யார் இந்த சிவாஜிலிங்கம்…..
முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவென இயங்கிவரும் ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் பொது நிகழ்வொன்றில் நடந்துகொண்ட முறையூடாகவும், அந்நிகழ்வில் அவர் கொட்டிய வார்த்தைகளும் அவர்மனதில் ஊறிக்கிடக்கும் சாதியமேலாதிக்க அதிகாரவெறியை மக்கள் முன்நிலையில் அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ்த்தேசிய விடுதலை என்று
பேசுகின்றவர்கள் மீது இதுவரைகாலமும் நாம் சந்தேகம் கொள்வதற்கு இதுதான்
காரணம். தான் சார்ந்த சமூகத்தில் நிலவும் உள்முரண்பாடுகளையும், குறிப்பாக
எம்மத்தியில் நிலவும் சாதிய ஏற்த்தாழ்வு மனநிலையால் மேற்கொள்ளப்பட்டுவரும்
சமூக ஒடுக்குமுறைகள் மீது எவ்வித அக்கறை கொள்ளாதவர்களாகவே தமிழத்தேசிய
அரசியல் பேசுபவர்களை நாம் இனங்கணடு வந்துள்ளோம். அதற்கு உங்கள்
கண்முன்னால் உள்ள சாட்சிதான் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள். இவர் மனித உரிமை
குறித்துப்பேசுவதற்கும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை
குறித்துப்பேசுவதற்கும் எந்தவிதத்தில் தகுதியுடையவர்? பிராபாகரனின்
உறவுக்காரன் என்பது ஒரு தகுதியா? பிரபாகரனின் தாயாரின் ஈமைச்சடங்குகளை
நடாத்தி முடித்தவர் என்பது ஒரு தகுதியா? நீண்டகாலமாக தமிழ் ஈழ விடுதலை
இயக்க உறுப்பினராக இருந்து வருவது ஒரு தகுதியா? அல்லது ஒரு தமிழனைப்
பார்த்து ‘அடே சக்கிலியா ’என இழிவுபடுத்தும் பண்பாட்டை இவரது தகுதியாக
கொள்வதா? இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களே எந்த தகுதியின் அடிப்படையில்
இவரை தொடர்ந்தும் எமக்கான அரசியலை மேற்கொள்ள நாம் அனுமதிப்பது?
திரு சிவாஜிலங்கம் அவர்கள் தமிழ்பேசும்
சமூகத்திற்கான அரசியல், சமூக விவகாரங்கள் குறித்து சிந்திப்பதற்கே எவ்வித
தகுதியும் அற்றவர் என்பதை எமது கண்முன்னால் நிரூபித்து வருகின்றார்.
இப்படிப்பட்ட ஒருவரை தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் சார்ந்த அரசியலை
மேற்கொள்வதற்கு இவரது கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தொடர்ந்து
அனுமதிக்குமா? இவர் சார்ந்த கட்சியினர் சிவாஜிலிங்கம் மீது மேற்கொண்ட
ஒழுக்காற்று நடவடிக்கைதான் என்ன?
26.04.2012 அன்று மறைந்த திரு
செல்வநாயகம் அவர்களின் நினைவுதினம் நடைபெற்ற இடத்தில், அந்நிகழ்விற்கு
அழைக்கப்பட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான திரு இராசதுரை
அவர்களை நோக்கியே ‘அடே சக்கிலியா’’துரோகி ‘ என்றெல்லாம் கூறி
அவமானப்படுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம் அவர்கள். ‘அடே சக்கிலியா’என்று
சிவாஜிலிங்கம் கூறியதன் ஊடாக அவர் ஒரு சாதிய மேலாதிக்க மனநிலையுடன்
வாழ்ந்து வருகின்றார் என்பதை தமிழ் மக்களால் புரிந்து கொண்டிருக்க
முடியும்.
அடுத்ததாக திரு. இராசதுரை அவர்களைப்
பார்த்து சிவாஜிலிங்கம் துரோகி என்று அழைப்பதற்கான கேலிக்குரிய நியாத்தைக்
கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்…..:
78ஆம் ஆண்டு பயங்கரவாதத்
தடுப்புச்சட்டத்திற்கு ஆதரவாக இராசதுரை அவர்கள் வாக்களித்ததற்காகவே அவரை
துரோகியாக சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்துகின்றார். திரு.இராசதுரை அவர்கள்
மேற்கொண்ட அரசியல் நாகரீகத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளேயே பலரது
நன்மதிப்பை பெற்று வந்தார். கூட்டணியின் அரசியலில் நூறு வீத முரண்பாடு
கொண்ட பல இடதுசாரிகள் இராசதுரை அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்பதற்காக
மட்டுமே சென்றதுண்டு. அவ்வாறு அவர் நேர்மையாகவும் மிகஅழகாகவும் பேசுவார்.
