என்ற இலக்கினை நோக்கி--- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு

கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.
எழுப்பப்பட்ட கேள்விகள்
8 - வது வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் படித்த போதிய பயிற்சியில்லாத ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்கும் போக்கு, பொதுவாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு பாடம் என்ற ரீதியில் கூட முறையாகக் கற்பிக்கப்படாத நிலை, இதனால் சரியான அடித்தளமின்றி வேலைவாய்ப்புச் சந்தையின் அனைத்து மட்டங்களிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் சிரமங்களும், தேவைப்படும் தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் நகர்ப்புற மாணவர்களுடனான போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பின்தங்கி நிற்கும் நிலை ஆகியவை பல கேள்விகளாக எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடை காணும் வகையில் கருத்தரங்கில் விவாதங்கள் வரவேற்கப்பட்டன.
கூட்டத்தில் துவக்கவுரையாற்றிய இலக்கு இளைஞர் மன்ற அமைப்பாளர் சுரேஷ் இலக்கு இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் இலக்கினையும் விளக்கிப் பேசினார். அந்த அமைப்பினை மகாகவி பாரதியின் கவிதைகளால் உந்தப்பட்டு தனது நண்பர்களையும் தோழர்களையும் ஒருமுகப்படுத்தி உருவாக்கிய அனுபவத்தை விளக்கியதோடு அந்த அமைப்பு கிராமப்புற மாணவர்களுக்காக ஆக்கபூர்வமான காரியங்கள் சிலவற்றையாவது செய்தாக வேண்டும் என்பதனை அதன் இலக்காகக் கைக்கொண்டதையும் விளக்கிப் பேசினார். அத்துடன் இந்தக் கருத்தரங்கிற்காக அணுகிய பல கல்வித் துறையோடு தொடர்புடையவர்களின் கூற்றுகளைச் சுவையுடன் அனைவருக்கும் பயன்தரத்தக்க விதத்தில் நினைவு கூர்ந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ஆதவன் தனிப்பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் திரு.ராஜேஷ் கல்வியின் மேன்மையினை அத்தனை தூரம் அறியாத மக்களின் குழந்தைகளுக்கு தன்னுடைய நிறுவனத்தைப் போன்ற ஒரு தனிப்பயிற்சி நிறுவனத்தின் மூலமாக அவர்களுடைய தேவையை முழுமையாகக் கணக்கில் கொண்டு கல்வி புகட்டுவது ஒரு அலாதியான அனுபவம். ஆசிரியப் பணியினை சிறப்புற ஆற்றிய ஒரு மனநிலையை இந்த அனுபவம் தனக்கு உணர்த்துகிறது என்று எடுத்துரைத்தார்.
முயற்சி செய்தால் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி எந்த இடத்திலும் நவீன பயிற்றுவிக்கும் முறைகளைக் கொண்டுவர முடியும் என்பதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை கிராமத்தில் கணிணி மற்றும் இணையதளத்தின் மூலமாகக் கல்வி கற்கும் வகையில் ஒரு எலக்ட்ரானிக் நூலகத்தை அங்குள்ளோர் நிறுவியிருப்பதை எடுத்துக்காட்டாக முன்வைத்து திரு.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார்.
கேள்வி, பதில் மூலமாகக் கருத்தரங்கம் மிகவும் உயிரோட்டமுள்ள முறையில் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் சிறப்புற நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள்:
யதார்த்தத்தில் இன்று கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் என்ற பிரிவு இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் கல்வி பயில வாய்ப்புள்ள வசதி படைத்த மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் மட்டுமே பயில வாய்ப்புள்ள வசதியில்லாத மாணவர்கள் என்ற நிலையே நிலவுகிறது.
இருவகைக் கல்வி
கிராமப்புறங்களிலிருந்தும் இன்று நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல கிராமப்புறங்களில் காலை வேலைகளில் பஸ்களும் வேன்களும் வந்து செல்வதை அனைத்து இடங்களிலும் நாம் பார்க்கிறோம். நாம் பெறும் கல்வியில் ஒரு பெரும் செங்குத்தான பிளவு தற்போது தோன்றி வளர்ந்து வருகிறது.
அதாவது வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகுமளவிற்கு மாணவர்களைத் தயார் செய்யும் ஒருகல்வி, இத்தனை சதவீதம் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று உலகிற்குக் கணக்குக் காட்டுவதற்காகக் கையொப்பம் இடுபவர்களைத் தயார் செய்வதற்கான மற்றொரு வகைக்கல்வி என்ற இருவகைக் கல்வி நிலைகொண்டு விட்டது. இதில் முதல்வகைக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலும் ஒருசில அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் கல்வி; கையெழுத்துப் போடுபவர்களை உருவாக்கும் ரகத்தைச் சேர்ந்த கல்வியே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி.
மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கற்பித்து அவர்களின் ஈடுபாட்டையும் கொண்டுவருவதாகக் கல்வி இருக்க வேண்டும். நமது வீட்டில் நம் பிள்ளைகளுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து அதற்குகந்த வகையில் ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதை வழங்கி அவர்களைப் பராமரிப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவை மற்றும் போதாமைகளை உணர்ந்து அதற்குகந்த வகையில் கற்பிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
மேலை நாடுகளில் பாடத் திட்டங்கள் குறைவாக இருந்தாலும் அதை முழுமையாகச் செயல் முறைப்படுத்தும் அளவிற்கு மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் தயார் செய்கிறார்கள். பிள்ளைகளின் போதாமைகளை வகுப்பறைக்கே வந்து மாணவருடன் மாணவராக அமர்ந்து தெரிந்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தப் படுகிறார்கள். அத்தகைய நடைமுறையின் மூலம் மாணவர்களின் போதாமைகள் ஆசிரியர் பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சரி செய்யப்படுகின்றன.
கல்வி என்பது ஒரு வாழ்க்கை; கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதைப்போல் மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த வகையில் ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களும் பல விசயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிப்பவர்களே. இத்தகைய சூழலில் நமது கல்வி நிலையங்கள் இருந்தால் நமது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லப் பயப்படமாட்டார்கள்.
பெற்றோரின் பொறுப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர்களான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாமும் பிரசித்தி பெற்ற தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களே. ஒரு காலத்தில் அனைத்து மக்களின் பயிற்றகமாகவும் அரசுப் பள்ளிகள் இருந்தன. அந்தநிலை இன்று சீரழிந்து கையொப்பம் இடுபவர்களைத் தயாரிப்பதற்காக என்ற அளவிற்கு அரசுப்பள்ளிகள் ஆகிவருகின்றன என்றால் அதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணமே.
அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருகிறதென்றால் நாம் விற்காததை விற்றாவது நமது பிள்ளைகளை நல்ல கல்வி கிடைப்பதாக நாம் நம்பும் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படிக்க அனுப்புகிறோம். நமது வரிப்பணத்தில் நிறுவப்பெற்றுப் பராமரிக்கப்படும் அரசுப்பள்ளிகள் உரிய வகையில் நல்ல கல்வி கற்பிக்கும் நிலையங்களாக இருப்பதைக் கண்காணிப்பது நமது கடமை என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போய்விடுகிறது. கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த நிறுவனமும் சீரழியவே செய்யும்.
உண்மையான ஜனநாயகம்
உண்மையான ஜனநாயகம் மக்களின் பங்கேற்பின் மூலம் பொது விசயங்களை ஆற்றுவதே. மேளாக்கள் போல் நடைபெறும் தேர்தல்களில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப் படுவோரின் மூலமாகச் செயல்படுவதல்ல. கிராமப்புறக் கல்வி மேம்பாட்டுக் குழுக்கள் போன்றவற்றில் பொதுமக்கள் மென்மேலும் பங்கேற்க வேண்டும். அதில் நிரந்தர உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்படும் வட்டாட்சியர் போன்றவர்கள் சம்பிரதாயத்திற்கு அதில் கலந்து கொள்பவர்களே தவிர கல்வி நிலையங்களின் மேம்பாட்டில் அக்கறை உடையவர்கள் அல்ல.
அக்குழுக்களில் கல்வியின் பால் அக்கறையுள்ள பொதுமக்களும் பெற்றோரும் மென்மேலும் பங்கேற்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஒருவகையான தனிநபர்வாதக் கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக இருக்கும் சூழ்நிலையில் இலக்கு அமைப்பினை நிறுவியவர்கள் தாங்கள் படித்த, வாழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுவது பெருமகிழ்ச்சிக்குரியது.
இதுபோன்ற இளைஞர்கள் அனைத்து ஊர்களிலும் அணிதிரட்டப்பட வேண்டும். அவர்களை அணிதிரட்டி இதுபோன்ற கருத்தரங்குகளை அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும். அவர்களைப் போன்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையினை ஊட்டமுடியும். அதன்மூலம் கல்வியின்பால் அக்கறையுள்ளவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப் படவேண்டும். அவர்களைக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்குழு ஆகியவற்றை நிரப்பி அவற்றைப் பயனுள்ள அமைப்புகளாக்க வேண்டும். குறைந்த பட்சம் கல்வித் துறையிலாவது மக்கள் பங்கேற்புடன் கூடிய உண்மையான ஜனநாயகத்தை நாம் நிலைநாட்ட முயல வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகையில் அவர்கள் படித்தவற்றை நினைவுகூர வைக்கும் வகையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு தேர்ச்சி பெற்ற பின்னரே முழுமையான ஆசிரியர்களாக நியமனம் பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்குச் சம்பளத்துடன் பயிற்சிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்பு நியமனம் பெறுவது அவர்களின் குற்றத்தினால் அல்ல. உரிய காலத்தில் வேலை வாய்ப்புகளை அரசு அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்காததால் தான்.
ஆசிரியர் அமைப்புகள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடாது கல்வி மேம்பாடு போன்ற விசயங்களுக்காகவும் தேவைப்பட்டால் அரசிற்கு எதிராகவும் கூடப் போராட வேண்டும். உரிய ஆதார வசதிகள் இல்லாமை, போதிய ஆசிரியர் நியமனமின்மை ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டும். தொடர்ச்சியாகத் தங்களது கற்பிக்கும் திறனும் பாடத்திட்ட மேம்பாடும் அதிகரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் உரிய தரமான பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பாடத்திட்டக் குறைப்பினைக் கோருதல், தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள் பெறுமளவிற்கு மட்டும் பாடம் நடத்துதல் போன்ற தற்போதைய ஆசிரியர் மத்தியில் நிலவும் அவலங்கள் போக்கப்படும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப் படாததே உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புச் சந்தையில் விலை போவதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். பாடப்புத்தகங்களில் பாடங்களை அடுத்து இடம் பெற்றுள்ள பயிற்சிகளை ஓரளவு சரிவரக் கற்பித்தால் கூட மாணவர்களின் ஆங்கில அறிவு பன்மடங்கு மேம்படும்.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினால் நாங்கள் கல்விக்குத் தேவைப்படும் அனைத்தையும் செய்யத்தானே செய்கிறோம் என்று அரசினர் கூறுவர். இன்றுள்ள ஆட்சியாளர் நேற்றைய ஆட்சியாளருடன் தங்களை ஒப்பிட்டு எத்தனை ஆயிரம் புது ஆசிரியர்கள் தங்களது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பட்டியலிடுவர். எத்தனை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமையுடன் தம்பட்டமடித்துச் சொல்வர். ஆனால் பள்ளிகளில் கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
வேலியே பயிரை மேய்வது போல் நல்ல முறையில் பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படுவதை உத்திரவாதப் படுத்துவதற்காக உள்ள மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகளே 8ம் வகுப்பு வரை தேர்வு இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் அளவிற்காவது அனைத்து மாணவர்களையும் தயார் செய்யுங்கள் என்று கூறாமல் பெயரளவிற்கு நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச மதிப்பெண் பெருமளவிற்குத் தேர்வு எழுதியுள்ளனர் என்று பொய்யாகக் காட்டுவதற்காக அந்தத் தேர்வுத்தாளில் நீங்களாகவேணும் ஒரு வரைபடத்தை பூர்த்தி செய்து கட்டுங்கள் என்பது போன்ற முறைகேடுகளை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களாக உள்ளனர்.
அவ்வாறு அக்கறையும் சிரத்தையுமின்றிப் பல ஆசிரியர்களும் அவர்களைக் கண்காணிக்கும் கல்வி அதிகாரிகளும் இருப்பதற்குக் காரணம் அரசிற்கு கல்வியும் அறிவும் மக்களுக்குச் சென்று சேர்வதில் அக்கறை ஏதுமில்லை என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதே. நாம் ஏற்கனவே வலியுறுத்திய விதத்தில் கல்வித் துறையிலேனும் மக்கள் பங்கேற்புடனான உண்மையான ஜனநாயகம் செயல்படுத்தப்பட்டுப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கிராமப்புறக் கல்விக் குழுவினரும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக்கப்பட்டால் மட்டுமே இன்றுள்ள நிலை மாறும்; அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்--இ.இ.இராபர்ட் சந்திரகுமார் 


“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்” என்றொரு சட்டம் கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசால் இயற்றப்பட்டது. பின்னர் இச்சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன போதிலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்றளவிலும் இச்சட்டம் தொடர்பாக மாநில விதிகள் ஏதும் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு இந்தியா. ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பிரிவினருக்கு இன்றளவும் கல்வி சென்றடையவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் மேற்கண்ட சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும், கல்வி அளிப்பதன் வாயிலான சமூக நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் சட்டம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் இச்சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து பார்க்க வேண்டியது அடிப்படையான தேவையாகும்.
சிறப்பம்சங்கள்:
 ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும். தற்போது நடுநிலைப்பள்ளி வரை என வரையறுத்துள்ளது. பதினாறு வயது வரையிலான குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்ற நோக்கில் உயர்நிலைப்பள்ளி வரையிலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மத்திய அரசுக் கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின பிரிவினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியுள்ளோர், சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், நிலப்பரப்பு, மொழி, பாலினம், மாற்றுத்திறனாளி போன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆண்டு வருமானத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் கல்வி வழங்குதல் மறுக்கப்படக்கூடாது. முதல் வகுப்பில் இவர்களது எண்ணிக்கை 25 விழுக்காட்டிற்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு குழந்தையும் தொடக்கக்கல்வியைத் தொடர்ந்து படித்து முடிப்பதை தடுக்கக்கூடிய வகையில் எந்தவிதமான கட்டணங்கள் செலுத்தவோ அல்லது செலவுகள் செய்யவோ வேண்டியதில்லை.
 ஆறு வயதுக்கும் மேற்பட்ட ஒரு குழந்தை புதிதாக பள்ளியில் சேரும் பொழுது, அந்த குழந்தையின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
 விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள் தவிர இதர எந்த பள்ளியிலும், அக்குழந்தை அந்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி மாறும்போது மாற்றுச்சான்றிதழ் வழங்கிடுவதில் தாமதப்படுத்தும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர்கள், துறை வாரியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
 பள்ளி அருகாமையில் இல்லாத பொழுது இச்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அரசாங்கங்கள் பள்ளியை நிறுவ வேண்டும். அரசாங்கமானது குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு குழந்தையும், பள்ளியில் சேர்க்கப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும், தொடக்கக்கல்வியினை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதிபடுத்திடவும், கண்காணித்திடவும் வேண்டும். அதே போல நிறம், இனம், ஜாதி, பால், பிறப்பிடம் என்பது போன்றவைகள் தொடர்பான எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருப்பதையும், இது போன்ற காரணங்களால் குழந்தைகள் கல்வி பெறுவது தடுக்கப்படாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
 எந்த பள்ளியும், அப்பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து நன்கொடை, பள்ளியால் அறிவிக்கப்பட்ட கட்டணம் தவிர்த்த இதர நிதி கேட்டல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட தலைக்கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. அது மீறப்படுவது உறுதி செய்யப்பட்டால், வசூலிக்கப்பட்டது போது  பத்து மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
 நீதிமன்றங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளபடி, குழந்தைகள் சேர்க்கப்படுவதற்காக, அவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, பாதுகாவலர்களுக்கோ தகுதித் தேர்வு எதுவும் நடத்தக்கூடாது.  அதனை முதல் முறை மீறும் போது 5,000 ரூபாயும் தொடர்ந்து மீறப்படும்போது ஒவ்வொரு முறையும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
 தொடக்கக்கல்வி முடியும் வரையிலும் எந்தவொரு குழந்தையும் ஓராண்டுக்கு மேல் ஒரே வகுப்பில் வைத்திருக்கக்கூடாது. பள்ளியிலிருந்து வெளியேற்றவும் கூடாது. அதேபோல எந்தவித தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமில்லை.
 வகுப்பறை வன்முறைகள் என்று பரவலாக அறியப்படும் உடல்ரீதியான, மன ரீதியான துன்புறுத்தலுக்கு எந்தவொரு குழந்தையும் பள்ளி நிர்வாகத்தால் ஆட்படுத்தப்படக்கூடாது. அது மீறப்படும் பட்சத்தில் துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
 ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளியில் பணிபுரிபவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களை கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் 3/4 ¾ பங்கு என்ற விகிதத்தில் பெற்றோர்கள் இடம் பெறும் வகையில் இருக்க வேண்டும். விகிதாச்சார முறைப்படி நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்ப பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.
 மக்கள்தொகை கணக்கெடுப்பு, இயற்கை சீற்ற பணிகள், உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் அல்லாத வேறு கல்வி சாராத எந்த நோக்கத்திற்காகவும் எந்தவொரு ஆசிரியரும் வேலைக்கு அமர்த்தப்பட‌க்கூடாது. எந்தவொரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
 பயிற்சி மொழி நடைமுறைக்கு சாத்தியமுள்ள வரையில் குழந்தையின் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையமானது, இச்சட்டம் தொடர்பாக எழும் மேல்முறையீட்டு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்:-
• உலகமயமாக்கல் சூழலில் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு வரும் வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தொடர்பாக விதிகள் ஏதுமில்லை.
• இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறும் அல்லது மீறும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
• “தலைக்கட்டணம்” என்பது அரசு நிர்ணயித்த கட்டணங்களுக்கு கூடுதலானது என்பதற்குப் பதிலாக, பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு கூடுதலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும்.
• தனியார் பள்ளியில் பயின்றாலும், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
• கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்படும் பள்ளிகளுக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பாகுபடுத்தும் கல்வி முறையாகும்.
• பயிற்று மொழி தாய்மொழியிலேயே என்று உறுதியாக இந்த சட்டம் ஏற்கவில்லை.
• தேசிய கல்விக்கொள்கை 1986 மற்றும் 1992க்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இயற்றப்படவில்லை.
• நூலகம் குறித்து பேசும் இச்சட்டத்தில் நூலகர் என்று ஒருவர் பணி நியமனம் குறித்து பேசவில்லை.         
இப்படியாக, விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களை   உள்ளடக்கி இயற்றப்பட்டு தற்போது ஆங்காங்கே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பல்வேறு வகையான பள்ளி கல்வி முறைகளை அகற்றி விட்டு ஒரே மாதிரியான பொதுக்கல்வி திட்டத்தை அரசாங்கங்கள் உருவாக்கிவிடுவது தான் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையான மற்றும் நிலையான தீர்வுமாகும்.
ஏப்ரல் முதலாம் நாளை முட்டாள்கள் தினமாக பன்னெடுங்காலமாக கருதப்பட்டு வரும் சூழலில், மேற்கூறிய அம்சங்களுடன் அதே ஏப்ரல் முதல் நாளிலிருந்து இச்சட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்துள்ளதில் உள் நோக்கம் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தை எதிர்கொள்ளப்போவது ஆட்சியாளர்கள் தான். மக்களுக்காகத் தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பது சட்ட விதி.
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com)

