வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தமிழர்கள் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடுகிறோம்?

ஆதியிலிருந்து தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபு கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது.

சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியது.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

இன்று உலகில் தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72.
இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.

ஆனால் தமிழர்கள் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடுகிறோம்?

´தை மாதம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினம்´ என்று ஒரு சாரரும், ´சித்திரை கொண்டாட்டம் தான் பழக்கத்தில் இருந்தது´ என்றும் விவாதம் தொடருகின்றன.

சித்திரையில் தமிழர் புத்தாண்டு தினத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள் வகைப்படுத்திய 60 மாதங்களையும், அதன் புராண கதைகளையும் ஆராய வேண்டுகிறோம்.

தமிழ்மொழியில் கூட பெயரற்ற மாதத்தை சார்ந்து அதுவே தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இதைவிட பெரிய அறியாமை இருக்க முடியுமா?

60 மாதங்களின் பெயர்கள் எதுவும் தமிழ் இல்லை. அனைத்தும் சமஸ்கிருதம். இதில் 60 மாதங்கள் மூன்று பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள் ஆரியர்கள். உத்தம வருஷங்கள் - மத்திம வருஷங்கள் - அதம வருஷங்கள்.

1. உத்தம வருஷங்கள்:

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய

2. மத்திம வருஷங்கள்:

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர,(௨0௧௧) நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ

3. அதம வருஷங்கள்:

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய

´பிரபவ´ மாதத்தில் தொடங்கி ´அஷய´ மாதத்தில் முடியும் 60 பெயர்களுக்கான புராணக் கதையையும் என்னவென்று பாருங்கள்.

அறுபதினாயிரம் பெண்களுடன் கிருஷ்ண பகவான் இருப்பதைக் கண்ட நாரதர் கிருஷ்ணனிடம், "60.000 பெண்களை வைத்திருக்கிறாயே. இதில் ஒரு பெண்ணை எனக்கு தரக்கூடாதா?" என்று கேட்கிறார்.

கிருஷ்ண பகவான், "நான் இல்லாத வீட்டில் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக் கொள்" என்று கூறுகிறார்.

நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்று பார்க்கிறார். 60.000 பெண்கள் வீட்டிலும் கிருஷ்ணன் இருக்கிறார்.

என்ன செய்வது? நாரதருக்கு ´மோகம்´ கொள்ள பெண் இல்லை. மீண்டும் கிருஷ்ண பகவானிடமே வருகிறார் நாரதர். "எங்கு நோக்கியும் தனியான பெண்ணை காணவில்லை என்று கூறிவிட்டு, கிருஷ்ணனிடம் நான் பெண்ணாக மாறி உங்களோடு உறவு கொள்ள விரும்புகிறேன்" என்று விருப்பத்தை நாரதர் தெரிவிக்கிறார்.

அதற்கு இணங்கிய கிருஷ்ணன், "நாரதா யமுனை நதியில் குளித்தால் நீ பெண்ணாக மாறுவாய். பின் உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.

நாரதரும் யமுனையில் குளிக்க, அழகிய பெண்ணாக மாறுகிறார். நாரதரின் அழகில் மயங்கிய கிருஷ்ணன் உறவு கொள்கிறார். தொடர்ந்து 60 வருடங்களாக உடல்உறவு கொள்ள 60 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கும், நாரதருக்கும் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை உறவில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் தான் ´பிரபவ´ மாதத்தில் தொடங்கி ´அஷய´ மாதத்தில் முடிகின்றன.

*[இந்த புராண கதையை அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் காணலாம்]

கதையின் ஆபாசத்தை பாருங்கள். இந்த ஆபாசத்திற்கு பிறந்த மாதங்களின் பெயர்களை பாருங்கள். ஆரியனின் உளறலுக்கும், தமிழனுக்கும் என்ன தொடர்பு?

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகின்றனர். ஆரியனோ கலவியிலும், புரளியிலும் வருடங்களை கணக்கிடுகிறான்.

இந்தக் கணக்கில் நமது வயதை கூட கணக்கிட முடியாதே? முட்டாள் புலம்பலில் அறிவுத்தனத்தை தேட முடியுமா?

இதே கேள்வியை பெரியார் எழுப்பினார். புலவர் மறைமலை அடிகளார் எழுப்பினார்.

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கென்று காலங்கள் இருந்தன. நேரத்தை நாழிகையில் தொடங்கி பருவ காலங்களை 6 வகைக்குள் உட்படுத்தி இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி - என்று வகைப்படுத்தி உழவுத் தொழிலில் பருவ காலத்திற்கேற்ப தானியங்களை பயிர் செய்த தமிழனம் இந்து அடையாளத்தை ஏற்கும் முன் இயற்கையை வணங்கி பூஜித்து தை திருநாளில் தமிழர் பண்டிகையாக கொண்டாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, ஆரியர்கள் தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி தமிழினத்தின் அடையாளத்திற்கான குறியீடுகளை அழித்தொழித்தது.

தமிழர்களுக்கு இது அவமானமில்லையா?

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும், மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

ஆனால், ஆரியம் இன்னமும் விடுவதாயில்லை. சித்திரை தான் தமிழர்களின் புத்தாண்டு என்கிறது.

சரி ஆரியத்தின் வழிக்கே வருவோம்....

தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால் ஆரிய ஆபாசக்கதைகளை கூட ஒதுக்கி விடுவோம். 60 மாதங்களுக்கு ஆரிய மொழியில் பெயர்களை வைத்து அதை தமிழன் ஏற்க வேண்டுமென்றால் என்ன காரணம்?

சித்திரை புத்தாண்டை ஏற்கும் தமிழர்கள் சிந்தித்தால் போதும்.
ஆரியர்களின் சூழ்ச்சி புரியும்.

தமிழச்சி


தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு

மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் 2040 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.

மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...

உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...

ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.



இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக