இன்னும் தொடரும் 'இரட்டைக் குவளை' கொடுமை!
இங்கு தீண்டாமை கடைபிடிக்கப்படும்!
'வரலாற்றில் மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், எப்போதும் தீண்டப்படாதவர்கள், தீண்டப்படாத வர்களாகவே இருக்கிறார்கள்!’ என்றார் பாபா சாகேப் அம்பேத்கர்.
தமிழகத்தின் 103 கிராமங்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகச் சமீபத்தியப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 213 பஞ்சாயத்துகளில் தீண்டாமைக் கொடுமை இருப்பதாகக் கள ஆய்வு தெரிவிக்கிறது.
மதுரையில் இருந்து செயல்படும் 'எவிடென்ஸ்’ அமைப்பு, தமிழகக் கிராமங்களில் இரட்டை டம்ளர் கொடுமை நிலவும் கிராமங்களைப் பட்டியல் இட்டு இருக்கிறது.
இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டம், திருச்சியில் உள்ள தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியிருக்கிறது, -
பெரியார் திராவிடர் கழகம்.
இந்தக் கழகம் வெளியிட்டு இருக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்த பட்டியல்களும் அதிர்ச்சி அளிப்பவை.
உதாரணத்துக்குச் சில...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஊர் வெரியப்பூர். இங்குள்ள தபால் அலுவலகத்தில் உள்ள தபால்காரார் தலித் என்பதால், அவர் தரையில் அமர்ந்துதான் பணிபுரிய வேண்டுமாம். இந்த ஊர், அமைச்சர் தங்கம் தென்னரசு மணம் முடித்துஇருக்கும் ஊர். மேலும், சென்னை டிராஃபிக் கூடுதல் ஆணையர் ரவியின் சொந்த ஊர். அதே ஒன்றியத்தில் குப்பாயிவலசு என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளில் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 24 பஞ்சாயத்துகளில், 14 பஞ்சாயத்துகளில் நிலவும் இரட்டைக் குவளை முறை, அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் 99 சதவிகித வழிபாட்டுத் தலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சனை மறுப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறது 'எவிடென்ஸ்’ அமைப்பின் அறிக்கை.
'2010-2011-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு பிரசாரத்துக்கு தமிழக அரசு ஒதுக்கிய தொகை 49,80,000 ரூபாய் மட்டுமே. இதைவைத்து ஐந்து வீடுகள்கூடக் கட்ட முடியாது. நாடு முழுவதும் புரையோடி உள்ள தீண்டாமைப் பாகுபாடுகளை ஒழிக்க இந்தப் பணம் எந்த வகையில் போதுமானதாக இருக்கும்?’ என்பது அந்த அறிக்கையின் முத்தாய்ப்புக் கேள்வி.
''நமது கடவுள், சாதி காப்பாற்றும் கடவுள். நமது மதம், சாதி காப்பாற்றும் மதம். நமது அரசாங்கம், சாதி காப்பாற்றும் அரசாங்கம்!'' என்றார் பெரியார்.
பெரியார் வழி வந்ததாகச் சொல்லிக்கொள்பவர்கள், எதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ... பெரியாரின் மேற்கண்ட வார்த்தைகளைப் பின்பற்றத் தயங்குவது இல்லை.
நாமக்கல் மாவட்டம் வீசாணம் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி சுடுகாடும் மற்றவர்களுக்குத் தனி சுடுகாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
''தமிழகம் முழுவதும் தீண்டாமை நீக்கமற நிறைந்துள்ளது. அதற்கு ஒரு சான்றுதான் திண்டுக்கல் மாவட்டம்!'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியார் நம்பி.