இதனால் இராசதுரை அவர்களின் அரசியல் செல்வாக்கு மக்கள்
மத்தியிலும்,கூட்டணியின் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் மேலோங்கி வந்தது.
இதை சகித்துக்கொள்ளமுடியாத கூட்டணியின் யாழ் மேலாதிக்கத் தலைமையானது
இராசதுரையை வீழ்த்துவதற்கு துரோக வலையை விரித்தது.
அந்த வலைதான் 1977 ஆம் ஆண்டில் நிகழ்ந்த
தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தேர்தலாகும். இதில் கூட்டணியின் சூரியன்
சின்னத்தில் இராசதுரையை வேட்பாளராக நிறத்தியதோடு, தமிழ் அரசுக்கட்சியின்
வீட்டுச்சின்னத்தில் தமது செல்லப்பிள்ளையான மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர்
காசிஆனந்தனையும் வேட்பாளராக நிறுத்தியது யாழ் மேலாதிக்கத் தலைமை. தனது
வேட்பாளரை தானே தோற்றகடிக்கவைப்பதற்காக இந்த யாழ்மேலாதிக்கம் மேற்கொண்ட
அரசியல் ‘சாணக்கியத்தை’ நாம் என்னவென்பது! .இராசதுரை தமதுகட்சிக்குள்
செல்வாக்கு மிக்கவராகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் நன்மதிப்பை
பெற்றவராகவும் இருந்ததன் காரணமாகவே அவரை 77ஆம் ஆண்டுத் தேர்தலில்
தோற்கடிப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியானது காசிஆனந்தன் ஊடாக துரோக
வலையைப்பின்னியது.
இருந்தபோதும் இராசதுரை அவர்கள் தேர்தலில்
வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்தக்காலகட்டத்தில்
கூட்டணியினரின் மக்களை ஏமாற்றும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்ட
ஒன்றுதான் தாம் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை அரச மந்திரிகளுக்கும், அரச
நடவடிக்கைகளுக்கும் ஆதரவான செயல்பாடுகள் எதிலும் பங்குபற்றுவதில்லை என்ற
ஏமாற்றுக் கோசம்.
1978இல் மட்டக்களப்பில் நிகழ்ந்த இயற்கை
அழிவுகளை பார்வையிட பிரேமதாசா அவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது
இராசதுரை அவர்கள் பிரேமதாசாவுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை சென்று
பார்வையிட்டுள்ளார். இராசதுரையின் இந்த நடவடிக்கையானது தமது தமிழ் ஈழ
இலட்சியத்திற்கு நிகழ்ந்த அவமானம் எனக்கூறி யாழ்மேலாதிக்கத் தலைமையானது
திரு. இராசதுரை அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டது.
தொடர்ச்சியான யாழ்மேலாதிக்கத்தின் தொல்லைகளிலிருந்து மீழ்வதற்காக இராசதுரை
அவர்கள் அரசுடன் இணைந்து மந்திரிப்பதவியையும் பெற்றுக்கொண்டார். அதே
காலப்பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது
அதற்கு ஆதரவாக இராசதுரை அவர்கள் வாக்களித்திருந்தார். இதற்காகத்தான் இன்று
அவரை தேசத்துரோகி என சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியுள்ளார்.
பாயங்கரவாத தடைச் சட்டத்திற்கான
வாக்கெடுப்பு நடைபெற்றபோது இந்த யாழ் மேலாதிக்கம் எதிர்த்து வாக்களித்தா
என்றால் இல்லை. அவர்கள் அத்தருணத்தில் சிற்றூண்டிச்சாலையில் தேனீர்
அருந்திக்கொண்டிருந்துனர். ஏன் அவர்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை!
முதல் நாள் ஜே.ஆர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவர்கள் சமூகமளிக்காமல்
தவிர்த்துக்கொண்டு தமது தமிழ் ஈழ இலட்சியத்தை புனிதப்படுத்தினார்கள்.
இவ்வாறான யாழ்மேலாதிக்க அரசியல் தலைமைகளது மக்களை எமாற்றி இலங்கை அரசுடன்
கூடிக்குலாவிய சம்பங்கள் ஏராளம். இவ்வாறு வரலாறு இருக்க சிவாஜிலிங்கம்
அவர்கள் இராசதுரை அவர்களைப் பார்த்து ‘துரோகி’ என்கிறார், அட சக்கிலியா
‘என்கிறார். இவ்வாறான யாழ்மேலாதிக்கத் தலைமைகளின் அரசில்
ஏமாற்றுக்களையும், சாதி வெறி மனநிலைகளையும், இப்படிப்பட்டவர்கள் யாருடைய
நலன்களுக்கான அரசியலை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை
சாதியப்பாகுபாடுகளால் பல்வேறு சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் மக்கள்
இனம் கண்டுகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்...
அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை.
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி.
http://www.thuuu.net/?p=1040#more-1040
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக