வெள்ளி, 23 டிசம்பர், 2011

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா?

தமிழ்நாட்டில் தமிழ்-- பா.இரா.தமிழ்நன்


தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த மாபெரும் உண்மை ஆனாலும் இதற்குத் தமிழ்நாடு என்றுதான் பெயர். நம் ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்தாமல் நடுவில் (மத்தியில்) தமிழ் ஆட்சி மொழி என்றவாறு நகைச்சுவை ஊட்டுவார்கள்.


பிறமொழியில் பிறந்து தமிழுக்குத் தொண்டு செய்த உலக அறிஞர்கள் உண்டு. இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியில் பிறந்து பிற மொழிக்குத் தொண்டு செய்கிறார்கள். அதாவது சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை அடையாளமாகத் தூக்கித் திரிகிறார்கள். சமற்கிருதம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழை அரித்த கரையான். பின் ஒவ்வொரு பிற இனத்தவர்களின் ஆட்சியின் போதும் அவர்கள் மூலம் நுழைந்த சொற்கள் இன்று வரை நம்மைத் தாக்கி வருகிறது.

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை. சமற்கிருதம், ஈப்ரு, அரபு, உருது போன்ற மொழிகளில் பெயர் கொள்கின்றனர். அதன் மூலம் தமிழைக் கொல்கின்றனர். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில்தான் பெயரிட வேண்டும் என்ற உணர்வும் தமிழர்களிடம் இல்லை. பெயர்தான் இனத்தின் அடையாளம். இரஷ்யா போன்ற சில நாடுகளில் அந்த அரசே அந்த மொழிக்குரிய பெயர் பட்டியலைத் தந்து அதில்தான் பெயரிட வேண்டும் என்று சட்டமியற்றி உள்ளது. இங்குத் தமிழில் பெயர் வைத்தால் கணையாழி (மோதிரம்) அளிக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுமை வேறு.

அடுத்து தமிழர்களின் கல்வியும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு ஆங்கிலத்தில் படிப்பது என்பது வேறு. நாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படிப்போம். அனைத்தையும் தமிழிலேயே படிப்போம். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அவரவர் தாய்மொழிகளில்தான் கல்வி கற்கின்றனர். நம் கண் முன்னே அழிக்கப்பட்ட ஈழத்திலும் அனைத்தும் தாய்மொழியிலேயே இருந்தது. அதனால்தான் அந்தப் போராளிகளும் உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கூட கண்டுப்பிடித்தார்கள். அங்கு மருத்துவமும் தமிழில்தான் இருந்தது. நமக்கு தெரிந்து அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில்தான் ஆங்கிலம் எங்கும் இருக்கிறது.

பாவேந்தர் ஓர் இரவில் எழுதியது ‘தமிழியக்கம்’ எனும் நூல். அதில் தமிழ்நாட்டில் தமிழ் எதிலும் இல்லாத கொடுமையைத் தமிழ்ச் சுவையுடன் படைத்திருப்பார். அவருடைய வருத்தம் அவர் மறைந்தும் அப்படியேதான் உள்ளது. ஆண்டுத்தோறும் அவர் சிலைக்கு மட்டும் மாலை போடப்படுகிறது.

ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பொருட்களை உலக சந்தைக்குக் கொண்டு வரும் போது அவர்களுடைய தாய் மொழியில்தான் கொண்டு வருகிறார்கள் என்பதைத் தமிழர்கள் நினைவுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் எதையும் இறக்குமதி செய்யும் குணம் தமிழர்களிடம் நிறைய உண்டு. மேலை நாட்டில் குளிர் பகுதிகளில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இங்கு நம்மவர்கள் அப்படியே இறக்குமதி செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குளிர் பகுதிகளில வாழ்வதால் குப்பாயம் (Coat) அணிந்தார்கள். இங்கு நம் தமிழர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலிலும் குப்பாயம் (Coat) அணிகிறார்கள். அதே போன்றுதான் கால்களில் மூடணி (Shoe) அணிவதும்.

இப்போது மம்மி டாடி பண்பாடு மிகுதியாய் ஆகிவிட்டது. குழந்தைகள் அம்மா அல்லது அப்பா என்று விளித்தால் உடனே பெற்றோர்கள் அவர்களை மருட்டி மம்மி டாடி எனப் பழக்கப்படுத்துகிறார்கள்.

நம்முடைய இசை ‘சங்கீத’மானது. நமது நாட்டியம் ‘பரத’ நாட்டியம் ஆனது. ஊர் பெயர்கள் பல சமற்கிருதம் சுமந்துள்ளது. நம்முடைய ஓகக் கலை ‘யோகாசனம்’ எனும் பெயரில் சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டது. இவைகள் தானாகச் சமற்கிருதத்தைச் சுமக்கவில்லை இவைகளின் மேல் அது ஏற்றப்பட்டது.

சுழியைப் பயன்படுத்திய தமிழர்களைப் புறந்தள்ளி அதை ‘இந்தியர்கள்’ கண்டுபிடித்ததாய் வெட்கம் இல்லாமல் பெருமை பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் பூஜ்யம் என்று பெயரிட்டு நம்மைச் சுழிக்குள் அடக்கிவிட்டார்கள்.

இங்கு இரண்டு தமிழர்கள் பேசும் போது ஒன்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலத்தில் பேசுகிறார்கள். கூடவே உலக மொழிகளை அவர்கள் அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆங்கிலக் கலப்பைப் பற்றிதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். பிற மொழிகளின் கலப்பைப் பற்றி அறிய ஆர்வம் இல்லை அதை நீக்க முயற்சியும் இல்லை. எதையாவது கூறினால் தூயத் தமிழ் என்பார்கள் தனியாக அழுக்குத் தமிழ் என்று ஒன்று இல்லை. தமிழ் மற்றும் பிற மொழி அவ்வளவுதான்.

தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. கடும் மருத்துவப் (தீவிரச் சிகிச்சை) பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.

உலக நாடுகள் தமிழின் பெருமையைப் பேசுகின்றன. உலக மக்களும் தமிழின் பெருமையை அறிய முனைகிறார்கள். தமிழர்கள் தங்கள் பெருமையைக் கேட்க கூட விரும்பவில்லை. தமிழர்கள் மிகுதியாக வாழும் உலக நாடுகள் சிலவற்றில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் வானூர்தி அறிவிப்புகள் கூட தமிழில் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து மதுரை போகும் வானூர்திக்குக் கூட தமிழ் அறிவிப்பு இல்லை.

உலகின் மிக உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே தமிழ் இருப்பதாய்க் கூறுகிறார்கள். இங்கு மிக உயரத்தில் இருந்து தமிழ் விழுந்து காலம் ஆகிவிட்டது.

இனி தமிழ்நாடு என்பதற்கு உண்மையான பொருளை நாம் ஏற்படுத்துவோம்.

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

என்றார் பாவேந்தர்.

நன்றி

ஆக்கம் -பா.இரா.தமிழ்நன்


செவ்வாய், 20 டிசம்பர், 2011

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்

பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்
புதியமாதவி மும்பை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்காற்றிய பெண்களின் எண்ணிக்கை நமக்கு வியப்பூட்டும். அமெரிக்க நாட்டின் படையில் மட்டும் பெண்கள்:

Eelam women தரைப்படை - 140,000
கடற்படை - 100,000
கப்பல்துறை - 23,000
கடற்கரை கண்காணிப்பு - 13,000
விமானப்படை - 1,000
தரைப்படை, கப்பற்படை செவிலியர் - 74,000

1970 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இராணுவ அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. சாதாரண அரசு ஊழியர்களாகவே அமெரிக்க அரசு அவர்களைப் பட்டியலிட்டது.

போரும் போர்க்களமும் முழுக்க முழுக்க ஆண் கட்டுப்பாட்டுக்குரியதாகவே இன்றுவரை இருப்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல.. போர்நிறுத்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், அமைதிக் குழுக்கள் இத்தியாதி அனைத்தும் ஆண்களின் ஆளுமைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இன்றுவரை எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெற்றுள்ளதாக சரித்திரமில்லை.

போரின் பாதிப்புகளை அதிகமாக அனுபவிக்கும் பெண்ணினத்தின் அனுபவங்களும் அதைப் பற்றிய பதிவுகளும் மிகக்குறைவு. பெயர் தெரியாத ஜெர்மானியப் பெண்ணின் நாட்குறிப்பு (An Anonymous Woman Diarist in Berlin) உலக யுத்தத்தில் ஜெர்மானியப் பெண்களின் மனிதாபிமான செயல்களைப் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ரஷிய வீரர்களால் தங்கள் மனைவி மக்கள் வன்கொடுமைக்குள்ளானபோது ஜெர்மானிய வீரர்கள் தங்கள் உயிர் காக்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். பெர்லின் நகரத்து ஜெர்மானியப் பெண்கள் தான் தங்கள் பெண்களைப் பாதுகாத்தார்கள் என்றும் பதிவு செய்துள்ளது.

ஜெர்மானிய ஹிட்லரின் நாசிப்படை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் தங்கள் வாரிசுகளை அனாதைகளாக விதைத்தார்கள் என்பது சரித்திர உண்மை. 1940 மே மாதம் முதல் 1944 டிசம்பர் வரை ஜெர்மானிய வீரர்கள் பிரான்சு நாட்டைக் கைப்பற்றி இருந்தபோது ஜெர்மானிய வீரர்களுக்கு பிரான்சு பெண்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்றொப்ப 200,000. அதுபோலவே 1940-45களில் டென்மார்க் நாட்டை கைப்பற்றியிருந்தபோது பிறந்த குழந்தைகள் 6000 முதல் 8000. நெதர்லாந்தில் 1935-45களில் பிறந்த குழந்தைகள் 50,000. ரஷியாவில் மட்டும் ஜெர்மன் நாசிப்படை வல்லாங்கு செய்த அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 200,000 மேலிருக்கும்.

