தமிழ்நாட்டில் தமிழ்-- பா.இரா.தமிழ்நன்
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த மாபெரும் உண்மை ஆனாலும் இதற்குத் தமிழ்நாடு என்றுதான் பெயர். நம் ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்தாமல் நடுவில் (மத்தியில்) தமிழ் ஆட்சி மொழி என்றவாறு நகைச்சுவை ஊட்டுவார்கள்.
பிறமொழியில் பிறந்து தமிழுக்குத் தொண்டு செய்த உலக அறிஞர்கள் உண்டு. இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியில் பிறந்து பிற மொழிக்குத் தொண்டு செய்கிறார்கள். அதாவது சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை அடையாளமாகத் தூக்கித் திரிகிறார்கள். சமற்கிருதம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழை அரித்த கரையான். பின் ஒவ்வொரு பிற இனத்தவர்களின் ஆட்சியின் போதும் அவர்கள் மூலம் நுழைந்த சொற்கள் இன்று வரை நம்மைத் தாக்கி வருகிறது.
தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை. சமற்கிருதம், ஈப்ரு, அரபு, உருது போன்ற மொழிகளில் பெயர் கொள்கின்றனர். அதன் மூலம் தமிழைக் கொல்கின்றனர். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில்தான் பெயரிட வேண்டும் என்ற உணர்வும் தமிழர்களிடம் இல்லை. பெயர்தான் இனத்தின் அடையாளம். இரஷ்யா போன்ற சில நாடுகளில் அந்த அரசே அந்த மொழிக்குரிய பெயர் பட்டியலைத் தந்து அதில்தான் பெயரிட வேண்டும் என்று சட்டமியற்றி உள்ளது. இங்குத் தமிழில் பெயர் வைத்தால் கணையாழி (மோதிரம்) அளிக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுமை வேறு.
அடுத்து தமிழர்களின் கல்வியும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு ஆங்கிலத்தில் படிப்பது என்பது வேறு. நாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படிப்போம். அனைத்தையும் தமிழிலேயே படிப்போம். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அவரவர் தாய்மொழிகளில்தான் கல்வி கற்கின்றனர். நம் கண் முன்னே அழிக்கப்பட்ட ஈழத்திலும் அனைத்தும் தாய்மொழியிலேயே இருந்தது. அதனால்தான் அந்தப் போராளிகளும் உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கூட கண்டுப்பிடித்தார்கள். அங்கு மருத்துவமும் தமிழில்தான் இருந்தது. நமக்கு தெரிந்து அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில்தான் ஆங்கிலம் எங்கும் இருக்கிறது.
பாவேந்தர் ஓர் இரவில் எழுதியது ‘தமிழியக்கம்’ எனும் நூல். அதில் தமிழ்நாட்டில் தமிழ் எதிலும் இல்லாத கொடுமையைத் தமிழ்ச் சுவையுடன் படைத்திருப்பார். அவருடைய வருத்தம் அவர் மறைந்தும் அப்படியேதான் உள்ளது. ஆண்டுத்தோறும் அவர் சிலைக்கு மட்டும் மாலை போடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பொருட்களை உலக சந்தைக்குக் கொண்டு வரும் போது அவர்களுடைய தாய் மொழியில்தான் கொண்டு வருகிறார்கள் என்பதைத் தமிழர்கள் நினைவுக் கொள்ள வேண்டும்.
இன்னொரு கொடுமை என்னவென்றால் எதையும் இறக்குமதி செய்யும் குணம் தமிழர்களிடம் நிறைய உண்டு. மேலை நாட்டில் குளிர் பகுதிகளில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இங்கு நம்மவர்கள் அப்படியே இறக்குமதி செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குளிர் பகுதிகளில வாழ்வதால் குப்பாயம் (Coat) அணிந்தார்கள். இங்கு நம் தமிழர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலிலும் குப்பாயம் (Coat) அணிகிறார்கள். அதே போன்றுதான் கால்களில் மூடணி (Shoe) அணிவதும்.
இப்போது மம்மி டாடி பண்பாடு மிகுதியாய் ஆகிவிட்டது. குழந்தைகள் அம்மா அல்லது அப்பா என்று விளித்தால் உடனே பெற்றோர்கள் அவர்களை மருட்டி மம்மி டாடி எனப் பழக்கப்படுத்துகிறார்கள்.
நம்முடைய இசை ‘சங்கீத’மானது. நமது நாட்டியம் ‘பரத’ நாட்டியம் ஆனது. ஊர் பெயர்கள் பல சமற்கிருதம் சுமந்துள்ளது. நம்முடைய ஓகக் கலை ‘யோகாசனம்’ எனும் பெயரில் சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டது. இவைகள் தானாகச் சமற்கிருதத்தைச் சுமக்கவில்லை இவைகளின் மேல் அது ஏற்றப்பட்டது.
சுழியைப் பயன்படுத்திய தமிழர்களைப் புறந்தள்ளி அதை ‘இந்தியர்கள்’ கண்டுபிடித்ததாய் வெட்கம் இல்லாமல் பெருமை பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் பூஜ்யம் என்று பெயரிட்டு நம்மைச் சுழிக்குள் அடக்கிவிட்டார்கள்.
இங்கு இரண்டு தமிழர்கள் பேசும் போது ஒன்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலத்தில் பேசுகிறார்கள். கூடவே உலக மொழிகளை அவர்கள் அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆங்கிலக் கலப்பைப் பற்றிதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். பிற மொழிகளின் கலப்பைப் பற்றி அறிய ஆர்வம் இல்லை அதை நீக்க முயற்சியும் இல்லை. எதையாவது கூறினால் தூயத் தமிழ் என்பார்கள் தனியாக அழுக்குத் தமிழ் என்று ஒன்று இல்லை. தமிழ் மற்றும் பிற மொழி அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. கடும் மருத்துவப் (தீவிரச் சிகிச்சை) பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
உலக நாடுகள் தமிழின் பெருமையைப் பேசுகின்றன. உலக மக்களும் தமிழின் பெருமையை அறிய முனைகிறார்கள். தமிழர்கள் தங்கள் பெருமையைக் கேட்க கூட விரும்பவில்லை. தமிழர்கள் மிகுதியாக வாழும் உலக நாடுகள் சிலவற்றில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் வானூர்தி அறிவிப்புகள் கூட தமிழில் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து மதுரை போகும் வானூர்திக்குக் கூட தமிழ் அறிவிப்பு இல்லை.
உலகின் மிக உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே தமிழ் இருப்பதாய்க் கூறுகிறார்கள். இங்கு மிக உயரத்தில் இருந்து தமிழ் விழுந்து காலம் ஆகிவிட்டது.
இனி தமிழ்நாடு என்பதற்கு உண்மையான பொருளை நாம் ஏற்படுத்துவோம்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
என்றார் பாவேந்தர்.
நன்றி
ஆக்கம் -பா.இரா.தமிழ்நன்