ஞாயிறு, 4 நவம்பர், 2012

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்




எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்



எம். சி. ராஜா






ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும்                       எம். சி. ராஜா (ஜூன் 17, 1883 – ஆகஸ்ட் 20, 1943)                                                தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலித் அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்.   
பி. ஆர். அம்பேத்கருக்கு இணையாக இவரும் தலித்துகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ராஜா 1883ல் சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் படித்தார். பின் வெஸ்லி கல்லுரியில் படித்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.ஒரு பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

எம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் - ரவிக்குமார்

http://nirappirikai.blogspot.in/2010/10/1883-1947.html


எம்.சி.ராஜா (1883-1947


சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய வரலாற்றில் தீண்டாத மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்கள் பலர் தமிழ் நாட்டில் தான் தோன்றியிருக்கிறார்கள். அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா என அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அம்பேத்கருக்கு முன்பே தீண்டாதார் அரசியல் எழுச்சியோடு விளங்கிய பகுதியாகத் தமிழகம் இருந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டிலேயே இங்கிருந்த தீண்டாத மக்கள் கூட்டாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். அத்தகையதொரு பின்புலத்தில் இருந்து தலைவராக உருவானவர்தான் எம்.சி.ராஜா.
எம்.சி.ராஜாவின் தந்தை சின்னத்தம்பி அவர்களும், சென்னையில் பிரபலமான தலைவராக விளங்கியவர்தான். எம்.சி.ராஜா, வெஸ்லி மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு சென்னை கிறித்தவ கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கே கிரிக்கெட் அணியின் தலைவராகவும் எம்.சி.ராஜா விளங்கினார். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஆசிரியராகப்  பணியில் சேர்ந்தார். அப்போது சென்னையில் இரவு பள்ளிகளை ஆரம்பித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேல் படிப்பு படித்திட ஆதிதிராவிட மாணவர்களுக்கு அந்த நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்து போராடி அந்தத் தடையை உடைத்தெறிந்தார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக தீண்டாத வகுப்பினரிடையே இருந்து ஒருவரை சென்னை மாகாண மேலவைக்கு நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி 1919 ஆம் ஆண்டு எம்.சி.ராஜாவை அன்றைய கவர்னர் வில்லிங்டன் பிரபு சென்னை மாகாண மேலவை உறுப்பினராக நியமித்தார். இந்திய அளவில் சட்ட மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் எம்.சி. ராஜாதான்.கல்விப் பணி செய்வதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது.1921 ஆம் ஆண்டில் எம்.பழனிச்சாமி என்பவரோடு இணைந்து சென்னையில் மாணவர் விடுதி ஒன்றை நிறுவினார். அதன் பெயர் பின்னர் பாடிசன் ஹாஸ்டல் என மாற்றப்பட்டது. தற்போது அது எம்.சி ராஜா விடுதி என்ற பெயரில் அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.1936ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடப் பள்ளி என்கிற கல்வி நிலையம் அவரால் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது தலைமையில் சாரணர் படை ஒன்றை அவர் உருவாக்கினார் எனவும் தெரிய வருகிறது.
     ஆதிதிராவிட மகாசன சபையின் தலைவராக பொறுப்பேற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளின் காரணமாக 1920களில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமான தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவராக விளங்கினார். 1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணம் செய்த சைமன் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் வலுவான இயக்கமாகத் திகழ்ந்த ஆதி இந்து மகா சபாவின் சார்பில் சைமன் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எம்.சி.ராஜாதான் எங்கள் தலைவர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.எம்.சி.ராஜாவின் புகழ் இந்திய அளவில் பரவியிருந்ததற்கு இது ஒரு உதாரணமாகும்.
      இந்தியாவில் அதிகாரமாற்றத்தை ஏற்படுத்தவும், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களையும் சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எம்.சி.ராஜா எடுத்துரைத்தார். 1921ஆம் ஆண்டு சென்னை பி அண்டு சி ஆலையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் தமிழகத் தொழிலாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.முதலில் சுமார் அறுநூறு தொழிலாளர்கள் அதில் பங்கேற்றனர்.பிறகு அது மிகப்பெரும் வேலைநிறுத்தமாக மாறியது.அந்த வேலை நிறுத்தத்தில் ஆதி திராவிடர்கள் கலந்துகொள்ளாமல் வேலைக்குச் சென்றனர். அதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அவர்கள்மீது வன்முறையை ஏவினார்கள்.ஆதி திராவிட மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.அப்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் சுமார் இரண்டாயிரம்பேர் இருந்தனர் என்பதிலிருந்தே அந்தத் தாக்குதலின் கொடுமையை நாம் புரிந்துகொள்ளலாம். அப்போது ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அரசாங்கமோ ஆதிதிராவிட மக்களை வன்முறையாளர்களாக சித்திரித்தது மட்டுமின்றி அவர்களையெல்லாம் சென்னை நகரின் எல்லைக்கு அப்பால் வெளியேற்றிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைக் கடுமையாக விமர்சித்து பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் உரிமைகளுக்காக எம்.சி.ராஜா போராடினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டவர் எம்.சி.ராஜா. ஆனால் பின்னர் அதே கோரிக்கை அம்பேத்கர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டபோது அதை எம்.சி.ராஜா எதிர்த்து கூட்டு வாக்காளர் தொகுதி முறையை ஆதரித்தார் என்பது ஒரு முரண்நகையாகும்.1929 ஆம் ஆண்டு செபடம்பர் 30ஆம் தேதி  இந்திய அரசின் மையக் கமிட்டிக்கு சமர்ப்பித்த மனுவில் அவர் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை பற்றி வலியுறுத்தியிருந்தார்: ’ தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலமே நேரடித் தேர்தலையும் உத்தரவாதப்படுத்தலாம்,போதுமான பாதுகாப்பையும் பெறலாம்.’ என அவர் கூறினார். ‘அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம்.பிரிவினை உணர்வைத் தூண்டி தேசியத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடும் என அதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால் அதனால் வரும் நன்மைகள் எதிர்ப்பின் அளவைவிட அதிகமானவை.தனிவாக்காளர் தொகுதிமுறை என்பது இந்தியாவுக்குப் புதியதல்ல.ஏற்கனவே முஸ்லீம்கள், சீக்கியர்கள்,இந்திய கிறித்தவர்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு அந்த உரிமை உள்ளது.அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தந்துள்ளது’ என எம்.சி.ராஜா அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
       அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது கிடையாது.படித்தவர்கள், சொத்து உள்ளவர்கள் ஆகியோருக்குத்தான் வாக்குரிமை இருந்தது. சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மக்கள்தொகை அப்போது சுமார் அறுபத்தைந்து லட்சமாக இருந்தது. ஆனால் அதில் 56756 பேருக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்தது என்பதை எடுத்துக்காட்டிய எம்.சி.ராஜா வாக்காளர்களுக்கான தகுதியைக் குறைக்கவேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தனிவாக்காளர் தொகுதி முறையை வலியுறுத்திவந்த எம்.சி.ராஜா அதை பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த நேரத்தில் தனது நிலையை மாற்றிக்கொண்டு கூட்டுத் தொகுதி முறைக்கு ஆதரவு தெரிவித்தார்.அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நிலைபாட்டுக்கு எதிராக இந்து மகா சபையின் தலைவர் மூஞ்சே என்பவரோடு அதற்காக ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டார்.அதுபோலவே கோயில் நுழைவு தொடர்பாக அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட நிலையையும்கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக காந்தியடிகளின் அணுகுமுறையை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். ’ஆதி திராவிடர்கள் அடைந்துவரும் அபிவிருத்தியைக்கண்டு இந்துக்கள் தங்கள் வர்ணாசிரம அதர்மத்துக்குள் இவர்களையும் இழுத்துச் சேர்த்து ஐந்தாம் வருணத்தவராக அமைத்து அடக்கியாள ஆதிதிராவிடர்கள் சமூகத்தை அழித்து அவர்களும் ஜாதி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களென ஜாதி இந்துக்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவேண்டுமென்னும் கருத்தோடு ஆலயப் பிரவேசமென்னும் கபடமான இயக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கலென்றே சொல்லலாம்’ என இரட்டைமலை சீனிவாசன் அதை வர்ணிக்கிறார். சென்னை மாகாண சபையில் அந்த மசோதா வந்தபோது முப்பது ஆதி திராவிடப் பிரதிநிதிகளில் 28பேர் ஆலயப் பிரவேசம் வேண்டாமென வாக்களித்ததாகவும் இரட்டைமலை சீனிவாசன் கூறியுள்ளார்.அந்த மசோதாவை ஆதரித்த பிரபலமான ஆதி திராவிடத் தலைவர்கள் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜாநந்தாவும் மட்டும்தான். வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதிகளாக அம்பேத்கரும்,இரட்டைமலை சீனிவாசனும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தே எம்.சி.ராஜா இப்படி எதிரான நிலையை மேற்கொண்டதாக அம்பேத்கர் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.காந்தியின் நிலையை ஆதரித்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை அவர் மறந்துவிடவில்லை.தீண்டாமை ஒழிப்புச் சட்ட மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதாவும் அவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
        ஆதி திராவிட மகா ஜன சபையின் கௌரவச் செயலாளராகவும், தென்னிந்திய இரண்டாவது ஆதி திராவிடர்கள் மாநாட்டின் தலைவராகவும்,கூட்டுறவுச் சங்கங்களின் கௌரவத் துணைப் பதிவாளராகவும்,மாகாண , மத்திய சட்டமன்றங்களின் உறுப்பினராகவும்-  இப்படி பல்வேறு பதவிகளை வகித்த எம்.சி.ராஜா ஆதிதிராவிட மக்களின் நன்மைக்காக எழுதியவை யாவும் ஆங்கிலத்திலேயே உள்ளன. 1927 ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்டு தி ஹக்ஸ்லீ பிரஸால் வெளியிடப்பட்ட The oppressed Hindus என்ற  நூலை அம்பேத்கர் சிந்தனைக் கூடத்தினர் தமிழாக்கம் செய்து  1968 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.

(2008 ஆம் ஆண்டில் கரிசல் பதிப்பகத்தின் சார்பில் நான் வெளியிட்ட எம்.சி ராஜாவின் "ஒடுக்கப்பட்ட இந்துக்கள் " என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை )
 
 
 எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர
www.jeyamohan.in/?p=5516
 
 
1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது.

எம்.சி.ராஜா
இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.

இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே உரிய பல பிரச்சினைகள் இருந்தன. இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் கடுமையான நில அடிமை முறையில் இருந்து தப்பி வந்தவர்கள். அவர்களுக்கு தொழிற் சாலை உழைப்பு எளிதானதாக இருந்தது. மேலும் அவர்களுக்கு கிடைத்த பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். ஆனால் தொழிற்சாலை உழைப்பு அவர்களின் ஆராக்கியத்தை அழிக்கிறது என்றும் கடுமையான சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

அத்துடன் அந்த ஊழியர்கள் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த காலகட்டத்தின் சாதி மத நம்பிக்கைகள் அனைத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். தொழிலாளர் என்ற அடையாளத்துடன் ஒருங்கிணைவது அவர்களுக்கு அனேகமாக சாத்தியப்படவில்லை.

மூன்றாவதாக, அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கம் கொண்டு அழிந்தனர். அடிதடிகள், கள்ள உறவுகள், விபச்சாரம் போன்றவற்றில் மூழ்கியிருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் பரப்புவது போல உக்கிரமான அறப்பிரச்சாரம் வழியாகவே இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க முடிந்தது. அந்த இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் திரு.வி.க.போல துறவு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள்.

1921 பின்னி மில் வேலைநிறுத்தம் இந்திய அரசியல் சூழலில் உள்ள முக்கியமான முரண்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. இந்திய தலித்துக்களில் ஒரு சாரார் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வில் இருந்து வெளியே வரமுடிந்தது, பிரிட்டிஷார் ராணுவத்திலும் ஆலைகளிலும் அவர்களைச் சேர்த்துக் கொண்டதன் விளைவாகவே. ஆகவே பிரிட்டிஷார் மீது விசுவாசத்துடன் அவர்கள் இருந்தார்கள்.

அத்துடன் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய உணர்வுடன் இருந்தார்கள். அவர்கள் தலித் ஊழியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஆரம்ப கால தொழிற்சங்க முன்னோடிகள் தலித்துக்களை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

பின்னி ஆலை வேலை நிறுத்தத்தில் தலித்துக்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தார்கள். இது கருங்காலித்தனம் என்று தொழிலாளர்கள் கொதித்தார்கள். தலித் தொழிலாளர்களுக்கும் பிறருக்கும் கடுமையான மோதல்கள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளை திரு.வி.க. அவரது வாழ்க்கை வரலாற்றில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். மிக எளிமையான காந்தியவாதி. கால்நடையாகச் செல்பவர். அவரைத் தாக்கவும் பழியை தலித்துக்கள் மீது போடவும் பிரிட்டிஷ் அரசு சதி செய்தது.

இந்த நிலையில்தான் புளியந்தோப்பு கலவரம் என்று புகழ்பெற்ற நிகழ்ச்சி நடந்தது. தலித்துக்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் பெரிய மோதல் வெடித்தது. துணிச்சலுடன் கலவரப்பகுதிகளுக்குப் போன திரு.வி.க. தாக்குபவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அவர்களை நோக்கிப்பேசினார். அந்தக் கலவரத்தை பரவலாக்கி அதன்மூலம் போராட்டத்தை ஒடுக்க ஆங்கில அரசு செய்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.

அந்தப் போராட்டத்தில் திரு.வி.க.வுக்கு எதிர்த்தரப்பில் தலைமை ஏற்றிருந்தவர் எம்.சி.ராஜா. தலித் தலைவரான எம்.சி.ராஜா உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர். பிரிட்டிஷார் அதன் பொருட்டு அவருக்கு இராவ் பகதூர் உள்ளிட்ட பட்டங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். திரு.வி.க.வும் எம்.சி.ராஜாவும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர்.

பின்னர் ராஜா 1916 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆதரவுக்காக உருவான ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ்பால் சென்றது. ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.க.வை விலக்கினார். திரு.வி.க. அதைப் பொருட்படுத்தவில்லை.

நண்பர்கள் இருவரும் போரிடும் இருதரப்பையும் வழிநடத்தும் நாடகீயமான வரலாற்றுத் தருணம். ஆனால் இருவரிடையே நட்பு மட்டும் வலுவாகவே நீடித்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் திரு.வி.கவை எம்.சி.ராஜா வந்து பலமுறை சந்தித்து நட்புடன் விலக்கினார். பிரிட்டிஷ் ஆட்சி உங்களையும் குடும்பத்தையும் கடுமையாகத் துன்புறுத்தும். ஆகவே  வீண் சாகசங்கள் வேண்டாம் என்றார்.

ஒருநாள் இதைப்பற்றி திரு.வி.கவும் ராஜாவுவும் பூசலிட்டுக் கொண்டார்கள். ‘என்னை அரசாங்கம் சார்பில் நிற்கச் செய்திருப்பது எனது சமுகம். எனது சமூகம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அதை முன்னேற்ற அரசின் துணை தேவையாக இருக்கிறது’ என்றார் ராஜா. ‘தொழிலில் சாதிபேதம் கொண்டு வரப்படக்கூடாது. ஆதிதிராவிடர் தங்கள் உரிமைகளை போராடித்தான் பெறமுடியும்’ என்றார் திரு.வி.க.
‘நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பலனை உயர்சாதியினர் மட்டுமே அனுபவிப்பார்கள். ஆகவே நீங்கள் மூட்டும் தீயை அணைப்பது எனது கடமை’ என்றார் எம்.சி.ராஜா. ‘தொழிலாளர் இயக்கம் வளரும்தோறும் சாதி பேதங்கள் மறையும். அது மட்டுமே நம்முன் உள்ள வழி’ என்றார் திரு.வி.க.

சிரித்தபடி ராஜா சொன்னார், “நீங்கள் இலக்கியம் படித்தவர். ஊடல் இருந்தால்தான் கூடல் சிறக்கும் என்பார்கள். இது நமக்குள் கூடலுக்கான ஊடலாக இருக்கட்டும்’ அதன்பின் அவர்கள் பிரிந்தார்கள்.

கலவரம் உச்சத்தை அடைந்து திரு.வி.க தாக்கப்படக்கூடும் என்ற நிலை நிலவியபோது எம்.சி.ராஜா திரு.வி.கவைப் பார்க்க வந்தார். ”எனக்கு போலீஸ் துணை, இராணுவத் துணை, கார் துணை இருக்கிறது. கையில் துப்பாக்கியும் உண்டு. உங்களுக்கு ஒரு துணையும் இல்லை. குழப்பத்திற்கு இடையே நடமாடுகிறீர்களே” என்று வருந்தினார். “நேற்று இரவு இந்த எண்ணம் ஏற்பட்டபோது என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார்.

‘எனக்கு தொழிலாளர் துணை உண்டு. உங்கள் பக்கத்தில் உள்ள தலித் தொழிலாளர்களின் மனசாட்சியும் எனக்குத் துணையே’ என்றார் திரு.வி.க.

பிரச்சினை முற்றியபோது எம்.சி.ராஜா பாதுகாப்புக்காக ராயப்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு சென்றுவிட்டார். அதனால் திரு.வி.க அவரைப் பார்ப்பது குறைந்தது. ஒருநாள் காலை திரு.வி.கவின் வீட்டு முற்றத்தில் எம்.சி.ராஜாவின் கார் வந்து நின்றது. ‘உங்களுக்குத் தொல்லை நெருங்கி வருகிறதே’ என்று சொன்னபோது சட்டென்று ராஜா கண்கலங்கி விட்டார்.

அவர் கண்களில் இருந்த நீரைக் கண்டு கலங்கிய திரு.வி.க சொன்னார், ‘நாடு கடத்தும் விஷயம்தானே, இந்நிலையில் என்ன செய்வது. நடப்பது நடக்கட்டும்’.

பிரச்சினை பிற்பாடு மெல்ல சமரசமாகியது. பின்னர் இரட்டைமலை சீனிவாசனின் மணிவிழா நடைபெற்றபோது தலைமை தாங்கி பேசினார் திரு.வி.க. அப்போது ஒரு பேச்சாளர் ராஜாவும் திரு.வி.கவும் முரண்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு எம்.சி.ராஜா பதில் கூறினார்.

‘இப்போது இன்னும் ஒரு தொழிலாளர் போராட்டம் நடந்ததே, அதில் நான் தலித் தொழிலாளர்கள் தனித்து முரண்பட்டு நிறகும்படிச் சொன்னேனா என்ன? இல்லை. ஏனென்றால் இப்போது இயல்பாகவே தொழிலாளர் ஒற்றுமை உருவாகியிருக்கிறது. தீண்டாமை குறைந்திருக்கிறது. எங்கள் இனத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. 1921இல் நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றைய சூழலுக்காகவே நான் எதிர்வினையாற்றினேன். எந்தத் தவறும் நான் செய்யவில்லை.’

திரு.வி.க.வுடன் தன்னுடைய நட்பு அப்போதும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது எனுறு உணர்ச்சிகரமாகக் கூறிய எம்.சி.ராஜா ‘தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக நான் பிணங்கியமுறையில் உழைத்தேன். திரு.வி.க இணங்கிய முறையில் உழைத்தார். அப்பிணக்கம் இப்போது என்னாலும் எவராலும் பிரிக்கமுடியாத இணக்கமாக பரிணாமம் கொண்டுள்ளது’ என்றார்.