நாசிப்படை மட்டும் இதைச் செய்யவில்லை. உலக யுத்தம் முடிந்தபின் நேச நாடுகளின் படைவீரர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஜெர்மானிய மண்ணில் இதே கொடுமையைத்தான் செய்தார்கள். ஜெர்மன் தாய்கள் பெற்ற குழந்தைகளில் 36334 அமெரிக்கனுக்கும், 10188 பிரான்சு காரனுக்கும் 8397 பிரிட்டன்காரனுக்கும் 3105 ரஷியனுக்கும் 1767 பெல்ஜியநாட்டவனுக்கும் பிறந்தவர்கள். தகப்பனின் நாட்டு அடையாளமும் இல்லாமல் பிறந்தவர்கள் 6829. அதுமட்டுமல்ல, ஜனவரி 1946வரை அமெரிக்க வீரன் விரும்பினாலும் கூட தன் எதிரி நாட்டில் வாழும் தன் வாரிசுகளுக்கு வாரிசுரிமையை வழங்க முடியாது என்று அரசாங்க சட்டமே இருந்தது. இன்றுவரை தங்கள் தந்தையரின் வேர்மூலம் தேடி அலையும் அவர்களின் கதை மனித இனத்தின் ஒரு சோக வரலாறு.

பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!

போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)

அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.

போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.

மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்..

கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.

கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?

விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!

என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!

(ஈழக்கவிஞர் ஒளவை)

- புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php

செவ்வாய், 13 டிசம்பர், 2011

நான்கு பேரை கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நான்கு பேரை (இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்) கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்

நாள் 26.11.2011

அனுப்புதல்:-
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்

பெறுநர்:-

காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்

ஐயா,

பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.



இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி

(தகவல் :
இரா.முருகப்பன் http://iramurugappan.blogspot.com/2011/11/blog-post.html
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் )


இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்

(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்
புதியமாதவி
====
தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர்.
தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்
சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு..
இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும்
15 இலட்சம் தமிழர்களின் இளைய தலைமுறை குறித்த அதிர்ச்சி தரும்
செய்திகள் தமிழ் மொழி, இன உணர்வாளர்களின் கவனிப்புக்கு
வரவேண்டும். இந்தப் பிரச்சனை மும்பை மண்ணுக்கு மட்டும் உரியதல்ல.
இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின்
பிரச்சனை. உலகமெங்கும் பரந்து விரிந்து அந்த மண்ணிலேயே
தங்கள் வாழ்க்கையைத் தொடரும் தமிழர்களின் பிரச்சனை.
மும்பையில் அண்மையில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் கிடைத்த
உண்மைத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைத்தருகின்றன.
ஏப்ரல் 1 முதல் 8 வரை மும்பை தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாட்டின்
மிகச்சிறந்த பதிப்பகங்கள் 40 பேர்கள் மும்பை வந்திருந்தார்கள்.
1985க்குப் பிறகு மும்பையில் நடைபெறும் புத்தகக்காட்சி என்பதால்
மும்பையின் வாசகர்களைப் பற்றி அறியும் முதல் வாய்ப்பாகவும்
இந்த நிகழ்வு அமைந்தது.
கள்ளிக்காட்டின் இதிகாசத்தை வாங்கினார்கள். ஆனால் யாரும் கவிஞர்
வைரமுத்துவின் கவிதை தொகுப்பினை வாங்கவில்லை.
சுஜாதாவின் புத்தகங்கள், கல்கி, லட்சுமியின் புத்தகங்கள் விற்றன.
ஆன்மிகம் பற்றிய புத்தகங்கள், சித்தர்களின் வரலாறு வாங்கியவர்கள்
சிலர். ஒன்றிரண்டு க. ப. அறவாணன், அப்பாத்துரையார் புத்தகங்கள்,
சில சைவசித்தாந்த பதிப்பின் சொல்லகராதிகள் வாங்கப்பட்டன.
நவீன இலக்கியம் குறித்த எந்தப் பாதிப்புகளுமில்லை.
ஆட்டோ சங்கரின் வரலாறும் வீரப்பனின் வரலாறும் வாங்கினார்களே தவிர
சோளகர்த்தொட்டியைப் பற்றி அறிந்திருக்க வில்லை.
இதற்கெல்லாம் மும்பை தமிழர்களைக் குறை சொல்லவும் முடியாது.
வெகுஜனப் பத்திரிகைகளின், ஊடங்களின் சமூகத் தொண்டில் சீரழிந்துப்போன
சிந்தனைகளின் அவலம் இது.
ஜெயலட்சுமியும் செரினாவும் புத்தகம் போட்டிருந்தால் அதுவேகூட
அதிகம் விற்றிருக்கலாம். நல்ல வேளை அப்படி எதுவும் இன்னும்
நடந்துவிடவில்லை.
எந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டன என்பது ஏற்படுத்திய
கவலையைவிட எந்த வயதினர் வந்து புத்தகங்களைப் பார்த்தார்கள்,
வாங்கினார்கள் என்பது மிகப் பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வு நேரத்தில் புத்தகக்காட்சி நடந்ததால் கூட்டம் வரவில்லை
என்பது ஒருபக்கமிருந்தாலும் இளைஞர்கள் யாரும் புத்தகங்களை
காட்சிப் பொருளாகப் பார்க்கவும் வரவில்லை.
பதிபகத்தாருடன் ஏப்ரல் 6ல் புக்கார் (PUKAR ORG) அமைப்பின் ஓர்
ஆய்வுக்காக நேர்க்காணல் நடத்தி சில புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
15 இலட்சம் பேர்கள் இருக்கும் மும்பையில் புத்தகக் காட்சிக்கு வந்தவர்களின்
எண்ணிக்கை 500 தாண்டவில்லை.
வந்தவர்கள் அனைவரும் 70 விழுக்காடு 60 வயதினைத் தாண்டிய
முதியவர்கள். 20 விழுக்காடு 35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
10 விழுக்காடு மும்பையில் இருக்கும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள்.
அதுவும் மும்பையில் மட்டும் 65 தமிழ் அமைப்புகள் இருக்கின்றன!!.
இந்தப் புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் இன்னும் பத்து வருடங்கள்
கழித்து மும்பையில் புத்தகம் வாசிப்பவர்கள் 50 வயதுக்காரர்கள்தான்.
இந்த 15 இலட்சம் தமிழர்களின் இல்லங்களில் வளர்ந்து வரும் கிட்டத்தட்ட
25 இலட்சம் தமிழர்கள் தமிழ் புத்தகங்கள் வாசிக்கப்போவதில்லை.
இதிலும் 20 இலட்சம் பேர்கள் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களாகவே
இருப்பார்கள். தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் இன்று மும்பையின்
நகர் மன்றப்பள்ளிகளில் தமிழ் வழிப் பாடங்கள் பயிலும் குடிசைவாசிகளின்
குழந்தைகள். அவர்களிலும் எத்தனைப் பேர்கள் ஊடகங்களின்
வெளிச்சத்தில் எது தமிழ் என்பதே தெரியாமல் போய்விடுவார்களோ
தெரியாது.
இன்னும் 20 வருடங்கள் கழித்து பலரின் பெயர்களில் மட்டுமே தமிழின்
அடையாளம் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ஏன் இன்றைக்கு தென்னாப்பிரிக்காவில் பலர் தமிழர்கள். தமிழ்ப் பெயர்கள்.
மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தன் அலுவல் பணி நிமித்தம்
சென்ற திரு. குமணராசன் அவர்கள் தன்னுடைய பயணக்குறிப்பில்
இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.
'தென்னாப்பிரிக்காவுக்குப் போனவுடன் சில தமிழ்ப் பெயர்களை
தொலைபேசி புத்தகத்தில் பார்த்து மகிழ்வுடன் தொடர்பு கொண்டேன்.
எங்களுக்குத் தமிழில் பேசத் தெரியாது என்றார்கள். வயதானவர்கள்
சிலரின் தொலைபேசி எண்களைத் தந்தார்கள். தமிழ்ப் பேசத் தெரியாத
நம் தமிழினம் ' என்று எழுதியுள்ளார்.
மும்பையிலும் தமிழ்ப் பெயர்களிருக்கும். 20 வருடங்களுக்குள்
தமிழ்ப் பேசத் தெரியாத தமிழினம் மும்பையில் ..
எழுதவும் நினைக்கவுமே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இதுதான்
உண்மை.
இதைப் பற்றி சில நண்பர்களிடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றேன்.
' அட வெள்ளம் வந்து மூழ்கியப் பிறகு ஜாண் போனால் என்ன ?
முழம் போனால் என்ன ? தமிழ்ப் படிக்காமல், தமிழே தெரியாமல்
தமிழ் நாட்டிலேயே பட்டங்கள் வாங்கி இளைய தலைமுறை வந்து
கொண்டிருக்கும்போது.. மும்பையில் என்ன செய்யமுடியும் ? ? ? ? '
என்று விரக்தியுடன் சொன்னார்கள்.
தமிழினத்தை அழிக்கப்போகும் சுனாமி எச்சரிக்கை இது.
என்ன செய்யப் போகிறோம் ?
இங்கே நம் கண்ணுக்குத் தெரியாமல்
வேர்களே அழுகிக்கொண்டிருக்கும் போது
பல நேரங்களில் மலர்களைப் பறித்ததற்காக நாம்
போராடிக்கொண்டிருக்கிறோமோ ? ?

நன்றி
.... புதியமாதவி
puthiyamaadhavi@hotmail.com

புதன், 7 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது?

சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.



