வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்:

ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .


இதனிடையே தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .

கூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .
தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.

அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்பாவு அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப் படுத்தப் படவில்லை .


இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியுள்ளது .

இது சம்மந்தமாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது .உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது .

நண்பர்களே, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நம் நண்பர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்து நாமும் கோஷம் போடுவோம். நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். நம் மக்களை காத்திட நாம் ஒன்றுபடுவோம். வெற்றிபெறுவோம்.

தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


மூடிடு... மூடிடு..... கூடங்குளம் அணு உலையை மூடிடு...


வேண்டாம்.... வேண்டாம்.... அணுஉலை வேண்டாம்.....


ஆபத்து.... ஆபத்து.... அணுஉலையால் ஆபத்து....


வேண்டாம்... வேண்டாம்.... மக்கள் இனம் அழிய வேண்டாம்...


தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....


வேண்டும்... வேண்டும்... எங்கள் ஊர் எங்களுக்கு வேண்டும்....


காத்திடு... காத்திடு... எங்கள் உயிரை காத்திடு...


போராடுவோம்... போராடுவோம்... அணுஉலையை மூடும் வரை போராடுவோம்...


தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


இழைக்காதே.... இழைக்காதே..... துரோகம் இழைக்காதே....


ஆக்காதே.... ஆக்காதே... அணுஉலைக்கு எங்களை பலி ஆக்காதே....


பூட்டு போடு.... பூட்டு போடு... அணுஉலைக்கு பூட்டு போடு...


தீர்வு வேண்டும்... தீர்வு வேண்டும்... நிரந்தர தீர்வு வேண்டும்....



மடிய போகிறோம்... மடிய போகிறோம்.... அணுஉலையால் மடிய போகிறோம்...



தமிழக அரசே.... தமிழக அரசே.... தமிழக அரசே... தமிழக அரசே....


எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....


ஒன்றுபடுவோம்.... ஒன்றுபடுவோம்... அணுஉலைக்கு எதிராக ஒன்றுபடுவோம்...





அணுஉலைக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவும், நல்ல முடிவு கிடைத்திடவும் ஒன்றுபடுவோம்

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மற்றும் உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்று பல்வேறு சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டு போராடிக் கொண்டிருக்கின்றன, தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும். ஆனால், ஒப்பீட்டளவில் இவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கக்கூடியதாக, பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு நம் எதிர்காலத்தையே அச்சுறுத்தக்கூடிய, ஒட்டுமொத்த தமிழகத்தையே சுடுகாடாக்கக் கூடிய சூழல் பேரழிவாக - கூடங்குளத்தில் 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை போதாதென்று இன்னும் 4 அணு உலைகளையும் அங்கேயே அமைப்பதென்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது இந்திய அரசு. இன்று மற்றெல்லா பிரச்சினைகளையும் ஓரம் கட்டிவைத்துவிட்டு, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராட வேண்டிய மிக இக்கட்டான நிலையில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

தொடக்கம் முதலே முரண்பாடுகளும் மோசடிகளும் நிறைந்திருப்பதே கூடங்குளம் அணுமின் திட்டம்! 1988 நவம்பர் 20 அன்று சோவியத் ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம் - மக்களின் கடும் எதிர்ப்பாலும், சோவியத் ஒன்றியத்தின் சிதைவாலும் 90களில் கைவிடப்பட்டது. இருப்பினும், 1997இல் தேவ கவுடாவும், 2001இல் வாஜ்பாயும் ரஷ்ய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் கூடங்குளம் திட்டம் புதுப்பிக்கப்பட்டது.

1994 சுற்றுச் சூழல் சட்டப்படி, 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு திட்டமும் அது தொடர்பான சுற்றுச் சூழல் துறை உரிய மதிப்பீட்டாய்வு நடத்தி, அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன்வைத்து, மக்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆனால், 1988 இல் அனுமதி பெற்றுவிட்டோம் என்ற காரணத்தைக் கூறி அணுசக்தித் துறை இதற்கு மறுத்து வருகிறது. உண்மை என்னவெனில், 1988 ஒப்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதும் ஒரே ஒப்பந்தமல்ல. இரண்டுக்குமிடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அப்போது அணு உலைக்காக குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை நீரை எடுத்துக் கொள்ளப் போவதாக கூறப்பட்டு வந்தது. இப்போதோ அதனைக் கைவிட்டுவிட்டு, கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போகிறார்களாம் (இதற்கு டாடா நிறுவனத்துடன் 2004 இல் 116 கோடி ரூபாய்க்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது).

