திங்கள், 31 அக்டோபர், 2016

பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை

பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை

தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும், மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை அவர்களை மார்க்சிஸ்ட் மாத இதழ் சார்பாக என். குணசேகரன் , மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் பத்ரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கனகராஜ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
அந்த உரையாடலின் சுருக்கம் :
மார்க்சிஸ்ட் : கடந்த சட்ட மன்ற  தேர்தலில்  இரண்டு திராவிட  கட்சிகளும் எழுபது  சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால் திராவிட  கருத்தியல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக பலர்  எழுதி   வருகின்றனர். இது  சரியான கருத்தா?
எஸ்.வி.ஆர்: இப்படி  எழுதி வருவதே தவறானது.   கருத்தியல்  என்ற சொல்லுக்கு பதிலாக நான் கருத்து நிலை என்ற  சொல்லை பயன்படுத்துகின்றேன். கருத்தியல் என்பது ஒரு கருத்தைப் பற்றிய  ஆய்வு.  எனவே ideology  என்ற  வார்த்தையை கருத்து  நிலை என்ற  சொற்றொடர்  கொண்டே நாம் பயன்படுத்த வேண்டும்.
திமுக, அதிமுக  ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திராவிட இயக்க கருத்து நிலைக்கும் தற்போது என்ன தொடர்பு?    இவர்களின் நிகழ்ச்சி  நிரலே வேறு. கவர்ச்சி திட்டங்கள், நவதாராளமய கொள்கைகளுக்கான  ஆதரவு, அந்நிய மூலதன ஆதரவு (இதில் நீயா? நானா?  எனற போட்டி கூட இவர்களுக்குள் உண்டு) ஆகியவைதான் இவர்களது இன்றைய  செயல்பாடு.
இந்த நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தை,  பன்னாட்டு  மூலதனத்தை வளர்ப்பதுதான், இந்த இரண்டு கட்சிகளின் கருத்து நிலை. தற்போதைய நிலையில் திராவிட கருத்து நிலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு கிடையாது.  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் சேர்ந்து 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றால், அது அந்த கட்சிகளுடைய வெற்றியே தவிர, திராவிட கருத்து நிலைக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.
மார்க்சிஸ்ட்:  இரண்டு கட்சிகளின் வெற்றி காரணமாக தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான சாத்தியப்பாடு  குறைந்துள்ளதாகவும்  பேசப்படுகிறது
எஸ்.வி.ஆர்: நாளைக்கே சோசலிசம் வந்து அதனுடைய கனிகளை சுவைக்க வேண்டும்  என்று  எந்த கம்யூனிஸ்டும் போராடுவது இல்லை. எப்போதும் எதிர்காலத்தை நினைத்தே  போராடுகின்றனர்;  கனவு காண்கின்றனர்; மரணத்தை   கூட எதிர்கொள்கின்றனர். எனவே  ஒரு தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கான ஆதரவு மக்களிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
எந்த கொள்கையும் இல்லாதவர்களை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் நமக்கு தேவையற்ற சுமையாகி விடுவார்கள்.  ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச  எதிர்ப்பு கொண்ட குறைந்த பட்ச செயல்திட்டம் அவசியம். இத்தகைய குறைந்த பட்ச செயல்திட்டத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றவர்களைக் கொண்டுதான் அணி அமைக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் இருக்கின்ற  நன்மதிப்பை குறைப்பதாக நமது அணி அமைந்து விட கூடாது. அவ்வாறானவர்களை தவிர்த்து விட வேண்டும்.
மார்க்சிஸ்ட்: சாதியத்தை எதிர்கொள்வது பற்றி……
எஸ். வி. ஆர். : இந்தியாவிலுள்ள தேர்தல் முறையும் சாதி அமைப்பும் பின்னி பிணைந்துள்ளது. தேர்தல் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, அளிக்க சாதி வலுப்பட்டே வருகிறது.1967-ல் திமுக வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் எதிர்ப்பு  அலை இருந்தது. 1965-லிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தாக்கம் இருந்தது, பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது.  ரேசன் முறையில்தான் எல்லா உணவுப் பொருட்களும்   கிடைத்தன.   அரிசியும் புழுத்த அரிசியாக இருந்தது. எனவே  காங்கிரஸ் எதிர்ப்பு அலை, இந்தி  எதிர்ப்பு போராட்ட தாக்கம், தமிழ் தேசிய  உணர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் திமுகவிற்கே  உரிய கவர்ச்சிகரமான அரசியல் என இவையெல்லாம் சேர்ந்து திமுக வெற்றி பெற காரணிகளாக அமைந்தன.
1971-ல் 5 ஆண்டு முடிவதற்கு முன்பே  சட்டசபையை கலைத்து விட்டு கருணாநிதி  தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது; பெரும் வெற்றி  பெற்றது. அதுவரைக்கும் கொள்கை சார்ந்து தேர்தலை சந்திக்கும் போக்கு இருந்தது.  அதற்கு பிறகு,  சாதி முன்னுக்கு  வந்தது.   சாதி சார்ந்து  வாக்கு வங்கியை வளர்த்த  பெருமை  அதிமுகவிற்கு உண்டு. குறிப்பாக முக்குலத்தவர் வாக்கு வங்கி  உருவானது.
தென் மாவட்டங்களில்  முக்குலத்தவர்,  மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர்   என சாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வன்னியர்களை   பொறுத்த வரை   அவர்கள் எல்லா கட்சிகளிலும்  இருந்தனர்.  காங்கிரஸ், திமுக.   அதிமுக , பாமக என இந்த அனைத்து  கட்சிகளுக்கும், வன்னியர் மக்களிடம்   அடித்தளம் இருக்கிறது.  நாடார்கள்  திமுக, அதிமுக,  இரண்டிலும்  சரிபாதி  இருந்தனர். ஆதிக்க சாதியினரை குறி வைத்து இயங்குவது என்பதுதான்  திராவிட கட்சிகளின் கருத்து நிலை.
சாதி எதிர்ப்பு   போராட்டமும், பாசிச  எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று  இணைந்தது. எப்படி இங்கு  ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு  ஏன் இங்கு பரவலாக இல்லை? அம்பேத்கர் அடிக்கடி  சொல்வார்.  “இந்திய மக்களிடம் ஒரு சகோதரத்துவ உணர்வே இல்லை” என்று. எல்லா   சாதியை சார்ந்த   மக்களும் உலக மயமாக்கலால்  பாதிக்கப்படுகின்றனர்.  கல்வி, மருத்துவம்,  போக்குவரத்து இவை தனியார் மயப்படுத்தப்பட்டு  உள்ளதால், உயர் நடுத்தர வர்க்க மக்களைத் தவிர அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால்  நமக்கு ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை?
எல்லோரையும் விட  மிக மோசமாக பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். தனியார் மயம்  தலைதூக்கி  உள்ளதால் கடந்த 15 வருடங்களாக இட  ஒதுக்கீடும்  அவர்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசுத் துறையிலும், மாநில அரசுத் துறையிலும் தலித் மக்களுக்கான பழைய பின்னடைவு இடங்கள் கூட பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.  இப்படி   கடுமையாக பாதிக்கப்பட்டும், அவர்களிடம் ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை? அவர்களை ஏன் வர்க்கமாக நம்மால் திரட்ட  இயலவில்லை? கிராமப்புறம் மட்டுமல்ல;  எங்கு சென்றாலும், நமது ஒவ்வொரு நாள்  நடவடிக்கையையும் சாதி பாதிக்கிறது. உதாரணமாக, துப்புரவு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என  ஒரு அப்பள  உறையின் மீது போட்டு  விற்பனை செய்தால், விற்பனை ஆகுமா? வாங்குவார்களா?
வர்க்கப் போராட்டம் என்பது என்ன? ஒடுக்கப்பட்ட  சாதியினரையும் உள்ளடக்கியது  தானே வர்க்கப் போராட்டம்? தலித் மக்கள், இந்தியாவில் அடித்தட்டு வர்க்கமாக இருப்பவர்கள்;  அன்றிலிருந்து இன்று வரை விவசாய கூலிகளாக, முறைசாரா தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
1952, 57, 62  தேர்தல்களில்  வேட்பாளர் தேர்வில் சாதி பெரிய  பங்கினை   ஆற்றவில்லை.  1952 தேர்தலில் கவுண்டர்கள் அதிகமிருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியில், எண்ணிக்கை அளவில் மிகச்சிறிய மக்கள்தொகை சாதியை  சேர்ந்த கே.டி ராஜு என்ற தோழரை கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் ஆக்கியது. அவர் வெற்றி பெற்றார்.  அப்போது கருத்துநிலை சார்ந்து மக்கள் முடிவு எடுத்தனர். ஆனால்,  இப்போது அப்படி இல்லை. அதுவும் இன்றைய தேர்தல்  முறையே  (தொகுதியில் அதிக வாக்கு வாங்குபவரே வெற்றி பெறுபவர் என்ற முறை) சாதியை வலுப்படுத்துவதாக உள்ளது. விகிதாச்சார  தேர்தல் முறை வேண்டும் என நாம் தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது.
மார்க்சிஸ்ட்:  விகிதாச்சார தேர்தல் முறையின் அவசியம்  குறித்த பல விபரங்களை திரட்டி ஆவணம் ஒன்றை தயார் செய்யும் வேலை நடந்து  வருகின்றது.
எஸ்.வி.ஆர்: அது நல்ல முயற்சி . நான் பலஆண்டுகளாக  அந்த முயற்சியில் உள்ளேன். இடதுசாரி கட்சி  தலைவர்கள் அனைவரிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
மார்க்சிஸ்ட்:  சாதி,  சாதிய அமைப்பு என்பது  முக்கிய  பிரச்சனை. மறுபுறம் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளும் தீவிரமடைந்து வருகின்றன.  வெகுஜன  அமைப்புகள் மூலம் இவையிரண்டையுமே எதிர்த்து போராடி  வருகின்றோம். இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டதையும் வர்க்கப் போராட்டத்தினையும் நடத்தி,மக்களைத் திரட்டுவது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட்: பெரியார் சாதிப்பிரச்சனையை எதிர்கொண்டது பற்றி….
எஸ்.வி.ஆர் : 1948-ல் திராவிடர் கழக மாநாடு தூத்துக்குடியில்   நடக்கிறது. ஒன்றரை லட்சம் பேர்  கூடியிருக்கிறார்கள்.  மாநாட்டிற்கு திராவிடர் கழக தொண்டர்கள் குடும்பத்தோடு வர வேண்டும் என பெரியார் அறைகூவல் விடுத்திருந்தார். அப்போது இருந்த சூழலில்  அவ்வளவு  பெரிய கூட்டத்தை திராவிடர் கழகத்தால்  எப்படி திரட்ட முடிந்தது? சடங்குகள்  அற்ற, ஆடம்பரமற்ற திருமணங்களை  நடத்திட கருத்து நிலை சார்ந்து  திராவிடர் கழகத்தினரை சம்மதிக்க வைக்க அவரால் முடிந்தது.
1967-ல் குன்னூரில் திராவிடர் கழக செயலாளர் இல்லத்திருமண விழா, சாதி மறுப்பு திருமணமாக நடைபெற்றது. அதில் பெரியார்  கலந்து கொண்டார். ஏராளமானோர்   அத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.  நானும் அத்திருமண  விழாவில் கலந்து கொண்டேன். அவ்விழாவில்  “எதற்கு இவ்வளவு  செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றீர்கள். இது சரியல்ல”  என மேடையிலேயே பெரியார் கடிந்து கொண்டார். அன்றாட வாழ்வில்,கொள்கையை பின்பற்றுகின்ற விதத்தில், திராவிடர் கழக  குடும்பங்களையே  அவர் மாற்றினார். மாநாடு பொது நிகழ்ச்சிகளுக்கு குடும்பமாக வரவேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்பத்தை  ஜனநாயகப்படுத்தும் விதமாக அவரது  இயக்கம் இருந்தது.
இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது  தோழர்கள் முன் மாதிரியாக  வாழ்க்கையில் இருக்க வேண்டும். நுட்பமாக, மறைமுகமாக சாதியை  திருமண பத்திரிக்கைகளில் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. அன்றாட வாழ்வில் சாதி உணர்வு நீடித்து வருகின்றது. இதை  நாம் உரிய அளவில் கணக்கில் கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் :  பெரியார், அம்பேத்கர் சாதி எதிர்ப்பு நிலை பற்றி…
எஸ்.வி.ஆர்.: பெரியார், சோவியத் ரஷ்யாவால் பெரிதும்  ஈர்க்கப்பட்டார்.  அவர் கம்யூனிஸ்ட் கருத்து நிலையை  முற்றிலும்   புரிந்து கொண்டவரோ அல்லது அதை   விளக்கக் கூடியவரோ அல்ல.  அவர் சமதர்மத்தை   புரிந்து கொண்டது  வர்ண தர்மத்திற்கு அது  எதிரானது  என்ற அர்த்தத்தில்.  வர்ணத்திற்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதி என்ற  வர்ண  தர்மத்திற்கு  எதிராக எல்லோருக்கும்  ஒரே நீதி என்று சமதர்மத்தை அவர் பார்க்கிறார். சமூக,  பண்பாட்டு, சமதர்மத்தின் நீட்சியாகத்தான், பொருளாதார சமதர்மத்தை  அவர் பார்க்கிறார்.
ஒரு கற்பனைவாத  சோசலிஸ்ட்  ஆகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார்.  அவர் விஞ்ஞானபூர்வ   சோசலிஸ்ட் ஆக இருந்ததே இல்லை.  எனவே,  இல்லாத  ஒன்றை சொல்லி, பின்னாளில்  அவர் கைவிட்டு  விட்டார் என்று  சொல்வது தவறு.
1929- லிருந்தே சோவியத் யூனியன் பற்றி அவர் எழுதி  வருகிறார். சோவியத்தை அவர் நேசித்ததற்கு காரணம் அங்கு சாதிய பேதம் இல்லை, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எடுக்கப்பட்டது, மூட நம்பிக்கைகள்  இல்லை என்பதாலேயே ஆகும். சோவியத் யூனியன் பற்றி தொடர்ந்து அவர்களது  பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர்.  போல்ஷ்விக்குகள் நீடித்து ஆள முடியுமா?  என்று அமெரிக்க மார்க்சிஸ்ட்டான  ஸ்காட்னியருக்கும், பெட்ரண்ட் ரஸலுக்கு நடந்து வந்த விவாதத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது கம்யூனிஸ்ட்  கட்சி எடுத்த நிலைபாடான பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே  பெரியாரும் எடுக்கிறார். ‘பாசிச எதிர்ப்பு  மாநாட்டை’ அவர் நடத்துகிறார்.  அப்போரின்  போது, சோவியத்  படைகள் ஒவ்வொரு நிலையிலும் பெற்ற வெற்றிகள் பற்றி குடியரசுவிலும், விடுதலையிலும் தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வந்தது.  தோழர்  ஸ்டாலின் இறந்த போது வெகு சிறப்பான அஞ்சலிக் கட்டுரையை  எழுதுகின்றார். சோவியத் யூனியனுக்கும்,  சீனாவிற்கும் கருத்து  வேறுபாடுகள்  ஏற்பட்ட போது, சோவியத்  பக்கம்தான்  அவர்கள் நின்றார்கள். சோவியத் யூனியன் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது.  ஆனால் அவருக்கு மாற்று பொருளாதார பாதை எல்லாம் இருக்கவில்லை.