இந்த அணை காலாவதியாகிவிட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால், அணையின் சுற்று வட்டாரத்திலுள்ள 5 மாவட்டங்களின் சுமார் 35 லட்சம் மக்களின் மரணத்துக்கு அது வழிவகுக்கும் என்றொரு பீதியினைக் கேரள அரசு முன்வைத்து, உடனடியாக முல்லை பெரியாறுக்குப் பதிலாக வேறு அணை கட்ட வேண்டுமென கோரி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள், வல்லுனர் குழுக்களின் அறிக்கைகள் போன்ற இன்னபிற தரவுகளை முன்வைத்து, தமிழக அரசு கேரளாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இத்தகைய நிலையில், முல்லை பெரியாறு அணையின் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?, கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமை தமிழக அரசின் கையில் எப்படி வந்தது?, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வந்தால் அணை உடையுமா?, அணை உடைந்தால் கேரள அரசு கூறிவருவது போன்ற அதிகப்பட்ச பாதிப்பு ஏற்படுமா? இவ்விஷயத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் உண்மையான நிலைப்பாடுகள் என்ன? போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கு இருக்கும்.

கண்டுபிடிப்புகளும் புதிய உருவாக்கங்களும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் மனித குலத்தின் நன்மைக்குமாகவே அமையவேண்டும். ஆனால், அவற்றால் பிரச்சனை ஏற்படும் என்று வந்தால், அதனைத் தீர ஆராய்ந்து மனித வாழ்வுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுவிடவும் தயாராக வேண்டும். இதுவே மனிதகுல நலனில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களின் அணுகுமுறையாக அமையும்.

அவ்வகையில், நாம் தமிழர்கள்; தமிழக அரசும் அரசியல்வாதிகளும் சொல்வதைத்தான் நம்பவும் செயல்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணமில்லாமல், முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது? அதனால் நன்மையா, தீமையா? என்பதை அலசி உண்மையின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.

அதற்கு, முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகளின் நிலைப்பாடாக வெளியாகியுள்ள கீழ்கண்ட குறும்படங்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க, அப்பிரச்சனையின் உண்மை நிலையினை நமக்கு விளக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். பாருங்கள்; சிந்தியுங்கள்; உண்மையின் பக்கம் நிற்கும் முடிவினை எடுங்கள்!

தமிழக பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர்கள் சங்கம் தயாரித்த குறும்படம்.

http://www.youtube.com/watch?v=gW6YcIlF_og


திரு.சோகன்ராய்(dam999 படத்தின் இயக்குனர்) தயாரித்து, பல்வேறு அவார்டுகளும் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்களும் பெறப்பட்ட குறும்படம்.

http://www.youtube.com/watch?v=gS0PwCmjIt4


ஆங்கிலத்தில்...

http://www.youtube.com/watch?v=1m4lGLiGse8


நன்றி:
http://www.inneram.com/education/trainings/problem-of-mullai-periyar-dam-1061.html

வியாழன், 1 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

பாகம் – 1
(http://player.vimeo.com/video/18283950?autoplay=1)

Turn off the lights
பாகம் – 2

Turn off the lights

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.

மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.

இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.

அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.

அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.

இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.

தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.

இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

படத்தை பாருங்கள், பரப்புங்கள்!
source from vinavu.com
http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்

...........................................................................
pl watch .......
The mullai periyar...the problem& solution
http://player.vimeo.com/video/18283950?autoplay=1
The Mullai Periyar Dam Real story
http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A

ஏன் இந்த ஓரவஞ்சனை?



கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.

இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர். கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது. மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=514116&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கூடங்குளம் அணு உலை வெளிக்கொண்டுவரும் உண்மைகள் - கல்பனா சதி்ஷ்

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் மின் சக்திக் கொள்கையையே உலுக்கிவிட்டது போல் வெடித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி எப்படியாவது கூடங்குளம் அணு உலையை செயல்படச் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு புறம், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு நேரும் மனித உரிமை மீறல்களை தேசியப் பிரச்சனையாகக் கருத வேண்டுகோள் விடுக்கிறார். இதற்கிடையில் அறிவிக்கப்படாத, அதிக நேர மின்வெட்டினால் தமிழக மக்களும், சிறு தொழில் நிறுவனங்களும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இச் சூழலில், மக்களுக்கு தேவையான மின் சக்தி, அதில் அணுசக்தியின் பங்கு, அரசின் மின் கொள்கை, மாநில-மத்திய அரசுகளின் அதிகாரப் பகிர்வுகள், தென்மாவட்ட மக்களின் குறிப்பாக கடலோர மக்களின் எல்லைப்பகுதி இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல், உரிமை மீறல் என பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.