கல்வி சிறப்பு கருத்தரங்கம் ---இளைஞர் முழக்கம் செய்தியாளர் 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13வது தமிழ்நாடு மாநில மாநாடு செப். 2427 ஆகிய தேதிகளில் பள்ளிப் பாளையம் வேலுச்சாமி நினைவரங்கத்தில் (கல்பனா திருமண மண்டபம்கோவை) நடைபெற்றது. இம் மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரனும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கலந்து கொண்டு பேசினர்.
சமச்சீர் கல்வி எதிர்பார்ப்பும் அமலாக்கமும் என்ற தலைப்பில் முனைவர் ச.முத்துகுமரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கட்டாயக்கல்வி உரிமை சட்டம்2009 அனைவருக்கு மான கல்வியை வலியுறுத்துகிறது. அனைவருக்குமான கல்வி என்றால், அது தரமானதாக இருக்க வேண்டும். 1950ஆம் ஆண்டில் இருந்து இது குறித்து பேசப்பட்டாலும், தமிழ் நாட்டில் தற்போதுதான் சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்கு வந்துள்ளது. இதுவும் கூட நீண்ட நெடிய போராட்டத் திற்கு பிறகே வந்துள்ளது. தரமான கல்வியை வழங்க போதிய ஆசிரியர்கள் உள்ளார்களா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தரமாக வழங்க எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழு மிக முக் கியமான 109 பரிந்துரைகளை வழங்கியது. இதில் முதன் மையான 15 பரிந்துரைகள் வரை குறிப்பிடத்தக்கது.
1.பாடநுல்கள், ஆசிரியர்கள், அடிப்படை கட்ட மைப்புகள் குறித்தது.
2. கல்வியின் பயன்கள் அறிவு வளர்ச்சி சமூக பயன் பாடு வளர்ச்சி சார்ந்தது பொருள் ஈட்டுவது குறித்தது.
3. மழலை கல்வி முதல் 5ம் வகுப்பு வரை செலவு களை அரசே ஏற்பது.
4. தாய்மொழி வழி கல்வியை ( தமிழ்மொழி ) உறுதி செய்வது. குறிப்பாக, அதற்கான பயிற்சியை உறுதிப்படுத்துவது.
5. 10 சதம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது.
6. பள்ளியை நடத்துபவர்களே ஆய்வு செய்பவர் களாக உள்ளனர். இதனை நிர்வாகம், ஆய்வு என இரண் டாக பிரித்து அமைக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் குறித்த ஆய்வுகள் முழுமையானதாக இருக்கும்.
7. மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தை 30:1 எனவும், 30 பள்ளிக்கு ஒரு ஆய்வாளர் எனவும் இருக்க வேண்டும்.
8. கல்வித்துறை கையேடு வெளியிட வேண்டும்.
9. கிராமக்கல்விக்குழு
என்பன உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. தற்போதைய சூழலில் பள்ளியின் அடிப்படை வசதிகள் அடிப்படை கட்டமைப்புகள் மேம் படுத்த வேண்டும். ஜூலை 8ம் தேதி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளி வந்தது. அதன்தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் இசை, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி தரத்தை மேம்படுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
சென்னையில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் தரத்தை ஒட்டு மொத்தமாக எப்படி மேம்படுத்துவது என யோசிக்க வேண் டியுள்ளது. இந்நிலையில் மாதிரி பள்ளிகள் தொடங்கப் படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வித்தைதானே தவிர வேறில்லை.
மாணவர்கள் வரவில்லை அதனால் மாநகராட்சி பள்ளி மூடப்படுகிறது என்ற செய்தியின் பின்புலம் என்ன?
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்தியாவில் 12 லட்சம் ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள பத்திரிகைகள் அதே பக்கத் தில் 600 பள்ளிகள் மூடப்பட்டதாகவும் வெளியிட்டுள் ளன. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 3.50 லட்சம் ஆசிரி யர்கள் பதிந்து வேலைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
2010 செப் 4ம் தேதி ஆசிரியர் நியமனத்திற்கான பணி யாணையை ஒருவர் பெற்றுக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்றால் அங்கு அப்படியரு பள்ளியே இல்லை. தமி ழகத்தில் இப்படித்தான் ஆசிரியர் பணி நியமனம் உள்ளது. நல்ல சட்டங்களை கொண்டு வருவதோடு அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.
குழந்தைகளுக்கு அவர்களின் திறமை அடிப்படையில் பயிற்சி கொடுக்க வேண்டும்: கொடுக்கப்படுகிற பயிற்சி அவர் களின் வளர்ச்சிக்கான களமாக இருக்க வேண்டும். அறி வியல், தொழில்நுட்பம், மொழி, கணிதம், சமூக அறிவி யில் பாடங்களை தவிர வேறு ஒன்றும் இல்லையா? கலை, உடற்பயிற்சி, சுகாதாரம், அமைதி, சுற்றுச்சூழல், ஒழுக்கம், வாழ்க்கை, தொழிநுட்ப கல்வி என கற்று கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு தனிப் பட்ட கவனம் தேவைப்படும். அப்படிப் பட்ட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். கல்விச் சூழலை மாற்ற கல்வி நிலையங்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு:
1950ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. அரசியல் சாசனத்தின் 21(ஏ) பிரிவில் கல்வி பெறும் உரிமை குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆட்சிக் காலத்தில் 86 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூல்ம் 6முதல் 14 வயது வரை இலவச கல்வி என்று கொண்டு வந்தனர். இதன் மூலம் மழலையர் கல்வியை கேள்விக் குள்ளாக்கினார்கள். 1 முதல் 18 வயது வரை குழந்தை கள் என வரையறை செய்யப்படுகிறது. 14 வயது வரை மட்டுமே இலவச கல்வி என்றால் குழந்தைகல்வி உரிமை என்பது என்ன ஆவது. இன்று இந்தியாவில் 10 சதம் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். 90 சதம் குழந்தைகள் மேற்கல்விக்கு வருவதில்லை, அது குறித்த ஆய்வுகள் தேவை. ஒடுக்கப்பட்ட மக்கள் தான் உழைப்பை செலுத்தும் மக்களாக உள்ளனர். இன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சத் தான ஊட்ட சத்துக்கள் மறுக்கப்படுகிறது. மழலையர் களுக்கு தரமான ஆரம்பகல்வியும் மறுக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சி என்பது அதன் ஆரம்ப காலத்தில் சத்தான உணவும், தரமான கல்விச் சூழலும், கல்வி வழங்குவதுமாகும். ஆனால் இவற்றை திட்டமிட்டு மறுத்துவிட்டு பிரதமரும், கல்வி அமைச்சரும் புலம்புகின்றனர். சமமும் சீரும் இல்லாத சட்டத்திற்கு இன்று சமச்சீர் கல்வி சட்டம் என அழைக்கப்படுகிறது. கல்வி உரிமை இல்லை என்று சொல்ல ஒரு கல்வி உரிமைச் சட்டம். அரசியல் சட்டத்தின் முகவுரைக்கு எதிராக 86 வது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் ( பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தை யுனிசெப் வரவேற்கிறது. பல நாடுகளில் இதை வரவேற்பது அந்தந்த நாட்டுகளை பெருக்கி கொள்ளதான். மில்லேனியம் ஆண்டில் குழந்தைக்கான வரையறை 18 வயது வரை என அமெ ரிக்காவின் முனமொழிவோடு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 வரையான கல்வி ஆரம்ப கல்வி என்றும், 6 முதல் 8 வரை நடுநிலைக் கல்வி இரண்டாவது நிலைக் கல்வி என அழைக்கப்படு கிறது. இதில் பிஜேபி அரசு செய்தது 1 முதல் 8 வரைக் கான கல்விக்கே அரசு பொறுப்பு என அறிவித்தது. மழ லையர் கல்வியை கண்டுகொள்ளவில்லை. மேல்நிலை கல்வியையும் கண்டு கொள்ளவில்லை.
மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் கல்வி கற்பதை வளர்ந்த ஏகாதிபத்திய, மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை, மூன்றாம் உலக நாடுகளில் கல்வி மறுக்கப்பட்டால்தான் அடிமைகள் கிடைப்பார்கள்.
கல்வி உரிமைச்சட்டம் சொல்வது என்னவென்றால். 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்களும், 200 மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும்இருப்பார்கள். பாடவாரியாக ஆசிரியர் கிடையாது. இசை, ஒவியம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். பொது வாக இச்சட்டம் குறித்த பார்வையில் காங்கிரஸ் பிஜேபி இரண்டு கட்சிகளின் முகம் தான் வேறு, சிந்தனை ஒன்றே ஆகும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண் டர்சனுக்கு வழக்காடியவர்தான் சிதம்பரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்காடியவர் கபில்சிபல், உலக வங்கி மேசையில் அமர்ந்து பணி செய்தவர்தான் பிரதமர் மன்மோகன்சிங் இவர்களால் எப்படி குழந்தைகளுக்கான முழுமையான சட்டம் வரும்?
இச்சட்டத்தில் பெற்றோர்கள் நிர்வாகத்தினை நிர்வாகிக்க நிர்வாகக்குழு அமைக்கவேண்டும் அதில் 70 சதம் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். அதில் 50 சதம் பெண்கள் இருக்க வேண்டும. 25 சதம் ஏழை குழந்தை களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணங்கள் கேட்கக் கூடாது. இருந்த போதும் இது போன்ற சட்டங்கள் வருவதற்கான போராட்டத்தை நடத்தி யதில் மாணவர், வாலிபர் சங்கங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அரசின் பொறுப்பில் கல்வித்துறை இருந்தால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். கிராமத்தில் வேலை செய்ய மருத்துவர் இன்று இல்லை. காரணம் தாய் மொழியில் மருத்துவம் படிக்க ஏற்பாடு இல்லை. இத னால் பெரும் பகுதி மருத்துவர்கள் நகர்புறம் சார்ந்தே பணியாற்றும் நிலை உள்ளது. எனவே தாய்மொழிகல்வி, அருகமைப்பள்ளி, அரசுப்பள்ளியாகவே இருப்பது நல்லது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது நோய் தடுப்பு மையங்களை மூடினார். அந்த மைங்களை திறப்பதற்கான போராட் டத்தை நடத்தி திறக்க வைத்த அமைப்பு டிஒய்எப்ஐ. அதுபோல் இந்த கல்வி உரிமைச்சட்டத்தில் முறைகேடு இல்லாமல் முறையாக அமலாகவும், கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிரான சட்டத்தை முறையாக நடை முறைப்படுத்தவும் உரிய போராட்டங்களை தொடர்ந்து டிஒய்எப்ஐ , எஸ்எப்ஐ அமைப்புகள் நடத்திட வேண்டும் என கூறினார்.

இந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...பேரா.கிருஷ்ணகுமார் 

குசும் நாயர் எழுதி 1961ம் ஆண்டில் வெளியான வெளியான 'புழுதியில் மலர்ந்த மலர்கள்' என்ற புத்தகம் இந்தியாவின் முன்னேற்றத்தை கணிப்பதற்கான ஓர் அளவுகோலாக அமைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அம்மக்களுடன் உரையாடியதன் அடிப்படையில் இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். நவீன முறையில் உற்பத்தி நடைபெறுவதால் மட்டும் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதக்கூடாது என்பதையும், மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படுவதே உண்மையான வளர்ச்சிக்கான காரணியாக இருக்க முடியும் என்பதையும் இந்தப்புத்தகத்தில் முடிவாக அவர் கூறியிருந்தார்.

பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பன்முகத்தன்மையை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.

சமூகமாற்றத்துக்கான முக்கியமான கருவியாக கல்வி பயன்படும் என அவர் நம்பினார். அவருடைய இந்த நம்பிக்கை மீது அறுபதுகளில் வாழ்ந்த பல சமூகவிஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு உடன்பாடு இருந்தது.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க கல்வியில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சாதி மற்றும் பாலின வேறுபாடுகளின் அடிப்படைக் கட்டுமானம் உடல் உழைப்பைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் கட்டுமானங்கள் கல்வி மூலம் ஓரளவு தகர்க்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை. சாதி வேறுபாட்டைக் காட்டிலும் பாலின வேறுபாட்டில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

காலனிய ஆட்சியில் இருந்ததற்கு மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுயசார்புத்தன்மையுடனும், பயமில்லாமலும் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கல்விபெற்ற பெண்களுக்கு சமூகஅங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. பெண்களின் கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் வலுவாக அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றால், பெண்கள் கல்வி மூலம் ஒரு புதிய உலகை தரிசிக்கும் போதிலும், அதற்குத் தகுந்தாற்போல் ஆண்கள் சமூக ரீதியாக தங்களை தயார்செய்து கொள்ளாததுதான். பெண்களிடம் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் அப்படியே இருப்பதால், பெண்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு வன்முறைகளில் இருந்து விடுதலை கிடைக்காத நிலையே தொடர்கிறது. கல்வித் திட்டத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு எந்த இடமும் இல்லாதது இந்நிலைக்கு முக்கிய காரணம்.

சாதிப் பிரச்சினையை பொருத்தவரை, சமூகத்தில் சாதி அமைப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களை மாற்றுவது குறித்து கல்வித் திட்டகூறுகள் அமையவில்லை. எழுத்தறிவு பெறுதல், தேர்வில் தேர்ச்சி பெறுதல் போன்றவற்றின் மூலம் சாதியின் தளைகள் தானாகவே, மாயாஜாலமாக பலவீனமாகிவிடும் என்ற யூகமும் உள்ளது.

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் வராமல் இருப்பதற்கு, ஆசிரியர் பயிற்சியை உதாசீனப்படுத்தும் போக்கே முக்கிய காரணம். குழந்தைகளின் பள்ளி சார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் மூலம், ஒரு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது. ஆனால், அக்குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய இயக்கங்களில் ஆசிரியர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆசிரியர்களை ஆழமான சமூக பிரக்ஞை கொண்டவர்களாக மாற்றுவதற்கு வழிசெய்யத் தவறிவிட்டோம்.

1983ம் ஆண்டில் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சட்டோபாத்யாய கமிஷன், ''ஒரு சராசரி ஆசிரியரின் பங்கு மிகக் குறுகியதாகவும், தங்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக மட்டுமே உள்ளது,'' என்று கூறியிருந்தது. ஆசிரியர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்று அந்த கமிஷனின் அறிக்கை வலியுறுத்தியது. ஆனால் அப்போதிருந்த நிலைமையைவிட 90களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது. வேறு எந்தத் துறையிலும் பணி கிடைக்காத நிலையில், கடைசியாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போக்கு இன்று நிலவுகிறது.

அரசியல் சாசனத்தில் ஆரம்பக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவிப்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் போனதன் விளைவாக நாம் ஒரு பெரும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம். இந்தத் தவறு சரி செய்யப்பட்டது. ஆனால், தொடக்கக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவித்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டதே அன்றி, அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை.

பெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் சரியாக இல்லை. மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை அந்தந்த மாநிலங்களே எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகுவதும், மாநிலங்களுக்கு போதிய நிதி அளிக்காததும் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். கல்வி தொடர்பாக பொறுப்பேற்றுக் கொள்வதில், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே மத்திய அரசு மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் கல்வி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது இருக்கும் ஒரே அமைப்பு 'மத்திய கல்வி ஆலோசனை மையம்' மட்டுமே. இந்த அமைப்பிற்கும் முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை.

''விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், அடிப்படைத் தேவையான தொடக்கக் கல்விக்கு மிகக் குறைவான தொகையை ஒதுக்குவது ஏன்?'' என்று சமீபத்தில் மகசேசே விருது பெற்ற இதழாளர் பி. சாய்நாத் தனது கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி குறித்த எந்தச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒரு விசேஷமான பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருத வேண்டும். ஏன் என்றால், அவர்களது உரிமையை அவர்களாலேயே பாதுகாத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளை அரசு அன்பாக அரவணைத்து, அவர்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக்குறைவு, எழுத்தறிவின்மை, குழந்தைகளை நிந்திப்பது, ஹீமோகுளோபின் அளவு குறைவது, அடிக்கடி ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் (குறிப்பாக பெண் குழந்தைகளிடம்) போன்றவற்றை சரி செய்யாவிட்டால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மனித வளத்தை இழந்துவிடுவோம்.

குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி. இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இது எளிதான வேலையில்லை என்றாலும், நம்மிடம் உள்ள மிகப் பெரிய மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகளை மையப்படுத்தும் வகையில் அரசு நிர்வாக செயல்பாட்டு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வித் திட்டங்கள் இந்தத் திசையில் அமைய வேண்டும்.

(
பேராசிரியர் கிருஷ்ணகுமார் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குநர்)
நன்றி: இந்து நாளிதழ்