''அம்பிளிக்கை தபால் அலுவலகத்தில் லூர்துராஜ் என்ற தபால்காரர் இறந்துபோனதால், கருணை அடிப்படையில் அவருடைய மகள் ரீட்டாவுக்கு வேலை கிடைத்தது. ஆனால், ரீட்டா ஒரு தலித் பெண் என்பதால், அவர் கையால் யாரும் தபால்களை வாங்க மாட்டார்கள் என்று, அம்பிளிக்கை ஊராட்சித் தலைவர் ராமசாமியே ஆதிக்க சாதிக்காரர்களுக்குத் தபால் பட்டுவாடா செய்கிறார். ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மகாமுனி. அவர் ஒரு தலித். அதே காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிந்தவர் பெருமாள். அவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். மகாமுனி தனக்கு துணைக் கருவூலத்தில் பணி போட்டதற்காக ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ஏட்டு பெருமாள், மகாமுனியை அடித்து உதைத்தார். இப்போது மகாமுனி, பணி ஓய்வு பெற்றுவிட்டார். அரசு அலுவல கங்களும்கூட எந்த அளவுக்குச் சாதி யைக் காப்பாற்றுகின்றன என்பதற்கு உதாரணங்கள்தான் மேற்கண்ட சம்பவங் கள்!'' என்கிறார் பெரியார்நம்பி
கே.கீரனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கத்தின் சோகம், நாம் சினிமாக்களில்கூடப் பார்த்திராதது. ''ஆறு மாசத்துக்கு முந்தி எங்க தெருவுல தெரு விளக்கு எரிய மாட்டேங்குதுன்னு சொல்லி, கரன்ட் வேலை பாக்குற பையன்கிட்ட சொன்னேனுங்க. அதுக்கு அந்தப் பையன், 'எங்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம். ஊர் தலைவருட்ட சொல்லுங்க’ன்னு சொன்னாருங்க. அதனால ஊர் தலைவர் நாட்டுத்துரைகிட்ட சொன்னேனுங்க. மூணு மாசம், நாலு மாசம் ஆச்சுங்க. ஆனா, லைட் எரியலைங்க. திருப்பியும் நாட்டுத்துரை 'பண்ணாடி’கிட்ட சொன்னேனுங்க. அதுக்கு அவரு, 'நீ சொன்ன உடனே போடோணுமாக்கும்’னு சொல்லிக்கிட்டே என்னை அடிச்சுப்புட்டாருங்க. மறுநாள் காலைல ஊர்த் தலைவர் மகன் அருண்குமார், அரப்பு வேலுச்சாமி, மடக்காட்டுத்துரை, சண்முகசுந்தரம், ஆனந்த்னு சில ஆளுங்க வந்து 'அப்பாவை எதிர்த்துப் பேசுற துணிச்சல் உனக்கு எப்படிடா வந்தது’ன்னு சொல்லிக்கிட்டே, என்னை அடிச்சுட்டு, என் சின்னக் குழந்தையையும் மனைவியையும் வீட்டுக்கு வெளியில இழுத்துப்போட்டு அடிச்சுப் போட்டாங்க. ரெண்டு வருஷக் குழந்தைங்க அது. அது என்ன பாவம் பண்ணியிருக்கும்? அதையும் வீசி எறிஞ்சாங்க. உள்ளூர்த் தலைவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஆட்கள், எங்களை ஆஸ்பத்திரிக்குக்கூட்டிட்டுப் போகக்கூட முன்வரலை. அம்பிளிக்கைல இருந்து டாக்சி வரவெச்சு அதுல நாங்களா ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரிக்குப் போனோமுங்க. அங்கேயும் எஃப்.ஐ.ஆர் போடவிடாமத் தடுத்தாங்க. அங்கே மருத்துவம் பாக்க முடியாததால திருப்பூர் மாவட்ட பெரியாஸ்பத்திரிக்குப் போயி சிகிச்சை எடுத்தோமுங்க. இப்போ உடம்பு சரியான பிறவு, எங்க ஊர்ல இருந்து திருப்பூர் மாவட்டத்துல இருக்குற தோட்டத்துக்குத் தினமும் வந்து விவசாய வேலை செஞ்சு பிழைப்பு நடத்துறேனுங்க'' என்கிறார் ராமலிங்கம்.
அம்பிளிக்கை, லக்கையன்கோட்டை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் வலம் வந்தோம்.
ஓடைப்பட்டி கிராமத்தின் கலையரங்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்பது கட்டுப்பாடு.
அவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்குக்கூட உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக கலையரங்கத்துக்கு வெளியே 'கிரில்’ கம்பிகளை வைத்துத் தடுப்பு அமைத்திருக்கிறார்கள். ஓடைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தாழ்த்தப்பட்ட முதியவர் ஒருவர், கொதிக்கும் வெயிலில் கருங்கல்லிலும், ஆதிக்க சாதிச் சிறுவன் பேருந்து நிறுத்த சிமென்ட் திண்ணையிலும் அமர்ந்திருந்தார்கள். அப்படித்தான் அங்கு பழக்கமாம்.
