புதன், 31 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவின் இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை

அமெரிக்காவின் இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை ஒன்றின் வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது என்றாலும் அது அமெரிக்க இராணுவத்தால் எடிட் செய்யப்பட்டு அவர்களுக்குச் சாதகமான முறையில் வெளியானது. ஆனால் இந்த எடிட் செய்யாத வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நடக்கும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாம் குரல்கொடுப்போம் என்று கூறிவரும் அமெரிக்கா சமீபகாலமாக போர் குற்றங்களுக்கும் எதிராகக் குரல்கொடுத்து வருவதாகவும் தன்னை உலகிற்கு காட்டி வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ள போர் குற்றங்களை யார் கேட்ப்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 17 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அதிர்ச்சிக் காணொளியைப் பொறுமையாகப் பாருங்கள்.

12ம் திகதி ஜூலைமாதம் 2007ம் ஆண்டு ஈராக் தலைநகர் பக்த்தாத்துக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றின் மேல் பறந்த அமெரிக்க அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், அங்கே நின்றிருந்த 12 பொதுமக்களை சுட்டுப் படுகொலைசெய்துள்ளது. இதில் ருய்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர் 2 வர் அடங்குவர். அவர்கள் தங்கள் கைகளில் கமெராக்களை வைத்திருந்தது கூட தெள்ளத் தெளிவாக அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருக்கிறது. கழுகுபோலப் பறந்து ஒவ்வொருவராகச் சுட்டுத் தள்ளி, பின்னர் குற்றுயிரும் குலையுமாக இருக்கும் மற்றவர்கள் நிலத்தில் இருந்து எழும்போது குறிவைத்து தாக்குகிறது அமெரிக்க ஹெலிகாப்ட்டர். இதுமட்டுமட்டுமா ? தரையில் இருப்பவர்கள் கைகளில் எவ்வித ஆயுதங்களும் இல்லாத நிலையில் , காயப்பட்டவர் எழுந்து தப்பி ஓடப்பார்க்கும்போது, அவர்கள் ஆயுதங்களை எடுக்கவே ஓடுவதாக அமெரிக்க ஹெலிகாப்ட்டரில் இருக்கும் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கிறார்.

இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்தும் தாக்குதலை நடத்துகிறார்கள். இறுதியில் தரைப் படையினர் அவ்விடத்துக்கு வரும்வேளை அங்கே 2 சிறுமிகள் காயப்பட்டு இருக்க அவர்களை அருகில் உள்ள அமெரிக்க இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கொடுக்க ஒரு இராணுவ வீரர் அனுமதிகேட்க்கிறார். ஆனால் அவர் மேலதிகாரி இல்லை என மறுத்து, அச் சிறுமிகளை ஈராக் பொலிசாரிடம் கொடுங்கள் என்று இரக்கமற்று தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தும் வேளையில் பாவிக்கும் சொற்பதங்கள் மிகுந்த இனவெறிகொண்டதாக இருப்பதோடு, பல தகாத வார்த்தைகளையும் உபயோகிக்கின்றனர். ஹெலிகாப்ட்டரில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ஒரு இராணுவ அதிகாரி ஈராக்கில் இருந்து களவாடி வந்து வெளியிட்டுள்ளார்.

அவரை அமெரிக்க இராணுவப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த 17 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்தால் அமெரிக்க இராணுவத்தின் கோரமுகம் தெரியும்.

Collateral Murder –Wikileaks – IRAQ

www.collateralmurder.com , www.athirvu.com





திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சந்தி சிரிக்கும் இந்திய மானம்!



சந்தி சிரிக்கும் இந்திய மானம்!- சமஸ்
சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!
அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது!
ஆப்பிரிக்க உலகப் போர்
ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!
பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்
காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.
காங்கோவில் இந்திய ராணுவம்
ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!
இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்
பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.
மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!
காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.
ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.
உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங்.
பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''
இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே!
என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!

சமச்சீர் கல்வி



சமச்சீர் கல்வி


புதுடெல்லி : சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ‘அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது’ என்று தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. பல தரப்பினரும் நடத்திய அமைதி போராட்டத்துக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடதிட்டம் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், சமச்சீர் கல்வி தீர்ப்பை உடனே ஏற்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி முதல் விசாரணை நடந்து முடிந்தது. இதற்கிடையே பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் அச்சிடும் பணியை அரசு ஒரு புறம் மேற்கொண்டு வந்தது. ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு, பாடப்புத்தகங்களை வழங்காமலே காலம் கடத்தி வந்தது. உயர் நீதிமன்றம் சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது. இதற்காக ஸீ200 கோடி செலவாகியுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் அதை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். மற்ற வகுப்புகளுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்காமல் உள்ளதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிகளில் முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விசாரணையின்போது, ‘இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பழைய பாடப்புத்தகங்களை வழங்க உள்ளது’ என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. மேலும் பாடப்புத்தகங்களை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அடுத்த கட்ட கெடுவையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் தமிழக அரசு புத்தகங்களை வழங்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். நேற்று காலை 10.34 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இது தவிர தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மெட்ரிக். பள்ளிகள் அத்தியாயம்


மெட்ரிக் பள்ளிகள் முதல் முறையாக 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் ஆலமரம் போல பரந்து, விரிந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை என்று 16 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மெட்ரிக் பள்ளிகளின் அத்தியாயம் முடிந்து, பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றனர்.


தனியார் பள்ளிகள் பெயர் மாற்றும்


சமசீர் கல்வி முறையை கொண்டு வரும் போதே தற்போது நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியத்தை அரசு உருவாக்கியது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி இனிமேல் தமிழகத்தில் ஒரே கல்வி வாரியம் தான் செயல்படும். 4 கல்வி முறைகள் இருக்காது. மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் என இதுவரை இருந்து வந்த கல்வி முறைகளுக்கு இனிமேல் தனித்தனி இயக்குநர்கள் இருக்க வாய்ப்பில்லை. தனியார் பள்ளிகளும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்றெல்லாம் பெயர்களில் இயங்காது. பெயர்கள் பொதுவாக இருக்கும். எனவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் இனிமேல் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் வந்துவிடும். சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் வந்துவிட்டால் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடக்கும் காலங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் கேள்வித்தாளை முடிவு செய்வார்கள்.


25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்


சமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம். அவை வருமாறு:Ô1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. 2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். 5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது. 7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. 10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை. 14. சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும். 17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. 19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை. 21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது. 22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.23. சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது. 25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும். ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.--