இரு பெரும் தலைவர்களின் மன விரிவை காட்டும் சந்தர்ப்பம் இது. வரலாறு உருவாக்கும் சவால்களை மிகவும் சிக்கலானவை. அவற்றை சந்திக்கையில் தலைமைப் பண்பும் சிந்தனை வீச்சும் கொண்ட பெருமனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் எதிர்வினையாற்றுகின்றன. ஒருவர் கண்டதை ஒருவர் காணாமல் போகலாம். ஒருவர் போகும் வழியை ஒருவர் எதிர்க்கலாம். அவர்களிடையே முரண்பாடுகள் உருவாகலாம். மோதல்களும் நிகழலாம். அத்துடன் இயல்பாகவே தலைமைப்பண்பு கொண்டவர்கள் நடுவே அகங்கார மோதலும் இருக்கும். அதை தவிர்க்க முடியாது.

ஆனாலும் அவையெல்லாம் வரலாற்று நாடகத்தின் சில தருணங்களே என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். எது சரி எது தவறு என்பதை காலமே தீர்மானிக்கும் என்று உணர்ந்திருப்பார்கள். முற்றிலும் சரியான வழி என்றும் முற்றிலும் தவறான வழி என்றும் ஏதும் இல்லை என்றும் அவர்கள் உள்ளுர அறிந்திருப்பார்கள்.

இதே முரணியக்கத்தினை நாம் அம்பேத்கார்-காந்தி உறவிலும் காணலாம். அவர்கள் முரண்படுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சரிசெய்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டார்கள். அம்பேத்கார் காந்தியப் போராட்டங்களை நெருங்கி வந்தார். காந்தி சாதி சாதி ஒழிப்பை நோக்கி வந்தார்.


ஆனால் வரலாற்றை எளிமைப்படுத்தி வெறும் ‘சண்டை’ களாகவும் ‘சதி’களாகவும் பார்க்கும் எளிய மனங்களுக்கு இது புரிவதில்லை. அவர்கள் கறுப்பு வெள்ளைகளை உருவாக்குகிறார்கள். வில்லன்களையும் கதாநாயகர்களையும் உருவாக்குகிறார்கள். அந்த எளிமைப்படுத்தல் எப்போதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTy8OtVFHvxU20TN6gSDemmpaJNsAEjso5rCCbl6dg37NyA8gx-7LNI7dYaliTvKSo1I27WRG2sT1RI7DkcWo5MHqnB6W7MlNSPKSo0srb7JOVJsXm8T6YfWtMwqwGOvccifdGqJjJ1nY/s320/rettaimalai_seenivasan.jpg
இரட்டைமலை சீனிவாசன்
அப்படிப்பட்ட அநீதி இழைக்கப்ட்ட மனிதர் எம்.சி.ராஜா.  இந்திய அரசியலில் அறுபதுகளுக்குப்பின்னர் அம்பேத்கார் ஒரு மாபெரும் கதாநாயகனாக ஆக்கப்பட்டார். அம்பேத்காருடன் முரண்பட்ட அத்தனை பேரையும் எதிர்நாயகர்களாக சித்தரித்தனர் அம்பேத்கார் பக்தர்கள். அம்பேத்காரிடம் எப்போதுமே உரையாடிய, அவரை இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் இடத்தில் அமர்த்திய காந்தி அம்பேத்காரை ஒழிக்கப் போராடுபவராக,  ஒற்றைக்கண்ணும் கன்னத்தில் மருவும் புஸ்தி மீசையும் கடகட சிரிப்பும் கொண்ட வில்லன் ஆக, மாறினார். அம்பேத்காரை கடைசிவரை தன் சகாவாக நினைத்த, அவருக்குப் பின்புலமாக நின்ற நேரு அம்பேத்காரின் எதிரியானார்.

அந்த வரிசையில எம்.சி.ராஜா சேர்க்கப்பட்டார். அவர் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கதாநாயகனை காட்டிக் கொடுத்த துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார். அவரை ஒரு விபீஷனனாக எண்ணும் தலித் தலைவர்கள் பலர் இன்றும் உண்டு. அந்த எண்ணத்தை வலுப்பெறச் செய்யும் அம்சமாக இருந்தது கடைசிவரை இந்துவாக இந்து மதத்திற்குள்ளேயே இருககவேண்டும் என்று ராஜா கூறியது. இதற்காகவே இந்து வெறுப்பாளர்களால் அவர் தூஷிக்கப்பட்டார். முத்திரை குத்தப்பட்டு வரலாற்றின் இருளுக்குத் தள்ளப்பட்டார்.

இன்று எம்.சி.ராஜாவை எந்த மக்களுக்காக அவர் தன் மொத்த வாழ்நாளை செலவிட்டாரோ அந்த மக்களில் கணிசமானோர் வெறுக்கிறார்கள். அவரைப்பற்றி பேசுவது குறைவு. அவரது நல்ல வாழ்க்கை வரலாற்றுநூல்கூட இன்று கிடைப்பதில்லை. ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வே.அலெக்ஸ் தொகுத்து வெளிவந்துள்ள நூல் எம்.சி.ராஜா அவாகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிமுகத்தை அளிக்கக்கூடியது.

இந்த நூல் 1930 இல் கே.சிவசண்முகம் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள ‘எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தெரிவு செய்யப்பட்ட எழுத்தோவியங்களும் உரைகளும்’ என்ற நூலின் தமிழாக்கம். 1927இல் வெளிவந்த ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற நூலுக்கு 1968இல் வெளிவந்த தமிழாக்கம் ஆகியவற்றை முதல் பிரிவாகக் கொண்டது. ராஜாவின் சட்டமன்ற உரைகள், அவரைப் பற்றிய நாளிதழ் குறிப்புகள், அவரைப்பற்றி பலர் கூறிய கருத்துக்கள் ஆகியவை அடுத்த மூன்று பகுதிகளாக உள்ளன. உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்கான கச்சாப்பொருள் இந்த நூலில் உள்ளது. அத்தகையதோர் நூல் எழுதப்பட்டால் நல்லது.

இந்நூலுக்கான சிறப்புரையாக காலஞ்சென்ற தலித் சிந்தனையாளரான அன்பு பொன்னோவியம் அவர்களின் ஒரு நீளமான கடிதம் உள்ளது. அறவுரை என்ற இதழில் ‘மூத்தவர் மூவர்’ என்ற பேரில் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக பள்ளி கொண்டா திரு. கி.கிருஷ்ணகுமார் எழுதிய கடிதத்துக்கு அந்த இதழின் ஆசிரியராக இருந்த அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பதில் கடிதம் இது. 10.7.1992இல் எழுதப்பட்டுள்ளது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxwDM0kMNwZqk82IYe84Cj-zPPji_n1C7MRxCY-mn_ubd21Po7vtGI_Jzy6_oFBV4RapMmwmsj2GZ6PQFoOiW0RtvrYJTrttc05SWl-bxP5-WnV9EAr9paJgHE3e6ZPDBMuNbpSiJ5WMnY/s400/Ayothidasar.jpg
அயோத்திதாச பண்டிதர்
தன் கடிதத்தில் கிருஷ்ணகுமார் எம்.சி.ராஜா குறித்து அன்றும் (இன்றும்கூட) அவரது சமூகத்தினரிடம் இருக்கும் ஐயங்களைப் பட்டியலிட்டு விவாதிக்கிறார். அதில் அம்பேத்கார்மைய அணுகுமுறை தெளிவாகவே தெரிகிறது, ”ஒரு மனிதரை அதிலும் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மனிதரைப்பற்றி பாராட்டுவதோ புகழ்வதோ எழுதும் முன் அவரது வாழ்வு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே அவரைப்பற்றி சரியான கணிப்பினை வெளியிட உதவும் என்று எண்ணுகிறேன்.

அந்த அளவுகோலின்படி பார்ப்போமென்றால் திரு.எம்.சி.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியதே. ஐயமில்லை. ஆனால் வட்டமேஜை மாநாடுகளில் தாம் பங்குகொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் நமது இரட்சகர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள்தான் எனத் தவறாக ஒரு கருத்தினை தனது மனதிற் கொண்டு நம் சமுதாய நலன் கருதி அணணல் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த திருமிகு ராஜா அவர்களின் வாழ்வை எப்படி போற்றமுடியும், புகழமுடியும்?

நான் இந்துவாகவே பிறந்தேன்-நான்இந்துவாகவே இறப்பேன் என அண்ணலின் மதமாற்ற உரைக்கு எதிர்த்து மறுப்பு அறிக்கை கொடுத்த தோடல்லாமல் மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களைக் காட்டிலும் மாற்று சமுதாயத்தினரைக் காட்டிலும் அதிகமாக அண்ணலுக்கு சிரமம் கொடுத்த பெருமை இவரையே சாரும்’‘ என்று சாடுகிறார் கிருஷ்ணகுமார்.

என்னுடைய பார்வையில் கிருஷ்ணகுமாரின் பிரச்சினை மிக எளிமையானது. அம்பேத்காரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட ஆளுமையாகக் காண்கிறார். மாற்றுத் தரப்பினர்கூட அவரை எதிர்க்ககூடாது என்று நினைக்கிறார். அம்பேத்காரில் பிழையோ, புரிதல் போதாமையோ நிகழமுடியும் என்பதை அவர் நம்பப்போவதில்லை. அம்பேத்கார் கூறியவற்றை வேறு ஒரு கோணத்தில் பேறு ஒருவர் அணுகமுடியும் என்றே நினைக்கவில்லை.

அம்பேத்காரை கேள்விக்கு அப்பாற்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஒரு நபி போல அமர்த்தியபிறகு பிறரைப் பார்க்கும்போது அவருடைய பார்வையில் அவர்களெல்லாம் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகிறார்கள். அம்பேத்காரின் மறுதரப்பாக ஒலிக்கும் தகுதியே அவர்களிடம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணகுமார். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை எல்லாம் குறைத்தும் தீர்த்தும் மதிப்பிட்டு விடுகிறார். அதாவது அம்பேத்காரை எம்.சி.ராஜா எதிர்த்தமைக்கு பதவியாசை தவிர வேறு காரணங்களே இருக்கமுடியாது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்.

வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை அணுகும் இரண்டு தலைமைப் பண்புள்ள மனங்கள் ஒரே வகையான அணுகுமுறையைக் கொண்டிருக்கமுடியாது. அவர்களின் மனம் செயல்படும்முறை அவர்கள் தங்கள் கல்வி, அனுபவம் மூலம் தாங்களே அடைந்த ஒன்றாக, தனித்துவம் மிக்கதாகவே இருக்கும். ஆகவே அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கும். உலகம் முழுக்க அத்தனை அரசியல், சமூக, மத இயக்கங்களிலும் இதுவே நிகழ்கிறது. நபியால் நிறுவப்பட்டதும் அவர்கூற்றுக்கு மறு கூற்று இல்லாததுமான இஸ்லாம் மதத்தில்கூட அவருக்குப்பின் முரண்பாடுகளே எழுந்துவந்தன.
anbu-ponnovium01
அன்பு பொன்னோவியம்
முரண்பாடுகளை இயல்பான அறிவியக்கமாகக் கருதுவதே முறை. முரண்பட்டு விவாதிக்கும் இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தவில்லை, பலப்படுத்துகிறார்கள். முரண்பாடும் விவாதமும் இல்லாமல் ஒற்றைப்படையான முறையில் தலைமை வழிபாட்டுடன் இயங்கும் இயக்கம் அமைப்பை மட்டுமே உருவாக்கும். கருத்தியலியக்கமாக வலுப்பெறாது. இதுவே வரலாறு காட்டும் பாதையாகும்.

எம்.சி.ராஜாவின் ஆளுமை அம்பேத்காருக்கு இணையானது என்று நம்பினாலே இந்த வினாக்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். அம்பேத்கார் அவர் பிறந்து வளர்ந்த வட இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தார். எம்.சி.ராஜா தெற்கை. அவர்கள் இருவர் நடுவே பார்வைகளில் தூரம் வருவதற்கு இதுவே போதிய காரணமாகும்.

இன்னும் பல விஷயங்களை நாம் யோசிக்கலாம். இந்தியாவின் தலித் தலைவர்களில் ஏறத்தாழ அனைவருமே நகர்ப்புறம் சார்ந்தவர்கள். நகர்ப்புறத்து தலித்துக்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர்களே தலைமைக்கு வரமுடிந்தது. ஆனால் முற்றிலும் கிராமம் சார்ந்தவரான, கல்வியே கற்காதவரான அய்யன்காளி (கேரள புலையர் மகாசபை தலைவர்) போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் எழுந்து வந்திருந்தார் என்றால் அவருக்கும் பிறருக்கும் இடையே இன்றும் வலுவான முரணபாடுகள் உருவாகியிருக்கும். அய்யன் காளி தேசிய அளவில் செயல்பட்டிருந்தால் அம்பேத்காருக்கு முற்றிலும் எதிரான தரப்பில் இருந்திருப்பார். அப்போது அம்பேத்காரை முன்வைத்து பிற அத்தனை தலித் தலைவர்களையும் துரோகிகள் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கும்.

இன்னும் ஒன்று, இந்த கட்டுரையில் அன்பு பொன்னோவியம் அவர்களால் மூன்று தலித் முன்னோடிகளாகக் குறிப்பிடப்படும் மூன்று தலைவர்கள்-இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா ஆகியோர்- பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒட்டுமொத்த தலித்துக்களின் தலைவர்களாக ஏற்க பிற தலித்சாதியினர் ஒத்துக்கொள்வார்களா என்ன? மகாராஷ்ட்டிரத்திலேயே அம்பேத்காரை மஹர்கள் அன்றி பிற சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்ல. அவரது தேர்தல் தோல்விகளுக்கு அதுவே காரணம்.

ஆகவே ஒற்றைப்படையாக்குவது, அதிகார மையங்களை உருவாக்குவது, தலைமை வழிபாடு மூலம் இன்றைய ஜனநாயக யுகத்தில் அரசியலே சாத்தியமல்ல. தொடர்ச்சியாக விரிவடையக் கூடிய, அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய, முரண்பாடுகளை ஏற்கக்கூடிய, ஒரு ஜனநாயக அரசியலே அதற்குத்தேவை. தலித் தலைமை என்பது எந்நிலையிலும் கூட்டுத் தலைமையாகவே இருக்கமுடியும். அதன் வரலாறு கூட்டுவரலாறாக, விவாதங்களின் கதையாக மட்டுமே இருக்க முடியும்.

தன் பதிலில் கிட்டத்தட்ட அதைத்தான் அன்பு பொன்னோவியம் அவர்கள் கூறுகிறார். ‘நிகழ்காலச் சூழ்நிலையை எதிர்கால விளைவுகளோடு இருவர் வெவ்வேறு கோணங்களில் நோக்கினார்கள். அவர்கள் கண்ட முடிவு ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறுபடலாம் மாறுபட்டது. தவறு அவர்களுடையது அல்ல. அதை வைத்துக்கொண்டு கணக்குபோடும் நம்முடையது ஆகவும் இருக்குமல்லவா?’

வரலாற்றுச் சந்தர்பபங்களை மதிப்பிடவும். சாராம்சப்படுத்தவும் ஒரேவழிதான் என்றில்லை. எத்தனையோ வழிகள் இருக்கலாம். அதில் எது சரி எது தவறு என்று காலம்தான் தீர்மானிக்கமுடியும். ராஜா எடுத்த முடிவுகள் தேசிய இயக்கம் தன் உச்சத்தை அடைந்தபோது அந்த வேகத்துடன் ஒத்துப்போவதன் வழியாக தனது சமூகத்தின் நலனைக்காக்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. அதையே பின்னர் அம்பேத்காரும் செய்தார், காஙகிரஸ் அரசில் அவர் அமைச்சரானார்.

இதே போன்ற முரண்பாடும் மோதலும் எம்.சி.ராஜாவுக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையேயும் இருந்தது. அத்தகைய முரண்பாடுகள் எந்த இயக்கத்திலும் தவிர்க்க முடியாதவை. காங்கிரஸ் இயக்கத்திலும் கம்யூனிச இயக்கத்திலும்கூட அவை இருந்தன. ராஜா அதன்பேரில் முத்திரைகுத்தி ஒதுக்கப்பட்டு இன்று மீட்கப்பட்டிருக்கிறார்.

ஜே.சிவசண்முகம் பிள்ளை பி.ஏ. அவர்கள் எழுதி பித்தாபுரம் மகாராஜாவின் அணிந்துரையுடன் வெளிவந்த எம்.சி.ராஜாவின் வரலாற்றுக் குறிப்பின்படி ராஜாவின் வாழ்க்கையின் வரைகோட்டுச் சித்திரத்தை அறியமுடிகிறது. ராஜாவின் தாத்தா முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவரது அப்பா திரு.சின்னத்தம்பிப் பிள்ளை சென்னை லாரனஸ் அஸைலம் அச்சகத்தின் துணை மேலாளராகவும் கணக்கராகவும் உயர்பதவி வகித்தார். சென்னைஆதிதிராவிட மகாஜன சபாவின் கவுரவச் செயலாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

1883 ஜுன் 17ஆம் நாள் ராஜா பிறந்தார். வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் மில்லரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார். படிப்பு முடித்து ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார்.

1916 முதல் சென்னையை மையமாக்கி இயங்கிய ஆதிதிராவிட மகாஜன சபாவை மறுசீரமைப்புச் செய்து துடிப்பான இயக்கமாக ஆக்கினார். பிரிட்டிஷ் இந்திய அரசு சமூக சீர்திருத்தத்திற்காக அமைத்த குழுக்களில் உறுப்பினராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார். 1917இல் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தக் குழுவினரை சந்தித்த ஆதிதிராவிடர் தூதுக்குழுவை வழிநடத்தினார். 1923இல் சென்னை ஆளுநர் விலிங்டன் பிரபுவை சநதித்த தூதுக்குழுவிலும் இருந்தார். 1929இல் இர்வின் பிரபுவைச் சந்தித்த தூதுக்குழுவிலும் பங்கெடுத்தார். இந்தியா முழுக்க நடந்த ஏராளமான சமூக சீர்திருத்த மாநாடுகளில் பங்கெடுத்து ஆதிராவிட மக்களின் நிலைமையைப் பற்றி எடுத்துரைத்தார்.

எம்.சி.ராஜா இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மாநில கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர். விலிங்டன் பிரபு அவரை 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். 1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது.

எம்.சி.ராஜா சட்டமன்ற உறுப்பினராக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவராக இருந்தாலும் பொதுவாக சென்னை மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அனைவருக்குமாகப் போராடுபவராகவே இருந்திருக்கிறார். அக்காலகட்டத்து செய்திகளைப் பார்க்கையில் அவர் பொதுவான மக்கள் தலைவராக மதிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஜஸ்டிஸ் கட்சியின் தொடக்க காலம் முதலே தன் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றிய் எம்.சி.ராஜா  கடுமையான காங்கிரஸ் எதிர்ப்புப்போக்கு கொண்டிருந்தார். காங்கிரஸின் போராட்டங்களக்கு எதிராக ஹிந்துமகாசபை போன்ற இயக்கங்களுடனும் ஒத்துழைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களை காக்கக்கூடியது என்ற நிலைபாட்டைக் கொண்டிருந்தார். அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி இந்நம்பிக்கையிலேயே சென்றது.