முதலில் மின் சக்தி, அதிலும் அணுசக்திக் கொள்கையையும், குறிப்பாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நடக்கும் விவரங்களை அறிவோம். கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் ஒப்பந்தம் போடப்பட்ட நவம்பர் 1988ல்( தமிழகத்தில் ஜனவரி 1988- ஜனவரி 1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி) இருந்தே அணுசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல் ரசியா-இந்தியாவிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கின. அப்போது மக்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தமிழக அரசின் கருத்தும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. 2001ல் கட்டுமான வேலைகளும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக எரிபொருள் இறக்குமதியும் நடைபெற்றது. 2004ல் கூடங்குளத்திலேயே துறைமுகம் அமைக்கப்பட்டது. அங்கு முழுவதும் கட்டுமான வேலைகள் மட்டுமே நடைபெற்றதால் மக்களுக்கு அதன் பாதிப்புகள் எதுவும் அறிந்திருக்கவில்லை. அணுசக்தியினால் ஏற்படக் கூடிய அழிவுகளை அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சில தன்னார்வ அமைப்புகளுமே அதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தன. 2006ல் மேலும் 4 அணு உலைக் கூடங்களை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியிலும், சென்னையிலும் நடத்தப்பட்டது. இதில் பரவலாக கலந்து கொண்ட தென் மாவட்ட மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கிடையே ஜனவரி 2007ல் ரசிய அதிபர் புதினுடன், இந்தியப் பிரதமர் மேலும் 6000 மெகா வாட் மின் உற்பத்திக்கான 4 உலைகள் அமைக்க ஒப்பந்தமிட்டார். ஒருபுறம் ரசியாவுடன் கையெழுத்திட்டுக் கொண்டு, மறுபுறம் அமெரிக்காவிடமும் அணுசக்தி தயாரிப்பில் வெளிப்படையான தன்மையைக் கையாள்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 2010ல் அணுசக்தியால் ஏற்படும் அழிவிற்கான இழப்பீடு வழங்குவதற்கான சட்டத்தையும் கொண்டுவந்தார் (இந்த சட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளின் ஒப்புதல் இல்லை). இதன்மூலம், சர்வதேச அளவில் உள்ள அணுசக்தி தயாரிப்பிற்கான அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்கும் வேலையையும், உள்ளூரில் எழும் பிரச்சனைகளை சரிகட்டுவதற்கான தயாரிப்பையும் ஒருசேர நிகழ்த்தியுள்ளார்.

கூடங்குளத்தில் அணுசக்தி தயாரிப்பிற்கான மூலப்பொருளான யுரேனியம் ரசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரசியாவில் 5,00,000 டன் யுரேனியக் கனிமம் இருப்பில் உள்ளது. ஆண்டொன்றுக்கு, 11,000 முதல் 12,000 டன் வரை யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2006ல் மட்டும் ஒரு ரசியக் கம்பெனி, யுரேனிய சுரங்கம் மூலம் 8.1 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது (இந்திய ரூபாயில் 740 கோடி). இந்த யுரேனியம் என்ற தாதுப் பொருள் மிக அபாயகரமான கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாகும். அதனை அணு உலையில் இட்டு சிதைக்கும்போது வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு அதிக அழுத்த நிலையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி யுரேனிய அணு பிளவுபடும் போது அதிலிருந்து சில கனிமப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை, சீசியம், ஸ்டராண்டியம், புளூட்டோனியம் ஆகிய தாதுப் பொருள்கள். இவை புவியின் எந்த உயிர்ச்சூழல் தன்மையையும் சேராதவை. இதில், சீசியம் என்ற தனிமம், தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு உணவுச் சங்கிலியில் புகுந்து கொண்டுவிடும். அது தாவரங்களில் உள்ள செல் மூலக்கூறுகளின் தன்மையையே முழுவதுமாக மாற்றிவிடக் கூடியது. அதே போல, ஸ்ட்ராண்டியம், புளூட்டோனிய தனிமங்கள், மனிதர்களுக்குத் தேவையான கால்சியம் போன்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டு நமது பற்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். இவை, எலும்புறுக்கி நோய், நுரையீரல் புற்று நோய், கர்ப்பக் கோளாறுகளை ஏற்படுத்தி நீண்ட கால தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். இவ்வாறாக பாதிப்பினை ஏற்படுத்தவல்ல இந்த தாதுக்கள், அணு உலையில் பயன்படுத்தப்படும் எந்த உலோகத்திலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உலோகக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கதிர்வீச்சினை ஏற்படுத்தவல்லவை. ரசியாவின் செர்னோபிலில் 1986-ல் நடந்த அணு உலை விபத்தின் கதிர்வீச்சு இன்றும் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொரு அணு மூலக்கூறுகளும் 1 நொடிக்கு 600 பிளவுகளை ஏற்படுத்தி நச்சுத் தன்மை வாய்ந்த காமாக் கதிர்களை உமிழ்ந்துவருகிறது. 2016ல் தான் இது 400 ஆகக் குறையுமாம். 2046ல் 200 என குறைந்து, கொண்சம் கொண்சமாகத் தான் தன் தீவிரத்தைக் குறைக்குமாம். இப்படியாக பல ஆண்டுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது தான் அணு உலை ஆபத்து என்பது. முக்கியமாக, எதிர்கால சந்ததி முடமாகப் பிறப்பதற்கும், தற்கால தலைமுறையை, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்குவதே இதன் பலன். 8கிலோ அளவிலான புளூட்டோனியத்தைக் கொண்டு ஒரு அணு குண்டு தயாரிக்கமுடியும். ஒரு அணு உலை 30 ஆண்டுகளுக்கு இயங்கினால், அதிலிருந்து வெளிப்படும் புளூட்டோனியத்தைக் கொண்டு 1200 அணு குண்டுகளைத் தயாரிக்கலாம்.

