திங்கள், 15 ஆகஸ்ட், 2011
சந்தி சிரிக்கும் இந்திய மானம்!
சந்தி சிரிக்கும் இந்திய மானம்!- சமஸ்
சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!
அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது!
ஆப்பிரிக்க உலகப் போர்
ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!
பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்
காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.
காங்கோவில் இந்திய ராணுவம்
ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!
இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்
பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.
மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!
காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.
ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.
உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங்.
பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''
இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே!
என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!
லேபிள்கள்:
ஆப்பிரிக்க,
உலகப் போர்,
சந்தி சிரிக்கும் இந்திய மானம்,
பாலியல் முறைகேடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக