தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் சித்தாந்த பிரச்சனைகளில் இன்றைய தலையாய பிரச்சனையே திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்பதுதான். ‘திராவிடம்’ என்ற சொல்லாடலுக்கான அர்த்தம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத்தவர்களை இணைக்கும் இணைப்பு பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ‘திராவிடம்’ என்ற சிறப்பு பெயரே பல அந்நிய நாட்டு வரலாற்று அறிஞர்களுக்கு, வட இந்திய ‘ஆரிய’ வந்தேறிகளையும் தென்னிந்திய பூர்வக்குடி மக்களையும் பிரித்துப்பார்க்க உதவுகிறது. திராவிடம் என்பது மொழிக்குடும்பத்தின் அடையாளப் பெயர்தான் அதுவும் தமிழ்தான் திராவிட மொழிகள் அனைத்திற்குமான தாய்மொழி என்ற கருத்தோட்டத்தில் ஒரு கர்வம் உண்டு. இதனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டாலும் திராவிட மொழிக்குடும்பம் என்பதனையோ தமிழ்தான் மூத்தமொழி என்பதனையோ பிற திராவிட மொழிகள் பேசும் ‘சகோதரர்கள்’ ஏற்றுக்கொள்ளப்போதில்லை.
ஆந்திர மாநிலத்தில் இயங்கும் திராவிடியன் பல்கலைக் கழகத்தின் முகப்பு பக்கத்தில், திராவிட மொழிக்குடும்பம் இந்தியா மற்றும் பலுகிஸ்தான் பகுதிகளில் பேசப்படும் 27 மொழிகளை உள்ளடக்கியவை என்றும் அதன் பெரும்மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர அதனை தென்னிந்திய மொழிகள் என்ற திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்றியவைகள் என்றோ எவ்வித குறிப்பு இடவில்லை. ஆக, நாம் பெருமைக்கு திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் தமிழ் மொழி என்று கூறிக்கொண்டாலும் உலகில் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் இதனை ஆய்வு செய்து நிறுவியிருந்தாலும் நமது ‘சகோதரர்கள்’ ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆக, திராவிடம் என்பது வெளிநாட்டு மொழி ஆய்வாளர்களுக்கு மட்டுமே ஆய்வுக்கான பொதுப்பெயராக இருக்கிறது என்பதுதான் உண்மை.
அதோடு, தமிழர்கள் அல்லாத திராவிடர்கள் என்றுமே தமிழ்த்தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான அரசியல், பண்பாட்டு மையங்களிலேயே சுழல்கிறார்கள் என்கிற உண்மையினால், ‘திராவிடம்’ என்ற பெயர் சொல்லவே கூச்சமும் வரலாற்று படிப்பினைகளில் இருந்து ஒருவித எதிர்ப்புணர்வும் தானாகவே எந்தவொரு தமிழனுக்கும் எழும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதுவும் முல்லைப்பெரியாறு, காவேரி, கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டில் தொடங்கி அனைத்து சமகால அரசியலிலும் தமிழினத்திற்கு எதிராகவே சிந்திக்கும் திராவிட ‘சகோதரர்கள்’ ஒன்று மட்டும் உரக்கச் சிந்திக்கவைக்கிறார்கள். அதாவது, நாம் திராவிடக் குடும்பத்தில் இருந்து தனித்துவிடப்பட்டிருக்கிறோம் என்பதோடு அனைத்து திராவிடர்களுக்குமான பொது எதிரியே தமிழந்தான். ஏற்கனவே மொழிகாக்க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் நாம் என்பதால் வட இந்திய ஆதிக்க மொழிக்காரர்களுக்கு நாம் எதிரி. தமிழனத்தோடு வரலாற்று ரீதியாக எப்பொழுதும் முரண்பட்டுவரும் திராவிடர்கள் இந்தியை மட்டுமல்ல இந்திய ஆதிக்கவர்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் இந்தியத்திற்கும் திராவிடத்திற்குமான பொது எதிரியாக தமிழினம் சிக்குண்டுள்ளது என்பது வரலாற்று உண்மை. இந்த உண்மையை உணராதவர்கள் தமிழ்த்தேசியம் என்ற கட்சி வைத்திருந்தாலும் தமிழனத்தின் எதிரிதான். இவ்வுண்மையை உணர்ந்தவர்கள் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு கட்சியோ இயக்கமோ நடத்திவருகிறார்கள் என்றாலும் அவர்களும் தமித்தேசியவாதிகளே.
ஒருவேளை, திராவிட இணைப்பு அல்லது திராவிடர்களின் ஒற்றுமை என்று எந்தவொரு திராவிட இயக்கங்களின் கொள்கையிலும் இருக்குமானால் அதனை ஒரு தமிழன் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். மற்றும் அக்கருத்தை எந்தவொரு கட்சியாவது சொல்லுமானால் அக்கட்சி தமிழகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டியவைதான்.
பெரியாரின் திராவிடர் கழகத்தின் பிள்ளைகள் என்பதனால்தான் திராவிடம் என்ற பெயரை மதிமுக, பெரியார் திராவிடர் கழகம் தாங்கி நிற்கிறதே தவிர பிற திராவிட சகோதரர்களை இணைப்பதற்காகவோ அவர்களின் ஓட்டுக்காகவோ இல்லை. அதுவும் பெரியார், ‘திராவிடர் கழகம்’ என பெயர் வைத்ததற்கான நியாயமான காரணம் இருப்பதால் அதன் தொடர்ச்சியாக வரும் கழகங்கள் அப்பெயரை சுமந்து நிற்கின்றன என்ற உண்மையை தமிழகத்தில் ஒரு சிலர் மட்டும் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள் அல்லது அவர்களது அரசியல் அறிவே அவ்வளவுதான் என்று எடுத்துக்கொள்ளலாம். இன்றைய திராவிட இயக்கங்கள் பற்றின விவாதத்திற்கு செல்வதற்கு முன் திராவிட கழகத்தின் செயற்பாடுகளை பார்ப்போம்.
முதலில், திராவிடர் கழகம் தமிழ்த்தேசியத்தை நிறுவியதா? ‘திராவிட‘ கொள்கையை நிறுவியதா? என்பதனை பார்ப்போம்.
பெரியாரின் திராவிடர் கழகத்தால் விளைந்த நன்மைகள் என்ன?
தமிழகத்தில் நடந்த விழாக்கள், நாடகங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில், “பஞ்சமருக்கு இடமில்லை’ என்ற நிலை இருந்தது. அதனை மாற்றியது தந்தை பெரியாரின் திராவிடர் கழகம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பெரும்போராட்டத்தின் எழுச்சிக்குப் பிறகுதான் சென்னையில் காந்தி போன்றவர்களே ஐயர்களின் வீட்டினுள் நுழைய அணுமதிக்கப்பட்டனர். அதுவரை ‘தேசப்பிதா’ காந்திக்கே வீட்டு திண்ணைத்தான்.
பெரியாரின் திராவிடர் கழகம் இல்லாது போயிருந்தால் இன்று நம்மில் பலர் மாடு மேய்த்துக்கொண்டும், செருப்பு தைத்துக்கொண்டும், கழிவறை சுத்தம் செய்துகொண்டும் படிப்பறிவு இல்லாமல் இருந்திருப்பார்கள். இத்தொழில்கள் புரிவது இழிவில்லை ஆனால் ஆதிக்கவர்க்கத்தினருக்கு அடிமையாய் கல்வியறிவில்லாத அடிமையாய், தீண்ட்த்தகாதவர்களாகத்தான் வாழ்ந்திருப்போம். தமிழ்ச்சமூகப் பெண்கள் இன்று பெருமளவில் அனைத்து துறைகளிலும் அங்கம் வகிக்கிறார்களென்றால் அதற்கும் பெரியாரின் போராட்டமும் இயக்கும்தானே வித்திட்டது.
1951 ஆம் தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டத்தின் விளைவால்தானே இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இதெல்லாம் வெறும் உதாரணங்கள்தான். பகுத்தறிவு பிரச்சாரத்தின் மூலம் மூடநம்பிக்கையை ஒழித்தது, தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது அதன்மூலம் இந்தி திணிப்பை திரும்ப பெற வைத்தது, சுயமரியாதை திருமணச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு என எழுதிக்கொண்டே போகலாம். திராவிடர் கழகத்தின் தோற்றமும் அதன் செயற்பாட்டாலும் தமிழர்களுக்கு நன்மையும் விடியலும் பிறந்தது எனலாம்.