இன்னமும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் 'பண்ணாடி’ என்றுதான் அழைக்கிறார்கள். இங்கே இருக்கும் ஓட்டல்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தரையில் இலை போட்டுத்தான் பரிமாறப்படும். நாம் சென்ற அனைத்துக் கிராமங்களிலும் டீக் கடை களில் இரட்டைக் குவளை முறைதான் வழக்கத்தில் இருக்கிறது. சில புத்திசாலி டீக் கடைக்காரர்கள், இரட்டை டம்ளர் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக 'யூஸ் அண்ட் த்ரோ’ கப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரமியம் என்ற கிராமத்தில் டீக் கடைக்குள்ளேயே மற்ற சாதிக்காரர்கள் பெஞ்ச் சிலும், தலித் மக்கள் தரையிலும் அமர்ந்து இருந்தார்கள்.
''சமயங்களில், பொது சுடுகாடுகளில் தங்கள் உறவினர்களின் பிணங்களை எரிக்கவோ, புதைக்கவோ அனுமதி மறுக்கும்போது, தலித் மக்கள் சாலை ஓரத்திலேயே இறுதிச் சடங்குகளை முடிக்கும் அவலமும் திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டு. இத்தகைய கொடுமைகளைச் சுட்டிக்காட்டி காவல் துறையை அணுகும்போது, 'அமைதியா இருக்கிற ஊர்ல சாதிக் கலவரத்தை ஏற்படுத்தாதீங்க’ என்று 'அறிவுறுத்தும்’ கொடுமை யும் நடக்கும்.
தீண்டாமையைக் கடைப்பிடித்தால், கடுமையான தண்டனைகள் என்று அரசியல் சட்டத்திலும் 'தீண்டாமை ஒரு மனிதத் தன்¬மயற்ற செயல்’ என்கிற வாக்கியம் பாடப் புத்தகங்களிலும் இருப்பதைத் தவிர, தீண்டாமை ஒழிப்பில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை!'' என்று விரக்தி தொனிக்கச் சொல்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.
எங்கேயோ, எப்போதோ, வெண்மணியிலோ, உத்தப்புரத்திலோ... பாப்பாபட்டி, கீரிப்பட்டியிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை திணிக்கப்படும்போது மட்டும்தான் அது 'செய்தி’ ஆகிறது. உண்மையில், தமிழகத்தின் பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை என்னும் நச்சுக் குப்பி எவர் வாயிலாவது வலிந்து புகட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து, 'நானும் தலித் சம்பந்திதான். எங்கள் குடும்பமே சமத்துவபுரம்!’ என்று கருணாநிதி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஜெயலலிதாவோ மற்ற கட்சித் தலைவர்களோ அவ்வப்போது தங்களைத் தலித் மக்களின் காவலனாகக் காட்டிக்கொள்ளவும் தயங்குவது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக அரசியல் களத்துக்கு வந்த தலித் தலைவர்களோ, பெரிய கட்சிகளிடம் சில பல சீட்டுகளைப் பெறுவதையே 'உரிமைப் போராட்டமாக’ எண்ணி முடங்கிவிடுகின்றனர். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளும் டீக் கடையில் இளிக்கும் இந்திய ஜனநாயகத்தின் எச்சில் இரட்டைக் குவளைகளும் முகத்தில் உமிழ்ந்து நமக்கு உணர்த்தும் உண்மை... 'ஊருக்கு வெளியே சமத்துவபுரங்களைக் கட்டுவதால், சமத்துவம் வந்துவிடாது. தலித் மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றி, மற்ற சாதியினரின் உரிமைகள் அவர்களுக்கும் கிடைத்து, கிராமங்களே சமத்துவபுரங்களாக மாறினால் மட்டுமே... அது சமத்துவம்!’
நன்றி
விகடன்
seythikku ungalin idukaikku paattukal
பதிலளிநீக்குவணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
பதிலளிநீக்குநன்றி
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்