ஜஸ்டிஸ் கட்சி, அதற்குப்பின் பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட  நீதிக்கட்சி, அதைத்தான் அவர் திராவிடக்கழகமாக மாற்றினார். இவற்றுக்கிடையே தன்மை சார்ந்த  வேறுபாடு இருக்கிறது. நீதிக்கட்சியில் பழைமைவாதிகளும்  இருந்தார்கள். அதே நேரத்தில் சாதி மறுப்பாளர்களும், பகுத்தறிவாளர்களும் அதில் இருந்தனர். நீதிக்கட்சி என்பது ஒரே தன்மையுடைய கட்சி  அல்ல.
1936-லேயே ஜஸ்டிஸ் கட்சி தேய்ந்து விட்டது. 1937, 38 ஆண்டுகளில் நடந்த நகராட்சி தேர்தல்களில்  அது ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை.  1937-ல் இந்திய அரசு சட்டப்படி  நடந்த மாகாண தேர்தலில் 15 பேர் வரைதான் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சி செல்வாக்கு இழந்து போனது. அந்த சமயத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறைவு  பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு தலைவர்களே இல்லாத சமயத்தில்தான் பெரியாரை தலைமை தாங்க அழைக்கின்றனர்.  1939-ல் பெரியாரும் அதை ஒத்துக்கொள்கின்றார்.
அதன் பிறகு நடந்த போராட்டங்களால் அவர் சிறைக்கு சென்று விடுகிறார். 1942- ல் சிறையிலிருந்து  வெளியே  வந்தபின் கட்சியின்  பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றுகிறார்.  நீதிக்கட்சிக்கு இருந்த பிராமண எதிர்ப்பு  அரசியல் பாரம்பரியத்தின் காரணமாக அந்த கட்சியை பெரியார் எடுத்துக் கொள்கிறார்.
தியாகராய செட்டியார், டி.எம். நாயர் போன்றவர்கள் காங்கிரஸ்  கட்சியிலிருந்து  ஜஸ்டிஸ் கட்சிக்கு  வந்தவர்கள். தேசியவாதிகள். உள்நாட்டு தொழில்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக  ஆங்கிலேயரிடம் சண்டை போட்டார்கள். இட ஒதுக்கீடு என்ற விஷயத்திற்காக  போராடினார்களே  தவிர, அவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியில் பகுத்தறிவு வாதிகளும்  இருந்தனர்.  இந்நிலையில்தான் அக்கட்சி உடைந்தது. பழைய  ஐஸ்டிஸ்  கட்சி  என்ற ஒன்று  அப்படியே இருந்து வந்தது. 1939-ல்  டாக்டர் அம்பேத்கர் சென்னை வருகின்றார். அவருக்கு பழைய  நீதிக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்  காலையில் பெரியாரை, டாக்டர் அம்பேத்கர் சந்தித்து  பேசுகிறார். மாலையில் வரவேற்பில்  பழைய நீதிக்கட்சியினரை அம்பேத்கர் விமர்சித்து பேசுகின்றார். “கல்வி, வேலை வாய்ப்பில்  இட ஒதுக்கீடு என்ற அளவிலேயே  உங்கள் செயல்பாடு உள்ளது. ஆனால் அடித்தட்டு  மக்களின் பிரச்சனைகளை நீங்கள்  எடுப்பது கிடையாது. நியாயமாக  பார்த்தால் நீங்கள் ஈ.வே  ராமசாமி அவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்” என்று அவர்கள் போட்ட கூட்டத்திலேயே  அவர்களை விமர்சனம் செய்து  பேசுகிறார்.
நீதிக்கட்சியிலிருந்த பகுத்தறிவு வாதிகளும்  சாதாரண  மக்களும்தான் பெரியாருடன்  வருகின்றனர்.  அவர்கள்  பொருளாதார விஷயங்களை கையில் எடுக்கவில்லை.   பொருளாதார திட்டம் எல்லாம் அவர்களுக்கு கிடையாதுதான். சாதி இருக்கின்ற வரை  எந்தவித அடிப்படை மாற்றமும் வராது என்று அவர்கள் கருதினர். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகியோரை பொறுத்தவரை அவர்கள் இந்திய சமூகத்தில் பொது உரிமையே இல்லை என்று கருதினர். பொதுவுடைமையா? பொது உரிமையா?  என்று வரும் போது, பொது உரிமையே  முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.
மார்க்சிஸ்ட் : பெரியாரின் பகுத்தறிவு வாதம் அன்று  மூட நம்பிக்கைகள்   மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒரு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை  ஏற்படுத்தியது.  எனினும் அவரது பெயரால் இயங்கும்  இயக்கங்களாலேயே  அது கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொன்று தமிழகத்தின் அதிகரித்து வரும் ஆன்மீகப் பிடிப்பு. இந்நிலையில்  இனி நாத்திகவாதம்  மற்றும் பகுத்தறிவு  வாதத்தின் எதிர்காலம் என்ன?
எஸ்.வி.ஆர் : 1928-29-களில் எவ்வளவு பிற்போக்காக மக்கள் இருந்திருப்பார்கள்? அப்போதே பெரியார் மக்களை திரட்டியிருக்கிறார்.  எனவே இப்போதும் நம்மால்  செய்ய முடியும். பகுத்தறிவு மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றிக்காக  செயல்படுவதற்கு பெரியார்  காலத்தை விட அதிக தேவை  தற்போது உள்ளது. நவீன  சாமியார்களுக்கு எதிரான போராட்டம்; சாதிக்கு எதிரான  போராட்டம்;  பகுத்தறிவு கருத்துக்கள்; விஞ்ஞான கருத்துக்களை பரப்புவதற்கான  போராட்டம் ஆகியவற்றை  நடத்தவேண்டி உள்ளது. நவீன தொழில் நுட்பங்களை உள் வாங்கிக் கொண்ட  இளைஞர்கள் கூட மூட நம்பிக்கையில்  மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு  கற்பிக்கப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது.
நாங்கள் படித்த காலத்தில், தேசம் விடுதலைப் பெற்ற நேரம். அப்போது கல்வியிலும் மக்கள் பொது புத்தியிலும் கூட மூட நம்பிக்கைகளுக்கு  எதிரான விஷயங்கள்   குறைந்த அளவுவாவது பதிந்திருந்தது. கம்யூனிசம் குறித்து பகுத்தறிவு  குறித்த ஆர்வம்  மக்களிடம் இருந்தது. இந்த தலைமுறையில் அது இல்லை. அமைப்பு ரீதியாக திட்டமிட்டே  இவை ஒழித்துக் கட்டப்பட்டன. திமுகவும், அதிமுகவும் எந்த மாதிரியன  பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்கள்?
அறிவியல் பாடங்களையும் சமூக அறிவியல்  பாடங்களையும்  பிரித்து விட்டார்கள்.  தொழில்நுட்ப பாடங்களையும் சமூக அறிவியலையும்  பிரித்து விட்டார்கள். ஒரு மருத்துவ மாணவனுக்கு, பொறியியல் மாணவனுக்கு, படிக்கிற மாணவனுக்கு சமூக அறிவியலும், மொழியியலும்  மிக முக்கியமானது.  ஆனால் அதை இவர்கள் திட்டமிட்டே   பிரித்தார்கள். அறிவுக் கூர்மையோடு மாணவர்களை  வளர்க்க வேண்டிய  நேரத்தில் பழங்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைத்தான் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் கற்பித்தார்கள். நவீனத்துவத்தை கல்வியில், வாழ்வில் கொண்டு வரவே  இல்லை.  முதலாளித்துவவாதிகள் நகரங்களில் சாலைகள் அமைப்பது, நவீன  தொழிற்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதைத் தான் நவீனம் என்று சொல்கிறார்கள். ஜனநாயகபூர்வமான கலாச்சாரம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதைத் தான் நாம் நவீனம் என்று குறிப்பிடுகின்றோம். திமுகவும், அதிமுகவும் அவர்கள் பாணியில் நவீனத்துவத்தை கொண்டு வந்ததாக  சொன்னாலும் அடிப்படையில் பழமைவாதிகளாகவே  உள்ளனர்.
இரண்டு  கட்சிகளின் ஆட்சி காலத்தில் அறிவியலை பரப்புவதற்கு என்று எளிய  அறிவியல் புத்தகங்களை நிறைய  கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் திமுக,  அதிமுக  செய்யவில்லை.  பிற்போக்குத் தனமான கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற  மகாராஷ்டிராவில் கூட  ஏராளமான  அறிவியல் பரப்பும் புத்தகங்கள்  வெளி வந்து கொண்டு இருக்கின்றன.  தபோல்கர் அங்குதானே இருந்தார். ஏன் நம்மால் பெரியார் பிறந்த மண்ணில் தபோல்கரை போல ஒருவரை  உருவாக்க முடியவில்லை? பெரியாருக்கும், திமுகவிற்கும் அடிப்படையிலேயே   வேறுபாடு உள்ளது.  பெரியார் மனிதனுடைய  “சுயமரியாதை” என்பதை முன்னுக்கு வைத்தார். திமுக,  தமிழருடைய மானம்,  கற்பு  என்பவற்றை  முன்னுக்கு வைத்தது. இரண்டுமே சம்பந்தமில்லாதவை. கற்பு என்கிற மதிப்பீட்டுக்கு எதிரானவர்  பெரியார்.  கற்பை தூக்கிப்பிடித்தவர்கள் திமுகவினர். பகுத்தறிவு அறிவியல்  கருத்துக்களை இன்றைய  இளைஞர்களிடம்  பரப்ப நாம் மிகப் பெரிய அளவில் செயல்பட வேண்டியுள்ளது. அறிவொளி இயக்கம் போன்று  இதற்கு ஒரு இயக்கத்தை நாம் விரிவான  அளவில் நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் : திராவிட  இயக்கங்களின் தேசியம் பற்றிய புரிதல்பற்றி….
எஸ்.வி.ஆர் : தமிழருக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது.  தமிழ் மொழிக்கென்று நீண்ட வரலாறு இருக்கிறது.   தமிழருக்கு என்று  பரந்த  நிலத்துடன் கூடிய  கலாச்சாரம்  இருக்கிறது.  இவற்றையெல்லாம்  தனது  அரசியலுக்கு திமுக பயன்படுத்திக் கொண்டது.
தமிழ்  உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என உணர்ந்து  வானமாமலை போன்றவர்கள்  பழந்தமிழ் இலக்கியங்களை,  அதன் வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய துவங்கினார்.  ஜீவா  கம்பராமாயணத்தில் சோசலிச கருத்துக்கள் இருக்கிறது என்று  சொல்லும் அந்த நிலைக்கு கூட போனார். ஆரம்பத்தில் திமுக வட மாநில முதலாளிகளின் மீதான எதிர்ப்பு அரசியலை  கையிலெடுத்தனர். அப்போது அதில் நியாயமும் இருந்தது.  இந்தியா  விடுதலை பெற்றபோது இருந்த முதல் நிலை  50 பெரு நிறுவனங்களில் ஒன்று மட்டும்  பிரிட்டிஷாருடையது.  மற்றவை  எல்லாம் வட மாநில  முதலாளிகளுடையது.   “வடக்கு  வாழ்கிறது.  தெற்கு  தேய்கிறது” என்ற அவர்கள் கோஷம் எழுப்பிய போது அதில் கொஞ்சம்  உண்மையுமிருந்தது.
திமுக. ஆட்சிக்கு  வந்த காலத்தில் மாநிலங்களின்  உரிமை,  மாநில சுயாட்சி  என்றெல்லாம்  பேசியது.  காங்கிரஸ்  அல்லாத  மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாடு  நடத்தக் கூட  முயற்சி செய்தார்கள். ஆனால் இப்போது அது  பற்றி பேசுவதில்லை. நாங்கள் தான் உண்மையான  கம்யூனிட்டுகள்  என்றெல்லாம் கூட பேசி வந்தனர்.  ஆனால்  ஆட்சிக்கு வந்தவுடன்  தமிழ்நாட்டில் முதலாளிகளுக்காக தொழில் அமைதி நிலவ வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும்  என பேச ஆரம்பித்தனர். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே  தொழிற்சங்கங்களை   கடுமையாக ஒடுக்க துவங்கினார். ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் போன்ற இடங்களில்  செயல்பட்ட தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகள் சந்தித்தன. சென்னையில்   வி.பி.  சிந்தன்  தலைமையில் செயல்பட்ட தொழிற்சங்கம் மீது ஏவி விடப்பட்ட அடக்கமுறைகளெல்லாம் நமக்கு தெரியும். எம்.ஜி.ஆர். காலத்திலும் இது தொடர்ந்தது.
காலனி ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு பொறுத்த வரையில் காங்கிரஸ்காரர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் கிடையாது.  அவாகள் வரலாறு நெடுக சமரச வாதிகளாகவே தான் இருந்துவந்து உள்ளனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட சேதம், கப்பற்படை  எழுச்சி, நேதாஜி  விவகாரம், இந்திய விமானப்படையிலேயே   ஏற்பட்ட கிளர்ச்சி  இதெல்லாம்தான் அவர்களுக்கு பெரிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ராணுவத்திலேயே   கலகம் பிறக்கும் சூழல் ஏற்பட்டதால், நம்பகமான கூட்டாளியிடம் பொறுப்பை  ஒப்படைப்பது என்ற அடிப்படையிலேயே விடுதலை கிடைத்தது.
இன்னும் பிரிட்டிஷ் மூலதனத்தின் தாக்கம் இருந்து  கொண்டுதானே இருக்கிறது.  காமன்வெல்த்திலிருந்து வெளியேறி விட்டார்களா?  ஒரு நாட்டு ஏகாதிபத்திய  மூலதனத்திற்கு பதிலாக இன்று பல நாட்டு ஏகாதிபத்திய மூலதனம் வருகின்றது.
மார்க்சிஸ்ட் :          பெரியார் ஆகஸ்ட் 15  நூலின்  முன்னுரையில்,அம்பேத்கர்பெரியார்சிங்காரவேலர்  ஆகியோரின் மரபுகளை ஆக்கபூர்வமான  காலத்துக்கு  ஏற்ற ஒரு கூட்டிணைவாக (synthesis)   ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென தாங்கள் குறிப்பிட்டது வரவேற்கக்கூடிய  ஒன்றுதான். ஆனால்,  இதற்கு  ஸ்தூலமான வடிவம் கொடுப்பது எப்படி?  திராவிட  கட்சிகள் பிரதேச முதலாளித்துவ  வர்க்க குணாம்சம்  கொண்டவை  என்பது கம்யூனிஸ்ட்களின்  நிலை. இது போன்ற  பல முரண்பாடுகள் உள்ள நிலையில்  கூட்டிணைவு  சாத்தியமாகுமா?
எஸ்.வி.ஆர் : சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் கூட்டிணைவு எனும் போது அவர்களின் சிந்தனைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் பேசியது   போன்ற  நடைமுறை  திட்டத்தை  இன்று வகுத்தளிக்க முடியாது. ஆனால்  அவர்களை  அடையாளமாக  எடுத்துக்கொள்ள முடியும்.
அத்பேத்கரும்,  பெரியாரும் சாதி எதிர்ப்பாளர்கள். அவர்களுடைய   கூற்றுப்படி இந்தியாவில் சாதி உணர்வை நிர்மூலம் ஆக்காமல் வர்க்க உணர்வை  உருவாக்க முடியாது.
அம்பேத்கரை  பொறுத்தவரை அவருக்கு  கம்யூனிசம் மீது நாட்டமும் இருந்தது. விமர்சனமும் இருந்தது. “அயல்நாட்டவருக்கு ஒரு விண்ணப்பம்” என்ற  பெரிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார். இந்தியாவின் கருத்து என்று உங்களுக்கு சொல்லப்படுபவை  முழுவதும்   இங்குள்ள  காங்கிரஸ்  தேசிய வாதிகளின்  கருத்தே. இந்திய மக்கள் என்பதில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர்.  அவர்களின்  உணர்வுகளை  இங்கு யாருமே பேசுவதில்லை.  எனவே, எங்களுடைய குரல்களையும் கவனியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் ‘1871 கம்யூன்’ பற்றி குறிப்பிடுகின்றார்.  அடித்தட்டு மக்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிய அவர்களுக்கு உரிய உரிமைகள்  கிடைக்காது  என்பதை  திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். “காந்தியும், காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது  என்ன?”  என்ற நூலில் கூட  அமெரிக்க  மார்க்சிஸ்ட் ஆன எட்பர்க் ஹார்ட்டேகரின் மேற்கோள்களை நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றார். அவருக்கு  சோசலிச உணர்வு இருந்து  வந்து உள்ளது.
சிங்காரவேலர் இறுதிவரை சாதி எதிர்ப்பு, சோசலிசம் ஆகிய இரண்டையும் இணைத்தே  கொண்டு  போகின்றார்.  பல நேரங்களில்   காங்கிரஸ்    ஏகாதிபத்தியத்துடன் சமரசம்  செய்து கொண்டது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சக்தியாகிரகம் நடைபெறுகின்ற சமயத்தில் பெரியார் அதை இரண்டு ஜமீன்தார்களுக்கு  இடையே நடைபெறும் மோதல் என எழுதுகிறார். காங்கிரஸையும், பிரிட்டிஷாரரையும் அப்படி குறிப்பிடுகின்றார். பகத்சிங்கை  தூக்கிலிட்ட  சமயத்தில்  பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை மேற்கொள்காட்டி,  ‘வன்முறையை நாங்கள்  ஆதரிக்கவில்லை; ஆனாலும் பகத்சிங் போன்ற நேர்மையாளர்களை மிகவும் மதிக்கின்றோம்’ என்று சொல்லும் பெரியார்  மாகாணத்திற்கு நான்கு இளைஞர்களை  இது போன்று தூக்கிலிடுங்கள்  என்று கோபத்துடன் எழுதுகிறார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை  குறிப்பிடும் போது பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கம் சார்பாக இர்வினும், இந்திய முதலாளிகள் சங்கம் (Indian Chamber of commerce) சார்பாக  காந்தியும் கையெழுத்து இடுகின்றனர் என்று சொல்கிறார்.
காங்கிரஸில்  இருந்த தலைவர்களும்  சாஸ்திரங்களை, சாதிய  அமைப்பு  முறையை  நியாயப்படுத்துபவர்களாகவே இருந்தனர்.   மதன் மோகன் மாளவியா என்ற  காங்கிரஸ் தலைவர் பிராமணர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள்  சொல்வதால்,  வெளிநாட்டு  செல்லும் போது பரிகாரத்திற்காக   களிமண்ணை எடுத்துச் சென்றார். ‘குத்தூசி குருசாமி’  அவரை “மண்ணுருண்டை  மாளவியா” என்றுதான் குறிப்பிடுவார். அவர்தான் பின்னாட்களில்  இந்துத்துவா சக்திகள் வளர காரணமாக இருந்தார்.
மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் முறையினை  ஒழிப்பதற்காக ஏழு வருஷம் மகர்  சத்தியாக்கிரகத்தை அம்பேத்கர் நடத்துகின்றார். ஏழு வருஷம் தொடர் வேலை நிறுத்தம். யாருமே   நடத்தாதது.  “இந்திய தொழிலாளர் கட்சி” மூலமாக அது நடத்தப்பட்டது.  அம்பேத்கர் அடிமூலத்திலிருந்து வரும் மாற்றங்களை சீர்திருத்தம் என்றுதான் சொல்கிறார்.  வன்முறை  மூலம் நடைபெறும் செயல்களை குறிக்கவே  புரட்சி என்ற சொல்லை கையாளுகின்றார்.     கிராம்ஷி  “கண்ணுக்கு புலனாகாத மாற்றங்கள் என்று குறிப்பிடுவார்” நாம் அரசு கட்டமைப்பை   தகர்க்கின்றோம்.   மாற்றம்  நிகழ்வது நமக்கு தெரிகிறது. அதனால் அதை புரட்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆனால்           காலம் காலமாக  இருப்பவற்றை மாற்றி அமைப்பதை எப்படி குறிப்பிடுவது? திராவிட இயக்கங்களை   விமர்சிக்கின்றோம். இன்றைக்கு நான்கு வெவ்வேறு சாதிகளை  சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற  சூழலே  உள்ளதே.  முன்பு  அப்படி பேச முடியாது.  இரண்டு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் கூட நண்பர்களாக  பழக முடியாது.  நல்ல உடைகள் கூட இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் உடுத்த முடியாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளதற்கு திராவிட  இயக்கமும் ஒரு காரணம்.  அதற்காக, திமுக, அதிமுக-வை திராவிட இயக்கங்கள் என்று குறிப்பிட முடியுமா?
மார்க்சிஸ்ட்: ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து…
எஸ். வி. ஆர்: ஏகாதிபத்தியம்  என்பது இன்று நேரிடையாக இல்லை. கண்ணுக்கு  புலனாக விதத்தில் ஏகாதிபத்திய முறைகள் நிலவுகின்றது. அமெரிக்கா தான் இன்று முக்கிய  ஏகாதிபத்திய நாடு,  அதற்கு  சில ஐரோப்பிய நாடுகள் துணை  போகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலனி நாடுகள் என்று எதுவும் கிடையாது, அதனால் காலனி  எதிர்ப்பு போராட்டங்கள் கிடையாது.  நேரடியாக   ஒரு நாட்டை  ஆக்கிரமிப்பது என்பது இன்று கிடையாது.  ஆனால் மறைமுகமான சுரண்டல் என்பது நிலவுகிறது.  ஏகாதிபத்தியம் என்பது மக்கள் கண்ணுக்கு புலனாகாமலேயே  தனது  சுரண்டல் பணியை செய்து வருகின்றது.  இந்நிலையில் அமெரிக்க  ஏகாதிபத்தியம் பற்றியும்,  அதன் அடாவடித்தனமான சுரண்டல் பற்றியும்  மக்கள் மத்தியில் எப்படி கொண்டு  செல்வது?  ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்ற  ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா,  லிபியா  போன்ற நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் நேட்டோ படைகள்   பற்றியும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றியும் தெரியும்.
ஆனால் நமது நாட்டில் நேரிடையாக  ஏகாதிபத்தியம் பற்றி தெரியாது.  மறைமுகமாக அனைத்திலும் ஏகாதிபத்திய சுரண்டல் உண்டு.   நாம் அணியக்கூடிய  உடை,  உண்ணக் கூடிய உணவு   எல்லாவற்றையும்  யார் தீர்மானிக்கிறார்கள்?
லெனின் அவர்கள் எழுதிய “ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” என்ற நூலில் முதலாளித்துவ காலத்திற்கு முந்தைய  ஏகாதிபத்தியங்கள் பற்றி பேசுகிறார்.  ரோமப் பேரரசு பற்றியும்  அந்த கால கட்ட  பேரரசுகள் பற்றியும்  பேசுகிறார்.  அப்போதைய  ஏகாதிபத்தியங்கள்  தன்மை அடிப்படையில் வேறுபட்டவை. அதற்குப் பிறகு, தொழிற்சாலைகள்  உருவானபின், மூலதனம்  வளர்ந்தபின்  உருவான காலகட்டத்தில்  சந்தையை பங்கிட்டுக் கொள்வதில் ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு போர்கள்  நடந்தன. ஆனால், இப்போது ஏகாதிபத்தியங்கள்  ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலைதான் நிலவுகின்றது.  அவர்களுக்குள் ஏற்படும்  முரண்பாடுகளால் போர்கள்  நடைபெறும்  நிலை இல்லை.  மாறாக,  அவர்களுக்கு வெளியே உள்ள  நாடுகள் மீதுதான் போர் தொடுக்கிறார்கள்.   சிரியா,  ஈராக்,  அதையடுத்து   ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ  படைகளை  நிறுத்தியுள்ளார்கள்.  யூகோஸ்லோவியாவை   உடைத்தனர்.   தங்களுக்கு அடிமையாக  இருக்க  விரும்பாத நாடுகளை  ஒன்று சேர்ந்து  தாக்குகின்றனர்.
மார்க்சிஸ்ட்: பாசிசம் என்று மரபு ரீதியாக ஒரு வரைவிலக்கணம் சொல்லி வருகிறோம்.  இப்போது இருக்கும்  சூழலை  பாசிசம் என்று சொல்வது சரியானதா
எஸ்.வி.ஆர் : அளவுக்கு மிறிய  சர்வாதிகாரத்தை பாசிச  அடக்குமுறை  என்று சொல்லுகிறோம்.  அறிவியல்  ரீதியாக  அது சரியல்ல. நிதி மூலதனத்தின் கை ஓங்கி உள்ள இடத்தில்தான் பாசிசம் வரும் என்ற வரைவிலக்கணத்தை அப்படியே  இங்கு பொருத்திப் பார்க்க முடியாது.   போர்ச்சுக்ல்லில்  ஷைலாசர் ஆட்சியில்  பாசிசம் இருந்தது. அங்கு, அப்போது நிதி மூலதன குவிப்பு இல்லை. இத்தாலியில்  பாசிசம்  இருந்தது.  ஹிட்லருடன் இருந்ததால்  சில இடங்களில் மட்டும் யூதர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது.  ஆனால் ஜெர்மனியில் இருந்ததைப் போல அழித்தொழிப்பு  முகாம்கள் போன்ற கொடும் அடக்குமுறைகள் அங்கு இருக்கவில்லை. பாசிசத்தை வரையறுப்பது ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்பது அல்ல. இங்கு ஜனநாயகத்தை முற்றிலும் மறுக்கக்கூடிய, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யக்கூடிய, ஒற்றை அடையாளத்தை திணிக்கக்கூடியதாக உள்ளது.
மார்க்சிஸ்ட் : இந்துத்துவா கருத்து நிலை சார்ந்து வேகவேகமாக மக்கள்  திரட்டல்  நடந்து  வரும்  நிலையில் இந்த அபாயத்தை எதிர் கொள்ள திராவிட கருத்து நிலையின் பல கூறுகள்  பயன்படக்கூடும். பொதுவாக…இடது சாரிகள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி…
எஸ்.வி.ஆர் :  இன்றைக்கு ஆட்சியிலுள்ள பாஜக  சாதியை நிலை நிறுத்த விரும்புகிறது. சாதி வேண்டும் என்பதுதான் அவர்களுடைய  கொள்கை.   கையிலுள்ள ஐந்து விரல்களை போல சாதி அமைப்பு உள்ளது. பிரிந்திருந்தாலும் அவை ஒன்றாகவே  இயங்குகின்றன.  இது கடவுளால் அருளப்பட்டது என்று  ஆர்.எஸ்.எஸ்.  சொல்லுகிறது. ஆனால்  அவர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டை விரலுக்குரிய   இடத்தை கொடுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் ஒத்துக்கொள்வார்களா? சாதி என்ற பிரிவினை இருப்பதால்தான் பாசிச சக்திகள் செயல்பட  முடிகிறது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்  கட்சிகளின்  துவக்க காலத்திலும் அதற்கு பிறகும் போர்க்குணமிக்க போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம்.  நவீன  தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக உள்ளது.  போராடும் இயக்கங்களை ஆயுதம் கொண்டு  ஒடுக்க எளிதில்   முடிகிறது.  ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட  அரபு புரட்சி,  வால் ஸ்டீரிட் முற்றுகை போன்றவற்றை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போக முடியவில்லை.  தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு எளிதில்  ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக  போராடுபவர்களை  அடையாளம் காணவும், பின் தொடரவும் முடியும்.  மாவோயிஸ்டுகள்  ஒருபுறம் ஆயுதப் போராட்டங்களை  நடத்தி வந்தாலும் இன்றைய சூழலில் அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெகு மக்களை திரட்டுவதுதான்  நமக்குள்ள ஒரே வழி.  அதை வலிமையாக நாம் செய்ய வேண்டும்.
இன்றைய சூழலில் சூழலியல் பிரச்சனைகளையும் நாம் கையிலெடுக்க வேண்டும். பல பிரச்சனைகளில் ஒன்றாக இவற்றைப் பார்க்கக் கூடாது. ஏகாதிபத்திய இலாப வெறியால்  உலகில் உள்ள மனிதர்கள் வாழும் ஒரே கிரகமான புவிக்கோளம் ஆபத்தை  எதிர் நோக்கி உள்ளது.  மனித குலத்தை பாதுகாக்க,  மற்ற எல்லோரையும் விட நமக்கு அதிக பொறுப்பு உள்ளது.  சோவியத் யூனியன்  கால கட்டத்தில்  போல்ஷ்விக் கட்சி சூழலியல் விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தியது. வனப்பகுதிகளை பாதுகாக்க  சிறப்பு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தப்பட்டன.  புகாரின்  அவர்களின்  எழுத்துக்களில் சூழலியல்  விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டது.  பிரஷ்னொவ்  காலத்தில் கூட  சூழலியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  தேவை உள்ளது.
இன்றைய மகாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.  உலக நாடுகள் பலவற்றிலும் குடிநீர்  பிரச்சனை உள்ளது. இஸ்ரேல் சிரியாவுடனான போருக்கு பிறகு திருப்பித்தரப்பட்ட பகுதிகளில் கோலான் குன்றுகள் இல்லை.  அதை அவர்களே வைத்துக் கொண்டனர். ஏனென்றால்  அவர்களின் நீர்  ஆதாரம் அங்குதான் உள்ளது. அதைப் பாதுகாத்து தங்களிடமே  வைத்துக் கொள்ள வேண்டும்என்று நினைக்கின்றனர்.
இனி அடுத்து நாடுகளிடையேயான சண்டை, பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீருக்காக  நடக்கக் கூட வாய்ப்புள்ளது. புவி அவ்வளவு மாசுப்பட்டுள்ளது. எனவே சூழலியல்  பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும்.   அணு மின்சாரம்  உண்மையிலேயே மிகப் பெரிய  செலவு பிடிக்கக்கூடியது. அனல், புனல் மின் திட்டங்களை விட  பல மடங்கு  செலவு பிடிக்க கூடியது.
நியூட்ரினோ திட்டத்தை பொறுத்தவரையில் அது அவசியமான ஆராய்ச்சி ஆகும். அத்திட்டத்திற்கு எதிரான  வாதங்களை நாம் அறிவியல் ரீதியாக முறியடிக்க வேண்டும்.  அறிவியலை  மிக உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு போக நியூட்ரினோ திட்டம் மிகவும் அவசியம் ஆகும்.
மின் உற்பத்தித்திட்டங்களில் இன்று மரபு சாரா திட்டங்கள்  முன்னுக்கு வந்து விட்டன. பல நாடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் பிரபலமாகி வருகின்றன. உலக நாடுகளில் பெருகும்  குப்பைகளை  சமாளிப்பது இன்றைக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. நாம் இவற்றுக்கெல்லாம் மாற்று முறைகளை முன் வைக்க வேண்டும்.
நம்மாழ்வார் இயற்கை விவசாயம் என்ற மாற்றை முன் வைத்தார். நிலச்சீர்திருத்தம்  குறித்து அவர்  எதுவுமே பேசவில்லை. இருப்பினும் ஒரு மாற்றை முன் வைத்து  நிலைப்படுத்தினார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு நிலம் சார்ந்த  உறவுகள் பற்றிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவு நிலங்களை  உடைமையாக வைத்து இருப்பவர்கள் இன்று இல்லை. அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கோவில் நில உடைமைகளில்கூட  மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அது சார்ந்த  ஸ்தூலமான ஆய்வுகள் நமக்கு தேவை. இல்லையென்றால் நாம் பழைய  விவரங்களை  வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம்.
இன்னும் தமிழகத்தில் உள்ள சில மார்க்சிய அறிவு ஜீவிகள் பழந்தமிழ்  இலக்கியங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு இன்றைய தேவை, இன்றுள்ள சூழல் குறித்து விரிவான ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின்  இன்றைய செயல்பாடு, நிதி மூலதனத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுகள் தேவை. தமிழகத்திலுள்ள இடதுசாரி அறிவு ஜீவிகள்   எல்லோரும் ஒன்றிணைந்து இத்தகை  ஆய்வுகளை செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இன்றைய  காலத்தின்   தேவையும் கூட. பழமை வாதம் பற்றி  பேசுவது  எரிச்சலையே உண்டு பண்ணுகிறது.  அதனால்தான் நான் தேசிய  வாதிகள்  பற்றி பேசுவது கிடையாது.  நாம் சர்வ தேசிய வாதிகள். நமக்கு சர்வ தேசிய உணர்வுதான் இருக்க வேண்டும்.  குத்துச்சண்டை  வீரர் முகம்மது அலி இறந்தால்,  நமது சொந்தக்காரர் இறந்ததைப் போல நமக்கு  உணர்வு வர வேண்டும்.  மக்கள்  மத்தியில் சர்வ தேசிய உணர்வினை வளர்க்க நாம் பாடுபட வேண்டும். 

