திங்கள், 22 அக்டோபர், 2012

தலைவர்,ராவ்சாகேப், எல்.சி. குருசாமி (1885-1966)



தலைவர்,ராவ்சாகேப், எல்.சி. குருசாமி (1885-1966)

·         "மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின் ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து, தாங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்லவேண்டும்". - ராவ்சாகேப், எல்.சி. குருசாமி

முக்கிய குறிப்புகள்:-
·         1921 இல் இரண்டு இரவுப்பள்ளிகளை அவர் நிறுவினார்.
சென்னை சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் பகல்நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார்.

·         1921 இல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார்.
·         1937 இல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு ஆழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.


தங்களது நல்ல பண்புகளால் தங்களது குடும்பங்களுக்கு அழகின் ஒளியைக் கொண்டு வருபவர்களே மக்கள் இதயங்களில் தங்கியிருப்பவர் ஆவர். அத்தகைய மாபெரும் மகத்துவம் தன்னகத்தே கொண்டிருந்தவரே  தலைவர் குருசாமி அவர்கள்.
1885 இல் கொட்டப்பா என்பவரது அன்பு மைந்தனாக அவதரித்தார். அவர் தமது துவக்கக் கல்வியை சென்னையில் கற்றார். தமது கல்விப் பருவக் காலம் முதலே அவர் மென்மையாகப் பேசும் இயல்பு கொண்டிருந்தார். நட்புடன் பழகும் இயல்பும் கொண்டிருந்தார். இந்த இயல்புகளைத் தான் வாழ்க்கை முழுவதும் அவர் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்.
கல்விப்பணிகள்:
நாகரிகமான, பண்பாடு நிறைந்த வாழ்க்கையின் முதல்படியானது கல்விதான் என்னும் கோட்பாட்டை அவர் கொண்டிருந்தார். அதனால் 1921 இல் இரண்டு இரவுப்பள்ளிகளை அவர் நிறுவினார். அதற்காக அவர் இரண்டாயிரம் ரூபாய் உதவிப்பணமும் அக்கால அரசாங்கத்திடமிருந்து பெற்றார். புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு, ராயபுரம், மைலாப்பூர். பெரியமேடு, ஆகிய பகுதிகளிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். செங்கல்பட்டு, பொன்னேரி முதலிய முக்கியப் பகுதிகளில் பகல்நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.


சமூக பணிகள்:
மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின் ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து, தாங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்லவேண்டும். 1921 இல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார். புளியந்தோப்பு, வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர், ஆகிய பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர் நிலங்களைப் பெற்றார். ஆதிக்குடி மக்கள் கல்வி, பொருளாதார வகை முதலியவற்றில் வலிமை பெற்றால், பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தாமாகவே ஒழிந்துவிடும் என்ற கருத்தையே அவர் மேற்கொண்டிருந்தார்.
அரசியல் பணிகள்:
1920 முதல் 1930 வரை  பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்றத்தில்  எம்.எல்.ஏ வாகப் பதவியேறிருந்தார். இருபத்திரண்டு வருடக்காலம் அவர் கவரவ நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.
1926 இல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச்சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   
1927 இல் அவர் “ராவ் சாகேப்” என்ற பட்டம் பெற்றார். செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றினார்.
1929 இல் அவர் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார். 1932 இல் டெல்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.
1937 இல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு ஆழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.
ஆதிக்குடி மக்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும், கைகொடுத்து நின்று பணிபுரிந்த இந்த மாபெரும் மனிதர் மகத்துவச் சிறப்புமிகுந்த இந்தத் தலைவர் 1966 இல் மறைந்தார். 

குறிப்பு :- தலைவர் எல்.சி. குருசாமி பற்றிய வரலாறு குறிப்புகளை மற்றும் அவரது படங்கள்  தேடிய பொது இணைய தளத்தில் போதுமான தகவல் இல்லை என்பது வருத்தற்க்குகுரியது. (மேலே குறிப்பிட்டள்ள தகவல்கள் அனைத்து அய்யா, திரு.அன்பு பொன்னோவியம்  அவர்களது கடின முயற்சியில் வெளிவந்த மக்களுக்கு உழைத்த பெருமக்கள் என்ற புத்தகத்தில் வெளிவந்தவை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக