'தாராவியின் தமிழர் தலைவர்' நிஜத் தலைவா ---எஸ்.கே. ராமசாமி சேட் (SKR)
''விஜய் நடித்த 'தலைவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்'' என்று கர்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவருடைய மனுவில், 'தலைவா’ திரைப்படம் தன்னுடைய தந்தை எஸ்.கே.ராமசாமி சேட், தன்னுடைய தாத்தா எஸ்.எஸ்.கந்தசாமி சேட் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அவர்களுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்ணன் குறிப்பிடும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட், அவருடைய மகன் எஸ்.கே. ராமசாமி சேட் என்பவர்கள் யார்? மும்பை தமிழர்களிடம் விசாரித்தோம்.
திருநெல்வேலி மாவட்டம், சிறுபருப்பநல்லூர் என்ற குக்கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கந்தசாமி. நூறாண்டுகளுக்கு முன்பு, பிழைப்புத் தேடி மும்பை வந்து தாராவியில் குடியேறினார். தோல் பதனிடும் தொழில் செய்துவந்த கந்தசாமி, கடுமையான உழைப்பின் மூலம் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தும் அளவுக்கு முன்னேறினார். அந்தத் தொழிலில் அவர் காட்டிய நேர்மையும் உழைப்பும் அவருக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்தது.
கந்தசாமி தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்திய நேரத்தில், தாராவியில் 20-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கின. ஆனால், அங்கெல்லாம் தொழிலாளர்களுக்குக் குறைந்த கூலி. கொத்தடிமைபோல் நடத்தப்பட்டனர். ஆனால், கந்தசாமியின் தொழிற்சாலையில் அதிக கூலி. அதனால், மற்ற ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற கந்தசாமி உதவினார். அதன் பிறகு, அவர்களுக்கும் நல்ல கூலி கிடைத்தது. இதுபோல், எளிய மக்களுக்கு வலியப்போய் உதவும் குணத்தால் கந்தசாமிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியது. மராட்டியர்கள் மத்தியிலும் மும்பை தமிழர்களிடமும் செல்வாக்குப் பெற்று கந்தசாமி சேட் (சுருக்கமாக எஸ்.எஸ்.கே) ஆனார்.
அந்தக் காலகட்டத்தில்தான், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பல குடும்பங்களை மும்பைக்கு அழைத்துச் சென்று குடியேற்றினார் எஸ்.எஸ்.கே. அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். எஸ்.எஸ்.கே. தோல் பதனிடும் தொழிற்சாலைதான், மும்பைக்குப் பிழைக்கச் செல்லும் தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் ஆலமரம். இப்படி சிறுகச் சிறுக குடியேறிய தமிழர்களால்தான், மராட்டிய மண்டலத்தின் தாராவியும் மாதுங்காவும் தமிழர்களின் கோட்டையாக மாறின.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா 'கண்பத் விழா’ என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், தமிழர்கள் கொண்டாட தனி கோயில் இல்லை. எஸ்.எஸ்.கே. தமிழர்களுக்குத் தனியாக கணபதி ஆலயம் அமைத்து தந்தார். அன்று முதல் இன்று வரை அந்த ஆலயம்தான் தமிழர்களின் அதிகாரப்பூர்வ வழிபாட்டுத்தலம். நூறாவது ஆண்டு கண்பத் விழாவைக் கொண்டாடி கம்பீரமாக நிற்கிறது. விறுவிறுவென்று வளரும் எஸ்.எஸ்.கே-யின் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ளாத சிலர், அவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்தனர். தன்னுடைய அப்பாவின் செல்வத்தையும் செல்வாக்கையும் கட்டிக் காக்கும் பொறுப்பு அவருடைய மூத்த மகன் எஸ்.கே.ராமசாமியிடம் (எஸ்.கே.ஆர்.) வந்தது. இவரின் காலகட்டம் மிக முக்கியமானது. ஏனென்றால், அந்த சமயத்தில்தான் சிவசேனாவின் மண்ணின் மைந்தன் கொள்கை மராட்டி மாநிலத்தில் வேர் பிடித்தது. அப்போது, மராட்டியர்களிடம் இருந்து தமிழர்களைப் பாதுகாத்ததில் முன்னணியில் நின்ற மூன்று தமிழர்கள் எஸ்.கே.ஆர்., வரதராஜ முதலியார் (இவரை மையமாகவைத்து எடுக்கப்பட்டதுதான் 'நாயகன்’ திரைப்படம்), ஆதிமஸ்தான் பாய்.