எம்.சி.ராஜாவைப் பற்றிய  இந்த நூலின் வழியாக நாம் காணும் ஆளுமைகல்வியிலும் இயல்பான அறிவுத்திறமையிலும் தலைமைப்பண்பிலும் முன்னிலையில் இருந்த ஒரு மனிதருடையது. வரலாற்றுப்பெருக்கு அவருக்கு அளித்த சந்தர்ப்பங்களில் தன்னுடைய கொள்கைகள் மற்றும் நம்பிக்கைளில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார். அதன்மூலம் தன்னுடைய மக்களுக்கு முடிந்தவரை பங்களிப்பாற்றியிருக்கிறார். அவரது ஆளுமை எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கை சிறப்புக்குரியதாக அமையவில்லை. அவருக்குத்தகுதியான இடங்களை அவர் பெறவில்லை. அதற்கு வரலாற்றின் தன்னிச்சையான ஊடுபாவுகளையே காரணம் கூறவேண்டும்.

இந்நூலின் பின்னிணைப்பாக அம்பேத்காரின் வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் ராஜாவைப் பற்றிக் கூறும் பகுதிகள் வருகின்றன. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை காந்திக்கு எதிராக முன்னெடுத்தபோது ராஜா தனித்தொகுதி முறையே போதுமானது என்று முடிவெடுத்தார். இதில் என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு முன்னர் அம்பேத்கார் தனித்தொகுதி போதும் என்றும் ராஜா இரட்டை வாக்குரிமைதேவை என்றும் கோரி வந்தார்கள். இந்த நிலை மாற்றத்தை ராஜா எடுப்பதற்கான காரணம் என்று அவரது நடைமுறை சார்ந்த அரசியல் அணுகுமுறையையே கூறவேண்டும். எப்போதுமே மிதமிஞ்சிய இலட்சியவாதம் பேசுபவராக அவர் இருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் எது அதிகபட்சம் சாத்தியமோ அதை தன் மக்களுக்காக ஈட்ட முனைபவராகவே இருந்திருக்கிறார்.

ராஜாவின் நிலைமாற்றம் அம்பேத்காரை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. இராஜாவை கண்டித்தும் அம்பேத்காரை ஆதரித்தும் இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீண்டத்தகாத மக்களின் சங்கங்கள் அறிக்கைவிட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டார்கள். 1932இல் அம்பேத்கார் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்கு கிளம்பினார். எம்.சி.ராஜாவும், இந்துமகாசபையின் டாக்டர் முஞ்சேயும் லண்டனுக்குக் கிளம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.

‘தன்னை இடர்பாட்டுக்கு உள்ளாக்கிய இராஜாவை அம்பேத்கார் வெறுத்தார். ஆதலால் இராஜா பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் புறப்படுவாரானால் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி வழியனுப்புமாறு பம்பாயில் இருந்த தன் தோழர்களுக்கு அம்பேத்கார் எழுதினார். பம்பாயில் இராஜா நடத்த முயன்ற மாநாட்டை தம் தொண்டர்கள் கட்டாயம் முறியடித்திருபபார்கள் என்று உறுதியாக நம்புவதாக அம்பேத்கார் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

பல தொல்லைகளுக்கிடையே  ராஜாவின் கட்சியர் பம்பாயில் கூடிய  அம்பேத்காரின் தொண்டர்கள் கலைந்தோடச் செய்தனர். அதில் அம்பேத்காரின் தொண்டர் ஒருவர் இறந்தார். ஐம்பது பேருக்கு அடிபட்டது. ராஜாவின் மீது கொண்டிருந்த கடும் வெறுப்பால் ‘நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவுக்கு ராஜா முக்கியமானவர் அல்ல’ என்று அம்பேத்கார் கூறினாலும் ராஜாவின் முயற்சிகளை எல்லா முனைகளிலும் முறியடிக்க வேண்டும் என்பதில் அவர் பதற்றமான முனைப்புடன் இருந்தார்’ என்று தனஞ்செய்கீர் பதிவு செய்கிறார்.

இன்றைய வாசிப்பில் எம்.சி.ராஜாவின் கோணத்தில் பார்ப்பவர்களுக்கு அம்பேத்காரின் செயல்பாடு ஜனநாயக விரோதானது என்று படக்கூடும். அம்பேத்காரின் சொற்களை மட்டும் வைத்து வரலாற்றை எழுதும் தமிழகத்திற்கு வெளியே உள்ள தலித்தியர்கள் ராஜாவை துரோகி என்று கூறக்கூடும். உண்மையில் ராஜாகுறித்து அந்தக் கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் அக்காலகட்டத்தின் பதற்றங்கள், ஐயங்கள், உணர்வுநிலைகள் ஆகியவற்றை ஒட்டியே இவற்றை புரிந்து கொள்ள முடியும். இன்று அந்த வரலாற்றுத் தருணம் நமது ஊகங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகையால் வரலாற்று மனிதர்களை அவர்களின் ஒட்டு மொத்தப் பங்களிப்பை ஒட்டியே மதிப்பிடமுடியும்.

எம்.சி.ராஜாவை அவர் மீதான வரலாற்றுப் புழுதியில் இருந்து அவதூறின் சருகளில் இருந்து மீட்பதற்கு அவரது சரியான வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழிலும்ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டியுள்ளது. அதற்கு அடித்தளமிடும் ஆவணத் தொகுப்பாக உள்ளது அலெக்ஸின் நூல்.
இந்நூல் தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. இதனூடாக ஒரு பொதுவாசகன் அடையும் சித்திரங்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

1. எம்.சி.ராஜா என்ற தலைவரின் நாவன்மை, அர்ப்பணம்,சேவை ஆகியவற்றையும் அவரது சமூகப்பங்களிப்பையும்.

2.தமிழ்கத்தில் நவீன ஜனநாயக அரசியல் எழுச்சி உருவகியபோதே தலித் எழுச்சி தோன்றிவிட்டிருந்தது என்ற வரலாற்று உண்மை. சொல்லப்போனால் தமிழ்கத்தின் மிக ஆரம்பகால அரசியல் இயக்கம் தலித் இயக்கமே என இப்போது படுகிறது. அவ்வியக்கத்தின் கோட்பாடுகளும் இலட்சியங்களும் அப்போதே தெளிவாக உருவாகி வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது

3. தலித் வரலாற்றை முற்றிலும் புதிய கோணத்தில், ஒரு மாபெரும் வீழ்ச்சி மற்றும் அடக்குமுறையின் கதையாக அணுகும் கோணம் இக்காலகட்டத்திலேயே உருவாகியிருந்தது. அதை அன்றைய அறிஞர்கள் ஏற்றும் கொன்டிருக்கிறார்கள். தலித்துக்கள் சரித்திரகாலம் முதலே அடிமைகளாக இருந்தார்கள் என்ற வரலாறு பிற்காலத்தையது. அதிகமும் மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. எம்.சி.ராஜாவின் உரைகளில் மூலவரலாற்றை தெளிவாகவே காண்கிறோம்

இந்நூலை பதினைந்து வருடக்கால உழைப்பால் கொண்டுவந்திருக்கிறார் அலெக்ஸ். வரலாறுகள் அழிவதில்லை, அவை விதைகளில் இருந்து முளைக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் கையில் வரலாறு இருந்துகோன்டிருக்கும், காலகட்டத்தின் தேவையைக் காத்து! திரு அன்பு பொன்னோவியம், கமலநாதன் போன்றவர்களுக்கும் அலெக்ஸ் அவர்களுக்கும் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது
(பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.  எழுத்து பிரசுரம் Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004).

அம்பேத்கர் திரைப்படம் - குறுந்தகடு


அம்பேத்கர் திரைப்படம்
1998 ம் ஆண்டு, மெகா ஸ்டார் மம்முட்டி அண்ணல் அம்பேத்கராக நடித்த அம்பேத்கர் படம், ஜாபர் படேல் இயக்கத்தில் மற்றும் மத்திய சமூக நீதித்துறை (Social justice and empowerment, & தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் (National film development corporation)ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, இதர 9 பிராந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்யப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் (மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக அக்டோபர் 2 ,2010 இல் நடந்த முப்பெரு விழாவில் (அம்பேத்கர்,பெரியார் ,காமராஜர் விழா ) வே.மதிமாறன், வேந்தன், லெமூரியன் முயற்சியில் தயாரான ) அம்பேத்கர் படம் பொறித்த பனியன் வெளியிடப்பட்டது..இந்த நிகழ்வில் அண்ணன் கொளத்தூர் மணி, அண்ணன் சீமான், தோழர் வே. மதிமாறன் கலந்து கொண்டனர்)
கலந்துரையாடல்:-
பின் 07.03.2010 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஓரத்தில் காலை 11மணியளவில் தோழர் மதிமாறன் முயற்சியில் ஒரு சிறிய கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள், தோழர்கள் சசி, வேந்தன், ஈழம் வெல்லும், லெமூரியன் & மகிழ்நன் (விழித்தெழு இளைஞர் இயக்க, மும்பை தோழர் )
தமிழகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை? அதற்கு நாம் என்ன செய்வது? என்று விவாதம்.
பல முறைகளில் முயற்சிகள் செய்வது என்று முடிவெடுத்தோம். அதில் முதன்மையான முயற்சியாக தேசிய திரைப்பட துறையிடம் (N.F.D.C) அம்பேத்கர் திரைப்படம் குறித்த விவரங்களை கேட்பது, தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டு, அதை ஒரு புகாராக எழுதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதன் முயற்சி :-
அதன் அடிப்படையில், 31-03-2010 அன்று தோழர்கள் வே. மதிமாறன் சசி, வேந்தன், சுவன், நிதி, அசோக், விவேக்,லெமுரியன் உட்பட நண்பர்கள் எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக (N.F.D.C) மேலாளர் செவ்வனே சந்தித்தார்கள்
அந்த சந்திப்பில்
“அம்பேத்கர் படம் பற்றிய விவரங்களை மும்பை தலைமை அலுவலகத்திடம் இருந்துதான் பெற முடியும்” என்றார் மேலாளர் . மேலும் இதன் விநியோக உரிமையை சென்னையில்தான் யாரோ! வைத்திருப்பதாக சந்தேகமாக சொல்வது போல் சொன்னார்.
“அவர் யாரோ அல்ல. அவர் பெயர் விஷ்வா (ஆஸ்கர் ரவியின் சகோதரர்)அவரிடம் பேசினோம். பணம் இருந்தால் இந்தப்படத்தை வெளியிட்டுவிடலாம். பணம் மட்டுமே இந்த படம் வெளியாக தடையாய் உள்ளது என்றார் விஷ்வா.”
“சரி, பணம்தான் பிரச்சினை என்றால், விஷ்வா சுந்தர் என்ற தனிநபரை நம்பி எப்படி பண உதவி செய்யமுடியும்? எவ்வளவு தொகை தேவைப்படும்? அதற்கு என்ன வரையறை? அவர் பெரும் லாப நோக்கமற்றுதான் அந்தத் தொகையை சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று தோழர்கள் கேட்டார்கள்
சற்றும் எதிர்பாராத இந்த விவரங்களால் தடுமாறிய மேலாளர் பின்பு சுதாரித்து உதிர்த்த வார்த்தை “ VISHVAA SUNDAR (முழுப்பெயர் தெரிந்திருக்கிறது) IS A GOOD DISTRIBUTOR, HE RELEASED MANY FILMS” என்று சப்பை கட்டு கட்டினார்.
“அவர் ஒரு வியாபார ரீதியிலான பெரிய விநியோகஸ்தர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்பதை நாங்களும் அறிவோம். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக முன்பே தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அம்பேத்கர் படத்தை N.F.D.C யிடம் இருந்து அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு வேளை அவர் தீவிரமான அம்பேத்கரிஸ்டா என்றால், அதுவும் இல்லை. அவர் ஒரு ANTI AMBEDKARIST. அதாவது அவர் ஒரு தீவிரமான இந்துமத உணர்வாளர். (பார்ப்பனர்)
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வேறு யாரும் வாங்கி விடக்கூடாது. வேறு யாரும் வாங்கினால் இதை வெளியிட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதை அவர் வாங்கியிருப்பாரோ ?
இதுபோன்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, விஷ்வா சுந்தர் இதுவரை அம்பேத்கர் படம் சம்பந்தமான எந்த ஒரு சிறிய விளம்பரமோ ஏன் ஒரு துண்டறிக்கையோ, சின்ன பத்திரிகைச் செய்தியோ கூட வெளியிடவில்லை.
எனவே இதில் பணம் மட்டும் பிரச்சினை அல்ல எதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுவரை படத்தை வெளியிடாததற்கான காரணத்தை, அதைப் பற்றி விளம்பர படுத்தாதற்கான காரணத்தை நீங்கள் (N.F.D.C) விஷ்வா சுந்தரிடம் கேட்டிர்களா?
NFDC சென்னை கிளையின் மேலாளரை சந்தித்த போது அவர் மும்பையில் உள்ள NFDC யின் தலைமை அலுவலகத்தின் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளும்படி அவருடைய தொலைப்பேசி எண்ணை கொடுத்தார். நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழில் வெளியாகாததன் காரணம் பற்றி கேட்டபோது “அதற்கான முழு காரணம் படத்தை தமிழில் வெளியிட வாங்கிய வினியோகிப்பாளரையே சாரும்.” என்றார்.
இந்த விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை வெளியிட எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவே இல்லை. இந்த படம் தமிழில் வெளியிட தயாராகி இருக்கிறது என்ற குறைந்தபட்ச தகவல் கூட பலருக்கும் தெரியவில்லை. பத்திரிகை துறையை சேர்ந்தவர்களுக்கே கூட தெரியவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் மற்றும் தினமலரில் ‘பாபாசாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை’ என்று செய்தி வெளியிட்டது. இப்படம் தமிழில் தயாரித்தாகிவிட்டது பற்றியும் இப்படம் விஸ்வா சுந்தர் என்ற வினியோகிப்பாளரிடம் தான் முடங்கியுள்ளது என்ற தகவல் பத்திரிக்கை துறையினருக்கு கூட தெரியவில்லை. இந்த அளவுக்கு விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை பற்றிய தகவல்களை வெளியே தெரியப்படுத்தவில்லை என்பது தான் இதன் பின்னணியில் உள்ள உண்மை. ஏன் இவர் தமிழ் சமூகத்திற்கு இப்படத்தைப் பற்றிய தகவல்களை தெரியபடுத்தவில்லை என்ற இந்த கேள்விகளை தலைமை அலுவலக மேலாளரிடம் கேட்ட போது,
“இதற்கு NFDC எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது” என்றார்.
“அப்படியென்றால் விஸ்வாஸ் சுந்தர், Dr.Babasaheb Ambedkar படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர முயற்சிக்காததால் ஒருவேளை அவர் படம் வெளிவராமல் முடக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. அப்படி அவர் முடக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால் படத்தின் நிலையென்ன?” என்று கேட்டோம்.
அதற்கு அவர், “படம் வினியோகிப்பாளருக்கு படத்தை வெளியிட உரிமம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை படம் வெளியாகவில்லையென்றால் உரிமம் மறுபடியும் NFDCக்கே திரும்பிவிடும்” என்றார்.
சரி, படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் அவருக்கு உரிமம் உண்டு என்று கேட்டதற்கு 5 வருடங்கள் என்றார். எப்போது அவருடைய உரிமம் காலாவதியாகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது.
“அவரின் உரிமம் வருகிற டிசம்பர் 2010 த்துடன் முடிகிறது.”
கடந்த ஐந்து வருடங்கள் படத்தை பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் படத்தை மூடக்கிவைத்ததற்கு விஸ்வாஸ் சுந்தர் என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் ஒருவேளை அவருக்கு படத்தை வெளியிடுவதில் நிதிப் பிரச்சனை இருந்தாலும் அதைப் பற்றி கூட தெரியப்படுத்தவிலை.
அம்பேத்கர் படம்
1999 ம் ஆண்டு, மெகா ஸ்டார் மம்முட்டி அண்ணல் அம்பேத்கராக நடித்த அம்பேத்கர் படம், ஜாபர் படேல் இயக்கத்தில் மற்றும் மத்திய சமூக நீதித்துறை (Social justice and empowerment, & தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் (National film development corporation)ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, இதர பிராந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட படம்போல மிகச் சிறப்பாக டப்பிங் செய்யப்பட்டது. ஹிந்தியில் ரிலீஸ் ஆகிவிட்ட இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சகோதரர் விஸ்வாஸ் சுந்தர் வாங்கி வைத்துகொண்டு, அதை வெளியிடாமல் முடக்கி வைத்திருந்தார்
இதுபற்றி விஸ்வாஸ் சுந்தரின் கருத்தைத் தெரிந்துகொள்ள அவரது கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோம். இரண்டு தினங்கள் முயற்சித்தும் முடியவில்லை. அவரது அலுவலக வட்டாரத்தில் விசாரித்த வகையில், அம்பேத்கர் படத்தைக் கைமாற்றி விட அவர் முயற்சித்துவருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழக தியேட்டர்களில் வெளியிட்ட தமுஎச, தேனி மாவட்டத்தில் தோழர் மதியவன் & தோழர்கள், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.
தமிழக அரசு :-
மற்ற தலைவர்களின் படத்தை விளம்பரம்செய்த அரசு அம்பேத்கர் திரைப்படத்தை தீண்டப் பயப்படுகிறது.
எப்படியோ 1999 ம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளியான அம்பேத்கர் திரைப்படம் , 2000 ல் இந்தியிலும், தொடர்ந்து மராட்டி , மலையாளம் என இந்தியாவிலுள்ள 9 தேசிய மொழிகளில் வெளியாகிவிட்டது. ஆனால் பகுத்தறிவு பற்றியெரிந்த தமிழ்நாட்டில் இத்திரைப்படம் 12 ஆண்டுகளாகத் தலைகாட்ட முடியவில்லை.
1800 திரையரங்குகளை வைத்துக்கொண்டு 200 கோடி 300 கோடி என்று மார்தட்டிப் படங்களை வெளியிடும் தமிழ்நாட்டில்தான் விநியோக உரிமை வாங்கியும் 5 வருடங்களாக கிடப்பிலேயே போடடப்பட்டிருந்தது அம்பேத்கர் திரைப்படம்.

வெளியிட நடந்த முயற்சியில் ஈடுப்பட அமைப்புகள் :
வே.மதிமாறன், லெமூரியன், வேந்தன், கோவை பெ. தி. க, ஸ்ரீதர்,மும்பை விழித்தெழு இயக்கம், தேனீ மாவட்ட SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு, தேனீ மதியவன் , கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்கள்,
ஏப்ரல் 2010 , SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இறுதியாக மதிப்புமிகு வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் பயனாக, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உயர் நீதிமன்றம் NFDC க்கு ஆணையிட்டது. இதற்கெல்லாம் பிறகுதான், பாராட்டு விழாக்களில் படுத்திருந்த நமது மாண்புமிகு முதல்வர் விளீரென எழுந்துவந்து 10லட்சம் நிதி உதவி தந்து உணர்ச்சிவசப்பட்டார். NFDC யும் டிசெம்பர் 3 ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.
உயர் நீதிமன்ற ஆணையை மறுக்க முடியாத NFDC யும் தமிழக அரசும் கடமைக்கு 4 திரையரங்குகளில் படத்தை திரையிட்டுவிட்டு விளம்பரமே செய்யாமல் இருட்டடிப்புச் செய்திருந்ததை உணர்ந்தோம்.
கோவையில் இத்திரைப்படத்தை திரையிட பெரியார் திராவிடர் கழகம் முயற்சித்து வருவதை அறிந்து அதன் பொதுச் செயலாளர் தோழர்.இராமகிருட்டிணனை சந்தித்த போது, கோவை சென்டிரல் திரையரங்கு தயாராக இருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்த தோழர்கள் பெ.தி.க விற்குப் பற்றாக்குறையாக இருந்த 60 ஆயிரம் ரூபாயை தந்து உதவினர்.
படம் இரண்டுகாட்சிகளாக ஒருவாரம் திரையிடப்பட்டது, நல்ல வரவேற்பைப் பெற்றது அம்பேத்கர் திரைப்படம். வந்த லாபத்தில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்பட்டது. இரண்டுகாட்சிகள் மட்டுமே திரையிட்டு இரண்டு வாரத்திற்குள் அதிகபட்சமாக 7000 பேருக்குமேல் படம் பார்த்தனர்; படம் ஓடாது என்று சவடால் அடித்தவர்களுக்கு பதிலாக அமைந்தது மக்களின் ஆதரவு.
இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கோவை தோழர்கள் தமிழ்ச்செல்வன், கதிரவன் , மகேந்திர குமார், தினேஷ் ,அரவிந்த், வழக்கறிஞர் கார்கி மற்றும் பெரியார் திராடவிடர் கழகத் தோழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.
கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்களும், கோவை சோமனூரில் படத்தை திரையிட்டார்கள்…
ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம் போராடவேண்டியுள்ளது” என்பதை உணர்ந்திருந்தது!
‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’
அம்பேத்கரையும், அவரின் எழுத்துகளையும் தமிழில் அறிமுகம் செய்யப் பாடுபட்ட தந்தைப் பெரியாரின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவந்து ஆட்சியமைத்த தி.மு.க. அரசு, அம்பேத்கரை மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்லவிருந்த இத்திரைப்படத்தை திட்டமிட்டே தடுத்துவிட்டது.
முதல்வரின் மூச்சிரைப்பைக்கூட விமர்சிக்கிற ஜெயலலிதா, அம்பேத்கர் படம் பற்றிய அரசின் அலட்சியம் குறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம், அதே அலட்சியம் அவரிடமும் இருந்ததால். இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள்.
மறுபடியும் NFDC யை தொடர்புகொண்ட பிறகுதான் மார்ச் 6 ம் தேதியோடு, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான உரிமம் முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது.
பின்
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை மறு வெளியிடுவது அல்லது தமிழில் குறுந்தகடு கொண்டு வருவது என முயற்சியில் உள்ளோம்.. இதன் முதன் செயல்திட்டமாக, ஜனவரி 30,2012 அன்று தோழர்,எடிட்டர் லெனினும்,( தமிழ்நாட்டில் முதன்முதலில் டிசம்பர்,ஜனவரி 2011 அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவரில் இவரும் முக்கியமானவர் ) நானும் எக்மோரில் உள்ள NFDC அலுவலகத்தில் பி.ராமு (Asst . Manager -Film /Production of NFDC,Chennai Branch ) அவர்களே சந்தித்து மறு படியும் வெளியிட வேண்டும் என் கேட்டுகொண்டோம் ...
பின், மறு வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளதால்.... தமிழில் குறுந்தகடு கொண்டுவருவது என முடிவு செய்தோம்..
NFDC சென்னை , மும்பை மற்றும் டெல்லி அலுவலகத்திற்கு 3000 குறுந்தகடுகள் தயாரித்து தரவேண்டி விண்ணப்பித்து உள்ளோம்...
26 /7 /12 அன்று B .Ramu (asst manager film production of nfdc chennai ) அவர்களே தொடர்பு கொண்டு கேட்டப்போது அவர் dvd /cd தயாரிக்கும் உரிமை எங்களிடம் இல்லை என்றார் நீங்கள் மும்பை nfdc அலுவலகத்தை சார்ந்த rajesh das அவர்களே தொடர்பு கொள்ள சொன்னார். அவரோ அந்த உரிமை எங்களிடம் கிடையாது நீங்கள் social justice and empowernment தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார் இப்போது நாங்கள் சோசியல் ஜஸ்டிசே அண்ட் எம்போவேர்ந்மேன்ட்க்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
தமிழக திரைப்பட இயக்குனர் சங்கத்திடம் social justice and empowernment பரிந்துரை செய்ய சொல்லி கடிதம் கேட்டு உள்ளோம்..
நாங்கள் மக்கள் வரி பணத்தில் உருவான அண்ணல் அம்பேத்கர் படத்தை (dvd ) இலவசமாக கேட்க வில்லை... அதற்கு வேண்டி பணத்தை தர தயாராக உள்ளோம்.
ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம் போராடவேண்டியுள்ளது.

தோழமையுடன்
விழித்தெழு இளைஞர் இயக்கம் ,மும்பை  & அண்ணல் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு குழு ,தமிழ்நாடு .

திங்கள், 29 அக்டோபர், 2012

நமது கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் எதிர் எதிராக நிறுத்துகிறது--ஆயிசா இரா.நடராசன்

 

நமது கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் எதிர் எதிராக நிறுத்துகிறது--ஆயிசா இரா.நடராசன் 

       சமச்சீர் கல்வி, அரசு - தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தலில் உள்ள வேறுபாடுகள், நிறை குறைகள், மாணவர் - ஆசிரியர் உறவு, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது பற்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட வலியுறுத்தல். இப்படி கல்வி சார்ந்த பல்வேறு சிந்தனைகளை,  'கருக்கல்' ஆசிரியர் குழு ஒரு மாலைப் பொழுதில் கலந்துரையாடிக் கொண்டிருந்தது.
       'கருக்கல்' ஆசிரியர் அவர்கள் இது குறித்தெல்லாம் ஆயிசா இரா.நடராசனிடம் நேர்காணல் செய்து தெளிவு பெற்று, இவ்விதழிலேயே பிரசுரிப்போமே என கருத்து தெரிவித்தார்; உடன் தொலைபேசியிலும், தொடர்பு கொண்டார். "கருக்கல்' பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் நல்ல புரிதலில் இருந்த இரா.நடராசன் அவர்கள், இது குறித்துப் பேச ஆர்வமுடன் ஒப்புதல் தந்தார்; உடனே வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
       சமீபத்தில் தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டும், மிகுந்த பரபரப்பில் திளைத்த கடற்கரை பகுதிகளில் கடலூரும் ஒன்று. இச்சூழலில் அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு கடலூருக்குச் சென்றோம், நேர்காணலின் பொருட்டு.
       அப்போது தான் 'தானே' புயலின் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டிருந்தது ஊர். வழியெங்கும் சாய்ந்து நின்ற, தலையிழந்த தென்னை மரங்கள் வரவேற்றன. ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை முழுவதுமாகப் பிய்த்து எறியப்பட்டிருந்தது. ஒரு உணவகத்தின் பெயர்ப்பலகை திருகிக் கொண்டிருந்தது. புயலில் கடலூர் எந்த அளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் என்பதை இவைகள் உணர்த்தின.
       மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு, நடராசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர், பள்ளி வழி கூறினார்.
       பள்ளி வாயிலில் காத்திருந்து, எங்களை அன்புடன் வரவேற்று, பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.
       நினைத்ததற்கும் மேலாக எளிமையான மனிதர், சுலபமாகப் பழகக் கூடியவர், மிகப்பெரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், கல்வி சார்ந்த பல புத்தகங்களை எழுதியவர், (இவர் எழுதிய ஆயிஷா மட்டுமே 2.55 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது) "புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கல்வி சிந்தனையாளர், புத்தக வாசிப்பையே சுவாசமாகக் கொண்டவர் ஆயிசா இரா.நடராசன் அவர்கள். ஒரு நேர்காணல் என்பது போல அல்லாமல் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் கொட்டும் மழையென பகிர்ந்து கொண்ட விதம், பிரமிக்க வைத்தது. எங்களின் அனைத்து வினாக்களுக்கும், விரிவான விடை தந்தார். "உங்களுக்கு நான் சொல்வது சரியாகப் புரிகிறதா' என்று அய்யத்தோடு கேட்டு, விளக்கமாகவும் உதாரணத்தோடும் பேசினார். நேர்காணலில் இவர் கொட்டிய (?) கருத்துக்களுக்கு, கண்டிப்பாக ஒரு 'கருக்கல்' இதழ் பற்றாது என்ற நிலையில், முடிந்தவரை விரிவாகவே வெளியிட முயன்றிருக்கிறோம். அவர் தந்த சூடான மசாலா தேநீர் மணக்க, மணக்க பருகியபடியே இதோ எங்களின் நேர்காணல்...
நீங்கள் ஒரு படைப்பாளி, குழந்தைகளுக்காக தொடர்ந்து சளைக்காமல் எழுதுபவர், அறிவியல் எழுத்தாளர், கல்வியாளர், கல்வி குறித்த சிந்தனைகளை நூல்களாய் வடித்துள்ள சிறந்த எழுத்தாளர்.. இப்படி பன்முனை தளங்களில் அறியப்பட்டாலும்..மிக சிறந்த வாசகராகவும் அறியப்பட்டுள்ளீர்கள்.உங்கள் வாசிப்பு பயிற்சியின் அடித்தளம் என எதனை நினைக்கிறீர்கள்?
எழுத்தாளனாவதற்கு வெகுகாலம் முன்பே நான் தீவிர வாசிப்பு தளத்திற்குள் நுழைந்து விட்டேன்.சொந்த ஊர் தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், நாங்கள் அங்கே வசிக்கவில்லை. அரசு ஊழியரான தந்தையின் தொடர் இடப்பெயர்ச்சி காரணமாக திருச்சி, கரூர் மாவட்டங்களின் கிராமப்புற பள்ளிகளில் படித்தேன். ஆரம்பத்தில் படிக்கும் பழக்கம் என் அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும்.. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு.. என ஞாபகம்.. அலுவலகநேரம் போக அப்பா ஆங்கில 'பல்ப் பிக்ஷன்' விடாப்பிடியாக வாசிப்பார்... பள்ளியின் நூலக அலமாரியிலிருந்து ஆசிரியர்களை ஐஸ்வைத்து, நான் எப்படியோ புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன்.
பின்னர் கரூரில் பதினோறாம் வகுப்பு படித்த காலத்தில் வழக்கறிஞர் பி.ஆர்.கே (பி.ஆர்.குப்புசாமி)அவர்களின் பகுத்தறிவு பாசறையில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.அவரது வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருந்தார்.காவேரி பிரச்சனை, ஈழ பிரச்சனை முதல் ஆந்த்ரப்பாலஜி வரை பல புத்தகங்களை எங்களோடு பகிர்வார்..
திருச்சியில் கல்லூரி பயிலும் போது நான் இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) இணைந்தேன்.அப்போது வாராவாரம் அரசியல் வகுப்புகளுக்கு எஸ்.எஃப்.ஐ ஏற்பாடு செய்யும். அதன் மூலம் பேராசிரியர் ஆத்ரேயாவோடு தொடர்பு ஏற்பட்டது.அவர் ஒரு தீவிர வாசகராக இருந்தார்..காந்தி அண்ட் ஹிஸ் இஸம் (இ.எம்.எஸ். எழுதியது) புத்தகம் அவரிடம் இரவல் வாங்கினேன் (இன்று வரை திருப்பி தரவில்லை.அவரும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவேறு விஷயம்!) அதுவே புத்தக வாசிப்பு, கூட ஒரு அரசியல்... எதை தேர்ந்தெடுத்து வாசிக்கிறோம் என்பது கூட நாம் யார் என்பது பற்றிய தேடலே எனும் மனக்கண்ணை திறந்து விட்டது.. இப்படியான ஒரு எண்ணம் போதும்.. அது ஒரு பிசாசு போல, புயல் போல வாழ்வை மையம் கொண்டு சுற்றிச் சுற்றி வீசுகிறது... புத்தக சூறாவளியிடம் சிக்கிய நான் அதன் ஒரு அங்கமாகி... தத்துவம், உலக நாவல், அரசியல், பொருளாதாரம், இயங்கியல் , கார்சியா மார்க்வெஸ், கீகேகார்ட்... இலியட், சார்த்தர்... ஓரன் ஃபாமுக்..என திக்குகள் எட்டும் சிதறி.. பதறி.. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், அல்த்து£ஸர், காஃப்கா, ரிச்சர்ட் டாக்கின்ஸ் என உறக்கம் முதல் உறவுகள் வரை பலவற்றை அந்தத் தேடலின் முன் ஒப்படைத்து சரணடைந்து... வருடங்கள் பல ஆகிறது... சார்த்தர் சொல்கிறார் 'ஒரு நல்ல புத்தகம் முடிவதே இல்லை' எவ்வளவு பெரிய உண்மை!
வாசிப்பு என்பது என்ன? அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா என்ன?
லண்டனின், அருங்காட்சியக நூலகம் உலகப்பிரசித்தி பெற்றது.அந்த நூலகத்தின் லட்சக்கணக்கான பிரதிகளை படித்து கரை கண்டவர்கள் என இருவரது புகைப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ்.அவர் உட்கார்ந்து வாசித்த அந்த எட்டாம் எண் இருக்கை கூட பாதுகாக்கப்படுகிறது.மற்றவர் நமது அண்ணல் அம்பேத்கார். நம் சிந்தனை சிற்பியாம் சிங்காரவேலர் தாம் முதன் முதலில் நம் தேசத்தில் மே தினத்தை தொழிலாளர் வர்க்க எழுச்சி தினமாகக் கொண்டாடியவர்..1960களின் தொடக்கத்தில் ரஷ்யாவின் மிகப்பிரபலமான லெனின் நூலகத்திற்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அங்கே ஒரு பெரிய அறை முழுதும் இருந்த புத்தங்களுக்கு 'இது சிங்காரவேலர் கலெக்ஷன்' என அவரை முன்னிறுத்தி தலைப்பிடப்பட்டிருந்ததை கண்டு அசந்து போய் நின்றாராம். இந்தச் செய்தி அவரது மாஸ்கோ விஜய கோப்புகளிலேயே பதிவாகி உள்ளது...உலகின் பல மூலைகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் புத்தகங்களைத் தேடி சிங்காரவேலரிடம் வருவார்களாம். பின் நாட்களில் இந்தியா வந்த சேகுவேரா.. சிங்காரவேலர் நினைவில்லம் வந்து சில புத்தகங்களை தேடியதாய் வரலாறு பதிவு செய்திருக்கிறது. து£க்கிலிடப்படும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங். வாசிப்பு, நோக்கம் மிகுந்தது... வாசிப்பு, பொழுதுபோக்கு அல்ல.. வாசிப்பு, ஒரு இயக்கம். It is a political activity
இன்று வாசிப்பு எப்படி இருக்கிறது?
தேர்வுக்காக வாசிக்கிறார்கள்...பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர், பேராசிரியர் கூட, பாடப் புத்தகத்திற்கு வெளியேயும் வாசிக்க, பழக வேண்டிய கட்டாயத்தை உணரவில்லை.வேலைக்காக படிப்பது... வேலை கிடைத்ததோடு நின்றுபோகிறது.. பொழுதுபோக்கு வாசிப்பு கூட இன்று குறைந்துவிட்டது.. லட்சுமி, சிவசங்கரி என வாசித்த பெண்கள், டி.வி. சீரியலுக்கு மாறி... நாளாகிவிட்டது.. உலகின் நம்பர் ஒன் பத்திரிகை என்றே ஒரு நூறு தமிழ் பத்திரிகைகள் வருகின்றன. இருந்தும் தீபாவளி மலர் கூட இலவசங்களின் இணைப்பால் தான் விற்கிறது.ஊர் ஊராக புத்தகக் கண்காட்சிகள்.. ஆனால் சாமியார்களின் வழிகாட்டி நூல்களும், பணம் சம்பாதிப்பது எப்படி வகையறா புத்தகங்களும்... சமையல் குறிப்பும் அமோகமாக விற்கிறது... புத்தகப் புதையலை அள்ளத் துடிக்கும் குழந்தைக்கு கூட, தலையணை சைஸ் 'ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?' புத்தகத்தை இரக்கமின்றி வாங்கி கையில் திணிக்கிறார்கள்...இது ஒரு பக்கம்.
மறுபக்கம்.. 'இ&பப்ளிஷிங்'.. கணினியில் இணையத்தில் வருவதே எழுத்து என்று நம்பும் ஒரு கூட்டம். இதோ இந்த பென்&டிரைவில் 150 புத்தகங்கள் உள்ளன. ஆனால் எனக்கு டிஜிட்டல் எழுத்தின் மீது ஈர்ப்பு இல்லை. பாடப் புத்தகங்களுக்குள் வைத்து பகுத்தறிவையும் இயங்கியலையும் வாசித்து வளர்ந்தவர்கள் நாங்கள்..புத்தகம் என்பது வேறு... அதைத்தொட்டு பிரித்து நுகர்ந்து.. நெஞ்சோடு அணைத்து.. நடந்தபடி.. படுத்தபடி.. சாப்பிட்டபடி.. திண்ணையில், ரயிலடியில், அரசமர நிழலில்.. எங்கெங்கும் கொண்டு சென்று வாசிக்கும்.. அது ..அது தான் முழுமைபெற்ற வாழ்வு..
நீங்கள் அப்படி வாசித்த நூல்களில், உங்களை நிறைவடையச் செய்த புத்தகங்கள் என்று எதையாவது குறிப்பிட முடியுமா...? எந்த புத்தகத்தையாவது திரும்ப வாசித்தது உண்டா?
பதிவு செய்யத்தக்க மனித வரலாற்றின் மூவாயிரம் ஆண்டுகளில், தலைசிறந்த&மனித சிந்தனை போக்கையே மாற்றியமைத்த பல நூல்கள் உள்ளன.ஏராளமான புத்தகங்கள் என்னை நிறைவடைய வைத்த பட்டியலில் உண்டு.டிமோதி பெரிஸ் என்று ஒரு விஞ்ஞானி, இவர் கம்மிங் ஆஃப் ஏஜ் இன் தி மில்கி வே (comming of Age in the milky way) என்று ஒரு புத்தகம் எழுதினார். வரலாற்றில் இன்று வரை மனிதனை பதப்படுத்தி, உலகில் வென்று நின்ற இனமாக்கிய புத்தகங்களை அதில் பட்டியலிடுவார்.

நான் என்னை பதப்படுத்தியதாய் மூன்று புத்தகங்களை கருதுகிறேன். நியூட்டனின் பிரின்சிபியா புத்தகம், கலீலியோவின் & சூரியன் மைய கோட்பாட்டு அரசியல் ஆய்வு நூலைவிட பல மடங்கு அற்புதங்கள் கொண்டது என பொதுவாக ஐன்ஸ்டீன் வரை அனைவராலுமே முன் மொழியப்படுகிறது. டெஸ்கார்ட்டஸ் (தெகார்த்தே), ரூசோ, மார்க்ஸ், நீட்சே... இவர்களை எல்லாம் நாம் புறந்தள்ளிவிடவே முடியாது.
ஆனால் உண்மையிலேயே உலகின் மந்த மனநிலை மீது ஒரு ஆதர்ச தாக்குதல் தொடுத்து அனைத்து மூட நம்பிக்கைகளின் மீதும் ஓங்கி அறைந்த புத்தகம் டார்வினின் & உயிரிகளின் தோற்றம். (The origin of species). மார்க்ஸே, தனது மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பிக்கிறார்.ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிசை நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.சில அத்தியாயம் சில பகுதிகளை மனப்பாடமாகக்கூடச் சொல்வேன். நான் கல்லூரியில் படித்தது இயற்பியல், பிறகு உளவியலும்,ஆங்கில இலக்கியமும், கல்வியியலும் விரும்பி வாசித்த முதுகலைப்பட்டங்கள். ஆனால் உயிரிகளின் தோற்றம் என்னை கட்டிவிடுகிறது. முதல் பக்கம் படித்ததும், பிறகு உங்களால் அதை கீழே வைக்க முடியாது. கடவுள் என்பவன் உலகை ஆறே நாட்களில் படைத்ததாக அதுவரை இருந்த புளுகை இது உடைத்தது.படைப்பு & சாத்தியம் இல்லை.பரிணாமமே ரகசியம் என உணர்த்தியது.போப்பாண்டவர் டார்வினுக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே மரண சர்டிபிக்கேட் அனுப்பினாராம்.அத்தனை தாக்கத்தை அது ஏற்படுத்தியது.
வில்டுராண்டின், தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி (The story of philosophy) படித்திருக்கிறீர்களா... நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். கல்வியில் மாற்று சிந்தனைக்கு வித்திடும் & நான் தமிழில் மொழி பெயர்த்துள்ள & பாப்லோ பிரையரேவின் & ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்...ஒரு ஆசிரியனாய் என்னை நெறிப்படுத்தும் நூல் அது..
பாப்லோ பிரையரே காட்டும் 'பிரச்சனைகளை மையப்படுத்திய கல்வி' இங்கே இந்தியச் சூழலில் சாத்தியமா...தமிழ் சமூகச் சூழலில் மாற்று வகுப்பறையை கண்டடைய முடியுமா?
பாப்லோ பிரையரே & ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை வென்றெடுத்த மார்க்சிய கல்வியாளர்.இந்திய சூழல் மட்டுமல்ல உலக அளவில்கூட கல்வி என்பதே இருப்பை தக்கவைக்கும் அதிகார வர்க்கத்தின் யுக்தியாகவே உள்ளது.
தமிழ் சூழலுக்கான,சமுதாயத்திற்கான கல்வியை வென்றெடுக்க நாம் தவறி விட்டோம். உங்கள் கேள்வி நியாயமானது. எழுபதுகளின் இறுதி தொடங்கி முழு வியாபாரமாகவும், தமிழை புறக்கணிக்கும் ஆங்கில ஆதிக்கமாகவும் நம் கல்வி அனைத்துவகை அதிகார பரிவாரங்களின் முழு ஆதரவோடும் புரையோடிப் போய்விட்டது. இது நமது கல்வியே அல்ல.தார்மீக ரீதியில் இந்தியை, இந்தி திணிப்பை உக்கிரமாக எதிரித்து வெற்றிகண்ட நம் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள், நமக்கான கல்வியை வென்றெடுக்க தவறினார்கள். வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகம் இது.
கிட்டத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கூட நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.அங்கே சரளமாக குழந்தைகள் (85% குழந்தைகள்) ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கின்றனர். கல்லூரியில் உயர்கல்வி மலையாளத்தில், தெலுங்கில் உள்ளது.நாம் தவறி விட்டோம். மாண்டசோரி முறைப்படி கல்வி அளிப்பதாய் பொய் சொல்கின்றன, நர்சரி பள்ளிகள். மாண்டசோரி தாய்மொழி கல்வியை ஆதிரித்தவர். இந்தியாவுக்கே பலமுறை வந்து சென்றவர். மாண்டசோரி பெயரில் ஆங்கில கல்வி எனும் மோசடிக்கு துணிந்து அரசு ஆதரவு அளித்து வரும் அவலம், வேறு எந்த சமூகத்திலும் நிகழவில்லை.
1169--/1200 எனும் அதீத மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை படைக்கும் ஒரு தமிழ் வழி கல்வி மாணவர் பொறியியல் கல்லூரியின் ஆங்கில & வழி கல்வியால் கொலை (தற்கொலை அல்ல) செய்யப்படும் மனம் பதறவைக்கும் கொடுமை, இனப்படு கொலைக்கு இணையானது. நம் குழந்தைகளுக்கான கல்வி நம் தாய் மொழியில் இல்லை என்றால் அது என்ன கல்வி?
உலக அளவில் தகுதி பெற ஆங்கில வழி கல்வி தான் தேவை என்கிறார்களே?
ஆங்கிலம் அவசியம் என்பது உலகமயமாதல் ஏற்படுத்திய ஒரு மாயை. இது ஒரு வகை ஆதிக்கம்.தமிழ் உணர்வு, ஆங்கிலம் உயர்வு என்றெல்லாம் சமூக பொது புத்தியில் புகுந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.
இந்த ஆங்கில கல்வியில் பெரிய சாதனை எதுவும் இல்லை.ஆங்கில பள்ளிகளில் நான் அரை நூற்றாண்டாக வேலை பார்க்கிறேன்.நம் குழந்தைகளுக்கு தமிழும் ஒரு வரி சரியாக எழுதத் தெரியாது.ஆங்கிலமும் சரியாக எழுத பேசத் தெரியாது.அவர்கள் மனப்பாடம் செய்வது தவிர,வேறு எந்த வேலையும் பெரிதாய் செய்வது இல்லை...இப்படி நாளன்றிற்கு எட்டுமணிநேரம் இளமை முழுதையும் பணம் தேடும் வெறிக்கு பலியிடும் கொடுமை, உலகில் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது.மத்தியதரவர்க்கத்தின் பணம் தேடும் & செல்வம் கொழிக்கும் குபேர வாழ்க்கை & வெறி, ஆங்கில கல்வியை து£பம் போட்டு வளர்க்கிறது.
2005ம் ஆண்டின் தேசிய கல்வி அறிக்கை தாய் மொழி கல்வியை கோருகிறது.யஷ்பால் கமிட்டி அறிக்கையை முன் வைத்து தயாரான அந்த கொள்கை ஆவணத்தை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் தங்களுக்கான கொள்கை ஆவணங்கள் தயார் செய்து விட்டன. தமிழகத்தில் இப்போது தான் அதற்கு முதல் படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்.அதுவும் கல்வியாளர்கள் வழக்குமன்றம் போய் விடுவார்களோ எனும் அச்சம் ஒரு புறம். குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டம் ஒருபுறம்.இல்லையேல் இவ்வளவேனும் நடந்திருக்குமா.இப்போதும் இக்கல்விக் குழுவில் பெரும்பாலும் அதிகாரிகள் உள்ளனர். சமூக போராளிகளும் குழந்தை உரிமைப் போராளிகளும் புறந்தள்ளப் படுகிறார்கள்.
தேர்வு மதிப்பெண்களை வைத்து உயர்கல்வி என்பதால் தான் இவ்வளவு மனஅழுத்தமா? இதன் மூலம் தற்கொலைகளும் அதிகரித்து வருவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இங்கே நடப்பது கல்வியல்ல, தேர்வுக்கான பயிற்சி. கல்வியை கேள்வி& பதிலாக கூறுபோட்டு வைத்திருக்கிறோம். இதனை பாப்லோ பிரையரே வங்கிமுறை கல்வி என அறிவித்தார்.வங்கியில் பணம் போடுவது போல மாணவரின் தலையை திறந்து பாடம் என அரசு கருதுவதை பொத் பொத்தென கொட்டுவதே ஆசிரியரின் வேலையாக உள்ளது.'குழந்தைகளை தேர்வர்களாக வளர்க்கிறீர்களே.. வெட்கமாக இல்லையா' என்று ஜான்ஹோல்ட் கேட்கிறார்.புத்தகமற்ற கல்வியை, மரியா மாண்டசோரி முன் மொழிந்தார்.நமது கல்வி கல்வி பயிற்சியாகவே உள்ளது.
தேர்வு முறை பலவிதமான பலவீனங்களால் ஆனது.முதலில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி தெரிந்திருந்தால் போதாது.. எழுதத் தெரியவேண்டும். ஒரு யானை பராமரிப்பாளன், யானை பற்றிய தேர்வில் பாஸ் பண்ண முடியாது..எழுதத்தெரியணுமே. சரி எழுதத் தெரிந்த ஒருத்தரை எடுத்துக் கொள்வோம்.டெண்டுல்கர் வந்தால் கிரிக்கெட் பற்றிய பாடத்தின் தேர்வில், பெயில் தான் ஆவார்!ஏனென்றால் எழுதத்தெரிந்தால் போதாது..உங்கள் புத்தகத்தில் உள்ளதை 'அப்படியே' எழுதத் தெரிய வேண்டும்..இந்தத் தேர்வுகளில் நகலெடுக்கும் இயந்திரங்களே தேர்ச்சி பெற முடியும்; சராசரி குழந்தைகள் அல்ல. பதினான்கு ஆண்டுகாலம் படித்ததை, பிளஸ்&டூ வகுப்பு இறுதி தேர்வின் நான்கே மைய & தாள் மதிப்பெண்களைவைத்து மதிப்பீடு செய்வது அதைவிட பெரிய அபத்தம். அதனால் தான் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் கோழிப்பண்ணைகளை மூடிவிட்டு பயிற்சி மையங்களை ஆரம்பிக் கிறார்கள்.
இப்போது குழந்தைகள் மைய கல்வி என்பது பற்றி நிறைய பேசப்படுகிறதே.? சமச்சீர் கல்வி என்பது அது தானா?
ஏதோ இதுவரை கல்வி என்கிற ஒன்று, ஆசிரியரை மையப்படுத்தி இயங்கியது போலவும் இப்போது அது குழந்தைகளை மையப்படுத்தி மாற்றப்பட்டுள்ளதாகவும்.. அடிக்கடி அறிவிப்பு போல செய்து கொண்டே இருக்கிறார்கள்.எல்லாமே அதிகார வர்க்கத்தை மையப்படுத்தி இயங்கும் கல்விதான். நமக்கான கல்வி சமச்சீர் கல்வி அல்ல. அது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அதிகாரமே வழங்கிய இரு நகல்களில் ஒன்றைப் பெறவே இவ்வளவு போராட வேண்டியாகிவிட்டது. இந்தக் கல்வி அதிகார மையக் கல்வி.அமைச்சர் சொல்வதை இயக்குனரக அதிகாரிகள் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை மாவட்ட அதிகாரிகள் கேட்கிறார்கள்.. சீ.இ.ஓ...டி.இ.ஓ சொல்வதை தலைமை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியர் சொல்வதை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்க வேண்டும். மாணவர்களான குழந்தைகள் சொல்வதை கேட்கத் தான், ஆள் கிடையாது.
அதிகாரிகளுக்கு தேர்வு முடிவு, விழுக்காடுகளின் மேல்தான் குறி. தேர்வு விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு போதும், குழந்தை சித்திரவதை என வேறு எதையுமே காட்ட வேண்டியதில்லை. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்வது இன்று ஒரு ஃபேஷன். இந்தக் கல்வி முறை குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் கல்வி முறை அல்ல; ஆசிரியர்களை மையப்படுத்தியும் அது இயங்கவில்லை. அதிகாரத்தையும், அதிகாரிகளையும் மையப் படுத்தி இயங்கும் கல்வி முறை இது.முரட்டுத்தனமாய் தேர்வு முடிவு விழுக்காடுகளை மாணவர் ஆசிரியர் மீது வன்மமாகத் திணிக்கும் இந்தக் கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்துகிறது.ஆசிரியரின் மீதான அபிப்ராயம் அந்த பாடத்தின் மீதான வெறுப்பாகவும், ஒரு பாடத்தின் மீதான வெறுப்பு அந்த ஆசிரியரின் மீதான ஆத்திரமாகவும் இங்கே மாறிவிடுகிறது.
அதனால் தான் ஆசிரியர்&மாணவர் உறவு பாதிக்கிறதா? வகுப்பறையில் கொலை...
குழந்தைகள் பேச அனுமதிக்கப்படாத ஒரு கல்வி முறை இப்படித்தான் போய் முடியும்.இங்கே குறைந்தபட்ச உரையாடலுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. எப்போதும் 'கையை கட்டு.. வாயை பொத்து' தான். வீட்டிற்குப் போனால் அப்பா அம்மா இருவருமே வேலைக்குப் போய்விட்ட தனிமை.குழந்தைகள் விளையாடும் மரத்தடிகளும், குது£கலிக்கும் வீதிகளும் இன்று காணக் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் கூட இன்று இது தான் நிலைமை. குழந்தைகள் பேச விரும்புகின்றன... சொல்ல விரும்புகின்றன... வகுப்பறையில் ஆசிரியரின் அதிகார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது... 'கீப் கொயட்... கவனி' 'இங்கே கவனி' குழந்தைகள் சொல்ல விரும்புகின்றன '..நாங்கள் சொல்வதை கவனியு-ங்கள்..' எப்போ தெல்லாம் உங்கள் கல்வி குழந்தைகளை மையப்படுத்தாமல் வெகு து£ரம் விலகுகிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் தங்களை மையப்படுத்துவதாய் ஆக்கிட அவர்களது குரல் கேட்கும். அவர்கள் மொழி வேறு, வழிமுறைவேறு. செய்தி ஒன்று தான்...நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.சிலர் பள்ளிக்கு கட் அடிக்கிறார்கள்.ஊரைவிட்டே ஓடுகிறார்கள் சிலர்.வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள் சிலர்...ஒரு மாணவன் பள்ளிக்கு எடுத்துப் போக கத்தி வாங்குவதென முடிவு செய்கிறான்...செய்தி ஒன்று தான்.. 'நாங்கள் சொல்வதை கேட்பீர்களா இல்லையா'...எனும் குழந்தைகளின் வழி அது..
எதற்கெடுத்தாலும் தற்கொலை...
இது கல்வி முறை, சமூக அணுகுமுறை இவற்றின் கோளாறு. குழந்தையின் கோளாறு அல்ல.முற்றிலும் வணிக மயமாகிப்போன கல்வியின் அவலம் இது.முழுக்க முழுக்க பயிற்சி மட்டுமே தரப்படும்போது,வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து அளவளாவ இக்கல்வியில் இடமில்லை.
இது மெக்காலே&கல்வியால் வந்த வினை தானே... நமது குருகுலக் கல்வி இப்படி இல்லையே...
(இடைமறிக்கிறார்)இல்லை..இல்லை.இந்த வகை பார்வையில் பல கோளாறுகள் உள்ளன...நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒட்டு மொத்தமாக நாம் மெக்காலே மீது குற்றம் சுமத்திவிட முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு தேவையான வேலையாட்களை உற்பத்தி செய்ய வந்தது தான்,இன்று பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு வேலையாட்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.நான் மறுக்கவில்லை ஆனால் டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் ஏன் பகத்சிங் போன்றவர்கள் கூட மெக்காலே கல்வி முறையை ஆதரித்தார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஏனென்றால் மெக்காலே முறை கல்வியை, ஆங்கிலேய அரசு கொண்டு வரும் வரை இங்கே கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவில்லை. எத்தனையோ குறைபாடுகளை இக்கல்வி கொண்டிருந்தாலும், ஆணும் பெண்ணும் சமமாக உட்கார்ந்து பயிலும் பொதுப் பள்ளிகளை, சாதி மத வர்க்க வர்ணாசிரம பேதமற்ற பொதுப் பள்ளிகளை நமக்கு கொடுத்தது மெக்காலே கல்வி முறை தான். குருகுலக் கல்வி என்பது ஒரு ஆதிக்க மோசடியாகவே இருந்தது.திண்ணை கல்வி என்கிறீர்கள்.பள்ளி திண்ணையில் ஏன் இருக்க வேண்டும்? வீட்டிற்குள் வர முடியாதது ஏன்..என்கிற இடத்திலேயே அதன் தீட்டு பார்க்கிற முகமூடி கிழியவில்லையா?இதனை மெக்காலே கல்வி தான் உடைத்து, பொது பள்ளிகளை உருவாக்கியது...அதன் செயல்பாடு உலக மேடையோடு நம்மை ஒன்றிணைய வைத்தது.கல்வியின் பலம், பலவீனம் இருக்கட்டும்...மெக்காலே வகை பள்ளிகள் வந்திராவிட்டால் கல்விக் கற்கும் உரிமையே நமக்கு வந்து சேர்ந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.
இப்போது குழந்தைகளுக்கான துவக்கக்கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது..அதன் முக்கியத்துவம் என்ன?
பகத்சிங் போன்றவர்களின் எழுச்சி முழக்கங்களை அடுத்து, கோபாலகிருஷ்ண கோகலே 1910ல் அப்போதைய பிரித்தானிய&தற்காலிக பிரதிநிதிகள் சபையில் ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.2009ல் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து, இந்திய அரசு குழந்தைகளுக்கான கட்டாய கட்டணமற்ற கல்வியை உரிமையாக்கி சட்ட ஷரத்து 86ஐ நிறைவேற்றியது. எனவே கல்வி உரிமைக்கான போராட்டம் என்பது ஒரு நூறு வருட போராட்டம். 1948ல் இந்திய பிரஜைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமை ஆக்கிட அண்ணல் அம்பேத்கார் முயன்ற போது, அப்போதைய நேரு அரசாங்கம்...காஹர் கமிட்டி என்கிற ஒன்றை அமைத்து, அதற்கு ஆகின்ற செலவை காரணம் காட்டி, கல்வியை அடிப்படை உரிமை பட்டியலான 24ம் பிரிவிலிருந்து நீக்கி, அரசு பத்தாண்டுக்குள் தரவேண்டியவைகளான 'தேவை' பட்டியலில் சேர்த்தது.
இப்போதும் கூட ஒரு சராசரி பள்ளி நாளில் கல்வி கற்க பள்ளிக்குப் போகிறவர்களை விட, போகாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம் என்று அமெர்தியா சென் குறிப்பிடுகிறார்.
கல்வி வர்த்தகமாகிவிட்ட நிலையில், இந்த சட்டம் எப்படி வேலை செய்யும்... வெறும் கண்துடைப்பாக மாறவும் வாய்ப்பு உள்ளதல்லவா?
மிக சரியாகச் சொன்னீர்கள்...தனியார் பள்ளிகளும் 25 சதவிகித இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமென இச்சட்டம் கோருகிறது. உன்னிகிருஷ்ணன் வழக்குக்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மாணவர் சங்கங்கள் நடத்திய உக்கிரமான போராட்டங்களும் இல்லையேல் இது கூட கிடைத்திருக்காது. 70களில் அரசு பள்ளிகளில் மேட்டுக்குடி குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்ற ஒரு மிக்ஸட் சூழல் இருந்தது.தனியார்மய நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளி கலாச்சாரம் வந்த பிறகு இந்த வசதி படைத்த கூட்டம், அரசு பள்ளிகளை காலி செய்து கொண்டு போய்விட்டது.இன்று அரசுப்பள்ளி என்பதே நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு என்று ஆகிவிட்டது.இப்போது இந்த சட்டம் மீண்டும் கலப்புப் பள்ளிகளான பொதுப் பள்ளிகளை கோருவது நாம் போராடிப் பெற்ற உரிமை.அதனைவிடாமல் பாதுகாப்பது நமது முழுமுதல் கடமை.அதற்காக சமூக நல போராளிகளும், ஆர்வலர்களும் இந்த சட்டத்தின் அமுலாக்கத்தை கண்காணிக்க வேண்டியுள்ளது.
சரி..இப்போது இலக்கியத்தின் பக்கம் திரும்புவோம். சிறுவர்களுக்கான இலக்கியத்தில் இன்று உங்களது பங்களிப்பு அபாரமாக உள்ளது.உங்கள் நூல்களை குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். அவர்களுக்கான மொழியை எப்படி கண்டடைந்தீர்கள்?
குழந்தைகள் மூன்று விதமான மொழி உலகில் பரிணமிக்கிறார்கள்.முதலாவது வீட்டின் பேச்சு மொழி.இரண்டாவது ஊடக மொழி.அதாவது டி.வி. கார்டூன் நெட் ஒர்க்...அந்த மொழி.மூன்றாவது பள்ளியின் பாடப்புத்தக மொழி..நான் பாடப் புத்தக மொழியை அவர்களை அடையும் எனக்கான வழியாக தேர்வு செய்தேன்...காரணம், பிற்காலத் தொடர் தமிழ் இலக்கிய வாசிப்பினை நோக்கி அது தான் அவர்களை ஊக்கப் படுத்தும். அதில் ஓரளவு வெற்றி கண்டது எனக்கே...கொஞ்சம் ஆச்சரியம் தான்...ஆனால் இன்னமும் அதற்கான வேலைகள் நிறைய உள்ளன.
அறிவியலை பிடிவாதமாக எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்...தமிழில் அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது.
அந்த திசையில் உண்மையிலேயே சவால்கள் மிக அதிகம். தமிழில் அதற்கான சொல் செழிப்பு இன்னமும் உருவாக வில்லை.இங்கே அறிவியல் கல்வி&குறிப்பாக உயர்கல்வி, தமிழில் இல்லை.எனவே தொடர்ச்சியான வாசக பின்புலம் கிடையாது..ஒரு காரல் சாகன் போலவோ, ரிச்சர்ட் டாக்கின்ஸ் போலவோ இங்கே எழுதினால் வாசிக்க ஆள் கிடையாது.இங்கே தகவல் நூல்கள் தான் அறிவியல் நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன! ஒரு மாதத்திற்கு 600 பி.எச்.டி தீசிஸ், சமர்ப்பிக்கப்படும் நம் பல்கலைகழக அறிவியல் பொறியியல் துறைகளுக்கு தமிழ் அறிவியல் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது.சமர்பிக்கப்படும் நாலு பிரதியில் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என குட்டியாய் ஒரு உத்தரவு போதும்..தமிழ் அறிவியல் வளர்ச்சியுறும்..கூகுள் போன்ற இணைய தளங்கள் அளவுக்கு கூட, மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுத்த பல்கலைகழகங்கள் அறிவியல் தமிழை வளர்க்க முனையவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
உங்கள் சிறுகதைகள் தமிழ் படைப்புலகில் தீவிர வாசக தளத்தை அடைந்தவை..இப்போது மிக அபூர்வமாக எழுதுகிறீர்களே...
எழுதுவதை நிறுத்திவிடவில்லை...என் கதைகள் ஒவ்வொன்றுமே ஒருவிதத்தில் சோதனை முயற்சிகளே..தினம் ஒன்றும் உருவாகலாம்..இரண்டாண்டுக்கு ஒன்றும் கூட எழுதலாம்..ஏன் என்ன அவசரம்?
புத்தகங்களை அறிமுகம் செய்வதில்.. உங்களது முன்னோடிகளாக யாரையாவது கருதுகிறீர்களா?குறிப்பாக மொழி பெயர்ப்புகள் கூட தீவிர அரசியல் நோக்கம் கொண்ட படைப்புகளாய் உள்ளனவே..
எல்லாவற்றுக்கும் முன்னோடிகள் இருக்க வேண்டுமா என்ன? பிற மொழி நூல்களை தமிழில் அறிமுகம் செய்வதில் பாரதியை விட பல படிகள் முன் சென்றார் சிங்காரவேலர்.புதுமைப்பித்தனும்,க.நா.சுவும் ஏன் சுஜாதாவும் கூட அதில் பெரும் பங்களிப்பு செய்தவர்களே.. மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை நான் இந்திரனைத்தான் சொல்வேன். ஐம்பதாண்டு களாக தமிழில் அற்புத ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க கவிதை,கதை என தொடர்ந்து பங்களிக்கும் அவர் தான், தனது தீரா நட்பின் மூலம் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர்.
'புத்தகம் பேசுது' இதழ் வேலைகளில் உங்களது வாசிப்பின் நேர்த்தியை பார்க்கிறோம். இதழை எப்படி திட்டமிடுகிறீர்கள்.?
'புத்தகம் பேசுது' இதழ் ஒரு கூட்டு முயற்சி. தோழர்கள் தமிழ்ச்செல்வன், நாகராஜன்,கமலாலயன் எஸ.வி.வேணுகோபால், கீரனு£ர் ஜாகீர் ராஜா என தீவிர நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்..வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு.. Reading is also a political Activity என நாங்கள் நம்புகிறோம். 
இப்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள், என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.?
ஜப்பானிய அறிவியலாளர் மிச்சியோ காக்கூ எழுதிய பிசிக்ஸ் ஆஃப் தி பியூச்சர் (Physics of the Future) நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
'டார்வின் ஸ்கூல்' என்று, சிறுவர்களுக்கான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