மேலும், 1998 முதல் 2001க்கு இடைப்பட்ட காலத்தில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் உருகிய பாறைக்குளம்பு வெடித்து வெளிவந்தது போன்ற நிலவியல் மாற்றங்கள் நடந்துள்ளன. கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்படும் பகுதியின் நிலமேலோடு, மிக பலவீனமாக இருப்பதாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய பேராசிரியர் ம. ராமசர்மா, டாக்டர் பிஜூ லாங்கினோஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் அணுசக்தித் துறை கணக்கில் கொள்ளவே இல்லை. மேலும் 4 அணு உலைகளை கூடங்குளத்தில் அமைக்க மக்கள் கருத்தை கேட்டு நிற்கிறது அணுசக்தித் துறை. இதற்காக 2004 இல் ‘நீரி' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கையைப் பார்த்தால், இவர்களெல்லாம் விஞ்ஞானிகள்தானா அல்லது ‘ரெண்டாம் கிளாஸ்' மாணவர்களா என்ற அய்யப்பாடே நமக்கு எழுகிறது.

சில முக்கிய முரண்பாடுகளைப் பார்ப்போம்.

 2001 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள பின்னரும், இதில் முழுமையாக 1991 மக்கள் தொகை கணக்குகளே (அதுவும் தவறாக) பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கூடங்குளத்திலிருந்து 29.6 கி.மீ தொலைவிலுள்ள நாகர்கோவில் நகரின் மக்கள் தொகை 2,662 என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை இங்கு 2,09,665 ஆகும்.

 இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகமே அணுஉலையிலிருந்து 16 கி.மீ. தொலைவுக்குள் 10,000 மக்கள் உள்ள ஊர் இல்லாமலிருப்பதை விரும்புகிறது. இங்கோ இந்த எல்லைக்குள் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 11,029. பழவூரின் மக்கள் தொகையோ 15,811. லெவிஞ்சிபுரத்தின் மக்கள் தொகையோ 12,679.

 இந்த அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட இல்லை. பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.

 வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணுஉலைகள் இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது. இங்கே 1000 மெகாவாட் திறனுடைய 6 உலைகளாம். ஆனால், கடல் நீர் மட்டும் 7 டிகிரிதான் சூடாகுமாம்!

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதையே அறியாத இவர்கள் கட்டும் அணுஉலைகள் மிகப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நாம் எப்படி நம்புவது? இத்திட்டத்தால் குமரி முதல் ராமநாதபுரம் வரையிலுமுள்ள மீனவர் வாழ்க்கை என்னவாகும்? கடல் மாசுபட்டால் பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும் சேதுக்கால்வாயில் வெளிநாட்டுக் கப்பல்கள் வருமா? விபத்து ஏற்பட்டால், தென் மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகை என்ன என்று எதுவுமே இன்று வரை அறியத்தரப்படவில்லை.

அத்துடன் இவர்கள் சொல்வதையும்கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவும் இயலாது. முதலில் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என்று கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர். அணு உலைக்கான கருவியொன்று கொண்டு வரப்பட்ட சரக்குந்து உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் இருவர் பலி. அண்மையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளத்திற்கு வந்தபோதுகூட, அவர் நின்ற இடத்திற்கு சில அடிகள் தொலைவில் இருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குளிர்சாதனத்தை இயக்க கூரைக்கு மேல் பொறி யாளர் ஏறினாராம், அது இடிந்து விழுந்ததாம். இவர்கள்தான் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களாம்!

எண்பதுகளின் இறுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் குமரி மாவட்ட விவசாயிகளும் பரவலாக, தமிழக மக்களும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகப் போராடினர். கட்சிகளைப் பொறுத்தளவில், அப்போது தி.மு.க. இதனை கடுமையாக எதிர்த்தது. அப்போதைய அதன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான வைகோ, கூடங்குளம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். பின்னர் அடிக்கல் நாட்டுவிழா கைவிடப்பட்டது. இன்று தி.மு.க. திட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கிறது!

பா.ம.க.வும் தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பின்னர் ஒருமுறை அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாசு, தன்னை டெல்லியில் விஞ்ஞானிகள் சந்தித்து இதுபற்றி தெளிவாக விளக்கியதாகவும், அதற்குப் பிறகுதான் அணுஉலை கூடங்குளத்தில் பாதுகாப்பாக அமைக்கப்படுவதாகத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இப்போது...?!

இதழ்களில் ‘தினமணி' அதிகளவில் எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டு விழிப்புணர்வூட்டியது. ‘துக்ளக்' இதழ்கூட உலையை ஆதரிக்கவில்லை. இன்றோ கூடுதலாக 4 அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் புதின் கையெழுத்திட்டதும் துள்ளிக் குதித்து வாழ்த்துப் பாடுகிறது ‘தினமணி'. அப்போது, "அய்க்கப்' மாணவர் அமைப்பு, திராவிடர் கழகம், கோவை ராமகிருட்டிணன் - தி.க., இந்திய மக்கள் முன்னணி, எஸ்.யு.சி.அய்., முற்போக்கு இளைஞர் அணி உட்பட ஏராளமான அமைப்புகளும் தனிநபர்களும் தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடின. பழ. நெடுமாறன், பெ. மணியரசன் உட்பட ஏராளமான தலைவர்கள், அறிவுஜீவிகள் அவற்றில் பங்கேற்றனர் (இப்பட்டியல் முழுமையானதல்ல). ஆனால், இன்று இவர்களில் பலரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்குமோ என்று கருதுமளவிற்கு கூடங்குளம் தொடர்பாக தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

இருப்பினும், எந்தத் தலைவரின் வருகைக்காகவும் காத்திருக்கவில்லை மக்கள். கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்காக, மக்கள் கருத்தை கேட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று நெல்லையில் நடத்தப்பட்ட கருத்தாய்வு கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மீனவர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தொண்டமைப்பினர் எனத் திரண்ட மக்களின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே கூட்டம் கைவிடப்பட்டது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பங்கேற்றார். இதில் பங்கேற்ற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, மக்களால் அம்பலப்படுத்தப்பட்டார்.

சனவரி 25, 2007 அன்று கூடங்குளத்தில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 1800 பேர் பங்கேற்ற மாபெரும் மறியல் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரில் நடைபெற்றதுடன் அங்கு பணிக்குச் சென்ற பணியாளர்களும் மக்களால் தடுக்கப்பட்டனர். பிப்ரவரி 15 அன்று கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் போராளி மேதாபட்கர் தலைமையில் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஆஸ்வால்ட், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், மீனவர்கள், விவசாயிகள் என சாதி, மத எல்லைகளைக் கடந்து மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இப்பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களைப் பிளவு படுத்துவோருக்கு எதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வு இப்பகுதி மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வாழ்வாதாரத்துக்காக, அகிம்சை வழியில் நீங்கள் போராடுகிறீர்கள். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த அரசுக்கு உணர்த்தி இருக்கின்றீர்கள். ஆனால், அரசு வன்முறையை விரும்புவது போல் அழிவு சக்திக்கு ஊக்கமளித்து வருகிறது. மக்களின் சக்திக்கு முன் எந்த கதிர் வீச்சு சக்தியோ, அணுசக்தியோ நிற்காது. மக்களின் ஒட்டுமொத்த கருத்துதான் முக்கியமே தவிர, ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த பட்டினிப் போராட்டம்தான் மக்களின் கருத்தறியும் கூட்டம். இயற்கையோடு இணைந்ததுதான் மனித வாழ்க்கை. வாழ்வதற்குதான் நாம் இருக்கிறோம். சாவதற்கு அல்ல. அணுசக்தி விஷயத்தில் எல்லாமே கமுக்கமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன. இன்று பாதுகாப்பு தருவோம், மக்களை இடப் பெயர்ச்சி செய்யமாட்டோம் என்று கூறும் அரசாங்கம், நாளையே உங்களை கைவிட்டுவிடும். மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தலித்துகள் என அனைவரின் நலனும் முக்கியம். இந்த விஷயத்தில் சாதி, மத பேதம் இல்லாமல் நீங்கள் போராட வேண்டும்'' என்று மேதாபட்கர் எழுச்சியுரை ஆற்றினார்.

இதனையடுத்து, கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் எழிலரசு, அணுஉலைக்கு ஆதரவாக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் 3000 பேர், பிப்ரவரி 23 அன்று தலைவரை யும் உறுப்பினர்களையும் ஊர்வலமாக அழைத்து வந்து பதவி விலகக் கோரினர். இதனையடுத்து 10 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இதனிடையே எப்படியாவது மக்கள் கருத்தாய்வு நடத்தி கூடுதல் அணுஉலைகளுக்கும் அனுமதி வாங்கத் துடிக்கிறது அணுசக்தித் துறை.

கடந்த அக்டோபரில் பாதியில் கைவிடப்பட்ட கூட்டத்தின் முடிவில், இந்த சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையின் தமிழாக்கம் தரப்படும்; நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி என 3 இடங்களிலும் கருத்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றெல்லாம் மாவட்ட ஆட்சியரும், மாசுக் கட்டுப்பாடு வாரியமும், அணுசக்தித் துறையும் ஒப்புக் கொண்டனர். ஆனால், இப்போதோ இவற்றுக்கு மாறாக, அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் கூட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு, எதிர்ப்பு ஏற்பட்டதும் அவர் வெறும் பார்வையாளராகவே பங்கேற்பார் என்று கூறுகிறார்கள். சுற்றுச்சூழல் சட்டப்படி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மட்டுமே இவற்றில் பங்கேற்க முடியும்; அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. சட்டம் என்னவாக இருந்தால் என்ன, எப்படியாவது இதனை நிறைவேற்றியே தீருவது என்று தீர்மானித்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். அதற்கேற்பவே, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவதாகவும் அவர்களை காவல் துறையினர் உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், இத்திட்டத்திற்கு எதிராகச் செயல்படுவோர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையாகச் சொல்ல இயலாது என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார், நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ்.

அணுகுண்டு வெடித்தால் எத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து, புல் பூண்டே பல தலைமுறைகளுக்கு முளைக்காமல் நாசமாகும் என்பதை இரோஷிமா, நாகசாகி மூலம் உலகம் அறிந்திருக்கிறது. அத்தகைய அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அணுஉலைகளால் ஆபத்து நிகழ்ந்தால் ஏற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாதவை. இருப்பினும், அணுஉலைகளை தொடர்ந்து தமிழகத்தில் நிறுவ ஆட்சியாளர்கள் முடிவெடுத்து விட்டனர். இனி தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து களம் காண்பதே, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களின் கடமையாகும். இல்லையெனில், தமிழ்ச் சமூகம் பிணக்குவியலாவதற்கு தயாராவதைத் தவிர வேறு வழியில்லை.

மின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை அடிமைத்தனம்தான் மிஞ்சும்!: டாக்டர் ஆர். ரமேஷ்

தொடக்க காலம் முதலே இந்திய அணுசக்தித் துறை தன் திறமை குறித்து, மக்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளை உலவ விட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1962 இல் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி பாபா, 1987 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் சுமார் 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம்' என்று அடித்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அணுசக்தித் துறைக்கு தலைமை தாங்கிய டாக்டர் விக்ரம் சாராபாய், ‘2000 இல் இந்திய அணுஉலைகள் சுமார் 45,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்' என்று சத்தியம் செய்தார். இந்த சத்தியங்கள் யாவும் நீரில் எழுதப்பட்ட வாசகங்களே என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

ஆனால், இன்றும் இந்திய அணுஉலைகள் வெறும் 3310 மெகாவாட் மின்சாரத்தையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. அப்படியும் 2030 ஆம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தையும், 2052 ஆம் ஆண்டுக்குள் 2,75,000 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யப்போவதாக மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.

அணுசக்தித் துறையின் இந்த வாதங்கள் அனைத்தும் வெறும் கையில் முழம் போடும் செயலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் பணத்தில் மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்திய அரசின் இந்தப் பணத்தில் 1.1 சதவிகிதத்தை மட்டுமே உபயோகிக்கும் நிலையில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பேணுவதற்கான ஆராய்ச்சிகள் வெறும் 0.1 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலையில் அணுசக்தித் துறையோ ஒவ்வொரு ஆண்டும் இந்தக் ‘கனவு நிலை'யை அடைவதற்காக இந்நிதியில் 11.12 சதவிகிதத்தை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறது?