இந்த நிலையில் கூடங்குளம் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப் போகிறார்கள்? பூமிக்கு அடியில் பல நூறு அடி ஆழம் தோண்டி சிமெண்ட் தொட்டி அமைத்து போடப் போவதாகவும் அல்லது கடலுக்கு அடியில் புதைக்கப் போவதாக சொல்கிறார்கள். இயற்கை சீற்றம் மிக்க குறுகலான வளை குடாக்களைக் கொண்டது தென் தமிழக கடற்கரையோரம். இந்த நிலையில் கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டாலும், கடல் சீற்றத்தில் அடித்துக் கொண்டுவரும். இப்பிரச்சனை குறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால் சரியான சுற்றுச் சூழல் தாக்க ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை. ஆனால், அணு உலையை இயக்குவதற்கு மட்டும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.

இத்தனை பாதிப்புள்ள அணு உலை அமைக்கப்படும் இடம் மனிதர்கள் வாழாத ஏதோ வனாந்திரமோ, பாலைவனமோ அல்ல. இந்தியாவின் தென் கோடி முனையில் சர்வதேச அளவில் உயிர்சூழல் சிக்கலான பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில்தான். சர்வதேச அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள விதிமுறைகளில் எந்த ஒரு அணு உலைக்கு அருகிலும் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சுற்றுலாத் தளம் இருக்க கூடாது. 30 கிலோ மீட்டருக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் இருக்க கூடாது. ஆனால், கூடங்குளத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் உலகப் புகழ் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி உள்ளது. 28 கிலோ மீட்டருக்குள் 2 லட்சம் மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் உள்ளது. ஏன் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியே 3 கிலோ மீட்டருக்குள் 30000 மீனவ, விவசாய, பனைத் தொழில் செய்து வாழும் மக்களும் உள்ளனர். அணு உலைக்கு சுற்றுச் சுவருக்கு அருகிலேயே 450 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அணு உலையை ஒட்டி மீன்கள் குஞ்சு பொறிக்கும் செங்கனேரி ஓடை அரை கிலோமீட்டருக்கு ஓடி கடலில் கலக்கிறது.

இப்போது பிரதமர் எப்படியாவது அணு உலையின் செயல்பாட்டை துவக்கிவிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே கூடங்குளத்தில் என்ன நடந்தது அதைச் சற்று பார்ப்போமா?

2006ல் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினை, வெறும் சந்தேகங்கள், கேள்விகள் என ஒதுக்கி வைத்துவிட்டு 2007ல் மீண்டும் 4 அணு உலைகளுக்கு கையெழுத்திட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கூடங்குளத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த சில மக்கள் பிரதிநிதிகளும், உள்ளூர் பிரமுகர்களும் கூட மெதுவாக அணு உலை விசயத்தில் மத்திய அரசின் தன்னிச்சையான போக்கினைக் கண்டு அதிர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். முக்கியமாக, 2004ல் நடந்த சுனாமியும், அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இறுதியாக 2011 மார்ச்சில் ஜப்பானில் நடைபெற்ற புகுசிமா அணு உலை வெடிப்பு, அணு உலை ஆபத்தையும், கடலோரத்தில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அது கொண்டு வந்த அழிவினையும் கண்ட பின்பு மக்களின் எதிர்ப்பு கூடங்குளத்தில் அதிகரித்துள்ளது. 2011 ஜூலையில், கூடன் குளம் அணு உலையில் ஹாட் ரன் என்ப்படும் போலி எரிபொருளைக் கொண்டு ஒத்திகை ஓட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் போது வெளியான அதீத சத்தமும், அதிர்வுகளும், அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை தூங்கவிடாமல், இரவு முழுவதும் அச்சுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரழிவு மேலாண்மை பயிற்சியில், கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வராமல், உள்ளேயே இருக்கும் படி கூறியது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதன்விளைவாகவே தொடர் உண்ணாவிரதமும், சமரசம் செய்து கொள்ளாமல் அணு உலையை மூடக் கோரும் போராட்டங்களும் நடக்கின்றன.

தற்பொழுது, கூடங்குளம் அணு உலை செயல்படவில்லையென்றால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்காது. இதனால் தொழில்வளர்ச்சி முடங்கிவிடும். அணு உலை மிக பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. விபத்து நடைபெற வாய்ப்பே இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும், மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பேரழிவு ஆபத்திலிருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்றெல்லாம், பிரதமரும், அணு சக்தி கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். இதனோடு கூட, சமீபத்திய தொடர் மின் வெட்டு, மின் பற்றாக்குறை என்ற பிரச்சனையை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டு, தமிழகமே மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், 2010-2011 க்கான, மாநில அரசின் மின் சக்திக் கொள்கை விளக்க அறிக்கையைப் படிக்கும் போது, நமக்கு வேறு பல மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவை;

ஃ தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 10865 மெகாவாட் (19.07.2011 அன்று பதிவானது)

ஃ காற்றாலைகளின் மூலம் மட்டும் 19355 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 6007 மெகாவாட் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது.