கிராமப்புற மாணவர் கல்வி மேம்பாடு என்ற இலக்கினை நோக்கி--- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு

கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.
எழுப்பப்பட்ட கேள்விகள்
8 - வது வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் படித்த போதிய பயிற்சியில்லாத ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்கும் போக்கு, பொதுவாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு பாடம் என்ற ரீதியில் கூட முறையாகக் கற்பிக்கப்படாத நிலை, இதனால் சரியான அடித்தளமின்றி வேலைவாய்ப்புச் சந்தையின் அனைத்து மட்டங்களிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் சிரமங்களும், தேவைப்படும் தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் நகர்ப்புற மாணவர்களுடனான போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பின்தங்கி நிற்கும் நிலை ஆகியவை பல கேள்விகளாக எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடை காணும் வகையில் கருத்தரங்கில் விவாதங்கள் வரவேற்கப்பட்டன.
கூட்டத்தில் துவக்கவுரையாற்றிய இலக்கு இளைஞர் மன்ற அமைப்பாளர் சுரேஷ் இலக்கு இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் இலக்கினையும் விளக்கிப் பேசினார். அந்த அமைப்பினை மகாகவி பாரதியின் கவிதைகளால் உந்தப்பட்டு தனது நண்பர்களையும் தோழர்களையும் ஒருமுகப்படுத்தி உருவாக்கிய அனுபவத்தை விளக்கியதோடு அந்த அமைப்பு கிராமப்புற மாணவர்களுக்காக ஆக்கபூர்வமான காரியங்கள் சிலவற்றையாவது செய்தாக வேண்டும் என்பதனை அதன் இலக்காகக் கைக்கொண்டதையும் விளக்கிப் பேசினார். அத்துடன் இந்தக் கருத்தரங்கிற்காக அணுகிய பல கல்வித் துறையோடு தொடர்புடையவர்களின் கூற்றுகளைச் சுவையுடன் அனைவருக்கும் பயன்தரத்தக்க விதத்தில் நினைவு கூர்ந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ஆதவன் தனிப்பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் திரு.ராஜேஷ் கல்வியின் மேன்மையினை அத்தனை தூரம் அறியாத மக்களின் குழந்தைகளுக்கு தன்னுடைய நிறுவனத்தைப் போன்ற ஒரு தனிப்பயிற்சி நிறுவனத்தின் மூலமாக அவர்களுடைய தேவையை முழுமையாகக் கணக்கில் கொண்டு கல்வி புகட்டுவது ஒரு அலாதியான அனுபவம். ஆசிரியப் பணியினை சிறப்புற ஆற்றிய ஒரு மனநிலையை இந்த அனுபவம் தனக்கு உணர்த்துகிறது என்று எடுத்துரைத்தார்.
முயற்சி செய்தால் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி எந்த இடத்திலும் நவீன பயிற்றுவிக்கும் முறைகளைக் கொண்டுவர முடியும் என்பதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை கிராமத்தில் கணிணி மற்றும் இணையதளத்தின் மூலமாகக் கல்வி கற்கும் வகையில் ஒரு எலக்ட்ரானிக் நூலகத்தை அங்குள்ளோர் நிறுவியிருப்பதை எடுத்துக்காட்டாக முன்வைத்து திரு.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார்.
கேள்வி, பதில் மூலமாகக் கருத்தரங்கம் மிகவும் உயிரோட்டமுள்ள முறையில் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் சிறப்புற நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள்:
யதார்த்தத்தில் இன்று கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் என்ற பிரிவு இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் கல்வி பயில வாய்ப்புள்ள வசதி படைத்த மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் மட்டுமே பயில வாய்ப்புள்ள வசதியில்லாத மாணவர்கள் என்ற நிலையே நிலவுகிறது.
இருவகைக் கல்வி
கிராமப்புறங்களிலிருந்தும் இன்று நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல கிராமப்புறங்களில் காலை வேலைகளில் பஸ்களும் வேன்களும் வந்து செல்வதை அனைத்து இடங்களிலும் நாம் பார்க்கிறோம். நாம் பெறும் கல்வியில் ஒரு பெரும் செங்குத்தான பிளவு தற்போது தோன்றி வளர்ந்து வருகிறது.
அதாவது வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகுமளவிற்கு மாணவர்களைத் தயார் செய்யும் ஒருகல்வி, இத்தனை சதவீதம் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று உலகிற்குக் கணக்குக் காட்டுவதற்காகக் கையொப்பம் இடுபவர்களைத் தயார் செய்வதற்கான மற்றொரு வகைக்கல்வி என்ற இருவகைக் கல்வி நிலைகொண்டு விட்டது. இதில் முதல்வகைக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலும் ஒருசில அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் கல்வி; கையெழுத்துப் போடுபவர்களை உருவாக்கும் ரகத்தைச் சேர்ந்த கல்வியே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி.
மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கற்பித்து அவர்களின் ஈடுபாட்டையும் கொண்டுவருவதாகக் கல்வி இருக்க வேண்டும். நமது வீட்டில் நம் பிள்ளைகளுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து அதற்குகந்த வகையில் ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதை வழங்கி அவர்களைப் பராமரிப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவை மற்றும் போதாமைகளை உணர்ந்து அதற்குகந்த வகையில் கற்பிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
மேலை நாடுகளில் பாடத் திட்டங்கள் குறைவாக இருந்தாலும் அதை முழுமையாகச் செயல் முறைப்படுத்தும் அளவிற்கு மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் தயார் செய்கிறார்கள். பிள்ளைகளின் போதாமைகளை வகுப்பறைக்கே வந்து மாணவருடன் மாணவராக அமர்ந்து தெரிந்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தப் படுகிறார்கள். அத்தகைய நடைமுறையின் மூலம் மாணவர்களின் போதாமைகள் ஆசிரியர் பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சரி செய்யப்படுகின்றன.
கல்வி என்பது ஒரு வாழ்க்கை; கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதைப்போல் மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த வகையில் ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களும் பல விசயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிப்பவர்களே. இத்தகைய சூழலில் நமது கல்வி நிலையங்கள் இருந்தால் நமது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லப் பயப்படமாட்டார்கள்.
பெற்றோரின் பொறுப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர்களான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாமும் பிரசித்தி பெற்ற தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களே. ஒரு காலத்தில் அனைத்து மக்களின் பயிற்றகமாகவும் அரசுப் பள்ளிகள் இருந்தன. அந்தநிலை இன்று சீரழிந்து கையொப்பம் இடுபவர்களைத் தயாரிப்பதற்காக என்ற அளவிற்கு அரசுப்பள்ளிகள் ஆகிவருகின்றன என்றால் அதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணமே.
அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருகிறதென்றால் நாம் விற்காததை விற்றாவது நமது பிள்ளைகளை நல்ல கல்வி கிடைப்பதாக நாம் நம்பும் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படிக்க அனுப்புகிறோம். நமது வரிப்பணத்தில் நிறுவப்பெற்றுப் பராமரிக்கப்படும் அரசுப்பள்ளிகள் உரிய வகையில் நல்ல கல்வி கற்பிக்கும் நிலையங்களாக இருப்பதைக் கண்காணிப்பது நமது கடமை என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போய்விடுகிறது. கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த நிறுவனமும் சீரழியவே செய்யும்.
உண்மையான ஜனநாயகம்
உண்மையான ஜனநாயகம் மக்களின் பங்கேற்பின் மூலம் பொது விசயங்களை ஆற்றுவதே. மேளாக்கள் போல் நடைபெறும் தேர்தல்களில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப் படுவோரின் மூலமாகச் செயல்படுவதல்ல. கிராமப்புறக் கல்வி மேம்பாட்டுக் குழுக்கள் போன்றவற்றில் பொதுமக்கள் மென்மேலும் பங்கேற்க வேண்டும். அதில் நிரந்தர உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்படும் வட்டாட்சியர் போன்றவர்கள் சம்பிரதாயத்திற்கு அதில் கலந்து கொள்பவர்களே தவிர கல்வி நிலையங்களின் மேம்பாட்டில் அக்கறை உடையவர்கள் அல்ல.
அக்குழுக்களில் கல்வியின் பால் அக்கறையுள்ள பொதுமக்களும் பெற்றோரும் மென்மேலும் பங்கேற்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஒருவகையான தனிநபர்வாதக் கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக இருக்கும் சூழ்நிலையில் இலக்கு அமைப்பினை நிறுவியவர்கள் தாங்கள் படித்த, வாழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுவது பெருமகிழ்ச்சிக்குரியது.
இதுபோன்ற இளைஞர்கள் அனைத்து ஊர்களிலும் அணிதிரட்டப்பட வேண்டும். அவர்களை அணிதிரட்டி இதுபோன்ற கருத்தரங்குகளை அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும். அவர்களைப் போன்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையினை ஊட்டமுடியும். அதன்மூலம் கல்வியின்பால் அக்கறையுள்ளவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப் படவேண்டும். அவர்களைக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்குழு ஆகியவற்றை நிரப்பி அவற்றைப் பயனுள்ள அமைப்புகளாக்க வேண்டும். குறைந்த பட்சம் கல்வித் துறையிலாவது மக்கள் பங்கேற்புடன் கூடிய உண்மையான ஜனநாயகத்தை நாம் நிலைநாட்ட முயல வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகையில் அவர்கள் படித்தவற்றை நினைவுகூர வைக்கும் வகையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு தேர்ச்சி பெற்ற பின்னரே முழுமையான ஆசிரியர்களாக நியமனம் பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்குச் சம்பளத்துடன் பயிற்சிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்பு நியமனம் பெறுவது அவர்களின் குற்றத்தினால் அல்ல. உரிய காலத்தில் வேலை வாய்ப்புகளை அரசு அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்காததால் தான்.
ஆசிரியர் அமைப்புகள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடாது கல்வி மேம்பாடு போன்ற விசயங்களுக்காகவும் தேவைப்பட்டால் அரசிற்கு எதிராகவும் கூடப் போராட வேண்டும். உரிய ஆதார வசதிகள் இல்லாமை, போதிய ஆசிரியர் நியமனமின்மை ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டும். தொடர்ச்சியாகத் தங்களது கற்பிக்கும் திறனும் பாடத்திட்ட மேம்பாடும் அதிகரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் உரிய தரமான பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பாடத்திட்டக் குறைப்பினைக் கோருதல், தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள் பெறுமளவிற்கு மட்டும் பாடம் நடத்துதல் போன்ற தற்போதைய ஆசிரியர் மத்தியில் நிலவும் அவலங்கள் போக்கப்படும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப் படாததே உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புச் சந்தையில் விலை போவதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். பாடப்புத்தகங்களில் பாடங்களை அடுத்து இடம் பெற்றுள்ள பயிற்சிகளை ஓரளவு சரிவரக் கற்பித்தால் கூட மாணவர்களின் ஆங்கில அறிவு பன்மடங்கு மேம்படும்.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினால் நாங்கள் கல்விக்குத் தேவைப்படும் அனைத்தையும் செய்யத்தானே செய்கிறோம் என்று அரசினர் கூறுவர். இன்றுள்ள ஆட்சியாளர் நேற்றைய ஆட்சியாளருடன் தங்களை ஒப்பிட்டு எத்தனை ஆயிரம் புது ஆசிரியர்கள் தங்களது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பட்டியலிடுவர். எத்தனை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமையுடன் தம்பட்டமடித்துச் சொல்வர். ஆனால் பள்ளிகளில் கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
வேலியே பயிரை மேய்வது போல் நல்ல முறையில் பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படுவதை உத்திரவாதப் படுத்துவதற்காக உள்ள மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகளே 8ம் வகுப்பு வரை தேர்வு இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் அளவிற்காவது அனைத்து மாணவர்களையும் தயார் செய்யுங்கள் என்று கூறாமல் பெயரளவிற்கு நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச மதிப்பெண் பெருமளவிற்குத் தேர்வு எழுதியுள்ளனர் என்று பொய்யாகக் காட்டுவதற்காக அந்தத் தேர்வுத்தாளில் நீங்களாகவேணும் ஒரு வரைபடத்தை பூர்த்தி செய்து கட்டுங்கள் என்பது போன்ற முறைகேடுகளை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களாக உள்ளனர்.
அவ்வாறு அக்கறையும் சிரத்தையுமின்றிப் பல ஆசிரியர்களும் அவர்களைக் கண்காணிக்கும் கல்வி அதிகாரிகளும் இருப்பதற்குக் காரணம் அரசிற்கு கல்வியும் அறிவும் மக்களுக்குச் சென்று சேர்வதில் அக்கறை ஏதுமில்லை என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதே. நாம் ஏற்கனவே வலியுறுத்திய விதத்தில் கல்வித் துறையிலேனும் மக்கள் பங்கேற்புடனான உண்மையான ஜனநாயகம் செயல்படுத்தப்பட்டுப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கிராமப்புறக் கல்விக் குழுவினரும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக்கப்பட்டால் மட்டுமே இன்றுள்ள நிலை மாறும்; அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்--இ.இ.இராபர்ட் சந்திரகுமார் 


“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்” என்றொரு சட்டம் கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசால் இயற்றப்பட்டது. பின்னர் இச்சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன போதிலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்றளவிலும் இச்சட்டம் தொடர்பாக மாநில விதிகள் ஏதும் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு இந்தியா. ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பிரிவினருக்கு இன்றளவும் கல்வி சென்றடையவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் மேற்கண்ட சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும், கல்வி அளிப்பதன் வாயிலான சமூக நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் சட்டம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் இச்சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து பார்க்க வேண்டியது அடிப்படையான தேவையாகும்.
சிறப்பம்சங்கள்:
 ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும். தற்போது நடுநிலைப்பள்ளி வரை என வரையறுத்துள்ளது. பதினாறு வயது வரையிலான குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்ற நோக்கில் உயர்நிலைப்பள்ளி வரையிலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மத்திய அரசுக் கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின பிரிவினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியுள்ளோர், சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், நிலப்பரப்பு, மொழி, பாலினம், மாற்றுத்திறனாளி போன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆண்டு வருமானத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் கல்வி வழங்குதல் மறுக்கப்படக்கூடாது. முதல் வகுப்பில் இவர்களது எண்ணிக்கை 25 விழுக்காட்டிற்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு குழந்தையும் தொடக்கக்கல்வியைத் தொடர்ந்து படித்து முடிப்பதை தடுக்கக்கூடிய வகையில் எந்தவிதமான கட்டணங்கள் செலுத்தவோ அல்லது செலவுகள் செய்யவோ வேண்டியதில்லை.
 ஆறு வயதுக்கும் மேற்பட்ட ஒரு குழந்தை புதிதாக பள்ளியில் சேரும் பொழுது, அந்த குழந்தையின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
 விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள் தவிர இதர எந்த பள்ளியிலும், அக்குழந்தை அந்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி மாறும்போது மாற்றுச்சான்றிதழ் வழங்கிடுவதில் தாமதப்படுத்தும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர்கள், துறை வாரியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
 பள்ளி அருகாமையில் இல்லாத பொழுது இச்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அரசாங்கங்கள் பள்ளியை நிறுவ வேண்டும். அரசாங்கமானது குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு குழந்தையும், பள்ளியில் சேர்க்கப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும், தொடக்கக்கல்வியினை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதிபடுத்திடவும், கண்காணித்திடவும் வேண்டும். அதே போல நிறம், இனம், ஜாதி, பால், பிறப்பிடம் என்பது போன்றவைகள் தொடர்பான எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருப்பதையும், இது போன்ற காரணங்களால் குழந்தைகள் கல்வி பெறுவது தடுக்கப்படாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
 எந்த பள்ளியும், அப்பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து நன்கொடை, பள்ளியால் அறிவிக்கப்பட்ட கட்டணம் தவிர்த்த இதர நிதி கேட்டல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட தலைக்கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. அது மீறப்படுவது உறுதி செய்யப்பட்டால், வசூலிக்கப்பட்டது போது  பத்து மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
 நீதிமன்றங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளபடி, குழந்தைகள் சேர்க்கப்படுவதற்காக, அவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ, பாதுகாவலர்களுக்கோ தகுதித் தேர்வு எதுவும் நடத்தக்கூடாது.  அதனை முதல் முறை மீறும் போது 5,000 ரூபாயும் தொடர்ந்து மீறப்படும்போது ஒவ்வொரு முறையும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
 தொடக்கக்கல்வி முடியும் வரையிலும் எந்தவொரு குழந்தையும் ஓராண்டுக்கு மேல் ஒரே வகுப்பில் வைத்திருக்கக்கூடாது. பள்ளியிலிருந்து வெளியேற்றவும் கூடாது. அதேபோல எந்தவித தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமில்லை.
 வகுப்பறை வன்முறைகள் என்று பரவலாக அறியப்படும் உடல்ரீதியான, மன ரீதியான துன்புறுத்தலுக்கு எந்தவொரு குழந்தையும் பள்ளி நிர்வாகத்தால் ஆட்படுத்தப்படக்கூடாது. அது மீறப்படும் பட்சத்தில் துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
 ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளியில் பணிபுரிபவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களை கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் 3/4 ¾ பங்கு என்ற விகிதத்தில் பெற்றோர்கள் இடம் பெறும் வகையில் இருக்க வேண்டும். விகிதாச்சார முறைப்படி நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்ப பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.
 மக்கள்தொகை கணக்கெடுப்பு, இயற்கை சீற்ற பணிகள், உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் அல்லாத வேறு கல்வி சாராத எந்த நோக்கத்திற்காகவும் எந்தவொரு ஆசிரியரும் வேலைக்கு அமர்த்தப்பட‌க்கூடாது. எந்தவொரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
 பயிற்சி மொழி நடைமுறைக்கு சாத்தியமுள்ள வரையில் குழந்தையின் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையமானது, இச்சட்டம் தொடர்பாக எழும் மேல்முறையீட்டு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்:-
• உலகமயமாக்கல் சூழலில் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு வரும் வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தொடர்பாக விதிகள் ஏதுமில்லை.
• இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறும் அல்லது மீறும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
• “தலைக்கட்டணம்” என்பது அரசு நிர்ணயித்த கட்டணங்களுக்கு கூடுதலானது என்பதற்குப் பதிலாக, பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு கூடுதலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும்.
• தனியார் பள்ளியில் பயின்றாலும், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
• கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்படும் பள்ளிகளுக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பாகுபடுத்தும் கல்வி முறையாகும்.
• பயிற்று மொழி தாய்மொழியிலேயே என்று உறுதியாக இந்த சட்டம் ஏற்கவில்லை.
• தேசிய கல்விக்கொள்கை 1986 மற்றும் 1992க்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இயற்றப்படவில்லை.
• நூலகம் குறித்து பேசும் இச்சட்டத்தில் நூலகர் என்று ஒருவர் பணி நியமனம் குறித்து பேசவில்லை.         
இப்படியாக, விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களை   உள்ளடக்கி இயற்றப்பட்டு தற்போது ஆங்காங்கே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பல்வேறு வகையான பள்ளி கல்வி முறைகளை அகற்றி விட்டு ஒரே மாதிரியான பொதுக்கல்வி திட்டத்தை அரசாங்கங்கள் உருவாக்கிவிடுவது தான் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையான மற்றும் நிலையான தீர்வுமாகும்.
ஏப்ரல் முதலாம் நாளை முட்டாள்கள் தினமாக பன்னெடுங்காலமாக கருதப்பட்டு வரும் சூழலில், மேற்கூறிய அம்சங்களுடன் அதே ஏப்ரல் முதல் நாளிலிருந்து இச்சட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்துள்ளதில் உள் நோக்கம் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தை எதிர்கொள்ளப்போவது ஆட்சியாளர்கள் தான். மக்களுக்காகத் தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பது சட்ட விதி.
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com)

கல்வி சிறப்பு கருத்தரங்கம் ---இளைஞர் முழக்கம் செய்தியாளர் 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13வது தமிழ்நாடு மாநில மாநாடு செப். 2427 ஆகிய தேதிகளில் பள்ளிப் பாளையம் வேலுச்சாமி நினைவரங்கத்தில் (கல்பனா திருமண மண்டபம்கோவை) நடைபெற்றது. இம் மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரனும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கலந்து கொண்டு பேசினர்.
சமச்சீர் கல்வி எதிர்பார்ப்பும் அமலாக்கமும் என்ற தலைப்பில் முனைவர் ச.முத்துகுமரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கட்டாயக்கல்வி உரிமை சட்டம்2009 அனைவருக்கு மான கல்வியை வலியுறுத்துகிறது. அனைவருக்குமான கல்வி என்றால், அது தரமானதாக இருக்க வேண்டும். 1950ஆம் ஆண்டில் இருந்து இது குறித்து பேசப்பட்டாலும், தமிழ் நாட்டில் தற்போதுதான் சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்கு வந்துள்ளது. இதுவும் கூட நீண்ட நெடிய போராட்டத் திற்கு பிறகே வந்துள்ளது. தரமான கல்வியை வழங்க போதிய ஆசிரியர்கள் உள்ளார்களா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தரமாக வழங்க எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழு மிக முக் கியமான 109 பரிந்துரைகளை வழங்கியது. இதில் முதன் மையான 15 பரிந்துரைகள் வரை குறிப்பிடத்தக்கது.
1.பாடநுல்கள், ஆசிரியர்கள், அடிப்படை கட்ட மைப்புகள் குறித்தது.
2. கல்வியின் பயன்கள் அறிவு வளர்ச்சி சமூக பயன் பாடு வளர்ச்சி சார்ந்தது பொருள் ஈட்டுவது குறித்தது.
3. மழலை கல்வி முதல் 5ம் வகுப்பு வரை செலவு களை அரசே ஏற்பது.
4. தாய்மொழி வழி கல்வியை ( தமிழ்மொழி ) உறுதி செய்வது. குறிப்பாக, அதற்கான பயிற்சியை உறுதிப்படுத்துவது.
5. 10 சதம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது.
6. பள்ளியை நடத்துபவர்களே ஆய்வு செய்பவர் களாக உள்ளனர். இதனை நிர்வாகம், ஆய்வு என இரண் டாக பிரித்து அமைக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் குறித்த ஆய்வுகள் முழுமையானதாக இருக்கும்.
7. மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தை 30:1 எனவும், 30 பள்ளிக்கு ஒரு ஆய்வாளர் எனவும் இருக்க வேண்டும்.
8. கல்வித்துறை கையேடு வெளியிட வேண்டும்.
9. கிராமக்கல்விக்குழு
என்பன உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. தற்போதைய சூழலில் பள்ளியின் அடிப்படை வசதிகள் அடிப்படை கட்டமைப்புகள் மேம் படுத்த வேண்டும். ஜூலை 8ம் தேதி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளி வந்தது. அதன்தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் இசை, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி தரத்தை மேம்படுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
சென்னையில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் தரத்தை ஒட்டு மொத்தமாக எப்படி மேம்படுத்துவது என யோசிக்க வேண் டியுள்ளது. இந்நிலையில் மாதிரி பள்ளிகள் தொடங்கப் படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வித்தைதானே தவிர வேறில்லை.
மாணவர்கள் வரவில்லை அதனால் மாநகராட்சி பள்ளி மூடப்படுகிறது என்ற செய்தியின் பின்புலம் என்ன?
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்தியாவில் 12 லட்சம் ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள பத்திரிகைகள் அதே பக்கத் தில் 600 பள்ளிகள் மூடப்பட்டதாகவும் வெளியிட்டுள் ளன. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 3.50 லட்சம் ஆசிரி யர்கள் பதிந்து வேலைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
2010 செப் 4ம் தேதி ஆசிரியர் நியமனத்திற்கான பணி யாணையை ஒருவர் பெற்றுக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்றால் அங்கு அப்படியரு பள்ளியே இல்லை. தமி ழகத்தில் இப்படித்தான் ஆசிரியர் பணி நியமனம் உள்ளது. நல்ல சட்டங்களை கொண்டு வருவதோடு அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.
குழந்தைகளுக்கு அவர்களின் திறமை அடிப்படையில் பயிற்சி கொடுக்க வேண்டும்: கொடுக்கப்படுகிற பயிற்சி அவர் களின் வளர்ச்சிக்கான களமாக இருக்க வேண்டும். அறி வியல், தொழில்நுட்பம், மொழி, கணிதம், சமூக அறிவி யில் பாடங்களை தவிர வேறு ஒன்றும் இல்லையா? கலை, உடற்பயிற்சி, சுகாதாரம், அமைதி, சுற்றுச்சூழல், ஒழுக்கம், வாழ்க்கை, தொழிநுட்ப கல்வி என கற்று கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு தனிப் பட்ட கவனம் தேவைப்படும். அப்படிப் பட்ட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். கல்விச் சூழலை மாற்ற கல்வி நிலையங்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு:
1950ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. அரசியல் சாசனத்தின் 21(ஏ) பிரிவில் கல்வி பெறும் உரிமை குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆட்சிக் காலத்தில் 86 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூல்ம் 6முதல் 14 வயது வரை இலவச கல்வி என்று கொண்டு வந்தனர். இதன் மூலம் மழலையர் கல்வியை கேள்விக் குள்ளாக்கினார்கள். 1 முதல் 18 வயது வரை குழந்தை கள் என வரையறை செய்யப்படுகிறது. 14 வயது வரை மட்டுமே இலவச கல்வி என்றால் குழந்தைகல்வி உரிமை என்பது என்ன ஆவது. இன்று இந்தியாவில் 10 சதம் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். 90 சதம் குழந்தைகள் மேற்கல்விக்கு வருவதில்லை, அது குறித்த ஆய்வுகள் தேவை. ஒடுக்கப்பட்ட மக்கள் தான் உழைப்பை செலுத்தும் மக்களாக உள்ளனர். இன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சத் தான ஊட்ட சத்துக்கள் மறுக்கப்படுகிறது. மழலையர் களுக்கு தரமான ஆரம்பகல்வியும் மறுக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சி என்பது அதன் ஆரம்ப காலத்தில் சத்தான உணவும், தரமான கல்விச் சூழலும், கல்வி வழங்குவதுமாகும். ஆனால் இவற்றை திட்டமிட்டு மறுத்துவிட்டு பிரதமரும், கல்வி அமைச்சரும் புலம்புகின்றனர். சமமும் சீரும் இல்லாத சட்டத்திற்கு இன்று சமச்சீர் கல்வி சட்டம் என அழைக்கப்படுகிறது. கல்வி உரிமை இல்லை என்று சொல்ல ஒரு கல்வி உரிமைச் சட்டம். அரசியல் சட்டத்தின் முகவுரைக்கு எதிராக 86 வது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் ( பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தை யுனிசெப் வரவேற்கிறது. பல நாடுகளில் இதை வரவேற்பது அந்தந்த நாட்டுகளை பெருக்கி கொள்ளதான். மில்லேனியம் ஆண்டில் குழந்தைக்கான வரையறை 18 வயது வரை என அமெ ரிக்காவின் முனமொழிவோடு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 வரையான கல்வி ஆரம்ப கல்வி என்றும், 6 முதல் 8 வரை நடுநிலைக் கல்வி இரண்டாவது நிலைக் கல்வி என அழைக்கப்படு கிறது. இதில் பிஜேபி அரசு செய்தது 1 முதல் 8 வரைக் கான கல்விக்கே அரசு பொறுப்பு என அறிவித்தது. மழ லையர் கல்வியை கண்டுகொள்ளவில்லை. மேல்நிலை கல்வியையும் கண்டு கொள்ளவில்லை.
மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் கல்வி கற்பதை வளர்ந்த ஏகாதிபத்திய, மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை, மூன்றாம் உலக நாடுகளில் கல்வி மறுக்கப்பட்டால்தான் அடிமைகள் கிடைப்பார்கள்.
கல்வி உரிமைச்சட்டம் சொல்வது என்னவென்றால். 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்களும், 200 மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும்இருப்பார்கள். பாடவாரியாக ஆசிரியர் கிடையாது. இசை, ஒவியம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். பொது வாக இச்சட்டம் குறித்த பார்வையில் காங்கிரஸ் பிஜேபி இரண்டு கட்சிகளின் முகம் தான் வேறு, சிந்தனை ஒன்றே ஆகும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண் டர்சனுக்கு வழக்காடியவர்தான் சிதம்பரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்காடியவர் கபில்சிபல், உலக வங்கி மேசையில் அமர்ந்து பணி செய்தவர்தான் பிரதமர் மன்மோகன்சிங் இவர்களால் எப்படி குழந்தைகளுக்கான முழுமையான சட்டம் வரும்?
இச்சட்டத்தில் பெற்றோர்கள் நிர்வாகத்தினை நிர்வாகிக்க நிர்வாகக்குழு அமைக்கவேண்டும் அதில் 70 சதம் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். அதில் 50 சதம் பெண்கள் இருக்க வேண்டும. 25 சதம் ஏழை குழந்தை களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணங்கள் கேட்கக் கூடாது. இருந்த போதும் இது போன்ற சட்டங்கள் வருவதற்கான போராட்டத்தை நடத்தி யதில் மாணவர், வாலிபர் சங்கங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அரசின் பொறுப்பில் கல்வித்துறை இருந்தால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். கிராமத்தில் வேலை செய்ய மருத்துவர் இன்று இல்லை. காரணம் தாய் மொழியில் மருத்துவம் படிக்க ஏற்பாடு இல்லை. இத னால் பெரும் பகுதி மருத்துவர்கள் நகர்புறம் சார்ந்தே பணியாற்றும் நிலை உள்ளது. எனவே தாய்மொழிகல்வி, அருகமைப்பள்ளி, அரசுப்பள்ளியாகவே இருப்பது நல்லது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது நோய் தடுப்பு மையங்களை மூடினார். அந்த மைங்களை திறப்பதற்கான போராட் டத்தை நடத்தி திறக்க வைத்த அமைப்பு டிஒய்எப்ஐ. அதுபோல் இந்த கல்வி உரிமைச்சட்டத்தில் முறைகேடு இல்லாமல் முறையாக அமலாகவும், கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிரான சட்டத்தை முறையாக நடை முறைப்படுத்தவும் உரிய போராட்டங்களை தொடர்ந்து டிஒய்எப்ஐ , எஸ்எப்ஐ அமைப்புகள் நடத்திட வேண்டும் என கூறினார்.

இந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...பேரா.கிருஷ்ணகுமார் 

குசும் நாயர் எழுதி 1961ம் ஆண்டில் வெளியான வெளியான 'புழுதியில் மலர்ந்த மலர்கள்' என்ற புத்தகம் இந்தியாவின் முன்னேற்றத்தை கணிப்பதற்கான ஓர் அளவுகோலாக அமைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அம்மக்களுடன் உரையாடியதன் அடிப்படையில் இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். நவீன முறையில் உற்பத்தி நடைபெறுவதால் மட்டும் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதக்கூடாது என்பதையும், மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படுவதே உண்மையான வளர்ச்சிக்கான காரணியாக இருக்க முடியும் என்பதையும் இந்தப்புத்தகத்தில் முடிவாக அவர் கூறியிருந்தார்.

பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பன்முகத்தன்மையை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.

சமூகமாற்றத்துக்கான முக்கியமான கருவியாக கல்வி பயன்படும் என அவர் நம்பினார். அவருடைய இந்த நம்பிக்கை மீது அறுபதுகளில் வாழ்ந்த பல சமூகவிஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு உடன்பாடு இருந்தது.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க கல்வியில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சாதி மற்றும் பாலின வேறுபாடுகளின் அடிப்படைக் கட்டுமானம் உடல் உழைப்பைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் கட்டுமானங்கள் கல்வி மூலம் ஓரளவு தகர்க்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை. சாதி வேறுபாட்டைக் காட்டிலும் பாலின வேறுபாட்டில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

காலனிய ஆட்சியில் இருந்ததற்கு மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுயசார்புத்தன்மையுடனும், பயமில்லாமலும் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கல்விபெற்ற பெண்களுக்கு சமூகஅங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. பெண்களின் கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் வலுவாக அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றால், பெண்கள் கல்வி மூலம் ஒரு புதிய உலகை தரிசிக்கும் போதிலும், அதற்குத் தகுந்தாற்போல் ஆண்கள் சமூக ரீதியாக தங்களை தயார்செய்து கொள்ளாததுதான். பெண்களிடம் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் அப்படியே இருப்பதால், பெண்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு வன்முறைகளில் இருந்து விடுதலை கிடைக்காத நிலையே தொடர்கிறது. கல்வித் திட்டத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு எந்த இடமும் இல்லாதது இந்நிலைக்கு முக்கிய காரணம்.

சாதிப் பிரச்சினையை பொருத்தவரை, சமூகத்தில் சாதி அமைப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களை மாற்றுவது குறித்து கல்வித் திட்டகூறுகள் அமையவில்லை. எழுத்தறிவு பெறுதல், தேர்வில் தேர்ச்சி பெறுதல் போன்றவற்றின் மூலம் சாதியின் தளைகள் தானாகவே, மாயாஜாலமாக பலவீனமாகிவிடும் என்ற யூகமும் உள்ளது.

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் வராமல் இருப்பதற்கு, ஆசிரியர் பயிற்சியை உதாசீனப்படுத்தும் போக்கே முக்கிய காரணம். குழந்தைகளின் பள்ளி சார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் மூலம், ஒரு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது. ஆனால், அக்குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய இயக்கங்களில் ஆசிரியர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆசிரியர்களை ஆழமான சமூக பிரக்ஞை கொண்டவர்களாக மாற்றுவதற்கு வழிசெய்யத் தவறிவிட்டோம்.

1983ம் ஆண்டில் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சட்டோபாத்யாய கமிஷன், ''ஒரு சராசரி ஆசிரியரின் பங்கு மிகக் குறுகியதாகவும், தங்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக மட்டுமே உள்ளது,'' என்று கூறியிருந்தது. ஆசிரியர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்று அந்த கமிஷனின் அறிக்கை வலியுறுத்தியது. ஆனால் அப்போதிருந்த நிலைமையைவிட 90களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது. வேறு எந்தத் துறையிலும் பணி கிடைக்காத நிலையில், கடைசியாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போக்கு இன்று நிலவுகிறது.

அரசியல் சாசனத்தில் ஆரம்பக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவிப்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் போனதன் விளைவாக நாம் ஒரு பெரும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம். இந்தத் தவறு சரி செய்யப்பட்டது. ஆனால், தொடக்கக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவித்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டதே அன்றி, அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை.

பெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் சரியாக இல்லை. மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை அந்தந்த மாநிலங்களே எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகுவதும், மாநிலங்களுக்கு போதிய நிதி அளிக்காததும் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். கல்வி தொடர்பாக பொறுப்பேற்றுக் கொள்வதில், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே மத்திய அரசு மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் கல்வி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது இருக்கும் ஒரே அமைப்பு 'மத்திய கல்வி ஆலோசனை மையம்' மட்டுமே. இந்த அமைப்பிற்கும் முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை.

''விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், அடிப்படைத் தேவையான தொடக்கக் கல்விக்கு மிகக் குறைவான தொகையை ஒதுக்குவது ஏன்?'' என்று சமீபத்தில் மகசேசே விருது பெற்ற இதழாளர் பி. சாய்நாத் தனது கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி குறித்த எந்தச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒரு விசேஷமான பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருத வேண்டும். ஏன் என்றால், அவர்களது உரிமையை அவர்களாலேயே பாதுகாத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளை அரசு அன்பாக அரவணைத்து, அவர்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக்குறைவு, எழுத்தறிவின்மை, குழந்தைகளை நிந்திப்பது, ஹீமோகுளோபின் அளவு குறைவது, அடிக்கடி ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் (குறிப்பாக பெண் குழந்தைகளிடம்) போன்றவற்றை சரி செய்யாவிட்டால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மனித வளத்தை இழந்துவிடுவோம்.

குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி. இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இது எளிதான வேலையில்லை என்றாலும், நம்மிடம் உள்ள மிகப் பெரிய மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகளை மையப்படுத்தும் வகையில் அரசு நிர்வாக செயல்பாட்டு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வித் திட்டங்கள் இந்தத் திசையில் அமைய வேண்டும்.

(
பேராசிரியர் கிருஷ்ணகுமார் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குநர்)
நன்றி: இந்து நாளிதழ்

-
தமிழில்: ஹரீஷ்

உயர்கல்வி வளர்ந்துள்ளதா?----இல.சண்முகசுந்தரம் 


தமிழகம், கல்வி, வேலை வாய்ப்பு வளர்ச்சியில் பெரும் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுவது உண்மையா?
என்ன கேள்வி இது என்று சிலருக்கு தோன்றலாம். சந்தேகமில்லை வளர்ச்சியில்லை என்று சத்தியம் கூட சிலர் செய்யலாம். ஆனால் ஒரு கேள்வி. வளர்ச்சி என்பது என்ன? தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கமும், தனியார் தொழிற்சாலைகள் மூலமான வேலை வாய்ப்பு அதிகரிப்பும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிரந்தரமான பங்களிப்பு செய்யுமா எனவும், இதை வளர்ச்சி என்று கூறுவது பொருத்தம்தானா என்றும், இன்றைய சூழ்நிலையில் விவாதம் நடத்தப்படுவது அவசியமாகிறது.
பொருளாதார தேக்கம் என்ற ஒற்றை வார்த்தையால் அமெரிக்கா தொடங்கி பல நாடுகள், வேலையிழப்பு முதல் சமூக குற்றங்கள் அதிகரிப்பு வரை சந்தித்த பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆண்டுகள் பல ஆனாலும் இன்று வரை தீராத அப்பிரச்னைகளால் பெருமளவிற்கு பாதிக்கப்படாத நாடாக இந்தியா இருந்ததற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்கள் தான் என அனைவரும் பெருமையாக பேசினர். ஆனால் மீண்டும், மீண்டும் இங்கு நடப்பதென்ன?
பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை எது துவங்க வேண்டுமானாலும் அரசு இன்று நம்பியிருப்பது தனியார் மூலதனத்தை மட்டுமே. தொழில் வளர்ச்சி மூலமான வேலை வாய்ப்புக்கும் தனியார் மூலதனத்தை சார்ந்த நிலைதான். இதனால், கல்விநிலையத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைக்கேற்ற மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிப்போனதை யாரும் மறுக்க இயலாது. ஆனால், இதைத்தான் வளர்ச்சி என அரசும், பல ஊடகங்களும் மாறி மாறி கூறி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக இந்த வளர்ச்சி உதவியுள்ளதா என பரிசீலிக்க நீண்ட சிந்தனை எதுவும் தேவையில்லை. கூடிய விரைவில் நாட்டில் ஒரு பெரும் அசாதாரண சூழலை தற்போதைய கல்வி முறை உருவாக்கும் என ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
பல கோடி சொத்து முழுவதையும் கொடுத்து ஒரு அறக்கட்டளை மூலம் கல்விக்காக செலவிடும் உயர்ந்த நோக்கத்தை உருவாக்கிய பச்சையப்பர் முதலானோர் கல்விநிலையங்களை துவக்கியபோது அதில் வியாபார நோக்கம் துளியும் இருந்ததில்லை. ஆனால் காலப்போக்கில் அரசு தன் பொறுப்பில் இருந்த கல்வியை தனியாருக்கு கொடுக்க துவங்கியபோது வணிக நோக்கம் எட்டிப்பார்க்கவும் துவங்கிவிட்டது. கல்வி ஒரு உரிமையாகவும், அரசின் கடமையாகவும் இருந்ததுமாறி பின்னர் கல்வியை ஒரு சேவைத்துறை என்று வர்ணித்தவர்கள், இன்று அதை ஒரு கார்பரேட் நிறுவனம் அளவுக்கு உயர்த்திவிட்டதால், கல்வி ஒரு பெரும் லாபமுள்ள சேவைத்துறை என புது விளக்கம் கொடுக்கத்துவங்கிவிட்டனர். விளைவு தங்கு தடையற்ற தாராள வர்த்தகத் துறையாக பள்ளிக்கல்வி கூட இன்று மாற்றப்பட்டுள்ளது. கல்வியை கிராமங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கும் பரவலாக்கிட மேற்கண்ட வர்த்தக மயமாக்கல் உதவவில்லை. மாறாக, கல்வி ஒரு சரக்கு என்ற ஒப்புதலை அனைத்து மக்களிடமும் உருவாக்கியுள்ளது. தமிழகத்திலும், இந்தியாவிலும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவையை விட அதிகமாக உருவாகிவிட்டது என்பது இதன் பொருளல்ல. கல்லூரிகள் ஒரு புறம் குவியும் நிலையும், மறுபுறமோ லாபம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் மட்டுமே தனியார் மூலம் துவக்கப்படுகின்றன. கிராம மக்களுக்கு பள்ளிக்கல்வி தருவது, கலை-அறிவியல் கல்லூரிகளை பரவலாக துவக்குவது, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதை ஒரு போதும் இலக்காக இவர்கள் கொண்டதில்லை.
முதலில், தனியார் பள்ளிகளை மட்டும் துவக்கியவர்கள், பின்னர் பாலிடெக்னிக், கலை- அறிவியல் கல்லூரிகளை துவக்கினர். ஆனால், இன்று அனைவரும் துவங்குவது நான்கு வகையான கல்விநிலையங்களை மட்டுமே.
(1) ஆங்கில வழிப்பள்ளிகள்
(2) பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்லூரிகள்.
(3) ஆசிரியர் பயிற்சி, மேலாண்மை போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகள்.
(4)நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள்.
உலகத்திலேயே மூன்றாவது உயர்கல்வி கட்டமைப்பு கொண்ட நாடு இந்தியா தான். சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இரண்டாவதாக உள்ள இந்தியா, உயர்கல்வியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. இவ்வளவு பெரிய பரந்த உயர்கல்வி அமைப்பாக இருந்தாலும், தரம் என்ற அம்சத்தில் அணுகினால், உலகில் உள்ள சிறந்த கல்விநிலையங்கள் பட்டியலில், இந்தியாவில் உள்ள ஒரே ஒரு ஐ.ஐ.டி. மட்டுமே இடம் பெறுகிறது. இந்திய மாணவர்கள் வருடந்தோறும் சுமார் இருபத்தெட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வெளிநாடுகளில் கல்வி பெறுகின்றனர்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதலில் நம் மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்த நிலையிலிருந்து இன்று கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இப்போது கூட அரசு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி என்றுதான் பேசுகிறதே ஒழிய இந்திய உயர்கல்வியின் தரம் குறித்து மாற்றம் கொள்ள விரும்பவில்லை. உலக அளவில் சிறந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இதனால் இந்தியாவிற்கு வரப்போவதில்லை. மாறாக, டூபாக்கூர் பல்கலைக்கழகங்கள் வந்து இங்கு கடை விரிக்கப்போகின்றன. அவர்களோடு உள்ளூர் வியாபாரிகளும் கை கோர்த்துக்கொண்டு டை அப் செய்வது தவிர வேறெந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனியார் கல்வி நிலையங்களின் பெருக்கத்துக்கு அரசு அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறது.
நகரம் முதல் கிராமம் வரையான அனைத்து மக்கள் திரளுக்கும் ஒரே விதமான கல்வி என்றோ அல்லது கல்வியை அனைத்து கிராம மக்களுக்கும் பரவலாக்குவது என்ற நோக்கம் இல்லாமலேதான் இன்று தனியார் கல்வி நிலையங்களுக்கு தாறுமாறான அனுமதி அளிக்கப்படுகிறது. நகர்மயமாக்கல் என்ற உலகமயமாக்கலின் நோக்கமே கல்வித் துறை மூலம் பரவலாக்கப்படுகிறது. கிராமங்களில் நல்ல கல்வி கிடைக்காது என்ற கருத்து நிலை நாட்டப்பட்டுள்ளது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவி செய்யும்?
இலாபம் மட்டுமே நோக்கம் என்ற தாரக மந்திரத்தோடு துவக்கப்படும் தனியார் கல்விநிலையங்கள் தமிழ் மொழியால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற நிலையை பள்ளி முதல் கல்லூரி வரை உருவாக்கி வைத்துள்ளதால் கல்வி முதலாளிகளின் கல்லா நிரம்பியுள்ளது. ஆனால், தமிழ் மொழி? தமிழில் பேசினால் தண்டனை மற்றும் அபராதம் என பள்ளி விதிகள் பெருகியுள்ளன. பெற்றோர்களும் கூடுதல் கட்டணம் முதல் அபராதம் வரை அனைத்தையும் செலுத்தி ஆங்கிலம் பேசுமா குழந்தை என வாய் பார்த்து காத்துக்கிடக்கின்றனர். பொறியியல், மருத்துவம், கணினித்துறை வேலை வாய்ப்புகள் என கனவோடு எல்.கே.ஜி.யில் துவங்கும் பெற்றோர்களின் செலவும், அலைச்சலும் எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது.?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 285 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள் 2011ல் 488 ஆக உயர்ந்துள்ளதை வளர்ச்சி என கூறுகிறது அரசு. ஆனால் உண்மையென்ன? கடந்த பல வருடங்களாகவே சுமார் 16,000 முதல் 25,000 வரையான இடங்கள் பொறியியல் படிப்பில் ஒவ்வோரு ஆண்டும் காலியாக இருக்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வோரு ஆண்டும் தமிழக அரசு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இதனால் சில புதிய பிரச்னைகள் உருவாகியுள்ளன. அதாவது பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் மிக அதிகமாகும். விளைவு குறைந்த பட்ச மதிப்பெண் வாங்கிய ஜஸ்ட் பாஸ் மாணவர்களையும் சேர்க்காமல் கல்லூரிகள் தங்களது பாதி இடங்களைக்கூட நிரப்பமுடியாது, இதனால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் பொறியியல் படிப்பில் தேங்கி நிற்கும் நிலை அதிகமாகும். இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் தரம் குறைந்து விடுவதாக பேசும் இவர்கள், காசுக்கு சீட்டு என்று இலாபம் வந்தால் மட்டும் இவர்களின் தரம் எங்குபோகிறது என்று புரியவில்லை.
அரசுக் கல்வி ஒரு புறம், மறுபுறமோ காசுக்கேற்ற கல்வி என்ற இந்த இரட்டை சூழ்நிலைகளால் வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இல்லாமல் பணம் படைத்தவருக்கு மட்டுமே பெரும்பாலான வாய்ப்புகள் என்று மாறிப்போயுள்ளன. காசுக்கேற்ற தரம் என்பதே தனியார் கல்வி நிலையங்களின் தரம் குறித்த கோட்பாடு என்பதால் அரசு விதிகளும், தேவைக்கேற்ற, காலத்திற்கேற்ற தரமும் இங்கு பொய்யாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள தரம் குறித்து அரசு எந்த வகையிலும் தலையிடாத நிலையே தற்போது உள்ளதால் பெரும்பாலும் பள்ளிகள் முதல் நிகர்நிலை பல்கலைக் கழகம் வரை குறைந்த பட்ச தரம் கூட இல்லாத வகையில்தான் செயல்படுகின்றன. பல--------- நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தரமற்றதாக உள்ளன என கண்டறிந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்க முடியவில்லை. வரம் கொடுத்த சிவன் தலையில் கை வைத்து அழிக்க நினைத்த அரக்கன் கதையைப் போன்றுதான் தனியார் கல்விநிலையங்களும். அனுமதி கொடுத்த அரசால் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ, ஏன் கேள்வி கேட்கவோ கூட இயலவில்லை.இதை வளர்ச்சி என ஆட்சியாளர்கள் கூறலாம். ஆனால் எப்படி ஏற்றுக்கொள்ள?
உயர்கல்விக்கு வங்கிக் கடன் என்ற அரசின் திட்டமும் தனியார் முதலாளிகளின் நலனுக்காகத்தான். கல்வி தர வேண்டிய அரசு அதை முதலாளிகளிடம் கொடுக்கிறது. அங்கு என்ன விலை என அரசு தலையிடாததால் தாறுமாறான விலையுயர்வு(?). பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தும் ஏற்கனவே, பள்ளிக்கல்வியில் பணம் செலவழித்தும், சராசரியாக படிக்கும் மாணவர்கள் மிக அதிகம் செலவழித்து பொறியியல் கல்வியில் சேரத்தயங்கும் பொருளாதார சூழ்நிலையில் கடன் வாங்கிப்படியுங்கள் நானே கடன் தருகிறேன் என அரசு வங்கிக்கடன் என அறிவிக்கிறது. அதாவது, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலை தான் இது, அரசு வங்கிப் பணத்தை வைத்து பொறியியல் கல்லூரி கல்லாவை நிரப்பும் சூதாட்டத்திற்கு பெயர் வங்கிக்கடன். கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான மக்கள் உள்ள போது அரசே கல்வி நிலையங்களை நடத்துவது தானே வளர்ச்சிக்கு வழி கோலும். மாறாக, தனியார் மூலதனத்தை வளர்க்க அரசு திட்டம் தீட்டுவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது.
கட்டுப்பாடற்ற, திட்டமிடப்படாத குறிப்பிட்ட வகையிலான தனியார் கல்விநிலையங்களின் பெருக்கம் காரணமாக அதிகமாகும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றொரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.மிகக்குறைந்த ஊதியத்துக்கும் தயார் என்ற போட்டி மாணவர்களிடையே அதிகம் காணப்படுவதன் பின்னணி இதுதான். ஆனால் ஊதியம் அதிகம் சம்பாதிக்கும் துறைகள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டதால் ஊதியம் குறித்து சரியான மதிப்பீடுகள் பலருக்கும் தோன்றுவதில்லை. வேலைவாய்ப்புத்தளமும். சூழ்நிலைகளும் மாறிப்போயுள்ள நிலையில் ஊதியம் உயர்வதும் இயல்பு தானே தவிர புதியதல்ல.
கல்வி வாய்ப்புகளுக்கேற்ற புதிய வேலைவாய்ப்பு சூழலை உருவாக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும். ஆனால் அரசு புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கும் நிலை யாருக்கு சாதகமானது? அரசுப்பணத்தை எடுத்து தனியார் கல்லூரிகளுக்கு தரும் அரசு, மற்றொரு புறமோ தனியார் உற்பத்தி செய்யும் மதுவை அரசுக்கடைகளில் விற்றுத்தருகிறது. தனியார் மூலதனத்தை கட்டுப்பாடற்று பெருகச்செய்வது என்ற ஒற்றை வரியே அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கையில் அரசு வேலைவாய்ப்பு என நம்புவது மூடநம்பிக்கை என்ற கருத்தே தற்போது பரவலாக உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தற்போது பயின்று வெளிவரும் மாணவர்களில் 20 சதவித மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதி உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் திரு. கணேசன் அவர்கள் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். ஆனால், உண்மையில் வேலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதத்தை விட குறைவாக உள்ள நிலையில் இதர மாணவர்களின் கனவும், உழைப்பும், பெரும் பணச் செலவும் என்னவாவது?
கல்வி என்பது வியாபாரப் பொருள் என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கான வாழும் உரிமை என்ற நிலைக்கு மாற்றப்பட்டு கல்வி, வேலை இரண்டும் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் இதில் ஒரு சம நிலை ஏற்படும். தனியார் பங்களிப்பு கூடவே கூடாது என்பதல்ல நமது நிலை. மாறாக, தேவைக்கேற்ப அரசின் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலோடு இணைந்த அளவான தனியார் பங்களிப்பு என்பதே சரியாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் விவசாயம் முதல் அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில், பரவலான அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை எட்டமுடியும். இதற்கு மற்றொரு மாற்றமும் கல்வியில் அவசியம். கல்வி சமூக உணர்வையும் ஊட்டிட வேண்டும். சமூக உணர்வே கல்வி கற்கும் நோக்கத்தின் அடிப்படையாகவும், மையமாகவும் இருக்க வேண்டும்.