தமிழர் பேரவை என்ற அமைப்பை வரதராஜ முதலியார் தொடங்கியபோது, உதவித் தலைவர் பதவியை எஸ்.கே.ஆரிடம்தான் ஒப்படைத்தார். அப்போது, தாராவி, மாதுங்கா உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்கள் வராது. இந்தக் குறையைப் போக்க தமிழர் பேரவை சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் வாங்க வரதராஜ முதலியார் நிதி திரட்டினார். 'இரண்டு ஆம்புலன்ஸ்களை நானே வாங்கித் தந்துவிடுகிறேன்’ என்று எஸ்.கே.ஆர். தன்னுடைய சொந்த செலவிலேயே வாங்கித் தந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மும்பையில் தமிழர் பேரவை சார்பில் வரதராஜ முதலியார் பிரமாண்ட பேரணி நடத்தியபோது, தாராவியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டிச் சென்றவர் எஸ்.கே.ஆர். இவர்கள் இணைந்து நடத்திய அந்தப் பேரணிதான், மும்பையில் தமிழர்களின் செல்வாக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் உணர்த்தியது.
அதுபோல், இன்றைக்கு தமிழர் விரோதப் போக்கை சிவசேனா கட்சி கைவிட்டதற்கு மிகப் பெரிய காரணகர்த்தா எஸ்.கே.ஆர்-தான். மும்பை மாகாண உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட எஸ்.கே.ஆர்., மிகப் பெரிய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், சிவசேனா, பி.ஜே.பி. வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். மற்ற இடங்களைப் பொறுத்தளவில் காங்கிரஸ் கட்சியும் புதிதாக மராட்டிய மண்ணில் வேர்பிடித்த சிவசேனாவும் சம எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தன. இதனால், மேயரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட எஸ்.கே.ஆர்., சிவசேனாவை ஆதரித்து மேயர் பதவியை அந்தக் கட்சிப் பெறுவதற்கு உதவி புரிந்தார்.
எஸ்.கே.ஆர். ஆதரவால், ஒரு ஒட்டு கூடுதலாகப் பெற்று முதன்முதலாக மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றியது. எஸ்.கே.ஆர். செய்த இந்த உதவியை மிகவும் மதித்த பால்தாக்கரேவும் அவருடைய சிவசேனா கட்சியும் அதன் பிறகுதான் தமிழர் விரோதப்போக்கை கைவிட்டனர். இன்று சிவசேனாவில் தமிழர்கள் உறுப்பினர்களாகவும் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதற்கும் எஸ்.கே.ஆர்-தான் வழிவகுத்தார்.
1988-ம் ஆண்டு திருநெல்வேலி வந்திருந்தபோது, எஸ்.கே.ஆர். மரணமடைந்தார். அப்போது சொந்த ஊரிலேயே இறுதிச் சடங்கை முடித்துவிடலாம் என்று உறவினர்கள் முடிவுசெய்தனர். ஆனால், உறவினர்களின் இந்த முடிவு, தாராவி தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மும்பையில் உள்ள எஸ்.கே.ஆர். வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, விமானம் மூலம் எஸ்.கே.ஆரின் உடல் மும்பைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய அந்த இறுதி ஊர்வலம், மயானத்தை அடையும்போது மறுநாள் காலை 5 மணி. அப்படி ஒரு மக்கள் வெள்ளம். வாழ்ந்த காலம் முதல் தங்களின் தலைவராக எஸ்.கே.ஆரை அந்த மக்கள் நினைத்தார்கள்.
வேற்று மாநிலத்தில் பிழைக்கப்போய், அங்கு தன்னை நிலைநிறுத்தியதுடன், கடைசி வரை சொந்த மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்ட அந்த மனிதர்களை தாராளமாக 'தலைவா’ என்று அழைக்கலாம். ஆனால், விஜய் நடித்த படத்தின் கதை இதுதானா என்று படம் பார்த்தால்தான் சொல்ல முடியும்!
- ஜோ.ஸ்டாலின்
நன்றி ...