-
தமிழில்: ஹரீஷ்

உயர்கல்வி வளர்ந்துள்ளதா?----இல.சண்முகசுந்தரம் 


தமிழகம், கல்வி, வேலை வாய்ப்பு வளர்ச்சியில் பெரும் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுவது உண்மையா?
என்ன கேள்வி இது என்று சிலருக்கு தோன்றலாம். சந்தேகமில்லை வளர்ச்சியில்லை என்று சத்தியம் கூட சிலர் செய்யலாம். ஆனால் ஒரு கேள்வி. வளர்ச்சி என்பது என்ன? தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கமும், தனியார் தொழிற்சாலைகள் மூலமான வேலை வாய்ப்பு அதிகரிப்பும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிரந்தரமான பங்களிப்பு செய்யுமா எனவும், இதை வளர்ச்சி என்று கூறுவது பொருத்தம்தானா என்றும், இன்றைய சூழ்நிலையில் விவாதம் நடத்தப்படுவது அவசியமாகிறது.
பொருளாதார தேக்கம் என்ற ஒற்றை வார்த்தையால் அமெரிக்கா தொடங்கி பல நாடுகள், வேலையிழப்பு முதல் சமூக குற்றங்கள் அதிகரிப்பு வரை சந்தித்த பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆண்டுகள் பல ஆனாலும் இன்று வரை தீராத அப்பிரச்னைகளால் பெருமளவிற்கு பாதிக்கப்படாத நாடாக இந்தியா இருந்ததற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்கள் தான் என அனைவரும் பெருமையாக பேசினர். ஆனால் மீண்டும், மீண்டும் இங்கு நடப்பதென்ன?
பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை எது துவங்க வேண்டுமானாலும் அரசு இன்று நம்பியிருப்பது தனியார் மூலதனத்தை மட்டுமே. தொழில் வளர்ச்சி மூலமான வேலை வாய்ப்புக்கும் தனியார் மூலதனத்தை சார்ந்த நிலைதான். இதனால், கல்விநிலையத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைக்கேற்ற மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிப்போனதை யாரும் மறுக்க இயலாது. ஆனால், இதைத்தான் வளர்ச்சி என அரசும், பல ஊடகங்களும் மாறி மாறி கூறி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக இந்த வளர்ச்சி உதவியுள்ளதா என பரிசீலிக்க நீண்ட சிந்தனை எதுவும் தேவையில்லை. கூடிய விரைவில் நாட்டில் ஒரு பெரும் அசாதாரண சூழலை தற்போதைய கல்வி முறை உருவாக்கும் என ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
பல கோடி சொத்து முழுவதையும் கொடுத்து ஒரு அறக்கட்டளை மூலம் கல்விக்காக செலவிடும் உயர்ந்த நோக்கத்தை உருவாக்கிய பச்சையப்பர் முதலானோர் கல்விநிலையங்களை துவக்கியபோது அதில் வியாபார நோக்கம் துளியும் இருந்ததில்லை. ஆனால் காலப்போக்கில் அரசு தன் பொறுப்பில் இருந்த கல்வியை தனியாருக்கு கொடுக்க துவங்கியபோது வணிக நோக்கம் எட்டிப்பார்க்கவும் துவங்கிவிட்டது. கல்வி ஒரு உரிமையாகவும், அரசின் கடமையாகவும் இருந்ததுமாறி பின்னர் கல்வியை ஒரு சேவைத்துறை என்று வர்ணித்தவர்கள், இன்று அதை ஒரு கார்பரேட் நிறுவனம் அளவுக்கு உயர்த்திவிட்டதால், கல்வி ஒரு பெரும் லாபமுள்ள சேவைத்துறை என புது விளக்கம் கொடுக்கத்துவங்கிவிட்டனர். விளைவு தங்கு தடையற்ற தாராள வர்த்தகத் துறையாக பள்ளிக்கல்வி கூட இன்று மாற்றப்பட்டுள்ளது. கல்வியை கிராமங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கும் பரவலாக்கிட மேற்கண்ட வர்த்தக மயமாக்கல் உதவவில்லை. மாறாக, கல்வி ஒரு சரக்கு என்ற ஒப்புதலை அனைத்து மக்களிடமும் உருவாக்கியுள்ளது. தமிழகத்திலும், இந்தியாவிலும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவையை விட அதிகமாக உருவாகிவிட்டது என்பது இதன் பொருளல்ல. கல்லூரிகள் ஒரு புறம் குவியும் நிலையும், மறுபுறமோ லாபம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் மட்டுமே தனியார் மூலம் துவக்கப்படுகின்றன. கிராம மக்களுக்கு பள்ளிக்கல்வி தருவது, கலை-அறிவியல் கல்லூரிகளை பரவலாக துவக்குவது, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதை ஒரு போதும் இலக்காக இவர்கள் கொண்டதில்லை.
முதலில், தனியார் பள்ளிகளை மட்டும் துவக்கியவர்கள், பின்னர் பாலிடெக்னிக், கலை- அறிவியல் கல்லூரிகளை துவக்கினர். ஆனால், இன்று அனைவரும் துவங்குவது நான்கு வகையான கல்விநிலையங்களை மட்டுமே.
(1) ஆங்கில வழிப்பள்ளிகள்
(2) பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்லூரிகள்.
(3) ஆசிரியர் பயிற்சி, மேலாண்மை போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகள்.
(4)நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள்.
உலகத்திலேயே மூன்றாவது உயர்கல்வி கட்டமைப்பு கொண்ட நாடு இந்தியா தான். சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இரண்டாவதாக உள்ள இந்தியா, உயர்கல்வியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. இவ்வளவு பெரிய பரந்த உயர்கல்வி அமைப்பாக இருந்தாலும், தரம் என்ற அம்சத்தில் அணுகினால், உலகில் உள்ள சிறந்த கல்விநிலையங்கள் பட்டியலில், இந்தியாவில் உள்ள ஒரே ஒரு ஐ.ஐ.டி. மட்டுமே இடம் பெறுகிறது. இந்திய மாணவர்கள் வருடந்தோறும் சுமார் இருபத்தெட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வெளிநாடுகளில் கல்வி பெறுகின்றனர்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதலில் நம் மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்த நிலையிலிருந்து இன்று கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இப்போது கூட அரசு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி என்றுதான் பேசுகிறதே ஒழிய இந்திய உயர்கல்வியின் தரம் குறித்து மாற்றம் கொள்ள விரும்பவில்லை. உலக அளவில் சிறந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இதனால் இந்தியாவிற்கு வரப்போவதில்லை. மாறாக, டூபாக்கூர் பல்கலைக்கழகங்கள் வந்து இங்கு கடை விரிக்கப்போகின்றன. அவர்களோடு உள்ளூர் வியாபாரிகளும் கை கோர்த்துக்கொண்டு டை அப் செய்வது தவிர வேறெந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனியார் கல்வி நிலையங்களின் பெருக்கத்துக்கு அரசு அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறது.
நகரம் முதல் கிராமம் வரையான அனைத்து மக்கள் திரளுக்கும் ஒரே விதமான கல்வி என்றோ அல்லது கல்வியை அனைத்து கிராம மக்களுக்கும் பரவலாக்குவது என்ற நோக்கம் இல்லாமலேதான் இன்று தனியார் கல்வி நிலையங்களுக்கு தாறுமாறான அனுமதி அளிக்கப்படுகிறது. நகர்மயமாக்கல் என்ற உலகமயமாக்கலின் நோக்கமே கல்வித் துறை மூலம் பரவலாக்கப்படுகிறது. கிராமங்களில் நல்ல கல்வி கிடைக்காது என்ற கருத்து நிலை நாட்டப்பட்டுள்ளது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவி செய்யும்?
இலாபம் மட்டுமே நோக்கம் என்ற தாரக மந்திரத்தோடு துவக்கப்படும் தனியார் கல்விநிலையங்கள் தமிழ் மொழியால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற நிலையை பள்ளி முதல் கல்லூரி வரை உருவாக்கி வைத்துள்ளதால் கல்வி முதலாளிகளின் கல்லா நிரம்பியுள்ளது. ஆனால், தமிழ் மொழி? தமிழில் பேசினால் தண்டனை மற்றும் அபராதம் என பள்ளி விதிகள் பெருகியுள்ளன. பெற்றோர்களும் கூடுதல் கட்டணம் முதல் அபராதம் வரை அனைத்தையும் செலுத்தி ஆங்கிலம் பேசுமா குழந்தை என வாய் பார்த்து காத்துக்கிடக்கின்றனர். பொறியியல், மருத்துவம், கணினித்துறை வேலை வாய்ப்புகள் என கனவோடு எல்.கே.ஜி.யில் துவங்கும் பெற்றோர்களின் செலவும், அலைச்சலும் எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது.?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 285 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள் 2011ல் 488 ஆக உயர்ந்துள்ளதை வளர்ச்சி என கூறுகிறது அரசு. ஆனால் உண்மையென்ன? கடந்த பல வருடங்களாகவே சுமார் 16,000 முதல் 25,000 வரையான இடங்கள் பொறியியல் படிப்பில் ஒவ்வோரு ஆண்டும் காலியாக இருக்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வோரு ஆண்டும் தமிழக அரசு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இதனால் சில புதிய பிரச்னைகள் உருவாகியுள்ளன. அதாவது பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் மிக அதிகமாகும். விளைவு குறைந்த பட்ச மதிப்பெண் வாங்கிய ஜஸ்ட் பாஸ் மாணவர்களையும் சேர்க்காமல் கல்லூரிகள் தங்களது பாதி இடங்களைக்கூட நிரப்பமுடியாது, இதனால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் பொறியியல் படிப்பில் தேங்கி நிற்கும் நிலை அதிகமாகும். இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் தரம் குறைந்து விடுவதாக பேசும் இவர்கள், காசுக்கு சீட்டு என்று இலாபம் வந்தால் மட்டும் இவர்களின் தரம் எங்குபோகிறது என்று புரியவில்லை.
அரசுக் கல்வி ஒரு புறம், மறுபுறமோ காசுக்கேற்ற கல்வி என்ற இந்த இரட்டை சூழ்நிலைகளால் வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இல்லாமல் பணம் படைத்தவருக்கு மட்டுமே பெரும்பாலான வாய்ப்புகள் என்று மாறிப்போயுள்ளன. காசுக்கேற்ற தரம் என்பதே தனியார் கல்வி நிலையங்களின் தரம் குறித்த கோட்பாடு என்பதால் அரசு விதிகளும், தேவைக்கேற்ற, காலத்திற்கேற்ற தரமும் இங்கு பொய்யாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள தரம் குறித்து அரசு எந்த வகையிலும் தலையிடாத நிலையே தற்போது உள்ளதால் பெரும்பாலும் பள்ளிகள் முதல் நிகர்நிலை பல்கலைக் கழகம் வரை குறைந்த பட்ச தரம் கூட இல்லாத வகையில்தான் செயல்படுகின்றன. பல--------- நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தரமற்றதாக உள்ளன என கண்டறிந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்க முடியவில்லை. வரம் கொடுத்த சிவன் தலையில் கை வைத்து அழிக்க நினைத்த அரக்கன் கதையைப் போன்றுதான் தனியார் கல்விநிலையங்களும். அனுமதி கொடுத்த அரசால் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ, ஏன் கேள்வி கேட்கவோ கூட இயலவில்லை.இதை வளர்ச்சி என ஆட்சியாளர்கள் கூறலாம். ஆனால் எப்படி ஏற்றுக்கொள்ள?
உயர்கல்விக்கு வங்கிக் கடன் என்ற அரசின் திட்டமும் தனியார் முதலாளிகளின் நலனுக்காகத்தான். கல்வி தர வேண்டிய அரசு அதை முதலாளிகளிடம் கொடுக்கிறது. அங்கு என்ன விலை என அரசு தலையிடாததால் தாறுமாறான விலையுயர்வு(?). பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தும் ஏற்கனவே, பள்ளிக்கல்வியில் பணம் செலவழித்தும், சராசரியாக படிக்கும் மாணவர்கள் மிக அதிகம் செலவழித்து பொறியியல் கல்வியில் சேரத்தயங்கும் பொருளாதார சூழ்நிலையில் கடன் வாங்கிப்படியுங்கள் நானே கடன் தருகிறேன் என அரசு வங்கிக்கடன் என அறிவிக்கிறது. அதாவது, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலை தான் இது, அரசு வங்கிப் பணத்தை வைத்து பொறியியல் கல்லூரி கல்லாவை நிரப்பும் சூதாட்டத்திற்கு பெயர் வங்கிக்கடன். கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான மக்கள் உள்ள போது அரசே கல்வி நிலையங்களை நடத்துவது தானே வளர்ச்சிக்கு வழி கோலும். மாறாக, தனியார் மூலதனத்தை வளர்க்க அரசு திட்டம் தீட்டுவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது.
கட்டுப்பாடற்ற, திட்டமிடப்படாத குறிப்பிட்ட வகையிலான தனியார் கல்விநிலையங்களின் பெருக்கம் காரணமாக அதிகமாகும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றொரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.மிகக்குறைந்த ஊதியத்துக்கும் தயார் என்ற போட்டி மாணவர்களிடையே அதிகம் காணப்படுவதன் பின்னணி இதுதான். ஆனால் ஊதியம் அதிகம் சம்பாதிக்கும் துறைகள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டதால் ஊதியம் குறித்து சரியான மதிப்பீடுகள் பலருக்கும் தோன்றுவதில்லை. வேலைவாய்ப்புத்தளமும். சூழ்நிலைகளும் மாறிப்போயுள்ள நிலையில் ஊதியம் உயர்வதும் இயல்பு தானே தவிர புதியதல்ல.
கல்வி வாய்ப்புகளுக்கேற்ற புதிய வேலைவாய்ப்பு சூழலை உருவாக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும். ஆனால் அரசு புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கும் நிலை யாருக்கு சாதகமானது? அரசுப்பணத்தை எடுத்து தனியார் கல்லூரிகளுக்கு தரும் அரசு, மற்றொரு புறமோ தனியார் உற்பத்தி செய்யும் மதுவை அரசுக்கடைகளில் விற்றுத்தருகிறது. தனியார் மூலதனத்தை கட்டுப்பாடற்று பெருகச்செய்வது என்ற ஒற்றை வரியே அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கையில் அரசு வேலைவாய்ப்பு என நம்புவது மூடநம்பிக்கை என்ற கருத்தே தற்போது பரவலாக உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தற்போது பயின்று வெளிவரும் மாணவர்களில் 20 சதவித மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதி உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் திரு. கணேசன் அவர்கள் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். ஆனால், உண்மையில் வேலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதத்தை விட குறைவாக உள்ள நிலையில் இதர மாணவர்களின் கனவும், உழைப்பும், பெரும் பணச் செலவும் என்னவாவது?
கல்வி என்பது வியாபாரப் பொருள் என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கான வாழும் உரிமை என்ற நிலைக்கு மாற்றப்பட்டு கல்வி, வேலை இரண்டும் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் இதில் ஒரு சம நிலை ஏற்படும். தனியார் பங்களிப்பு கூடவே கூடாது என்பதல்ல நமது நிலை. மாறாக, தேவைக்கேற்ப அரசின் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலோடு இணைந்த அளவான தனியார் பங்களிப்பு என்பதே சரியாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் விவசாயம் முதல் அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில், பரவலான அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை எட்டமுடியும். இதற்கு மற்றொரு மாற்றமும் கல்வியில் அவசியம். கல்வி சமூக உணர்வையும் ஊட்டிட வேண்டும். சமூக உணர்வே கல்வி கற்கும் நோக்கத்தின் அடிப்படையாகவும், மையமாகவும் இருக்க வேண்டும்.




ஞாயிறு, 28 அக்டோபர், 2012

MVI :அக் 29,2012 சட்டசபை முற்றுகை போராட்டம்-- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு...

MVI :அக் 29 சட்டசபை முற்றுகை போராட்டம்--
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு...

# கேளாத செவிகள் கேட்கட்டும்! பாராமுகங்கள் நம் பக்கம் திரும்பட்டும் #

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் 441 ஆவது நாள்!
தமிழக அரசே!

1. காவல் படை முற்றுகையை கைவிடு! 144 தடை உத்தரவை திரும்பபெறு!

2.மக்களின் உயிரோடு விளையாடாதே! கூடங்குளம் அணு உலை மூடு!

============================= ===========================================================================================
போராடும் மக்கள் தனித்து இல்லை என்று செயலில் காட்டுவோம்....

சென்னையை நோக்கிப் புறப்படுவோம்! கோட்டைக்கு முன்பு அணி திரள்வோம்!

- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

கேளாத செவிகள் கேட்கட்டும்! பாராமுகங்கள் நம் பக்கம் திரும்பட்டும்!
’இது எங்கள் கடல்; எங்கள் நிலம்; பேச்சிப்பாறை ஆறு எங்கள் சொத்து. கூடங்குளத்தில் அணு உலையை அனுமதிக்கமாட்டோம்’ என்ற உரிமை குரலை மதிக்காத அவை; பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் அட்டையைத் தூக்கி வீசியதைக் பொருட்படுத்தாத சபை; இன்று கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைத் தொடுத்திருக்கின்றது. இந்த சட்டசபை தான் ஜனநாயகத்தின் சின்னமா?
மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடரும் ஊரடங்கு உத்தரவு. செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் களம் இறங்கிய தருணத்திலிருந்து நடந்தேறிவரும் காவல் படைகளின் வெறியாட்டம். கண்ணீர் புகை குண்டு வீச்சு; தடியடித் தாக்குதல்; மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டே இடிந்தகரைக்குள் நுழைந்த காவல் படையின் வெறிச் செயல்கள், தேவாலயத்தில் சிறுநீர் கழிப்பது வரை போனது. கூடங்குளமும், வைராவிகிணறும், சுனாமி நகரும் கூட விட்டுவைக்கப் படவில்லை. பால், தண்ணீர், உணவுப் பொருட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மீது தேசத் துரோக வழக்கு. எல்லாவற்றுக்கும் உச்சமாக இது வரை செய்திருக்கும் இரண்டு கொலைகள்.
மணப்பாடு அந்தோணி ஜான் - அந்த வழியாக நடந்துப் போனவர். அவர் மீது துப்பாக்கிச் சூடு. அதுவும் கொலை வெறியோடு விலாவில் சுட்டக் கொடூரம்.
சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் மீனவனைக் காக்கப் போகாத கடற் படையும், விமானமும் கடலில் நின்று போராடும் மக்களை அச்சுறுத்தப் போனது. விமானத்தைத் தலைக்கருகே பறக்கவிட்டு பயங்காட்டியே இடிந்தகரை சகாயத்தைக் கொன்றுள்ளனர். இது தான் ஜனநாயகமா? இல்லை. இது அரச பயங்கரவாதமா?
காடுகளில் இருந்து பழங்குடிகளை விரட்டியடித்தது போல் இடிந்தகரை கூடங்குளம் மக்களை அப்பகுதியிலிருந்தே விரட்டியடித்து விட்டு பெரு முதலாளிகளுக்கு விருந்து வைக்கத் தயாராகி விட்டார்கள்;
ஆனால், இத்தனை தடைகளையும் தாண்டி 400 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் தொடர்கின்றது. இழப்புகளைச் சுமந்துக் கொண்டே வெல்லும் வரை போராட உறுதிக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்களும் போராட்டக் களத்தில் இணைந்து விட்டார்கள்.
சென்னை தவிர்த்த பிற பகுதியில் நிலவும் பல மணி நேர மின்வெட்டால் வஞ்சிக்கப்படும் மக்களிடம் இருந்து பொங்கி வரும் கோபத்தை அணு உலைக்கெதிராய் போராடுபவர்கள் மீது திருப்பி விடும் காங்கிரசு ஒருபுறம். போராட்டத்திற்கு கிறுத்துவ முத்திரை குத்தி மதக் கலவரத்தை தூண்டத் துடிக்கும் இந்துத்துவ கும்பல் இன்னொருபுறம். வெளிநாட்டுப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி போராட்டத்தின் நியாயத்தைக் குலைக்கும் முயற்சி மற்றொருபுறம்.
இப்போது, போராட்டத்தையும் போராடும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் தான் இருக்கின்றது. போராடும் மக்களின் மூச்சைத் திணறடித்துக் கொண்டிருக்கும் காவல் படை முற்றுகையை உடைத்தாக வேண்டும். தமிழக அரசின் போலி மெளனத்தை கலைத்தாக வேண்டும். அதற்கான போராட்டம் தான் அக் 29 நடக்கவிருக்கும் சட்ட சபை முற்றுகை போராட்டம்.
மக்களை நேசிப்பவர்கள்..தேச வளங்களைக் காக்கத் துடிப்பவர்கள்.. அநீதி கண்டு கிளர்ந்தெழுபவர்கள்.. அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்.. எத்தனை பேர் என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் கேட்டு நிற்கின்றது வரலாறு.
போராடும் மக்கள் தனித்து இல்லை என்று செயலில் காட்டுவோம்.
சென்னையை நோக்கிப் புறப்படுவோம்! கோட்டைக்கு முன்பு அணி திரள்வோம்! 
- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.   பேச - 9443184051

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ? ---அ.மு.செய்யது 

உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.
அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.
ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.
தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடன்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ன்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.