தன்னைவிட 30 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படத் தொடங்கிவிட்டதும், 100 மடங்குக்கும் அதிகமான ஆராய்ச்சிப் பணத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதுமான அணுசக்தித் துறையைவிட, காற்றாலைகளால் கடந்த 20 ஆண்டுகளிலேயே கூடுதலான அளவில் மின்சாரத்தைத் தயாரிக்க முடிந்திருக்கிறதே! அப்படியானால் யாருக்கு அதிக நிதி அளிக்கப்பட வேண்டும்?

அணு உலை அமைக்கப்படுவது மின்சாரம் தயாரிக்க என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அணுகுண்டு தயாரிக்கத்தான் என்று சிலர் ரகசியமாக திருப்திபட்டுக் கொள்கிறார்கள். மின்சாரம்தான் கிடைக்கவில்லை; அணுகுண்டாவது நமக்கு கிடைக்குமா?

1974 ஆம் ஆண்டில் இந்திய அரசு அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்தது. இதன் காரணமாக, அணு விநியோகக் குழுமம் என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் - அணு எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள் அனைத்தும் கூடி, இந்தியாவுக்கு இனி அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையோ, பொருட்களையோ விற்பது இல்லை என்று முடிவெடுத்தன. 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு அணுகுண்டுகளை மீண்டும் பரிசோதனை செய்தபோது, இந்தத் தடை மேலும் இறுகிப் போனது.

அணுசக்தி விசயத்தில் இந்தியாவுக்கு உதவும் ரஷ்ய அரசின் முடிவை, அமெரிக்க அரசு தொடக்கம் முதலே எதிர்த்து வந்திருக்கிறது. அமெரிக்க அரசின் கடுமையான எதிர்ப்பைத் தாங்க முடியாத ரஷ்ய அரசு, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த இரண்டு அணுஉலைகளைத் தவிர மேற்கொண்டு எந்தவித உதவியையும் இனி ரஷ்ய அரசு செய்யாது என்பதையும், தாராப்பூர் அணுஉலைக்குத் தேவைப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை இனி விநியோகிக்காது என்பதையும் வெளிப்படையாகவே அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் தயவு இல்லாமல் இந்திய அணுமின் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற முடிவுக்கு அரசு வந்தது. அணுப்பொருள் விநியோகக் குழுமத்தின் அதிமுக்கிய உறுப்பினரான அமெரிக்க அரசின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட்டால், அந்தக் குழுமத்தினால் முன் வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிடாமலேயே - நாட்டின் அணுமின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று இந்தியா கனவு கண்டது.

அமெரிக்க அரசை எப்படியாவது இதற்கு இணங்க வைக்கும் முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. 2006 பிப்ரவரி மாதம் ஈரானின் அணுமின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க அரசால் அய்.நா. அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஈரான் தன் நட்பு நாடு என்றும் பாராமல் இந்திய அரசு ஆதரவு தெரிவித்தது. 2006 டிசம்பரில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கான சட்டத்தை அமெரிக்க நாட்டின் மக்களவை இயற்றியது. ஆனால், அந்த சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நம் பிரதமராலும் அமெரிக்க அதிபராலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய அணுசக்தித் துறைக்கு சாதகமாக இருந்த பல்வேறு பகுதிகள் காணாமல் போயிருந்தன.

இந்த டிசம்பர் 2006 சட்டத்தின்படி, இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணுஉலைகளையும், அணு எரிபொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், எரிபொருளை மொத்தமாக வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. தீரத்தீரவே வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வாங்கும் அணு எரிபொருள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற அறிக்கையை, இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரிடம் அளிக்க வேண்டும். அதை அவர் அமெரிக்க மக்களவையின் முன் வைப்பார். இதில் குளறுபடி ஏதும் நடைபெற்றால், அதை ஆய்வு செய்ய அமெரிக்க அணுசக்தி அதிகாரிகளை இந்திய அணுஉலைகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எரிபொருளில் இருந்து கிடைக்கும் - எரிந்து முடிந்த எரிபொருளை மறு சுத்திகரிப்பு செய்து, அதிலிருந்து கிடைக்கும் புளூட்டோனியத்தை இந்தியா அதன் ‘பாஸ்ட் பிரீடர்' அணு உலைகளில் பயன்படுத்தக் கூடாது. மேலும், இந்த மறுசுத்திகரிப்புக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க இந்தச் சட்டம் தடை செய்கிறது.

1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளின் போது நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனையைப் போல, இன்னொரு முறை இந்திய அரசு அணு ஆயுதங்களைப் பரிசோதனை செய்தால், இந்த சட்டம் பேச்சுவார்த்தையின்றி ரத்து செய்யப்படும். இதுவரை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அனைத்து கருவிகளையும், எரிபொருளையும் இந்திய அரசு உடனடியாகத் திருப்பி அளித்துவிட வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் சர்வதேச அரசியலில் அமெரிக்க அரசிற்கு எதிரான முடிவுகளை, இந்திய அரசு பலமுறை எடுத்திருக்கிறது. இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிலையில் மேற்கூறிய சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகாரங்களைக் கொண்டு, நம் அணுமின் திட்டத்தை அமெரிக்க அரசால் முடக்கிப் போட்டுவிட முடியும்.

ஆக, மின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை. நாம் அமெரிக்காவிற்கு அடிமையாவதுதான் இந்தத் திட்டங்களின் பயன்.



.

இதையும் படிக்கவும்

http://jayabarathan.wordpress.com/2010/02/25/kudungulam-atomic-reactor/




திங்கள், 12 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்- சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு. முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -

இமானுவேல் சேகரன்

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு. கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு, துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்? இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

_____________________________________________________________

- குருசாமி மயில்வாகனன்


கட்டுரை :வினவு

புதன், 31 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவின் இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை

அமெரிக்காவின் இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை ஒன்றின் வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது என்றாலும் அது அமெரிக்க இராணுவத்தால் எடிட் செய்யப்பட்டு அவர்களுக்குச் சாதகமான முறையில் வெளியானது. ஆனால் இந்த எடிட் செய்யாத வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நடக்கும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாம் குரல்கொடுப்போம் என்று கூறிவரும் அமெரிக்கா சமீபகாலமாக போர் குற்றங்களுக்கும் எதிராகக் குரல்கொடுத்து வருவதாகவும் தன்னை உலகிற்கு காட்டி வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ள போர் குற்றங்களை யார் கேட்ப்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 17 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அதிர்ச்சிக் காணொளியைப் பொறுமையாகப் பாருங்கள்.

12ம் திகதி ஜூலைமாதம் 2007ம் ஆண்டு ஈராக் தலைநகர் பக்த்தாத்துக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றின் மேல் பறந்த அமெரிக்க அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், அங்கே நின்றிருந்த 12 பொதுமக்களை சுட்டுப் படுகொலைசெய்துள்ளது. இதில் ருய்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர் 2 வர் அடங்குவர். அவர்கள் தங்கள் கைகளில் கமெராக்களை வைத்திருந்தது கூட தெள்ளத் தெளிவாக அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருக்கிறது. கழுகுபோலப் பறந்து ஒவ்வொருவராகச் சுட்டுத் தள்ளி, பின்னர் குற்றுயிரும் குலையுமாக இருக்கும் மற்றவர்கள் நிலத்தில் இருந்து எழும்போது குறிவைத்து தாக்குகிறது அமெரிக்க ஹெலிகாப்ட்டர். இதுமட்டுமட்டுமா ? தரையில் இருப்பவர்கள் கைகளில் எவ்வித ஆயுதங்களும் இல்லாத நிலையில் , காயப்பட்டவர் எழுந்து தப்பி ஓடப்பார்க்கும்போது, அவர்கள் ஆயுதங்களை எடுக்கவே ஓடுவதாக அமெரிக்க ஹெலிகாப்ட்டரில் இருக்கும் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கிறார்.

இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்தும் தாக்குதலை நடத்துகிறார்கள். இறுதியில் தரைப் படையினர் அவ்விடத்துக்கு வரும்வேளை அங்கே 2 சிறுமிகள் காயப்பட்டு இருக்க அவர்களை அருகில் உள்ள அமெரிக்க இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கொடுக்க ஒரு இராணுவ வீரர் அனுமதிகேட்க்கிறார். ஆனால் அவர் மேலதிகாரி இல்லை என மறுத்து, அச் சிறுமிகளை ஈராக் பொலிசாரிடம் கொடுங்கள் என்று இரக்கமற்று தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தும் வேளையில் பாவிக்கும் சொற்பதங்கள் மிகுந்த இனவெறிகொண்டதாக இருப்பதோடு, பல தகாத வார்த்தைகளையும் உபயோகிக்கின்றனர். ஹெலிகாப்ட்டரில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ஒரு இராணுவ அதிகாரி ஈராக்கில் இருந்து களவாடி வந்து வெளியிட்டுள்ளார்.

அவரை அமெரிக்க இராணுவப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த 17 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்தால் அமெரிக்க இராணுவத்தின் கோரமுகம் தெரியும்.

Collateral Murder –Wikileaks – IRAQ

www.collateralmurder.com , www.athirvu.com





திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சந்தி சிரிக்கும் இந்திய மானம்!



சந்தி சிரிக்கும் இந்திய மானம்!- சமஸ்
சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!
அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது!
ஆப்பிரிக்க உலகப் போர்
ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!
பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்
காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.
காங்கோவில் இந்திய ராணுவம்
ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!
இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்
பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.
மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!
காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.
ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.
உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங்.
பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''
இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே!
என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!

சமச்சீர் கல்வி



சமச்சீர் கல்வி


புதுடெல்லி : சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ‘அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது’ என்று தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. பல தரப்பினரும் நடத்திய அமைதி போராட்டத்துக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடதிட்டம் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், சமச்சீர் கல்வி தீர்ப்பை உடனே ஏற்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி முதல் விசாரணை நடந்து முடிந்தது. இதற்கிடையே பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் அச்சிடும் பணியை அரசு ஒரு புறம் மேற்கொண்டு வந்தது. ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு, பாடப்புத்தகங்களை வழங்காமலே காலம் கடத்தி வந்தது. உயர் நீதிமன்றம் சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது. இதற்காக ஸீ200 கோடி செலவாகியுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் அதை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். மற்ற வகுப்புகளுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்காமல் உள்ளதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிகளில் முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விசாரணையின்போது, ‘இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பழைய பாடப்புத்தகங்களை வழங்க உள்ளது’ என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. மேலும் பாடப்புத்தகங்களை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அடுத்த கட்ட கெடுவையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் தமிழக அரசு புத்தகங்களை வழங்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். நேற்று காலை 10.34 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இது தவிர தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மெட்ரிக். பள்ளிகள் அத்தியாயம்


மெட்ரிக் பள்ளிகள் முதல் முறையாக 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் ஆலமரம் போல பரந்து, விரிந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை என்று 16 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மெட்ரிக் பள்ளிகளின் அத்தியாயம் முடிந்து, பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றனர்.


தனியார் பள்ளிகள் பெயர் மாற்றும்


சமசீர் கல்வி முறையை கொண்டு வரும் போதே தற்போது நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியத்தை அரசு உருவாக்கியது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி இனிமேல் தமிழகத்தில் ஒரே கல்வி வாரியம் தான் செயல்படும். 4 கல்வி முறைகள் இருக்காது. மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் என இதுவரை இருந்து வந்த கல்வி முறைகளுக்கு இனிமேல் தனித்தனி இயக்குநர்கள் இருக்க வாய்ப்பில்லை. தனியார் பள்ளிகளும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்றெல்லாம் பெயர்களில் இயங்காது. பெயர்கள் பொதுவாக இருக்கும். எனவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் இனிமேல் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் வந்துவிடும். சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் வந்துவிட்டால் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடக்கும் காலங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் கேள்வித்தாளை முடிவு செய்வார்கள்.


25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்


சமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம். அவை வருமாறு:Ô1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. 2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். 5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது. 7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. 10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை. 14. சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும். 17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. 19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை. 21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது. 22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.23. சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது. 25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும். ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.--