ஃ 610 மெகா வாட் மின்சாரம், சர்க்கரை ஆலைகளில் உள்ள திட உயிர்கழிவுகள் மூலம் பெறப்படுகிறது

ஃ 139 மெகாவாட் பிற உயிர்க் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது

ஃ 5 மெகாவாட் மின்சார சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஃ மின்சாரப் பயன்பாட்டில், 27.5% மின்சக்தி வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது (மொத்த நுகர்வில் இது 66.56%)

ஃ 34.92% மின் சக்தி தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது (2.41% நுகர்வோர் தொழிற்சாலை நடத்துபவர்கள்)

ஃ வர்த்தகத்திற்காக 10.43% (12.62% நுகர்வோர்)

ஃ விவசாயத்திற்காக 20.93% (8.83% நுகர்வோர் விவசாயிகளாக உள்ளனர்)

ஃ பிற தேவைகளுக்காக 6.67%(9.57% நுகர்வோர்)

ஃ இதில், 45.35% மின்சாரம், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களால் மட்டுமே நுகரப்படுகிறது. (மொத்த நுகர்வில் இவர்களின் பங்கு14.62%)

ஃ ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பு 1% ஆக உள்ளது.

மேற்சொன்ன புள்ளிவிவரங்களின்படி, வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும் சேர்த்து மின் தேவை என்பது சுமார் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கும். தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையும் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கிறது.

மேலும், புள்ளி விவரங்களை அலசிப்பார்க்கும் போது, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான, காற்றாலை, சூரிய சக்தி, உயிர்க்கழிவுகள், கடல் பாசிகள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் துரிதப்படுத்தினாலே போதும். மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகம், விவசாயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது புலனாகிறது. மொத்த மின் உற்பத்தியில் 50% நுகரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகளும் அனல் மின் நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளபடி தொழில் வளர்ச்சி அதிகரிக்க மின்சாரம் தேவை என்றால் அது எந்தவிதமான தொழில்வளர்ச்சி என்று கேட்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் திட்டம், 2050க்குள் மின்சாரத் தேவையில் 25% ஐ அணு உலைகளில் இருந்து பெறலாம் என்பதே. தற்போது 3% மின் சக்தி மட்டுமே அணு உலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலையை இந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால், 2050க்குள் 40% மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது
(மின் தேவை அதிகரிப்பு ஆண்டிற்கு 1% ஆக உள்ளது). அப்படியானால், மத்திய அரசின் 25% இலக்கு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை 10% ஆக மட்டுமே இருக்கும்.

மொத்த மின் சக்தித் தேவையில் 10% அணு மின்சாரத்திற்காக தமிழ்நாடு தனது இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்போகிறதா?

தற்போது தமிழகம் அணு உலை மின்சக்தியை நம்பி இல்லை. இந்தியாவிலேயே அதிகம் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தமிழகம் தான்(36%). அதேபோல தமிழகத்தின் மின் விநியோகத்தில் 40% மின் சக்தி, காற்றாலைகள், உயிர்கழிவுகள், சூரிய சக்தியிலிருந்து தான் கிடைக்கின்றன.

தமிழகத்தில் வருடத்திற்கு 300 நாட்களும் சூரிய ஒளி வீச்சு மிகுந்த நாட்கள். எனவே, எதிர்காலத்திலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கடல் பாசிகள் மூலம் மின்வாயுத் தயாரிப்பது போல, தமிழகத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளவாய்ப்பு உள்ளது.
1 மெகாவாட் மின்சாரத்தினால் 1000 வீடுகளுக்கு மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஒவ்வொரு கிராமத்திலுமே இயற்கை மூலாதாரங்களைக் கொண்ட மின்சாரத் தயாரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

அழிவினைத் தரும் அணு சக்தி வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும், அரசும் உறுதியாக இருக்கும் போது, மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்.

புதன், 26 அக்டோபர், 2011

தமிழ்ச் சமூக வரலாறு

சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்


நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை


பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்


சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)


சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).

விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.

நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.

நாயக்கர் காலம்

கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.

நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.

சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.

ஐரோப்பியர் காலம் (1533 -1947)

கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.

கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆங்கிலேயரிடம் தந்தனர்.

மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.

சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.

சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்

என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.

1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859 ல் இந்திய சிவில் சட்டமும், 1860 ல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861 ல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.

பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880 ல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.

காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
ரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே

என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.

தமிழர் வரலாறு


26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று

அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்

2. இனக்குழு வாழ்க்கை

27.07.2004 செவ்வாய் 3. மேய்ச்சல் நில வாழ்க்கை

4. அடிமை முறை

28.07.2004 புதன் 5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்

29.07.2004 வியாழன் 6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்

7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்

30.07.2004 வெள்ளி 8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

31.07.2004 சனி 9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய

எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள் தலித் எழுச்சி)

(தமிழ்ச் சமூக வரலாறு---ஆ. சிவசுப்பிரமணியன்)