- அ.மு.செய்யது


கூடங்குளம் அணுமின் நிலையமும் தென்தமிழ்நாட்டின் பூகம்பவியலும் - ஓர் ஆய்வு/
டாக்டர் இரா.இரமேஷ்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலநடுக்கங்களும், பூமியில் இருந்து உருகிய பாறைக்குழம்புகள்வெடித்து மேலெழும்பும் நிகழ்வுகளும் பல முறை நிகழ்ந்துள்ளன. 2001 நவம்பர் 24 ஆம் தேதியன்று தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் அமைந்துள்ள சுரண்டையை அடுத்துள்ள நிலம் ஒன்றில் உருகிய
பாறைக்குழம்பு வெடித்து மேலெழும்பியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுஉலைகள் இந்த நிலவியல்சூழ்நிலைகளைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலவியல் சூழ்நிலைகளையெல்லாம் தாங்கும் அளவிற்கு இந்த உலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள் நம் அணுசக்தி விஞ்ஞானிகள்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியைச் சேர்ந்த டாக்டர். மணிமாறன் போன்ற நிலவியலாளர்கள் இந்த அணுஉலையின் பூகம்பவியல் பாதுகாப்புத்திறனை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இப்புத்தகம்மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. இவற்றைப் புரிந்து கொள்வதற்காக இவை இரண்டுடனும்தொடர்புடைய முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கிறது.
 

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் பெண்களின் கேள்வி 
கேள்வி: இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?
கூடங்குளம் வாழ் பெண்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குதுன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? 
***
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல. 
1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1989 இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து “கொல்ல வரும் கூடங்குளம்” என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். 1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும், தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1989 மே முதல் தேதியில் “தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று” என்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ் கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் 10,000-த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த 1989 போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. 1989 ஜூன் 13 வரை மருத்துவர் குமாரதாஸ் அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் 13 அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. 1989 இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி 101 தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில், அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. 1989 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது. இப்படி 25 ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.
தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகி யோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.
விடுதலை, தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம், செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ், பிரேமா நந்தகுமார், அ.ஜ.கான், புகழேந்தி, நெடுஞ்செழியன், வி.டி. பத்மனாபன், ஞாநி, நாகார்ஜுனன், ஏ.எஸ்.பன்னீர் செல்வன், சீ. டேவிட், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கார்முகில், செல்ல பாண்டியன், துறைமடங்கன், அண்டன் கோமஸ், பிரகாஷ், பாமரன், செந்தில் குமார், நீலகண்டன், குமாரசாமி, பிரபாகர், அசுரன், ஐராவதம் மகாதேவன், புருஷோத்தம், சந்தோஷ், மருத்துவர் தெய்வநாயகம், சுப. உதயகுமார் என இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமை யானதல்ல). இயக்குநர் பாலசந்தர், நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர்.
ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர், உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த 25 ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும், அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா, நீரஜ் ஜெயின், அகர்வால், க்ளாட் அல்வாரிஸ், அசின் விநாயக், அனில் சௌத்ரி, அருந்ததி ராய், எம்.வி.என்.நாயர், சுவரத ராஜு, எம்.வி.ராமண்ணா, மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட் டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி, கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும், புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப்படுத்துவதற்கு சமம், அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி, அவரைப் பார்த்து 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது? அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.
உதயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ் விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள், நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள்  தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள், இது தான் ‘ஐயோடின்’ என்று வகுப்பு  எடுக்க தொடங்கி யது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள், “அந்த ஆள கூட்டிட்டு வாங்கடா” என்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. “நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம், எங்களை வழி நடத்துங்கள்” என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.
பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம், கனிமங்கள் வெட்டி எடுத்தல், சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் வாழ்வாதாரங் களுக்காக நடத்தும் போராட்டம், நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள், நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களின், ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத் திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள்.
உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங் களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ, பத்திரிகை தர்மமம் வாழ்க!
‘கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்’ - நூலிலிருந்து.

அணுவின் கழிவும் கொல்லும் -இரா.உமா 

உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘ உயிருக்காக’ ஒரு பெரும் மக்கள் போராட்டம், தென்தமிழ்நாட்டின் வங்கக்கடல் கரையோரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுஉலைக்கு எதிராக, அமைதி வழியில் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, இடிந்தகரையிலும், கூடன்குளத்திலும் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். கடந்த செப்டம்டர் 11இல் தொடங்கிய அம்மக்களின் போராட்டம், மத்திய அரசிடம் பேசுவதற்காக, ஒருசில நாள்கள்  கைவிடப்பட்டு,  மீண்டும் இரண்டாம் கட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. கல்பாக்கம் அணுமின் நிலையம் 1984 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடன்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. அது செயல்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஆபத்தான அணு உலையை மூட வேண்டும் என்பது மக்களின் ஒற்றைக் கோரிக்கை. நாட்டின் வளர்ச்சிக் காகத்தானே இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம், பிறகேன் அதை எதிர்க்க வேண்டும், ஆபத்து எதில்தான் இல்லை. தொழிற்சாலைக் கழிவுகளால் ஆபத்தில்லையா? என்கிற கேள்வி இயல்பாகக் கேட்கப்படுகிறது. அதிலும் ஆபத்து  இருக்கிறது. ஆனால் கழிவுகளைச் சுத்திகரித்தல் என்பதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். ஆனால் இலட்சக் கணக்கான ஆண்டுகளானாலும் அழியாத அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்வது? பீப்பாய்களில் அடைத்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துவிடலாமா?
அணு உலைகளில் பல வகைகள், பல்வேறு தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் என விஞ்ஞான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நாட்டின் மின் தேவையை சரிசெய்வதற்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்கிறது இந்திய அரசு. ஆனா0ல், ஏறத்தாழ 25 ஆண்டுகள், 100 கோடிகளை செலவிட்டாலும், நாட்டின் மொத்த மின்தேவையில் 9 விழுக்காட்டைக் கூட நிறைவு செய்ய முடியாது இந்த அணுமின் நிலையங்களால் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அரசின் உண்மையான  தேவை மின்சார உற்பத்தி அன்று, அதன் உபரிப் பொருளாகக் கிடைக்கும் பூளுட்டோனியமே என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம். புளுட்டோனியம் என்ன அவ்வளவு பெரிய பூதமா என்றால், ஆம் மனிதர்களை உயிரோடு விழுங்கும் பூதத்திற்கு உயிர் கொடுப்பது அதுதான். அணுகுண்டு தயாரிப்பில் புளுட்டோனியம் முக்கிய இடத்தைப் பெறுகிற காரணத்தால்தான், அணுஉலைகளுக்காக மாரடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
உலக அரங்கில் தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசிற்கும், ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களின் உயிரும், வாழ்வும் ஒரு பொருட்டாகப் படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் கூடன்குளம் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு காட்டும் பிடிவாதப்போக்கு. தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “ பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டத்தில் அரசும், மக்களும் ஒரே நிலையில்தான் உள்ளனர் ” என்று கூசாமல் சொல்கிறார் . வாழ்வா தாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த மக்களிடம் மிச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது? அணுக் கதிச் வீச்சின் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்து, அவற்றின் ஆற்றல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத் திருக்கின்றன. சீனா இனிமேல் புது அணுஉலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஆனால், சீனப் பெருமை பேசும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் தா. பாண்டியன், ‘ மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் ’ என்று கவலைப்படுகிறார்.
ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினரின் காட்டுமிராண்டித் தனத்தி னாலும், அதைக் கண்டுகொள்ளாத இந்திய அரசின் கையாலாகாத்தனத் தினாலும், கரணம் தப்பினால் மரணம் என்றாகிவிட்டது தமிழக மீனவர்களின் வாழ்வு. இதில், குப்புறத்தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக அணுமின் நிலையத்தை நிறுவி அவர்களின் தலைமுறையையே தலைதூக்க விடாமல் செய்யத் துடிக்கிறது மத்திய அரசு. அணுமின் நிலையக் கழிவுநீர் கடலில்தான் விடப்படும். ஆறுகள்தான் கடலில் சென்று கலக்க வேண்டும். அணுக்கழிவுகள் கலக்கலாமோ?
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் அணுமின் நிலையம் தேவையில்லை என்கின்றன. ஒன்றியப் பொறுப்பாளரைக் கூட அனுப்பாத ஜெயலலிதா, ஓட்டு கேட்பதற்காகத் தூத்துக்குடிக்குப் போகநேர்ந்ததால், அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக்         கூட்டத்தில், ‘ நான் மக்கள் பக்கம்’ என்று  கூறியிருக்கிறார். அதை முதலமைச்சராகச் சொன்னாரா அல்லது அ.தி.மு.க. பொதுச்செயலாளராகச் சொன்னாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காங்கிரசைச் சேர்ந்த தங்கபாலு, மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அவர்களின் சந்தேகத்தை தீர்த்துவிட்டுப் பிறகு பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கின்றார்.
அந்த மக்கள் என்ன சந்தேகத்தை அரசிடம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அணுமின் நிலையப் பணி இடங்களில் எங்களுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவீர்கள் என்று கேட்டார்களா?  விபத்துகள் ஏற்பட்டால், எவ்வளவு இழப்பீடு தருவீர்கள் என்று கேட்டார்களா? வாரிசு அடிப்படையில் வேலை கொடுப்பீர்களா என்று கேட்டார்களா? இது எதையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஒரே கோரிக்கை, அணுமின் நிலையம் தேவையில்லை, அதை மூட வேண்டும் என்பதுதான். அணு உலைகள் பாதுகாப்பானவை என்னும் பல்லவியை, ஜப்பானின் புகு´மோவிற்குப் பிறகும் பாடிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
உருட்டி உருண்டையாக்கி அணுகுண்டாகப் போட்டால்தான் அழிவு என்பதில்லை. அணுவின் கழிவு கூட மனித குலத்தை அழித்துவிடும். 1945இல் ஹிரோசிமோவிலும், நாகாசாகியிலும் விதைக்கப்பட்ட விபரீதம் இன்னும் தொடர்வதை அறியாதவர்களா நாம்? போபால் விசவாவு கசிவின் வீரியத்தை உணராதவர்களா நாம்? மேரி க்யூரி, இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க விஞ்ஞானி. யுரேனியம், பொலேனியம் என்னும் அவருடைய கண்டுபிடிப்புகள் கதிர் வீச்சு மூலகங்கள்.   அவருடைய ஆய்வு முழுவதும் கதிரியக்கம் பரவியிருக்கும் ஆய்வுக் கூடத்தில்தான். கதிர் வீச்சின் தாக்கத்தால், கண் பார்வை பாதிக்கப்பட்டு,  ஏற்பட்ட பெர்னிசியஸ் அனீமியா என்னும் நோயினால் அவர் இறந்தார் என்கிறது வரலாறு. அவர் அன்று பயன்படுத்திய குறிப்பேடுகளில் இன்றளவும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை உண்மைகளில் ஒன்று கூடவா ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை?
மின்சாரம்தான் நோக்கம் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அவற்றைப் பரிசீலிப்பதுதானே? வெப்ப நிலப்பகுதியான இந்தியாவில், சூரியசக்தியை முறையாகப் பயன்படுத்தி மின்சாரம் பெறலாம்தானே! கையில் இருக்கிற வெண்ணெயை மறந்துவிட்டு நெய்க்கு அலையறான் பாரு என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இந்திய அரசின் செயலும். வெறும் பொருளாதார வல்லுனராக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் நலனில் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் ஏமாந்து கொண்டிருக்கிறது! -அன்டன் கோம்ஸ்

கூடங்குளம் பகுதி மக்களின் அச் சத்தை போக் காதவரை அணு உலையை திறக்கக் கூடாது என்று தீர் மானம் போட்ட தமிழக அரசு, தற்போது அணு உலையைத் திறக்க அனுமதியளித்திருக்கி றது. அப்பகுதி மக்களின் அச் சத்தைப் போக்கி விட்டதா தமிழக அரசு? கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?
இந்தக் கேள்விகளை, கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1988ம் ஆண்டிலிருந்தே களத்தில் நிற்பவரும், அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்காக ஆதரவு சக்திகளை திரட்டி ஒருங்கிணைத்து வருபவருமான அன்டன் கோம்ஸ் சிடம் முன் வைத்தோம்.
“அணு உலை பற்றிய அச் சத்தைப் போக்காமல் காவல் துறை, இராணுவம் போன்ற பாதுகாப்புப் படையைக் கொண்டு வந்து மேலும் அச்சத் தைக் கூட்டியுள்ளது தமிழக அரசு. அடக்குமுறை மூலம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்த அச்சத்தை எதிர்கொள்ளும் மன வலிமையை மக்கள் பெற்றி ருக்கிறார்கள்.
இடிந்தகரை கிராமத்தை ஏறக் குறைய தனியாக துண்டித்தபோ தும், அத்தனை கடற்கரை கிரா மங்களிலிருந்தும் மக்கள் கொடுக் கும் அபரிதமான ஆதரவு அந்த மன வலிமையை ஏற்படுத்தியுள் ளது.
இந்த ஜனநாயக அறவழிப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று அரசு மனப்பால் குடிப் பது முட்டாள்களின் சொர்க்கத் தில் இருப்பதைப் போன்றது தான்!
கூடங்குளம் போராட்டத்தை மேலும் ஒடுக்க, ஒடுக்க இந்தியா வின் ஒட்டுமொத்தமான அணு உலைக்கு எதிரான போராட்டம் இன்னும் வீரியமடையும். மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.
இப்பொழுது இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்க லாம். ஆனால் இந்த மக்கள் போராட்டம் அணு உலையை நிச்சயம் விரட்டியே தீரும்.
அரசு அணு உலை திறக்கும் முடிவை எடுக்கலாம். ஆனால் மக்கள் அடுத்தப் போராட்ட வியூ கத்தை வகுப்பதில் உறுதியாய் இருக்கிறார்கள். எந்த தனி நபரை நம்பியோ, தனி நபரை அசிங்கப் படுத்தியோ, வழக்குப் போட்டோ இந்தப் போராட்டத்தில் அரசு வெற்றி பெற முடியாது.
இது மக்கள் போராட்டம் என் பதை அரசாங்கம் புரிந்து கொள்ள úண்டும். இது தனி நப ரால் நடத்தப்படும் போராட்ட மல்ல. இதற்கு 25 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஆக, 25 ஆண்டு காலமாக அணு உலை எதிர்ப்பை ஒடுக்க முடியாத அரசு, எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் ஒடுக்க முடியாது. இந்தப் போராட்டம் வெற்றி பெறும். ஆனால் அர சுக்கு தற்காலிக வெற்றி என்று அரசாங்கம் ஏமாந்து கொண்டி ருக்கிறது.
- ஃபைஸல்

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் --பெரியார் முழக்கம் செய்தியாளர் 

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டில் மக்கள் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
• மனித குலத்திற்கு எதிரான அணுசக்தி எனும் பேராபத்திற்கு எதிராக கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை இம்மாநாடு உயர்த்திப் பிடிக்கிறது. கூடங்குளம் அணுஉலையைத் திறக்க விடாமல் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து இயக்கங்களும் உறுதியாகத் துணை நிற்கும். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அணி திரள வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
• நிலவி வரும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்களின் அளவற்ற சுமையைக் குறைக்கத்தக்க வகையில் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கோரிப் பெற வேண்டும் எனவும், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.
• அதிகரித்து வரும் மின் தேவையை நீக்க சூரிய ஒளி, காற்றாலை, சிறிய மின்னுற்பத்தித் திட்டங்கள் மற்றும் இயற்கை வளம் சார்ந்து ஆபத்தில்லா மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகள் இருந்தும் அணு வல்லரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து தமிழக மக்களை பலிகொடுக்க துணிந்த மத்திய காங்கிரஸ் அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• சமரசமற்ற கூடங்குளம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தொய்வின்றி ஆதரித்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு அமைப்பு களுக்கும் இம்மாநாடு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிற கட்சி களும் அணுஉலையை எதிர்த்து நிற்கும் கொள்கையைத் தங்களது செயல் திட்டத்தில் இணைத்து மக்களை ஒருங்கிணைக்குமாறு இம்மாநாடு கோருகிறது.
• தமிழகத்தில் மின்உற்பத்தி போதுமான அளவு இருந்தும், தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களின் மனப்போக்கை தந்திரமாக திசை திருப்பும் காங்கிரசு மற்றும் இந்துத்துவ சக்திகளை வன்மையாகக் கண்டிப்ப தோடு உண்மைகளையும் ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் முன் வைத்து இச்சதியினை முறியடிக்கவும் இம்மாநாடு சபதமேற்கிறது.
• தற்பொழுது தனியாரிடம் விடப்பட்டுள்ள மின் உற்பத்தி, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதால், மக்களின் அடிப்படை சேவை எனும் கோட்பாட்டிற்கேற்ப மின் உற்பத்தியை முழுமையாக அரசுடைமை ஆக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு மிகுந்த பலன் ஏற்படும். எடுத்துக்காட்டாக காற்றாலை மின் உற்பத்தியை தனியாரிடமிருந்து அரசுடைமை ஆக்கினால் கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட பனிரெண்டு மடங்கிற்கும் அதிகமான மின்சாரத்தைப் பெற முடியும். எனவே மின் உற்பத்தியாளர் தனியார் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசு, தமிழக மக்களின் வாழ்வுக்கும் வளாச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் மின் உற்பத்தி மற்றும் வினியோக உரிமையை மாநில உரிமையாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வேண்டுகிறது. மேலும தமிழகத்திலிருந்து மத்திய மின் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் குறைவான மின்சாரமே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படு வதால் தமிழகத்திலுள்ள மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் உடைமை ஆக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• தனியார் பெரு நிறுவனங்களுக்கு அளித்துவரும் தடையற்ற மின்சாரத்தை தடுத்து, பொது மக்கள், சிறு/குறு தொழிற்கூடங்கள், விவசாயம், பள்ளி, மருத்துவமனை போன்ற மக்கள் தேவை களுக்காக மின்சாரத்தை அதிக அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் சிறு, குறு உற்பத்தி யாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஜெனரேட் டருக்கான டீசலையும், சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களையும் குறைவான மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
•              1994 திருத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலை அமைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகளின் குழுக்கள், கூடங்குளம் மக்களையும் போராட்ட குழுவினரின வல்லுநர் குழுவையும் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்சை யாக அறிக்கை சமர்ப்பிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• கூடங்குளம் அணுஉலை குறித்து தற்பொழுது ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழு, மக்கள் விரோதப் போக்கோடு செயல்படுவதோடு, மக்களின் கேள் விகளை எதிர்கொண்டு அவர்களது அச்சத்தைப் போக்காமல், அரசுக்குத் தவறான வழிகாட்டுதல் கொடுப்பதால் இக்குழுவை உடனடியாக கலைத்திட ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டு கிறது.
• கூடங்குளம் அணுஉலை குறித்த 3, 4, 5, 6 ஆகிய ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் அணுஉலை கூடவே கூடாது என வலியுறுத்திய பிறகும், அங்குள்ள கிராம சபைகள் அணு உலைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக கூடங்குளத்தை இயக்க மத்திய அரசு தீர்மானித் திருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
• போராட்டக் குழுக்களின் மீது உண்மைக்குப் புறம்பாக போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப  பெற வேண்டும். மேலும் போராடும் மக்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் உண்மைக்குப் புறம்பான அரசு விளம் பரங்கள் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
• மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான பாதுகாப்புப் படை ஆகியவற்றைப் பயன்படுத்தி போராடும் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
• கல்பாக்கம் அணுஉலைப் பகுதியில் அம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேர்மையான, வெளிப்படையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

MVI:- தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!-- கோவை. சா.காந்தி

by Srithar Thamizhan on Friday, 19 October 2012 at 19:41 ·
தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்
று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.
கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.
இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.
2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்
கோவை. சா.காந்தி,
9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

http://www.youtube.com/watch?v=E2-X2mShLRw&feature=share