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய இலக்கணங்கள் உண்டு. அவையாவன: தாராளமயம், தனியார்மயம், உலகமயம். இவற்றை இணைத்து நவீனதாராளமயக் கொள்கைகள் என்றும் அல்லது சுருக்கமாக நவீனதாராளமயம் என்றும் அழைப்பது வழக்கம். நவீன தாராளமயம் என்பது இந்தக் கொள்கைகளின் தத்துவ அடிப்படையையும் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதன் பகுதியான, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று இலக்கணங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சரியான புரிதல் அவசியம்..

தாராளமயமாக்கல்

முதலாளித்துவம் மேலைநாடுகளில் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்துவந்த கட்டத்தில் அதற்கு முந்தைய காலத்தில் அரசர்களிடம் சில வணிகர்கள் சிறப்புசலுகைகள் பெற்றுவந்தனர். அரசர்களும் குறுநிலமன்னர்களும் தனியார் தொழில்முனைவோர்மீதும் வணிகத்தின்மீதும் பலநிபந்தனைகளையும் வரிகளையும் விதித்துவந்தனர். இவையெல்லாம் முதலாளித்துவத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. 18ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வளர்ந்துவரும் முதலாளிகள்மீது அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்ற கோட்பாடு முதலாளி வர்க்கத்தின் சார்பாக ஆதாம்ஸ்மித், ரிக்கார்டோ போன்ற பிரிட்டிஷ் நாட்டு அரசியல்-பொருளாதார அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இந்த ‘அரசுதலையீடாமை’ என்ற தத்துவம்தான் தாராளமயதத்துவம் என்று அழைக்கப்பட்டது. இதன் தத்துவஇயல் பின்புலமாக இருந்தது ‘தனிநபர்சுதந்திரம்’ என்ற கோட்பாடு. இந்த கோட்பாட்டின் உண்மையான உள்ளடக்கம் அரசுதலையீடே பொருளாதாரத்தில் இல்லை என்பது அல்ல. மாறாக, முதலாளிகளின் செயல்பாடுகள்மீது அரசு கட்டுப்பாடு கூடாது என்பதுதான். டாக்டர்அம்பேத்கர் அவர்கள், “அரசு தலையீடு இன்மைதான் ‘சுதந்திரம்’ அளிக்கும்” என்ற வாதத்தைப்பற்றி பின்வருமாறு மிகச் சரியாக குறிப்பிடுகிறார்:

“ யாருக்கு இந்த சுதந்திரம்? நிலப்பிரபுவிற்கு குத்தகையை உயர்த்த சுதந்திரம். முதலாளிகளுக்கு வேலைநேரத்தை அதிகரிக்க சுதந்திரம்.தொழிலாளியின் கூலியை குறைக்க சுதந்திரம்.”[1]

மேலும் தாராளமயம் என்பது முதலாளிகள்பால் தாராளம் மட்டுமே. 18-19ஆம் நூற்றாண்டுகளில் தாராள மய தத்துவத்தை முன்வைத்தவர்கள் காலனிஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. தத்தம் நாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கு உலகின் பெரும்பகுதியை உட்படுத்துவதற்கு மேலை முதலாளித்துவ அரசுகள் காலனியாதிக்கத்தை மேற்கொண்டனர் என்பது வரலாறு! ஆகவே அரசின் மையப்பங்குடன்தான் முதலாளித்துவம் வளர்ந்தது, உலகம் முழுவதும் பரவியது. அதேபோல்தான் முதலாளித்துவ அரசுகளின் வரிக்கொள்கைகள், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்கள்பால் அவற்றின் அணுகுமுறை என்பவை எல்லாமே, தாராளமய தத்துவம் எந்தவகையிலும் அரசின் பங்கை நிராகரிக்கவில்லை என்பதையும், அதேசமயம் முதலாளிகள்பால் தாராளமான அணுகுமுறை என்பதே இதன் உள்ளடக்கம் என்பதையும் இவை நமக்கு தெளிவாக்குகின்றன. இந்த நாணயத்தின் மறுபக்கம்தான் உழைப்பாளி மக்கள்மீது ‘தாராளமய அரசுகள் ஏவிவிடும் அடக்குமுறைத் தாக்குதல்கள்.[2]

ஆனால் தாராளமயம் பற்றி ஆளும் வர்க்கங்களும் அவர்கள் ஊடகங்களும் எப்படி வாதாடுகின்றன? சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதுபோல் வேடம் தரிக்கின்றன. அரசு கட்டுப்பாடுகள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிறுதொழில் முனைவோரை சிறைப்படுத்துகின்றன என்றும் இதிலிருந்து– அவர்கள் மொழியில், “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தில்” இருந்து–அவர்களை விடுவிக்கவே தாராளமயம் அவசியம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.[3] உண்மையில் தாராளமயம் என்பது இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள்மீது எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தங்குதடையின்றி லாபவேட்டையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் கொள்கையாகும். இதன் மறுபக்கம், பெருமுதலாளிகளின் சுரண்டலையும் அதற்கு ஆதரவான அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் மக்கள்மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகும்.

தனியார் மயமாக்கல்

தனியார்மயம் என்பதன் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்பதாகும். இதை எதிர்ப்பது அவசியம். தனியார்கள் அரசு விற்கும் பங்கை வாங்குகின்றனர் என்பதன் பொருள் என்ன? அதன்மூலம் அவர்கள் லாபம் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்புதானே?  அது சரி என்றால், ஏன் அரசே அப்பங்குகளை கைவசம் வைத்துக் கொண்டு லாபம் ஈட்டி, வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது? ஆகவே, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை. குறிப்பாக, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நிகழ்வது என்னவெனில் லாபம் ஈட்டித்தரும் நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அரசு விற்று வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைத்துக் காட்டி, பன்னாட்டு மூலதனத்தை திருப்திப்படுத்த முற்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது. மாறாக, அவற்றை சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு லாபகரமாக இயக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.

ஆனால் தனியார்மயம் என்பது பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது மட்டும் அல்ல. அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த பல துறைகளை – பொதுநன்மை நோக்கில் செயல்பட வேண்டிய துறைகளை – தனியாரிடம் ஒப்படைத்து, லாப அடிப்படையில் அவை செயல்படலாம் என்று அனுமதிப்பது தனியார்மயக் கொள்கைகளின் இன்னொரு மிக முக்கிய அம்சம். கல்வி, ஆரோக்கியம், மற்றும் கட்டமைப்பு துறைகள் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். நமது நாட்டில் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் நீண்டகாலமாக தனியார் அமைப்புகள் பங்காற்றி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இவ்வமைப்புகள் லாபநோக்கத்துடன் கடந்த காலங்களில் செயல்பட்டதில்லை. பெரும்பாலும் சமூகமேம்பாடு என்ற நோக்கில் செயல்பட்டவை. இவற்றில் பல விடுதலைப் போராட்ட காலத்தில் சமூகத்தொண்டு என்ற நோக்குடன் நிறுவப்பட்டவை. பல சமயங்களில் சாதி, சமய சமூக அடிப்படையிலும்கூட உருவாக்கப்பட்டு, அதேசமயம் அனைத்து சமய, சமூக மாணவ மாணவியரையும் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்களாக இயங்கின. ஆனால் 1991க்குப்பின், தனியார் மயம் என்பது கல்வித்துறையிலும் ஆரோக்கியத் துறையிலும் முழுக்க முழுக்க வணிகமயமாகவே அமலாகியுள்ளது. ஒரு துறையை தனியாருக்கு திறந்துவிடுவது என்பது வெறும் நிர்வாக ஏற்பாடு அல்ல. திறன் குறைந்த பொதுமேலாண்மைக்குப் பதிலாக திறன்மிக்க தனியார் மேலாண்மை என்ற தவறான படப்பிடிப்பை முன்வைத்து, இதை நியாயப்படுத்த ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. மறுபுறம், அரசிடம் காசு இல்லை, ஆகவே தனியாரிடம் கல்வியையும் ஆரோக்கியத்தையும் ஒப்படைப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் வாதிடப்படுகிறது. இந்த வாதங்கள் தவறானவை. பிரச்சினை மேலாண்மைத் திறன் அல்ல. தனியார் துறை மேலாண்மை பொதுத்துறை மேலாண்மையை விட அதிகத்திறன் கொண்டது என்று கருத எந்த ஆதாரமும் கிடையாது. சொல்லப் போனால், ஏராளமான தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் சிக்கி காணாமல் போகின்றன. மறுபக்கம், சமூக நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொண்டே பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதேபோல், அரசிடம் காசு இல்லை என்று சொல்வது, செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் உரிய வகையில் வரிகள் விதித்து வளங்களை திரட்ட அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

உண்மையில், தனியார்மயம் என்பதன் பொருள், பொதுநோக்கு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த துறைகளை தனியார் லாப நோக்கில் செயல்படுத்துவது என்பதாகும். இதன் மிக முக்கிய விளைவு ஏழை மக்களுக்கு கல்வியும் ஆரோக்கிய வசதிகளும் எட்டாக்கனியாக மாறுவது என்பதாகும். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வியும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற நிலைக்குத்தான் இத்துறைகளில் அரசு தனது பொறுப்பை புறக்கணித்து தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பதன் விளைவுகள் இட்டுச் செல்லும். அதேபோல்தான் கட்டமைப்பு வசதிகள் விசயமும். சாலைகள், இதர போக்குவரத்து வசதிகள், வேளாண் விரிவாக்கப் பணிகள், பாசனம் உள்ளிட்டு அனைத்து துறைகளையும் நடவடிக்கைகளையும் தனியார் துறையின் கையில் ஒப்படைத்து லாபநோக்கில் அவை இவற்றை செயல்படுத்தலாம் என்ற பாதையை நாம் தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக பார்க்க வேண்டும். தாராளமயம், தனியார்மயம் இரண்டும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், இத்துறைகளில் லாபநோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின்மீது சமூக நெறிமுறைகளை விதித்து செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விசயங்களாக ஆகியுள்ளன.

உலகமயமாக்கல்

உலகமயம் என்ற கோட்பாட்டிற்கு ஏராளமான அம்சங்கள் உண்டு. ஆனால் இங்கு, பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த அம்சங்களை மட்டுமே நாம் பரீசீலிக்க உள்ளோம். பொருளாதார ரீதியில் உலகமயம் என்பதற்கு கீழ்க்கண்ட இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு:

சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, “சுதந்திர” பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பது. நாட்டின் பொருளாதாரத்தை இந்த வகையில் பன்னாட்டு வணிகத்திற்கு முழுமையாக திறந்து விடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்.
நிதிவடிவில் மூலதனத்தை நாட்டுக்குள்ளே வரவும் அதன் விருப்ப்ப்படி நாட்டை விட்டு வெளியே செல்லவும் தங்குதடையின்றி அனுமதிப்பது.
முதல்அம்சம் வளரும் நாடுகளின் தொழில்வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக அமையும். சமத்துவம் அற்ற பன்னாட்டுச் சந்தைகளில் சுதந்திர வர்த்தகம் என்பது வளரும் நாடுகளுக்கு சமஆடுகளமாக இருக்காது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதும் அல்லது நீர்த்துப் போகச் செய்வதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் வளரும் நாடுகளின் சந்தைகளை கைப்பற்ற பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். சுதந்திர வர்த்தகம் பேசும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பலகாரணங்களை முன்வைத்து வளரும் நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பார்கள் என்று அனுபவம் பாடம் புகட்டுகிறது.

உலா வரும் நிதிமூலதனம்

உலகமயம் என்பதன் இரண்டாவது பொருளாதாரஅம்சம் நிதிமூலதனம் தங்குதடையின்றி நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தன்விருப்பப்படி பயணிப்பது என்பதாகும். ஒரு நாட்டின் பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரையில், இதுதான் உலகமயத்தின் மிக முக்கிய அம்சம். ஏனென்றால், வெளிநாடுகளில் இருந்து நிதியாக மூலதனம் ஒரு நாட்டுக்குள்ளே தன் விருப்பப்படி நுழையலாம். அதேபோல் வெளியேறலாம் என்ற நிலை ஏற்படும் பொழுது அந்த நாடு தனது பொருளாதார கொள்கைகளை தன் தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கணிசமான அளவிற்கு இழக்கிறது. அரசு ஒரு பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டால் நிதிமூலதனம் அதை எப்படி பார்க்கும் என்பதைப் பற்றி அரசுகள் கவலைப்படும் நிலை உருவாகிறது. அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று நிதிமூலதனம் கருதினால் அது நாட்டைவிட்டு தனது பணத்தை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளின் நிதிச்சந்தைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலேயே அரசுகள் செயல்படும் நிலை உருவாகிறது. இதனால் அரசின் வரவு-செலவு கொள்கைகள் நிதிமூலதனத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைகின்றன. இதில் ஒரு மிகப் பெரிய ஜனநாயக மறுப்பு அம்சம் உள்ளது. நிதிமூலதனத்திற்கு உலகை உலாவரும் உரிமையைக் கொடுத்துவிட்டதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் மக்கள் நலன்காக்கும் வகையில் அரசு வரவுசெலவு அமையும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் கஜானா காலி, வரவுசெலவு இடைவெளி கூடினால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு வெளியேபோய்விடும் என்று வாதிடுவது மாமூலாகி விட்டது.

நிதிமூலதனம், குறிப்பாக அந்நிய மூலதனம், வரவேற்கப்பட வேண்டும் என்பதும், அதன்மீது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்பதும் உலகமயம் என்பதன் முக்கிய அம்சம். ஆனால் ஒரு நாட்டுக்குள் அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கு இது மட்டும் போதாது. ஏனென்றால், பன்னாட்டு மூலதனம் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாமே! எனவே, அதனை ஒரு நாட்டுக்குள் ஈர்க்க வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அந்நிய மூலதனத்திற்கு சலுகைகள் அளித்தால் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அதே சலுகைகளை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் வரிவருமான இழப்பை ஈடுகட்டி, வரவுசெலவு பற்றாக்குறையை வரம்புக்குள் நிறுத்த, உழைக்கும் மக்களுக்குச் சேரவேண்டிய மானியங்களை வெட்டுவதே ஆயுதமாகிறது. இதுதான் உலகமயம் படுத்தும் பாடு.

அரசு முன்வைத்த வாதம்

1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன? அவர்கள் புனைந்த கதை இதுதான்:

இக்கொள்கைகளால் அந்நிய, இந்திய கம்பனிகள் ஏராளமாக முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். பன்னாட்டு மூலதனம் இங்கு வந்து குவியும். பெரும் தனியார் முதலீடுகள் மூலம் நிறுவப்படும் பெரிய ஆலைகளின் உற்பத்தி உலகச் சந்தைகளில் விற்கப்பட்டு நமது ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கும். இதனால் நாம் தேவைப்பட்டதை எல்லாம் தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். உற்பத்தி பெருகும். வேலைவாய்ப்பு வளரும். அந்நியச் செலாவணி குவியும். வளர்ச்சி விகிதம் உயரும். வறுமை மறையும்.

தாராளமய காலத்தில் நடந்தது என்ன?

மூன்று முக்கிய விசயங்களை நாம் பரிசீலிக்கவுள்ளோம். ஒன்று, பொருளாதார வளர்ச்சி விகிதம். இதில் பல்வேறு முக்கிய துறைகளில் வளர்ச்சி எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் பரிசீலிக்க உள்ளோம். இரண்டு, இவ்வளர்ச்சியின் வர்க்க அம்சங்களை பரிசீலிக்க உள்ளோம். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளிகள், இதர உழைக்கும் மக்கள்மீது எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், மறுபுறம்இந்திய, அந்நிய பெருமூலதனங்களும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும் எவ்வாறு பயன் அடைந்துள்ளன என்பதையும் சுருக்கமாக காண்போம். மூன்று, ஆளும் வர்க்க கொள்கைகளை எதிர்த்த நமது மாற்றுக்கொள்கை பற்றியும் பார்ப்போம்.

அடுத்தடுத்த பகுதிகளில் …

25 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது?

உலகமய காலகட்டத்தின் படிப்பினைகள் என்னென்ன?

————————————

[1]Government of Maharashtra(1979), Collected works of Babasaheb Ambedkar, (தமிழ் மார்க்ஸிஸ்ட்இதழில் சில ஆண்டுகளுக்கு முன் டாக்டர் அம்பபேத்கர் பற்றி நான் எழுதிய கட்டுரையில் இதை மேற்கோள் காட்டியிருந்தேன்)

[2]இதை நாம் மாருதி-சுசுகி ஆலை தொழிலாளர் பிரச்சினையில் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

[3]அண்மையில், கூச்சநாச்சமின்றி தாராளமயத்தை தீவிரப்படுத்த இன்னொருவாதமும் தாராளமயவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால், அரசு கட்டுப்பாடுகள் விதித்தால் (எடுத்துக்காட்டாக, சுற்றுசூழல் நெறிமுறைகளை அமல்படுத்தினால்) முதலாளிமார்களின் ஊக்கம் குறைந்துவிடும், அதனால் முதலீடு குறையும், எனவே பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற வாதம்.⁠⁠⁠⁠

Diwali For whom – By Whom – Against Whom?

Diwali
For whom – By Whom – Against Whom?

Hi Friends,

The Whole country is waiting to celebrate Diwali. In India Diwali is celebrated in most of the states and it has two different stories behind it. In north India, it is being celebrated as the day in which Lord Ram returned to Ayodhya and coronated himself as king after killing Ravana. In south India, It is the day when Krishna and his wife Satyabhama killed Narakasura, A Dravidian King.

Even as this festival is being celebrated as the festival of Hindus, both the stories behind the celebration of Diwali speak about the Aryan – Dravidian war, which is the war between the races in ancient India. All the Epics, Vedas speak about the Aryan – Dravidian War and they were written by the Aryans, to bat for the Aryans. Both the stories behind the celebration of Diwali are unethical and they are one of the world’s topmost racially discriminating stories.

Ravanan
ராவணன்

In Ramayana, the Aryan king Ram with his wife Sita and his brother Lakshman, were staying in the forest. Soorpanaka, the sister of Dravidian king Ravana came to the forest and fell in love with Lakshman and she had proposed to him. But the racist Lakshman rejects her proposal as she belongs to Asura race (Sudra). As an expression of his racial hatred, he cut her nose and one breast for proposing him, her love. Her brother Ravana came to fight for this, and took Sita to his place. This is a Tit for Tat action, where the first move is made by Lakshman. We don’t want to go more in depth considering the size of the pamphlet. After winning the war, Rama went to Ayothya and coronated himself as king. Ravana’s action of abducting Sita must be seen as an answer to the mutilating of the beautiful body of Soorpanaka, his own sister, by Lakshman at the instance of Rama himself. To be noted down is, Ravana did not physically assault Sita at all. Then why demonise Ravana alone? If you demonise Ravana for abducting Sita, then why not demonise Rama and Lakshman for their criminal actiions against Sampooka and Soorpanaka? How can we celebrate such a male chauvinist Rama’s coronation festival?

diwali-varahamIn the story of Narakasura, the complete story itself is unbelievable and against science. The story starts with the demon Iranyaksha (Asura King), who folded the earth like a ‘mat’!, ‘ran into the ocean’! and hid himself there. So Devas went to Mahavishnu and complained about Iranyaksha. Mahavishnu took the incarnation as boar and went to rescue the earth from Iranyaksha. Then he killed him and took the earth from him. While taking her back, he had an intercourse with Bumadevi (Earth). Then as usual he says bye and go about his main business. In that way a child was born to Bumadevi called Narakasura. He grew up and gave a lot of trouble to Devas. Again the Devas went to Lord Mahavishnu to protect them and to kill Narakasura. So he came in the incarnation of Krishna and killed Narakasura. Here the complete story seems to be very funny like a modern day Harry potter story series, full of magic and against science. We all know that earth cannot be rolled like a “mat” and cannot be taken into the ocean which is part of the earth. And if we start explaining every funny part of this story, then we need to write a separate book.

We are not here to debate who is good or who is bad, which we can have in a separate session. But the thing to be learnt from these stories is the Aryan – Dravidian War which was moulded in to this kind of stories to promote Aryan supremacy theory.

Mahish-bannerTill date, Mahisasur, an Asura is owned and venerated by Santhals (the tribal community in central India). A sect of Tribals from Jarkhand celebrate Ravana as their Lord. If questioning the moral behind celebration of Diwali, hurts the sentiments of Hindus, then why not will it hurt the Hindu (constitution defines Tribals also as Hindus) sentiment if effigy of Ravana and Mahisasura are burnt in Durga puja ? If you celebrate Durga puja, it will hurt the santhals. If you celebrate Diwali, it will hurt Jarkhand tribals. Will it not ?

The Aryans – who came from central Asia, entered the land area which is now called as India through Kybar, Bolan passes and occupied the land. They defeated the sons of the soil, the Dravidians and Tribal communities through conspiracies and became rulers. They have depicted Dravidians and Tribals as the worst and most uncivilized creatures, as demons and as monkeys in their epics and Vedas. These Epics and Vedas are now made sacred and they were said to be the common heritage for the so called ‘Hindus’ who include both Aryans and Dravidians. Only through these Epics and Vedas, they make Varnasrama sacred, which we call it as the Brahmanism.

APSC appeals you to ignore the Diwali festival, which is celebrated to show Aryan victory over the sons of soil. As a son of the soil, it is our duty to resist Aryan invasion into our cultural life, celebration of victory of Aryans over the sons of soil, imposition of Sanskrit over all Indian languages. Let us unite together and fight Brahmanism in every format which poisons the humanity through religious sentiments, culture, language and education.

Jai Sampooka, Jai Soorpanaka, Jai Ravana!
Jai Mahisasura, Jai Narakasura, Jai Mahabali!

Unite and Fight against the Brahmanism!
We are the sons of soil!
Get rid of the central Asian Aryan culture!

_____
source: Ambedkar Periyar Student circle
apsc.iitm@gmail.com
apsc@smail.iitm.ac.in

தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்

தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்

சமூக வரலாறும் சாதிகள் வரலாறும்

தமிழ்ச் சமூக வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் அவா நீடிக்கிறது. ஆனால் சமூக வரலாறு எழுதுவதற்குத் தொடங்கப்படும் முயற்சிகள் தொடக்கத்திலேயே முடங்கி விடுகின்றன. சமூக வரலாறு எழுதப்படுவதற்குப் பல போதாமைகள், தடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, சாதிகள் வரலாறு பற்றிப் போதுமான அளவுக்கு சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் இல்லாமை ஆகும். சமகால சமூகத்தில் சாதி உணர்வு முக்கியமான மெய்மையாக நிலவுகிற போது, கடந்த காலம் பற்றிய தேடலில் அவ்வுணர்வு இடையீடு செய்து, உணர்நிலையோடோ உணர்நிலையற்றோ பொய்மைத் தோற்றப்பாடுகளை உருவாக்குகிறது.

aa sivasubramanian book on dhobiஆகவே சாதி உணர்வு ஏற்படுத்தும் மனத் தடைகளைக் கடந்து செல்வதற்கு, சாதிகள் வரலாறு பற்றிய அறிவியல் பூர்வான எழுத்துகளைப் பெறுதல் அவசியமானது ஆகும். இந்த வகையிலான ஒரு எழுத்தாக “தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும்” என்ற புத்தகத்தை அண்மையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை நன்கு அறியப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர், மார்க்சியக் கருத்துநிலையாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

“தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும்” புத்தகம் ஒன்பது பகுதிகளையும் ஏழு பின்னிணைப்பு களையும் கொண்டுள்ளது. பின்னிணைப்பிலும் “தமிழ்ச் சமூகத்தில் கழுதை” என்ற முழுநீளக் கட்டுரை உள்ளது. இவை அனைத்தும் வண்ணார் வரலாறு தமிழ்ச் சமூக வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதி எனக் காட்டுகின்றன. இந்த நூலின் முறையியல், நோக்கம் பற்றி முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

குறிப்பிட்ட சாதியன்றை மையமாகக் கொண்டு நிகழும் ஆய்வு, அச்சாதியின் கடந்த காலம் - நிகழ் காலம் - எதிர்காலம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டே நிகழுதல் வேண்டும். இதன் அடிப்படையில், வரலாறு, மானிடவியல், சமூகவியல், நாட்டார் வழக்காறு ஆகிய அறிவுத் துறைகளின் துணை அவசியமான ஒன்று. எழுத்தா வணங்களுடன், கள ஆய்வுத் தரவுகளும் இணையும்போதுதான் இவ்வாய்வு சிறப்பாக அமையும். இதை உள்ளத்தில் இருத்தியே வண்ணார் சமூகம் குறித்த நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆனால் இந்நூலாசிரியரின் முயற்சி, இடையில் அவருக்கு நேர்ந்த விபத்தால் தடைப்பட்டு, “பெரிய அளவிலான நூலாக உருவாக வேண்டிய ஒன்று, குடுகுடுப்பைக்காரரின் சட்டை போன்று, கட்டுரைகளின் தொகுப்பாக” வந்துள்ளது என்று முன்னுரை கூறுகிறது. ஆயினும், சாதிகள் வரலாறு பற்றிய ஆய்விற்கான முன்மாதிரியை இந்நூல் வழங்குகிறது. இந்நூல் ஆராய்ந்த செய்திகளை எடுத்துக் கூறுவதனூடே, இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

தமிழ்ச் சமூகத்தில் வண்ணார்

18ஆம் நூற்றாண்டியின் இறுதியில், தமிழ் நிலப் பகுதியில் காலனிய ஆட்சி வேரூன்றி நிலைத்தது. அப்போது, காலனிய அரசு சமூகக் குழுக்களை வகை தொகைப்படுத்த முயன்றது. அதன் வகைதொகைப் படுத்தலில் சாதிகளின் வருணநிலை, படிநிலைத் தரவரிசை முக்கியமான இடம்பெற்றது. இச்செயல்பாடு, சாதிக்குழுக்கள் வரலாறு பற்றிய உணர்வு கொள்ளலை, அதாவது வருணநிலையில் உயர்ந்த அந்தஸ்தைக் கோரும் உணர்வு, சாதிப் படிநிலைத் தரவரிசையில் உயர்ந்த இடத்தைக் கோரும் உணர்வு என்ற எதிர் விளைவைத் தோற்றுவித்தது.

அவ்வுணர்வின் செயல் வடிவமாக சாதிப் புராணங்கள், சாதி வரலாறுகள் தோன்றின. அப்படிப்பட்ட சாதி வரலாறுகள், பொதுவாகப் புராண மூலங்களில் தோற்றுவாய்களைத் தேடிக் கொண்டன; கிடைக்கும் இலக்கிய, கல்வெட்டுத் தரவுகளைக் கொண்டு, புகழ்பூத்த கடந்த காலத்தைக் கட்டமைத்துக் கொண்டன. இந்த வகையிலான சாதி வரலாறை வண்ணார் குழுமம் படைத்துக் கொண்டு உள்ளதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த நூலில் ஆ.சிவசுப்பிரமணியன், வண்ணார் சமூக வரலாற்றை சமூக அறிவியல் நோக்கில் எழுத முயன்றுள்ளார்.

வண்ணார் வாழ்வும் வரலாறும், துரும்பர், வண்ணார் சமூகத்தின் எதிர்காலம் ஆகிய மூன்று கட்டுரைகளில் தமிழ்ச் சமூகத்தில் வண்ணார் வரலாறு, நிலை பற்றி ஆராயப்படுகின்றது. இந்த ஆய்வின் மூலம் இன்று தமிழகத்தில் உள்ள பிற சாதிகளைப் போலவே, வண்ணார் சாதியும் பல சாதிகளின் தொகுப்பு எனத் தெரிகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளாக வட்டாரம் கடந்து, ஒரே மாதிரியான சாதிகள் பெருங் குழும அடையாளத்தை உருவாக்கிக் கொள்வது பலவிதமான சமூக நிர்பந்தங்களால் நடைபெற்று வருகிறது.

 அவ்வகையில் வண்ணார்களும் ஒரே குழுமமாக மாறுவது தொடங்கியுள்ளது. ஆனால் ஊர் வண்ணார், சாதி வண்ணார் என்ற பெரும் வகையினம் வண்ணார் ஓரே குழுமமாக மாறுவதற்குப் பெருந்தடையாக உள்ளது. பள்ளர், பறையர் முதலான குடிகளுக்கு வெளுக்கும் வண்ணார், சாதி வண்ணார்களாக உள்ளனர்.  வெள்ளாளர் முதலான சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணார், ஊர் வண்ணார்களாக உள்ளனர். மருத நாட்டு வண்ணார், பாண்டிய வண்ணார் என்பன போல வட்டார அடிப் படையிலும், பணிக்க வண்ணார், புதிரை வண்ணார் என்பன போல தாம் தொழில் செய்யும் குழுமங்களின் அடிப்படையிலும் வண்ணார் பல சாதிப் பிரிவுகளாக உள்ளனர்.

1976இல் சட்டநாதன் அறிக்கை சுமார் ஐந்து லட்சம் மக்கள்தொகை கொண்டதாக வண்ணார் சமூகத்தை மதிப்பிட்டது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மை சாதிக் குழுமங்களில் ஒன்று வண்ணார் குழுமம். வண்ணார்கள் பெரும் நகரங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கை அளவில் வாழ்கின்றனர். கிராமங்களில் இரண்டொரு குடும்பங்களாக மட்டுமே வசிக்கின்றனர். அதனால் ஊரில் உள்ள பெருஞ் சாதிக் குழுமங்களால் பல்வேறு வகையிலான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகுகின்றனர்.

துரும்பர் போன்ற சாதி வண்ணார்கள் மீது, பார்த்தாலே தீட்டு என்னும் வகையில் சாதி இந்துக்கள் கடுமையான தீண்டாமையைக் கைகொண்டனர். இதனால் அவர்கள் மீது பகலில் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சாதி இந்துக்கள் விதித்து இருந்தனர். இரவில் மட்டும்தான் அவர்கள் வெளியே நடமாடியுள்ளனர். இந்தக் கட்டுப்பாடு 1932-இல் நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் நீக்கப்பட்டது.

மேலும், சாதி வண்ணார் யாருக்குத் தொழில் செய்கின்றார்களோ, அந்த ஒடுக்கப்பட்ட சாதியினரும்கூட சாதிரீதியான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது சாதிமுறையின் மிக மோசமான தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

வண்ணார்கள் பற்றிய செய்திகள் பண்டைக் காலம் முதல் கிடைக்கின்றன. ஆனால் அப்போது வண்ணார்கள் குடி ஊழியக்காரர்களாக இல்லை; ஊதியம் பெறும் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். இதற்குச் சான்றாக, வண்ணார் காணம், வண்ணார் கற்காசு முதலான தொழில் வரிகள் வண்ணாரிடமிருந்து பெறப்பட்ட கல்வெட்டுச் செய்தியை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணார்கள் துணிக்கு வண்ணம் ஊட்டுபவர் களும், துணிகளில் ஓவியம் தீட்டுபவராகவும் இருந் துள்ளனர். மேலும் வண்ணார்கள் நில உடைமையாளர் களாகவும், கோயிலுக்கு நிலக் கொடை, கோயில் புழங்கு பொருள் கொடை கொடுத்தவர்களாகவும் இருந்துள்ளனர். இப்படி இருந்தவர்கள் எப்போது குடி ஊழியக்காரர் களாக மாறினர் என்று தெரியவில்லை என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். ஆயினும் அவர், 14ஆம் நூற்றாண்டில் கரிசூழ்ந்தமங்கலம் பெருமாள் கோயிலுக்குக் கொடைப்பொருளாக வண்ணார்கள் வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு, “இது அடிமை முறையின் ஒரு வடிவமாகும்” என்று கூறுகிறார்.

இது முக்கியமான ஒரு குறிப்பு ஆகும். குடி ஊழிய முறைகூட அடிமைமுறையின் பல கூறுகளைக் கொண்டு உள்ளது. அடிமைமுறையையும் சாதிமுறையையும் ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதிய கட்டுரை இந்த இடத்தில் கூடுதல் வெளிச்சங்களைத் தரக் கூடியது. ஆயினும் தமிழ் நிலத்தில் குடி ஊழிய முறையும் சாதிப்படிநிலை முறையும் மாறாப் பண்புடைய சுயதேவை பூர்த்தியுடைய கிராம சமூக அமைப்பின் அல்லது நிலக்கிழமை சமூக அமைப்பின் நிரந்தர அம்சமாகக் கொள்ளாது, 14ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைமையின் விளைவு என எ.சுப்பராயலு, நொபொரு கரோஷிமா ஆகியோர் வாதத்தின்படி கொண்டால், ஆ.சிவசுப்பிர மணியன் போகிற போக்கில் தரும், வண்ணார் கோயிலுக்குக் கொடைப்பொருளாக வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பு முக்கியத்துவம் உடையது ஆகிறது.

வண்ணார் சமூகத்தின் மீதான, பொதுவாகக் குடி ஊழிய சமூகத்தின் மீதான பிரதான ஒடுக்குமுறை வடிவங்களில் ஒன்று “ஊர்ச்சோறு எடுத்தல்” ஆகும். ஊர்ச்சோறு எடுத்தலின் மூலம் வண்ணார் சமூகம் அனுபவித்த கொடுமையைத் தத்ரூபமாக ஆ.சிவசுப்பிர மணியன் எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தினசரி ஊர்ச்சோறு எடுக்கும் முறை இருந்ததா எனச் சந்தேகம் தோன்றுகிறது. மேட்டுநிலப் பகுதியான கொங்குப் பகுதியில், வண்ணார்கள் “கிராமத் தொழிலாளியாக” கருதப்பட்டு, ஆண்டுக்கொரு முறை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் மடாக் கணக்கில் நெல் அளக்கும் முறை இருந்தது.

பொங்கல், தீபாவளிக் காலத்தில் “ஊர்ச்சோறு” எடுத்தல், அதாவது பலகாரங்கள், கறிக்குழம்பு, மதிப்பு மிக்கதாக இருந்த காலத்தில் நெல்லஞ்சோறு ஆகியவற்றை மட்டும் வாங்கிச் செல்லும் முறை இருந்தது. அது அவர்களின் ஒரு “உரிமை”யாக இருந்தது. கேட்கும்போது மறுக்க முடியாது. மறுத்தால் அது அவமானம். ஆயினும் இந்த “உரிமை”கூட வண்ணார் நோக்கிலிருந்து பார்க்கும் போது மோசமானதுதான்.

பொதுவாக, தொன்மையான சாதிமுறை தோற்றம், நிலைத்த சாதிப் படிநிலை தரவரிசை ஆகியவை பற்றி பொதுமைப்படுத்தப்பட்ட பார்வைகள் கடந்த காலத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு நியாய உணர்வை வழங்கின. ஆயினும், பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை முழு உண்மையானது இல்லை. ஒவ்வொரு சாதியின் வரலாறும் கால அளவிலும், இட அளவிலும் பல தனித் தன்மைகளைக் கொண்டுள்ளன. மேலே கண்ட செய்திகள் மூலம் வண்ணார் சமூக வரலாறும் இந்த உண்மையை வலியுறுத்துகிறது.

உலகமயமாக்கலுக்குப் பின், வண்ணார் சமூகம் மிக மோசமான அழிவை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, பாலிஸ்டர் துணி வந்த பிறகு வெள்ளாவி வைத்து வெளுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இந்நிலை கிராமப்புறங்களில் வண்ணார் சமூக இருப்பைத் துடைத்து அழித்துள்ளது; சடங்குநிலைத் தேவை மட்டுமே இன்னும் இருப்பிற்கான சிறிய வெளியை வழங்கியுள்ளது. அது இன்னும் சில இழிவுகளைச் சுமத்துவதற்கான, சுமப்பதற்கான வெளியாகவும் உள்ளது.

கல்வி வாய்ப்புகளிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும், நகர வெளிகளிலும் வண்ணார் சமூகம் மிக பின்தள்ளப்பட்டு உள்ளதை, ஆ.சிவசுப்பிரமணியன் பின்னிணைப்பாகத் தந்துள்ள புள்ளி விவரங்களும் சட்டநாதன் அறிக்கையும் காட்டுகின்றன. இன்று சலவைத் தொழில் ஒரு புறம் அயர்னிங்காக மட்டும் சுருங்கிவிட்டது. மற்றொருபுறம் “லாண்டரி” தொழில் வலைப்பின்னலாக மாறியுள்ளது. பெரு மூலதனம் இடப்படும் லாண்டரித் தொழிலில் வண்ணார் சமூகத்தினர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதனை “பாட்டாளி வர்க்கமயமாதல்” என்று அழைக்க முடியுமா?

வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வண்ணாரும்

வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வண்ணாரும் என்ற கட்டுரையில் மாராயம் சொல்லுதல், பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு ஆகியவற்றில் வண்ணார் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இடம்பெறும் விதத்தை ஆ.சிவசுப்பிரமணியன் விளக்குகிறார். ‘பல்வேறு மங்கல சடங்குகளிலும் வண்ணார், நாவிதர் சாதியினர் சடங்கு நடத்துவோராக இருந்த நிலை பார்ப்பனியத்தை நோக்கிய மிக அண்மைக்கால நகர்வினால் மாறி விட்டது. பிராமணர்கள் சடங்கு நடத்துவோராக மாறி விட்டனர். ஆனால் அமங்கலச் சடங்குகளில் மட்டும் வண்ணார், நாவிதர் இருக்கவேண்டும் எனப் பிற்பட்ட சாதியினர் விரும்புகின்றனர்’. இந்நிலை வண்ணார்கள் மீது செலுத்தும் ஒடுக்குமுறைகளில் ஒன்று ஆகிவிடுகிறது.

இக்கட்டுரையில் மாராயம் சொல்லுதல் என்ற சடங்கு நிகழ்வை விவரிப்பதன் வழியாக, தொல் காப்பியத்தில் வரும் ‘மாராயம் பெற்ற நெடுமொழி யானும்’ என்பதற்கு நல்ல செய்தி கூறிப் பரிசு பெறுதல் என்று சரியான பொருளைத் தருவிக்கின்றனர்.

பூப்பு, இறப்பு சடங்குகளில் மூட்டுத்துணி எடுத்தல், மாத்துத் துணி விரித்தல் என்பன போன்ற, தீட்டு என ஒதுக்கும் அல்லது இழிநிலைக்கு ஆளாக்கும் வேலைகளைச் செய்ய வண்ணார்கள் நிர்பந்திக்கப் படுகின்றனர் என்று ஆ.சிவசுப்பிரமணியன் காட்டு கின்றார். இது சடங்குகளின் மூலம் சாதிகளிடையே உள்ள உறவு கட்டமைக்கப்படுகிறது எனக் காட்டுகிறது. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் வண்ணார் பெற்றிருந்த சடங்குநிலை, ஏன் அந்நிலையை இழந்தனர், கொங்கு வட்டாரத்தின் எழுதிங்கள் போன்ற வட்டாரச் சடங்குகளில் வண்ணார் பெற்றிருக்கும் முதன்மைநிலை ஆகியவற்றை விரிவாக ஆராய வேண்டும். அதற்கான தூண்டுதலை இக்கட்டுரை விதைக்கின்றது.

வண்ணார் குறித்த கதையாடல்

வண்ணார் குறித்த வாய்மொழிக் கதைகள், அண்ணாமலையாரும் வண்ணாரும், கதைப்பாடல் களில் வண்ணார், தெய்வமாக்கப்பட்ட வண்ணார் ஆகிய நான்கு கட்டுரைகளில் தமிழ்ச் சமூகத்தில் உள்ள வண்ணார் குறித்த கதையாடல்களை விரிவாக ஆ.சிவசுப்பிரமணியன் ஆராய்கின்றார். இதுவும் ஒரு வகையில், வண்ணார் வரலாறு குறித்த ஆய்வாக உள்ளது. மற்றொரு வகையில் வண்ணார் குறித்த கதையாடல் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் மேற்கொள்ளப் பட்டு உள்ளது என்ற ஆய்வாகவும் உள்ளது. இந்தக் கதையாடல் வண்ணார்கள் குறித்து வண்ணார் உருவாக்கியது, பிறர் உருவாக்கியது என இரு வகையானவை.

“துரும்பர்” என்னும் இரண்டாவது கட்டுரை யிலேயே துரும்பர் சாதித் தோற்றம் குறித்த கதைகள் ஆராயப்பட்டு உள்ளன. இதைப் போல ஐந்தாம் கட்டுரையில் ஈரங்கொல்லியார், பாண்டி வண்ணார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புரோதி வண்ணார், வடுவ வண்ணார், சாயக்கார வண்ணார், ஆண்டிக்குல வண்ணார் ஆகிய வண்ணார் சாதிகள் குறித்த தோற்றக் கதைகள் ஆராயப்பட்டு உள்ளன.

துரும்பர் குறித்த முதல் தோற்றக் கதை வருமாறு: சிவபெருமான் வெளுக்கக் கொடுத்த துணிகளில், வண்ணார் பரிவட்டத்தை மட்டும் தன் மகனிடம் கொடுத்து யானை மீதும், மீதியைப் பணியாளரிடம் கொடுத்துக் குதிரை மீதும் அனுப்பி வைத்தார். குதிரையில் வேகமாகச் சென்றதால் பணியாள் கோவிலுக்குள் சென்றுவிட்டார். வண்ணார் மகன் யானை மீது மெதுவாகச் சென்றதால் நேரமாகி, கோயில் கதவு பூட்டப்பட்டுவிட, வெளியே நின்றார். அதனால் வண்ணார் மகன் புறத்து வண்ணார் ஆகிவிட்டார். இதே கதை, ஈரங்கொல்லியார், பாண்டி வண்ணார் தோற்றக் கதையாகவும் சற்று மாற்றமடைந்து வருவது கவனிக்கத் தக்கது.

இன்னொரு தோற்றக் கதை பின்வருவது: பறையர் சாதிப் பெண்ணும், பள்ளர் சாதி ஆணும் திருமணம் செய்துகொண்டர். இதற்குத் தண்டனையாக அந்த இரு சமூகத்தாரும் அவர்கள் அழுக்குத் துணியை வெளுக்கும் பணியை இவர்கள் பரம்பரை மீது சுமத்தி விட்டனர். அவர்களே புரத வண்ணார்.

இக்கதைகளை ஆ.சிவசுப்பிரமணியன் ‘சமூக விழிப்புணர்வு இல்லாத காலத்தில் தம் அவல நிலைக்கு அமைதி காணும் வகையில் படைக்கப்பட்டவை’ என்று விமர்சனம் செய்கின்றார். மேலும், இக்கதைகள் துரும்பர் போராட்ட உணர்வைத் தடுத்துநிறுத்தும் பணியைச் செய்துள்ளன என்றும் விமர்சனம் செய்துள்ளார். இக்கதைகள் புரத வண்ணார் குறித்து பிறர் உருவாக்கிய கதைகள் என்றும் கூறுகிறார்.

முதல் கதையில் பிற வண்ணார் பிரிவினர் மேல் இருப்பது தங்களுக்குக் கிடைத்த பரிசு என்றும், புரத வண்ணாருக்குக் கிடைத்த தண்டனை என்றும் கதையாடல் உள்ளது. இரண்டாவது கதையில், சாதி கடந்து திருமணம் செய்த மீறலுக்காகத் தண்டனை என்ற கதையாடல் உள்ளது. “தண்டனை” என்ற கருத்துருவம் இரண்டு கதைகளிலும் வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால் இரண்டாவது கதையில் சகோதர உறவு உள்ளது. சாதி குறித்து வைதீகக் கதையாடல்கள் போன்று அல்லாமல், இவை எதிர்நிலையில் சாதிகளுக்கு இடையிலான சகோதர உறவை வலியுறுத்துவதற்குப் பயன்படும் தன்மை பெற்றுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

ஈரங்கொல்லியார் குறித்த முதலிரண்டு தோற்றக் கதைகளும் துரும்பர் குறித்த முதல் தோற்றக் கதையைப் போலவே உள்ளன. அண்ணன் - தம்பி, யானை-குதிரை, கோயிலுக்கு உள் சென்று விடுதல் - வெளியே நிற்றல் என்ற எதிர்வுகள் உள்ளன. இக்கதைகள் இரண்டும் பாண்டி வண்ணாருக்கும் ஈரங்கொல்லியாருக்கும் சகோதர உறவை வலியுறுத்துகின்றன. இவ்விடத்தில் ஈரங்கொல்லியார் கோவிலுடன் தொடர்புடைய வண்ணார் என்பது நினைவில் கொள்ள வேண்டும். பிற வண்ணார்களை விட தங்களை உயர்வானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். ஈரங்கொல்லியார் குறித்த பிற இரண்டு கதைகள் திருவரங்கப் பெருமாளுடனும், காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் தொடர்புப் படுத்துவன ஆகும்.

பாண்டி வண்ணார் குறித்து மூன்று கதைகள் ஆராயப்பட்டு உள்ளன. முதல் இரண்டு கதைகள் சிவன் - பார்வதி ஆகியோருடன் தொடர்புறுத்தியும், மூன்றாவது கதை சீதையுடன் தொடர்புறுத்தியும் கதையாடுகின்றன. முதல் கதையில் இயல்புநிலையில் பார்வதியின் தீட்டுத்துணி துவைக்கும் தேவைக்காக வண்ணார் தோற்றுவிக்கப்படுகிறார். பிறகு வண்ணார் தேவைக்காக வண்ணாத்தியும் அரச மரத்திலிருந்து வருவிக்கப்படுகிறார்.

தெய்வங்களுடன் தொடர்புறுத்திக் கொள்ளும் கதைகள் மூலம், “தாங்கள் இழிவானர்கள் அல்ல என்ற கருத்தை” வண்ணார்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். இத்துடன், தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டங்கள் என்ற கட்டுரையில் நா.வானமாமலையின் ‘தெய்வங்களுடன் தொழில்களைத் தொடர்புறுத்தல், எல்லாத் தொழில் களும் சமமானவைதான் என்பதை வலியுறுத்துவதற்கு ஆகும்’ என்ற கருத்தையும் நினைத்துப் பார்க்கலாம்.

இரண்டாவது, மூன்றாவது கதைகள் தோற்றக் கதைகள் அல்ல, ஆனால் வண்ணார் துன்பம் குறித்த கதையாடல் உள்ளது. அது சிவன் - பார்வதி சாபம் என்றோ, சீதையின் சாபம் என்றோ கதையாடல் செய்கிறது. இதைப் போலவே ஈரோடு மாவட்ட வண்ணார் குறித்த கதைகளும் “சாபம்” என்ற பொருண்மையில் அமைகின்றன. இக்கதைகள் எல்லாம் நிச்சயமாக, பிறர் வண்ணார் குறித்து வழங்கிய கதைகள் என்று சொல்லலாம். இவை அமுக்குப்பேய்கள் என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகின்றார்.

இந்நூலில் இல்லாத ரிதொரு கதை இங்கு நினைவுகூரத்தக்கது. ஒரு வெள்ளாளக் கவுண்டர் பையனும் ஒரு வண்ணார் பெண்ணும் காதலிக்கின்றனர். அவர்கள் ஒருநாள் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ ஊரைவிட்டு செல்கின்றனர். அவர்களைக் கொங்கு வெள்ளாளர் துரத்திக்கொண்டு செல்கின்றனர். அக்காதலர்கள் கரைபுரண்டோடிய பவானி ஆற்றை நீந்திக் கடந்து, வேட்டுவ கவுண்டர்களிடம் திருமணம் செய்து வைக்கக் கோருகின்றனர். அவசரத்திற்கு, வில்லில் இருந்த நாணை அறுத்து, தாலியாகக் கட்டச் சொல்லி வேட்டுவர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். இவர்கள் வழிவந்தவர்களே நரம்புக்கட்டி கவுண்டர் அல்லது வடகரை வெள்ளாளர் ஆவர். இது கொங்கு வெள்ளாளரில் ஒரு பிரிவினர் பற்றிய தோற்றக் கதைகளில் ஒன்று ஆகும். வண்ணாரோடு தொடர்புடையது ஆகையால் இக்கதையும் கவனிக்கத்தக்கது.

அண்ணாமலையாரும் வண்ணாரும் என்ற கட்டுரை திருவண்ணாமலையில் வழங்கும் வாய்மொழிக் கதைகள், கோயிலில் நடைபெறும் சடங்குகள் வாயிலாகவும் வண்ணார் சமூகக் கோயிலைச் சைவ சமயம் ஆக்கிர மித்துக் கொண்ட வரலாற்றைக் காட்டுகிறது என ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார்.

கதைப்பாடல்களில் வண்ணார் என்ற கட்டுரை தடிவீரசாமி கதை, சின்னணைஞ்சான் கதை, புலமாடன் கதை ஆகிய மூன்று கதைப்பாடல்களை ஆராய் கின்றது. இம்மூன்று கதைப்பாடல்களிலும் சாதி மீறிக் காதலித்தமைக்காகக் கொல்லப்பட்ட வண்ணார் இளைஞனின் கதை, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனின் பாலியல் வேட்கைக்குப் பலியான வண்ணார் பெண்ணின் கதை, சிறு குற்றத்திற்காகக் கொல்லப்பட்ட வண்ணார் அண்ணன்-தங்கை கதை உள்ளதையும் அவற்றின் சமூகப் பின்புலத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டி யுள்ளார். இதைப் போலவே தெய்வமாக்கப்பட்ட வண்ணார்கள் என்ற கட்டுரையிலும் சாதி மீறிக் காதலித்தமைக்காகக் கொல்லப்பட்ட மூன்று வண்ணார் இளைஞர்கள் தெய்வம் ஆக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணார் தொழில்நுட்பம்

வண்ணார் தொழில்நுட்பம் கட்டுரையில் குறி போடுதல், அழுக்கெடுத்தல், துவைத்தல், உவர் முக்குதல், வெள்ளாவி வைத்தல், பசை போடல் ஆகியவை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் ஆராய்ந்துள்ளார். மேலும் வண்ணார்கள் துணிகளுக்கு வண்ணமேற்றும் கலைஞர் களாகவும், தையல் கலைஞர்களாகவும் விளங்கியுள்ளனர். இத்தொழில்நுட்பங்கள் அனைத்தும் வேதிவினை மாற்றங்களுடன் நெருக்கமான தொடர்புடையன. நமது சொந்த மரபின் அறிவியல் அறிவைக் காட்ட வல்லன. தமிழ் அறிவியல் வரலாற்றை உருவாக்குவதற்குக் குடித் தொழில்நுட்பங்கள் ஆய்வு அவசியம். அத்துடன் இத்தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் ஆராய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்குக் கேடற்ற வகையில் சில வெளுத்தல், வண்ணமிடல் நுட்பங்களை மீட்டெடுக்க முடியும் எனவும் தோன்றுகிறது.

குறிப்பாக, குறிபோடுதல் குறித்த ஆ.சிவசுப்பிர மணியன் ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் உடையது. குறி போடுதல் கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டு, துணிகள் இன்னார் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அடையாளம் காணும் முறை ஆகும். ஒலிக்குறியீடு களான எழுத்துக் கண்டறிவதற்கு முந்தைய கால பழமை யுடையது இந்த முறை. சங்க காலத்தில் கோடிட்டு எண்ணும் முறை இருந்ததை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அகழ்வாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பானை களின் மீது உள்ள குறியீடுகளும் இதுபோன்ற குறி போடுதல் நுட்பமா என்பது ஆராய்வதற்கு உரியது. ஏனென்றால், பண்டம் நிரம்பிய பானைகளை ஓரிடத்தில் வைக்கும்போது உரிமையாளரை அடை யாளம் காணவே இந்தக் கீறல்கள் இடப்பட்டு இருக்கலாம்.

இதே போன்று, உரிமையாளரை அடையாளம் காணக் குறிபோடும் முறை, சில வகையான மண்டிகளிலும்கூட உண்டு. இனவரைவியல் தரவு தொல்பொருள்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவசியமானது என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த இனவரைவியல் தகவலும் தொல்தமிழக வரலாற்றை விளக்க உதவலாம்.

முன்னோடியான முன்மாதிரி முயற்சி

மேலே எடுத்துக்காட்டியதுபோல, “தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறும்” என்ற இந்நூல் இலக்கியம், கல்வெட்டு, பழமொழி, தோற்றக் கதை, பழமரபுக் கதை, தொன்மம் முதலான வழக்காறுகள் ஆகியவற்றைக் கொண்டு, ஒருதலை சார்பற்று, முன் ஊகங்களைக் கை கொள்ளாது வண்ணார் வரலாற்றை ஆராய்ந்துள்ளது. சான்றுகளைப் பயன்படுத்தும் முறையிலும், பொருள் கொள்ளும் முறையிலும் தருக்கவியல் பாங்கு உள்ளங் கொள்ளத் தக்கது.

வண்ணார் சாதி வரலாற்றைப் புகழ்பூத்த வரலாறாகவோ அல்லது நிரந்தர சாதிப் படிநிலை வரிசை பற்றிய முன்கற்பிதங்கள் அடிப்படை யிலான வரலாறாகவோ படைக்காமல், சான்றுகள் அடிப்படையிலான அசைவியக்கமுடைய வரலாறாக ஆ.சிவசுப்பிரமணியன் படைத்துள்ளார். இந்த முறை பிற சாதிகள் வரலாற்றையும் ஆராய ஒரு முன்மாதிரியாக உள்ளது.

 சாதிகள் வரலாறு சமூக வரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அறிவியல், தொழில்நுட்ப, பண்பாட்டு வரலாறுகளின் பகுதியாகவும் உள்ளதை இந்நூல் திறம்பட எடுத்துக்காட்டுகிறது. ஆகவே சாதிகள் வரலாற்றைப் புறக்கணித்தல், சமகால சாதி உணர்நிலை கொண்டு வரலாறு வரைதல் ஆகிய இரண்டுமே தவறான நிலைப்பாடுகள். இவை சமூக மாற்றப் போராட்டங்களில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு வலு மிகுந்தவை.

தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்

ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

ரூ.135/-⁠⁠⁠⁠

கன்சிராம் Khansi Raam

கன்சிராம் 🐘🐘

இந்திய அரசியலின் ஒரு சகாப்தம்..


( தலித்- SC )..

கன்சிராம் சுதந்திர இந்தியாவில் அம்பேத்கருக்குப் பின் அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் அரசியல் தலைவர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலும், சக்கர நாற்காலியிலும் இருந்த அந்த மாபெரும் தலைவர் தம்முடைய 72 ஆம் வயதில் மாயாவதியின் இல்லத்தில் காலமானார். அவருடன் அரசியல் களத்தில் மாறுபடும் இராம் விலாஸ் பாஸ்வான் கூட அவரை “தலித்துகளின் மெசைய்யா” என்றே வர்ணிக்கிறார்.

கன்சிராம் மிகப்பெரிய சொல்லாடல் புரியும் பேச்சாளராக இல்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் பேசும் எளிமையான பேச்சாளர். கன்சிராம் நடைமுறை அரசியலின் இராஜதந்திரியாக விளங்கினார். இந்தியாவின் சமத்துவமற்ற சமூகச் சூழலே அவர் பின் பலகோடி மக்களை அணி திரள வைத்து, பகுஜன் இயக்கத்தை வளர வைத்தது. பஞ்சாப் மாநிலத்தில் தீண்டாமையை மிக அதிகம் உணராத படித்த தலித் குடும்பத்தில் பிறந்தவர் இவர். கன்சிராம் பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராக பணிபுரிந்தார். அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரே இரவிலிருந்து மூன்று முறை திரும்பத் திரும்ப படித்து, அதன்பால் ஈர்க்கப்பட்ட கன்சிராம் தலித் மக்கள், தலித் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன ஊழியர்களின் அமைப்பான BAMCEF என்பதை ஏற்படுத்தினார். அதன் முடிவாக சமூகச் சமநிலை என்பது அரசியலதிகாரத்தை வெல்ல முடியாவிட்டால் ஏற்படாது என்பதை உணர்ந்தார். இக்கருத்தை அம்பேத்கரின் சிந்தனையிலிருந்து பெற்றார். இந்தியாவில் 15 சதவீதம் உள்ள உயர் வகுப்பினர் 85 சதவீத பகுஜன் மக்களை (தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) ஆட்சி செய்கின்றனர் என்று எல்லோருக்கும் எடுத்துரைத்தார். அவருடைய இயக்கத்தின் தூணாக மாயாவதி விளங்கினார்.

டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் உளப்பூர்வமாக உறுதியுடன் இருந்தாரோ, அதே போன்று கன்சிராமும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் இந்திய அரசியலின் ஜனநாயகத் தன்மை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.

1993ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெறும் வரை அக்கட்சி யாராலும், பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அத்தேர்தல் அதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்கொண்ட தேர்தலை விட மிகவும் மாறுபட்ட முடிவுகளைத் தந்தது. 1984 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒன்றிலும் வெற்றி பெற முடியவில்லை. 1989 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் அச்சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் எவ்வித உடன்பாடு செய்து கொள்ளவும் மறுத்தது.

1991இல் மீண்டும் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் 30 மாத இடைவெளிக்குள் பகுஜன் சமாஜ் கட்சி முக்கியமானதொரு இடத்தைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முலாயமின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 162 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களைப் பிடித்தது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

தேசிய அரசியல் வரலாற்றில் 1990க்கும் 1993க்குமிடையே உள்ள 30 மாதங்களில் கன்சிராம் எழுச்சி பெற்றதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக பி.ஜே.பி. நடத்திய தாக்குதலே கன்சிராமின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. 1990இல் அத்வானி சோம்நாத்திலிருந்து துவங்கிய ரதயாத் திரை 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்புடன் நிறைவுற்றது. மாநில ஆட்சியிலிருந்த பா.ஜ.க.வின் கல்யாண் சிங் அரசும், மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவின் காங்கிரஸ் அரசும் தத்தமது படைகளை அனுப்பியிருந்தும் இந்த நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வு சிறுபான்மை முஸ்லிம் மக்களை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மீது கோபப்பட வைத்தது. 1947லிருந்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக இருந்த முஸ்லிம் மக்கள் இப்போது பகுஜன் சமாஜ் சமாஜ்வாதி கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் வாக்களித்தனர்.

அடுத்ததாக நரசிம்மராவ் தலைமையின் கீழ் செயல்பட்ட மன்மோகன்சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையான “தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் இந்திய சமூகத்தினிடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பொதுத்துறைகளை உள்ளடக்கிய கலப்பு பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக சிதைத்தது. ஆட்சியாளர்கள் பொதுத்துறைகளை நம்பிய காலம் போய் அந்நிய முதலாளிகள், கடன் தருவோர் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பினர் பக்கம் கவனத்தைத் திருப்பினர். அதன் மூலம் 1990களில் கொண்டு வரப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்கும் புதிய பொருளாதாரக் கொள்கையால் எவ்விதப் பயனும் இல்லாத சூழ்நிலை உருவானது. ஜனநாயகத்தின் சட்ட பூர்வத்திற்கும், மக்களின் நம்பகத் தன்மைக்கும் எதிராக இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு எவ்வித பலனும் இல்லாத கொள்கையாக அனைவராலும் உணரப்பட்டது. எனவே இன்று, இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே மேற்கூறிய காரணங்களால் மக்கள் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஆதரவாகத் திரள வேண்டிய தேவை ஏற்பட்டது. எழுந்தது.

கன்சிராமின் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஒருவேளை இந் நிகழ்வுக்குப் பின் பி.ஜே.பி மீண்டும் உ.பி.யில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பிற்கு மிகப்பெரிய ஊறு ஏற்பட்டிருக்கலாம். அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக் கொண்ட போதும் அவற்றை “மனுவாதி” கட்சிகள் என்றே குறிப்பிட்டார். கன்சிராமால் உருவாக்கப்பட்ட மாயாவதியின் அரசியல் நடவடிக்கைகள் வாயிலாக தலித் மக்களும் ஜனநாயக இந்தியாவில் அரசியல் காய்களை நகர்த்த முடியும் என்பதை உணர்த்தியது. அதே போன்று இந்திய பாராளுமன்ற அரசியலிலும் தலித் மக்களின் தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கன்சிராம் விரும்பினார்.

மாயாவதி இருமுறை பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்த பொழுது கூட தனது தனித் தன்மையை இழக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டு வங்கி அதனுடைய செல்வாக்கை இழக்கவில்லை என்று 1993க்கு பின் நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபித்தது. 35 வயதில் அரியணை ஏறிய இந்தியாவின் முதல் தலித் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார் மாயாவதி. அதன் பின் 1996 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட பொழுதும் பகுஜன் சமாஜ் கட்சி 67 இடங்களைப் பெற்று சுழற்சி முறையில் முதல்வர் என்ற திட்டத்திற்கிணங்க பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றது. அதன் பிறகு பி.ஜே.பி. கட்சி உடைப்பு மூலம் ஆறு மாதம் முடிந்தவுடன் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. உண்மையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதிகாரத்தில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் எனக் கருதி மாயாவதியின் கீழ் அமைச்சரவையில் சேருகிறது பி.ஜே.பி. ஒவ்வொரு முறையும் மாயாவதி அமைச்சரவை அமைக்கும் பொழுதும் கணிசமான அளவில் தலித் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். பின்னர் மாயாவதி அமைச்சரவையின் ராஜினாமாக் கடிதத்தை கொடுக்கும் பொழுது அவரின் முடிவை ஏற்காத பி.ஜே.பியினர் இடைத் தேர்தலுக்கு தயாராகாமல் முலாயம் கட்சிக்கு மறைமுக ஆதவளிக்கின்றனர். பின்னர் நடைபெற்ற “குதிரை பேரம்” மூலம் முலாயம் முதல்வராகப் பெரும்பான்மை பலம் பெற்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி தலைமையின் கீழ் ஆட்சிபுரிந்த பொழுது தலித் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த இதர உயர்சாதிக்காரர்களிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு அம்மக்களிடமே மீண்டும் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து ஏழைசாதி மாணவர்களுக்கும் கல்விச் சலுகைகள் வழங்கப்பட்டது, பெரியார் சிலையை பாட்னாவில் நிறுவ முயற்சி மேற் கொண்டது, ஆக்ரா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தது; ஜோதிபாய் பூலே மற்றும் புத்தரின் தாயார் மாயாவதி பெயரில் மாவட்டங்கள் தோற்றுவித்தது ஆகியன மாயாவதி ஆட்சியின் சில குறிப்பிடத்தகுந்த செயல்கள் ஆகும். பாபர் மசூதி பிரச்சினை மீண்டும் தலையெடுக்க விடாமல் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்தார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது பி.ஜே.பிக்கு எதிராக வாக்களித்தது, தலித் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நட வடிக்கை மேற்கொண்டமை முதலியன குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

இன்று தேசியக் கட்சியாக விளங்கும் பகுஜன் சமாஜ் கட்சி உத்திரப் பிரதேசம் மட்டுமின்றி உத்ராஞ்சலில் 7 சட்டமன்ற உறுப்பினர்களையும், பீகாரில் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இது தவிர ராஜஸ்தானில் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும், ஹரியானாவில் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கன்சிராம் ஊன்றிய தலித், முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆகும். இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்னும் தலித் கட்சியின் கீழ் பார்ப்பன சம்மேளனம், யாதவ் சம்மேளனம் போன்றவற்றை ஒருங்கமைத்து வருகிறது. அவ்வாறு வருபவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் தலித்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

கன்சிராம், மாயாவதி போன்றோர் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரத்தில் காலூன்ற வேண்டும் எனச் செயல்பட்ட பொழுது காங்கிரஸ் கட்சி சுதாரித்து தலித் சமூகத்தைச் சார்ந்த ஷிண்டேயை முதல்வராக்கியது. உண்மையில் இது கன்சிராமின் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் இந்தியக் குடியரசுக் கட்சியின் கவாய் பிரிவு, அந்தூலே பிரிவுகளுக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் கன்சிராமின் வருகைக்குப் பின்னரே. 1990களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த கன்சிராம் திராவிடக் கட்சிகள் பெரியாரின் உள்ளார்ந்த அரசியல் தத்துவத்தை நிறைவேற்ற மறந்து விட்டன என்று கூறினார்.அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் பேசிய மாயாவதி தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு மிகப் பெரிய அளவில் எந்தவொரு நன்மையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். இந்தியாவில் 18 சதவீதம் பார்ப்பனர்களையும், 18 சதவீதம் முஸ்லிம்களையும், 22 சதவீதம் தலித்துகளையும், 18 யாதவர்களையும் உள்ளடக்கிய சாதிய வேறுபாடுகளுடன் காணப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப் பிரதேசத்தில் தலித் ஒருவரை கன்சிராம் முதலமைச்சராக்கி காட்டியுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில், மூன்று சதவீதம் பார்ப்பனர்கள் உள்ள தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தலித் ஒருவரை முதல்வராக்காதது அக்கட்சிகளின் முன் உள்ள சவாலாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கன்சிராமின் செயல்பாடுகளை முன்வைத்த திராவிட அரசியலை நோக்கும் போது தமிழ்நாடு எவ்வளவு பெரிய சமூக அநீதி மாநிலமாக விளங்குகிறது என்பதை அறிய முடிகிறது. இதை மாற்றுவது தான் தமிழக தலித் அரசியலிற்கு முன்நிற்கும் சவால் என்று கூட சொல்லலாம்.