முதலமைச்சர் கனவுடனேயே கட்சி ஆரம்பிப்பவர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் பதவி தன் மடியில் விழுந்தும் அதனை உதாசீனப்படுத்தி மக்களின் உரிமை போராட்டத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி பதவிக்காக அல்ல உரிமைக்கானதே திராவிட இயக்கத்தின் போராட்டம் என்று முழங்கியவர் சர் பிட்டி தியாராஜன். இப்படி போராட்டங்களுக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் வளர்த்ததுதான் திராவிட இயக்கம்.
திராவிடர் கழகம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதா?
மேடைகள் என்றாலே பக்தி இலக்கிய உரைகளும் சொற்பொழிவுகளும் ஒலிப்பெருக்கிகள் என்றாலே அது பக்தி பாடலை மட்டும்தான் வெளிப்படுத்தும் என்ற நிலையை மாற்றி தமிழிலக்கிய சொற்பொழிவுகளையும் தமித்தேசியத்தையும் முழங்கும் என்று உணர வைத்தவர்களே திராவிடர் கழகத்தின் பிள்ளைகள்தானே. அறிஞர் அண்ணா, நாஞ்சிலார், தியாராஜன், நெடுஞ்செழியன், மதியழகன், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என எத்தனை எத்தனை சொற்பொழிவாளர்கள். அவர்கள் பேச்சைக் கேட்டாலே கேட்பவன் தமிழனே இல்லையென்றாலும் தமிழின் இனிமையைச் சுவைப்பானே, தமிழை அன்று முதல் துதிப்பானே.
பல நூற்றாண்டுகளாக பக்தி இலக்கியங்களை மட்டுமே படித்து மூளையற்ற பிறவியாக வளர்ந்த தமிழனை தமிழ்த்தேசிய இலக்கியத்தை படிக்க வைத்து அவனுக்கு அறிவூட்டிய எங்கள் பாரதிதாசனை வழங்கியது திராவிட இயக்கம்தானே.
தமிழ்த்தேசியத்தை கொள்கையாக கொண்டவர்களின் அரசியலில் திராவிடம் என்ற பெயர் எப்படி வந்தது எனபது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் பெரியார், “இந்திய நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றிலும் இதிகாசத்திலும் நடந்த அனைத்து போராட்டங்களும் ஆரிய-திராவிடர் என்றுதான் நடந்துள்ளது” என்ற பார்வையையும் ‘தமிழ்’, தமிழ் கழகம்’ என்பது மொழிப்போராட்டத்திற்கு உதவுமேயன்றி இனப்போராட்ட்த்திற்கு உதவாது என்பது அவரது நிலைப்பாடு.
ஆனால், இந்நிலைப்பாடு முழுக்க வடஇந்திய ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமே எடுக்கப்பட்டது. அதுவும், வட இந்திய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக மொழிப்போராட்டம் மட்டுமே நம்மை மீட்டு விடாது. மொழிப்போராட்டம் மொழியினை அழியாது காக்கத் தேவைப்படுவது போல ஆரியத்திற்கெதிரான திராவிடப் போர் வட இந்திய பார்ப்பன ஆதிக்கதின் கலாச்சார திணிப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என்று நினைத்தார்.
அதேவேளை, திராவிடப்போரை நடத்தும் பெரியார் ஒருகாலமும் பிற திராவிடர்களோடு சேர்ந்து தனிநாடோ அல்லது தனிப்பிரதேசமோ பெற்றுவிட போராடவில்லை. அதற்கு உதாரணம், “ தட்சணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் என அனைவரும் ஒன்று சேர்ந்தால் நம்மவருக்கு கிடைத்துவரும் வேலைகள் எல்லாம் பறிபோய் பார்ப்பனர்களுக்கும் மலையாளிகளுக்கும்தான் கிடைக்கும். நம்மவர்களுக்கு கூலி வேலை, கழிப்பிட சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் மட்டும் செய்ய வேண்டிய நிலை வரும். முழு அதிகாரமும் வட நாட்டவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் மலையாளிகளுக்கும்தான் இருக்கும்” என்று அவர் கூறியிருந்திருக்கிறார்.
அதோடு, “ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பிறகு, மலையாளிகளும் கன்னடர்களும் சீக்கிரம் பிரிந்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது” முதல் காரணம், அவர்கள் யாருக்குமே பகுத்தறிவு உணர்ச்சியோ, இனப்பற்றோ, இனசுயமரியாதையோ அறவேயில்லை. அவர்களுக்கு சூத்திரன் என்று சொல்வதில் மனக்குறையோ வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கமோ எதுவுமே இல்லை. இரண்டாவது காரணம், அவர்களுக்கு மத்திய வடவராட்சியில் தங்களது நாடு அடிமைப்பட்டு கிடப்பதில் கவலையில்லை” என்று சாடியிருக்கிறார்.
நேற்று பெய்த அரசியல் மழையில் முளைத்திருக்கும் காளான்கள் திராவிடக் கழகங்கள் திராவிடத் தேசியம் பேசுகிறது என்கின்றனரே, பெரியார் பேசியது தமிழ்த்தேசியமா? இல்லையா?
சமீபத்தில் தமிழக அரசியல் இதழ் பேட்டியில் அண்ணன் சீமான் அவர்கள், “ கூடங்குள எதிர்ப்பு போராட்டத்தில் நாஞ்சில் சம்பத் இனி நமக்கு தேவை தமிழ்த்தேசியம்தான் என்றார். பிறகு எதற்கு திராவிடர் கழகங்களின் பணிகளை அடுக்கி தான் விவாதிக்க தயார், திராவிடம் மாயை என்று நிறுவ நீங்கள் தயாரா?” என்று எங்களைப் பார்த்து சவால் விடுகிறார்” கோபப்பட்டிருக்கிறார்.
அண்ணன் சீமான் தமிழகத்தில் அரசியல் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு முன் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய பெரியார் முதல் இன்றைய வைகோ ஐயா, கொளத்தூர் மணி அண்ணன் போன்றவர்கள் வரை பேசுவது அனைத்தும் தமிழ்த்தேசியம்தான். எங்கள் தந்தை பெரியாரின் வழியில் வந்தவர்கள் என்ற முறையில் ‘திராவிட’ என்ற பெயர் தாங்கி கட்சியும் இயக்கமும் நடத்துகிறார்கள். சில அரசியல் குழந்தைகள் சொல்வதுபோல தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் கொள்கையை அவர்கள் வைத்திருக்கவில்லை.
பார்ப்பனரல்லாத தமிழர்களை குறிக்க வைக்கப்பட திராவிட கட்சியில் எப்படி ஒரு பார்ப்பன பெண் தலைவியாக இருக்கிறாள் என்று கேட்கலாம். ஒரு பார்ப்பனத்தி தலைவி ஆனது திராவிட இயக்கத்தின் கொள்கையில் வந்த பிரச்சனையா? எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதனின் பிரச்சனையா? அந்த ஒரு பார்ப்பனத்தி தலைவியாக இருப்பதால், எத்தனை தமிழர்கள் (ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்றோர்) அவளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் திராவிடக் கட்சிகளின் தலைமையில் இருப்பதாலேயே அவர்களின் கொள்கை திராவிடக் கொள்கை என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அவர்கள் திராவிடக் கட்சியின் போர்வையில் ஒளிந்திருக்கும் திருட்டு கூட்டம் என்பதாலும் இன எதிரிகள் என்பதாலும் அனைத்து திராவிடக் கட்சிகளும் அப்படியே ஆகுமா?
இங்கு பிரச்சனை கருணாநிதி, ஜெயலலிதாவா? திராவிடக் கட்சி என்ற பெயரா? திமுக திராவிடர் கழகத்தில் உழைத்தவர்களில் இருந்து உருவானது. அக்கட்சிக்கு தமிழர்களின் நலனில் பிற கட்சியை விட அதிக உரிமை உண்டுதான். ஆனால் அது வழி தவறிய ஆட்டுமந்தை கூட்டமாக மாறிவிட்டதாலும் தமிழின விரோதத்தையே கொள்கையாக கொண்ட கூட்டமாக இருப்பதாலும் முழுமையாக அகற்றப்படவேண்டிய களையாக நாம் கருதலாம். அது கட்சியின் நிகழ்கால செயற்பாட்டை பொறுத்துதானேயன்றி திராவிடக் கட்சி என்பதற்காக அல்ல என்பதனை நாம் அனைவரும் உணரவேண்டும்.
அதிமுக தொடங்கியதில் இருந்தே அது திராவிடக் கட்சியின் கொள்கையையோ கடமையையோ கொண்டிருக்கவில்லை எனினும் அதன் அன்றைய பொதுச்செயலாளர் தமிழீழ மக்களுக்கும் தமிழக அடித்தட்ட மக்களுக்கும் நன்மை செய்தவர் என்ற கோணத்தில் இன்றும் மதிக்கிறோம். தமிழர்களுக்கு உழைத்தவர் மலையாளியாக இருந்தால் என்ன தெலுங்கனாக இருந்தால் என்ன? ஆனாலும் திராவிடக் கட்சி என்ற பெயரைத் தாங்கிகொண்டு வட இந்திய ஆதிக்கத்திற்கு அடிமையாக இருக்கும் மனநிலையை தொடங்கிவைத்தவர்கள் கருணாநிதியின் திமுகவும் எம்ஜியாரின் அதிமுக என்பதனையும் வரலாறு பதிவு செய்தே வைத்துள்ளது. அவ்வடிமைத்தனத்தின் தொடர்ச்சிதான் இன்றும் நமது நிலை. இது திராவிட இயக்கத்தினால் விளைந்தவைகளா? கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் உருவான நிலையா? என்பதனை உணர வேண்டாமா?
எதிரிகள் யார் என்பதனை வரையறுக்காத போராட்டம் என்றும் வெற்றி பெறாது. சமீப காலமாக, தமிழகத்தில் மின்வெட்டிற்கு கூட திராவிட அரசியல் என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், திராவிட அரசியல் கட்சியின் தலைவியை “ஈழத்தாய்’, “வேலுநாச்சியார்” என்றெல்லாம் கூறி பாராட்டு விழாக்களும் நடைப்பயணங்களும் அரங்கேறும். அவர்களுக்கு திராணி இருந்தால் ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண் என அவர்களது மேடைகளில் முழங்கமுடியுமா ? என்று கேட்கிறேன். திராவிடக் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கொள்கைகளும் செயற்பாடுகளும் இருக்கிறது. திமுக அதிமுக மட்டும்தான் திராவிடக் கட்சிகள் என்றால் நமது எதிரி திராவிடக் கட்சிகள்தான். அவைகளுக்கு இருப்பவை மட்டும்தான் திராவிடக் கொள்கைகள் என்றால் அந்த கொள்கையை நாம் எதிர்க்கலாம். அவர்களுக்கு இருக்கும் ஒரே கொள்கை பணம் பறிப்பதும் மத்திய அரசிடம் அடிமையாய் வாழ்வதும்தான். ஒழிக்கப்படவேண்டியது அவர்களும் அவர்களது கட்சிகளும்தான். இங்கே தோற்றது அவர்களின் தலைமைகளும் அவர்களது தலைமையின் கீழ் இருக்கும் கட்சியும்தானே!
தொடர்ச்சியாக வேற்றுமொழி பேசுபவர்களை தலைமைகளாக கொண்டவர்கள்தானே திராவிடக் கட்சியில் இருக்கிறார்கள் என்று ஒரு வாதத்தை நாம்தமிழர் கட்சியினர் வைக்கின்றனர். கட்சி தொடங்குவதற்கு முன் பேசியபொழுது, எனக்கு இனவுணர்வை தங்களது பேச்சுக்கள் மூலம் ஊட்டி வளர்த்தவர்கள் என்று பெருமை பேசியவர்கள் புதிய கட்சி தொடங்கியதும் அவர்களை வேற்று மொழியினர் என ஒதுக்குவது சுயநல அரசியலின்றி வேறென்ன? கொள்கை அரசியலா? வைகோ என்பவர் தெலுங்கு பேசும் தாய் தகப்பனுக்கு பிறந்தது அவர் குற்றமா? எம்ஜியார் போல இவர் என்ன வேறொரு இடத்தில் பிறந்து வேறு இனத்தவராக வளர்ந்து தமிழகத்தில் கட்சி தலைமைக்கு வந்துவிட்டாரா? தமிழனாய் வாழ்ந்து தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்த ஒருவர் தமிழரல்லாமல் வேறொருவராக பார்ப்பது கொள்கை அரசியலா? போட்டி அரசியலா?
புதிதாக கட்சி ஆரம்பித்து, 2016 ல் தேர்தலை சந்திக்க இருக்கும் நாம் தமிழர் கட்சியினர், எங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் பிற மொழியினர் வாக்களிக்க வேண்டாம் என்று அறிவிக்கத் தயாரா?
நன்றி
http://thaaitamil.com/?p=14700